வேண்டும் விடுதலை/முன்புபோல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அடுத்து நடப்பது வேறு

முன்பு போல் ஆட்சி கவிழ்க்கப்பட்டால்,
அடுத்து நடப்பது வேறு!


ந்திய நாட்டில் பெயருக்குத்தான் குடிநாயக (சனநாயக) அரசு என்று சொல்லப்பெறுகிறதே தவிர, நடப்பதெல்லாம் முதலாளிய- வல்லதிகார அனைத்ததிகார(சர்வாதிகார)ப் பார்ப்பனிய ஆட்சிதான் என்பது அனைவருமே அறிந்த ஒன்றாக இருக்கிறது. பதவியதிகாரத்தின் தலைமையிடத்தில் இருந்தாலும் சரி, அ’து எதிர்க்கட்சிக்காரர்கள் ஆள்கிற மாநிலமாக இருந்தால் அதை உடனே அழித்தொழித்துவிடவும், உடனே குடியரசுத் தலைவர் ஆட்சி என்கிற பெயரால், ஒரு பூசாரி ஆளுநரை அங்கு அனுப்பவும், அவருக்குத் துணையாகத் தங்களுக்கு வேண்டிய இரண்டு மூன்று பார்ப்பனச் செயலாளர்களை அமர்த்திக் கொள்ளவும்; அடுத்துத் தங்களுக்குப் பிடித்தமான, வாய்ப்பான ஒர் ஆட்சிச் சூழ்நிலையைத் தங்கள் பணவலிவால் உருவாக்கிக் கொள்ளவும் இந்த நாட்டில் முடிகிறதென்றால், இங்கு நடப்பதைக் குடிநாயகம் (சனநாயகம்) என்பதை எவருமே ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இந்திரா காலத்தில் இவ்வாறு கவிழ்க்கப்பட்ட மாநில அரசுகள் ஏராளம். 1975 -இல் தமிழ்நாடு அரசு (கலைஞர் ஆட்சி) அதற்கு முதற்பலியானது. பின்னர் 1980 -இல் சரத்பவார் முதலமைச்சராகவிருந்த மகாராட்டிரம், பிரகாசு சிங் தலைமை தாங்கிய பஞ்சாப், சுந்தர்லால் பட்வா முதலமைச்சராக இருந்த நடுவண் பைதிரம் (மத்தியப் பிரதேசம்), நீலமணி ரவுத்திரி முதலமைச்சராக ஆண்ட ஒரிசா, ராம்நரேசு யாதவ் ஆட்சியேறிய வடப்பைதிரம் (உத்திரப்பிரதேசம்) பாடிபாசு பட்டேல் முதன்மை தாங்கிய குசராத், ம.கோ. இரா. (எம். சி. ஆர்) தலைமை பூண்ட தமிழ்நாடு (2-ஆம் முறை) பெய்ரான் சிங்சேக் ஆளுமை செய்த இராசத்தான் ஆகிய மாநிலங்களும், அதன் பின்னர் 1983 இல் கர்பூரிதாகூர் ஆட்சியேற்றிருந்த பீகார், டி. இராமச்சந்திரன் ஆட்சிக் கட்டிலேறிய புதுச்சேரி ஆகிய மாநிலங்களும், மீண்டும் 1984 - இல் தர்பராசிங் தலைமையிலான பஞ்சாப், நர்பகதூர் பண்டாரி வீற்றிருந்த சிக்கிம், பரூக் அப்துல்லா ஆட்சி பூண்ட சம்மு காசுமீர், என். டி. இராம இராவ் தலைமை தாங்கிய ஆந்திரா ஆகிய மாநிலங்களும் அவ்வம்மையாரின் வெறுப்புக்கு ஆளாகி அடித்து வீழ்த்தப்பட்டன.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வரலாறுகளை அறிந்த அரசியல் பார்வையாளர் எவரும். இவ்வீழ்ச்சிக் கதைகளை ஞாயம் என்று மதிப்பிட்டு விட முடியாது. அத்துணை அழிம்புகளின் மேல் கட்டப் பெற்று வருகின்ற வல்லதிகார ஆடம்பரப் பெருமாளிகைதான் இராசீவின் பரம்பரை ஆட்சி அரண்மனை. இந்த வகையில் தாய்க்குப் பிள்ளை சளைத்ததில்லை என்பதை ஆட்சிக் கவிழ்ப்பால் மட்டுமன்று, கருப்புச் சட்டங்களாலும், கடுமையான ஆட்சியதிகார ஊடுருவல்களாலும் மெய்ப்பித்து வருபவர் அவர். பஞ்சாபில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி! ஆனால் மூன்று ஆண்டுகள் வரை அதைத் தொடர்ந்து நடத்த, தனி அரசியல் கருப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டது, இராசீவ் ஆட்சி!

