அகமும் புறமும்/006-008

தமிழர் கண்ட அரசன்

தனி வாழ்க்கையும் கூட்டு வாழ்க்கையும்

இப்பரந்த உலகில் எங்கு மக்கள் முதன்முதலில் தோன்றினார்கள்? இவ்வினாவிற்கு முடிவான விடை இதுகாறுங் கிடைத்திலது. நிலநூல் வல்லார் தமிழ் நாட்டுப் பாறைகளும், கல்லும் மிகப் பழமை வாய்ந்தவை என்று கூறுகின்றனர். எனவே, பழமை வாய்ந்த இந்நிலம் மிகப்பழங்காலத்தே மக்கள் தன்பால் தோன்ற இடமளித்தது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பழைய சமூகம் நாளாவட்டத்தில் அனுபவம் பெற்று நாகரிகத்துடன் வாழக் கற்றுக்கொண்டது. கூட்டங்கூடி வாழக் கற்றுக்கொண்டதே இத்தமிழ் நாகரிகத்தின் முதற்படி என்னலாம். தனித்தனி மனிதராக வாழ்கின்ற நாகரிகம் குறிஞ்சித் திணையில் என்றால், கூட்டங்கூடி வாழத்தொடங்குகையில் மருதத்திணை தோன்றலாயிற்று. கூட்டங்கூடினவுடன் புதுமுறை வாழ்வு மிகுந்தது என்று கூறலாம். தனித் தனியாக வாழும்பொழுது தனக்கெனவே வாழ்ந்த மனிதன், கூட்டங் கூடினவுடன் இந்நிலை மாறவேண்டுவதன் இன்றியமையாமையை உணரத் தலைப்பட்டான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டிய நிலை நிற்பட்டவுடன் ஓரளவு இடர்ப்பாடுகளும் தோன்றலாயின. எவ்வளவு தூரம் தனி மனிதன் தன் உரிமையை இழக்கவேண்டும் என்ற வினாவிற்கு விடை காண்பதில் மனத்தாங்கல் நிகழ்வது இயற்கைதானே? இத்தகைய இக்கட்டான சந்தருப்பங்களில் மனத்தாங்கல் கொண்ட இருவரும் ஒரு பொது மனிதனிடம் தமது முறையீட்டைத் தெரிவிக்க வேண்டி நேரிட்டது. பலருஞ் சென்று முறையிடத் தகுந்த ஒருவனே தலைவன்.

யார் தலைவன்?

எத்தகைய காரணங்களால் இத்தலைமைப் பதவி ஒருவனுக்குக் கிட்டியது? செல்வம் மிக்குள்ளவனே இத்தலைமைப் பதவிக்கு உரியவன் ஆயினன். இந்நிலை தோன்றுவதன் முன்னர் உடல் வலிவுடையவன் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்திருப்பான். ஆனால், நாளடைவில் உடல் வன்மையுடைய பலரை வைத்து ஏவல் கொள்ளும் தகுதி வாய்ந்த ஒருவனே தலைவனாகத் தகுதி பெற்றிருப்பான். மக்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையில் இருப்பது ‘வயிறு’ ஒன்று அன்றோ? பசி தணிக்கும் செல்வம் உடையான் ஒருவன் பிறரை ஏவல் கொள்ளும் தன்மை பெற்றான் என்பதில் வியப்பென்ன? இன்றும் பணமுடையவர்களிடம் அறிவு நிரம்பியவர்கள் பலரும் ஏவல் செய்வது நாம் காணும் ஒன்றுதானே! ஆனால், அப்பழங்காலத்தில் எது செல்வமாகக் கருதப் பெற்றது? ஆதிமனிதன் காட்டில் வாழும் விலங்குகளைப் பிடித்துப் பழக்கித் தனக்கு உதவி புரிய வைத்துக் கொண்டான். அவ்வாறு அவன் கொண்ட பல விலங்குகளுள் மாடு முதலிடம் பெற்றது. பல காலம் வரையில் மாடு ஒன்றுதான் அவன் செல்வ நிலையைக் காட்டும் அறிகுறியாய் இருந்து வந்தது. மனிதனுக்கு உணவு தந்து அவனுக்குப் பொதி சுமக்கவும் பயன்படும் இவ்விலங்கு, வீட்டு விலங்குகளுள் முதலிடம் பெற்றது இயற்கைதானே? இத்தகைய மாடுகளை அதிகம் பெற்றவன் செல்வமுடையவனாகக் கருதப்பெற்றான். ‘மாடு’ என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘செல்வம்’ என்றே ஒரு பொருள் இன்றளவும் இருந்து வருகிறது. தமிழருக்கு மட்டும் மாடு செல்வமாய் இருந்தது என்பதல்லாமல், கிரேக்கருக்கும் அதுவே செல்வமாய் இருந்தது எனச் சரித நூல் வல்லார் கூறுவர். அம்மட்டோடு அல்லாமல் கிரேக்க மொழியில் முதல் எழுத்தாகிய ‘ஆல்ஃபா’ என்பதன் வரிவடிவம் மாட்டுக் கொம்பைப் பார்த்து எழுதப்பெற்றது என்றுங் கூறுவர். பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் போர் முறையும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. ஒரு மன்னன் மாற்றானின்மேல் படை எடுப்பதாயின், முதன் முதலில் மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்வதையே தொழிலாகக் கொண்டான். இது வெட்சித் திணை என்று கூறப்பெறும். இது இலக்கிய வழக்காய் நின்றுவிடினும், ஆதிகாலத்தில் மன்னனெனக் கருதப் பெற்றவன் மாடாகிய செல்வத்தையே பெரிதும் நம்பியிருந்தான் என்பது வெள்ளிடை மலை.

