ஸ்தாபன ஐக்யம்/ஸ்தாபன ஐக்கியம்

ஸ்தாபன ஐக்கியம்



உலக அரங்கில், மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக்கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை வளர்ந்துவிட்டது. நீதியையும் நேர்மையையும், சமுதாயத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும் தொழிலாளர் பிரச்னையை அலட்சியப்படுத்தி விடவோ, அல்லது அடக்குமுறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ணமுடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டும், புதுப்புது உருவங்களைக் காட்டிக்கொண்டும் இருக்குமே ஒழிய தானாக மங்கி விடவும் செய்யாது, தாக்குதலால் தகர்ந்தும் போய்விடாது. பொது அறிவும், ஜனநாயக உணர்ச்சியும் வளர வளர பிரச்னை பலம் பெற்றுக்கொண்டுதான் வரும். எனவே, தொழிலாளர் ஸ்தாபனத்தைப்பற்றிச் சிந்திக்கவேண்டியது, பொறுப்புள்ள யாருக்கும் அவசியமானதாகிவிட்டது. ஸ்தாபன ரீதியாகப் பிரச்னைகளைக் கவனித்து, முடிவு செய்யும் எண்ணமும் ஏற்பாடும், இப்போது எங்கும் பரவிவிட்டது. எந்த ஸ்தாபனமும் ஐக்கியத்தை, ஒற்றுமையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே, வலியுடன் விளங்கும், பயன் விளையும். ஆகவே ஸ்தாபன ஐக்கியத்தைக் கவனித்தாகவேண்டும்.

ஸ்தாபனம்—அதாவது அமைப்பு—பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்,—ஓர் பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க்கருவி

களும், வீரர்களும் தேவை. கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்துகொண்டு இருக்கவேண்டும்—பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால். வாள் மட்டும் போர் குவித்து வைத்துக்கொண்டு, கேடயம் தேடாமலிருப்பதோ, விற்களைக் குன்றெனக் குவித்துக் கொண்டு அம்புகளில்லாமலிருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்குகளில் குவித்து வைத்துக்கொண்டு வெடிமருந்து தேடாமலிருந்துவிடுவதோ, இவை யாவும் ஒழுங்காகவும் தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம்பட உபயோகிக்கும் ஆற்றலுள்ள வீரர்கள் இல்லாதிருப்பதோ, அன்றி வீரர்கள் இருந்தும், இவர்களை நடத்திச்செல்லும் படைத் தலைவன் இல்லாதிருந்தாலோ, பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலைபோலிருக்குமே தவிர, பயன் தரும் மனிதராக இருக்க முடியாது.

ஸ்தாபனம் ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு கட்டப்படுகிறது. ஸ்தாபனம், கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு கட்டப்படுகிறபோது அந்த ஸ்தாபனத்தின் பலன், அந்தக் கொள்கைகள் வெற்றிபெற அந்த ஸ்தாபனம் ஆற்றல் பெருவதைப் பொருத்தே இருக்கிறது. கொள்கைகள் ஏற்படுவதே, உள்ள குறைகளைத் தீர்த்துவைப்பதற்கோ, நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கோ, புதியதோர் நிலைமையைக் காண்பதற்கோதான். தொழிலாளர்களின் ஸ்தாபனம், சில அடிப்படைக் கொள்கைகளின்மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், தொழிலாளர்களின் சில பல குறைபாடுகளை நீக்கிக்கொள்வதற்குத்தான். பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தொழில் முறை மாறிவிட்டது. உலகிலே, அதற்கு முன்பு எந்த நாட்டிலும் குடிசைத் தொழில் முறையும், தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்திச் செய்துகொள்வது மட்டுமே இருந்துவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின்போது, தொழிற்புரட்சி ஏற்பட்டு, குடிசைத் தொழில்முறை மாறி யந்திரத் தொழில் முறையும், ஒருசிலர் பலரை வேலைக்கமர்த்தி தொழில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பண்டங்களை விற்று, இலாபம் பெறுவதுமான முறை வளர்ந்தது. இதனால், ஓரிடத்தில் ஏராளமானவர்கள் கூடித் தொழில் செய்யும் முறையும், அந்தத் தொழிலின் இலாபம், தங்களுக்குக் கிடைக்கும் கூலிபோக மீதமிருக்கும் பகுதி வேறிடம் போவதும், தொழிலாளர்களுக்கு விளங்கலாயிற்று. இந்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதும், தொழிலாளர்கள் முதலில் தங்கள் விதிவினை, முதலாளிகளின் புண்யம் ஆகியவற்றைப்பற்றி எண்ணி, தங்கள் மனதுக்கு ஆறுதலைத் தேடிக்கொண்டதுடன், தங்களுக்கும், பயபக்தியுடன் நடந்துவந்தால், ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். சிலர் தங்கள் காய்ந்த வயிற்றையும், கடமை உணர்ச்சியுடன் தாங்கள் பாடுபடுவதையும் எடுத்துக்காட்டி, தொழில் அமைத்தவர்களின் நல்லுணர்ச்சிக்கும் தயாள குணத்துக்கும் மனுப்போட்டு, அதனால் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர்.

