1806/1. வேலூர்ப் புரட்சி

*
வேலவன் குன்றம் மீட்ட

வீரத் தமிழர்க்கு

*

1806
1
வேலூர்ப் புரட்சி

‘1806-ஆம் ஆண்டு மூண்ட வேலூர்ச் சிப்பாய்களின் புரட்சியும் சுதந்தர தாகத்தையே மூல காரணமாகக் கொண்டது. பின்னர் ஏற்பட்ட முதலாவது சுதந்தரப் போருக்கு அது ஒர் ஒத்திகை’.

—வீர சவர்க்கார்

‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் வளர்ந்து வந்த பெருவெறுப்பு முதல் முதலாக மக்கள் எழுச்சியாய் வெளிப்பட்டது. 1806-ஆம் ஆண்டு வேலூர்ப் புரட்சியே 1857-ஆம் ஆண்டு நடை பெற்ற இந்தியச் சிப்பாய் புரட்சியின் முன்னோடியாய் விளங்கியது. உண்மையில் 1857-ஆம் ஆண்டின் இந்தியச் சிப்பாய் புரட்சியின் சிறிய வடிவமே வேலூர்ப் புரட்சி.’

—ஹரிபாத சௌதிரி

இந்தியச் சிப்பாய்களின் பெரும்புரட்சி மூண்டெழுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்பே இன்பத் தமிழகத்தின் தலை வாயிலில் நடைபெற்ற முதல் இந்திய இராணுவப் புரட்சியே வேலூர்ப் புரட்சி.

இயற்கை அழகும் இலக்கியச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் ஒரு சேரப் படைத்து வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் தலை நகராய் விளங்கும் புகழ் பெற்ற வேலை மாநகரில் போர்க்கலை நுட்பங்களும் கவின் கலைச் சிறப்புகளும் கலந்து இலங்கும் பேறு பெற்றுத் திகழும் வேலூர்க் கோட்டையில்-அயல் ஆட்சிக் கொடுமையால் செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகிக் கிடந்த அஞ்சத்தக்க சூழ்நிலையில் நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்!” என்று தமிழ் நாட்டு மக்களின் சுதந்தர ஆவேசம் பிரிட்டிஷ் படையிலிருந்த கணக்கற்ற தமிழ் வீரர்கள் வாயிலாகப் பொங்கி எழுந்த விழுமிய நிகழ்ச்சியே வேலூர்ப் புரட்சி.

தென்பாண்டித் திருநாட்டில் 18 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீறுகொண்டெழுந்த பாளையக்காரரின் சுதந்தரப்போர், 1801-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மானங்காத்த மருது பாண்டியர்களைத் தூக்கிலிட்டதோடு முடிவுற்றது. அவ்வீர சகோதரர்கள் மறைந்த சில மாதங்களுக்குள் அவர்களையும் தமிழ்த்திரு நாட்டையும் காட்டிக்கொடுத்து அடிமை வாழ்வு வாழ்ந்த ஆர்க்காட்டு நவாபுகளின் கடைசி மன்னனாகிய உமதுத்-உல்-உமரா மரணமடைந்தான். அவனுக்குப் பின் வாள் முனையின் வலியின்றியே அவன் பரம்பரையைச் செல்லாக் காசாக்கியது ஆங்கில வல்லரசு. 

அதே நேரத்தில் கர்நாடகம் முழுவதையும் கொடுங்கோலுக்கு இரையாக்கியது கும்பினி ஆட்சி. ஆம்! அந்தக் கொடுங்கோலின் தன்மையை-அதன் விளைவுகளை-அக்கொடுங்கோலர்களின் குடியில் தோன்றிய வெள்ளை வரலாற்று ஆசிரியர்களாலேயே மறைக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் வடவெல்லையில் சுதந்தரமாக வாழ்ந்துவந்த எண்ணற்ற பாளையக்காரர்களை அடக்கி ஒடுக்கி நாசமாக்குவதில் வெள்ளை அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் செலுத்தத் தலைப்பட்டது. அதன் பயனாக வடவெல்லையில் வாழ்ந்த பாளையக்காரர்களுக்கும் ஆங்கில வல்லரசிற்கும் இடையே போர் மூண்டது. பல மாதங்கள் போர் நடைபெற்றதாயினும், இறுதி வெற்றி ஏகாதிபத்தியத்தின் சார்பிலேயே அமைந்தது. மாவீரர்களாகிய கட்ட பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் ஆகியோரையே கொன்று தீர்த்த கும்பினிப் படைக்கு முன்பு போதுமான ஆயுதபலமற்ற வடவெல்லைப் பாளையக்காரர்களால் என்ன செய்ய இயலும்! அவர்கள் வீரப் போர் புரிந்து விண்ணுலகெய்தினர்கள். அதை ஒட்டித் தென்பாண்டி நாட்டில் செய்ததுபோலவே கும்பினி அரசாங்கம் தமிழகத்தின் வடவெல்லையிலும் பேயாட்டமாடிற்று. வானுயர்நத கோட்டைகளெல்லாம் குப்பை மேடுகளாயின. அடர்ந்த காடுகளெல்லாம் அழித்து நாசமாக்கப்பட்டன. தேச பத்தர்கள் வாழ்ந்த இடங் களில் எல்லாம் கொலையும் கொள்ளையும் வாளும் நெருப்பும் கொடுங்கூத்து நிகழ்த்தின. சில தினங்கள் முன்வரை குறுநில மன்னர்களாய்ப் பெருமையுடன் வாழ்ந்தவரெல்லாரும் கைவிலங்குகளோடு சிறைக் குகைகளிலே தள்ளப்பட்டனர். காட்டிக் கொடுத்த துரோகிகட்குப் பணமும் பதவியும் பரிசாக அளிக்கப்பட்டன. இவ்வாறு பலவகையாலும் அல்லலுற்றும் அவமானமடைந்தும் மனங்கொதித்துக்கொண்டிருக்க வடவார்க்காட்டு மாவட்டத் தமிழர்கள் நய வஞ்சக வெள்ளை நரிகளைக் கொன்று குழியில் புதைக்க என்றேனும் ஒரு நாள் வாய்க்காதா என்று ஏங்கிக் கிடந்தார்கள்.

மக்களின் ஏக்கம் தீரும் நாள் விரைந்தோடி வந்தது. பெருமை வாய்ந்த வேலூர்க் கோட்டை கொடுங்கோல் வெறியர்களின் கல்லறையாகவும் சுதந்தர வீரர்களின் பாசறையாகவும் உருக்கொண்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்குப் பலம் பொருந்திய பகைவர்களாய் விளங்கியவர்கள் ஐதர் அலியும் அவன் வீர மைந்தன் திப்புவுமாவார்கள். ஐதர் 1782ல் காலமானான். அதற்குப்பின் அரியணை ஏறிய அவன் மகன் திப்பு, ஆங்கில ஆட்சிக்குக் கனவிலும் நனவிலும் கலக்கத்தையே விளைத்துவந்தான் வயப்புலி போலப்பதுங்குவதும் பாய்வதுமே அவன் பண்புகளாய் விளங்கின. பிரெஞ்சுக்காரர்களோடும் மாவீரன் நெப்போலியனோடும் தொடர்பு கொண்டிருந்தான் திப்பு. அவர்

களுடைய ஆதரவைத் துணையாக்கிக்கொண்டு ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணினின்றும் வேரோடு கில்லி எறிவதே அவன் குறிக்கோளும் திட்டமுமாம். ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறவில்லை. 1799ல் நடைபெற்ற சீரங்கப் பட்டினப் பெரும்போரில் திப்புவின் சேனைகள் தோல்வியுற்றன. திப்பு, போர் முனையில் தலையிலே சுடப்பட்டு விழுப்புண் எய்திப் பகைவர் கைப்படுதற்கு முன்பே மாண்டான். அயல் ஆட்சியினரும் பயத்தோடும் பத்தியோடும் அவன் பொன் உடலைப் புதைத்து ஆறுதல் கண்டனர். திப்பு மாண்டதும் அவன் வீர மைந்தர்களை-குடும்பத்தை-வேலூர்க் கோட்டையிலே சிறை வைத்தது கும்பினி ஆட்சி. ஆம்! பஞ்சுப் பொதிக்கு நடுவே நீறு பூத்த நெருப்புக் கட்டை ஒன்றை நுழைத்து வைத்தது போல ஆயிற்று அச்செயல்.