வழிவழி அரசன்

பழந்தமிழ் இனத்தில் மாடுகளை நிரப்பப் பெற்றவனே மன்னனெனக் கருதப்பெற்றான் என்று கூறுவதில் இழுக்கு ஒன்றுமில்லை. பசுவுக்குக் ‘கோ’ என்றதொரு பெயரும் உண்டு. எனவே, பசுக்களை மிகுதியாக உடைமையின் அரசனாகக் கருதப்பெற்ற ஒருவன் எவ்வாறு வழங்கப் பெறுவான்? கோக்களை உடைமையின் ‘கோன்’ என்று கூறப்பெற்றான் அரசன். "கொற்றவர் தம் கோன் ஆகுவை‘ எனவரும் மதுரைக் காஞ்சிச் சொற்றொடர் இப்பொருளை வலியுறுத்தல் காண்க. இப்பசுக்கூட்டங்களை வைத்து வளர்க்கும் பொறுப்புடையார் ‘கோவலர்’ என்றே. பின்னர் வழங்கப் பெற்றனர். ஆதியில் கோக்களை நிரம்பப் பெற்றிருந்தமையின் அரசனெனக் கருதிப் போற்றப்பட்ட ஒருவன், நாளாவட்டத்தில் இவ்வரசச் செல்வத்தைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றான் என்பதை அறிகிறோம். உலக முழுவதிலும் அரசச் செல்வம் பரம்பரை வழி வந்ததாகவே அறிகிறோம். கரிகாற் பெருவளத்தான் பிறப்பதற்கு முன்னரே அவன் தந்தை இறந்துபட்டதால் அவன் ‘தாய்’ வயிற்றிலிருந்து தாயம் எய்தினான் என்று பொருநராற்றுப் படை குறிக்கிறது. இதுகாறுங் கூறியவற்றை அறுதியிட்டுச் சொல்லத் தக்க சான்றுகள் இல்லையாயினும் இவ்வாறுதான் அரசு முறை தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் என்று உய்த்துக் கூறுவதால் இழுக்கொன்றுமில்லை.

மூவர் மன்னர்

தமிழர் கண்ட இளவரசனைப் பற்றி இனிச் சற்று விரிவாகக் காண்போம். பரம்பரையாக அரசச் செல்வம் இறங்கி வந்த காரணத்தால் தகுதியற்ற பலரும் அரசர் ஆயினரோ என்று நினைக்க வேண்டுவதில்லை. பெரும்பான்மையினர் அனைத்துத் தகுதிகளும் பெற்றவராகவே விளங்கினர். இங்ஙனம் அவர்கள் இருக்கத்தக்க ஒரு காரணமும் உண்டு. தமிழ்நாடு மிகச் சிறிய பரப்புடையது எனினும், இச்சிறிய நிலப்பரப்பிற் சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவர் ஆட்சி செலுத்தி வந்தனர்.


‘நளி இரு முந்நீர் ஏணியாக
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்’

(புறம்–35)

என்ற புறப்பாடல் இவ்வுண்மையைக் கூறுதல் காண்க ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்’தை ஆண்டு வந்த மூவருந் தமிழரேயாயினும், இவர்களுள் ஒற்றுமை உணர்வு மருந்துக்கும் இல்லாததொன்றாயிற்று. ஒற்றுமையற்ற காரணத்தால் இம் மூவருள்ளும் ஓயாது பூசலும் போரும் நிகழலாயின. பழந்தமிழ் இலக்கியங்களாகிய பத்துப் பாட்டையும், எட்டுத் தொகையையும் ஒருமுறை புரட்டினவரும் இவ்வுண்மையை உணராமலிரார். பல சந்தருப்பங்களில் இவருள் ஒருவர் தம் கையோங்கி ஏனைய இருவரையும் அடிப்படுத்தியிருந்தனர். இதன் விளைவாக அடிமைப்பட்டவர் தக்க காலம் வந்தவுடன் பழிவாங்கத் தவறினதில்லை. இம்மூவரை அன்றியும் பல சிற்றரசர்களும் உடன் இருந்ததை இலக்கியம் மூலம் அறிகிறோம். இச் சிற்றரசரும் ஓயாது தமக்குள் போரிட்டனர்; சில சமயங்களில் பேரரசர்களுடன் சேர்ந்து கொண்டு ஏனையவருடன் போரிட்டுள்ளனர். இத்தகைய காரணங்களால் போர் புரிவதில் வல்ல ஓர் இனமாய் இருந்து வந்துள்ளது தமிழ் இனம். ஓயாது போரில் வாழ்ந்து வந்தமையின் இவர்கள் இயற்கையின் தள்ளவியலாத ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டனர். ‘வாழ்க்கைப் போராட்டத்தில் வலியுடையவர் எஞ்சுவர்’, என்ற ‘டார்வின்’ கொள்கைப்படி வலியுடையவர் எஞ்சினர். எஞ்சுவதற்கு வலிமை ஒன்றே துணையாய் நின்றமையின், தமிழ் மன்னர் பெரும்பாலும் வலிமை மிக்கவராகவே இருந்தனர். யானையேற்றம், வில் வித்தை முதலியன அவர் நன்கு கற்றிருந்தனர்.

களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்து அடிக்
கணை பொருது கவி வண் கையால்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்
தோல் பெயரிய எறுழ் முன்பின்

(புறம்–7)

என வரும் புறப்பாட்டின் அடிகளை எல்லாத் தமிழ் மன்னர்கட்கும் பொதுவான இலக்கணமாகக் கொள்ளலாம். நாடு சிறிதாகலானும், போர் புரிந்து வெற்றிகண்டு எஞ்சுபவரே வாழத் தகுதியுடையராய் இருந்தமையானும் தமிழ் மன்னர் சிறந்த போர் வீரராகவே விளங்கினர். மிக்க பழங்காலத்தில் தத்தம் தகுதியாலும் பரம்பரை உரிமையாலும் அரசுக் கட்டில் பெற்றனர். தமிழ்மன்னர். எனினும், பிற்காலத்தில் இம்முறை தடுமாறித் தகுதி இல்லாதவருங் கூட உரிமை ஒன்றே பற்றி அரசர் ஆயினர் எனவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்துக் காணும் ‘அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு’ என்ற அடி ஒரு காலத்து இந்த உரிமைத் தன்மை பெரிதாகப் பாராட்டப் பெற்றது என்பதையே குறிக்கிறது.