இந்த முறை நெடுநாட்களுக்குப் பயன் தரவில்லை. சிலருடைய தயாள குணத்தினால், ஒரு பெரிய கூட்டத்தின் வளர்ந்துவரும் தொல்லைகளைப் போக்கிவிடமுடியாது. இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கையிலேயும், குறிப்பிடத்தக்க வளம் உண்டாகவில்லை. வறுமை கொட்டலாயிற்று, வாட்டம் அதிகரித்தது. அதேபோது, தொழில்முறை மாறி, பண்ட உற்பத்தி அதிகரித்து, செல்வம் கொழித்ததால், வாழ்க்கை வசதிகள் அதிகமாகி நாகரீகம் மேலோங்கிவிட்டது.

நாகரீகத்தின் முழுப் பயனை ஒருசிலர் அடைய, அந்த நாகரீகத்தின் அடிப்படைக்கு அரணாக அமைந்திருந்த பெரும்பாலானவர்கள் அந்த நாகரீகத்தின் பயனை அனுபவிக்காமலிருந்தபோது, அவர்கள் மனதிலே, ஓர் அதிர்ச்சி, ஓர் குமுறல் ஏற்பட்டது. தங்கள் நிலை மோசமாகிற நேரத்திலே, தங்கள் உழைப்பின் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கை வசதிகளில் துளியும் தங்களுக்குக் கிடைக்காதது, அவர்கள் மனதிலே, ஓர் அணைக்கமுடியாத தீயை உண்டாக்கிற்று. சேகரித்த தேனை இழந்துவிடும் வண்டுகளாகத் தமது வாழ்க்கை இருப்பதை அறிந்தனர். மனம் நொந்தனர். குறைகளைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசினர். ஒவ்வோர் நாளும் பேசினர், கூடிக்கூடிப் பேசினர்.

“என்னதான் இதற்குப் பரிகாரம்? பொறுத்திருந்து பார்ப்போம். அவர் மனம் இளகாமலா போகும்? ஆண்டவன் அருள்கிடைக்கவேண்டும், அவர் நம்மைக் கைவிடமாட்டார்” என்று துவக்கப்பட்ட உரையாடல்,— கொஞ்சகாலத்தில் “எத்தனை முறை கேட்பது? எவ்வளவு கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பது, ஏழைக்கு இரங்காத வனும் ஒரு மனிதனா ? அவன் மனம், கல்லா இரும்பா? கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கிறதா?” என்று மாறி, “இப்போது முடியாதாம், இலாபம் இல்லையாம் முன்போல” என்ற பேச்சு மறுபடியும் மாறி,— “நமது உழைப்பினால் கொழுத்தான்; இலாபம் மலைபோலக் குவிந்திருக்கிறது. நாம் வாடுகிறோம் வறுமையால், அவன் அரசபோகத்தில் இருக்கிறான். நமது உழைப்பு தரும் இலாபத்தால்தானே அவனுடைய நிலை கோடீஸ்வரன் என்று கூறும்படி இருக்கிறது” என்று பேச்சு, கொஞ்சம் முடுக்காகிவிட்டது.

