4. ஒன்பது தலை நாகத்தை வதைத்தல்


ஹெர்க்குலிஸ் நிறைவேற்ற வேண்டிய இரண்டாவது பணியாக லெர்னா வனத்திலிருந்த ஒன்பது தலை நாகத்தை, வதைக்க வேண்டுமென்று யூரிஸ்தியஸ் கட்டளையிட்டான். இந்தத் தடவை ஹெர்க்குலிஸ் நிச்சயமாகத் திரும்ப மாட்டான் என்று அவன் எண்ணிக்கொண்டான்.


லெர்னா என்பது ஆர்கோஸ் நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள ஒரு பெருந்தோட்டம். அது கடற்கரையை ஓட்டியிருந்தது. பான்டினஸ் மலைக்குக் கிழக்கில் அது கடல்வரை பரவியிருந்தது. அதற்கு அருகில் பான்டினஸ் என்ற பெயரையே கொண்ட ஓர் ஆறு அமிமோன் என்ற ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்புள்ளது. அங்கே தேவர்களுக்குரிய ஆலயங்களும் இருந்ததால், அது புனிதத் தலமாகவும் கொண்டாடப்பெற்று வந்தது. அமிமோன் ஆற்றின் உற்பத்தித் தலத்தில்தான் முற்காலத்தில் ஒன்பது தலை நாகம் ஒன்று வசித்து வந்தது.


அந்த நாகம் கொடிய விஷமுள்ளது. லெர்னா தோட்டத்துக் காற்றை ஒருவர் சுவாசித்தாலும் மரணமடைவர் என்னும்படி, அதன் விஷம் சுற்றிலும் காற்றிலே பரவியிருந்தது. தோட்டத்தின் நடுவில் ஆழங்காண முடியாத சேறு நிறைந்த மடு ஒன்று இருந்தது. அதிலே இருந்துகொண்டு அந்நாகம் செய்து வந்த ஆர்ப்பாட்டத்துக்கு அளவேயில்லை. அது எத்தனையோ ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கி யிருந்த்தால் மக்கள் அதைப்பற்றி அஞ்சிக்கொண்டேயிருந்தனர். அதை எவராலும் அதுவரை வதைக்க முடியவில்லை. ஏனெனில், அதன் ஒன்பது தலைகளில் ஒரு தலையை வெட்டினால், உடனே ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தலைகள் முளைத்துவிடும்! மேலும், ஒன்பது தலைகளில் ஒரு தலை சாகாவரம் பெற்றது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நிலத்தின்மீது நீண்ட குன்று கிடப்பது போல், மடுவிலே கிடக்கும் அந்த நாகத்தைத்தான் ஹெர்க்குலிஸ் வதைக்க வேண்டியிருந்தது.


லெர்னாவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஹெர்க்குலிஸ் தான் நிறைவேற்ற வேண்டிய இந்த இரண்டாவது பணியைப்பற்றி நெடுநேரம் ஆலோசனை செய்தான். தன்னோடு தன் சகோதரன் பையனான அயோலஸ் என்பவனையும் அழைத்துச் செல்லுவது நலமென்று அவன் தீர்மானித்தான். அயோலஸ் இளைஞன் : வீரமுள்ளவன் : கடமை உணர்ச்சியுள்ளவன்; எதிலும் உறுதியாக நிற்கக்கூடியவன். ஆதலால் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஹெர்க்குலிஸ் ஆர்கோஸ் நகரை நோக்கிப் பயணமானான். இந்தத் தடவை அவன் கையில் உடைவாள் ஒன்றும் இருந்தது.


வழக்கம் போல் ஹீரா தேவி, அவனுக்கு எதிராகவும், நாகத்திற்கு உதவியாகவும் இருந்தாள். ஆனால், அதீனா தேவி அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து உதவி வந்தாள். அவளுடைய உதவியால்தான் அவன் நாகம் இருந்த இடத்தை எளிதில் கண்டு கொள்ள முடிந்தது.


அவனும் அயோலஸும் லெர்னா தோட்டத்தை அடைந்ததும், மடுவிலே நாகத்தைப் பார்த்தனர். ஒன்பது தலைகளும் படம் விரித்து ‘உஸ், உஸ்’ ஸென்று சீறி ஆடிக்கொண்டிருந்தன. ஒன்பது வாய்களும் பெருங்குகைகளைப் போல் திறந்திருந்தன. அவைகளிலிருந்து நச்சுக் காற்று வெளியே வீசிக் கொண்டேயிருந்தது.


