Siva Temple Architecture etc./கோட்டைகளாக

சில சிவாலயங்கள் கோட்டைகளாக
உபயோகிக்கப்பட்டன

விஜய நகரக்தரசர்கள் காலம் முதல், சில சிவாலயங்கள், யுத்த காலத்திலும் ஆபத்காலத்திலும் கோட்டைகளாக உபயோகிக்கப்பட்டு வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை. இதற்காகவே அவர்கள் பெரிய கோயில்களிலெல்லாம் உயர்ந்த மதிற்சவர்கள் எழுப்பினார்கள்; அன்றியும் அவர்கள் கட்டிய பெரிய கோபுரங்கள், உச்சமான நிலையிலிருந்து எதிரிகள் தூரத்தில் வருவதை கவனிக்கவே இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி யாளர்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. பெரிய சிவாலயங்களில் வெளி கோபுர வாயில்களின் கதவுகளில் கூர்மையான பெரிய இரும்பு ஆணிகள் அமைத்ததும், எதிரிகள் யானை முதலிய படைகளைக்கொண்டு இவைகளை எளிதில் பெயர்க்க முடியா வண்ணம் இருக்கவேண்டு மென்னும் எண்ணத்துடனேயாம். பல ஊரிலிள்ள ஜனங்களில் பெரும்பாலர், மகம்மதியர் முதலிய பகைவர் படை யெடுத்துவந்த போது, கோயில்களுக்குள் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்த்தார்கள் என்பது சரித்திரமறிந்த விஷயம்; ஐதர்கலாபனை காலத்தில் இது பன்முறை நடந்திருக்கிறது. ஐதர் காஞ்சிபுரத்து பெரிய சிவாலயத்தை பன்முறை தாக்கியதாகத் தெரிகிறது; அவனது பீரங்கி குண்டுகளினால் உண்டாய வடுக்களை சிவாலயத்தில் சில இடங்களில் இன்னும் காணலாம். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலை பிரஞ்சுக்காரர்கள் கோட்டையாக உபயோகித்ததாக நாம் சரித்திர மூலமாக அறிகிறோம். சென்னை ராஜதானியில் செஞ்சிக் கோட்டைக்கும் போகும் வழியிலுள்ள பெருமுக்கலில் இருக்கும் சிவாலயம், ஒரு கோட்டையாகச் சில காலம் பாவிக்கப்பட்ட தென்பது திண்ணம்; எதிரிகளின் குண்டு வீச்சினால் கோயில் பல இடங்களில் இருந்திருப்பதை இன்னும் காணலாம். சென்னைக் கடுத்த திருவொற்றியூர் கோயிலின் பழய உட்பிராகாரத்தின் மதில் சுவரை, பிறகு விஜய நகரத்தரசர்கள் அரணுக்காக உயர்த்தியிருப்பதைக் காணவும். சென்னை ராஜதானியில் சில இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு அடிமட்டத்துடன், பூர்த்தியாகாமல் விடப்பட்டிருக்கும், “ராயகோபுரங்கள்" என்று தற்காலம் அழைக்கப்படும் விஜய நகரக கட்டிடங்கள், அதிக உயரமாகக் கட்டப்பட்டு அவைகளின் உச்சியிலிருந்து பகைவர் தூரத்தில் வரும்பொழுதே கண்டுபிடிக்க உபயோகப் படத்தக்கவைகளாய் ஆரம்பித்திருக்க வேண்டுமென்று எண்ண இடமுண்டு. விஜய நகரராஜ்யம் தலைக்கோட்டை யுத்தத்தில் அழிந்த போது இவைகளைப் பூர்த்திசெய்யாமல் விட்டு விட்டனர். இவைகளைக் கட்டும்போது எதோ கருங்கல்லிற்குள் தேரை யொன்று அகபட்டது, ஆகவே அவைகள் அப்படியே முடிக்கப்படாமல் விடப்பட்டன, என்பது கட்டுக்கதையாம்.



R. v. Press, Madras. Q.H.M.S. 16A. C. 500

"https://ta.wikisource.org/w/index.php?title=Siva_Temple_Architecture_etc./கோட்டைகளாக&oldid=1294719" இலிருந்து மீள்விக்கப்பட்டது