ஹாஸ்ய வியாசங்கள்/“வயது”
“வயது”
எனது இளைய நண்பர்கள் வயதைப் பற்றி என்ன வேடிக்கையாய் எழுதக் கூடும் என்று எண்ணலாம், அப்படி எண்ணுபவர்களெல்லாம் இந்த சிறு வியாசத்தை முழுவதும் படித்து விட்டு, பிறகு தீர்மானிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். ஒரு மனிதன் தன் சொந்த விஷயங்களைப் பற்றி உறுதியாய் எதையும் கூறலாம்-ஆனால் வயதைப் பற்றி மாத்திரம் ஊர்ஜிதமாய்க் கூற முடியாது. ஏன்? தான் பிறந்த விஷயத்தைப் பற்றி தனக்குச் சொந்த ஞாபகம் சிறிதும் கிடையாதல்லவா? இன்ன வருஷம் இன்ன மாசம் இன்ன தேதியில் நீ பிறந்தாய் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டதுதானே! மற்றவர்கள் சொல்லக் கேட்டதைச் சொன்னால் நியாய சபையில் சாட்சியமாகக் கூட ஒப்புக் கொள்ளப்படாது. இது காரணம் பற்றிதான் நூற்றில் தொண்ணுாற்றொன்பது பெயர்கள் தங்கள் வயதைப் பற்றி உண்மையை உரைப்பதில்லை போலும்! உங்களுடைய அத்யந்த நண்பர்களையெல்லாம் அவர்கள் வயதென்னவென்று கேட்டுப் பாருங்கள்; பாதி பெயர் அதற்கு பதிலே உரைக்க மாட்டார்கள்; மற்ற பாதிப் பெயர் - மிகவும் வற்புறுத்தினால்-உண்மையை உரைத்திடாது-குறைத்தே சொல்வார்கள்.
இவ்வாறு நம்முடைய வயதைக் குறைத்துச் சொல்லும் வழக்கம் நமது தொட்டிலிலிருந்தே நமது உடலில் ஊறி வருகிறது. கைக்குழந்தைகளை ரெயில் மார்க்கமாய் எடுத்து செல்வதென்றால் அவர்களுக்கு மூன்று வயது முடியும் வரையில் டிக்கட்டுகள் வாங்க வேண்டியதில்லை. இக்காரணத்தினால் நமது தேசத்து கைக்குழந்தைகள் மூன்று வயது வந்தவுடன் இரண்டொரு வருடங்கள் வளராமலே யிருக்கின்றன. சுமார் ஐந்து வயது வரையில் அவர்களை ரெயிலில் கொண்டு போகும் போதெல்லாம் இாண்டரை வயதுதான்! உங்களுக்கு இதைப் பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் ரெயில்வே டிக்கட் பரீட்சகர்களைக் கேட்டுப் பாருங்கள். இந்த வழக்கம் நம்முடைய தேசத்தில்தான் என்று நாம் வெட்கப்பட வேண்டாம்; எல்லாத் தேசங்களிலும் இந்த வழக்கம் மிகவும் சாதாரணம்.
பிறகு சாதாரணமாக நம்மவர்கள் நமது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு ஐந்து வயதில் அனுப்புவது வழக்கம் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் பொழுதே அவர்கள் தந்தைமார்கள்-முக்கியமாக.அவர்கள் கவர்ன்மென்ட் உத்யோகஸ்தர்களாக இருந்தால்-ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் குறைத்தே எழுதி வைப்பார்கள்;ஏனென்றால் அதன் பலன் அவர்களுக்குத்தான் முக்கியமாகத் தெரியும். ஐம்பத்தைந்து வயது உண்மையில் பூர்த்தியானவுடன், துரைத்தனத்தாரால் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி கட்டாயப் படுத்தாதபடி இன்னும் இரண்டொரு வருஷம் உத்தியோகத்திலிருக்க லாமல்லவா?