நாகத்தைக் கண்தும், ஹெர்க்குலிஸ் மூச்சை அடக்கிச் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டு, தன் வில்லில் அனல் உமிழும் அக்னி அஸ்திரங்களைத் தொடுத்து, நாகத்தின் ஒன்பது தலைகளின் மீதும் பாயும்படி விடுத்தான். ஓர் அம்பு கூடக் குறி தவறவில்லை. அவை அத்தலைகளைத் துண்டித்துத் தள்ளிவிட்டன. ஆனால் கீழே விழுந்த ஒவ்வொரு தலைக்கும் பதிலாக இரு தலைகள் வீதம் உடனே முளைத்திருப்பதை அவன் கண்டு திகைத்தான்.


உடனே அவன் தன் கதையைக் கையில் எடுத்துக் கொண்டு நாகத்தின் மீது பாய்ந்து, அதன் தலைகளை தையப் புடைத்தான். நாகமும் இடிபோல் குமுறிக் கொண்டு அவனைத் தாக்க முயன்றது. ஆனால், அவன் அதற்குப் பிடிகொடுக்காமல், பம்பரம்போல் சுழன்று சுழன்று அதைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். இக்காட்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அயோலஸுக்கு எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை. அத்தனை வேகத்துடன் ஹெர்க்குலிஸ் நாகத்தின் தலைகளை அடித்து வதைத்துக்கொண்டிருந்தான். ஆயினும், புதிய புதிய தலைகள் முளைத்துக்கொண்டேயிருந்தன. அந்த நேரத்தில் ஹீரா தேவியின் ஏவலால், கடல் ஆமை போன்ற பெரிய நண்டு ஒன்று அவனுடைய பாதம் ஒன்றைப் பற்றிக் கொண்டு கடித்தது. அவன் அதைக் கவனிக்காமலே துள்ளிக் குதித்ததில் அந்த நண்டு அவன் காலடியில் அகப்பட்டுச் சடசடவென்று உடைந்து நசுங்கிப் போய்விட்டது. ஹீரா தேவி அந்த நண்டுக்கு நன்றி செலுத்துதுவதற்காக அதை வானத்தில் ‘கர்க்கடக’ நட்சத்திர ராசியாக நிறுத்தி வைத்தாள் என்று கிரேக்கக் கதைகள் கூறுகின்றன.


அன்று அம்புகளாலும் கதையாலும் நாகத்தை வதைக்க முடியாதென்று கண்ட ஹெர்க்குலிஸ், அயோலஸுடன் வனத்திற்குத் திரும்பிச் சென்று, ஓரிடத்தில் தங்கியிருந்தான். அங்கே சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை செய்து, அவன் ஒரு பெரிய மரத்ததை, வெட்டிச் சாய்த்தான். அதன் கிளைகளையெல்லாம் தனித்தனியாக முறித்து அடுக்கி வைக்கும்படி அயோலஸிடம் சொல்லிவிட்டு, அவன் கிராமப்புறதிலிருந்த ஒரு கருமானிடம் சென்று, இரண்டு நீண்ட இரும்புக் கம்பிகள் தயாரித்து வாங்கி வந்தான். அவைகளின் முனைகள்மட்டும் தட்டையாக அடிக்கப்பெற்றிருந்தன.


மறு நாள் காலையில் அயோலஸ் கொப்புக்களையும் குச்சிகளையும் குவித்து, அவற்றில் தீ மூட்டினான். இரும்புக் கம்பிகளின் தட்டையான பகுதிகளைத் தீயில் வைத்து, அவன் அவைகளை நன்றாகப் பழுக்கக் காய்ச்சினான். அவைகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அவனைத் தன்னோடு வருமாறு ஹெர்க்குலிஸ் அழைத்துச் சென்றான்.


நாகத்துடன் இரண்டாம் நாள் போர் தொடங்கி விட்டது. ஹெர்க்குலிஸ் நாகத்துடன் போராடி, அதன் தலைகளில் ஒவ்வொன்றாகத் துணித்துத் தள்ளினான்.

