ஹெர்க்குலிஸ்/இளமைப் பருவம்

1. இளமைப் பருவம்

பண்டைக் காலத்துக் கிரேக்க வீரர்கள் பலரிலும் முதன்மையாகப் போற்றப்படுபவன் ஹெர்க்குலிஸ். உடல் வலிமையிலும், வீரத்திலும், ஆற்றலிலும் அவனுக்கு நிகரானவரேயில்லை. மகாபாரதக் கதையில் வரும் பீமனைப் போல, அவன் கையிலே எப்பொழுதும் ஒரு கதாயுதத்தை வைத்துக்கொண்டிருப்பான். அதைக் கண்டாலே எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள. அவன் பல கொடிய மிருகங்களை அடக்கியும், அழித்தும் மக்களுக்கு உதவி செய்தவன். பல போராட்டங்களில் ஈடுபட்டு அவன் வெற்றி பெற்றவன். ஆகவே , அவனைப்பற்றிக் கிரீஸ் நாட்டில் பற்பல, கதைகள் தோன்றியிருந்தன. கிரேக்கர்கள் அவனைப் பெரிதும் போற்றி வந்தனர். கிரேக்கப் பாணர்கள் அவனுடைய வரலாற்றை மக்களுக்குப் பாடல்களாகப் பாடிக் காட்டுவதில் சலிப்படைந்ததேயில்லை. அந்தக் காலம் முதல் இன்றுவரை உலகில் மிகுந்த பலமும் விரமும் கொண்டு விளங்கும் மனிதனை, ‘அவன் ஒரு ஹெர்க் குலிஸ்!’ என்று பெருமையாகப் பேசுவது வழக்கமாகிவிட்டது. வீரர்களைத் தவிர, உறுதியாக அமைந்த பொருள்களுக்குக் கூட அவன் பெயரை வைக்கிறார்கள்,


ஹெர்க்குலிஸின் தாய் ஆர்கோலிஸ் நாட்டு அரசனுடைய மகளான அல்க்மினா என்பவள்: தந்தை, தேவர்களின் தலைவரான சீயஸ் கடவுள். ஏற்கெனவே அல்க்மினா அம்பிட்ரியன் என்ற மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அம்மன்னன் போர்களில் ஈடுபட்டுத் தீப்ஸ் நகருக்குச் சென்றிருந்த சமயத்தில், சீயஸ் கடவுள் அவளிடம் சென்று, அவள் கருவுற்று, வல்லமை மிகுந்த ஒர் ஆண் மகனைப் பெற வேண்டு மென்று ஆசியளித்தார். அந்தக் குழந்தை, மனிதர்கள். மட்டுமன்றி, தேவர்களையும் காக்கக்கூடிய வல்லமை, பெற்றிருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

சீயஸ் கடவுளின் தேவியான ஹீரா, அவருடைய ஏற்பாட்டைப்பற்றிக் கேள்வியுற்று, அவரிடம் கோபமடைந்தாள் இதனால், அல்க்மினா கருவுற்றதிலிருந்தே அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தன்னால் இயன்ற கேடு செய்ய வேண்டுமென்று ஹீரா தீர்மானித்துக் கொண்டு, அவ்விதமே செய்து வந்தாள்.


உரிய காலத்தில் அல்க்மினா இரட்டைக் குழந்தைகளாக இரு பையன்களைப் பெற்றாள். முதலாவது பிறந்த குழந்தைக் குச் சீயஸ் கடவுளின் விருப்பப்படி ஹெராக்கிளிஸ் என்று பெயர் வைக்கப்பெற்றது: இரண்டாவது குழந்தையின் பெயர் இபிக்ளிஸ். ‘ஹெராக்கிளிஸ்’ என்றால் கிரேக்க மொழியில் ஹீராவின் புகழ்’ என்று பொருள். ஹெராக்கிளிஸைப் பிற்காலத்தில் ரோமானியர் ஹெர்க்குலிஸ் என்று கூறி வந்தனர். அந்தப் பெயரே உலகில் அதிகமாய்ப் பரவிவிட்டது.