பிள்ளையாண்டானுக்கு பன்னிரண்டாவது வயதாகும் போது இன்னெரு கஷ்டம். ரெயில் பிரயாணம் செய்யும் பொழுதும், நாடக கொட்டகைகளுக்குப் போகும் போதும், 'பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை சார்ஜ்’ என்று எங்கெங்கே விளம்பரம் போட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பதினான்கு பதினைந்து வரையில் அவர்களுக்கு இரண்டு மூன்று வயது குறைந்து போகிறது-பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களாகி விடுகிறார்கள்! சில வருஷங்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவருடைய மகனுக்கு நான் எழுதிய ஹரிச்சந்திர நாடகத்தைப் பரிசாகக் கொடுத்துப் படிக்கச் செய்தேன். பிறகு ஒரு நாள் அவனைச் சந்தித்து ஏதோ விஷயமாக அவன் வயது என்னவென்று கேட்டேன். அதற்கு அவன் (அரிச்சந்திரன் கதையைப் படித்தபடியால் உண்மையை உரைக்க விரும்பினவனாய்) “ரெயிலில் போகும் போது எனக்கு வயது பதினொன்று, பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு; வீட்டில் பதின்மூன்று” என்று பதில் உரைத்தான்.
இந்தக் கஷ்டம் ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரம் என்று எண்ண வேண்டாம்-இது தற்காலம் நமது பெண் பிள்ளைகளையும் பீடித்திருக்கிறது. சுமார் பன்னிரண்டு பதின்மூன்று வயதில்-முக்கியமாக அவர்கள் திவிஜாதிப் பெண்களாயிருந்தால்-அவர்களுக்கு பத்து பன்னிரண்டு வயதிலெல்லாம்-கலியாணம் செய்ய வேண்டுமென்று ஸ்மிருதிகளில் விதிக்கப்பட்டிருக்கிறது சாரதா சட்டம் வராததற்கு முன்பாக அப்படியே அவர்களுக்குப் பெரும்பாலும் கலியாணமாகி வந்தது-தக்க வரன்கள் கிடைக்கும் போதெல்லாம். சில சமயங்களில் தக்க வரன் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? பதினான்கு பதினைந்து வயதான போதிலும் பத்து பதினொன்று வயது சிறுமிகளாகவே வளராமலிருக்க வேண்டி வருகிறது. ஆனால் இதில் தற்காலம் ஒரு வேடிக்கை. சாரதா சட்டம் வந்த பிறகு, சட்டம் எப்படி இருந்த போதிலும் சாஸ்திர யுக்தமாக நடக்க வேண்டும் என்று விரும்பும் வைதீகர்கள், அவர்கள் பெண்களுக்கு பதினொன்று பன்னிரண்டு வயதுதான் ஆகிய போதிலும் பதினான்கு வயதாகி விட்டது என்று சொல்லி கலியாணத்தை நடத்தி விடுகிறார்கள்! கோர்ட்டில் அதற்காக வியாஜ்யம் வந்தாலும் பதினான்கு வயதாகி விட்டது என்று பிரமாணம் செய்வதில் பாபமில்லை என்று நினைக்கிறார்கள்.
பிராம்மணர்கள் அல்லாத ஜாதியர்களிலும் தங்கள் பெண்கள் விவாக விஷயத்தில் வயதைப் பற்றிய ஒரு கஷ்டமிருக்கிறது. முதலியார் முதலிய ஜாதிகளில் பெண் ருதுவடைந்த பிறகே கலியாணமாவது வழக்கமாயிருந்த போதிலும், ருதுவான நாலைந்து வருஷம் கலியாணமாகாதிருந்தால் அது ஒரு குறைவாக மதிக்கப்படுவதால், பெண் பதினேழு பதினெட்டு வயதடைந்த போதிலும், பெண் கேட்க யாராவது வந்தால், பெண்ணுக்கு இப்பொழுதுதான் பதினான்காகிறது என்று தெரிவிப்பார்கள். அன்றியும் இன்னொரு கஷ்டமும் உண்டு. ஒரு முதலியார் பெண்ணுக்கு பதினெட்டு வயதாயிருக்கும், அவளது தாய் தந்தையார் கோரும் வரனுக்கு பதினேழு வயதுதான் ஆகியிருக்கும்; இதற்கென்ன செய்வது? மணமகனுக்கு வயதில் சிறியவளாயிருக்க வேண்டுமென்று, கலியாண தினத்திற்கு முன்பாக எத்தனை வருடங்கள் குறைக்க வேண்டுமோ அத்தனை அரைக்கால் ரூபாய்களை விழுங்கி விடச் செய்கிற புராதன வழக்கம் ஒன்று உண்டு. அப்படிச் செய்தால் வயது குறைந்து போகிறதாம்! அது உண்மையோ அல்லவோவென்று நமது ஆயுர்வேத வைத்தியர்களுக்குத்தான் தெரியும், எனக்குத் தெரியாது.
