Siva Temple Architecture etc./சிவாலய அமைப்பு

சிவாலய அமைப்பு

இந்துக்களுடைய ஆலயங்களின் முக்கிய பாகம் கர்ப்பக்கிரஹமாம்; பெயருக்கேற்ற்படி. இதன் மத்தியில், ஆராதிக்கப்படும் தெய்வம் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கர்ப்பக்கிரஹம் இரண்டுவகைத்தாகும்; ஒன்று வட்டாகாரமானது மற்றொன்று சதுராகாரமானது. வட்டாகாரமான கர்ப்பக்கிரஹத்திற்கு கஜப்பிருஷ்ட ஆகிருதி உடையதெனப் பெயர் ; அதாவது யானையின் முதுகைப்போன்ற உருவத்தை உடையதென்று பொருள்படும். இந்த கஜப் பிருஷ்ட கர்ப்பக்கிரஹங்கள் பௌத்த சைத்தியங்களைப் பார்த்து கட்டப்பட்டனவென்று பெர்கூசன் துரை (Ferguson) எண்ணுகிறார், சதுராகாரமான கர்ப்பக்கிரஹங்கள் பெளத்த விகாரங்களைப்போல் கட்டப்பட்டவைகளாம். ஹிந்து ஆலயங்களில் கர்ப்பக் கிரஹத்திற்குமேல், விமானங்கள் அமைக்கப்பட்டிருக்கும். திராவிட சில்ப விமானங்கள் எல்லாம், பல மாடிகள் அல்லது அடுக்குகளுடைய பௌத்த விஹாரங்களைப்போல் கட்டப்பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. இந்த மாடிகள் அல்லது நிலைகள், வரவர குறுகிக்கொண்டுபோய் கடைசியில் சிகரத்தில் முடிகின்றன. திராவிட சில்ப சிகரங்கள் எல்லாம் கலசம் போன்றவை. கர்ப்பக் கிரஹத்திற்கு எதிரில் சாதாரணமாக மண்டபம் உண்டு. ஆதியில் ஒரே மண்டபம்தானிருந்தது; பிறகு மண்டபத்திற்கு முன்பாக பெரிய மண்டபம் கட்டப்பட்டது ; முன் மண்டபத்திற்கு அர்த்தமண்டபம் என்று பெயர் வழங்கலாயிற்று. கர்ப்பக்கிரஹத்திற்கும் அர்த்தமண்டபத்திற்கும் உள்ள இடைவழி அந்தராளம் என அழைக்கப்பட்டது.

கர்ப்பக்கிரஹத்திற்கு எதிரில் பலிபீடம் அமைக்கப்பட்டது. பலிபீடம் பௌத்த ஸ்தூபத்தைப்போல் கட்டப்பட்டது என எண்ண இடமுண்டு. இதற்கு முன்பாக நமது ஆலயங்களில் துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கும்; திராவிட சில்ப ஆலயத்தில் இது ஒரு முக்கிய பாகமாம். உன்னதமான இந்த ஸ்தம்பங்களில் கொடிகளைக் கட்டி, உற்சவ காலத்தை எல்லோருக்கும் அறிவிப்பது பூர்வீக திராவிட வழக்கமாம். இதைப்பற்றி பழய தமிழ் நூல்களில் இந்திர விழா முதலிய உற்சவ காலங்களில் இந்திர துவஜம் நாட்டப்பட்டதைக்குறித்து வர்ணித்திருப்பதை கவனிக்கவும், உற்சவ முடிவில் இந்த கம்பங்கள் வீழ்த்தப்பட்டன. தற்காலத்திலும் நமது ஆலயங்களில் திருவிழாக் காலத்தில் துவஜாரோஹணம், துவது அவரோஹனம் என்னும் கிரியைகள் நடப்பதைக் கவனிக்கவும். சில கோயில்களில் இந்த துவஜஸ்தம்பத்திற்கு அருகில் அல்லது அது இருக்கவேண்டிய இடத்தில், தீபஸ்தம்பங்கள் இருப்பதைக் காணலாம். இது ஜைன ஆலய வழக்கக்தின் முறையை அனுசரித்த வழக்கம் என்று எண்ணப்படுகிறது.