தமிழகத்தில் பஞ்சாபைப் போன்ற ஒரு நிலை எப்பொழுதுமே வந்ததில்லை. இருப்பினும் 1988 ஓராண்டு முழுவதும் குடியரசுத் தலைவர் பெயரால் ஆளுநர் ஆட்சி நடத்தப் பெற்றது. தமிழகத்தை நிலையான அடிமைத் தளையில் வைத்திருக்க - பேராயக் கட்சி ஆட்சியை வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணிக்க இங்கே பல வகையிலும் பலகோடி உருபா செலவு செய்து, முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக மட்டும் இராசீவ் 12 தடவைகள் இங்கு வந்திருக்கிறார். அவர் வரவுக்காக ஒரு தடவைக்கு 6 கோடி முதல் 7 கோடி உருபா வரை செலவிடப் பெற்றிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசு பணம். அஃதாவது மக்கள் வரிப்பணம். இத்தேர்தல் பணி ஓர் இந்தியத் தலைமையமைச்சரின் பணியன்று. இருப்பினும் இவர் மாவட்ட ஆட்சித் தலைவர்போல், மாநில ஆட்சியைக் கைப்பற்ற் செயல்பட்டார். இங்குள்ள கட்சித் தலைவர்கள் அவரைத் தெருத் தெருவாக, வீடு வீடாக அழைத்துச் சென்று ஒப்போலை கேட்கச் செய்தனர். இவருடைய தாய்கூட இத்தகைய ஆரவார வேலைகளைச் செய்ததில்லை. அது மட்டுமன்று. வேறு எந்த நாட்டிலுமே இல்லாத கொடுமை இது. ஏறத்தாழ 100 கோடி உருபா அரசுப் பணத்தைத் தம் கட்சிப் பணத்தைப்போல், தாராளமாகச் செலவிட்டுக் கொண்டு தில்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் நகர உந்தைப் போல் வானூர்தியைப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு படை பரிவாரத்துடன் 12 முறை வந்து போக, இராசீவுக்கென்ன தமிழக மக்கள் மேல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தின் மேல் அவ்வளவு அக்கறை? அது வேறொன்றுமில்லை; தமிழர்களை என்றென்றும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் படி விட்டுவிடக் கூடாது என்பதும், அவர்களை என்றென்றும் நிலையான அடிமைகளாகவே வைத்திருக்கவேண்டும் என்பதுந்தாம்! இதுதான் அவரின் உள்நெஞ்சத்தில் ஊசலிட்டுக் கொண்டிருக்கும் கருத்தாகும் நோக்கமாகும்!

இந்தியாவிலேயே பார்ப்பனியத்திற்கும் வடநாட்டு முதலாளிய ஆட்சிக்கும் சாவு மணி அடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது தமிழ் நாட்டில் மட்டுந்தான்! தமிழர்கள்தாம் தங்கள் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காக இங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படியேனும் இங்குள்ள விபீடணக் கும்பலை வைத்துக் கொண்டு, நிலையாக அடக்கி ஒடுக்கிவிட வேண்டுமென்று கனவு காணுகிறது இராசீவ் கும்பல்!

இந்த நிலையில் நீண்ட நெடுங்காலத்திற்குப் பின், அஃதாவது பதின் மூன்றாண்டுகளுக்குப் பின், இராசீவின் அம்மா இந்திரா காலத்தில் இறக்கிவிடப்பட்ட தி.மு.க., தம்முடைய ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேளதாளத்துடன் ஆட்சி அதிகாரத்தில் கால் வைக்கிறது, என்றால் இராசீவால் பொறுத்துக் கொள்ள முடியுமா? முடியாது தான்! தாமும் எவ்வளவோ முண்டி மூச்சுப் பிடித்துக் கொண்டு மூப்பனார் துணையுடனும், திண்டிவனத்தார், குமரியார் தாங்குதல்களுடனும், சிதம்பரனார் கெட்டிக்காரக் கட்டியங்காரத் தனத்துடனும், தம் மனைவி சோனியாவுடன் தமிழகம் முழுவதும் தேர்தல் ஊர்கோலம் வந்தார்; ஏழைகளின் மேல் அன்பிருப்பது போல் நாடகம் ஆடிக் காட்டினார்.