ஹொர்க்குலிஸுக்கு ஒரு வயது கூட நிரம்பவில்லை- ஒரு நாள் இரவில் அல்க்மினா, அவனுக்கும் அவன் தம்பிக்கும் பால் புகட்டிவிட்டு, அரண்மனையிலிருந்த வெண்கலக் கேடயம் ஒன்றில் அவர்களைப் படுக்க வைத்திருந்தாள். இரவில் நெடுநேரம்வரை அவள், தாலாட்டுப் பாடி அவர்களைத் தூங்க வைத்துவிட்டு, அவர்களுடைய அறைக்குப் பக்கத்திலிருந்த பள்ளியறைக் குச் சென்று உறங்கிக் கொண்டிருந்தாள். அரண்மனையிலும் வெளியிலும் ஒரே அமைதியாயிருந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் இருந்த அறையில் எங்கிருந்தோ இரண்டு நாகங்கள் உள்ளே ஊர்ந்து வந்தன. இரண்டும் கேடயத்தின் அருகே சென்று, தங்கள் படங்களை உயரமாகத் தூக்கி விரித்து ஆடிக்கொண்டு, இரண்டு குழந்தைகளையும் கொத்துவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. அவைகளின் சீறலைக் கேட்ட பையன்கள் இருவரும் விழித்து எழுந்துவிட்டனர். ஹெர்க்குலிஸ், நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு, இரண்டு கைகளாலும் மின்னல் வேகத்தில் இரண்டு பாம்புகளையும் இறுகப் பிடித்து, அவைகளின் கழுத்துகளை நெரிக்கத் தொடங்கினான். அவனுடைய பிடியினால் வேதனையுற்ற நாகங்கள் தங்கள் வால்களால் தரையில் ஓங்கியடித்துத் துடித்துக்கொண்டிருந்தன. இபிக்ளிஸ், நாகங்களைக் கண்டவுடனே பதறி நடுங்கித் துள்ளியதில், கேடயத்திற்கு வெளியே தரையில் போய் விழுந்தான்.


அறையில் ஏற்பட்ட ஓசையையும் , குழந்தை இபிக்ளிஸின் அலறலையும் கேட்டு, அல்க்மினா, துயில் கலைந்து எழுந்து அம்பிட்ரியானை எழுப்பினாள். அவன் உடனே சுவரில் மாட்டியிருந்த தன் உடைவாளை எடுத்துக்கொண்டு, குழந்தைகள் இருந்த அறைக்குள் ஓடினான். அந்த நேரத்தில் அரண்மனைக் காவலர்கள் சிலரும் தீவர்த்திகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, அங்கு வந்து கூடிவிட்டனர். அல்க்மினாவும் பதைபதைத்துக்கொண்டே அந்தப் பக்கமாக ஓடிச் சென்றாள்.

ஹெர்க்குலிஸ் இரண்டு கைகளிலும் இரண்டு கொடிய நாகங்களை இறுகப் பிடித்துக் கொண்டு காட்சியளித்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதும் அரசனும் இராணியும் திடுக்கிட்டு நின்றனர். உடனே ஹெர்குலிஸ் உயிரிழந்த இரண்டு பாம்புகளையும் அவர்களுக்கு அருகில் தரையிலே வீசினான். அங்கே கூடியிருந்தவர் அனைவரும் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை.

மறுநாள் காலையில் அல்க்மினா, அறிவாளரான ஒரு பெரியவரிடம் சென்று, தன் மைந்தனுடைய வைபவத்தைப்பற்றித் தெரிவித்தாள். பத்து மாதக் குழந்தையான ஹெர்க்குலிஸ், இரண்டு கொடிய நாகங்களை வெறும் கைகளாலேயே நெரித்துக் கொன்ற அதிசயத்தின் பொருள் என்ன என்று அவள் அப்பெரியவரிடம் கேட்டாள். அவர் சிறிது நேரம் ஆலோசனை செய்து கூறியதாவது: “உன் மகன் ஹெர்க்குலிஸ் மகா வல்லவனாக விளங்குவான். அவனுக்கு ஈடாகவோ, மேலாகவோ எந்த மனிதனும் இருக்க முடியாது. அவன் அரும்பெரும் செயல்கள் பன்னிரண்டில் வெற்றி பெற்று, பின்னால் ஒலிம்பிய மலையில் தேவர்களுடன் தானும் ஒரு தேவனக வாழ்ந்து வருவான்.’