அவன் ஒவ்வொரு தலையாக வெட்டியதும், அயோலஸ் தான் வைத்திருந்த காய்ந்த இரும்புக் கம்பியை வெட்டுப்பட்ட கழுத்தில் வைத்துத் தேய்த்துப் புதிதாகத் தலை உண்டாகாதபடி அந்த இடத்தைப் பொசுக்கி வந்தான். அன்று பகல் முழுதும் ஹெர்க்குலிஸ் நாகத்தைத் தாக்கிக்கொண்டேயிருந்தான். அயோலஸ் ஒவ்வொரு கம்பியாகக் காய்ச்சிக் கொணர்ந்து தன் பொசுக்கல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். நாகத்தின் விஷ மூச்சினால் அவர்கள் இருவருடைய கண்களும் பாதி கருகிப் போய்விட்டன. ஆயினும், அவர்கள் சிறிதுகூட அயரவில்லை. அயர்ந்திருந்தால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்து விளைந்திருக்கும்.


மாலைக் கதிரவன் மறையும் நேரத்தில், நாகத்தின் அழிவில்லாத தலை என்று சொல்லப்பெற்ற கடைசித் தலையையும் ஹெர்க்குலிஸ் வாளால் அரிந்து தள்ளினான். அது கீழே விழுந்தவுடன் அவன் அத்தலை மீது ஒரு பெரும்பாறையை உருட்டி, அதை மடுவுக்குள் ஆழ்த்திவிட்டான். பிறகு அவன் நாகத்தின் உடலையும் பிளந்தெறிந்தான். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால், அவன் தன் அம்புகள் அனைத்தையும் எடுத்து நாகத்தின் விஷத்தில் நன்றாக, தோய்த்துக் கொண்டான் . பின்னால் அந்த அம்புகள் எந்தப் பிராணி மீது பட்டாலும் அது மாய்ந்துவிடும்படி அவற்றில் விஷம் தோய்ந்திருக்கட்டும் என்பதற்காகவே அவன் இவ்வாறு செய்தான்.


லெனா தோட்டமும், அங்கிருந்த மடுவும் ஆயிக்கணக்கான போர் வீரர்கள் நின்று போராடிய களம் போலக் காட்சியளித்தன. ஒரு கொடிய நாகத்தை, வதைக்க அவ்வளவு பெரிய போராட்டம் அவசியமாயிருந்தது. மன்னன் யூரிஸ்தியஸ் பணித்த இரண்டாவது வேலை இவ்வாறு இனிது முடிந்துவிட்டது. ஹெக்குலிஸ், பையனை அழைத்துக்கொண்டு நல்ல நீருள்ள ஒரு பொய்கையை அடைந்தான். அங்கே இருவரும் தங்கள் உடல்களைச் சுத்தம் செய்துகொண்டனர். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் அடையாளம் தெரியாதபடி அவ்வளவு மாறியிருந்தனர். இருவரும் களைப்புற்றிருந்ததால், இரவில் வனத்திலேயே படுத்து உறங்கினார்கள்.


மறுநாள் காலை லெர்னா தோட்டத்தைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஹெர்க்குலிஸைப் பலபடப் பாராட்டி வணங்கினார்கள். லெர்னா நாகத்தை வீழ்த்திய மகத்தான வெற்றியை அவர்கள் வாயாரப் புகழ்ந்து, வீரன் ஹெர்க்குலிஸ் நெடுநாள் வாழ வேண்டுமென்று வாழ்த்தினார்கள். அவனோடு, அயோலஸையும் அவர்கள் மறக்காமல் போற்றினார்கள். பிற்காலத்தில் அந்தப் பக்கத்து மக்கள் தாங்கள் ஏதாவது சபதம் செய்வதாயிருந்தால், ‘அயோலஸ்ஸைப் போல் விசுவாசமாக இருந்து நிறைவேற்றுவோம்!’ என்று சொல்லுவது வழக்கமாயிற்று. அயோலஸின் பெயரால் லெர்னாவுக்கு அருகில் ஒரு கல் தூணூம் நாட்டப் பெற்றது.

நாகத்தை வதைத்த வெற்றிச் சின்னங்களுடன் ஹெர்க்குலிஸ், மன்னனைக் காண விரைந்து சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஹெர்க்குலிஸ்/4&oldid=1032763" இலிருந்து மீள்விக்கப்பட்டது