அரசன் சுவைஞன்

அரசச் செல்வம் பெறும் வகை எவ்வாறாயினும், பெற்ற செல்வத்தை இவ்வரசர் நன்கு அனுபவித்தனர். இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் கோயில் என்ற பெயராலும் வழங்கப்பெற்றன. கோன்வாழும் இடம் கோயில் என்று கூறுப்பெற்றது. பொருத்தம் உடையதே.

‘சென்றாள் அரசன் செழுங் கோயில் வாயில்முன்’

(ஊர்சூழ்வரி-75)

என இளங்கோ குறிப்பிடுதல் காண்க. இக்கோயிலை அமைக்கப் பெரும்பொருளும், பெருமுயற்சியும் செலவழித்தனர் என்பதை ‘நெடுநல்வாடை’ என்ற சங்கப் பாட்டால் அறிகிறோம். போரில் பெரும்பொழுதைக் கழித்தாலும் இம் மன்னர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற பேருண்மையை மறந்தாரல்லர். எனவே, அனுபவப்பொருள், போகப் பொருள் என்பனவற்றை வேண்டும் அளவு அனுபவித்தனர் என்றும் அறிகிறோம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரண்மனையில் அவன் மனைவி துயில் கொள்ளும் கட்டில் பற்றிய வருணனை, நக்கீரரால் ‘நெடுநல்வாடை’ என்ற நூலிற் கூறப்படுகிறது. இத்துணை முன்னேற்றம் உடைய காலத்திற் கூட அக்கட்டில் பற்றிய வருணனை நம்மைத் திகைக்க வைக்கிறது. பொருளைப் பெற்றிருக்கும் திரு வேறு; அனுபவிக்கும் திரு வேறு. இற்றை நாளில் பொருள் பெற்றிருப்பார் பலரைக் காண்கிறோமாயினும், அனுபவிப்பார் சிலரைக் காண்டலும் அரிதாகிறது. ஆனால், பழந் தமிழ் மன்னர் பொருளைப் பெறவும், அதனை நன்கு அனுபவிக்கவும் கற்றிருந்தனர் என அறிகிறோம். சிறந்த பொருளைப் பெறும் அவர்கள் ‘முருகியற்சுவை’ (aesthetic taste) வாழ்க!

முடியாட்சியும் உரிமையும்

பழந்தமிழ்நாட்டில் முடியாட்சியே நிலைபெற்றிருந்தது. குடியரசின் நினைவே இருந்ததாக நினைப்பதற்கில்லை. ஆனால் இற்றை நாளில் வாழும் நமக்கு முடியரசென்று கூறினவுடனே மனத்தில் ஒருவகை அச்சம் ஏற்படுகிறது. எத்தகைய முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாயிருப்பதே நமது நாட்டு முடிமன்னர் இயல்பாய் இருந்து வருகிறது. பெரும்பாலரான மன்னர், தம் கீழ் வாழும் மக்களின் பாதுகாப்புத் தம் கையிலுள்ளது என்பதைக்கூட மறந்து திரிகின்றனர். ஆனால், பழந்தமிழ் மன்னர் அவ்வாறில்லை.

இம்மன்னர்கள் பரம்பரைப் பாத்தியமாக அரசுக் கட்டில் ஏறினர். அம்முடியின் பொருட்டுச் சகோதரருள் பூசலோ பிணக்கோ ஏற்பட்டதாகவும் சான்றுகள் அதிகம் இல்லை. பிள்ளைகளுள் மூத்தவனே பட்டத்திற்கு உரியவன் என்ற நியதி இருந்து வந்தது. இளங்கோவடிகள் வரலாறே இம்முறைக்குச் சான்று பகரும். பேரரசர்கள் உயிரோடிருக்குங் காலத்திலேயே மைந்தர்களை அரசாட்சியில் பழக்கும் முறையும் இருந்து வந்ததை அறிவோம். அரசர்கள் நல்ல கல்வி கற்றவர்களாய் இருந்தார்கள். நல்ல புலமை நிறைந்த அவர்கள் பெரும்புலவர்களை அரசவையில் வைத்துப் போற்றினார்கள். இத்தகைய ஒரு வழக்கத்தாலேயே அவர்களைப் பற்றி அறியமுடிகிறது.

அரசுரிமையைப் பாத்தியமாக அடையினும் ஒவ்வொருவரும் தமது தோள் வலியாள் அவ்வரசைப் பெருக்கிக் கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இடங் குறுகியுள்ள இந்தத் தமிழ்நாட்டில் சிற்சில பேரரசர்கள் காலம் தவிர, ஏனைய மன்னர்கள் காலத்தில் பல சிறு அரசுகள் நிலைபெற்றிருந்தன. இதுவே அடிக்கடி ஒருவரோடொருவர் சண்டை செய்யக் காரணமாயிருந்தது. குறுநில மன்னர்களும் பிறருக்கு அடங்கி வாழ்வதை இழிவானதெனக் கருதினர். இவர்களே இவ்வாறாயின் பெருமன்னர்களான சேர, சோழ, பாண்டியரைப் பற்றி கேட்க வேண்டுவதில்லை. ஒரு சில காலந்தவிர இவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருந்ததே இல்லை. இவர்கள் மனப்பான்மையைச் சுருங்கக் கூறினால், அது கபிலர் என்ற புலவர் பெருமான் கூறிய ஐந்து அடிகளில் முடியும்.

வையங் காவலர் வழிமொழிந்து ஒழுக
போகம் வேண்டி பொதுசொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரலாதன்

(புறம்-8)

(இவ்வுலகம் தனக்கும் பிற மன்னர்க்கும் பொது என்ற சொற்களைப் பொறுக்காமல், இதனைத் தனக்கே உரிமை ஆக்கிக்கொள்வதற்காக, எல்லா இன்பங்களையும் வெறுத்து போரை மேற்கொள்ளும் சேரலாதன்)

இத்தகைய மனப்பான்மை கொண்டோர் அமைதியாய் இருத்தல் என்பது இயலாத காரியம். அரசர்களாகப் பிறந்ததன் பயனே போர் செய்தலாகும் என்று கருதினர் அம்மன்னர். இத்தகைய எண்ணம் உயர்ந்தது என்று கூறுவதற்கில்லையாயினும், தமிழர் இனவளர்ச்சியில் ஒரு படியைக் காட்டி நிற்கிறது. ஆதி மனிதனிலிருந்து தோன்றி வளரும் எந்த இனமும் இப் படியைத் தாண்டியே முன்னேறவேண்டும். ஏனைய வகைகளிலெல்லாம் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்த தமிழர், கிரேக்கர்களைப் போல இதனையும் நாகரிகச் சின்னமாகக் கருதினர்.