“கந்தன் கேட்டானாம், கால்ரூபாயாவது அதிகம் தேவை, கூலியைக் கொஞ்சம் உயர்த்துங்கள் என்று. முடியாது என்று சொல்லிவிட்டாராம். முத்தன் பேசச் சென்றானாம், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, எதுவும் முடியாது போ, என்று சொன்னாராம். முனியன், உள்ளே நுழைந்தபோது, அவன்மீது நாயை ஏவினார்களாம்”— என்று உரையாடல் வளர்ந்து, கடைசியில், கந்தனும் முனியனும், முத்தனும் காத்தானும், இப்படி நாம் தனித்தனியே, நமது குறைகளை எடுத்துக்கூறிப் பரிகாரம் தேடிப் பயனில்லை, நாமெல்லாம், பொதுவாக நமக்குள்ள குறைகளைக் கூறி, மொத்தத்திலே பரிகாரம் தேடவேண்டும், அதுதான் சரியான வழி என்று முடிவு செய்தனர். ஸ்தாபனங்கள் தோன்றின.

இந்த முடிவுக்குத் தொழிலாளர் வந்து சேர, ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் பிடித்தது.

ஆகவே. குறைகளை உணர்ந்து, அவைகளுக்குக் காரணம் யாவை என்பதுபற்றிய விவாதத்திலே ஈடுபட்டு, உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்து பிறகு அவைகளைப் போக்கிக்கொள்ள, தனித்தனியாக முயற்சித்துப் பார்த்து, முடியாது போனபிறகு, தொழிலாளர்கள் ஓர் ஸ்தாபன ரீதியாக தமது குறைகளை எடுத்துக் கூறித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தங்கள் வாழ்க்கை முறையும் தொழில் முறையும், தங்களுக்குள்ள வாழ்க்கை வசதிக் குறைவுகளும், எல்லாத் தொழிலாளருக்கும் ஒரேவிதமானதாக இருக்கக்கண்டு, அனைவருக்கும் உள்ளது ஒரேவகை வியாதிஎன்று தெரிவதால், அனைவரும் ஒரேவகை மருந்து தேடவேண்டும் என்ற முடிவுசெய்து, ஸ்தாபனங்களை ஏற்படுத்தினர். இந்தப் பொதுத்தன்மை கெடாதிருக்குமட்டும், ஸ்தாபனம் அவசியமானது என்பது மட்டுமல்ல, பயனுள்ளதுமாகும்.

எனவே, ஸ்தாபன ஐக்கியம், இந்தப் பொது உணர்ச்சி கெடாதபடி பாதுகாத்துக்கொண்டால்தான் முடியும். கந்தன் முருகனுக்கும் சேர்த்துத்தான் நியாயம் கோருகிறான். முத்தன், மூவருக்கும் சேர்த்தே நீதி கேட்கிறான். ஒவ்வொருவரும் மற்ற யாவருக்கும் சேர்த்தே நீதி நியாயம் கேட்கிறார்கள். ஸ்தாபனத்தின் முக்கிய இலட்சணம், இதைப் பொருத்தே இருக்கிறது. அதைச் சேர்ந்தவர் அனைவருக்கும் நலன் கிடைக்கிறது, என்பது விளக்கமானால்தான் ஸ்தாபனத்திலே ஐக்ய உணர்ச்சி இருக்க முடியும். கந்தனுக்குத் தெரியாமல் முருகனும், முருகன் அறியாவண்ணம் முத்தனும், தனித்தனியே நடவடிக்கை எடுத்தால், ஸ்தாபனம் உடைந்துபடும். பொதுத்தன்மைதான் ஸ்தாபனத்துக்கு அரண்.