பழய ஆலயங்களிலெல்லாம் ஒரே மதில் சுவர்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆகவே ஒரே பிராகாரம்தானிருந்தது. பிறகு பல பிராகாரங்கள் சேர்க்கப்பட்டன. அன்றியும் பிராகார வாயில்களில் பெரிய கோபுரங்கள் கட்ட ஆரம்பித்தார்கள். இக் கோபுரங்கள், பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட மாமல்ல புரத்திலுள்ள (மாபலிபுரம்) பீமன் ரதம் என்று வழங்கப்படுகிற கோயிலின் ஆகாரத்திலிருந்து உண்டானவைகள் என்று பெர்கூசன் துரை அபிப்பிராயப்படுகிறார். இந்த பீமன் ரதத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், மற்ற விமானங்கள் ஏறக் குறைய சதுரமாயிருப்பது போலல்லாமல், இது நிகளத்தில் அதிகமானது ; இது 48 அடி நிகளம் 25 அடி அகலமுடையது. இப்படிப்பட்ட கட்டிடங்களின்மீது ஒன்றின்மீதொன்று அடுக்கிக் கட்டினால் தற்கால கோபுரமாகிறது. கோபுரங்களின் அடுக்குகளுக்கு நிலைகள் என்று பெயர். பிற்காலத்தில் கட்டப்பட்ட பல கோபுரங்கள் 9 அல்லது 11 நிலைகளை உடையனவாயிருக்கின்றன. எல்லாக் கோபுரங்களிலும் நிலைகள் சிற்ப சாஸ்திரப்படி, 1, 3, 5 முதலிய ஒற்றைப்படையா யிருக்கவேண்டும். இக்கோபுரங்களுக்கு மேல், கோபுரத்தில் எத்தனை நிலைகள் இருக்கின்றனவோ, அத்தனை ஸ்தூபிக் கலசங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். கோபுரம் 11 நிலையுடையதா யிருந்தால் 11 கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும், 5 நிலை யுடையதாயிருந்தால் 5 கலசங்கள் உடையதாயிருக்கும். மற்றவைகளுக்கும் இப்படியே இருக்கவேண்டும்.

பிற்காலத்தில் நமது ஆலயங்களில் பிராகாரங்களில் பல மண்டபங்கள் சேர்க்கப்பட்டன். சிற்ப சாஸ்திரங்களின்படி ஏறக்குறைய 108 மண்டபங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன ; இவைகளின் பெயர்களையெல்லாம் இங்கு குறிப்பதற்கு இடமில்லை. இவற்றுள் சில நூற்றுக்கால் மண்டபம் ஆயிரக்கால் மண்டபம் என்பதை மாத்திரம் குறிக்கிறேன்.

கடைசியாக, உற்சவ மூர்த்திகள், அமைக்கப்பட்ட பிறகு, பெரிய கோபுரங்களுக்கெதிரில், நான்கு அல்லது பதினாறுகால் மண்டபங்கள் கட்டப்பட்டன. பதினாறுகால் மண்டபத்தருகில் ரதோற்சவ காலத்தில் ஸ்வாமி ரதத்தில் ஆரோஹிணப்பதற்காக தேர்முட்டிகள் என்று சொல்லப் பட்ட தேர் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