உடலும் உள்ளமும்

தமிழ் மன்னன் நல்ல உடற்கட்டு வாய்ந்தவனாய் இருந்தான். மிக்க இளமை தொட்டே படைக்கலப் பயிற்சி பெற்றமையானும், போர்க்களங்கட்குச் செல்லும் பழக்கம் உடைமையானும் அவனது உடல் வலிமை பெற்றிருந்தது. நல்ல உடலுறுதி பெற்றவன் உள்ளமும் பெரும்பாலும் செம்மையானதாய் இருக்கும்; அவன் அறிவும் விளக்கம் உடையதாய் இருக்கும்.

“அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்” (புறம்–20)
“ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை” (புறம்–8)

“பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி” (புறம்–10)

“வேண்டியது விளைக்கும் ஆற்றலை” (புறம்–38)

என்னும் இவ்வடிகள் அரசனது அறிவு மேம்பாட்டை விளக்குவனவாய் உள்ளன.

இத்தகைய அரசன் ஆட்சி முறையில் தன்னேரில்லாதவனாகவே விளங்கினான். அரசன் ஆணைக்கு எதிராக ஒன்றும் நடப்பதில்லை. டியூடர் மன்னர்கள் இங்கிலாந்தில் ஆட்சி செய்கையில், தாங்கள் கடவுளால் ஆட்சி செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று கருதினார்கள். இதனை மக்களும் நம்பி வந்தனர். ஒருவாறு பழந்தமிழ் நாட்டில் இத்தகைய வழக்கே நிலைபெற்றிருந்ததென நினைக்க வேண்டியிருக்கிறது. இறைவன் என்ற சொல்லைக் கடவுள், அரசன் என்ற இருவர்க்கும் வழங்கியமையின் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. பிற்காலத்து ஆழ்வார்,

“திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே”

(திருவாய்மொழி)

என்று கூறியது பழந்தமிழ் வழக்குப் பற்றியதேயாகும். இத்தகைய நிலையில் அவர்கள் இருந்தமையால் ஒரோவழி ஓர் அரசன் தீயவனாக மாறித் தீச்செயலைச் செய்ய முற்படுதலும் உண்டு. ஆனால், அச்சமயங்களில் பெரும்புலவர்கள் அஞ்சாது அரசன் முன் சென்று, அவனுக்கு அறிவுரை கூறி, அவனை நல்வழிப் படுத்தியிருக்கின்றார்கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்ற அரசன், மலையமான் திருமுடிக்காரி என்ற அரசனொடு பொருது வென்றான்; வெற்றி வெறியில் மலையமான் குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு வந்தான்; அப்பிள்ளைகளை யானைக் காலடியிலிட்டு மிதிக்கச் செய்ய முடிவு செய்துவிட்டான். அரசன் அங்ஙனம் நினைத்தால் அவனை எதிர்ப்பவர் யார்? யானையும் வந்தது. அந்நேரத்தில் கோவூர் கிழார் என்ற பெரும்புலவர் அங்கு வந்து சேர்ந்தார்; இக்கொடுமை நடைபெறப் போவதை அறிந்தார்; உடனே அரசன் முன் சென்றார்; கீழ்வரும் பாடலைக் கூறினார்.

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே புலனுழு துண்மார் புன்கணஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்;
களிறுகண் டழூஉம் அழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்;
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.”

(புறம்-46)

(நீயோ, புறவின் பொருட்டுத் தராசில் ஏறிய சிபியின் பரம்பரையில் வந்தவன். இப்பிள்ளைகளோ, அறிவுடையனும் வள்ளற்றன்மை யுடையனுமான மலையமான் குடியிற் பிறந்தோர். மேலும், தங்கட்கு நேரப்போகும் கதியறியாது யானையைக் கண்டவுடன் அழுகை மறந்து வேடிக்கை பார்க்கின்றனர்; இங்குள்ளார் அனைவரும் புதியராயிருத்தலின் மணவாட்டம் அடைந்துள்ளனர். இனி நீ உன் விருப்பம் போலச் செய்க.)

உடனே அரசன் அக்குழந்தைகளை விட்டுவிட்டான். அக்கால மன்னன் எவ்வளவு தன்னிச்சைப்படி நடக்கும் வன்மை பெற்றிருந்தான் என்பதைக் காட்டுவதற்காகவே இப்பாடல் காட்டப் பெற்றது. இத்தகைய அரசர் எங்கோ ஒருவர் இருவர் இருந்தனரேயன்றிப் பெரும்பான்மையோர் கடமை அறிந்து நடப்பவராகவே இருந்தனர்.

“பொலங் கழற் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!” (புறம்-3)

“களிறு கடைஇய தாள்
கழல் உரீஇய திருந்தடி
.............................
மா மறுத்த மலர் மார்பு.” (புறம்-7)

(யானையைச் செலுத்தும் முயற்சியையும் வீரக் கழலணிந்த காலையும், திருமகள் பிறர் மார்பில் சென்று தங்க மறுக்கும் மார்பினையும் உடையவன்).