இந்தப் பொதுத்தன்மை பலமாக இருக்கவேண்டுமானால், ஸ்தாபனம், மிக மிக நியாயமான கொள்கைகளின் மீது கட்டப்படவேண்டும்.

குடும்பம் முதற்கொண்டு கோலோச்சும் சர்க்கார்வரையிலே, ஸ்தாபனங்கள்தான். ஒருவகைப் பொதுத்தன்மை — பொதுவான பணிகள் — அனைவரையும் கட்டுப்படுத்தும் பொதுவான பொறுப்புகள், பலன்கள் இவைகளில் உண்டு. இதிலே எது கெடினும், ஸ்தாபனத்தின் ஐக்கியம் நிச்சயமாகக் கெட்டுவிடும். அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய், அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காமலிருக்கும். ஆனால் சில காலத்துக்குத்தான்—எப்போதுமல்ல. தம்பியின் பழக்கமே அண்ணன் அறியாவண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகிவிட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த எத்தனைவிதமான பந்தம் பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனையும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும்—குடும்பம் பிளவுறும் பிரியும் அண்ணன் தம்பிக்குள்ளாக, ஒரு குடும்பத்திலேயே இது நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தில், தலைவருக்கும் துணைத்தலைவருக்கும். அல்லது தலைவருக்கும் ஸ்தாபனத்தில் மற்ற முக்கிய உறுப்பினர்களுக்குமிடையே கடைசிவரையில், பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையா தபடி பார்த்துக்கொள்ள முடியாது. அமைப்புகளின் ஒற்றுமை, அதனைச் சார்ந்தவர் அனைவரும், ஒரே நோக்கம் கொண்டு ஒரேவகையான குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாடுபடுபவர், என்பதைத்தான் பொறுத்து இருக்கிறது. இந்த ஒற்றுமையும் போலியானதாக இருக்கக்கூடாது, இருப்பின் மிகமிகச் சாதாரண சங்கடமும் ஸ்தாபனத்துக்குப் பெரியதோர் இடையூறாகிவிடும்.


ஸ்தாபனம் ஏற்படச்செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்திற்கு அதற்கான திறமைவாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படுவதுபோல, சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்க, திறனும் உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை. அந்த அமைப்பாளருக்கு, தாம் எந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வது என்று கண்டறியும் திறனும், கட்டடக் கட்டுக்கோப்புமுறையிலே ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்ற நோக்கமும் நிச்சயமாகத் தேவை.

வலிவுள்ள இரும்பு கர்டர்களும், வகைவகையான மரச்சாமான்களும், உயர்தரமான சிமிட்டியும், அழகான பித்தளைக் குமிழ்களும், அறைத்தெடுத்த சுண்ணாம்புக் குழையலும்,தேவை. ஆனால் இவைகளை, எங்கெங்கு எந்தெந்த அளவில் எந்தெந்த முறையில் உபயோகித்தால், கட்டடத்தின் கட்டுக்கோப்பு சிறந்த முறையிலும், உறுதியும் பயனும் மிகுந்த வகையிலும் இருக்கும் என்பதை அறிந்து அமைக்கும் அமைப்பாளர்கள் தேவை. அவர்களால்தான் ஸ்தாபனங்கள் நல்ல முறையிலே அமையும். அமைந்தபிறகும், கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக்கொள்ளும் திறம் இருக்கவேண்டும்—அக்கரையும் இருக்க வேண்டும்.

பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ்வளவு முக்கியமானதல்ல. அந்த ஜன்னல் இல்லாமற்போனாலும், மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப்படையும், குறுக்குச் சுவரும், மேல் அமைப்பும் சரியாக இருக்குமட்டும், ஜன்னல் இருந்தாலும் எடுபட்டாலும், கெட்டாலும், மாளிகைக்கு ஒரு சேதமுமில்லை. ஆனாலும், மாளிகையிலே அக்கரையுள்ளவர்கள் அந்தச் சிறு ஜன்னலைக்கூடத்தான் கவனித்துக்கொள்வார்கள், கெடாதபடி; ஜன்னலை மட்டுமல்ல, அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும் கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டு, பிறகு அது எடுபட்டு, அதன் பலனாக ஜன்னல் கெட்டு, கள்ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து, அதன் விளைவாக மாளிகைக்கு நஷ்டமும் கஷ்டமும் ஏற்பட்டுவிடக் கூடுமே, என்ற யூகம், மாளிகைக்காரருக்கு இருக்கும். எனவே அவர் ஜன்னலின் கம்பி, மாளிகையின் அடிப்படை அல்ல என்றபோதிலும், அதனையும்தான், அக்கரையுடன் கவனித்துக்கொள்வார். ஸ்தாபனங்களிலும் இதுபோலத்தான். தொழிற் ஸ்தாபனங்களில் ஐக்கியமும் பலமும் கெடாதிருக்க வேண்டுமானால், ஜன்னல் கம்பியையும் ஜாக்கிரதையுடன் கவனிக்கும் மாளிகைக்காரர்போல ஸ்தாபனத்தின் சகல உறுப்பினரையும், கவனித்து கட்டுக்கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த முறையைக் கவனியாததால், தொழிலாளர் ஸ்தாபனங்களிலே ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டு, அதன் விளைவாக, அதனுடைய போரிடும் சக்தி சிதறிவிட்டதுண்டு. பெரிய மரங்களை, மாளிகை மண்டபத்துக்குத் தூண்களாக அமைத்துவிட்டால் மட்டும் போதாது. மிகமிகச் சாதாரண செல், மரத்திலே சிறு துளைகளிலே புகுந்துகொள்ளாதபடியும் பார்த்துக்கொள்ளவேண்டும். செல், அரிக்க ஆரம்பித்தால் செம்மரமும் சரி, எம்மரமும் சரி, கெடும். அதனுடன் ஸ்தாபனமும் கெடும்.

தாங்கும் சக்தி, தாக்கும் சக்தி இரண்டும் ஒருசேர ஒரு ஸ்தாபனத்துக்குத் தேவை. அதற்கேற்ற வகையிலே அந்த அமைப்பு இருக்கவேண்டும். இருக்க வேண்டுமானால், இருவகை சக்திகளையும் திரட்டவும், திரட்டியதை உபயோகிக்கவும், ஏற்ற, தகுதிபடைத்தவர்கள் ஸ்தாபனத்தில் இருக்கவேண்டும். ஒருவர் இருப்பது மற்றவருக்கு வலிவு, என்ற எண்ணம் குன்றாது குறையாது இருக்கவேண்டும். அந்த எண்ணத்தாலேயே, ஸ்தாபனத்தின் ஐக்கியத்தைக் குன்றாமல் காப்பாற்ற முடியும். கொள்கைகள், நிலைமைகளால் மாற்றமடையும்போது, ஸ்தாபன ஐக்கியத்துக்கு ஆபத்து நேரிடக்கூடும். அதுபோலவே, ஸதாபனத்தின் நடைமுறையின்போது, யார் எதைச்செய்வது, எது எப்படிச் செய்யப்படவேண்டும் என்ற பிரச்னைகள் கிளம்பி, அதன் பயனாக ஸ்தாபனம் ஐக்கியம் கெடுவதுண்டு. ஆனால், அடிப்படை பலமாக இருந்தால் மாளிகை கெடாதிருப்பதுபோல, கொள்கை பலமிருந்தால் ஸ்தாபனம் கெடாது. அதற்காக, ஸ்தாபனத்தின் ஐக்யம் கெட்டுவிடத்தக்க நிலைமைகள் ஏற்படும்போது, அக்கரையற்று இருந்துவிடவும் கூடாது.