ஆதிகாலத்திலேயே ஒவ்வொரு கோயிலுக்கும் எதிரில் பெரிய குளம் வெட்டப்பட்டது. சில பெரிய கோயில்களில் உள்ளேயும் குளங்கள் வெட்டப்பட்டன. இவைகள் பக்தர்கள் கோயிலுக்குள் போகுமுன் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு போகவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்குச் சந்தேகமில்லை. திராவிட கோயில் சில்ப விதிப்படி இக்குளங்கள் முக்கியமான அம்சங்களாகும்.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்றொரு விஷயம் என்னவென்றால், சிவாலயங்களில் அம்மனுக்குப் பிரத்தியேகமான கோயில் கட்டப்பட்டது பிற்காலத்தில் என்பதேயாம் ; பல்லவ சில்ப கோயில்களில் அம்மன் அல்லது தேவிக்கு வேறு கர்ப்பக்கிரஹகம் கிடையாது ; தற்காலம் அம்மனுக்கு கோயிலில்லாத சிவாலயமே கிடையாதென்று கூறலாம். இவைகளெல்லாம் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. மிகவும் பூர்வீக சிவாலயங்களில், கணநாதருக்கும், சுப்பிரமணியருக்கும் பிரத்தியேகமான சங்நிதிகள் கிடையா; அவைகளெல்லாம் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. இச்சந்தர்ப்பத்தில் பூர்வீக திராவிடர்களுக்கு லிங்க பூஜைதான் பிரதானமாயிருந்தது; பிறகுதான் சக்தி அல்லது தேவி அல்லது அம்மன் பூஜை அதனுடன் சேர்க்கப்பட்டது, என்பது கவனிக்கத்தக்கது.

மிகவும் புராதனமான பல்லவக்குகைக் கோயில்களிலும், கட்டிடக் கோயில்களிலும், கர்ப்பக் கிரஹத்தின் உட்புறச் சுவரில் சோமாஸ்கந்த மூர்த்தி செதுக்கப்பட்டிருந்தது; லிங்கமானது அதற்குமுன் வைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு முன்பு கூறியபடி பிரத்யேகமான அறை கிடையாது ; இதற்கு உதாரணமாக மாபலிபுரத்திலிருக்கும் சில கோயில்களைக் கூறலாம். இங்கு சில இடங்களில் கஜலட்சுமியின் உருவம் வெட்டப்பட்டிருக்கிறது உண்மையே; நாம் குறிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பிற்காலத்திய சிவாலயங்களில் பரமசிவத்தின் சக்தி ஸ்வரூபமாகிய பார்வதி தேவிக்கு, கோயில்கள் தற்காலம் பிரத்யேகமாயிருப்பதுபோல், ஆதிகாலக் கோயில்களில் இல்லை என்பதேயாம். சிவாலயங்களில் ஒரே மூலஸ்தானம் தான் இருந்தது; ஸ்வாமிக்கும் அம்மனுக்கு இரண்டு மூலஸ்தானங்கள் கிடையாது. இதற்கு உதாரணமாக, மகாபலிபுரக் கரைக்கோயில், மேலகிட்டி சிவாலயம், பத்ததாக்கலிலுள்ள விருபாட்சர் கோயில், சங்கமேஷ்வர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், முதலியவற்றைக் கூறலாம். மேற்சொன்ன கோயில்களில் ஒன்றாகிய விரூபாட்சர் கோயிலானது, லோகமாதேவி, என்னும் ஓர் அரசியால் கட்டப்பட்டபோதிலும், அதில் அம்மன் சந்நிதி பிரத்தியேகமாயில்லை யென்பது முக்கியமாய்க் கவனிக்கத்தக்கது. மைசூர் ராஜ்யத்தில் ஹலபேட் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்தில் இரண்டு சிவ சந்நிதிகளுள; ஒரு ஸ்வாமிக்கு ஹொய்சர லேஸ்வரரென்றும், மற்றொன்றிற்கு சாந்தாளேஸ்வரர் என்றும் பெயர் ; இரண்டும் சிவ சந்நிதிகளே, அம்மனுக்கு இக்கோயிலில் பிரத்யேகமாக சந்நிதி கிடையாது. இங்கும் சாந்தாளேஸ்வார் சந்நிதி சாந்தாதேவி எனும் அரசியால் கட்டப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