பிறகு நம்மவர்களில் கவர்ன்மென்ட் உத்தியோகங்களை நாடுபவர்கள், தங்கள் வயதைக் குறிப்பதில் அரிச்சந்திரனுடைய சிஷ்யர்களாக இருப்பது கஷ்டமா யிருக்கிறது. அந்த உத்தியோகங்களில் இன்ன வயதுக்குட் பட்டவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற விளம்பரமானது, திடீரென்று அநேகம் பெயருடைய வயதைக் குறைத்து விடுகிறது. அன்றியும் சாதாரணமாக துரைத்தனத்தில் உத்தியோகம் அபேட்சிப்பவர்களெல்லாம், பிறகு ஐம்பத்தைந்தாவது வயதில் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப் படாமலிருக்க, முதலில் அப்ளிகேஷன் போடும் பொழுதே இரண்டு மூன்று வருடங்கள் குறைத்து எழுதி, அஸ்திவாரம் போட்டு வைத்துக் கொள்ளுகிறார்கள்.
ஆனால் இது சில சமயங்களில் கஷ்டத்திற்குள்ளாக்குகிறது. அதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கூறுகிறேன். எனக்குத் தெரிந்த அண்ணன் தம்பிகள் இருவர் இருந்தனர். மூத்தவர் கவர்ன்மென்ட் உத்தியோகத்திலிருந்தார்; அதைச் சேரும் பொழுதே தன் வயதை மூன்று வருடம குறைத்து எழுதி வைத்தார்; அவர் தம்பி அவருக்கு இரண்டு வருடம் இளையவர். தம்பிக்கு ஷஷ்டி பூர்த்தி வந்த பொழுது, மூத்தவருக்கு கவர்ன்மென்ட் ரிகார்டுகளின்படி 58 வயதுதான் ஆகியது! தம்பிக்கு ஷஷ்டி பூர்த்தி பஹிரங்கமாய் நடத்தினால் அண்ணன் வயதைக் குறைத்தெழுதிய சமாசாரம் வெளியாகி விடும். ஆகவே அண்ணன் தம்பியிடம் வந்து தம்பிக்குப் பகிரங்கமாய் ஷஷ்டி பூர்த்தி செய்ய வேண்டாமென்று வேண்டிக் கொண்டார்!
இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் மேல் மாகாணங்கள் ஒன்றில் உண்மையாய் நடந்த கதை எனக்கு ஞாபகம் வருகிறது. அங்கு ஒரு மகம்மதியர்-வக்கீலாயிருந்தவர்-தனது நாற்பத்தைந்தாவது வயதில், மாஜிஸ்டிரேட்டாக ஏற்படுத்தப்பட்டார். அப்பொழுது தன்னுடைய வயதில் 5-வருடம் குறைத்து 40-வயது என்று எழுதி வைத்து விட்டார். பிறகு அவருக்கு அந்த உத்தியோகம் கிடைத்ததற்காக அவருடைய அத்யந்த நண்பர்களில் சிலர் அவருக்கு ஒரு விருந்து அளித்தனர். அந்த விருந்தான உடன், ஏதோ பேச்சில் அவருடைய வயதைப் பற்றி பேச்சு வர தன் உண்மையான வயதை மறைத்து, ஐந்து வயது குறைத்து சொல்ல வேண்டியதாயிற்று. அதன்படி, அங்கிருந்த அவரை குழந்தைப் பருவ முதல் அறிந்த அவரது நண்பர் ஒருவர் கணக்கிட்டுப் பார்த்தார்; இவர் வக்கீலாக இருபது வருடம் வேலை பார்த்தார்-அதற்கு முன்பு ஒரு வருடம் அப்ரெண்டிசாக இருந்தார்-அதற்கு முன்பு லா காலேஜில் இரண்டு வருடம் படித்தார்-காலேஜ் வகுப்புகளில் நான்கு வருஷம் கழித்தார்-என்று இப்படியே பின்னால் கணக்கிட்டுக் கொண்டு போய், இவர் பிறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே வித்தியாரம்பம் பண்ணியிருக்க வேண்டுமென்று கண்டார். இந்த அதிசயத்தை கவர்ன்மென்டாருக்கு வெளியிட்டால் தனது நண்பனுக்கு கெடுதி ஏற்படுமென்று அவர் வெளியிடவில்லை!
தங்கள் வயதைக் குறைத்துக் கூற வேண்டிய கஷ்டம் சில சமயங்களில் நடு வயதில் தங்கள். தாரத்தை இழக்கும் ஆடவர்களைப் பீடிக்கிறது-அவர்கள் இரண்டாவது கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் தங்கள் வயதை மிகவும் குறைத்துச் சொல்ல வேண்டியவர்களா யிருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு கோமுட்டிச் செட்டியார் இருக்கிறார். அவருக்கு வயது 48. போன வருடம் அவர் தாரம் தெய்வீகத்தால் இறந்து போய் விட்டது; இப்பொழுது அவர் இரண்டாம் விவாஹம் செய்து கொள்ளப் பிரயத்னப் படுகிறார். இந்த யோசனை அவருக்கு உதித்த நாள் முதல் அவரது வயது 38 ஆகி விட்டது திடீரென்று! யார் கேட்டாலும்-முக்கியமாக அவருடைய பந்துக்கள் கேட்ட பொழுதெல்லாம்-தனக்கு 38 வயது என்று சொல்லிக் கொள்ளுகிறார் ஆனால் இதற்காக செட்டியாருக்குக் கொஞ்சம் மாத செலவு அதிகமாச்சுது. இதற்கு முன் கொஞ்சம் வெண்மையாய் நறைத்துப்போன அவரது ரோமங்களை மறுபடியும் கறுப்பாக்கிக் கொள்ள மாதம் மாதம் கேஸ்ரஞ்சன் தைலங்களை வாங்க வேண்டியவராயினார்!
வயதைக் குறைத்துக் கூறும் குணம் நம்முடைய தேசத்தார்களுக்கு மாத்திரம் என்று எண்ண வேண்டாம், ஐரோப்பியர்களுக்குமுண்டு, முக்கியமாக அவர்களுடைய ஸ்திரீகளிடத்தில். பெரும்பாலும் ஐரோப்பிய ஸ்திரீகளை அவர்கள் வயது என்னவென்று கேட்பதே மரியாதையல்ல வென்று எண்ணப்படுகிறது. அவர்கள் பிரமாணத்தின் மீது சாட்சியாய்க் கூறும் பொழுதும், அவர்களுடைய வயதைப் பற்றி குறைத்துச் சொன்னால் அதற்காகப் பொய் சாட்சி கூறுகிறார்கள் என்று கண்டிக்கப்படமாட்டார்கள். ஐரோப்பிய ஸ்திரீகளுக்குள் விதவா விவாஹம் சாதாரணமாயிருப்பது போல் நம்முடைய தேசத்திலும் ஸ்திரீகளுக்கு மறு விவாஹம் சாதாரணமாயுண்டாகி விட்டால் நம்முடைய ஸ்திரீகளுக்கும் வயதைப் பற்றி குறைத்துக் கூற வேண்டிய கஷ்டம் உண்டாகி விடும்!
