வேண்டும் விடுதலை/இரண்டாவது தமிழ்கப் பிரிவினை மாநாட்டு நிகழ்ச்சி
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு!
இரண்டாவது தமிழகப் பிரிவினை மாநாடு
பாண்டியன் தலைநகராம் மதுரையில்!
விடுதலை மறவன் வீரபாண்டியக் கட்டபொம்மன் சிலையிலிருந்து ஊர்வலம் விடுதலை முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன! மதுரை தெருக்கள் அதிர முழங்கினர்!
மக்கள் வியப்பெய்தினர்; விழிப்பெய்தினர்! இடையில் ஊர்வலம் தடைப்படுத்தப் பெற்றது! காவலர்கள் சுற்றி வளைத்தனர்! தடையிட்டனர்! களிற்றுப் பிளிறலுடன் மறவர்கள் தடைமீறவே தளைப்படுத்தினர்.
ஐந்து காவல் வண்டிகள் அலறப் பறந்து ஊர்வலத்தினரைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சேர்த்தன! பிற்பகல் மாநாடு காவல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள் நடந்தது!
தமிழகம் விடுதலைபெறச் சூளுரைத்தனர் மறவர்கள். மாலையில் விடுவிப்பு! மறுநாள் மாநாட்டுத் தடைமீறல்!
மீண்டும் பதினொரு பேர் நான்கு நாள் காவற்பட்டனர்!
தாய்த்தமிழகம் விடுதலை நோக்கி அமைத்த இரண்டாம் பாசறை வரலாறு இது!
விடுதலை வரலாற்றில் வீரமறவரின் முதற்பட்டியல்!
துடித்துக் கிடக்கும் தோள்மறவர்கள் அடுத்த முற்றுகைக்கு அங்காந்து கிடக்கின்றனர்!
பகைவர்கள் அஞ்சுகின்றனர் ஆட்சியினர் பரபரப்படைகின்றனர்!
ஒடியுமா பகையெலும்பு? முடியுமா அடிமை நிலை? விடியுமா தமிழகம்? படியுமா உரிமை ஒளி? - எதிர்காலமே விடை சொல்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு
(நிகழ்ச்சிச் சுருக்கம்)
மதுரையில் கடந்த சிலை 10. (24-12-72) அன்று இரவு 2 மணியளவில் வஸலம்புரி இல்லத்தில், மாநாட்டு, அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் தலைமையில் அமைக்கப்பெற்ற செயற்குழு முடிவின் படி தென்மொழிக் கொள்கை (தமிழகப் பிரிவினை) 2ஆவது மாநாடு. மதுரையில் தி.பி. 2004. விடை 27,28 (9.10 சூன் 72) காரி ஞாயிறு இரீகல் திரையரங்கில் நடைபெறுவதென உறுதி செய்யப் பெற்றது. அதன்படி, திரு. க. வெ, நெடுஞ்சேரலாதன் (ஆசிரியர், 'தீச்சுடர்') மாநாட்டு வரவேற்புக் குழுத்தலைவராகவும், திரு. உ, அரசுமணி செயலராகவும் திரு. க. ம. முருகுவேந்தன் துணைச் செயலராகவும் திரு. கா. தென்னவன் பொருளராகவும், திருவாளர்கள், கி. மாவேந்தன், அ. தமிழன்பன், ப. முருகவேள். ஓடை. தமிழ்ச் செல்வன், பெ. திருவேங்கடம் ஆகியோர் செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
செயற்குழு, திட்டமிட்டுக் குறித்த நாளில் மாநாடு நடைபெறவும், ஊர்வலம் முதலியன சிறப்புற நடக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்தது. மாநாட்டு வரவுக்காக, அறிக்கைகளும், பற்று முறிகளும் அச்சிடப் பெற்று, தமிழகம் முழுவதும் ஆங்காங்குள்ள விடுதலை இயக்க அமைப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அவற்றை அனுப்பிவைத்து, மாநாட்டுச் செய்தியைப் பரப்பவும், நன்கொடைகள் தண்டவும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. மாநாட்டுப் பொறுப்பாளர்களில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசுமணியும், திரு. சு. ம. முருகுவேந்தனும், திரு. கா. தென்னவனும், திரு. ப. முருகவேளும் திரு. ஓடை. தமிழ்ச்செல்வனும் அடிக்கடி கூடி, மாநாட்டுப் பணிகள் திட்டமிட்டவாறு நடைபெற உழைத்து வந்தனர். திரு. க. வெ. நெடுஞ்சேரலாதனும், திரு. அரசமணியும் இரவு பகல் பாராது செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகள் பலவாறு விளக்கமாகவும் சுருக்கமாகவும் அச்சிடப் பெற்றுப் பரப்பப் பெற்றன. ஆங்கில அறிக்கையும் அச்சிடப் பெற்று, நடுவணரசு அமைச்சர்கள் சிலர்க்கும், ஆங்கிலச் செய்தியிதழ்களுக்கும் அனுப்பி வைக்கப்பெற்றது. மாநாட்டுச் செய்திகள் தென்மொழி, தமிழம், தீச்சுடர், வலம்புரி ஆகிய இதழ்களின் வாயிலாகவும் பரப்பப் பெற்றன. இருப்பினும் மாநாட்டுத் தொடர்பாகச் சுவரொட்டிகள் ஏதும் அடிக்கப் பெற்று முன் கூட்டியே விடுக்கப் பெறாதது பெருங்குறையாக விருந்தது. போதுமான பொருள் வலிவு இருந்திருந்தால் செய்திகளை இன்னும் முன் கூட்டியும் விரிவாயும் பரப்பிருக்க முடியும் என்று செயற்குழு குறைபட்டுக் கொண்டது. ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டுதானே செயலாற்ற முடியும். மாவட்ட அளவில் ஒதுக்கப்பெற்ற குறியீட்டுத் தொகை சரிவரத் தண்டப்பெறவில்லை. பெகும்பகல்லா இளமாறன், நெய்வேலியன்பர்கள். கோவை நித்தலின்பன் போலும் மெய்யன்பர்கள் தம் பொறுப்பில் அளித்த தொகைகளுடன், மாநாட்டுச் செயற்குழு மதுரையளவில் தாமே புரட்டிக் கொண்ட தொகைகள் தாம் மாநாட்டு அடிப்படைச் செலவுகளைச் செய்யவுதவின. எத்தனையோ இன்றியமையாச் செலவுகளுக்காக வரவேற்புக் குழுத் தலைவரும், செயலரும் தம் தம் உடைமைகளைக் கூட அடகுக் கடைகளில் வைக்க வேண்டியிருந்தது. மாநாடு தொடங்கினால் பட்டினி கிடந்தாகிலும் பணம் தண்டுவோம்; மடியேந்தியாகிலும் படியளப்போம்’- என்றவர்களெல்லாரும் வாயினால் அளந்தார்களே தவிர மாநாட்டுக் கடைசிநாள் வரைக் கையினால் அளக்கவில்லை. தமிழனுக்கு இவ்வகையில் என்றைக்குத் தான் சுறுசுறுப்பும் நம்பிக்கையும் வருமோ, தெரியவில்லை. பொருள் வலிவும், குழுவலிவும் இல்லெனில் எவ்வளவு சிறந்த திட்டங்களும் இடைமுறிந்து விடும் என்பதை இத்துறையில் ஈடுபட்ட எல்லாருக்கும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இவ்விடத்தில் இன்னொன்றையும் கூற வேண்டியுள்ளது.
நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நம்க்குள் நாமே வேறுபட்டுக் கிடக்கின்றோம். நாம் செய்வதில் 'இது சொத்தை; இது சொள்ளை' என்று கூறிக்கொண்டு வேறு பிரிந்து போவாரை இன்னும் காண்கிறோம். ‘சொத்தையும் சொள்ளையும்’ இல்லாத ஒருவராக அவரேனும் இருப்பதில்லை. தம் முதுகுப்படையை மூடிமறைத்துக் கொண்டு, நம் முகத்துத் தேமலைப் படையென்று பிதற்றித் திரிபவரை பின்பற்றுவற்குப் பத்துப்பேர் இருக்கத்தான் இருப்பார்கள். நம்மவர்களில் இன்னும் சிலர் உண்டு. அவர்கள் நம் வினைத் திட்டங்கள் அனைத்தும் சரியில்லை யென்று கூறிக் கொண்டே நம்முடன் உணவுக் கடை முதல் சிறைக்கூடம்வரை ஒட்டி வந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் நடுவில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றதை மிகுவாகப் பார்க்கலாம். அவர்கள் இருதரப்பினரையும் ஏமாற்றிக் கொண்டு. அல்லது இரண்டு புறத்தினரிடையும் நன்மைகளைப் பெற்றுக் கொண்டு, இலைக்கு எண்ணிக்கையாக வந்து நிற்பவர்கள். அவர்களே வினைக்கு வேறு முகம் காட்டுபவர்கள். இவர்களிடத்திலெல்லாம் உண்மையான விடுதலைத் தொண்டர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். இனி, இவர்கள் தவிர வேறு வகையான ஒருசிலரும் இருப்பதாகத் தெரியவருகிறது. ‘இன்னான் தொடங்கினான் இதை நாம் இதற்கேன் துணைபோக வேண்டும்: எதையாகிலும் சொல்லித் தட்டிக் கழித்து விட்டால் போகிறது'- என்று அவ்வகையினர் எண்ணுவதாகவும் தெரிகிறது. அத்தகையினர்க்கும் அவரைச் சார்ந்து போவார்க்கும் பணிவாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
'பொதுத் தொண்டு என்பது இயல்பாக நாம் காற்றை உள்ளுக்கிழுத்து விட்டுக் கொண்டிருக்கின்றோமே, அதைப் போன்றதன்று மூச்சைப்பிடித்துக்கொண்டு, நம் வழியில் கிடக்கும் பாறையை முதுகைக் கொடுத்து முட்டித்தள்ளுவதைப் போன்றது. நாம் இயல்பாக மூச்சை இழுத்து விடுவதைப் போல அதையும் செய்ய முடியாது. எவரேனும் முதலில் முன்னுக்கு வந்து மூச்சுப்பிடித்து நம் முன்னேற்ற வழியை யடைத்துக் கிடக்கும் தடைக் கல்லை முட்டுக்கொடுத்து, அப்புறத் தள்ளியே யாகல் வேண்டும். அதற்கு நீங்களும் முன் போகலாம். நாங்களும் முன் போகலாம். எவர் முன்னே போக வேண்டும். என்பது கட்டளையன்று. துணிவுள்ளவன், பொதுவுணர்வை அடக்க முடியாமல் வைத்துக் திணறிக் கொண்டுள்ளவன் எவனாகிலும் முன்னே போக வேண்டியது தானே! அவன் எவனாயிருந்தால் என்ன? ஊரறிந்த ஒருவன் தான் அதற்கு முன் வர வேண்டும் என்பதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்டால் “முதன்முதல் எங்கள் ஊர்த்தலைவர் தண்ணீர்க்குடத்தைத் தூக்கட்டும்; அல்லது சொல்லட்டும்; அதன் பின்தான் நாங்களும் தண்ணீரைத் தூக்குவோம்; அணைப்போம்” என்று எவனும் சொல்வதில்லை. வீடு தீப்பற்றிக் கொண்ட ஒரு நிலையை எப்படி ஒரு காலத்தால், துணிவுடன், முன்னேறிச் செய்ய வேண்டுமோ, அப்படியே ஒரு நாடு அடிமைத் தீப்பற்றிக் கொண்ட பொழுது, உரிமை நீரை அதன்மீது வாரி இறைப்பதில், குறிப்பிட்ட எவரையும் எதிர்பார்த்துக் கிடக்கத் தேவையில்லை. உலகில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான நயன்மையை (நியாயத்தை)க் கற்பிக்கலாம். அவரவர் சொல்லுவதையும் சிற்சிலர் பின்பற்றவே செய்வர். எனவே ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொருவராக எல்லாரையும் பின்பற்றிக் கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. எவரையும் பின் பற்றுவது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிவதானால், நாம் எல்லாரையும்விட அறிவுள்ளவராக இருத்தல் வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் தம்மை மிகையாகக் கருதிக் கொண்டும் கற்பனை செய்து கொண்டும் நடைமுறை நிகழ்ச்சிகளுக்கு ஊறுகள் செய்து வருகின்றனர்.