அன்றியும் பூர்வீக சோழ கட்டிட சிவாலயங்களிலும் ஆதியில் அம்மனுக்கும் பிரத்யேகமாக மூலஸ்தானம் கட்டப்படவில்லையெனத் தெரிகிறது. இதற்கு உதாரணமாக, ஸ்ரீ காஞ்சீபுர ஏகாம்பரநாதர் கோயிலைக் கூறலாம்; காஞ்சீபுரம் இந்தியாவில் வெகுகாலத்திற்கு முன்பே பிரசித்திபெற்ற 'சப்த புரிகளி லொன்றாம். அங்கு சிவாலயங்கள் ஆதிகாலத்திலேயே இருந்திருக்கவேண்டும்; அப்படி யிருந்தும், ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு மூலஸ்தானக் கோயில் கிடையாது; காமாட்சி அம்மனுக்கு உற்சவ விக்ரஹம் இருக்கிறது; மூல விக்ரஹம் கிடையாது. இவ்வூரிலுள்ள பழய கோயில்களாகிய, ஐராவதேஸ்வரர் கோயில், மாதங்கேஸ்வரர் கோயில், முக்தீஸ்வரர் கோயில், முதலியவற்றுள், அம்மன் சந்நிதிக்கு இடம் வேறாக ஏற்படுத்தப்படவில்லை. திருக்கழுக்குன்றத்து, மலைமீதிருக்கும் வேதகிரீஸ்வருக்கு, அம்மன் சந்நிதி அங்கு கிடையாது என்பதையும் நோக்கவும்.

சில பூர்வீக சோழ சிவாலயங்களில் ஆதியில் நிர்மானிக்கப்பட்டபோது அம்மன் சந்நிதியே யில்லாது, பிறகு கட்டப்பட்டிருக்கின்றது. இதற்கு சில உதாரணங்கள் (1) சுமார் 1012௵ கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலில், பிறகுதான் அம்மன் சந்நிதி கட்டப்பட்டது. (2) சிதம்பரத்திலும் தற்காலத்திய அம்மன் சந்நிதி பிறகுதான் கட்டப்பட்டதாம். (3) சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரிலும் அப்படியே. மேற்கூறிய கோயில்களில் ஸ்வாமி கர்ப்பக்கிரஹத்தின் சில்பத்தையும் அம்மன் சந்நிதி சில்பத்தையும் ஆராய்ந்து பார்த்தால் இது நன்கு விளங்கும்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சிவாலயங்களிலெல்லாம் அம்மனுக்குப் பிரத்யேகமாக ஆலயமில்லாத கோயிலே கிடையாது என்று கூறலாம். இக்காலத்திய சிவாலயங்களிளெல்லாம் ஸ்வாமி சந்நிதி கிழக்குப் பார்த்ததாயும் அம்மன் சந்நிதி தெற்கு பார்த்ததாயும் இருக்கும். இப்படிக்கில்லா விட்டால், இதற்கு ஏதாவது காரணம் நாம் சாதாரணமாகக் கூற முடியும். இதற்கு ஒரு உதாரணமாக, பூர்வீக கோயில் அழிக்கப்பட்டு, சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட திருமயிலை கபாலீஸ்வரர் கோயிலைக் கூறலாம். இங்கு ஸ்வாமி சந்நிதி மேற்கு பார்த்ததா யிருப்பதை கவனிக்க.

சில பெரிய சிவாலயங்களில் ஸ்வாமி சந்நிதியும் அம்மன் சந்நிதியும் அக்கம்பக்கமாய், அதாவது இரண்டும் ஒரே திக்கு நோக்கியவைகளாய்க் கட்டப்பட்டிருக்கினறன. மதுரை, திருவாரூர், ராமேஸ்வரம் முதலிய ஸ்தலங்களில் இப்படித்தானிருக்கிறது.