மேல் நாட்டு புத்திமான் ஒருவர் அங்குள்ளவர்கள் எல்லாம் இளமையில் தாங்கள் இருப்பதை விட அதிக வயதானவர்கள் போல் காட்டிக் கொள்ளுகிறார்கள், முதுமையில் குறைந்த வயதுடையவர்களைப் போல் காட்டிக் கொள்ளுகிறார்கள் என்று எழுதி யிருக்கிறார்.
வயதைப் பற்றி நான் அறிந்த இரண்டு மூன்று கதைகளைக் கூறி இந்த வியாசத்தை முடிக்கிறேன்.
கிறிஸ்தவ கலாசாலையில் சுமார் 50 வருடங்களுக்கு முன் சின்னசாமி பிள்ளை என்று ஒரு தமிழ் உபாத்தியாயர் இருந்தார். அவருக்கு 65 வயதுக்கு மேல் இருக்கும் அவர் ஒரு நாள் திங்கட்கிழமை “கருக்காக, முகக்ஷவரம் செய்து கொண்டு” பள்ளிக்கூடத்திற்கு வந்தார். அச்சமயம் அவரை டாக்டர் மில்லர் சந்தித்து, ஆங்கிலத்தில் “சின்னசாமி மிகவும் சந்தோஷம்! உனக்கு வரவர வயது குறைந்து கொண்டு வருகிறது, நல்ல யெளவனமுள்ளவனாகக் காண்கிறாய்!” என்று வேடிக்கையாய்ச் சொல்ல “துரையவாள், எல்லாம் அம்பட்டனுடைய அனுக்கிரஹம்” என்று பதில் உரைத்தார்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக அகௌண்டென்ட் ஜெனரல் (Accountant-general) ஆபீஸிற்கு டப் (Tupp) என்கிற புதிய பிரதம உத்யோகஸ்தர் வந்தார். வந்ததும் தனது ஆபீசிலுள்ளவர்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று சுற்றி வரும் பொழுது, அநேகம் வயோதிக குமாஸ்தாக்கள் தலையில் பாகையைப் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். இதென்ன இது என்று தன்னுடன் வந்த சூப்பரின்டென்டைக் கேட்ட பொழுது அவர், “இத்தேசத்தில் வயதானவர்களெல்லாம் இந்தப் பாகையைத்தான் தலையில் போட்டுக் கொள்வது” என்று பதில் உரைத்தார். ஆபீசையெல்லாம் சுற்றிப் பார்த்து வந்தவுடன் தன் சூபரின்டென்டிடம், “என்ன நம்முடைய ஆபீசில் அநேகம் பெயர் மிகவும் வயதானவர்கள் இருக்கிறார் போலிருக்கிறது” என்று கூறினார்; இந்த சமாசாரம் சாயங்காலத்திற்குள்ளாக அங்குள்ள வயது சென்ற குமாஸ்தாக்களுக்கெல்லாம் எட்டி விடவே, மறுநாள் 11-மணிக்கு அவர்களெல்லாம் முக க்ஷவரம் செய்து கொண்டு, பழய பாகைகளையெல்லாம் களைந்து விட்டு, சரிகை தலை குட்டைகளை முடுக்காகக் கட்டிக் கொண்டு, இளைஞர்களாக, ஆபீசுக்கு வந்து சேர்ந்தார்களாம்! -எங்கு நம்மையெல்லாம் பென்ஷன் வாங்கிக் கொள்ளும்படி அகௌண்டென்ட் ஜெனரல் சொல்லுகிறாரோ என்று பயந்து அன்று முதல் சென்னையில், பாகை கட்டி அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு ஜீவிக்கும் பலருக்கு, பாதி வேலை போயிற்று என்று கேள்விப்பட்டேன்.