பின்பற்றப்படுவர் எவர் என்பதைக் கால நீட்சியும் வினை விளைவும், அறிவுக் கூர்மையுமே காட்டும். இவற்றில் கால நீட்சி என்பது ஒருவன் கொள்கை எத்தனை நெடுங்காலம் தடம் புரளாமல் உள்ளது என்பது. வினை விளைவு என்பது அக்கொள்கை தொடக்கத்தில் உள்ளதைவிட அவன் முயற்சியால் எவ்வளவு விளைந்துள்ளது என்பது. அறிவுக் கூர்மை என்பது அவன் அறிவால் செய்த செயல்கள், உரைகள், வெளியீடுகள் எவ்வளவு என்பது இம்மூன்று வகையாகவும் கணித்துப் பின்பற்றப் படவேண்டியவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவர் கொண்ட கொள்கையைத் தம்முடையாக்கிக் கொண்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்து, உறுதியுடன் அவர் காட்டும் பாதையில் முன்னேறிப் போக வேண்டுமே தவிர, ஒன்றைப் பற்றுவதும் சறுக்குவதுமாகவே இருந்தால் எந்த விளைவையும் எதிர் பார்க்கவே முடியாது. இவற்றையெல்லாம் இங்கு ஏன் குறிப்படுகிறோமெனில், கடந்த மாநாட்டின் பொழுது சில கூழாங்கற்கள் வயிர ஒளி காட்டி, அங்குக் கூடிய அன்பர்களின் மனங்களைக் குழப்பியடித்துக் கொள்கைக் கூறு போட்டதை நேரிலேயே காணவும் கேட்கவும் நேர்ந்தது. பொதுவாக இன்ன பிற குழப்பக்காரர்களாலேயே நம் கொள்கைக்கும் முடக்கம் ஏற்படுகின்றதை நம்மைப் போல் அன்பர்கள் சிலரும் கண்டு வருந்தி நம் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். ஆக்கி வைத்த சோற்றுக்குப் பங்குக்கு வந்து படையல் போட்டுக் கொண்டு பழுது கூறும் அவர்களைக் காலந்தான் காட்டிக்கொடுக்க வேண்டும். மற்றப்படி அவர்களை முகங்காட்டுவதும் முறியடிப்பதும் நம் வேலையன்று.
மேற்குறிப்பிட்ட இடையூறுகள் நம் இயக்கத்தில் மட்டுந்தான் இருப்பதாக எவரும் கருதிக் கொள்ளக்கூடாது. பத்துப்பேர் சேர்ந்து செய்யும் எந்தப் பணியோ, தொண்டோ, விழாவோ, கட்சியோ, கழகமோ எதுவாக விருந்தாலும் இவ்வத்தனை எதிர்நிலைகளும் எழவே செய்யும். இந்நிலை இயற்கையின் தேர்வுநிலைக் கொள்கையை அடியொட்டியது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் இடையில் எவன் துணிந்து, சலிப்புறாமல், சோர்வுறாமல் தன் வினையைச் செய்கின்றானோ அவனே அதற்குத் தகுதியானவன் என்பதை மக்கள் கண்டுகொண்டு, அவனைப் பின் பற்றித் தாங்களும் முன்னேறிக் கொள்ள வேண்டுமென்பது இயற்கை வகுத்த சட்டம். எனவேதான் இந்நிலைகளுக்கெல்லாம் நாம் என்றும் மனஞ்சலித்ததில்லை. இனி, இன்னும் இதில் விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மைகளும் பலவுள. அவை மெய்யறிவுக் குட்பட்டவை யாதலால் இங்குக் காட்டப்பெற வேண்டியதில்லை.
இனி, மதுரை விடுதலை மாநாட்டுச் செயற்குழுவின் திட்டப்படி எல்லா வினைப்பாடுகளும் முன் பின்னாகவோ, ஒன்றுக் குத்தலாகவோ படிப்படியாகச் செய்யப் பெற்று வந்தன. அன்பர்கள் நெடுஞ்சேரலாதனும், அரசுமணியும் முனைந்து ஈடுபட்டிலரேல் மாநாடு நடைபெற்றிருக்குமா என்பது ஐயமே! எப்படியோ மாநாடு குறிப்பிட்ட நாளில் நடைபெறுவதை, இடையில் எத்தனையோ இடர்ப்பாடுகள் குறுக்கிட்டும், தள்ளிப்போட முடியாமற் போய்விட்டது. .
மாநாட்டுக்கு ஒரு கிழமைக்கு முந்தியே அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் மதுரைக்குப் போய் பாசறையமைத்துக் கொண்டு, எல்லாச் செயல்களையும் நேரில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார். மாநாட்டுக்கு முந்தின நாளே வெளியூர் அன்பர்கள் பலர் வரத் தொடங்கிவிட்டனர். நம் மாநாட்டு அலுவலகத்தைத் தேடிப்பிடிப்பதுதான் பலருக்குத் தலைச்சுற்றலாகப் போய் விட்டது. மாநாட்டு அலுவலகத்தை ஏனோ தெரியவில்லை. நம் செயற்குழு ஒரு சந்தில் கொண்டு போய் அமைத்திருந்தது. ஆனாலும் வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் பலரும் மனஞ்சலியாமல் ஆங்காங்கு அவரவர்களின் ஏந்துகளுக்குத் தக்கபடி, பல்வேறிடங்களிலும் தங்கிக் கொண்டனர். 8ஆம் பக்கல் வெள்ளி யிரவே மாநாட்டுக் கூட்டம் கலகலக்கத் தொடங்கி விட்டது. மதுரை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. மாநாட்டில் பெரியார் கலந்து கொள்வதாக விருந்தபடியால், அறிவிப்புகளில் அவர் பெயர் கொட்டை யெழுத்துகளில் போடப் பெற்றிருந்தன. மாநாட்டு நாளன்று மதுரை பல்வகைச் சிறப்புகளையும் எதிர் நோக்கிக் காத்திருந்தது. முதலமைச்சர் கலைஞர் அருட்செல்வர் அன்றைய நாள் ஒரு திருமணத்திற்கெனவும் வேறு சிறப்புக் கூட்டம் ஒன்றிற் கலந்து கொள்ளவும் வந்திருந்தார். பெரியாருக்கு நம் மாநாட்டு நிகழ்ச்சியோடு வேறு ஒரு பொதுக் கூட்டமும் , அருப்புக்கோட்டையில் ஒரு திருமணக் கூட்டமும் இருந்தன. அ.தி.மு.க தலைவர் ம.கோ.இரா. வேறு ஒரு நிகழ்ச்சிக்காக மதுரை வழியாக அன்று போக வேண்டியிருந்தார். அவர் அன்றைய நாள் மதுரையில் தங்குவதென ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. இம் மூவகை நிகழ்ச்சிகளுக்காகவும் காவலர்கள் மாநாட்டுக்கு முந்தின நாளிலிருந்தே பல முடுக்கமான பணிகளை யமர்த்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர். இந்நிலையில் நம் மாநாட்டு ஊர்வலத்துக்கு எங்கு இசைவு கிடைக்காமற் போய்விடுமோ என ஐயுற்றிருந்தோம். நல்ல வேளை வரவேற்புக் குழுத் தலைவர், செயலாளர் போலவே இங்கும். அங்கும் ஓடி, இவரையும் அவரையும் பார்த்து, ஊர்வலத்திற்கும் மாநாட்டிற்கும் இசைவுகளை வாங்கியே விட்டார்.
மாநாட்டுக்கு முந்தின நாள் இரவு தட்டிகள், பதாகைகள், தூக்குத் தட்டிகள் முதலியனவற்றை எழுதுவதிலும் ஆங்காங்குக் கொண்டு போய் வைப்பதிலும், கட்டுவதிலும் அன்பர்கள் பலரும் முடுக்கமாக ஈடுபட்டிருந்தனர். புலவர். திரு. இறைக்குருவனார் தம் ஆசிரியப் பணிகளுக்கிடையில், மாநாட்டு வினைப்பாடுகள் சிலவற்றில் தாமே ஈடுபடுவதிலும் கருத்தறிவிப்பதிலும் முனைந்திருந்தார். வெங்காளுரிலிருந்து நாடகக் குழு வந்து இறங்கியிருந்தது. கொடிகளும் மார்பொட்டிகளும் ஊர்வலத்திற்கென அணியமாகிக் கொண்டிருந்தன.
வெள்ளி(8-6-73) இரவு 8 மணிக்கு முன்பே அறிவித்தபடி மேலமாசி வீதியிலுள்ள 'அப்சரா' விடுதியின் 1-ஆம் எண் அறையில் ‘தென்மொழியன்பர்’ கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏறத்தாழ முப்பதுபேர் வந்திருந்தனர். அக்கால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் மூன்று மாதங்களுக்கு ஒன்றாகவும் தட்டுத்தடுமாறி வெளி வந்து கொண்டிருக்கும் தென்மொழியின் இப்பொழுதைய நிலை, அதற்குள்ள கடன் சுமைகள், அது தொடர்ந்து வந்தாக வேண்டிய தேவை முதலியவை பற்றியெல்லாம் அன்பர்கள் முன்னிலையில் ஆசிரியர் திரு. பெருஞ்சித்திரனாரும். தென்மொழி அமைச்சர் திரு. அன்பழகனும் எடுத்து விளக்கினார்கள். இடையிடை திரு. இறைக்குருவனாரும் நிலைகளை விளக்கினார். அதன்பின், தென்மொழி அடுத்து வரவிருக்கின்ற புதிய அமைப்புப்பற்றி அன்பர்கள் கருத்தறிவிக்கக் கேட்டுக் கொள்ளப் பெற்றனர். விளம்பரங்கள் ஏற்பது பற்றியும். அட்டைப்படம் பற்றியும், உள்ளே வெளியிட வேண்டிய செய்திகள் பற்றியும் கருத்துரைகள் பரிமாறிக் கொள்ளப் பெற்றன. இறுதியில் "எவ்வாறேனும் சிறப்பாகவும், இடையீடின்றியும் கொண்டு வர எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்றும், தனித்தமிழிலோ தனி ஆங்கிலத்திலோ தரும் விளம்பரங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும், பொது மக்களும் விரும்பிப் படிக்கும் படியான செய்திகளைத் தரவேண்டும் என்றும் முடிவுகள் செய்யப் பெற்றன. கூட்டம் 11-30 மணியளவில் முடிந்து அன்பர்கள் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றனர்.