தொழிலாளர் ஸ்தாபனம் மனக்குறையின் மீதும், அதனால் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆத்திரத்தின் மீதும், ஏற்பட்டுவிடுவதுண்டு. இவை சரியான அடிப்படை அல்ல. வாழ்வதற்கு உழைக்கிறோம், ஆனால் வாழ்வு இல்லை. உழைக்காது வாழ்கிறார்கள், அந்த வாழ்வுக்குத் தங்குதடை இல்லை. வாழ்வோம் அனைவரும் — வாழ உழைப்போம்—ஒருவர் உழைப்பின் மீது மற்றொருவரின் வாழ்வு அமைக்கப்படும் அநீதியை ஒழிப்போம், என்ற அடிப்படைகளின்மீது கட்டப்பட்டுள்ள தொழிற் ஸ்தாபனங்கள், அந்த உன்னமான இலட்சியம் ஈடேறவேண்டும் என்ற பெரு நோக்கத்தை உறுதுணையாகக் கொண்டு ஸ்தாபனத்தின் நடைமுறை வேலையில், உறுப்பினர்களுக்குள் உள்ளக் கொதிப்போ கசப்போ ஏற்படாத வகையிலும், இன்னார் செய்கிற காரியம் இன்னார்க்குச் சரி என்று படவில்லை என்ற நிலை ஏற்படாத வகையிலும், ஸ்தாபனத்தின் வேலைகளில், அவரவர்களுக்கு அவரவர் ஆற்றலுக்கேற்ற, ஆனால். ஸ்தாபனத்தின் மூலக் கொள்கைக்கு ஊறு கேரிடாத முறையில், பணி உண்டு என்ற முறையில் ஸ்தாபனத்தை நடத்திச்சென்றால், ஐக்கியம் கெடாது — பலனும் நிச்சயம் விளையும்.

ஸ்தாபனத்தின் பலம் வளரும்போது ஏற்படும் அல்லலைவிட, ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்தபிறகு ஏற்படும் அல்லல் அதிகம். ஸ்தாபனம் வளரும்போது இருக்கும் ஸ்தாபன ஐக்கியம்,ஸ்தாபனம் நன்றாக வளர்ந்த பிறகு, ஓரளவு ஆபத்துக்குள் சிக்கிவிடக்கூடும். வளர்ந்துள்ள பலத்தைக் கொண்டு என்ன செய்வது, எவ்விதம் அதைச் செய்வது, யாரைக்கொண்டு செய்வது. எப்போது செய்வது, என்ற பிரச்னைகள், ஸ்தாபனத்தின் பலம் வளர்ந்தபிறகு ஏற்படும். ஐக்கியத்துக்கு ஆபத்து அதனால் வரக்கூடும். அந்த நெருக்கடியான நேரத்திலெல்லாம், ஸ்தாபனத்தின் மூலக்கருத்துக்கே முதலிடம் தரப்படவேண்டும், அப்போதுதான் ஸ்தாபனம் சிதையாமலிருக்கும்.

ஸ்தாபன ஐக்கியம், ஒருமுறை பாடுபட்டுச் சாதித்துவிட்டு, அதைக் கண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டு, இனிக்கவலையில்லை என்று இருந்துவிடக்கூடிய ஒரு சம்பவமல்ல. எப்போதும் விழிப்போடு இருந்துகொண்டு, அவ்வப்போது பழுது பார்த்துக்கொண்டு, எந்தச் சமயத்திலும் மூலக்கருத்து கெடாதபடியும் கவனித்துக் கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக்கூடிய, ஓர் அற்புதமான ஜீவசக்தி. ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த ஐக்கியத்தை —ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது. வீணை உயர்தரமானதுதான், வித்வானும் தேர்ந்தவர்தான். ஆனாலும் ஒரு நரம்பு மட்டும் ஓரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும், வித்வானின் இசையும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம், — சங்கீதத்துக்கு உள்ள சுருதி ஞானத்தைப் போன்றது—மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.