மனக்குமுறல்: ஏற்கெனவே கும்பினி ஆட்சியின் கொடுமையால் மனம் கொதித்துக் கிடந்தனர் வடவெல்லைத் தமிழர். அவர்தம் பிரதிநிதிகள் பலர் வேலூர்க் கோட்டையிலே நிலைத்திருந்த ஆங்கிலப் படையில் கூலிக்கு வேலை பார்த்து வந்தனர். அவர்கட்குத் துணையாகக் தென்பாண்டித் திருநாட்டில் அடக்கி ஒடுக்கி நாசமாக்கப்பட்ட பாளையக்காரர்கள் மரபிலே வந்த வீரர் பலர், தம் இயற்கைப் பண்பான போர்க்குணம் காரணமாகவும் வாழ்க்கைச் சூழ் நிலை காரணமாகவும் பசுத்தோல் போர்த்த புலிகளாய் வேலூரிலிருந்த ஆங்கிலப் படையில் வீரராய் விளங்கினர். இவர்களே எல்லாம் ஒன்று திரட்டி உபதேசங்கள் புரிந்து சுதந்தர வீரர்களாக உருவாக்கும் வாய்ப்பும வல்லமையும காலத்தின் கையிலும், சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் மைந்தர்களின் திறமையிலும் பெரும்பாலும் அடங்கியிருந்தன. திப்புவின் மைந்தர் பன்னிருவரையும் மகளிர் அறுவரையும் அந்நாளில் வேலூர்க் கோட்டையில் சிறை வைத்திருந்தது கும்பினி ஆட்சி. பலம் பொருந்திய காவலில் அவர்கள் இருப்பதாகக் கருதப்பட்டாலும், உண்மை நிலை அதுவன்று. பெரிய அளவிற் சுதந்தரம் நிறைந்த சிறைக் கைதிகளாய் வாழும் வாய்ப்பினைத் தமது தந்திரத்தாலேயே தேடிக்கொண்ட திப்புவின் குடும்பத்தினருக்கு ஏராளமான உற்றாரும் உறவினரும் தோழரும் துணைவரும் கோட்டையின் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர். மூவாயிரவருக்குக் குறையாத மைசூர் நாட்டினர், அவர்களது எதிர்காலத்தில் கருத்துடையவர்களாய், வேலூரில் குடியிருந்தனர். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அன்பு காட்டிய பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும் வேலைமாநகரின் குடிமக்களாய் விளங்கினார்கள். கணக்கிட்டுப் பார்க்கும் போது வேலூரை இராணுவ பலத்தால் அடக்கி ஆண்ட பட்டாளத்தின் தொகையைவிட அதை முறித்து எறியக்

கனன்று கொண்டிருந்த குடிமக்களின் தொகை பல மடங்கு அதிகமென்றே சொல்ல வேண்டும்.

நீறு பூத்த நெருப்பு : இந்நிலையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நீறு பூத்த நெருப்புப் போலிருந்த மக்கள் நெஞ்சில் சுதந்தரச்சுடர் எழுநாவிட்டு எரியப் பெருந்துணை புரிந்தன வெள்ளை வர்க்கத்தினர் நேராகவும் மறைமுகமாகவும் செய்த சில அடாத செயல்கள். ஆளும் அரசாங்கத்தின் ஆதரவு பெற்று அந்நாளில் நடைபெற்ற கிறித்தவ மதமாற்றப் பிரசார முறை, மக்களின் மனத்தை நாளும் புண்படுத்தி வந்தது; அந்த முறை மக்களின் மனத்தில் பயத்தையும் பகையையும் கிளப்பிவிட்டது. அந்நிலையில் கும்பினி ஆட்சி சற்றும் ஆராய்ச்சியின்றி விதித்த சில உத்தரவுகள், படை வீரர்கள்-நாட்டு மக்கள்-மனத்திலிருந்த சுதந்தரக்கனல் காட்டுத்தீயாகக் காரணமாயின. ஆணவம் படைத்த ஆங்கிலத் தளபதிகள், இந்துக்கள் இராணுவப் பயிற்சிக்கு வரும்போது தங்கள் காதுகளில் கடுக்கன்களே அணியக்கூடாது என்றும், நெற்றியிலே திருநீறோ திருமண்ணோ இடக்கூடாதென்றும் கட்டளையிட்டார்கள். முகம்மதியர்களோ, தங்கள் தாடியை முற்றிலும் களைந்துவிட வேண்டும் என்றும் மீசையையுங்கூட ஒரு குறிப்பிட்ட வகையில் குறிப்பிட்ட அளவிற்கே கத்தரித்துக்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்தப்பட்டார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 1805-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், 14-ஆம் நாள், சென்னையிலிருந்த இராணுவப் பெருந்தலைவன் இந்தியச் சிப்பாய்கள் தங்கள் தலையிலே ஒரு வகையான புதுத்தலைப்பாகையை அணிந்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிட்டான்; இதனுடன் அவர்கள் புது வகைக் காலுறைகளும் தோலாற்செய்யப்பட்ட குல்லாய்ச் செண்டுகளும் இறகுச்செண்டுகளும் அணிய வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான்; மேலும், மார்பிலே சிலுவை போன்ற சின்னம் ஒன்றைத் தொங்கவிட்டுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினான். தேவையற்ற இத்திடீர்க் கட்டளைகளால் இந்தியச் சிப்பாய்களிடையே பெருமனக்கசப்பு ஏற்பட்டது. நாளடைவில் சுயமரியாதையையும் சொந்த மதத்தையும் இழந்து மதம் மாற நேரிடும் என்ற கலக்கமும் தமிழ் வீரர்கட்கு உண்டாயிற்று. அதனால், அவர்கள் அடைந்த மனத்துயர் மிக அதிகம். அந்நிலையில் 1806-ஆம் ஆண்டு, ஏப்பிரல், மே, ஜூன் மாதங்களில் புதுத்தொப்பிகள் வேலூர்ப்பட்டாளத்திற்கு அனுப்பப்பட்டன. உடனே அவற்றை அணிந்துகொள்ளும்படி சிப்பாய்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சமயத்தில் வேலூரிலிருந்த ஒரு படைப்பிரிவினர், "அரசாங்கத்தின் புதிய உத்தரவுகள் எங்கள் மனத்தைப் பெரிதும் புண்படுத்திவிட்டன. எங்கட்குக்கொடுக்கப்பட்டிருக்கும் தொப்

பிகள் கிழக்கிந்திய பாண்டு வாத்தியக்காரர்களின் குல்லாய்கள் போலிருக்கின்றன. எனவே, எங்களால் அவற்றை நிச்சயமாக அணிய இயலாது” என்று உறுதியாக மறுத்து விட்டனர்.