மறுநூாள் காரி (9-6-73) காலைக்குள் பல ஊர்களிலிருந்தும் அன்பர்கள் கூட்டங் கூட்டமாகவும் குடும்பங் குடும்பமாகவும் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். கருநாடகம் மைசூர், கேரளா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்தும். மலேயாவினின்றும் மாநாட்டிற்காக அன்பர்கள் சிலர் வந்திருந்தனர். பொருள் வலிவிருந்து நன்றாக விளம்பரம் செய்யப் பெற்றிருந்தால். உண்மையிலேயே விடுதலை உணர்வுள்ள அன்பர்கள் பல்லாயிரக் கணக்கில் வந்து சேர்வர் என்பதுறுதி. இவ்விடத்தில் ஓருண்மையை அன்பர்கள் தெரிந்து கொள்வது நல்லது.
பொதுவாகவே ஓரியக்கத்திற்கு மூன்று வலிமைகள் வேண்டும். முதலாவது அவ்வியக்கம் கொள்கை வலிமை படைத்ததாகவிருத்தல் வேண்டும். இரண்டாவது அந்தக் கொள்கையை நன்றாக அறிந்து உறுதியுடன் ஏற்றுச் செயற்படுத்துகின்ற உறுப்பு வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். மூன்றாவதாக, அவ்வுறுப்பினர்கள் தான் வகுத்துக் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வினையாற்றப் போதுமான பொருள் வலிமை படைத்ததாக விருத்தல் வேண்டும். இம்மூன்று வலிமைகளிலும் தொய்வின்றி இயங்கும் இயக்கமே தான் கொண்ட கொள்கையில் படிப்படியாக வெற்றிபெறும். இம்மூன்று வலிமைகளுக்குமான அளவிடென 100 என்று கொண்டால், முதலாவதாகிய கொள்கைக்கு 40 எண்ணும், இரண்டாவதாகிய உறுப்புக்கு 35 எண்ணும், மூன்றாவதாகிய பொருளுக்கு 25 எண்ணும் ஒதுக்கலாம். அஃதாவது கொள்கை 8 பங்கு வலிவுள்ளதாகவும், உறுப்பு 7 பங்கு வலிவு படைத்ததாகவும், பொருள் 5 பங்கு வலிவுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.
கொள்கையைப் பொறுத்த அளவில் தமிழக விடுதலை இயக்கத்திற்கு முழு வலிமை உண்டு. ஆனால் உறுப்பைப் பொறுத்த அளவிலும் பொருளைப் பொறுத்த அளவிலும் நாம் முக்காற் பங்குக்கும் கூடுதலான வலிமையையும் பெற்றாகல் வேண்டும். இன்னுஞ்சொன்னால் நூற்றுக்கு ஐந்து பங்கு வலிமைகூட நம்மிடம் இல்லை. இந்நிலையிலும் நம் இயக்க முயற்சியில் ஏதேனும் ஓரிரண்டு வெற்றி வாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றால், அது நம் போன்றவர்களால் கிடைத்த வாய்ப்பென்பதை விட நம் கொள்கைக்குக் கிடைத்த வாய்ப்பென்றே நாம் கருதிக் கொள்ளுதல் வேண்டும். உறுப்பாலும், பொருளாலும் நாம் என்றைக்கு முழுவலிமை பெறுகின்றோமோ அன்றைக்கே நம் இயக்கம் முழுவெற்றி பெறக்கூடிய வாய்ப்பைப் பெறுகின்றது என்று உறுதியாய் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். மற்றப்படி உறுப்பு வலிமையும் பொருள் வலிமையுமின்றி வெறும் வாய் வலிமையால் 'நான் இதை வீசிக் காட்டுவேன், அதை வீசிக் காட்டுவேன்’ என்று வாயால் குண்டு வீசிக் காட்டுபவர்கள் என்றென்றைக்கும் வாய்வீச்சுக்காரர்களே! அப்படி ஏதாகிலும் ஒன்றை வீசுவதற்கும் கூட இயக்கத்தில் உறுப்பு வலிமை மிகுந்திருத்தல் வேண்டும், என்பதை அவர்களும் பிறரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி மதுரையில் நடந்ததைக் கவனிப்போம்.
9-6-73 காலை 8-30 மணியளவில் மதுரைப் பேரியங்கி நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டபொம்மன் சிலையருகில் அன்பர்கள் இருவர் இருவராக அணிவகுக்கத் தொடங்கிவிட்டனர். 'தமிழக விடுதலை மாநாடு’ என்றும் Liberation Conference of Thamizh Naadu” என்றும் எழுதப் பெற்ற பெரிய பதாகைகள் கட்டபொம்மன் வட்டமேடையின் மேல் சாலைகளை நோக்கிக் கட்டப்பட்டிருந்தன. தெருக்களில் பார்க்குமிடங்களிலெல்லாம் 'தமிழக விடுதலை மாநாடு’ என்று நன்றாகத் தெரியும் படியான சுவரொட்டிகள் ஒட்டப் பெற்றிருந்தன. இவையன்றி மாநாட்டரங்கத்தின் (விக்டோரியா எட்வர்டு மண்டபம் அல்லது இரீசும் திரையரங்கம்) முன்பும் மற்றும் பல இடங்களிலும் பெரிய பெரியதட்டிகளும் வைக்கப் பெற்றிருந்தன.
மணி 9வரை ஊர்வலத்துக்கு முன்னே செல்லவேண்டிய யானை வரவில்லை. அன்பர்கள் சிலர் யானையை அழைத்து வருவதில் ஓட்டமும் நடையுமாக ஈடுபட்டனர். காவலர்கள் இரண்டு வண்டிகளில் வந்து ஊர்வலத்தின் பின்னாலும் ஓரத்திலும் நின்று கொண்டனர். ஊர்வலத்தின் முன்னே தமிழக விடுதலை இயக்கத்தின் நீலமும் சிவப்பும் பாதிப்பாதி உடையதும், இடையில் தமிழ்நாடு வரையப் பெற்றுத் 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கத்தை எழுதப் பெற்றதுமான, பெரிய கொடியை மறவர் ஒருவர் பிடித்தவாறு பெருமிதத்துடன் நின்றிருந்தார். ஊர்வலக் கூட்டத்தில் நூற்றைம்பதுக்கும் கூடுதலான பேர்கள் நின்றிருந்தனர். கூட்டம் நிமையத்திற்கு நிமையம் மிகுந்துகொண்டே இருந்தது. மிகத் தொலைவான ஊர்களில் இருந்தவர்களுக்கெல்லாம் செய்தி பிந்தித்தான் எட்டியதாகையால் பெரும்பாலார் வருவதற்கு இயலாமற் போனது.
மாநாட்டிற்கு முந்தி வரவேண்டிய தென்மொழி வராதது ஒரு குறை. தென்மொழி வராமையால் தீச்சுடரில் மாநாடு உறுதியாக நடைபெறும் செய்தி இறுதியாக அறிவிக்கப் பெற்றுத் தென்மொழி அன்பர்களுக்கெல்லாம் விடுக்கப் பெற்றிருந்தது. ஆனால் தீச்சுடர் கிடைக்காமற் போனவர்களும் பலபேர். எனவே நண்பர்கள் வழியாகவும் ஏற்கனவே விடுக்கப் பெற்ற அறிக்கைகள் வழியாகவும் மாநாடு நடைபெறும் செய்தியை உறுதியாக தெரிந்து கொண்டவர்களே ஊர்வல நேரத்திற்கு வர முடிந்தது, ஊர்வலத்தின் இடைப் பகுதியில் பெண்கள் நின்றிருந்தனர், தென்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் (திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரன் அவர்களும், அவர்களுடன் ஆறுமக்களும்) அணியில் நின்றிருந்தனர். பெருஞ்சித்திரனாரின் மூத்த மகள் திருவாட்டி பொற்கொடி இறைக்குருவன் தம் குழந்தைகள் இரண்டுடனும் ஊர்வலத்தில் நின்றிருந்தார். இவர்கள் தவிர நாடகத்தைச் சேர்ந்த ஓரிரு பெண்களும் மலைநாட்டைச் சேர்ந்த ஓரிரு குடும்பங்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தினர், 'தமிழர் நாடு தமிழருக்கே', 'தமிழ்நிலத்தை மீட்போம்', 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்', 'பார்ப்பனப் புரட்டு பயனளிக்காது', 'உலகத் தமிழரே ஒன்று சேருவோம்', 'அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்', ‘விடுதலை பெற்ற தமிழகம் வேண்டும்’ என்பன போலும் முழக்கங்களை எழுதிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர். தெருக்களில் நடந்து போவாரும் வருவாரும் உந்துகளில் செல்வாரும் விடுதலை முழக்கங்ககளை வியப்புடன் படித்துக் கொண்டே சென்றனர். ஆசிரியர் அவர்கள் ஊர்வலத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு யானையின் வரவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தர்கள். அப்பொழுது ‘பெரியார்’ தம் மூடு வண்டியில் (van) அங்கு வந்தார். ஊர்வலத்தை ஒட்டி வண்டி நிறுத்தப் பெற்றது. ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள் உடனே சென்று வண்டியுள் ஏறி, பெரியாருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நலம் கேட்டார். பெரியார் நலம் கூறி, ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்துமாறும், தாம் அருப்புக் கோட்டை சென்று மறுநாள் மாநாட்டில் கலந்து கொள்ள வருவதாகவும் கூறிச் சென்றார். யானை வர நேரமாகும் என்று தெரிந்ததால் சரியாக 9-30 மணிக்கு ஊர்வலம் புறப்படலாம் என அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் கட்டளையிட்டார். ஊர்வலம் புறப்படுமுன் எல்லாருக்கும் அச்சிட்டு வழங்கப் பெற்றிருந்த இருபத்தேழு முழக்கங்களையும் ஊர்வலத்தினர் ஒருமுறைக்கு மும்முறை உரக்க முழங்கி விட்டுச் செல்லத் தொடங்கினர்.