வட இந்தியாவிலுள்ள சிவாலயங்களில், அம்மனுக்குப் பெரும்பாலும் சந்நிதியே கிடையாது என்று கூறலாம்: காளி, துர்க்கை, கோயில்கள் பல இருந்தபோதிலும் சிவாலயங்களில் அம்மன், சந்நிதி கிடையாது. மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வேஸ்வரர் கோயிலும் விசாலாட்சி சந்நிதி கிடையாது; அது வேறோர் இடத்தில் தனியாக சிவபக்தர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆதி சிவாலயங்களில் சுப்பிரமண்ய ஸ்வாமிக்குப் பிரத்யேகமாக சந்நிதி ஏற்பட்டதும் பிறகுதான் என்று கூற வேண்டும். முன்பு கூறியபடி பழய பல்லவ சிவாலயங்களில் சொமாஸ்கந்த விக்ரஹத்தில் நடுவில் பாலசுப்பிர்மணியர் சிறு உருவத்தில் இருக்கிறார் ; இதைத் தவிர்த்து சுப்பிரமணியருக்கு பிரத்யேக கோயில் கிடையாது ; மேற்கூறிய பழய பல்லவ சிவாலயங்களை உற்று நோக்குக. பதினோராம் நூற்றாண்டின் முன் பகுதியில் கட்டப்பட்ட தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலிலும், ஆதியில் சுப்பிரமணியருக்கு ஆலயம் கட்டப்படவில்லை. தற்காலமிருக்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைப்பற்றி, பெர்கூசன்துரை அடியிற் கண்டவாறு எழுதுகிறார், "இக்கோயில் தற்காலத்தில், தென் இந்தியாவிலுள்ள ஆலயங்களில் மிகவும் அழகிய சில்பமமைத்ததெனக் கூறலாம் ; இது பெரிய கோயில் (பிரஹதீஸ்வரர் கோயில்) கட்டப்பட்ட பிறகு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கப்பால் கட்டப்பட்டது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்டவை நீங்கலாக, பூர்வீக சிவாலயங்களை ஆராய்ந்து பார்த்தால், அவைகளில் ஏறக்குறைய எல்லாவற்றிலும் சுப்பிரமணியருக்குப் பிரத்யேக சந்நிதி பிற் காலம்தான் கட்டப்பட்டதென்பது நன்கு விளங்கும்.

சிவாலயங்களில் விக்னேஸ்வரருக்கும் பிரத்யேக சிறு ஆலயம் கட்டப்பட்டதும் பிற்காலத்திய பழக்கமாம். ஆதி காலத்தில் அவ்வாறில்லையென்றே கூறலாம். தற்காலத்தில் பிள்ளையாருக்கு பெரிய ஸ்தலங்களில் நூற்க்கணக்கான சிறு கோயில்களைக் காணலாம்; ஆயினும் ஆதி காலத்தில் ஒரு விக்னேஸ்வர ஆலயமாவது கிடைக்காது. இச்சந்தர்ப்பத்தில், மஹாபலிபுரத்திலுள்ள தற்காலம் கணேசர் ரதம் என்று அழைக்கப்படும் கோயிலில் தற்காலம் ஒரு புதிய கணநாதரை வைத்திருக்கிறார்கள். இது ஆதியில் சிவாலயமாகத்தான் கட்டப்பட்டது. இதற்கு, அத்தாட்சி அங்கிருக்கும் கல்வெட்டேயாம். அதில் "இக் கோயில் ஏழாவது நூற்றாண்டில், அத்யாங்க காமரண ஜெயன் எனும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட சிவாலயம்" என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்த பழய லிங்கமானது ஓர் ஐரோப்பியரால் இங்கிலாண்டுக்குக் கொண்டுபோகப் பட்டதென்றும் அறிகிறோம்; அதன்பின் காலியாயிருந்த இடத்தில் விநாயகரது சிலை அமைக்கப்பட்டிருக்கிறது மொத்தத்தில் பூர்வீக பல்லவ சிவாலயங்களில் விக்னேஸ்வரர் சிலையே கிடையாது எனச்சொல்லலாம்.

தற்காலத்திய எல்லாச் சிவாலயங்களிலும் ஸ்வாமி கர்ப்ப்க் கிரஹத்திற்கு அருகாமையில், வெளியில் வடக்குப் பாரிசம் சண்டேஸ்வரருக்கு சிறு கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதை இதை வாசித்கும் சிவ நேயர்கள் அனைவரும் அறிவார்கள். இதுவும் பிற்காலம் வந்த வழக்கமாம். பல்லவர்கள் காலத்தில் கட்டிய சிவாலயங்களில் சண்டேஸ்வர மூர்த்தியே கிடையாதென்னலாம்; அப்படி ஏதாவது ஏகதேசமாயிருந்தாலும், அவருக்குப் பிரத்யேகமாக சந்நிதி கிடையாது என்று கூறலாம்.