எனது நண்பர் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இருந்தார். அவரது பெயர் உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை-அவருக்கு வயது ஐம்பதுக்கு மேலாகி, அவரது ரோமமெல்லாம்-புருவம் உட்பட-வெண்மை நிறமாக மாறி விட்டது. இது மற்றவர்களுக்குத் தெரியாதிருக்க வேண்டுமென்று தினம் எழுந்தவுடன் முகக்ஷவரம் செய்து கொண்டு, புருவம் உட்பட கேசத்திற்கெல்லாம் ஹேர்டை (Hair-dye) போட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியிற் கிளம்புவார். ஒரு நாள் அதிகாலையில் ஒரு பெரிய கவர்ன்மென்ட் உத்தியோகஸ்தரை ரெயில் ஸ்டேஷனில் அவர் சந்திக்க வேண்டி வந்தது. அன்று மறதியினாலோ அல்லது அதிக நேரம் தூங்கி விட்டபடியால் அவகாசமில்லாதபடியினாலோ- ‘கப்பு’ போட மறந்து போய் விட்டார். அவரை நான் ஸ்டேஷனில் சந்தித்த பொழுது, சூட்சுமமாய் “என்ன பிள்ளைவாள், உங்கள் முகம் கொஞ்சம் மாறியிருக்கிறதே”யென்று தெரிவித்தேன். உடனே அவர் ஸ்டேஷன் வெய்டிங் ரூம் (Waiting-room) கண்ணாடியருகிற் போய் தன் வெளுத்த கேசத்தையும் புருவத்தையும் பார்த்து, பயங்கொண்டவராய், தான் பார்க்க வந்த உத்யோகஸ்தரையும் பாராது, “அவர் வந்தால், இதுவரையிற் காத்துக் கொண்டிருந்தார், அவசரமான வேலையாக அவர் போய் விட்டார் என்று சொல்லி விடுங்கள்” என்று என் இடம் கூறி விட்டு, வீட்டிற்கு கம்பி காட்டினார்! -கப்பு போட்டுக் கொள்ள!
கடைசி கதை ஒன்று. ஒரு முறை நான் சிவகங்கைக்குப் போயிருந்த பொழுது அங்கு நல்ல தேகஸ்திதியிலிருந்த மிகவும் வயோதிகரான ஒரு பிராம்மணரைக் கண்டேன். அவருக்கு என் உத்தேசப் படி 90 வயதுக்கு மேலிருக்கும். இவ்வளவு வயதாகியும் நல்ல தேகஸ்திதியிலிருக்கிறாரே, என்று சந்தோஷப்பட்டவனாய், “தங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டேன். அவர் அதைக் கூறாது மயங்க, நான் “இனிமேல் உங்கள் வயதைச் சொல்ல என்ன தடையிருக்கப் போகிறது? ” என்று வினவ, அவர் “வேறொன்றுமில்லை, சாஸ்திரங்களில் ‘ஒருவனுடைய பொருள், ஒருவனுடைய வயது, ஒருவனுடைய ஆசாரியார் பெயர், இன்னும் இரண்டொரு விஷயங்களை, வெளியில் கூறக் கூடாது’ என்று எழுதியிருக்கிறது” என்று கூறி, ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தை எடுத்துக் கூறினார். அப்பொழுது, நமது முன்னோர்கள், இனி வரப் போகிற கஷ்ட நிவர்த்திக்காக, முன்பே ஸ்லோகங்களைச் செய்திருக்கிறார்களே, என்று சந்தோஷப்பட்டேன்! ஆயினும் ஒரு தப்பிதம் செய்தேன்; அந்த ஸ்லோகத்தை முற்றிலும் கேட்டு, பாடம் செய்து கொள்ள மறந்தேன். அதைக் குருட்டுப் பாடம் செய்திருப்பேனாயின் தற்காலம் தங்கள் வயதைக் குறைத்து கூற விரும்பும் டாக்கி ஆக்டர்களுக்கும் ஆக்ட்ரெஸ்களுக்கும் உபதேசித்திருக்கக் கூடுமல்லவா?