ஊர்வலம் கிழக்கு நோக்கித் திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருவாளர்கள். தமிழநம்பி, அரணமுறுவல், அருட்குவை, சின்னத்துரை, கதிரவன், நெடுஞ்சேரலாதன், அரசுமணி, நாவை. சிவம், ப. அறிவழகன், பொழிலன், தேன்மொழி, பிறைநுதல் முதலியோர் பகுதி பகுதியாக நின்று, உரத்த ஒலியுடனும் மிக்க ஆர்வத்துடனும் விடுதலை முழக்கங்களை முழங்கிக் கொண்டே சென்றனர். இவர்களைத் தொடர்ந்து ஊர்வலத்தினரும் முழக்கங்களைத் தெளிவாகவும் உரக்கவும் கூறிச் சென்றனர். வானம் சிறிது மப்பும் மாந்தரமுமாகவும் இருந்ததால் அன்பர்கள் சுறுசுறுப்பும் ஆர்வமும் ததும்ப முழக்கமிட்டுச் சென்றதைப் பொதுமக்களும் நின்று கவனித்துக் கேட்டும் கைத்தட்டிகளில் எழுதியிருந்தவற்றைப் படித்துக் கொண்டும் சென்றனர். ஊர்வலம் செல்லுங்கால் மாநாட்டு அறிக்கைகளும், அச்சிட்ட முழக்கங்களும் பொதுமக்களுக்கு வழங்கப் பெற்றன.
ஊர்வலம் எவ்வகை இடையூறுமின்றி திண்டுக்கல் சாலை வழியே கிழக்கு நோக்கிச் சென்று, பின் தெற்கில் திரும்பி மேலமாசி வீதியின் கடைசிக்கு ஏறத்தாழச் சென்றுவிட்டது. அப்பொழுதுதான் யானையும் வந்தது. ஊர்வலத்தின் முன் பெருமிதமாகப் பிளிறியது. இயக்கக் கொடியுடன் யானை மேல் ஒருவரை அமர்த்தவும் யானையை ஊர்வலத்தின் முன்பு சரியாக நிற்கச் செய்யவும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் உதவிக்காவல் துறை மேலாளுநர் (D.S.P.) மலையுந்தில் வந்து இறங்கினார், ஊர்வலத்தை மேலும் செல்லாமல தடுத்து நிறுத்தினார். அவர் வண்டியை யொட்டிப் பின் தொடர்ந்து வந்த இரண்டு மூன்று காவல் வண்டிகளிலிருந்து இரும்புக் கவிப்பு அணிந்த காவலர்கள் சடசடவென இறங்கி ஊர்வலத்தினரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சூழ்ந்து அணிவகுத்து நின்றனர். மிக வேகமாக நடத்தி வந்த யானை திடுமென மேலும் செல்லாமல் கட்டுபடுத்தப்பெற்றதும் உணர்வை அடக்கமாட்டாமல் கோடைக்கால இடிமுழக்கம் போல் ஊரே அதிரும்படி அடிக்கடி பிளிறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தது. அதன் பாகன் தன் கைத்தோட்டியால் அடிக்கடி அதை அடக்க முயற்சி செய்தும் களிற்றுப் பிளிறல் நொடிக்கொருமுறை வானைப் பிளந்து கொண்டிருந்தது. அந்தப் பிளிறல் 'தமிழ்நாடு தமிழருக்கே’, ‘அரசியல் விடுதலை அடைந்தே தீருவோம்’ என்று முழக்க மிடுவதைப் போல் இருந்தது. யானைப் பிளிறல் ஊரையே அங்குக் கூட்டி விட்டது. பொதுமக்கள் சாலை யோரங்களிலும், உயரமான இடங்களிலும் நின்று வேடிக்கை பாத்தனர்.
துணை மாவட்டக் காவலதிகாரி, ஊர்வலத்தினர் தாம் இசைவு பெற்றதற்கு மாறான முழக்கங்களை யிடுவதாகவும், அவற்றைத் தட்டிகளில் வேறு எழுதிப் பிடித்துக் கொண்டு போவதாகவும், மாநாட்டு அமைப்பாளர் திரு. பெருஞ்சித்திரனார் அவர்களை அழைத்துக் கூறி, அவற்றை விலக்குதல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் ஊர்வலத்தை மேற்கொண்டு நடத்திச் செல்ல இசைவு தர முடியும் என்றும் தெரிவித்தார். அமைப்பாளர் ஊர்வலத்திற்கு முன்பே முறைப்படி இசைவு பெற்றிருக்கின்றோம். என்றும் எனவே தடுப்பது முறையன்றென்றும், ஊர்வலத்தினர் அனைவரும் கற்றவர்களாகையால் எவ்வகை வன்முறையோ கலவரமோ செய்ய முற்பட மாட்டார்களென்றும், ஊர்வலத்தை மேற்கொண்டு போக விட்டால் அமைதியாக போய்ச் சேர்ந்து, பிற்பகல் மாநாடும் மிக அமைதியாக முடியும் என்றும். இதனால் அரசினர்க்கோ பொதுமக்களுக்கோ எவ்வழியும் தீங்கு வருவதற்கில்லையென்றும், எவரும் தங்கள் கொள்கைகளையும் கருத்துகளையும் அமைதியாகப் பரப்புவதற்கு இந்திய அரசியல் அடிப்படை உரிமைச்சட்டம் இசைவு தருகின்றதென்றும். அந்தவழி தங்களுக்கும் அவ்வுரிமைச்சட்டம் உண்டென்றும். அதைத்தடுப்பது முறையாகாதென்றும் பலவாறு மாவட்டத் துணைக்காவல் அதிகாரியிடம் அமைதியாக எடுத்துரைத்தார்.
காவல் அதிகாரி அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டாராயினும், எவ்வகையானும் பிரிவினை பேசுவது கூடாதென்றும், அதைச் சட்டம் ஒப்புக்கொள்ளவில்லை யென்றும் கூறி, ஊர்வலத்தை மேலே செல்ல விடாமல் தடுத்தார். பிறகு இதுபற்றி மேலதிகாரிகளிடம் பேசுவதாகக் கூறி, காவல் இயங்கியில் இருந்தவாறே தொலைபேசி வழியாக அரைமணி நேரத்துக்கும் மிகுதியாக அவர்களுடன் உரையாடி விட்டுப் பின் திரும்பி வந்து அமைப்பாளரிடம் “வேண்டுமானால் மாநிலத் தன்னாட்சி வேண்டும் என்று முழக்கமிடுங்களேன். அவ்வாறு செய்தால் நாங்கள் விட்டு விடுகின்றோம். நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். நம் முதலமைச்சர் இன்று இங்கு வருகிறார். அவருக்கு வீண் தொல்லைகளை நீங்கள் உண்டாக்க வேண்டாம். மாநிலத் தன்னாட்சிக் கொள்கை அவருடையக் கொள்கையாகவும் இருக்கிறதில்லையா?” என்றார் துணை காவலதிகாரி,
அதற்கு அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் ‘அக்கொள்கை முதலமைச்சருடையதாக இருக்கலாம்; எங்களுக்குத் தனிக் கொள்கை உண்டு; அதுவே தமிழகம் தில்லி ஆட்சியினின்று பிரிய வேண்டும் என்பது. எனவே எங்கள் கொள்கைபபடி தமிழக விடுதலை முழக்கங்களைத்தான் எழுப்புவோம்’ என்றார். அதன்பின் அதிகாரி மீண்டும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளச் சென்றார். உடனே அமைப்பாளர். “இன்னும் பத்து நிமையங்களுக்குள் இசைவு தராவிடில் நாங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்றார். காவல் அதிகாரி தொலைபேசியில் உரையாடி விட்டு “உங்களுக்கு ஊர்வலத்திற்காகவும் மாநாட்டிற்காவும் கொடுக்கப்பட்டிருந்த இசைவு மறுக்கப்பட்டு விட்டது” என்றார். அதற்கு அப்படிச் சொல்வது முறையற்றது. நாங்கள் முறைப்படி இசைவு பெற்றுத்தான் பெருத்த பொருட் செலவில் இந்த ஊர்வலத்தையும் மாநாட்டையும் ஏற்பாடு செய்துள்ளோம். இப்பொழுது இசைவை மறுப்பது உங்கள் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டும்” என்றார் அமைப்பாளர். “இல்லை. நீங்கள் தென்மொழிக் கொள்கை மாநாடுதான் என்று இசைவு கேட்டுள்ளீர்கள். இப்பொழுது விடுதலை முழக்கங்களை இடுவது தவறில்லையா?” என்றார் அதிகாரி, உடனே பெருஞ்சித்திரனார், "தென்மொழிக் கொள்கை என்பது தமிழக விடுதலைதான். அப்படித்தான் நாங்கள் அறிக்கைகள் வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கைகளை வைத்துத்தான் இசைவுக்கும் எழுதியிருந்தோம். நீங்கள் அதைச் சரியாகக் கவனிக்காமல் விட்டு விட்டீர்கள், தென்மொழிக் கொள்கை என்றால் என்ன கொள்கை என்று கேட்டிருந்தால் விளக்கியிருப்போம். நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளாத குறைக்காக நாங்கள் பொருளையும் முயற்சியையும் இழக்க வேண்டுமா?” என்று கேட்டார்.
“எப்படியும் நாங்கள் கொடுத்த இசைவுகள் திரும்பப்பெறப் படுகின்றன; ஊர்வலமும் மாநாடும் தடைசெய்யப்படுகின்றன; நீங்கள் மீறி ஊர்வலம் நடத்தினால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் அதிகாரி, "அஃது உங்கள் கடமை, அப்படித் தடை செய்யப் பெற்றதாக வாயால் சொன்னால் போதாது. எழுதிக் கொடுத்து விடுங்கள்” என்றார் அமைப்பாளர். உடனே தொலைபேசி வழி அலுவலக எழுத்தர் வரவழைக்கப் பெற்றார், இசைவு நீக்கக் கட்டளை அவ்விடத்திலேயே எழுதப் பெற்று முத்திரையிடப் பெற்றுக் கைகளில் வழங்கப் பெற்றது. அதன்பின் அமைப்பாளர் ஊர்வலத்தினர்க்குச் செய்தியைத் தெரிவித்து, “இக்கால் தடை மீறப்படும்” என்று கூறி முன்னே சென்றார், உடனே அதிகாரிகள் “நாங்கள் உங்களைத் தளைப் (கைது)படுத்துகிறோம்” என்றனர். அதன்பின்னர் காவல் வண்டிகள் வந்தன. மொத்தக் கூட்டமும் உரத்த கொள்கை முழக்கத்துடனும் ஆவலுடனும் வண்டிகளில் ஏறியது. மிகப் பலரைக் காவலர்களே ஏற விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். விடுதலை மறவர்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் குற்றப்பிரிவுக் காவல் நிலையத்தை நோக்கி விரைந்தன. அப்பொழுது மணி காலை 10-45 இருக்கும். காவல் வண்டிகள் சென்ற வழியெல்லாம் உள்ளிருந்த தொண்டர்கள் தொடர்ந்து விடுதலை முழக்கங்களை எழுப்பிக்கொண்டே சென்றனர். உணர்வின் கொந்தளிப்பால் அவர்களின் குரல்வளைகள் முறுக்கமேறி முழக்கங்களுக்குச் சூடேற்றின.
காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்ற அனைவரும் காவல் நிலையத் தாழ்வாரத்தில் அமர்த்தப் பெற்றனர். அதன்பின்னரும் மறவர்கள் குழுக்குழுவாகப் பிரிந்து, மாறிமாறி விடுதலை முழக்கங்களைத் தொடர்ந்து முழங்கியவண்ண மிருந்தனர். காவல் நிலையம் அதிர்ந்தது. காவலர்களும் காவல் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். காவல் நிலையத்திற்கு வெளியில் தெருவில் போவாரும் வருவாரும் உள்ளிருந்து வரும் முழக்கங்களைக் கேட்டுக் குழுமி நின்று மறவர்களின் செயல்களை வியந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்பு, அங்கேயே மாநாடு தொடங்கலாம் என அமைப்பானர் அறிவித்தார். அன்பர்கள் அனைவரும் அமைதியுடன் ஒருபுறமாக வந்து அமர்ந்து கொண்டனர். தொடக்கத்தில் பெகும்பகல்லா (நீலமலை) நா. இளமாறன் அவர்கள் தாமே இயற்றிய விடுதலைப் பாடல்களை உரத்த குரலுடனும் எடுப்பான இசையுடனும் வீறுணர்வுடனும் பாடிக் காவல் நிலையத்தையே அமைதிப்படுத்தினார். முதலமைச்சரின் மதுரை வரவுக்காகவும், திரைப்பட நடிகர் இராமச்சந்திரனின் வரவுக்காகவும் ஏற்கனவே காவலர்கள் வெளியூர்களினின்றெல்லாம் வரவழைக்கப் பெற்றுக் காவல் நிலையத்தில் அடைந்து கிடந்தனர். அவர்கள் அனைவர்க்கும் காவல் நிலையத்தில் நடந்த விடுதலை மாநாட்டு நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் தருவதாக விருந்தன. இளமாறனின் விடுதலைப் பாடல்களைக் கேட்டு அவர்கள் தங்களையே மறந்திருந்தனர். நம் அன்பர்களும் ஊக்கமும் உணர்வும் பெருகத் துணிவுடன் அமர்ந்திருந்தனர்.
விடுதலைப் பாடல்களுக்குப் பின் திருவாளன்மார் பாவிசைக் கோ(வெங்காலூர்), சி. இராசாங்கம்(தஞ்சை), அ. மு. சம்பந்தம் (வழக்குரைஞர் - திருச்சி), அறவாழி (வெங்காலூர்), இராவணன் (கூடலூர் - மதுரை), தமிழநம்பி (திருக்கோவிலூர்-தெ.ஆ), ந. அரணமுறுவல் (மஞ்சப்புத்தூர் -தெ-ஆ), பொற்செழியன் (வெங்காலூர்) ஆகியோர் சொற்பொழிவாற்றினர். அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அனைவர் பேச்சுகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இடையில் வந்திருந்தவர்களின் பெயர்களையும் முகவரிகளையும் பதிந்து கொண்டிருந்த காவல் அதிகாரிகளிடம் போய்க் கவனித்துக் கொண்டிருந்தார். பேச்சு தொடர்ந்தது.
முதலில் பேசிய திரு. பாவிசைக்கோ, இவ்வியக்கம் தோன்றிச் சில ஆண்டுகள் ஆகிவிட்ட தென்றும் பெரியாரை விட்டு அண்ணாத்துரை பிரிந்திருக்காமலும், பிரிந்த பின்பு இந்தியை எதிர்த்த மாணவர்களை வலக்காரமாக அடக்காமலும் இருந்திருந்தால் விடுதலை இயக்கம் நன்றாக வளர்ந்திருக்கும் என்றும் பெரியாரால் விடுதலை வாங்கித்தர இயலாதென்றும், மாநாடு நடத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால்தான். தாம் முன்பு நடந்த (திருச்சி) மாநாட்டிற்கு வரவில்லையென்றும், உணர்வுபெறப் பெருஞ்சித்திரனாரை நம்பிக் கொண்டிருக்கக் கூடாதென்றும், அவர் செத்தாரா இருக்கிறரா என்றுகூடக் கவனிக்கவும் கவலைப்படவும் வேண்டிய தில்லையென்றும், அவரவரே தனித் தனியாகச் செயல்பட வேண்டுமென்றும்; மறைமுகமாகத் திட்டங்கள் தீட்டிக் கொள்ள வேண்டுமென்றும்; தம்மிடம் உள்ள திட்டங்களைத் தெரிய விரும்புவார் முறையோடு அணுகினால் தெரிந்து கொள்ளலாம் என்றும்; இப்போதைக்கு அரசினர் அலுவலில் இருப்போரெல்லாம் சிறைப்பட்டுத் துன்பப்படுவதில் பயனில்லை என்றும்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடுவணரசுத் துறையில் ஊடுருவித் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு, அதன் பின் வினையாற்ற வேண்டும் என்றும் தலைவர் என்று யாரும் இருக்கக் கூடாதென்றும் பேசினார்.
திரு. இராசாங்கம் பேசுகையில் தமிழகம் எவ்வாறேனும் விடுதலை பெற வேண்டுமென்றும்; தாம் அவ் வினைப்பாட்டிற்குத் துணை செய்ய உறுதியுடன் இருப்பதாகவும் சொன்னார்.
வழக்குரைஞர் திரு. அ. மு. சம்பந்தம் தாம் தி.மு.க.வைச் சேர்ந்தவரென்றும், மிகுந்த விடுதலை உணர்வுடன் இருப்பதாகவும், ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
திரு. அறவாழி பேசுகையில், தமிழினத்தை வீழ்த்துவதில் குறியாயிருக்கும் துக்ளக் 'சோ'வுக்குச் செருப்புகளைப் பரிசாக அனுப்ப வேண்டும் என்றும் கச்சதீவுப் புலனத்தில் இந்திரா அம்மையார் நடந்து கொண்டதைக் கண்டித்தும், ஆனால் கச்சத்தீவை இலங்கையுடன் சேர்த்து விட்டால் இலங்கைத் தமிழர்களே முதலில் தனிநாடு வாங்கி நமக்கு வழிகாட்டுவார்களென்றும் கூறினார்.
திரு. இராவணன் பேசுகையில் இளமையிலிருந்தே தாம் பார்ப்பனரால் நசுக்கப் பெற்றது பற்றிக் குறிப்பிட்டு, அவர்களை வன்முறையில் தான் ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
திரு. தமிழநம்பி உரையாற்றுகையில் திரு. பாவிசைக்கோ நடை முறைக்கு ஒவ்வாமல் நம்முடைய ஒற்றுமையைக் குலைக்கும் கருத்துக்களைக் கூறுவதாகவும் ஒழுங்கு படுத்தப் பெற்ற இயக்கம் வேண்டுமானால் ஒரு தலைவர் தேவை என்றும், நாம் அவருக்குக் கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் அவரவர் விருப்பப்படி இயங்குவதால் எவ்வகைப் பயனும் விளையாதென்றும், பாவிசைக்கோ ஏதோ தம்மிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட திட்டத்தை வெளிப்படையாக நம்மிடமேனும் சொல்லட்டும். என்றும், ஒரு வேளை பிறர் செய்யும் எல்லா வினைப்பாடுகளையும் முறியடிப்பதே அவர் திட்டமாக இருக்கக்கூடுமென்றும் குறிப்பிட்டார்.
திரு. அரணமுறுவல் விடுதலை அடைய வேண்டிய இன்றியமையாமைபற்றியும், அதற்கென அனைவரும் இணைந்து செய்யும் வினைப்பாடுகள் பற்றியும் கூறினார்.
திரு. பொற்செழியன் உரையாற்றுகையில் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்கள் காட்டும் வழியில் நடக்கத் தாம் எப்பொழுதும் அணியமாக இருப்பதாகவும் இயக்கத்திற்குத் தலைமை தேவை என்றும் வலியுறுத்திப் பேசினார்.
அதன் பின்னர் திரு. அரிமா மகிழ்கோவும்(புதுவை), திரு. பொதிய வெற்பனும்(குடந்தை) ஒன்றிரண்டு இயக்கப் பாடல்களைப் பாடினார்கள் இத்துடன் காலை மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.
காவல் துணை ஆய்வாளர் வந்திருந்தவர்களின் பெயர்ப் பட்டியலை இன்னும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களும் அதற்குத் துணை செய்து கொண்டிருந்தார்கள். தென்மொழிக் குடும்ப உறுப்பினர் எல்லாருடைய பெயர்களும் பதியப்பெற்றன. ஆசிரியர் அவர்களின் தந்தையாரும் (சேலம்)மாநாட்டுக்காக வந்திருந்தார்.
புதுவையில் இருந்தபொழுது பாவேந்தர் பாரதிதாசனார்க்குப் பல வகைகளில் துணை நின்றவரும் அவர்மேல் ஆராக் காதல் கொண்டவரும், இக்கால் அப்சரா உணவு விடுதிக்கு இனிப்புச் செய்து கொடுப்பவருமாகிய திரு. மதன்மோகன் சேட் என்பாரும், ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்களின்மேல் வைத்த அளவிறந்த அன்பினாலும் மதிப்பினாலும் தாமும் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெற்று, மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பது, குறிப்பிடத் தக்கது. அவர் தாமும் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று முழக்கமிட்டதும், தம்மை ஒரு வடநாட்டார் என்று கூறாது தாமும் தமிழரே என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறியதும், ஆசிரியர் அவர்களை வாய் நிறைந்த அன்புடன் ‘அண்ணா' 'அண்ணா' என்று அடிக்கடி அழைத்து வளைய வளைய வந்ததும், தென்மொழிக் குடும்பத்தாரிடமும் மற்ற தமிழன்பர்களிடமும் அவர் பாசத்தோடு பழகியதும் அவர் தமிழராகவே மாறிவிட்டாரோ என்று எண்ணி மகிழச்செய்தன.
பெயர்ப் பட்டியல் ஒருவாறு எடுக்கப் பெற்றது. மொத்தம் தொண்ணூற்றிரண்டு பெயர்கள் பதிவாகியிருந்தனர். உள்ளிருந்தவர்களைக் கண்காணிக்க ஐந்தாறு இரும்புத்தலைக் காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். இருப்பினும் தளைப்படுத்தப் பெற்ற அன்பர்கள் சிலர் தேநீர் அருந்தவென்றும் காலகம் (சோடா) குடிக்க வென்றும் அடிக்கடி காவல் நிலையத்தின் முன்புறக் கடைகளுக்குப் போவதும் வருவதுமாக விருந்தனர்.
