11. அமெசான் இராணியின் ஒட்டியாணம்


ஐரோப்பாவில் கருங்கடலுக்கு அருகிலுள்ள காகேசிய மலைகளின் அடிவாரத்தில் முற்காலத்தில் அமெசான்கள் என்று அழைக்கப்பெற்ற வீரப் பெண்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் ஆடவர்களின் உதவியில்லாமல் தாங்களே தனி ராஜ்ஜியங்கள் அமைத்துக் கொண்டு அவைகளைப் பாதுகாத்து வந்தார்கள். அமெசான் நாட்டில் ஆடவர்கள் வீட்டு வேலைகளைத்தாம் கவனித்துச் செய்து வந்தார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கவோ, போர் செய்யவோ முடியாதபடி, அமெசான் பெண்கள் அவர்களை இளவயதிலேயே தடுத்து வந்தார்கள். ஆண் குழந்தைகள் பிறந்தால், அமெசான்கள் அவைகளுடைய கைகளும் கால்களும் நன்றாக வளர்ச்சியடையாதபடி கட்டி வைத்திருந்தார்களாம்! அந்த நாட்டில் ஆட்சி செய்தது பெண்கள். போர் செய்தது பெண்கள். எல்லாப் பொதுக் காரியங்களையும் அவர்களே கவனித்து வந்தார்கள். இப்படி நெடுங்காலம் அவர்கள் ஆண்டு வந்ததுடன், அக்கம் பக்கத்திலிருந்த நாடுகளின் மீதும் படையெடுத்து வென்று, அவைகளையும் தங்கள் ராஜ்ஜியங்களோடு சேர்த்துக்கொண்டிருந்தார்கள்.


அந்தக் காலத்தில் அமெசான்கள் என்றால், ஆடவர்களுக்கு அச்சந்தான். அமெசான்கள் பித்தளையினால் செய்த விற்களை வைத்துக்கொண்டு போர் செய்வார்கள். அம்பு விடுவதில் அவர்களுக்கு இணையில்லை என்று பலரும் அவர்களைப் பாராட்டி வந்தார்கள். வீரம் மிக்க கிரேக்கர்கள் கூட உயர்ந்த வில் ஒன்றைக் கண்டால், அதை ‘அமெசான் வில்’ என்று சொல்லிப் பாராட்டுவார்கள். அமெசான்கள் குதிரையேற்றத்திலும் வல்லவர்கள். உலகிலேயே முதன் முதலாகப் போர்களில் அவர்களே குதிரைப் படைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஹெர்க்குலிஸின் காலத்தில் அமெசான்கள் தெர்மோடோன் நதிக்கரையில் மூன்று பெரிய நகரங்களை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அம்மூன்று நகரங்களிலும் மூன்று அரசிகள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களுள் முக்கியமானவள் ஹிப்போலிதை என்பவள். அவள் தன் இடையில் நவரத்தினங்கள் பதித்த ஒட்டியாணம் ஒன்றை எப்பொழுதும் அணிந்திருந்தாள். அந்த ஒட்டியாணத்தைக் கொண்டுவர வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டிருந்தான். அந்த ஒன்பதாவது பணியை நிறைவேற்றுவது ஹெர்க்குலிஸின் கடமையாயிற்று.

அவன் அயோலஸையும், மற்றும் பல தோழர்களையும் அழைத்துக்கொண்டு, கப்பலில் ஏறிச்சென்று. சாகேசிய மலைகளை அடைந்தான். அங்கே இராணி ஹிப்போலிதையின் ஒட்டியாணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புவது எப்படியென்று அவன் ஆலோசனை செய்தான். அவன் எப்பொழுதும், எதற்கெடுத்தாலும் போரே செய்வான் என்று யூரிஸ்தியஸ் எண்ணியிருந்தான். அமெசான்களின் அரசியிடமும் அவன் போராடத் தொடங்கி, அவளிடமிருந்து மீள முடியாமல் அழிந்துவிடுவான் என்பது அவன் நம்பிக்கை.

ஆனால், ஹெர்க்குலிஸிடம் வேறு பல அரிய குணங்களும் அமைந்திருந்தன என்பது அவனுக்குப் புலப்படவில்லை. அமெசான் நாட்டில் ஹெர்க்குலிஸ் போர் செய்ய விரும்பவில்லை. போரிடாமலே தன் இலட்சியத்தை அடைய வேண்டும் என்று அவன் எண்ணினான். ஆண்களிலே அவன் அழகு மிகுந்தவன். அவன் உயர்ந்த உள்ளம் படைத்தவன்; நீதியிலும் நேர்மையிலும் ஆர்வமுள்ளவன். மாலை நேரங்களில் அவனுடன் உட்கார்ந்து அவனுடைய இனிய பேச்சையும், கதைகளையும் கேட்பதானால், பொழுது செல்வதே தெரியாது. மேலும், யாழ் வாசிப்பதிலும், இசை பாடுவதிலும் அவன் நிபுணன். பெண்களைக் கவர்ச்சி செய்வதற்கு இன்னும் வேறு என்ன வேண்டும்?