இதற்குப் பின்னால் அவள் ஹெர்க்குலிஸைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தாள். அவன், குழந்தைப் பருவத்திலேயே உடல் பருத்து, மிகுந்த வலிமையுடன் விளங்கினான். இளமையிலிருந்தே அவனுக்கு வில்வித்தை மல்யுத்தம், ஈட்டி எறிதல், வாள் போர் முதலியவைகளைத் தேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வந்தார்கள். ஜேஸன் முதலிய புகழ்பெற்ற அரசிளங்குமரர்கள் பயிற்சி பெற்று வந்த ஆசிரியர் கிரான் என்பவரின் பள்ளியிலும் அவன் பல ஆண்டுகள் கற்று வந்தான் முரட்டுக் குதிரைகள் பூட்டிய தேர்களை ஓட்டுவதிலும் அவன் பயிற்சி பெற்று வந்தான். சிறு தேரின்மீது நின்றுகொண்டே குதிரையை ஓட்டிப் பந்தயங்களுக்குச் செல்வது கிரீஸ் நாட்டில் வழக்கம். ஹெர்க்குலிஸ் எந்தக் குதிரையையும் அடக்கிச் செலுத்துவதில் திறமை பெற்று விளங்கினான். இரவு நேரத்தில் அவன் அரசனுக்கு அருகில் ஒரு கட்டிவில் படுத்து உறங்குவது வழக்கம். அவனுடைய வீரத்திற்கு அறிகுறியாக, அந்தக் கட்டிலின்மீது ஒரு சிங்கத்தின் தோல் விரிக்கப்பெற்றிருக்கும்.


காளைப் பருவத்தில் ஒரு சமயம், ஹெர்க்குலிஸ் மலைகளில் ஏறி, அங்கிருந்த மலைவாசிகளுடன் ஆசித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள், வெயிலின் கொடுமையால் அவன் களைப்புற்று, ஒரு மரத்தடியில் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் அவன் கண்ணயர்ந்து விட்டான். உறக்கத்தின் நடுவில், கனவிலே அவன் சில காட்சிகளைக் கண்டான். முதலில் ஒரு நெடிய சாலையும், அதன் முடிவில் அழகிய மாளிகைகள் நிறைந்த ஒரு பெரிய நகரமும் தென்பட்டன. மற்றொரு புறத்தில் மலைமீது செல்லும் ஒரு பாதை தெரிந்தது. ஹர்குலிஸ் தனக்கு முன்பு தோன்றிய இரண்டு பாதைக்களில் எதிலே செல்லலாம் என்று யோசிக்கலான். அப்பொழுது நகரப் பாதையில் ஓர் இளம் பெண் தோன்றி, அவனைக் கூவி அழைத்தாள். ‘இந்தப் பாதையில் வந்து நீ நகரத்தை அடைந்து இன்பமாக வாழலாம். இது இசையும் கலைகளும் நிறைந்த நகரம். சுகமாக வாழ்வதில் உனக்கு விருப்பமிருந்தால், நீ இந்தப் பக்கமாக வருவாயாக!’ என்று அவள் கூறினாள். அவன் திகைத்து விழிப்தைக் கண்டு, அவள் அவனை மேலும் உற்சாகப்படுத்திப் பேசினாள்: ‘இந்த நகரில் நீ, ஒரு வேலையும் செயாயாமல், இன்பமாக வாழலாம்: புழுதியில் நிற்க வேண்டியதில்லை; வெயிலில் வாட வேண்டியதில்லை. மலர்கள் நிறைந்த பூந்தோட்டங்களில் நீ பொழுதைப் போக்கலாம்: எந்த நேரத்திலும் யாழும் வீணையும் வாசிக்கக் கேட்கலாம். மாட மாளிகைகள் நிறைந்த, இந்நகருக்கு ஈடே கிடையாது!’