என்பன போன்ற பல புறப்பாடல்களில் மன்னன் மார்பு விரிந்தும் கல்போன்றும் இருக்கிறது என்று கூறுவது அவனுடைய வீரத்தைக் காட்டப் பயன்படுகிறது. ஆனால், ஓயாமல் சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறான் என்றும், திருமகள் தங்கிய மார்பென்றும், மகளிர் தோள் தோயும் மார்பு என்றும் கூறுவது ஏன்? மன்னன் வெறும் உடல் வீரம் மட்டும் உடையவனல்லன்; நல்ல பண்பட்ட வாழ்வுடையவன் என்றும் குறிப்பிடுகிறார் புலவர். மனித வாழ்வு சிறக்க வேண்டுமாயின், உடல் வீரத்தோடு முருகியல் சுவையும் வேண்டும். அழகிய பொருள்களில் ஈடுபட்டுத் தன்னை மறந்து அனுபவிக்கும் பண்பே முருகியல் சுவை எனப்படும். அத்தமிழ் மன்னர்கள் இம்முருகியல் சுவையைப் பெற்றிருந்தனர் என்பதையும் இக்குறிப்புகள் அறிவிக்கின்றன.

தமிழ் மன்னர்கள் பொறுப்பு வாய்ந்த அலுவலைக் கவனிக்கின்ற காரணத்தால் அல்லும் பகலும் கவலைப்படுகின்ற மனத்தை உடையவர்களோ என்று யாரும் ஐயப்படவேண்டா. மனித வாழ்வில் கடமையும், கலையுணர்வும் கலந்து திகழ வேண்டும். அவ்வாறு இல்லையாயின் வாழ்வு முழுத்தன்மை அடையாது. முழுவதும் கடமையாகவே அமைந்துவிட்டால், அது இயந்திர வாழ்வாகி விடும்; முழுவதும் கலையாகிவிட்டால், பயனற்றவாழ்க்கை ஆகிவிடும். எனவே, தமிழ் மன்னர்களுடைய வாழ்வில் கடமை, கலை என்ற இரண்டும் அளவுடன் கலந்தே காணப்பட்டன என்கிறார் புலவர். இதனை இவ்வாறு விரிவாக உரைநடையிற் கூறவில்லை; கவிதையில் குறிப்பாகப் பெறவைக்கிறார். ஒரே அரசனுடைய காலில் வீரக்கழலும் மார்பில் சந்தனமும் விளங்குகின்றனவென்று கூறும் பொழுது கடமையும் கலை உணர்வும் வெளிப்படக் காண்கிறோம்.

அரசனுக்கு ஏற்ற வீடு

கலையுணர்வுடனும் கடமையுணர்வுடனும் வாழ்ந்த பழந்தமிழ் அரசர்கள் பொது வாழ்வின் கடமை நெருக்கடிக்கு எப்போதும் இரையானார்கள். இதனை ஈடுசெய்யப் போலும் தமிழ்ச்சமுதாயம் தமிழ் மன்னருக்கு வளப்பமான தனி வாழ்க்கை தந்து வந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றான ‘நெடுநல் வாடை’ என்ற பாடலில் இதுபற்றிப் பேசப்படுகிறது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறந்த பழந்தமிழ் மன்னருள் ஒருவன். அவ்வளவு சீரும் சிறப்பும் உடைய ஒருவனுக்கு அரண்மனை கட்ட முடிவு செய்தனர். ‘இடம்பட வீடு எடேல்’, என்ற முதுமொழி அவனுக்கு அன்று; ஆதலால் பெரிய முறையில் அரண்மனை அமைக்கப் பெறுகிறது. ‘பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து’ என்று நெடுநல்வாடை அதனைக் குறிக்கிறது. அவனுடைய அரண்மனை அமைப்பே பழந்தமிழ் மன்னர்களின் கோயில்கள் இருந்த நிலைக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பாண்டியனின் அரண்மனைக்குக் கால்கோள் விழாச் செய்தனர். சித்திரை மாதத்தின் நடுவில் ஒரு நாளில் பகல் பதினைந்து நாழிகை அளவில் சிற்ப நூலை நன்கறிந்த தச்சர்கள் கூடினார்கள்; நூல் பிடித்து அளவிட்டுப் பல பகுதிகளையும் வரையறுத்துக் கூறுபடுத்தினார்கள்; பிறகு மிகப் பெரிய கற்களினால் மதில் முதலியவற்றை அமைத்தார்கள்; அடுத்து உள்ளிடம் கட்டி முடித்தார்கள்.

ஓங்கு நிலை வாயில்

அரண்மனைக்கு நுழையும் பொழுது தெரியும் இது வாயிலாகும். இது ஏன் இவ்வளவு பெரிதாகவும் உயரமாகவும் அமைந்திருக்கிறது? யானை போர்க்களத்திலிருந்து வெற்றிக் கொடியுடன் வருகிறது அன்றோ? அவ்யானை அப்படியே உள்ளே நுழைவதற்காக இவ்வாயிலின் உயரம் அமைக்கப்பெற்றுள்ளது.

‘வென்றெழு கொடியொடு வேழம் சென்றுபுக’

(நெடுநல்வாடை–87)

என்ற அடியால் வாயிலின் உயரத்தைக் கூறுகிறார் ஆசிரியர் நக்கீரர். பார்வைக்கு மதிலும் வாயிலும் எவ்வாறு உள்ளன? மலையைக் குடைந்து வழிசெய்தது போல உள்ளது அவ்வாயில்,

‘குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்’

(நெடுநல்வாடை–88)

இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றும் நாம் கற்பனைக் கண்முன் அதனைக் கொண்டுவர முடிகிறது. வாயிலே இவ்வளவு உயரமாய் உள்ளது; அதன்மேல் கோபுரமும் அமைந்துள்ளதாம். ‘நெடுநிலை’ என்பதற்குக் கோபுரம் என்பது பொருள். இவ்வாயிலை அடைத்து நிற்பன இரட்டைக் கதவுகள். வாயிலின்மேலே இலக்குமியின் சித்திரம் அமைந்திருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இரண்டு செங்கழுநீர்ப்பூவும் இரண்டு பெண் யானைகளும் செதுக்கப்பெற்றுள்ளன. இரட்டைக் கதவுகள் எவ்வாறு அமைந்துள்ளன? நன்கு செதுக்கப் பெற்று, இழைக்கப்பட்டு, ஒன்றற்கொன்று இடைவெளி இன்றிச் சேர்க்கப்பெற்று உள்ளன.