பிற்பகல் இரண்டரைமணி யளவில் காவல் அதிகாரிகளால் அன்பர்களுக்கு எலுமிச்சை, தயிர் உணவுப் பொட்டலங்கள் வருவித்து வழங்கப் பெற்றன. அன்பர்கள் அனைவரும் அவற்றை உண்டு பசியாறினர். உணவுக்குப் பின்னர் முன்பதிந்த 92 பெயர்களின் உடல் அடையாளங்களும் இரண்டு உறவினர் பெயர்களும் பதிய வேண்டி, காவல் அதிகாரிகள் மீண்டும் வரிசைப்படி அன்பர்களை அழைத்தனர். அக்கால் முன்பு பதிந்தவர்களுள் பன்னிருவர் இல்லாமலிருந்தனர். காவலர்களும் முன்னணி அன்பர்கள் பலரும் பலமுறை கூவியழைத்தும் தேடியும் அப்பன்னிருவரையும் காண முடியவில்லை. அவர்கள் ஒருகால் நழுவியிருக்கலாம். அல்லது அக்கால் வெளியில் சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அன்று மாலை வரை திரும்பவே இல்லை. இங்கு அன்பர்கள் ஒன்றினை நினைவில் வைத்துக் கொள்ளுதல் எல்லாருக்கும் நல்லது.
பொதுத் தொண்டில் பலவகை உண்டு. நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் பேச்சாலும் எழுத்தாலும் இவ்வுலகத்தையே மாற்றியமைப்பது போல் வீறராப்புக்காட்டுவது ஒரு வகை. செயலுக்கு இறங்கினாலும் காலிலோ கையிலோ ஒரு சிராய்ப்புக்கூட இல்லாமல் மீண்டு விட வேண்டும் என்ற தன்மையில் ஈடுபடுவது ஒருவகை. தன் வேலைக்கோ பிழைப்புக்கோ குந்தகம் வராமல் ஏதோ சில பெருமைகளுக்காக எந்த வகை ஆராவாரங்களையும் செய்யத் துணிந்து விடுவது ஒருவகை இனி, எந்த நிலையிலும் என்ன சூழலிலும் எதிர்வரும் விளைவுகளைப் பாராமல் தான் கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக ஒப்புவித்து விடுவது ஒரு வகை. இவ்வகைகளில் இறுதி வகையினர்தாம் எந்த வினைக்கும் தகுதியுடையவர். குறிப்பாக விடுதலை வரலாறுகள் இப்படிப் பட்டவர்களால்தாம் எழுதப் பெறுகின்றன.
மதுரை மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்ட அன்பர்களில் இறுதி வகையினர் மிகுதியும் இல்லை. எனினும் ஓரளவு துணிவுள்ளவர்களாக இருப்பார்கள் என்றுதான் நாம் அனைவரும் கருதியிருந்தோம். அப்படிப்பட்டவர்கள்தாம் அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இவர்களன்றி “நானும் விடுதலை வீரன்தான் எனக்கும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று முதலியவை மிகுதியும் உண்டு” என்று பெருமையடித்துக் கொள்பவர்களும் கூட அங்கு வந்துவிட்டார்கள் என்றே கருத வேண்டியிருந்தது. அத்தகையவர்கள் எந்தக் கட்சியிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால், தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சியிலும் இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களும் அப்படிப்பட்டவர்களே! இவர்களை வைத்துக் கொண்டுதான் எந்தக் கட்சியாலும் எந்தவகை வினைப்பாட்டையும் ஒழுங்காகச் செய்ய முடியவில்லை. அண்ணா அவர்கள் திராவிட நாட்டுப் பிரிவினையைக் கை நெகிழ விட்டதற்கும், பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தைத் தொடங்காமல் வெறும் இராமர் சீதைகளை வைத்துக் கொண்டு கூட்டங்களை மட்டும் நடத்திக் கொண்டிருப்பதற்கும். தி.மு.க. தன்னாட்சி என்று மழுப்பிக் கொண்டிருப்பதற்கும், இவ்வகை உறுப்பினர்களின் தக்கை நிலைகள்தாம் அடிப்படைக் ராணியங்கள். ஆனாலும் தென்மொழி மறவர்களில் இப்படிப்பட்டவர்களைப் பெரும்பாலும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை.
தென்மொழி, ஈடுபாடுடையவர்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு தனி நிலை உண்டு. அவர்கள் உறுதியான கொள்கைப் பிடித்தம் உடையவர்களாக இருப்பார்கள். தெளிந்த அறிவுணர்வுடையவர்களாக இருப்பார்கள்; செயலில் துணிவும் முனைப்பும் உடையவர்கள் அவர்கள் பொருள் நிலைத் தொல்லைகளால் சிற்சில நேரங்களில். அவர்கள் சிறிது சோர்வடைந்திருந்தாலும், தங்களைத் தாங்களே தூக்கி நிறுத்திக் கொள்ளும் தன்னாற்றல் உடையவர்கள். தென்மொழி மறவர்கள். எனவேதான் பொதுவுடைமைக் கொள்கையினர் தம் கட்சிக்காக வீசும் வலைகளைத் தென்மொழி வயல்களில் வீசுகின்றனர்.
முன்பு தீவிரத் தென்மொழி ஈடுபாடுடையவர்களாக விருந்தவர்களில் சிலர் அல்லது பலர் இக்கால் பொதுவுடைமையியக்கங்களில் ஈடுபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அவர்கள் அவ்வாறு போனதற்குத் தென்மொழிக் கொள்கையில் உள்ள குறைபாடு கரணியமன்று: பொதுவுடைமைக் கொள்கையில் உள்ள கவர்ச்சியே கரணியமாகும். தென்மொழி வயலில் எருவாக வேண்டிய நிலையை அவர்கள் விரும்பாது பொதுவுடைமை வயலில் பயிராகத் திகழும் நிலையை அவர்கள் வரவேற்கின்றார்கள். மற்றப்படி உலக அறிவெல்லாம் அவர்கள் மூளைகளில் வந்துவிட்ட தென்றோ, இருக்கின்ற அறிவெல்லாம் நம் மூளைகளினின்று போய்விட்டதென்றோ எவரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டா.
ஆரவாரத்தை விரும்புவர்கள் அறிஞர்களிலும் உண்டு; அறிவற்றவர்களிலும் உண்டு. இன்னுஞ் சொன்னால் அறிவியலறிஞர்களிலேயே போலிகள் உளர். போலி நிலைகள் எங்கும் உண்டு. தென்மொழி இயக்கமும் அதற்கு விலக்கில்லை. எனவேதான் மாநாடு தொடங்குவதற்கு முன் வீரதீரம் பேசிய சிலர் ஊர்வலம் தொடங்குகையில் கொஞ்சம் மனந்தொய்ந்து காணப்பட்டனர். அவர்கள் காவலர்கள் கூட்டத்தை வளைத்த உடனேயே தப்பி விட்டனர். இனி, ஊர்வலம் தொடங்குகையில் வீறர்ப்புக் காட்டிய சிலர் காவலர்கள் வந்தவுடன் மனம் நெகிழ்ந்து போயினர். அவர்கள் தாம் தளைப்பட்டவுடன் காவல் நிலையத்தில் கழன்று கொண்டவர்கள். அவர்கள் எத்தனையோ கரணியங்களைச் சொல்லலாம். அக் கரணியங்களை அவர்கள் முன்பே கருதாமல் ஊர்வலத்திற்கு வந்திருந்து நம் கூட்டத்திலும் அத்தகையோர் உளர் என்று காட்டி இழிவு தேடித் தந்திருக்க வேண்டா என்பதே நாம் அவர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்வது, இனி, அத்தகையவர்களை நாம் முன்பே இனங்கண்டு கொள்ள முடியாது. “எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான் வேறாகும் மாந்தர் ‘சிலர்’ இல்லை, 'பலர்'... என்பது திருக்குறளின் தெளிவுரை. ஆனாலும் நாம் அவர்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டுவதில்லை. அவர்களை வலிவற்றவர்கள் என்றோ தெளிவற்றவர்கள் என்றோ கருதவேண்டுவதும் இல்லை. அவர்கள் ஒருவகையினர்; அத்தகையினர் என்றும் நம்மோடு நாமாகக் கலந்து இருந்து கொண்டுதான் இருப்பர்; அவர்களை விலக்க முடியாது. வேண்டுமானால் சில பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாம் தப்பித்துக் கொள்ள முடியும். அந்த நிலைகளை இம்மாநாட்டு நிலைகள் பலருக்கும் உணர்த்தியிருக்க முடியும் என்றே நாம் கருதுகின்றோம்.
மீண்டும் சொல்கின்றோம் நாட்டு விடுதலை முயற்சிகள் என்பது எளிதன்று உயிர் துறக்கும் முயற்சியாகும். ஈக வரலாற்றின் இறுதிப் படலமே விடுதலைப் படலம் கோழைகள் விடுதலை வரலாற்றை என்றும் எழுதியதில்லை; எழுதவும் முடியாது. துணிவு: துணிவு: துணிவு! அதுதான் விடுதலை இயக்கத்தின் கொள்கை மந்திரம் இதை நன்கு விளங்கிக் கொண்டவர்களைப் பொறுக்குவதற்குத்தான் திருச்சி மாநாட்டில் மூன்று கட்டத் தீர்மானம் நிறைவேற்றப் பெற்றது.