வேண்டுகோள் ஏறவில்லை : அ ச் ச ம ய த் தி ல் வேலூரில் படைத்தலைவர்களாய் இருந்த வெள்ளை அதிகாரிகளும் தங்கள் கீழிருந்த சிப்பாய்களின் மனக்கொதிப்பை மேலிடத்திற்குச் சுட்டிக் காட்டிப் புதிய உத்தரவுகளை மாற்றும்படி மன்றாடினார்கள். ஆனால், கொடுங்கோலர்களின் செவியில், அறம் பிறழா வகையில் படை வீரர்களும் அவர்கள் தலைவர்களும் செய்துகொண்ட வேண்டுகோள் சற்றும் ஏறவில்லை. உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த எண்ணங்களை ஒளியாமல் வெளியிட்ட வேலூர் வீரர்கள், கைக்குட்டைகளால் முக்காடிடப்பட்டு, சென்னைக் கோட்டைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். விசாரணை நாடகத்திற்குப்பின் நீதியின் பெயரால் தீர்ப்புகளை வழங்கியது கும்பினி ஆட்சி. அதன்படி ஒரு முஸ்லீமுக்கும் இந்துவுக்கும் முறையே தொள்ளாயிரம் தொள்ளாயிரம் சாட்டையடிகள் கொடுக்கப்பட்டன. சாட்டை அடிகளால் பிழிந்து சக்கையாக்கப்பட்டவர்கள் உத்தியோகத்தினின்றும் நீக்கப்பட்டார்கள். மேலும் பத்தொன்பது பேர்கட்கு ஐந்நூறு ஐந்தாறு சாட்டையடிகள் கொடுத்ததுடன் 'மன்னிப்பும்' வழங்கப் பெற்றது. இவ்

வாறு தனியார்களைத் தண்டித்ததோடு சுகந்தர உணர்ச்சி கொண்ட அவ்வேலூர் பட்டாளத்தின் பிரிவையே கலைத்தொழித்து, அதன் இடத்தில் புதுப்படை ஒன்றை நியமித்தது கும்பினி ஆட்சி. இவ்வாறே வாலாஜாபாதில் தம் வெறுப்பை வெளிப்படுத்திய ஒரு சுபேதாரை வேலையை விட்டே வெளியேற்றியது வெள்ளை அரசாங்கம்.

அறவழிப்பட்டு உள்ளத்தைத் திறந்து காட்டிய வேலூர், வாலாஜாபாது வீரர்கட்கு நேர்ந்த இந்த அநீதிகளையும் அவமானங்களையும் நினைந்து சிப்பாய்கள் மனம் குமுறினார்கள். அவர்கள் உள்ளத்தில் பழிவாங்கும் உணர்ச்சி கிளர்ந்து எழுந்தது. வேலூர்க் கோட்டையில் நள்ளிரவு நேரங்களில் இரகசியக் கூட்டங்கள் நடைபெற்றன. மறைமுகமாகப் புரட்சி வேலைகள் செய்ய மன்றங்கள் நிறுவப்பட்டன. அக்கூட்டங்களிலும் ஆவேசம் மிக்க சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. அக்கூட்டங்கட்கெல்லாம் மாவீரன் திப்புவின் மக்களும் வேலூர்ப்பட்டாளத்தின் சுதேசி அதிகாரிகளுள் பெரும்பாலாரும் வந்திருந்து, 'ஒங்குக புரட்சி ! உறுக வெற்றி!' என்று ஆசி கூறினார்கள். ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சிகள் இரகசியமாகவே நிகழ்ந்தன. ஆனால், நாளடைவில் ஊர் வாயை மூடுவது அரியதாகிவிட்டது. மெல்ல மெல்ல இச்செய்தி திக்கெட்டிலும் பரவியது. இரவு நேரங்களில் ஏராளமான பல்லக்குகளில் அஞ்

அஞ்சத்தக்க போர்க் கருவிகள் கோட்டைக்குள் போய்ச் சேர்ந்தன. வழி மறித்துக், கேட்ட வாயிற் காவலர்கட்குப் பல்லக்குகளில் திப்புக் குடும்பத்தின் அந்தப்புரத்துப் பாவையர்கள் இருப்பதாகச் சொல்லிக் காரியம் எளிதில் சாதிக்கப்பட்டது. இச்செய்திகளெல்லாம் பல்வேறு வழிகளில் வெள்ளைத் துரைமார்கள் செவிகளிலும் சிறிது சிறிதாகச் சென்று சேர்ந்தன. ஆயினும், அவர்கள் கவலையற்றவர்களாய்க் குடித்துக் கூத்தாடிக் கும்மாளமிட்ட வண்ணம் இருந்தார்கள்,

திப்புவின் மகள் திருமணம் : இந்நிலையை உணர்ந்த தமிழ் வீரர்கள் புரட்சி வேலைகளைத் துணிச்சலோடு விரைந்து கடத்தி வெள்ளையரை வீழ்த்தி வேலூர்க் கோட்டையைத் தங்கள் உடைமையாக்கும் நல்ல நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அந்நிலையில் திப்புவின் மகளொருத்திக்கு 1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 9-ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு ஆயிரக்கணக்கான 'அன்பர் ’ விருந்தினராய் வந்து குழுமினர். மக்கள் உள்ளத்தில் புரட்சித்தீ மூளுவதற்கான சூழ்நிலை மிக நன்றாக உருவாகியது. அதன் பயனக மறு நாள், ஜூலை மாதம், 10-ஆம் தேதி, வியாழக்கிழமை, அதிகாலையில் பயங்கர வெடி முழக்கங்கள் விண்ணையும் மண்ணையும் அதிரச்செய்தன. ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதல் முதலாக இந்திய மண்ணில் இராணுவப் புரட்சி

வீறுடன் கிளம்பியது. புரட்சி எழுவதற்கான பல்வேறு அறிகுறிகளையும் ஆங்கிலப்படை அதிகாரிகள் அறிந்திருந்தார்கள். எனினும், ஜூலை மாதம், 9-ஆம் தேதி, வெள்ளைச் சிப்பாய்களின் தளபதிகளும் இந்தியச் சிப்பாய்களின் மத்தியிலேயே தைரியமாக உறங்கச் சென்றது அனைவருக்கும் வியப்பை அளித்தது.

மேலும், இந்நாளிலேதான் வெள்ளை அதிகாரி ஒருவன் இந்தியச்சிப்பாய் ஒருவனால் பயிற்சி புரியுமிடத்தில் பகிரங்கமாக அவமானப்படுத்தப் பட்டிருந்தான். இந்நிலையில் ஜூலை மாதம், 10-ஆம் தேதி, பொழுது விடிந்ததும் இராணுவ நாள் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் முதல் நாள் இரவே சிப்பாய்கள் அனைவரும் கோட்டைக்குள்ளே உறங்குதற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அப்பொழுதுதான் அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிக்குத் தயாராக முடியும். வேலூரிலிருந்த பட்டாளத்தின் ஒரு பிரிவில் மிக முக்கியமான புரட்சிக்காரர்கள் இருந்தார்கள். அவர்களே அன்றைய தினம் இரவு கோட்டையில் காவலாளிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள். முக்கியப் பொறுப்பிலிருந்த ஒரு முகம்மதிய அதிகாரி கோட்டையினுள்ளே இரவு காவலுக்காகத்தன் நம்பிக்கைக்குரிய ஆட்களில் எத்தனை பேர்களை நியமிக்க முடியுமோ, அத்தனை பேரையும் நியமித்தான். இன்னும் புரட்சி வேலையில் தீவிரமாக ஈடுபட்

டிருந்த அனைவரும் பல்வேறு சாக்குகளைச் சொல்லிக்கொண்டே கோட்டைக்குள்ளேயே இரவு நேரத்தைக் கழிக்க முடிவு செய்தனர்.

கோட்டைக்குள் கொந்தளிப்பு: ஜூலை மாதம், 9-ஆம் தேதி, இரவு நேரத்தை வேலூர்க் கோட்டைக்குள்ளேயே கழிப்பதில் வெற்றி கண்ட வீரச்சிப்பாய்களுள் தலை சிறந்தவர் ஜமேதார் ஷேக் காசீம் என்பவரே, கோட்டையின் தலைவாயிலில் அன்றிரவு கண்ணுறங்காது பாதுகாக்கக் கடமைப்பட்ட ஒரு வெள்ளை அதிகாரி, ஏதும் விளையாது என்னும் இறுமாப்பால், சில சொந்தக் காரணங்களை முன்னிட்டு வீட்டிற்குச் சென்று ஒய்வு கொள்ள விரும்பினான். அவன் கருத்தறிந்த ஜமேதார் ஷேக் காசீம் மெல்ல அவனை அணுகி, நயமாகவும் பணிவாகவும் பேசி, தாமே அவன் கடமையை அன்றிரவு முழுவதும் கண்ணும் கருத்துமாய்ச் செய்வதாகக் கூறி ஏற்றுக்கொண்டார். வேலூர்ப் புரட்சிக்குக் காரணமாயிருந்த சிப்பாய்களுள் மிக முக்கியமானவரான ஜமேதார் ஷேக் காசிமின் திறமைமிக்க இச்செயல், மறுநாள் மூண்ட புரட்சிக்குப் பெருந்துணை புரிந்தது விந்தையன்று அன்றோ?