மறுமலர்ச்சி நூல் நிலைய வெளியீடு


த மி ழு ள் ள ம்
தமிழ்க் கலை (திரு. வி. க.)
வள்ளுவனாரின் அறம் (எஸ்.எஸ்.பாரதியார்)
கங்கையைக் கண்டேன், வீரர் விருந்து, தமிழரசு
பெறுவோம் (ஆர். பி. சேதுப்பிள்ளை)
ஆகிய ஐந்து சொற்பொழிவுகள் ஒரே புத்தகத்தில்
விரைவில் வருகிறது விலை 0—4—0


புத்தகத்திலுள்ள சில மணிவாசகங்கள்

பறவைகளின் ஒலியும், நீலக் கடலின் காட்சியும் நல்ல கலை யின்பந்தான். பசியிருக்குமிடத்தே, பட்டினி பட்டாளத்திடம் கலை எப்படிப் பற்றும். —திரு. வி. க.

பொய்யினாலும், சூதாட்டத்தினாலும், அரசெய்திய ஒருவனைத் “தருமன்” என்றது ஆரிய தர்மம், பஞ்சமா பாதகங்கள் எனப்படும் ஐம்பெரும் பாவங்களிலே மூன்றினை இயற்றினான் அவன். சூதாட்டத்தால் நாட்டை இழந்தான். தன் தம்பி விசயனுக்கெனப் பாஞ்சாலன் தவங்கிடந்து வரத்தால் பெற்றவளை, பொதுமகளாகக் கருதி, தானும் அவள் நலத்தை நுகர எண்ணி, அவள் தந்தை மறுத்தும் துணிந்து மணந்தான். குருக்ஷேத்திரப் போரில் "அசுவத்தாமா இறந்தான்" எனப் பொய்க்கூறித் துரோணாசாரியாரை உயிர் துறக்கச் செய்தான். மற்றையோருக்குப் பழி தரும் இப் பிழைகள் அவன் நிலையிலே தருமங்களாகவே கருதப்பட்டன. ஆனால் தமிழ் அற நூல்கள் மேற்கூறிய பிழைகளைச் செய்தவன் முக்கண்ணனேயானாலும் அவனை அறவோனாக எண்ணிற்றில...... —சோமசுந்தர பாரதியார்.

வடநாடு உயர்ந்தது என்றால் ஒத்துக்கொள்ள மாட்டேன். விரிவானது, ஜனப்பெருக்க முடையது என்றால் ஒத்துக்கொள்வேன். தென்னாட்டிலே சிறியவரும் பெரியவரும் ஆசாரமுடையவர்களாகக் காண்கிறோம். காசி மக்களின் மாசுற்ற உடலையும் உடையையும் கங்கையாறுதான் கழுவவேண்டும். —சேதுப்பிள்ளை.

வடநாட்டார் தமிழ் நாட்டாரை விரும்புவதில்லை. மெய்யால் — கையால்—அறிவால் உழைப்பவன் தமிழன். தமிழுக்கு வடக்கே இடமில்லையென்றால் எங்கள் தமிழ் நாட்டில் உங்கள் மொழிக்கு இடமிலலை. —சேதுப்பிள்ளை.

அறிஞர் அண்ணாவின் நூல்கள்

பொருள் 0—4—0
மறுமலர்ச்சி 0—4—0
சொல்வதெல்லாம் செய்தல்
சுதந்தரம் (கிளேஸ் பதிப்பு) 0—2—0
சொல்வதெல்லாம் செய்தல்
சமத்துவம் (இரா. நெடுஞ்செழியன்) 0—2—0
வஞ்சகக் கூட்டம் வாழ்கிறது 0—3—0
கடவுளும் மனிகனும் 0—3—0
பரமசிவனுக்கு பகிரங்க கடிதம் 0—3—0
கருஞ்சட்டை ஒழியவேண்டுமா? 0—3—0
கடவுளா? காமுகனா? (அச்சில்)
குருவிக்குட்டை (அச்சில்)

வியாபாரிகட்கு 25% கழிவு
தபால் சிலவு இனாம்.

மறுமலர்ச்சி நூல் நிலையம்
18. ஆயலூர் முத்தைய்யா முதலி தெரு
ஜி.டி., சென்னை 1.