தெர்மோடோன் நதியில் கப்பலை நிறுத்திக் கொண்டு, ஹெர்க்குலிஸ் அமெசான்களின் விசித்திரமான பழக்கவழக்கங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் எத்தனையோ ஆச்சரியங்களைக் கண்டான். அமெசான்கள் நெடிய உருவத்துடன், வெண்மையான உடைகளணிந்து, ஒவ்வொருவரும் வில்லும் தூணியும் தாங்கிச் செல்வதை அவன் கண்டான். அவர்களுடைய வில்லாளர் படைக்கு அடுத்தபடி இரண்டாவது அணியாக விளங்கிய குதிரைப் படையினரைக் கண்டு, அவன் வியப்படைத்தான். அப்படையினர் ஈட்டியும் கேடயமும் தாங்கியிருந்தனர். அவர்களுடைய கேடயம் அரைச் சந்திர வடிவில் அமைந்திருந்தது. அமெசான்களின் தலைநகராகிய தெமிஸ்கிராவில் இறங்கி, ஹெர்க்குவிஸ் அவர்களுடைய வாழ்க்கை முறைகளை நேரிலே கண்டறிந்துகொண்டான்.

அவன் இராணி ஹிப்போலிதையைக் காணச் செல்லுமுன், அவளாகவே அவனுக்கு அழைப்பு அனுப்பினாள். அனைக் கண்டதுமே அவள் தன் அன்பைத் தெரிவித்து, அவனுக்குத் தன்னால் இயன்ற உதவியெல்லாம் செய்வதாகாகவும் கூறினாள். அவளுடைய கொலுமண்டபத்தில் மூன்று பக்கங்களில் வீரப் பெண்மணிகள் தங்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தனர். ஹிப்போலிதை பேரழகும் பெருந்ததிறலும பெற்று விளங்கினான். அவள், கொஞ்சம் செருக்குடையவள் எனினும், ஹர்குலிஸைப் புன்னகையோடு வரவேற்று உபசரித்தாள். அவனுடைய வீரச் செயல்களைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்ததாகக் கூறி, அவள் அவனை மிகவும் பாராட்டினாள்.

அவனும் வெகுநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய அநுபவங்கள் சிலவற்றைக் கேட்டு அரசி மகிழ்ச்சியடைந்தாள். பேச்சின் இடையில் ஹெர்க்குலிஸ் தான் வந்த காரியத்தையும் அவளிடம் தெரிவித்தான். அதைக் கேட்டதும் அவள், ‘இதுவரை நீங்கள் போராடிப் போராடியே ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றி வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்தத் தடவை போராட்டமில்லாமலே வெற்றி பெற்றுவிட்டீர்கள் ! நானாகவே மனமுவந்து விலை மதிக்க வொண்ணாத என் ஒட்டியாணத்தை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன்!” என்று சொல்லி, அவள் அதைக் கழற்றி அவனிடம் கொடுத்தாள். அவள் கையாலேயே வாங்கிக்கொள்வதில் அவனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். அது போர்க்கடவுளால் அவளுக்குப் பரிசாக அளிக்கப் பெற்றது. கண்னைப் பறிக்கும் ஒளியுடன், பல நிறங்களில் கற்கள்மின்னவும், தங்கம் ஒளி வீசவும்

எழிலோடு விளங்கிய அந்த அரிய ஆபரணத்தை நாகரிகம் தெரியாத யூரிஸ்திஸிடம் கொடுக்க வேண்டியிருக்குமே என்றுதான் ஹெர்க்குலிஸ் வருந்தினான். பிறகு அவன், இராணியிடம் அரிதில் விடை பெற்றுக்கொண்டு கப்பலுக்குத் திரும்பினான்.

பின்னர் ஒரு முறை ஹிப்போலிதையும் அவனுடைடைய கப்பலுக்குச் சென்றிருந்தாள். ஹீரா தேவியின் சூழ்ச்சியால், அமெசான்கள் பலர், ஹெர்க்குலிஸ் தங்கள் இராணியைப் பிடித்துக் கப்பலில் ஏற்றிக் கிரீஸ் நாட்டுக்குக் கொண்டுசெல்லப் போகிறான் என்று கேள்விப்பட்டு, கப்பலை நோக்கி வந்து, அம்புகளை ஏவத் தொடங்கினர். சிரேக்க வீரர்களும் அவர்களை எதிர்த்துப் போராட நேர்ந்துவிட்டது. வெகு நேரத்திற்குப் பிறகுதான், சண்டை ஓய்ந்து எல்லோரும் உண்மையைத் தெரிந்துகொண்டனர். இனியும் கரையில் இறங்கித் தன் வீரப் பெண்களைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள்.


ஹெர்க்குலிஸ் திரும்பிச் செல்லும் வழியில் டிராய் முதலிய பல நகரங்களைப் பார்வையிட்டான். ஆங்காங்கே சில போட்டங்களிலும் அவன் ஈடுபட நேர்ந்தது. இறுதியில் அவனும், மற்ற கிரேக்க வீரர்களும் வெற்றி முழக்கம் செய்துகொண்டு, மைசீனை அடைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/11&oldid=1032756" இலிருந்து மீள்விக்கப்பட்டது