1806-ஆம் ஆண்டு, ஜூலைத் திங்கள், 9-ஆம் நாள் இரவு எங்கும் ஒரே அமைதி குடி கொண்டது. மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் பல மாதங்களாகக் கனன்றுகொண்டிருந்த புரட்சி எரிமலை குபீரென வெடித்துத் தீக்குழம்பை

வாரி வீசத்தொடங்கியது. இந்திய அதிகாரிகளின் ஆணையின் பேரில் இந்திய இராணுவத்தின் ஒரு பகுதி பயிற்சிக்களத்தில் அணி வகுத்து நின்றது. குறி பார்த்துச் சுடும் பயிற்சிக்கு ரவைகள் வழங்குவது போலத் துப்பாக்கிக் குண்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே வெள்ளையர்களால் சூழப்பட்டிருந்த கோட்டையின் தலை வாயிலை நோக்கி நம் படையின் ஒரு பகுதி அரவமின்றிச் சென்றது. ஏற்கெனவே அவ்விடத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த சுதேசி சிப்பாய்களும் இப்படையினரின் வரவை எதிர் நோக்கி இருந்தார்கள். இரு படைகளும் ஒன்று சேர்ந்தன. 'டுமீல், டுமீல்' என்று துப்பாக்கிகள் வெடித்தன. குழுமியிருந்த பறங்கிக் கூட்டத்தின் குலை நடுங்கியது. புரட்சி எரிமலையின் முதல் வீச்சு இவ்வாறு தொடங்கியதும், கோட்டை எங்கும் ஒரே கொந்தளிப்பு ஏற்பட்டது. சிப்பாய் படையின் முதல் முழக்கத்தைக் கேட்டவுடன் இன்னொரு படை சுதேசி அதிகாரிகள் ஆணையைத் தலைமேல் தாங்கி, குடித்து விட்டு உறங்கிக் கிடந்த வெள்ளைப்பட்டாளத்தின்மீது பல குண்டுகளை வீசியது. அடியுண்ட அரவங்களைப்போலப் பறங்கித்துரைகள் சுருண்டு சுருண்டு நாற்காலிகட்கும் தூண்கட்கும் பின்னே ஒடி ஒளிந்தார்கள். சுதந்தர வீரர்களின் இம்முதல் வேட்டை முடிவதற்குள் தளவாடப் பேரறை உட்படக்

கோட்டையின் முக்கிய இடங்களை எல்லாம் புரட்சியாளர் கைப்பற்றிவிட்டனர். கோட்டைக்குள் இருந்த கோவிலுங்கூட அவர்கள் கையிற் சிக்கியது.

துப்பாக்கிப் போர்: விடியற்காலம் மணி மூன்றிருக்கும். சுதேசி சிப்பாய்கள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்த லெப்டினன்டு ஈவிங், காப்டன் மாக்லாகலன், தளபதிகள் மிட்சல், பேபி, ஜனேல், சார்ஜன்டு பிராடிலி, லெப்டினன்டு கட்லிப்பு, சர்ஜன் ஜோன்ஸ் என்னும் வெள்ளையர் எண்மரும் ஈவிங் இல்லத்தில் மந்திராலோசனை செய்யக் கூடினர்.கூடிய கால் மணி நேரத்தில் அவர்கள் கூடியிருந்த வீடு புரட்சிவீரர்களால் முற்றுகையிடப்பட்டது; பலமாகத் தாக்கப்பட்டது. தங்கள் இன்னுயிரைக் காக்க அவ்வெள்ளையர்கள் கை ஓயுமட்டும் விடுதலை வீரர்களைச் சுட்டுத் தீர்த்தார்கள். அப்படியும் விடுதலை வீரர்களின் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்கப் பறங்கித் துரைகளால் முடியவில்லை. எனவே, அவர்கள் அண்மையிலிருந்த ஜோன்ஸ் என்பவன் வீட்டில் ஓடி ஒளிந்தார்கள். நிகழ்ச்சிகள் இவ்வாறு ஒரு புறம் நடந்துகொண்டிருக்கப் புரட்சி வீரர்கள் கோட்டைக்கொடி மரத்தையும் கைப்பற்றினார்கள். மேலும், கோட்டைக் கொடிக் கம்பத்தில் ஆடிப்பறந்துகொண்டிருந்த யூனியன் ஜாக்கு அகற்றப்பட்டுத் திப்புவின் திருமகனால் தரப்

பட்ட இந்தியக்கொடி-மைசூர் அரண்மனைக் கொடி-பட்டொளி வீசிப்பறந்தது.

புரட்சி தொடங்கி ஐந்து மணி வரை எந்த வெள்ளையனுக்கும் வெளியே தலை நீட்டத் துணிச்சலில்லை. காலை ஏழு மணிக்கு லெப்டினன்டு மிட்சல் என்பவன் மட்டும் வேலூர்க் கோட்டையிலிருந்த படைத்தலைவர்களுள் ஒருவனாகிய பாரோ வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டான். புதிய வீட்டில் அடைக்கலம் புகுந்த துரைமார் அனைவரும் திருதிருவென விழித்துக் கொண்டு திகிலுடன் காலத்தைப் போக்கினர். காலை எட்டு மணி ஆயிற்று. துரைமார்கள் ஒளிந்திருந்த வீடு புரட்சி வீரர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டது. இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கிப் பிரயோகம் நடை பெற்றது. இந்தியச் சிப்பாய்களின் ஆற்றலுக்கு எதிர் நிற்க இயலாமல் வெள்ளைத் தளபதிகள் அனைவரும் சிப்பாய்கள் குடியிருக்கும் பகுதிக்குள் போய் மறைந்தனர். தப்பியோடிய அத்துரைமார்களை விடாது விரட்டி வேட்டையாடினர் புரட்சி வீரர். செய்வதறியாது திகைத்த சீமைத் துரைகள் தாங்கள் ஒளியச் சென்ற இடத்திற்கு எதிரே இருந்த பறைச்சேரியை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். எப்படியாவது கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்ற வேண்டுமென்பதே பறங்கிப் பட்டாளத்தின் திட்டம். ஆனால் வெள்ளைச் சிப்பாய்கள் அனைவரும் அதிகாலையில் நடைபெற்ற போராட்டத்திலேயே

திலேயே, இருந்த குண்டுகளை எல்லாம் இழந்து விட்டனர்; ஆதலின், வெறுங்கையராய்த் தவித்தனர்.

கொத்தளங்கள்: மேலும், கொத்தளத்தின் அடியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கிடங்கிலிருந்த பொருள்கள் யாவற்றையும் நம் வீரர்கள் முன்பே சூறையாடிவிட்டார்கள். இதையறிந்த துரைமார்கள் அடைந்த துக்கம் சொல்லி முடியாது. இது வரை நடைபெற்ற போராட்டத்தில் கோட்டையிலிருந்த 372 பேரைக் கொண்ட ஒரு வெள்ளைப் படைப் பிரிவில் 199 பேர் கொலை செய்யப்பட்டனர். இவற்றால் எல்லாம் மனம் உடைந்து போயிற்று பறங்கிக் கூட்டம்; எனினும், நம் சிப்பாய்களின் கடுமையான தாக்குதலையும் பொருட்படுத்தாது வெறி கொண்டு சாடிக் கொத்தளத்துச் சுவர்களின் மீது ஏறியது. இம்முயற்சியிலீடுபட்ட வெள்ளைத் தளபதி ஒருவன் நம் வீரர்களால் தொடையில் குறி பார்த்துச் சுடப்பட்டு வாழ்க்கைக்குப் பயனற்றவனாக்கப்பட்டான். கொத்தளங்களைக் கைப்பற்றிய பட்டாளம் தன்னை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு, நம் சிப்பாய்களைப் புடைக்க முந்தியது. ஒரு பிரிவு, இந்தியச் சிப்பாய்கள் நிறைந்திருந்த ஒரு கோட்டைப் பகுதியைத் தாக்குவதைக் குறியாகக் கொண்டது. இன்னெரு பிரிவு, வேலூர்க் கோட்டையின் கீழ்த்திசையிலிருந்த தலை வாயிலைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியது.