‘கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து’

(நெடுநல்வாடை–35)

உள்ளன என்பதால் இதனை அறிகிறோம், ஒரோ வழிக்காய்ந்த மரமாய் இருப்பினும், வெயில் மழை முதலியவற்றால் நாளாவட்டத்தில் இடைவெளி வருதல், கண்கூடு. இதனையும் நீக்க வாயிலிலும் கதவிலும் வெண் சிறுகடுகை அரைத்து அப்பியுள்ளனர் அக்காலத்தச்சர்.

இதனைத் தாண்டி உட்சென்றால் மணல் பரப்பிய பெருமுற்றம் காணப்படுகிறது. ஒரு புறத்தே குதிரைப்பந்தி அமைந்திருக்கிறது. இதனை அடுத்துள்ளது அரண்மனையின் முற்பகுதி. பெரிய கட்டடங்களின் மேற்றளத்தில் விழும் மழைநீர் கீழே வந்து விழச் சரியான வசதி இல்லையானால் கட்டடம் பழுதுபடுமன்றோ? அரண்மனையின் முகப்பில் நிலா முற்றம் அமைந்துள்ளது. அதனையே இன்று நாம் (Portico) போர்ட்டிகோ என்று கூறுகிறோம். இத்திறந்த இடத்தில் விழும் மழைநீர் வந்து விழுவதற்கு ஒரு வாய் அமைத்துள்ளனர். அது மகர மீனின் வடிவம் பெற்று விளங்குகிறது. இன்னும் உள்ளே சென்றால், ‘பல்வேறு பள்ளி’ என்று கூறப்பெறும் பல பெரிய அறைகள்–உள்ளன.

பூச்சு வேலையும் பூ வேலையும்

இந்த அறைகள் சூரிய ஒளி உள் வரும்படி அமைக்கப் பெற்றுள்ளன. இரவிலும் ஒளி நிறைய வரும்படி ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வோர் அறையிலும் ஒவ்வொரு பாவை இருக்கிறது. இந்தப் பாவை எவ்வளவு வேலைப்பாடும் அழகும் நிறைந்துள்ளது! நல்ல வார்ப்படத் தொழிலில் கைதேர்ந்த யவன நாட்டுக் (Greek) கொல்லன் அமைத்த அழகிய சிற்பமாகும் இது. இந்தப் பாவையின் கையில் இருக்கும் கிண்ணம் போன்ற பொருள்தான் அகல் விளக்காகும். இக்கையேந்து அகல்நிறைய நெய்யை விட்டுப் பருத்த திரிகளை நெய்யில் இட்டு எரிய விடுகின்றனர். விளக்கின் சுடர் குறையுந்தோறும் ஆட்கள் இருந்து கொண்டு தூண்டிவிடுகின்றனர். இந்த விளக்குகள் ஏற்றினவுடன் சுற்றியுள்ள சுவர்தோறும் இவ்வொளியின் எதிர் ஒளி விளங்குகிறது. காரணம் என்ன? அரண்மனை ஆதலால், மிகச் சிறந்த, ‘வெள்ளி அன்ன விளங்கு சுதை’ (சுண்ணாம்பு) பூசியிருக்கிறார்கள்; ஆதலால், எதிர் ஒளி மிகுதியாய் இருக்கிறது. இந்த அழகிய சுவர்களும் வெறுஞ் சுவர்களாய் இல்லை. இவற்றில் எல்லாம் மிக அழகிய பூ, கொடி முதலிய சித்திர வேலை செய்திருக்கிறார்கள்.

தூண்கள்

தூண்கள் எவ்வாறுள்ளன என்று காண்டல்வேண்டும். இன்றும் மதுரை சென்று திருமலை நாயக்கர் அமைத்த கட்டடங்களைக் கண்டவர்கள் பெருவியப்பை அடைகின்றனர். இதுவே இவ்வாறாயின், நெடுஞ்செழியனின் அரண்மனைத் தூண்கள் எவ்வாறு இருந்திருக்கும்? ‘மாதிரள் திண்கால்’ என்று கூறப் பெற்றமையின் பெரிய தூண்கள் என்பது அறியமுடிகிறது. ஆனால் நாயக்கர் காலத் தூண்கள் கல்லாலும் சுதையாலும் கட்டப் பெற்றவை. பாண்டியனின் தூண்களோ, ’மணிகண்டன்ன' என்று கூறப் பெறுதலின், கரிய நிறத்தையுடைய ‘சலவைக் கற்கள்’ என்று நினைய வேண்டி உளது.

மகளிர் உறைவிடம்

இவை அனைத்தையும் தாண்டி அப்பாற்சென்றால் இருக்கும் இடம் ‘ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு’ எனப்படும் மகளிர் வாழும் இடமாகும். ஆடவர் குறுகாத இடம் என்று கூறினவுடன் அரசனுடைய உரிமை எவ்வளவோ என ஐயமெழுகிறதன்றோ? அதற்காகவே ஆசிரியர்.

“பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா”

(நெடுநல்வாடை–106, 107)

இடம் என்று கூறி உள்ளார். பெரும்பாலும் பல மனைவியரை வைத்து வாழ்ந்த பண்பாடுடையவர்தாம் தமிழ் மன்னர். எனினும், அவருள்ளும் சிலர் ஒரு மனைவி பண்பாட்டைக் கைக்கொண்டு வாழ்ந்தனர் என அறிகிறோம்.