இங்ஙனமே, நடராஜப் பெருமாலுக்கும், தியாகேசப் பெருமானுக்கும் பிரத்யேக சந்நிதிகள் பிற்காலத்தில்தான் உண்டானவை என்று கூற இடமுண்டு.

இனி, தற்காலத்தில் கட்டப்படும் சிவாலயங்களின் சில்ப முறையை கவனிப்போம். தற்கால சிவாலயங்களெல்லாம் கிழக்கு நோக்கியவைகளாயிருக்கும் ; இது சில்ப சாஸ்திர்த்திலும் சைவாகமங்களிலும் குறித்த முறையாம். அப்படி யில்லாது வேறு எத்திக்கையாவது நோக்கியிருந்தால் அதற்கு ஏதாவது அவசியமான காரணம் இருக்கவேண்டும். சிவாலயத்தின் முக்கிய வாயிலுக்கு எதிராக, பெரிய கோயில்களில் 16 கால் மண்டபமும் சிறிய கோயில்களில் 4 கால் மண்டபமும் அமைத்திருக்கும். இது முக்கியமாக ஸ்வாமியின் திருவிழாக் காலத்தில் தீபாராதனைக்காக ஸ்வாமி தங்குவதற்காகக் கட்டப்பட்டதாம். இதற்கு உதாரணமாக பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பர நாதர் கோயில் தெற்கு கோபுரத்திற்கெதிரிலுள்ள 16 கால் மண்டபத்தைக் கூறலாம். கோயிலின் கிழக்கு வாயிலின் பேரில், சாதாரணமாக பெரிய கோபுரமிருக்கும். பெரிய கோயில்களில் நான்கு வாயில்களிலும், நான்கு கோபுரங்கள் இருக்கும்; உதாரணமாக சிதம்பரத்திலுள்ள நான்கு கோபுரங்களையும் கூறலாம். சில கோயில்களில் இரண்டு கோபுரங்கள்தானுண்டு; இன்னும் சில கோயில்களில் ஒரே கோபுரமுண்டு. கிழக்கு கோபுரவாயிலின் மூலமாக உள்ளே நுழைந்தால், ஒரே பிரகாரமுடைய கோயில்களில், வாயிலுக்கு நேராக் துவஜஸ்தம் இருக்கும்; அதற்குப் பின்னால் பலிபீடம், இவ்விரண்டிற்கும் பின்னல் மகாமண்டபத்தில் ஒரு சிறு மண்டபத்தில் நந்திதேவர் இருப்பார் ; சில சிறு கோயில்களில் நந்திக்கு மண்டப மில்லாதிருக்கலாம். கோயிலுக்குள் புகுந்தவுடன் வலதுபுறமிருந்து இடது புறமாக (பிரதட்சணமாக) சுற்றிவர வேண்டுமென்பது சிவனடியார்கள் அனைவரும் அறிந்த விஷயமே. அப்படி சுற்றிவரும் போது தென்கிழக்கு மூலையில், (அதாவது அக்னி மூலையில்) சில்ப நூலின்படி மடப்பள்ளி கட்டப்பட்டிருக்கும். சாதாரணமாக பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் வினாயகருடைய கோயிலும், வடமேற்கு மூலையில் சுப்பிரமணியருடைய கோயிலும் இருக்கும். இதற்குக் காரணம் கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் முதலில் வினாயகரையும், பிறகு சுப்பிரமணியரையும் தொழுதுவிட்டு, பிறகே சிவ சந்நிதிக்கும் போகவேண்டு மென்பதாம். பிராகாரத்தின் வட கிழக்கு மூலையில் யாகசாலை மண்டபம் இருக்கும், இது உற்சவ காலங்களில் ஸ்வாமி உள் பிராகாரம் சுற்றிவந்தவுடன், வாஹனத்தின்மீது ஆரோகணிக்குமுன் யாகசாலையில் தீபாராதனையும் ரட்சையும் பெறவேண்டுமெனும் ஆகம விதிக்காகும். முன்னால் குறித்தபடி நடுவில் ஸ்வாமியின் கர்ப்பக்கிரஹமிருக்கும் ; இதற்கு வெளியில் தென்முகமாக அம்மன் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். நந்தி மண்டபத்தின்பின் அர்த்த மண்டபமும், அதற்கும்பின் அந்தரானமுமிருக்கும் ; கடைசியாக மூலஸ்தானம், இந்த மூலஸ்தானத்தின்பேரில் முன்பு கூறியபடி கோயிலின் முக்கிய விமானமிருக்கும். விமானத்தின் உச்சியில் பெரிய கோயில்களில் எல்லாம் தங்கக் கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.