தியது. இக்கடுமுயற்சியில் ஈடுபட்ட வெள்ளைப் பட்டாளம் சுதந்தர வீரர்களால் சுட்டுப் பொசுக்கப்பட்டது. கோட்டை வாயிலை அணுகிய வெள்ளைப் படைகள் தலைவாயிற்கதவுகள் தாளிடப்பட்டுப் புரட்சி வீரர்களின் பலம் பொருந்திய பீரங்கிகளால் பாதுகாக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். ஆம், சுதந்தரச் சிப்பாய்களின் நோக்கமெல்லாம் கோட்டைக்கு வெளியே இருந்து பகைவர் யாரையும் உள்ளே வரவிடாமல் தடுப்பதும் கோட்டைக்குள்ளே இருந்த வெள்ளையரை அங்கேயே சுட்டுச் சாம்பலாக்குவதுந்தான். கோட்டைக் கதவுகளை வெள்ளைப்பட்டாளம் நெருங்காத வண்ணம் கடும்போர் புரிந்தார்கள் இந்தியச் சிப்பாய்கள். போரில் வெள்ளையர் பலர் உயிரிழந்தனர்.

கொடிப்போர் : வெள்ளைப்பட்டாளம் கோட்டையின் ஆயுதச்சாலையை அடுத்தபடியாகத் தாக்கத் துடித்தது. ஆனால், குண்டுகளை எல்லாம் இழந்து வெறுங்கையோடு நின்ற பட்டாளத்தால் ஆகும் காரியமா அது? எனவே, எப்படியாவது துப்பாக்கிக் குண்டுகள் சேமித்து வைக்கப்பெற்றிருக்கும் கொட்டிலையும் கோட்டையின் புற அரணையும் கொத்தளத்தின் ஒரு பகுதியையும் பொருட்களஞ்சியத்தையும் கைப்பற்ற முடிவு செய்தது பறங்கிப் பட்டாளம். அம்முயற்சியில் ஏகாதிபத்திய வெறியர் பலர் மாண்டு மடிந்தனர். ஒருவாறு பலத்த சேதத்திற்குப்பிறகு, எடுத்த முயற்சியில் வெற்றி

கண்ட வெள்ளைப் படையினர் கோட்டைக் கொடி மரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியக் கொடியை இறக்கப் பெருமுயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் முயற்சி படுதோல்வி அடையும் வகையில் ஆவேசப் போர் புரிந்தார்கள் இந்தியச் சிப்பாய்கள். பல மணி நேரப்போருக்குப் பின்னும் உயர்ந்த கொடி மரத்தில் ஓங்கிப்பறந்துகொண்டிருந்த இந்தியக் கொடியை இறக்க முடியாமல் அவமானம் அடைந்த பறங்கிப் பட்டாளத்தின் அடி வயிறு பகீரென, வேறோர் உண்மையும் சடுதியில் விளங்கியது. கையிலிருந்த குண்டுகளை எல்லாம் கரியாக்கித் தீர்த்துவிட்ட பின் கோட்டையிலுள்ள வெடிமருந்துக் கிடங்கையாவது கைப்பற்ற விரும்பிய வெள்ளைப் பட்டாளம் ஆத்திரம் கொண்டு அத்திக்கு நோக்கிப் பாய்ந்தது. ஆனால் மருந்துக்கிடங்கில் மருந்துக்குக்கூட மருந்தில்லாமல் ஏற்கெனவே சூறையாடி விட்டார்கள் இந்திய வீரர்கள்,

அவமானமும் ஆத்திரமும் பொறுக்க முடியாமல் கோட்டையின் தலை வாயிலை நோக்கிப் பின் வாங்கிக்கொண்டிருந்த ஆங்கிலப் படைகள் மீண்டும் ஒரு முறை ஆடிப் பறந்துகொண்டிருந்த இந்தியக் கொடியைப் பார்த்து அளவிடற்கரிய சினம் கொண்டு அதை இழுத்தெறியத் தாவிப் பாய்ந்தன. இம்முறையும் கடும் போர் நிகழ்ந்தது. பொழுது புலர்ந்தது. விடியற்காலை முதல் வெள்ளையாட்சி தான் கண்ட

இழவுகட்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் பெறும் முறையில் கொடியை இறக்கும் முயற்சியில் கடைசியில் வெற்றி கண்டது.

இவ்வாறு வேலூர்க் கோட்டையை இந்தியச் சிப்பாய்கள் பிணக்காடாக்கிக்கொண்டிருந்த நிலைமையில் மேஜர் கோட்ஸ் என்பவன் வேலூரிலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள ஆர்க்காட்டிலிருந்த கர்னல் கில்லெஸ்பிக்குச் செய்தி அனுப்பினான். செய்தி கிடைத்ததும் ஆர்க்காட்டு வெள்ளைத் தளபதியின் இரத்தம் கொதித்தது. ஒரு பெரும்படையுடன் வேலூரை நோக்கிக் காற்றாய்ப் பறந்தான் கில்லெஸ்பி. ஆர்க்காட்டிலிருந்து வந்த ஆங்கிலப்பட்டாளம் சுமார் பத்து மணிக்கு வேலூர்க்கோட்டை வாயிலை அடைந்தது. கோட்டையின் முதல் இரு கதவுகளும் திறந்தே இருந்தன. மூடிக்கிடந்த மூன்றாவது கதவையும் வெள்ளைப்பட்டாளம் பெருமுயற்சி செய்து சுதந்தர வீரர்களுடன் போராடித் திறந்தது. ஆனால், நான்காவது வாயிலிடம் வந்ததும் பறங்கிப்பட்டாளம் செயலற்று நின்றது. காரணம், கதவுகள் மூடப்பட்டிருந்ததோடு உள்ளே இருந்த நம் சிப்பாய்கள் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்த வண்ணம் இருந்ததேயாகும். எனவே, கர்னல் கில்லெஸ்பி ஆர்க்காட்டிலிருந்து பெரும்பெரும் பீரங்கிகள் வரும் வரை தவம் கிடந்தான். கடைசியாகப் பேய்வாய்ப்பீரங்கிகளும் வந்து சேர்ந்தன. கோட்டைக் கதவுகள் தகர்த்தெறியப்பட்டன

பீரங்கிப் பட்டாளம் பேய்களின் கூட்டமென உள்ளே சாடியது. அந்தோ! வேலூர்க்கோட்டை இரணக்களமாயிற்று. வெள்ளைப்பட்டாளம் வெறியாட்டம் - பேயாட்டம்-ஆடியது. கர்னல் கில்லெஸ்பி ஏகாதிபத்திய வெறியர்களுக்குத் தலைமை தாங்கினான்; எட்டுக் திசைகளிலும் பாய்ந்தான்; சுட்டான் ; சூறையாடினான் ; கொன்றான்; கொளுத்தினான். இச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் பற்றி வெள்ளையரின் நூல்களே வாய் விட்டுப் புலம்புகின்றன. புரட்சி வீரன் ஒருவனை அங்குலம் அங்குலமாகச் சிதைத்தனர். கோட்டையைக் கைப்பற்றியதும் அரண்மனையில் சரண் புகுந்திருந்த நூற்றுவருக்கு மேற்பட்ட இந்தியச் சிப்பாய்கள் வெளியே இழுத்து வரப்பெற்று, பெருஞ்சுவர் ஒன்றின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு ஒருவனும் பிழைக்கமுடியாத வகையில் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். கர்னல் கில்லெஸ்பியும் அவன் கூட்டாளிகளும் நம் வீரர்கட்கு இன்னும் எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்திருப்பார்கள். என்றாலும், எதிர் பாராத வகையில் வேலூர்க் கோட்டையிலே கிளம்பிய எரிமலைப் புரட்சியை நினைந்து நினைந்து நெஞ்சம் திடுக்குற்றுக் கையும் கருத்தும் சோர்ந்தார்கள்.