இனி, அன்று இறுதியாகப் பதியப்பெற்ற எண்பது ஊர்வல மறவர்களின் பெயர்களும் , ஊர்களும் வருமாறு:
1.பெருஞ்சித்திரனார்(மாநாட்டு அமைப்பாளர்), கடலூர். 2. உ. அரசுமணி (மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்), மதுரை, 3. க. வெ. நெடுஞ்சேரலாதன் (மாநாட்டுச் செயலாளர்), மதுரை. 4. அரசங்குடி சம்பந்தம் (வழக்குரைஞர்), திருச்சி. 5. மறை. நித்தலின்பன், கோவை. 6. அறவாழி, வெங்காலூர். 7. மகிபை. பாவிசைக்கோ, வெங்காலூர். 8. ப. முருகவேள், மதுரை. 9. பொற்செழியன், வெங்காலூர். 10. வேங்கையன், வெங்காலூர் 11. கா. தமிழரசன், முதுகுன்றம்(தெ.ஆ.), 12. பொன். மணிமொழி, வாழைக்குறிச்சி, 13. கு. ஈகவரசன், பெரகம்பி. 14. எழிலன்பன், கண்டராதித்தம் 15. உலகக்குடிமகன், கமுதக்குடி, 16. கோ. மனோகரன், இராசிபுரம் 17. இரா. அருட்குவை, நெய்வேலி-3. 18. கரு. நடவரசன், நெய்வேலி-3. 19. ப.அறிவழகன், சென்னை-2. 20. தா. இளந்திரையன், கொடும்பப்பட்டி. 21.(ஆர்தர்)மாசிலாமணி, கலிக்க நாய்க்கன்பட்டி. 22. கி. அரிமா மகிழ்கோ, புதுவை-5, 23. அ. பூங்குன்றன், தளவாய்ப்பட்டணம். 24. ப. அறவாழி, தளவாய்ப்பட்டணம். 25. ப. துரையரசன், கைகாட்டிப்புதூர். 26. ப. கு. முருகவேள், புன்செய்ப் புளியம்பட்டி. 27. த. அன்பழகன், கடலூர்-1, 28. நாவை. சிவம் (தமிழ்மகன்), கொடும்பாவூர். 28. அ. தெ. தமிழநம்பி, அறங்கண்டநல்லூர். 29. செ. புத்தன், சென்னை-2. 30. மு. மகிழரசன், சென்னை-24. 31. கல்லை. அருட்செல்வன், கெ. கல்லுப்பட்டி. 32. தாமரை பெருஞ்சித்திரன், கடலூர்-1, 33. மா. தேன்மொழி, கடலூர்_1, 34. மா. செந்தாழை, கடலூர்-1. 35. மா. பிறைநுதல், கடலூர்-1, 36. மா. பூங்குன்றன். கடலூர்-1. 37. மா. பொழிலன், கடலூர்- 1, 38. இறை. பொற்கொடி, மதுரை-10. 39. புலவர் இறைக்குருவனார், மதுரை - 10. 40. செம்பியன், சென்னை - 21. 41. கோ. மு. பரண் ஆக்கன். சென்னை - 2, 42. துரைசாமி, திருப்பூர். 43. சேதுராமசாமி, கைகாட்டிப்புதூர். 44 அ. துரைசாமி, அவிநாசி. 45. ச. சின்னத்துரை, சிவபுரம். 46. வை. தமிழ்க்குமரன், திருவாரூர். 47. ஆ. மதியழகன், திருவாரூர். 48. கா. இராவணன், கூடலூர் 49. பழங்கரைவேள், பழங்கரை. 50. மதன்மோகன், மதுரை - 1. 51. இல. திருமுகம், தென்குலம். 52. இரா. திசைவேந்தன். அ. இலக்குமிபுரம். 53. தே. அரசன், மதுரை - 10, 54. நா. இளமாறன், பெகும்பகல்லா. 55. சு. ம. முருகுவேந்தன், மதுரை. 56. சி. இராசாங்கம், தஞ்சை. 57. உ. ச. எழில், வாழ்வாங்கி. 58. அன்பு ந.வை. இளஞ்செழியன், அம்மையன்பட்டி 59. வே. மு. பொதியவெற்பன். குடந்தை. 60. ந. அரணமுறுவல், நாயனார்பாளையம், 61. புலவர் சா. அடல்எழிலன், திருவையாறு. 62. இர. முத்தையன், தீபாமங்கலம். 63. குன்னத்தூர். ச. தம்பி, சென்னிமலை. 64. க. தமிழப்பன், திருப்பூர் - 4. 65. பூபதி (வேங்கையன்), சோலையார்பேட்டை. 66. அருள் வேட்டன், கண்ணூற்று. 67. ஓடை. தமிழ்ச்செல்வன், மேலுனர். 68. கதிரவன், உரத்தநாடு. 69. ஒளி. மலரவன், வெங்காலூர், 70. சேரலாதன், வெங்காலூர்.
(இப்பட்டியலில் பத்துப் பெயர்கள் விடுபட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே ஊர்வலத்தில் கலந்துகொண்டு, 9.6.73 அன்று காவல் நிலையத்தில் சிறைப்பட்டு இறுதி முறையாகப் பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்கள் தங்கள் பெயர்களையும் முகவரிகளையும் தெரிவிப்பார்களாயின், அவை அடுத்த இதழில் வெளியிடப் பெறும்)
அடுத்து, பிற்பகல் மாநாட்டு நிகழ்ச்சியும் காவல் நிலையத்திலேயே நடந்தது. திரு. நா. இளமாறன் மீண்டும் தம் விடுதலையுணர்வுப் பாடல்களைப் பாடினார். திருச்சி வழக்குரைஞர் அ.மு. சம்பந்தம் பிற்பகல் நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். குறிப்பிட்ட வேளையில் வரவியலாமையால் காலையில் நடந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும், காவல் நிலையத்தில் தளைப்படவும் இயலாத தஞ்சைப் புலவர் திரு. த. சரவணத்தமிழனாரும், காரைக்குடிக் கல்லூரி மாணவர் திரு. மா. ஆடலரசும், புதுவைக் கல்லூரி மாணவர் ப. அடியார்க்கருளியும் பிற்பகல் மாநாட்டில் தொடக்கத்தில் பேசினர். (இம் மூவரும் காலங் கடந்து வந்தும் காவல் நிலைய அதிகாரிகளிடம் சென்று தங்கள் பெயர்களையும் பதிவு செய்து கொண்டு சிறைப்படுத்துமாறு வேண்டினர். ஆனால் ஊர்வலத்தில் வந்தவர்களை மட்டுமே நாங்கள் சிறைப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் அறவே மறுத்துவிட்டனர்.)
திரு. தமிழனார், தாம் காலங் கடந்து வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு தளைப்படுத்தப் பெறாமைக்கு வருந்தியும், மாநாட்டுப் பெருமைகளை விரித்தும் பேசினார். திரு. ஆடலரசு விடுதலையுரையாற்றினார். திரு. அடியார்க்கருளி தமிழின் பெருமை பற்றிக் காவலர்களுக்கு மிகத் தெளிவாகச் சுவைபட எடுத்துக் கூறினார். காவலர்கள் மிக நெருக்கமாக வந்து நின்று மிக ஆர்வத்துடன் கேட்டனர். அதன்பின்னர் திருவாளர்கள் க. வெ. நெடுஞ்சேரலாதனும், அருட்குவையும் தமிழரின் அடிமைத்தனம் பற்றியும். இந்திராவின் ஆட்சிபற்றியும் பேசினர். திரு. மறை. நித்தலின்பன் அறம் வெல்லும் என்று பேசினார்.
வழக்குப் பதிவு பெறவிருந்த எண்பது பெயர்களையும் சிறைக்குக் கொண்டு சென்று காவலில் வைக்கின்ற நிலை ஏற்படவிருந்ததால், காவல் அதிகாரிகள் உள்ளே இருப்பவர்கள் தம் தம் உடைமைகளையும், விலை மதிப்புள்ள பொருள்களையும், பணங்களையும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், அவ்வாறு இருந்தால் அவர்கள் வெளியிலுள்ள பொறுப்பானவர்களிடம் கொடுத்துவிடலாம் என்றும் கூறினர். அதன்படி அன்பர்கள் வரவழைக்கப் பெற்றனர். அவர்களிடம் எல்லாருடைய பணம், பெட்டி, துணி முதலிய பொருள்கள் பெண்களின் நகை நட்டுகள் முதலியவை வைப்பகத்திலோ வேறிடத்திலோ வைத்திருக்குமாறு ஒப்படைக்கப் பெற்றன.
இதற்கிடையில் அதிகாரிகள் பரபரப்போடு இயங்கியில் வெளியே போவதும் வருவதுமாக இருந்தனர். அடிக்கடி தொலைபேசித் தொடர்புகள் நிகழ்த்தப் பெற்றன. மாலை 6 மணியளவில் அதிகாரி ஒருவர் மாநாட்டு அமைப்பாளரை அழைத்து, எல்லாரும் விடுதலை செய்யப் பெற்றனர் என்று கூறி, எல்லாரையும் அமைதியாகக் கலைந்து போக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். அச் செய்தியை அமைப்பாளர் அன்பர்களிடம் தெரிவித்து, எல்லாரும் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டிக்கொண்டு, அன்று இரவு 9 மணிக்கு அப்சரா விடுதியில் பொதுக்குழுக்கூட்டம் நடக்குமென்றும் அக்கூட்டத்திற்கு அன்பர்கள் அனைவரும் தவறாது வரவேண்டுமென்றும்; அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றி அங்கு ஆராயப்பெறும் என்றும் சொன்னார். அதன்பின் விடுதலை முழக்கங்களுடன் விடுதலை மறவர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர்.