கட்டில் செய்தான்

மகளிர் வாழும் இப்பெரும்பகுதியில் ஒரு பெரிய அறை இருக்கிறது. இதுவே அரசன் உறங்கும் இடம். பெரியதொரு கட்டில், அறைக்கு அழகைச் செய்து கொண்டு இருக்கிறது. கட்டில் என்றால் இன்று நாம் காணும் வகையைச் சேர்ந்தது அன்று, நெடுஞ்செழியனுடைய கட்டில். ‘பெரும் பெயர் மன்னர்க்கொப்ப மனை வகுத்தது’ போலவே கட்டிலும் செய்துள்ளனர். கட்டில் செய்யுங்காலத்து அதனை உடன் இருந்து கண்டவராகிய நக்கீரர், அதன் இயல்பையும் அழகையும் எடுத்துப் பாடுகிறார். கட்டிலும் அதில் படுத்துப் புரண்ட மன்னனும், அக்கட்டில் இருந்த அரண்மனையும், ஏன், அந்தப் பண்பாடும் நாகரிகமுமே, இன்று பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய் மெல்லப் போய்விட்டன! என்றாலும் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தலைசிறந்த ஒரு தமிழ் மகன் எங்ஙனம் வீட்டை அமைத்தான் என்று அறிவதும், எங்ஙனம் வாழ்ந்தான் என்று ஆராய்வதும் பயனுடைய செயல்தாமே? நெடுஞ்செழியன் அமைத்த கட்டிலைப் பற்றிப் பார்ப்போம்.

தந்தக்கால் கட்டில்

கட்டிலின் கால்கள் யானைத் தந்தத்தால் செய்யப் பெற்றுள்ளனவாம். யானைத் தந்தத்திலும் பல வகை உண்டு. இக்கட்டில் செய்யப் பயன்பட்ட தந்தம் நாற்பது ஆண்டுகட்குமேல் வாழ்ந்த யானையினுடையதாம். அதுவும் அந்த யானை சண்டையில் இறந்திருத்தல் வேண்டும். அவ்வாறு போரில் யானை இறக்கும் பொழுது தந்தமும் தானே கழன்று விழுந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தந்தம் நான்கை எடுத்துக் கால்கள் அமைத்துள்ளனர். வெறுந்தந்தங்களை அப்படியே நிறுத்தி விடவில்லையாம். தந்தங்களைத் தொழில் வல்ல தச்சனுடைய கூர் உளி புகுந்து அழகு பெறச் செய்தது. கடைசல் வேலை, வடிவம் உண்டாக்குமே தவிர, உருவம் உண்டாக்காது; ஆகலின் தச்சன் சிற்றுளி கொண்டு இலை பூ முதலிய வேலைப்பாடுகளைக் கட்டிலின் கால்களில் அமைத்தான் போலும்! மேலும், குடம் போன்றும், உள்ளிப் பூண்டு போன்றும் வடிவம் பெறும்படியாகவும் அமைத்தான்.

வேட்டை ஒவியம்

இவ்வகையான கால்களை நிறுவிக்கொண்டு தலை மாட்டிலும், கால்மாட்டிலும் ஓரடி உயரத்திற்குப் பலகைகள் அமைத்தான். இந்தப் பலகைகளில் வேட்டைக்குரியன வாய் புலி முதலியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பெற்றனவாம். புலியின் உருவம் பொறிப்பதில் புலிமயிர் முதலியவற்றை வைத்து, அவற்றை அடுத்துச் சிங்கத்தின் தோல் முதலியவற்றைக் கொண்டு சிங்கத்தின் உருவத்தைப் பொறித்தான்; இவற்றை வேட்டை ஆடுவது போன்ற வேலைப்பாடுகளையும் அமைத்தான்.

இவ்விரு பலகைகளின் இவ்விரு முனையிலும் கால்கள் நட்டு முத்துக்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இந்த நான்கு கால்களையும் சேர்த்து இவற்றின் நடுவே விதானம் அமைக்கப்பெற்றுள்ளது. அந்த விதானத்தில் சந்திரனுடைய உருவமும், உரோகிணியினுடைய உருவமும் தீட்டப் பெற்றுள்ளனவாம்.

மெத்தை

படுக்கையாக அமைந்த மெத்தை எத்தகையது? மெல்லிய பஞ்சால் இயன்ற மெத்தையின்மேல் துணை புணர் அன்னத்தின் தூவி விரிக்கப்பெற்றுள்ளது. இம்மட்டோடு இல்லையாம் படுக்கையின் சிறப்பு. மெத்தையினுள் வைக்கவேண்டிய சரக்கு எவை எவை என்பதைச் ‘சிறு பூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், உறுதூவி, சேக்கை’ என்ற ஐந்தாகும் என்று ஒரு பழைய பாடல் அறிவிக்கிறது. இவ்வளவு சிறப்பமைந்த மெத்தையின்மேல் ஒரு வெண்மையான துணி விரிக்கப் பெற்றுள்ளதாம். அத்துணி கஞ்சியிட்டுச் சலவை செய்யப் பெற்றதாம்.

‘காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமைத் துமடி விரித்த சேக்கை’

(நெடுநல்வாடை–134, 135)

என்று மேல் விரிக்கும் துணியின் இயல்பும் சிறப்பும் கூறப்பெற்றுள்ளன.

படுக்கையையும் கட்டிலையும் பற்றி இவ்வளவு பெரிய வருணனை வேண்டுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். பழந்தமிழ் மன்னர் எப்பொழுதும் போரிட்டுக்கொண்டு திரியும் முரடர்கள் அல்லர்; வாழ்க்கையை நன்கு அனுபவிக்கவும் கற்றுக் கொண்டிருந்தனர் என்பதை அறிவிக்கவே இதுகாறும் இது பற்றி விரிவாகப் பேசப்பெற்றது.

வாழ்க்கையின் குறிக்கோள் எவ்வளவு உயர்ந்ததாய் இருப்பினும் நாளை வரும் என்று எதிர்பார்க்கும் துறக்க இன்பத்திற்கு அண்ணாந்து கொண்டு இன்றைய உலகில் உள்ள இன்பத்தை வெறுத்துப் போலித் துறவு கொண்டவர் அல்லர் பழந்தமிழ் மன்னர். இத்துணை இன்பங்களின் இடையே வாழ்ந்தாலும் அவர்கள் உள்ளத் துறவுடையவர் கடமை ஒன்று இருந்தால், அதை முடிக்க வேண்டி இத்தகைய இன்பத்தையும் துறந்து செல்லும் உறுதிப்பாடு உடையவர். இதுவன்றோ மனத்துறவு! எல்லையற்ற இன்பத்தின் இடையே வாழ்ந்தாலும் இத் தமிழ் மன்னர் உள்ளத் துறவு உடையவர்களாய்த் தாமரை இலைத் தண்ணீர் போலவே வாழ்க்கை நடத்தினர் என்பதையும் அறியமுடிகிறது. கட்டிலை இவ்வளவு சிறப்புடன் செய்து அதில் காதலியுடன் படுத்து மகிழ்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் அனைத்தையும் துறந்து போர்க்களத்தில் வாடைக் காற்றில் வாடி மெலிவதையும் காண்கிறோம்.