எண்ணூற்றுவர் படுகொலை : எட்டு மணி நேரம் விடுதலை வீரர்களின் பாசறையாய் விளங்கிய எழிலும் ஏற்றமும் நிறைந்த வேலூர்க்கோட்டை அரைமணிநேரத்தில் ஆங்கிலேயர் கையிற் சிக்கியது. கொள்கைக் வீரர்க்கட்கும் கொள்ளைக்

கூட்டத்திற்கும் இடையே நடந்த வீரப்போராட்டத்தில் எண்ணூற்றுவருக்கு மேற்பட்ட இந்தியச்சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வேலூரிலும் சுற்றுப்புறங்களிலும் சுதந்தரவீரர்கள் வேட்டையாடப்பட்ட சில நாட்களில் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்திருவருக்கு மேற்பட்ட சிப்பாய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளினின்றும் கைது செய்யப்பட்டார்கள். இச்சந்தர்ப்பத்தில் வேலூரிலும், திருச்சியிலும் ஒரே சமயத்தில் அறுநூற்றுவருக்கு மேற்பட்ட புரட்சி வீரர் சிறையிடப் பட்டனர். புரட்சித் தீயில் வெந்து மடிந்த வெள்ளையர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.

தோல்வி ஏன் ? வேலூர்க் கோட்டை இறுதியில் இவ்வளவு எளிதில் பிடிபட்டதற்குப் பல பொதுக் காரணங்களும், சிறப்புக் காரணங்களும் உண்டு என்பது ஆராய்ச்சியால் புலனாகிறது. வேலூர்ப் புரட்சிக்குப் பின்னே அமைந்து கிடந்த திட்டம் மிகப்பெரியது; மெய் சிலிர்க்கச் செய்வது ! புரட்சி நடந்த காலத்தில் இராணுவப் பெருந்தலைவனாய் இருந்த சர்ஜான் இராடக்கு என்பவனே இவ்வுண்மையை ஒளியாது உரைத்துள்ளான்; இணை காண முடியாத இரகசியத்துடனும் எச்சரிக்கையுடனும் வேலூர்ப்புரட்சி மிக விரிவாகத் திட்டமிடப்பட்டிருந்தது. புரட்சியின் குறிக்கோள் ஒவ்வொரு வெள்ளையனையும் கொன்று தீர்த்துவிட்டுத் திப்புவின் திருமகனை அரியணையில் அமரச் செய்

வதே. இந்நோக்குடன் தென்னகத்தில் பல்வேறு பகுதிகட்கும் அனுப்பப் பெறுவதற்குப் புரட்சிக் கடிதங்கள் தயாராய் இருந்தன. ஏன்? ஏற்கெனவே அனுப்பப்பட்டும் இருந்தன.

மேலும், பின்னாளில் புரட்சி பற்றி நடை பெற்ற விசாரணையின் விளைவாகத் திடுக்கிடும் உண்மைகள் சில வெளியாயின. அவற்றுள் சில வருமாறு : புரட்சி வீரர்கள் கோட்டையைக் கைப்பற்றிக் குறைந்தது எட்டு நாட்களேனும் தங்கள் ஆட்சியில் வைத்திருக்க வேண்டும். இடை வேளையில் திப்புவின் அரசிளங்குமரன் பத்தாயிரம் வீரர்களைப் போர்க்கருவிகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளினின்றும் திரட்ட வேண்டும். சிறப்பாக மைசூர் மக்களின் துணையை நாட வேண்டும். வேலூர்க்கோட்டையும், பேட்டையும் பிடிபட்டவுடன் இந்திய இராணுவத்தினிடையே ஏற்படக்கூடிய பேரதிர்ச்சியைப் பயன்படுத்தி ஆங்கில அதிகாரத்தைச் சீர்குலைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் திட்டமிட்ட புரட்சி வீரர்கட்கு ஏற்கெனவே இராணுவப் பயிற்சி பெற்று ஓய்வு பெற்றிருந்த பலர் துணை புரிய வாக்களித்தனர். வேலூர்க்கோட்டையை அடுத்திருந்த பேட்டை மக்களுள் பல்லாயிரவர் புரட்சி வீரர்களின் கட்டளை கிடைத்ததும் சுதந்தர தேவிக்குத் தம் தலைகளை காணிக்கையாக்கக் காத்திருந்தனர்.

குடியைக் கெடுத்த குடி! இவ்வளவு திடமிடப் பெற்றிருந்தும், புரட்சி வீரர்களின் முதல் இந்

திய இராணுவ புரட்சி தோல்வியுற்றதற்கு முக்கிய காரணங்களைச் சரித்திர ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. தோல்விக்கான முதற்காரணம், எந்த நாளில் புரட்சி நடத்தப்பெற வேண்டுமென்று திட்டமிடப் பெற்றிருந்ததோ, அந்த நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே திடீரெனப் புரட்சியை நடத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த விபத்திற்குக் காரணம் சுதந்தர வீரர்களின் பட்டாளத்திலிருந்த ஒருவன் இரவு நேரத்தில் குடிப் போதையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மைகளை எல்லாம் பிதற்றித் தீர்த்தமையே. உண்மை வெளியாகிவிட்டால், குடி மோசம் போகுமே என்று அஞ்சிய சுதந்தர வீரர்கள், அவசரக் கூட்டம் கூடி, அன்றிரவே புரட்சிக் கொடியை உயர்த்த முடிவு செய்தார்கள். ஆம்! குடியைக் கெடுத்த குடியினால் கோட்டையிலே ஜூலைமாதம் 10-ஆம் தேதி, புரட்சித் தீ மூளும் என்பதை முன் கூட்டியே அறிந்து வேலூர்ப் பேட்டை மக்கள் யாதோர் உதவியையும் செய்ய முடியாமல் போயிற்று.

தோல்விக்கு இரண்டாவது முக்கிய காரணம், புரட்சி வீரர்கட்குத் தக்க தலைவர்கள் இருந்து வழி காட்டாமையே. புரட்சி வீரர்கள் வெள்ளை அதிகாரிகளின் உயிரையும் உடைமையையும் பாழ்படுத்திவிட்டுப் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று மறைவதில் ஆத்திரம் காட்டினர்களே ஒழிய, நிலைத்து நின்று

கோட்டையைக் கைப்பற்றுவதில் போதிய கவனம் காட்டவில்லை. மூன்றாவது காரணம், எதிர்பார்த்த அளவிற்குத் திப்புவின் குமாரர்கள் துணிந்து முன்வந்து சுதந்தர வீரர்களின் அணி வகுப்பிற்குத் தலைமை தாங்கத் தயங்கினமை. நான்காவது காரணம், நினைக்குந்தோறும் நம் மனத்தில் வெட்கத்தையும் வேதனையையும் வெறுப்பையும் நெருப்பென அள்ளிக்கொட்டுவதாகும். வேலூர்ச் சிப்பாய்களில் பெரும்பாலோர்க்கு இருந்த சுதந்தர உணர்ச்சிக்கு உலை வைக்கக் கோட்டைக்குள்ளேயே சில கருங்காலிகள் இருந்தார்கள். அதைக்காட்டிலும் புரட்சியை அடக்க வெள்ளையர்க்கு உதவியாக ஆர்க்காட்டிலிருந்து வந்த இந்தியக் கூலிப்பட்டாளமே பேருதவி புரிந்தது. ஆம்! ஒரு புறம் நம்மவரின் அனுபவக் குறைவும், ஒரு சிலரின் துரோகப் புத்தியும்,-மற்றாெரு புறத்திலே அனுபவ நிறைவும், ஆயுதப் பெருக்கமும்- இவை இரண்டிற்கும் இடையே சுதந்திர வீரர்களின் ஆன்மபலம் தாற்காலிகமாகத் தோல்வியுற்றது. என்றாலும், இறுதி வெற்றி தேச பத்தர்களிடமே சரண் புகுந்தது. இந்தியநாடு இன்று சுதந்தர நாடாய் விளங்குவதே-காந்தி அடிகள் போன்ற மாண்பு மிக்க மனித குலமாணிக்கங்கள் பிறந்தமையே-இவ்வுண்மையை மெய்ப்பிக்குமன்றோ :

அடக்குமுறை: வேலூர்ப் புரட்சி கொடுமையான அடக்குமுறையால் நசுக்கப்பட்டது.