சில்ப சாஸ்திரப்படி கர்ப்பக்கிரஹங்கள் நான்குவகைப்பட்டன. (1) சமசதுராஸ்ர விமானம் (Square) (2) விருத்த விமானம் (Circular) (3) ஆய தாஸ்ர விமானம் (Rectangular) (4) விருத்தாயத விமானம் (Oval) தற்காலத்திய கோயில்கள், ஏறக்குறைய எல்லாம், சதுரமான கர்ப்பக் கிரஹங்களும் விமானங்களும் உடையனவாயிருக்கின்றன.

கர்ப்பக்கிரஹத்திற்கு ஒரே வாயில்தா னிருக்கும், அதற்கிருபுரமும் துவாரபாலகர்கள் இருக்கவேண்டியது விதி. கர்ப்பக்கிரஹத்தின் தென்பாரிசத்தில் தட்சிணாமூர்த்தியின் உருவமும்; மேற்கு பக்கம் லிங்கோற்பவரும், வடக்குபுறம் காளியின் உருவமும் சாதாரணமாக அமைக்கப்பட்டிருக்கும்; சில கோயில்களில் காளிக்கு பதிலாக மஹாவிஷ்ணுவாவது அல்லது பிரம்மாவாவது அமைக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்கிரஹத்திற்கு வெளியில் வடக்குப் பக்கம் சண்டேஸ்வரர் சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். கர்ப்பக்கிரஹத்தின் வடக்குப்பக்கம், அபிஷேக தீர்த்தம் வெளியே போவதற்காக கோமுகம் அமைக்கப்பட்டிருக்கும்.

சில பெரிய கோயில்களில் ஐந்து பிராகாரங்கள் உண்டு அப்படிப்பட்ட கோயில்களில் ஒவ்வொரு பிராகாரத்திற்கும் கோபுரங்கள் இருக்கலாம். பெரிய கோயில்களில் வாகன மண்டபம் கடைசி வெளிப்பிராகாரத்தில் கட்டப்பட்டிருக்கும்; அன்றியும் உற்சவமூர்த்தியின் வாகனங்களை வைப்பதற்காக வெளிப்பிராகாரத்தில் சிறு அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். உற்சவமூர்த்தியும் அறுபத்து மூவர் முதலியவர்களுடைய விக்ரஹங்களும் கோயிலின் உட்பிராகாரத்தில் வைக்க இடம் ஏற்பாடு செய்திருக்கும்.

பெரிய கோயில்களில் சூரியன், சந்திரன், பைரவர், மஹாலட்சுமி, சரஸ்வதி முதலிய பரிவார தேவதைகளுக்கும் இடம் உண்டு.