அவள் இவ்வாறு பேசும்பொழுதே நகரிலிருந்து இனிய இசை வருவதை ஹெர்க்குலிஸ் கவனித்துக் கேட்டான். அது அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நகரின் நந்தவனங்களும், சோலைகளும், அங்கிருந்து வந்த இளந்தென்றலும் அவனைக் கூவி அழைப்பவை போல் இருந்தன. அவனுக்கு நகரைப்பற்றிய ஆவலும் தோன்றிற்று.


அதே சமயத்தில் மலைப்பாதையில் வேறொரு நங்கை நிற்பதையும் அவன் கண்டான். முதலில் கண்ட நங்கையைப் போலில்லாமல் அவள் முற்றிலும் மாறுபட்டிருந்தாள். அவள் துாய வெண்மையான ஆடைகளை அஎனிந்திருந்தாள். அவளுடைய கண்களில் சோகம் இருப்பினும், அவை வீரச் சுடருடன் மின்னிக் கொண்டிருந்தன.

அவளும் ஹெர்க்குலிஸைப் பார்த்துப் பேசலானாள்: ‘ஹெர்க்குலிஸ்! உன்னை என் சகோதரி ஏமாற்றப் பார்க்கிறாள். நகரில் வாழ்க்கை சுகமாகத்தான் தோன்றும். ஆனால், அதற்காக நீ செலுத்த வேண்டிய விலை மிக அதிகமாயிருக்கும். அங்கே உள்ளது சோம்பேறி வாழ்க்கை. நீ அங்கே செல்ல வேண்டா. என்னுடன் இந்த மலைப்பக்கம் வா! இந்த மலைமீது ஏறுவது கடினந்தான். மேலே செல்லச் செல்ல. மேலும் கடினமாயிருக்கும். ஆயினும், மலையின் உச்சியை அடைந்துவிட்டால், தெவிட்டாத இன்பத்தைப் பெறலாம். இந்த மலையின் மாருதமே உன்னை நிகரற்ற வீரனாக்கிவிடும். அச்சமில்லாமல், இடைவிடாமல் நடந்து, இந்த மலைமீது ஏறிவரத் துணிந்தால், இறுதியில் நீ ஒலிம்பிய மலைச்சிகரத்தையும் அடைந்து, தேவர்களுடன் வாழும் பேற்றையும் பெறுவாய்!


கனவிலே கண்ட காரிகைகளில் ஹெர்க்குலிஸ் இரண்டாவது காரிகையையே பின்பற்றிச் செல்லத் துணிந்தான். கஷ்டங்கள் நிறைந்த மலைப்பாதையே தனக்கு உகந்தது என்று அவன் தீர்மானித்தான். அவன் நித்திரை கலைந்து எழுந்த பின்னும் அவனால் தான் கண்ட கனவை மறக்க முடியவில்லை. தன் வாழ்க்கையை எந்த நெறியில் செலுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளவே அந்தக் கனவு தோன்றியதாக அவன் எண்ணிக்கொண்டான். உடல் வருந்தாமல் சுக வாழ்வு வாழ்வதில் உண்மையான இன்பம் எதுவுமில்லை என்றும், எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு ஏற்று, வீர தீரத்துடன் அரும்பெரும் காரியங்களைச் செய்து, மக்களுக்குத் தொண்டு செய்வதே தன் வாழ்வின் குறிக்கோளாயிருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். அவனைப் போன்ற வீரனுக்கு வெறும் உயிரைக் சுமந்துகொண்டு உலவுவது வாழ்க்கை ஆகாது என்று அவனுக்குத் தெளிவாகிவிட்டது.