இத்தகைய புரட்சிகளின் முடிவில் உலக இயற்கைக்கு ஒப்ப இங்கும் வீரர் அமர வாழ்வு அடைந்தனர். துரோகிகள் சுகவாழ்வு பெற்றார்கள். ஆர்க்காட்டிலிருந்து பேய் போலப் பறந்து வந்து வேலூர்க்கோட்டைக் கதவுகளைத் தகர்த்து எறிந்த கில்ப்ஸிக்கு இருபத்து நாலாயிரத்து ஐந்நூறு பொற்காசுகள் பரிசாக வழங்கப் பெற்றன. சார்ஜன்டு பிராடிலிக்கு இரண்டாயிரத்து எண்ணுாறு வெண்பொற்காசுகள் பரிசளிக்கப்பட்டன. கர்னல் பான்கோர்ட்டின் மனைவிக்கும் மக்களுக்கும் உதவி நிதி அளிக்கப்பட்டது. ஆர்க்காட்டிலிருந்து வந்த பரதேசிப் பட்டாளத்திற்கு ஒரு மாதச் சம்பளம் இனாமாக அள்ளி வழங்கப்பட்டது. துரோகியாகச் செயல் புரிந்த முஸ்தாபாவுக்கு இரண்டாயிரம் வராகன்கள் பரிசாகத் தரப்பட்டன. மேலும் வாழ்நாள் முழுவதும் ஒரு சுபேதாருக்குள்ள சம்பளம் அவனுக்கு உபகாரச் சம்பளமாகத் தரப்பட்டது. மேற்குறிப்பிட்ட தனி நபர்க்கு மட்டுமேயன்றிப் புரட்சியை ஒடுக்குவதில் துணை புரிந்த படைப்பிரிவினர் பலருக்கும் மொத்தச் சலுகைகளும் காட்டப்பட்டன. துரோகிகள் வாழ்வு பெற்ற வரலாறு இதுவாக, வீரத்தியாகிகளைச் சாவும் புகழும் சேர்ந்து தழுவின. புரட்சி நடத்தியதற்காக ஆறு தேசபத்தர்களின் மார்பகங்கள் பீரங்கிகளால் பிளக்கப்பட்டன. ஐந்து பேர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டுப்பேர் தூக்கிலிடப்

பட்டனர். புரட்சி நடைபெற்ற வேலூர்க் கோட்டையின் மேற்குத் திசையிலே நாகரிகக் காட்டுமிராண்டி வெள்ளையரால் மிகக் கோரமான முறையில் நாயும், நரியும், காக்கையும், கழுகும் சான்றாக நிற்க, விடுதலை வீரர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

புரட்சியில் பங்கு கொண்ட முக்கியமான வீரர்களுட் சிலரது கதி இதுவாக, புரட்சி புரிந்த இருபடைப்பிரிவைச் சார்ந்த வீரர்கள் தொகுதியாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் பொன்னுடலை அழித்ததோடு ஆறுதல் கொள்ளாத அயல் ஆட்சி, இராணுவப் பட்டியல்களில் அவர்கள் பேரும் இல்லாதபடி அழித்து ஒழித்தது. வேலூர்ப்புரட்சி காரணமாகத் தமிழகம் எங்கணும் கைது செய்யப்பட்ட கணக்கற்ற வீரர்கள் பல மாதங்கள் வரை விசாரணையின்றிச் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதையும் செய்யப்பட்டார்கள். புரட்சியைத் தூண்டியும், அது நடைபெற்ற காலத்தில் வீரர்களுக்கு வெற்றியின்மேலிருந்த வேட்கையில் தின்பண்டங்கள் வழங்கியும், படைக்கலங்கள் தந்தும், தலை சிறந்த புரட்சியாளன் ஒருவனுக்கு வீர வாள் ஒன்றைப் பரிசாக அளித்தும், பல்வகையாலும் ஊக்கம் ஊட்டிய திப்புவின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் துண்டு துண்டாக்கவே துடித்தது ஆங்கில ஆட்சி. என்றாலும் 'இன்று கோட்டையிலே பொங்கிய தீ நாளை குடிசைகளிலெல்லாம் பொங்குமானால் என்

செய்வது " என்று எண்ணித் தயங்கியது. ஆயினும், மாவீரன் திப்புவின் மதிப்பிற்குரிய குடும்பத்தினரையும் உற்றார் உறவினர்களையும் கல்கத்தாவுக்கு அருகே கொடிய மலேரியா நோயும் காடுறை விலங்குகளும் நிறைந்த காட்டிலே ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் "வாழ்விலே சாவை"க்கான அனுப்பிவைத்தது "நாகரிக" வெள்ளை ஆட்சி ; புரட்சி வீரர்களோடு உறவு கொண்ட எவரையும் எக்காலத்திலும் இராணுவத்தில் சேர்க்கக் கூடாதென்று தடையும் விதித்தது.

இவ்வாறெல்லாம் கற்பனைக்கும் எட்டாத அடக்கு முறைகளைப் புரிந்தும் வேலூர்ப் புரட்சியின் எதிரொலிகளை வெள்ளை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாள் நடைபெற்ற பூகம்பப் புரட்சியின் வேகம் மட்டும் அடங்க அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று என்பதைச் சென்னை இராணுவ வரலாற்றையும் இம்மாநிலத்தில் கடந்த காலத்தில் ஆங்கிலேயர் ஆண்ட ஆட்சியின் வரலாற்றையும் துருவி ஆராய்வார் உணர்தல் ஒருதலை.

வேலூர்ப் புரட்சியைப்பற்றி மக்கள் மனத்தில் வெறுப்புண்டாக்கும் வகையில் எத்தனையோ கதைகளைக் கட்டிவிட்டது பறங்கி ஆட்சி. ஆனால், அவையனைத்தும் காலப்போக்கில் அப்புரட்சியின் தூய்மையையும் ஏகாதிபத்திய வெறியர்களின் பொய்யையும் காட்டவே பயன்பட்டன.

பாரி எழுதியது என்ன ? வேலூர்ப் புரட்சிக்குக் காரணம் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கண்மூடிச்செயல்களே என்பதை நாளடைவில் ஆங்கில ஆட்சியே ஒப்புக்கொண்டது. அவ்வுண்மையை இப்புரட்சி சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்த அத்தனை வெள்ளை வரலாற்று ஆசிரியர்களுமே ஒப்புக்கொண்டுள்ளார்கள். மேலும், அப்புரட்சியின் வேகத்தையும், அது வெற்றி கண்டிருந்தால் நேர்ந்திருக்கக்கூடிய விளைவுகளையும் நம்மைக்காட்டிலும் நாடாண்ட வெள்ளையரே நன்கு உணர்ந்திருந்தனர். இவ்வுண்மைக்கு உரை கல்லாய் விளங்கும் பல கூற்றுகளே ஜி. எச். ஹாட்ங்சன் என்பவர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னை மாநகரில் பெருவணிகராய்த் திகழ்ந்த தாமஸ் பாரியைப்பற்றி (சென்னை உயர்நீதி மன்றத்தின் அருகே உள்ள பாரிஸ் கார்னர் இவர் பெயரால் அமைந்ததே) விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம். அந்நூலில் ஓரிடத்தில் வேலூர்ப் புரட்சி நடைபெற்ற நான்கு நாட்கள் கழித்துத் தாமஸ் பாரி தம்முடைய வெள்ளை நண்பர் ஒருவருக்கு வரைந்த விளக்கமான கடிதம் ஒன்றில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"யாராவது இப்படிப்பட்ட அவலமான உத்தரவுகளைப் பிறப்பிப்பார்களென்று நீங்கள் கருத முடியுமோ? ஆனால் உண்மை என்னவோ

அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவற்றை இனியேனும் தொலைத்தாக வேண்டும்; ஏற்கெனவே அவை ஒழிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக் கவர்னர் பென்டிங்கு பிரபு இவ்வுத்தரவுகளை ஒழித்துக் கட்டி ஆணைகள் பிறப்பிக்குமாறு இராணுவப் பெருந்தலைவனுக்குக் கட்டளையிட்டுள்ளார். இச்செயல் இனி இத்தகைய புரட்சிகள் தோன்றாது காப்பாற்றுமென்று நம்புகிறேன். ஆனால், நாம் வேலூர்ப் புரட்சியின் போது இந்தியாவின் இப்பகுதியைத் தலை முழுகிவிடக்கூடிய நிலையிலேதான் இருந்தோம். இத்தகைய படுமோசமான உத்தரவுக்குக்குக் காரணம் மேஜர் பியர்சி என்னும் இராணுவத்தலைவன்தான் என்பது இப்பொழுது எனக்குத் தெரிகிறது."


வேலூர்ப் புரட்சி முடிவு பெற்றதும் பிரிட்டிஷ் ஆட்சி சத்திய சோதனை நடத்தித் தன்னைதான் ஆராய்ந்தது; அதன் பயனாகத் தான் செய்த தவறுகளை உணர்ந்தது. அதன் விளைவாகச் சென்னைக் கவர்னர் பென்டிங்கு பிரபுவும் இராணுவப் பெருந்தலைவனும் புரட்சிநடந்த ஓராண்டு கழித்துத் தங்கள் பதவியினின்றும் நீக்கப்பட்டார்கள். அச்சமயத்தில் தாமஸ் பாரி, தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் ஒரு முறை பின் வருமாறு குறித்துள்ளார். 'பென்டிங்கு பிரபு பதவியிழந்தமையால் பலர் வருந்தினர் என்று யான் ஒரு போதும் சொல்ல முடியாது.”

தாமஸ் பாரியைப் போன்ற நடுவு நிலைமையுள்ளம் படைத்த நல்லோராலேயே வெறுக்கப் பெற்றுக் குற்றம் சாட்டப்பட்ட பென்டிங்கு பிரபுவும் அவரது கொடுங்கோலாட்சியும் புரிந்த அநீதிகளை எதிர்த்து எழுந்த வேலூர்ப் புரட்சி மாசு மறுவற்றது; அறநெறி பிறழா அருமைப்பாடு வாய்ந்தது. இவ்வுண்மையை மெய்ப்பிக்கப் பின்வரும் ஒரு சான்றே சாலும்:

கணவரை இழந்த விதவையார் பான்கோர்ட்டு என்பவர் பின் வருமாறு எழுதியுள்ளார்: புரட்சி வீரன் ஒருவன் எங்களைக் கோழி முதலியவற்றை அடைத்து வைக்கும் பட்டிக்குள் நுழைந்துகொள்ளுமாறு பணித்தான். எல்லோர் கண்ணுக்கும் புலனாகக் கூடிய நிலையிலிருந்த எங்களை மாற்றாெண்ணாச் சினம் கொண்டிருந்த புரட்சி மறவர்களின் பார்வையினின்றும் காப்பாற்றிக்கொள்ளத் துணை புரியும் வகையில் மறைத்துக்கொள்வதற்காக அவனே ஒரு பழம்பாயைக் கொண்டு வந்து கொடுத்தான். சிறிது நேரத்தில் அவ்வீரனே என் மைந்தன் பசியைத் தீர்க்க ஒரு ரொட்டித் துண்டையும் கொண்டு வந்து கொடுத்தான்.”

இத்தகைய நேர்மை நிறைந்த நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளைக் கேட்ட கவர்னர் பென்டிங்கு பிரபுவின் மனமும் கசிந்தது. தம் கைப்பட அரசாங்க ஏடுகளில் அவர் வரைந்துள்ள குறிப்பொன்று பின் வருமாறு பேசு கின்றது. 'ஐரோப்பியர்களின் உயிரைக் காக்கச் சிப்பாய்களுள் சிலர் மிக்க கருணையோடு செய்த செயல்கள் சிலவும் புரட்சிக் காலத்தில் நடைபெற்றன.'

சற்று முன் நாம் குறிப்பிட்ட தாமஸ் பாரியைப்பற்றிய நூலில் அந்நூலாசிரியர், 'வேலூர் புரட்சியின்போது எந்தப் பெண்மணியும் அவமானம் செய்யப்படவில்லை; அதற்கு நேர் மாறாக மிகுந்த அன்புடனும் மதிப்புடனும் நடத்தப்பட்டனர்,' என்று வரைந்துள்ளார்.

வாழிய வீரம்! -இவ்வாறு தாய்க்குலத்தின் பெருமைக்கும், சேய்ச் செல்வங்களின் வாழ்விற்கும், தமிழ்க்குலத்தின் புகழிற்கும் மாசு ஏற்படாத வகையில் சாதி மத பேதங்களை எல்லாம் மறந்து தேச பத்தியே தெய்வபத்தி- தியாக உணர்ச்சியே மனிதப் பண்பாடு - என்று மனத்தில் கொண்டு அயல் ஆட்சியை எதிர்த்துக் களம் புகுந்து போர் புரிந்து பீரங்கிகளால் பிளக்கப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் சிறைச் சாலைகளில் குற்றுயிராக்கப்பட்டும் வீரமரணம் அடைந்த பேர் ஊர் தெரியாத வேலூர்ப்புரட்சி வீரர்கட்குத் தமிழகமே! நீ எவ்வாறு நன்றி காட்டப் போகின்றாய்? இந்நாள் வரை அவர்கள் புனித வரலாற்றை அறிந்துகொள்ளவும் மறந்திருந்த நீ, இனியேனும் விழித்தெழுந்து இனமானத்தோடும் இந்திய தேசிய உணர்ச்சியோடும் மாண்டு மறைந்த மாவீரர்கட்கு வேலூரில் வெற்றித் தூண் எழுப்பி வீர வழிபாடு

செய்வாயோ? தமிழ்க்குலமே! இனவழிப்பட்ட தேசிய உணர்ச்சிக்கு என்றென்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்த் திகழும் வங்க நாட்டு அறிஞர் ஒருவர் நம் தமிழ்த் திருநாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப் பெற வேண்டிய வேலூர்ப் புரட்சி பற்றி விளம்பியுள்ள மணிவாசகம் இதோ:

"வேலூர்ப் புரட்சி இந்தியச்சிப்பாய்களின் பெரும்புரட்சியைப் போல ஒர் இலட்சுமி பாயையோ அசிமுல்லா கானையோ அறிமுகப் படுத்தவில்லை. ஆனால், இதனால் அதன்பெருமை எவ்வகையிலும் குறையுடையதன்று. அப்புரட்சியில் பங்கு கொண்ட, பேரும் வேண்டாத் தன்னலமற்ற அத்தியாகிகளே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன்முதல் இராணுவப் புரட்சி புரிய வழி காட்டிய வல்லாளர்கள். பெருமை மிக்க அவர்களுடைய திருமரபைப் பின்பற்றியே பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதந்தரத்தைப் பெற்றுள்ளார்கள். விடுதலை பெற்ற இந்தியா அவர்களை என்றும் மறவாது போற்றித் தன் வீர வணக்கங்களை நன்றியுடன் நாளும் உரிமையாக்கும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=1806/1._வேலூர்ப்_புரட்சி&oldid=1067001" இலிருந்து மீள்விக்கப்பட்டது