இரவு 9.30 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் தலைமையில் கூடியது. மறுநாள் மாநாடு நடத்துவதா வேண்டாவா என்ற கருத்து பற்றித் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கேட்கப் பெற்றது. விடுதலையுணர்ச்சி உள்ளவர்களின் மனநிலைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கம். பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த அறுபது பெயர்களில் ஐம்பத்தைந்து பெயர்கள் மறுநாள் எப்படியும் மாநாட்டை நடத்தியே தீரவேண்டும் என்று உணர்ச்சியுடன் முழங்கினர். ஐந்து பெயர்கள், இக்காலம் நமக்குக் கருத்தறிவிப்புக் காலம் என்றும், எனவே நாம் போராட்டத்தில் கவனம் செலுத்தக் கூடாதென்றும், அது போராட்டக் காலத்தில் நடைபெற வேண்டிய ஒன்று என்றும், கூறினர். அமைப்பாளர் அவர்கள் இருசாரார் கருத்தையும் அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு, "எதிர்க்கருத்துகள் சிறுபான்மையினரால் கூறப் பெற்றாலும், நான் அவற்றில் மிகவும் கவனம் செலுத்துகின்றவன்; அவற்றை ஆராய்கின்றவன். ஒரே ஒருவர் தம்மில் மாறுபட்டாலும்கூட அவர் மாறுபடுவது ஏன் என்னும் விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதிலே நான் அக்கறையுள்ளவன். அவர் நம் கருத்துகளை விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அவற்றைப் பலவாறு விளக்க அணியமாக விருக்கின்றவன். பெரும்பாலும் நாம் எல்லாரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒருவர் மாறுபட்டாலும் அவரைப் புறக்கணிக்கக் கூடாது. கூடிய வரையில் அவரையும் இணக்கத்திற்குக் கொண்டுவரவே முயல வேண்டும். இப்பொழுது மாநாட்டைத் தொடர்ந்து நடத்துவதில் நமக்குள் மாறுபாடான கருத்து இருக்கக் கூடாது. மாநாட்டை நடத்துவதா, இல்லையா, எங்கு, எப்படி நடத்துவது என்பது நாளை காலையில் செய்யப்பெறும் ஒரு சட்ட முயற்சிக்குப் பின் அன்பர்களுக்கு அறிவிக்கப்பெறும். இது கொள்கைப் பரப்புக் காலந்தான் என்பதை அறிவேன். இப்பொழுதும் நாம் கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாடுகளை நடத்துகின்றோம். நாம் திருச்சி மாநாட்டில் தீர்மானித்துக் கொண்டபடி இக் கொள்கைப் பரப்புக் காலத்தில் சரிவரச் செயல்படாமைக்குக் கரணியம் பொருளியல் வலிமையின்மையே! பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்களெல்லாம் இதில் ஈடுபடத் தயங்குகின்ற பொழுது, பொருளில்லாத நிலையில் நாம் இவ்வாறு ஈடுபடுவது கூட, மிகப் பெரிய செயல்தான். 'நாடு பிரியவேண்டும்’ என்று கருத்தறிவிக்கவே எல்லாரும் அஞ்சுகின்ற காலத்தில், நாம் பிரிவினை மாநாடு என்று வெளிப்படையாகக் கூட்டுவது மிகவும் அரிய செயல் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே, அன்பர்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டது போல், கொள்கைப் பரப்புக் காலத்தில் நாம் சரிவரச் செயல்படவில்லையே என்றும் எவரும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். முதலில் நம்மை அந்நிலைக்குப் பக்குவப்படுத்திக் கொள்வதும் ஒரு முயற்சிதான். இன்று நம் ஊர்வலத்தின் முடிவில் நடந்த சில தொய்வுகளைப் பற்றி அறிவீர்கள். நாம் முனைப்பாளர்கள். நாம்தாம் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். நமக்குள்ளேயே சிலர் தெளிவற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கும் நாம் தெளிவேற்ற வேண்டும். அதுவும் ஒரு முயற்சியே! சும்மா வாயளவில் கொள்கையைச் சொல்லிக் கொண்டிருப்பது வேறு. செயலளவுக்கு அதைக் கொண்டுவருவது வேறு. செயலுக்கு வரும்பொழுது அதில் பலவகையான இழுப்பு பறிப்புகள் இருக்கவே செய்யும். அஃது அவரவர் மனநிலைகளைப் போறுத்தது. கொள்கைப் பரப்புக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டா என்று அன்பர் சிலர் கேட்டுக் கொண்டனர். உண்மைதான். நாம் இப்பொழுதுங்கூட கொள்கையைப் பரப்புவதற்குத்தான் மாநாட்டைக் கூட்டினோம். இது போன்ற மாநாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் கவனமும் அரசினர் கவனமும், செய்தித்தாள்களின் கவனமும் நம் பக்கம் திரும்பும். அப்பொழுதுதான் நாம் சொல்வதை அவர்கள் எண்ணிப் பார்க்க முயற்சி செய்வர். அந்த முயற்சியைத்தான் நாம் இப்பொழுது செய்தோம். அதற்குத்தான் இப்பொழுது தடையிட்டிருக்கின்றார்கள். மாநாடு நடைபெறவிருந்த மன்றம் சாத்திப் பூட்டி முத்திரையிடப் பெற்றுக் காவலர்களால் காக்கப் பெற்று வருகின்றது. நம்மை அமைதியாக ஊர்வலம் நடத்தவும், மாநாட்டை நடத்தவும் விட்டிருந்தார்களானால் இந்த மதுரையில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி நடைபெறுவதை இந்த அரசு விரும்பவில்லை போலும்! கொள்கையைப் பரப்பும் முயற்சியில்தான் ஈடுபட்டோம் போராட்டத்திலன்று. ஆனால் அதற்கே இப்பொழுது தடையிடப் பெற்றுள்ளது. கொள்கை பரப்பப்படும் பொழுது அது தடுக்கப் பெறுமானால் அதனை மீறுவதும் ஒரு முனைப்பான கொள்கை பரப்புச் செயலே யாகும்; போராட்டம் ஆகாது. எனவே அன்பர்கள் எதற்கும் அணியமாக விருக்க வேண்டும். நாளை காலை 9 மணிக்கு மேற்கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப் பெறும். அன்பர்கள் பலருடைய உணர்ச்சியையும் நான் நன்கு அறிவேன். சிலர் இப் போராட்டத்திலீடுபட்டு எத்தனை ஆண்டுகளேனும் சிறைக்குச் செல்ல அணியமாக விருக்கின்றார்கள் என்றும் எனக்குத் தெரியும். சிலர் கூட்டத்தோடு வந்துவிட்டோமே, நடவடிக்கைகள் கடுமையாக விருந்தால் என்ன செய்வது என்று அலமருகின்றதையும் அறிவேன். அனைவரும் காலை வரை பொறுத்துக் கொள்ளுங்கள். காலையில் எல்லாம் தெரிந்துவிடும். நீங்கள் இப்பொழுது அமைதியாகப் போகலாம்” என்று விரிவாக எடுத்துரைத்தார். இரவு பதினொன்றரை மணியளவில் கூட்டம் முடிவுற்றது. அதன்பின் ‘கைகாட்டி’ ஆசிரியர், திரு. தமிழ்க்குடிமகனும் உடுமலைப்பேட்டை திரு. இறையனும் வந்து அமைப்பாளர் பெருஞ்சித்திரனார் அவர்களைப் பார்த்துப் பேசிச் சென்றார்கள். இருவரும் மாநாட்டுச் செய்தி மிகவும் பரபரப்பூட்டி யிருப்பதாகவும், அரசுவரை எட்டியிருப்பதாகவும் சொன்னார்கள். அன்றையச் செய்தி அன்றைய மாலை வெளியீடுகளிலும், மறுநாளைய காலை வெளியீடுகளிலும் வந்திருந்தன. தினத்தந்தி, மாலைமுரசு, தமிழ்முரசு, தினமணி, அலைஓசை, தனிமலர், நவசக்தி, The Indian Express, The Hindu முதலிய எல்லாத் தாள்களிலும் செய்தி பெரிய அளவில் போடப் பெற்று நன்கு விளம்பரம் ஆகியிருந்தது. அவற்றில் 'அலை ஓசை' என்னும் செய்தித்தாள் ஒன்று தான் செய்தியை நடந்தது நடந்தவாறே ஓரளவு உண்மையாகவும் விரிவாகவும், நடுநிலையோடும் முதன்மை கொடுத்து எழுதியிருந்தது. பிற தாள்கள் அனைத்திலும் செய்திகள் திரிக்கப்பட்டும், மாற்றப்பட்டும், குறைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வெளியிடப் பெற்றிருந்தன. 'தினத்தந்தி’ தனக்கேயுரிய முறையில், மதுரையில் திராலிடர் கழகத்தினர் 92 பேர் கைது” என்று புளுகியிருந்தது. 'தினமணி'யும் அதற்கு ஒத்தூதியிருந்தது. அது 'தென்மொழி' ஆசிரியர் என்பதற்குத் 'தமிழ்மொழி' ஆசிரியர் என்றும், 'தென்மொழிக் கொள்கை மாநாடு’ என்பதைத் 'தமிழ்மொழி அபிவிருத்தி மாநாடு’ என்றும் வெளியிட்டிருந்தது. அதற்கு இயல்பாகவுள்ள பார்ப்பனக் குறும்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக விருந்தது. தென்மொழி என்னும் பெயரைச் சொல்லவும் ஆரியப் பார்ப்பனர்கள் நாக்கூசுகின்றனர் என்று அதனால் தெரியவருகின்றது. 'மாநாடு' என்பதைக் கூட மகாநாடு என்று எழுதி நிறைவடைகிறார்கள் அவர்கள் என்பதை நம் ‘அடிமை’கள் கவனித்தால் நல்லது. இந்து ஆங்கில ஆரிய நாளிதழ், 'தளைப்பட்ட ஒருசிலர் பிணையல்(Bail) கொடுத்து வெளிவர முயற்சி செய்ததாக'ச் செய்தியையே களங்கப்படுத்தியிருந்தது.
திருச்சியிலிருந்து வெளிவரும் 'தினமலர்' என்னும் இதழ் 'தில்லி ஆட்சிக்கு எல்லை கட்டுவோம்’ என்னும் முழக்கத்தைத் 'தெள்ளிய ஆட்சிக்கு எல்லைகட்டுவோம்’ என்று முழங்கியதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. தில்லிக்கும் தெள்ளிய என்பதற்கும் வேறுபாடும் பொருளும் கூடத் தெரியாமல் தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடத்தில் நடத்தப்பெறும் தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களை நினைத்துச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நவசக்தி (பெரிய பெரிய அளப்புகளையெல்லாம் அளப்பது) 'பெருஞ்சித்திரனாரைப்’ 'பெருஞ்சித்தனார்’ என்று எழுதியிருந்தது. மற்றும் ஒவ்வொரு செய்தித்தாளும் தளைப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு வகையாகக் குறித்திருந்தது இன்னும் வியக்கத்தக்க செய்தியாம். அலைஓசை 90 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள் என்று எழுதியிருந்தது. தினத்தந்தி 92 பேர்கள் அவர்களுள் 5 பெண்கள் என்று எழுதியிருந்ததுடன், அவர்கள் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று 'மிகவும் ஆராய்ந்து' கண்டதுபோல் எழுதியிருந்தது. மதுரைத் தமிழ்முரசு 100 பேர் என்றும் அவர்களுள் பெண்கள் 10 பேர் என்றும் எழுதியிருந்தது. திருச்சி தினமலர் 4 பெண்கள் உட்பட 100 பேர் என்று வெளியிட்டிருந்தது.
நம் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் எவ்வாறு பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன என்பதை உணர்த்தவே இந்நிலைகளையெல்லாம் இங்குத் தெரிவிக்க வேண்டியிருக்கின்றது. எத்தனைப் பேர் சிறைப்படுத்தப்பட்டனர் என்பதைக் கூட அவை முறையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயலாமல் கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டே செய்திகள் வெளியிடும் தாள்கள், நாட்டு மக்கள் நலனில் எவ்வாறு அக்கறையுடன் நடந்து கொள்ள முடியும் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால், திராவிடர் கழக நாளிதழும், தமிழ்நாட்டுப் பிரிவினைக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வதும், விடுதலை என்ற பெயரிலேயே இயங்குவதும் பெரியாரின் சொந்த விதழாக உள்ளதும், 'தமிழ்நாடு தமிழருக்கே' - என்னும் முழக்கத்தை தலைப்பிலிட்டு வெளிவந்துகொண்டிருப்பதும், பிற மாநிலத்து எழும் விடுதலை உணர்வுக்கு ஆக்கங் கொடுத்துக் கொண்டிருப்பதும. கி. வீரமணியால் இயக்கப் பெறுவதுமாகிய விடுதலை என்னும் நாளிதழும், முரசொலியுந்தாம் இந்த மாநாட்டுச் செய்திகளை ஒருவரி கூட போடவில்லை. அவற்றிற்கு இம்மாநாடும் மாநாடில்லை. அதன் செய்தியும் செய்தியில்லை என்பது கருத்துப் போலும். தமிழரின் எதிர்காலம் பற்றி இவற்றின் கருத்து என்னதான் என்பதை அந்தக் காலமே தான் முடிவு கட்ட வேண்டும். இன்னும் இதைவிட வியப்பான செய்தி ஒன்று உண்டு. அதுதான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற விருந்தவரும், மதுரை மாநாட்டு ஊர்வலந் தொடங்குவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு வந்து ஊர்வலத்தை ஊக்கிவிட்டுச் சென்றவரும் ஆகிய அருமைத் தலைவர் பெரியார் மதுரையில் மறுநாள் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், 'மதுரை விடுதலை மாநாட்டை நடத்தியவர்கள் யாரோ ஊர் பேர் தெரியாதவர்கள். என்றதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்றதும்! இவற்றிற்கெல்லாம் ஒட்டுமொத்தப் பெயர்தானோ அரசியல்’ என்பது!
- தென்மொழி, சுவடி :10, 11. ஓலை :1-12, 1-2,