ஆனால் இவரும் இவரின் கட்சிக் கோடரிக்காம்புகளும் எதிர் பார்த்ததற்கு நேர் எதிராக, இங்குள்ள மக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தி.மு.கவை ஆட்சியில் அமர வைத்தனர். கலைஞர் ஆட்சிக் கட்டிலேறினார். அன்றிலிருந்து இராசீவும் அவர் கட்சிக் கேடயங்களும் ஒன்றைப் பார்த்து ஒன்று பொருமிக் கொண்டன; கருவிக் கொண்டன; பற்களை நறநறவென்று மென்று துப்பிக் கொண்டன. 'உன்னால்தான் நான் கெட்டேன்; என்னால் தான் நீ கேட்டாய் - என்றெல்லாம்' அவை கூறின: அம்பல் தூற்றின. ஆனால் காலப்போக்கில், “இனி விளைந்ததைக் கொட்டி அளந்து கொண்டிருப்பதில் பயனில்லை; விளைவிப்பதைத் தாறுமாறாக்குவோம்; சிதைப்போம்; ஆக்கிய சோற்றுச் சட்டியை உடைப்போம்” என்று மறைமுக உறுதியெடுத்துக் கொண்டு, சட்டமன்றத்தில் புதிதாகக் கால் வைத்த ஆரிய மாரீசையையும் அவருக்குப் பக்க மேளங்களாக உள்ள திருநாவுக்கரசு, சாத்தூர் இராமசந்திரன், குமரிஅனந்தன், இராதா, அண்ணாநம்பி, செங்கோட்டையன் இன்னோரன்ன வீடணப் பிரகலாத சுக்கிரிவப் பிறப்புகளையும் தூண்டிவிட்டு, முதலமைச்சர் கலைஞர்க்கு முன்னாக நின்று முரண்டு பிடிக்கவும், முடிந்தால் முரட்டுவலி காட்டவும், இன்னும் முடிந்தால் கலைஞர் மூக்கை உடைக்கவும் (இங்கு மூக்குடைப்பை மானக்கேடு செய்தல் என்னும் பொருளில் கொள்க) திட்டம் இடப்பட்டது; திட்டமிட்டபடி உணர்ச்சித் தூண்டல்கள், வாய்க் கொப்பளிப்புகள், செயலிழிவுகள் முறைப்படி கடந்த 25-3-89 இல் சட்டமன்றத்தைக் களரி மன்றமாக்கின.

அடுத்து, மக்கள் மன்றத்தில் அ.தி.மு.கவினரும், இந்திராப் பேராயத்தினருமாகச் சேர்ந்து இல்லாத பழிகளைச் சொல்லாத சொற்களால் கலைஞர் மேலும், அவர் ஆட்சி மேலும் ஏற்றிக் கூறினர். இவ்வாறாக மக்களால் அரியணையேற்றப் பெற்ற தி.மு.க.வை இராசீவ் ஏதோ ஒரு காரணம் காட்டி இறக்கிக் காட்டப் பார்க்கின்றார். இத் திரைமறைவு நாடகத்தின் இறுதிக் காட்சி எப்படியிருக்கும் என்று இப்பொழுது கூற முடியவில்லையானாலும், இராசீவுக்குக் கட்டியங்காரராக இருந்து கோமாளிக் கூத்து நடத்தும் தஞ்சை நிலக்கிழார் மூப்பனாருக்கு ஒன்று சொல்லிக் கொள்வோம்.

"இந்திய மாநிலச்சட்ட மன்றங்களில் அடிதடிகள், செருப்பு வீச்சுகள், ஒலிவாங்கிகளைப் பிடுங்கியடித்தல்கள் போன்ற செயல்கள் பொதுவான நிகழ்ச்சிகளாகிவிட்டன. ஏன், பாராளுமன்றத்திலேயே இவை போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப் பொழுது நடப்பது இயல்பாகிவிட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் ஆந்திராவிலும், கேரளாவிலும், கருநாடகத்திலும், அரியானாவிலும், மேற்கு வங்காளத்திலும், எதிர்க்கட்சியாக இருந்து வரும் இந்திராக் கட்சியினர் செய்து வரும் கலகங்கள், கலவரங்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பான, குடியரசு அமைப்புக்கே மாறான செயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அண்மையில் கூட இராசத்தான் சட்ட மன்றத்திலும் உறுப்பினர்கள் கூச்சசலும் குழப்பமும் ஏற்படுத்தியதாகப் பலமுறை பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே முறையிலேயே தமிழகத்திலும் அ.தி.மு.க வைத் தூண்டி விட்டுப் பேராயக் கட்சி செயல்படத் தொடங்கிவிட்டது; நாள் தோறும் அக்கட்சியின் தலைவர் இராசீவின் தூண்டுதலால் நடக்கும் அடாவடித்தனமான, அரம்பத்தனமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றக் குடியரசு அமைப்பையே அவமதிக்கும் போக்கை உறுதிப்படுத்துகிறது.

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நடுவண் அமைச்சர் தினேசு சிங்கை அனுப்பிச் செய்தியாளரிடம் 'இந்த (தி.மு.க) ஆட்சி - மக்களாட்சிக்கு மாறான ஆட்சியென்றும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான ஆட்சியென்றும், அதைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் சொல்ல வைத்துள்ளது தில்லியாட்சி. இதை வி.பி.சிங், முன்னாள் நடுவண் அமைச்சர் சி. சுப்பிரமணியம், முன்னாள் உச்சநெறி மன்ற நடுவர் வி. ஆர். கிருட்டிணையர் முதவியோர் கூடக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் கண்டித்துள்ளனர்.

இனி, இவ்வளவுக்குப் பின்னும் கலைஞரின் ஆட்சி ஏதோ ஒரு காரணம் கூறி 1975 ஆண்டுப் போல், கலைக்கப்பட்டால், தமிழ் நாட்டில் நடப்பதோ வேறாக இருக்கும் என்பதை மட்டும் இப்பொழுதைக்குச் சொல்லி வைக்கிறோம். அந்த நிலையை இராசீவ், வருவித்துக் கொள்ளமாட்டார் என்றே நம்புகிறோம்.

- தென்மொழி, சுவடி :24, ஓலை 11.1989,