என் அபிப்பிராயம், இடைக்காலத்து பெரிய சிவாலயங்களில் மஹாவிஷ்ணுவுக்கு பிரத்யேகமாக சந்நிதி யிருந்ததென்பதாம்; அவற்றுள் சில பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. ஆயினும் சில சிவாலயங்களில் தற்காலமும் விஷ்ணு சந்நிதிகள் உண்டென்பதை இதை வாசிக்கும் சிவநேயர்கள் ஒப்புக்கொள்வார்கள். இதற்கு உதாரணமாக பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதியையும், சிதம்பரம் நடராஜர் கோயிலில், கோவிந்தராஜர் சந்நிதியையும் கூறலாம். மதுராபுரியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலிருந்த பெருமாள் சந்நிதியும், திருவையாற்றில் பஞ்சனதேஸ்வரர் கோயிலிலிருந்த பெருமாள் சந்நிதியும் அப்புறப்படுத்தப்பட்டனவென்பது சரித்திரமறிந்த விஷயமே.

தென் இந்தியாவில் பல சிவாலயங்களில் கள்ள அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன வென்பது பலர் அறிந்த விஷயமே; இந்த இரகசியமான அறைகள், சாதாரணமாகப் பூமிமட்டத்தின் கீழ், பிறருக்குத் தெரியாதபடி கட்டப்பட்டனவுமாம். ஆபத்காலங்களில், உற்சவ விக்ரஹங்கள் முதலியவைகளையும், திருவாபரணங்களையும் சேமித்துவைக்க இவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டு மென்பது திண்ணம். திருவாலங்காடு சிவாலயத்தில் பல வருடங்களுக்கு முன்பாக, இப்படிப்பட்ட கள்ள அறை யொன்று. இருப்பது கண்டு பிடிக்கப்பட்து. அதிலிருந்த வெள்ளிப் பெட்டி சென்னை மியூஜியம் (museum) எனும் பழைய பொருட் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ராய வேலூரிலும் ஒரு மண்டபத்தின் கீழ் மற்றொரு மண்டபம் ரகசியமாக கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பூவிருந்த மல்லி வைதீஸ்வரன் கோயிலில் ஒரு கள்ள அறை சில வருடங்களுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் பல கோயில்களில், இதுவரையிலும் கண்டு பிடிக்கப்படாத பல ரகசிய அறைகள் இருக்கலாம். சில கோயில்களில் ரகசியமான சுரங்கங்கள் இருக்கின்றன ; உதாரணமாக பெங்களூர் கங்காதரேஸ்வரர் குகைக் கோயிலில் ஒரு பெரிய சுரங்கம் இருப்பதைக் கூறலாம். ஒருவிதத்தில் இப்படிப்பட்ட கள்ள அறைகளும் சுரங்கங்களும் 1310 ஆம் ஆண்டில் மகம்மதியர்கள் தென் இந்தியாவின்மீது படையெடுத்து வந்து ஹிந்து ஆலயங்களை அழிக்க ஆரம்பித்த காலத்தின் பிறகு தான், உண்டானவை யெனக் கூறலாம்.

சிவாலய சூர்ய நமஸ்காரம்

தென் இந்தியாவிலுள்ள சில திராவிட சில்ப சிவாலயங்களில் வருடத்திற்கு ஒருமுறை சூர்ய பூஜை நடப்பதாகச சொல்லப்படுகிறது ; அதாவது வருடத்தில் இரண்டு மூன்று தினங்கள் காலையில் சூர்ய ரஸ்மி அல்லது கிரணம், நேராக சிவலிங்கத்தின்மீது வீழ்கிறது; இப்படி சூர்யபகவான் ஸ்வாமியை நமஸ்கரிப்பதாக ஐதிகம். கோயிலைக் கட்டும் பொழுது சில்பியின் சாதூர்யத்தினால், ஓர் ரந்திரத்தின் வழியாக, வருஷம் ஒருமுறை காலையில் இவ்வாறு சூரிய கிரணங்கள் லிங்கமூர்த்தியின்மீது விழக் கட்டியதாகும். இதற்கு ஒரு உதாரணமாக பூவிருந்தவல்லி வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தில் மாசி௴ 22௳ முதல் 29௳ வரையில், மேற்குறித்த சூர்ய பூஜையைக் காணலாம். இன்னும் பல சிவாலயங்களில் இது உளது.