ஓவியக்கருத்து

கட்டிலின் விதானத்தில் சந்திரனும் உரோகிணியும் எழுதப்பெற்றதன் காரணம். அவர்கள் காதலைத் தமக்கு நினைவூட்டுவதேயாகும். தலைமாட்டுக் கால்மாட்டுச் சட்டங்களில் புலி வேட்டை பொறித்திருப்பதிலும் ஓர் ஆழமான கருத்துண்டு. உறங்கச் செல்லு முன்னும், உறங்கி விழித்த உடனேயும் கண்ணிற்படுவன வேட்டையும் அதன் அடிப்படையான மறத்தன்மையும் ஆகும். அரசனுக்குரிய குழந்தை கருத்தரிக்கும்பொழுது அத்தாய் தந்தையரின் மனநிலை முறையே காதலிலும் மறத்திலும் ஈடுபட்டிருக்குமாகலின் பிறக்கும் குழந்தையும் இவ்விரண்டு பண்புகளையும் பெற்று விளங்குமன்றோ?

கட்டில் செய்வதிலும் பழந்தமிழ் மக்களுடைய ஒப்பற்ற மனத்தத்துவ அறிவு நன்கு காணக்கிடக்கிறது.

மன்னன் வலிமை

இத்தகைய இன்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த தமிழ் மன்னன், தான் மன்னன் என்பதையும், பகை நீக்கி ஆள வேண்டுவது தன் கடமை என்பதையும் மறந்தானல்லன். பகை நீக்கம் என்றால் படை சேர்த்தல் என்பதுதானே கருத்து? இதோ அதனைச் செய்கிறான் தமிழ் மன்னன்.

தக்கதோர் மனை வகுத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் மன்னன், பரம்பரை உரிமையால் அத்தாயபாகத்தை எய்தினான் என்றே தமிழ் இலக்கியம் கூறுகிறது. கரிகாற்பெருவளத்தானுடைய தந்தை இளஞ்சேட்சென்னி, மைந்தன் பிறக்கச் சிறிது காலம் முன்னர் இறந்துவிட்டான் என்பதைக் குறிப்பிடவந்த முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர், கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கையிலேயே தாயபாகத்தைப் பெற்றுவிட்டான் என்று குறிப்பிடுகிறார்.

‘தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி’

(பொருநராற்றுப்படை 132)

என்ற அடியும்.

‘உருகெழு தாயம் ஊழின் எய்தி’

(பட்டினப்பாலை 227)

என வரும் பட்டினப்பாலை அடியும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

படையைப் போற்றல்

பரம்பரை உரிமையாற்பெற்ற இவ்வரசைத் தமிழ் மன்னர் தமது வீரம் ஒன்றையே துணையாகக் கொண்டு ஆண்டு வந்துள்ளனர். சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னும் மன்னனுடைய வலிமையைப் பாட வந்த முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர், நல்ல உவமை ஒன்றைத் தந்து அவனுடைய வலிமையை விளக்குகிறார்.

‘ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும் உடையோய்!’

(புறம்–2)

எனக் குறிப்பிடுகிறார். இப்பூதங்கள் உலகம் நன்கு வாழ உதவுகின்றன. என்றாவது இவ்வுலகம் தனது நிலைமை மீறிச் செல்லுமாயின், இதனை அழிக்கின்றன. அதே போலத் தமிழ் மன்னர்கள் பிற அரசருக்கும் வாழ உரிமை தந்து தாமும் வாழ்ந்தனர்; என்றாவது அப்பிறர் உரிமை மீறி வாழத் தொடங்கினால், அவரை அழித்தனர். அழிப்பதற்கு உரிய மனவன்மை, உடல் வன்மை, படைவன்மை என்ற மூன்றையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிகிறோம். காலன் கூடக் காலம் பார்த்தே கொல்லுவான். ஆனால், இவ்வரசர் காலங்கருதாதுகூட வெல்லும் ஆற்றல் உடையவர் என்றுங் கூறப் பெறுகின்றனர். இத்தமிழ் வேந்தர் ‘நால்வகைப் படையுடன் மாட்சிமைப்பட்ட’ அரசை நடாத்தினர் என பாடல்கள் மிகுதியும் தெரிவிக்கின்றன. போர் என்றவுடன் தோள்கள் வீங்கும் மறக்குடி மக்களை வீரர்களாகப் பெற்றிருந்தனர். அரசன் படையைத் தன் கண்போல் மதித்து நடத்தினான் என்ற உண்மையை படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் என்று கூறும் வள்ளுவர் வாய்மொழி தெரிவிக்கிறது. படைகளால் தாம் பெறும் வெற்றியை நன்கு உணர்ந்தவர்களாதலின், அப்படைகட்குச் சிறு சோற்று விழா (Tea Party) பெருஞ்சோற்று விழா (Dinner) முதலியன நடத்தி அவர்கட்கு எழுச்சி ஊட்டி வந்தனர் என்றும் அறிய முடிகிறது. சாவைப் பெறற்கு அரிய பேறாகக் கருதிய தமிழ் வீரர்களைப் பெற்றிருந்த இம்மன்னர்கள் ஓயாது போர் இட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

மனவலி

இத்தகைய படைவலி உடைய இம்மன்னர்களின் மன வலியும் கண்டு மகிழற்குரியது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனை எழுவர் சேர்ந்து எதிர்த்தனர். அவனோ, சிறுவன். ஆனால், மனவலியால் அவ்வெழுவரினும் மேம்பட்டவன். போர் மூண்டுவிட்டது என்று அறிந்த அப்பெருந்தகை வஞ்சினம் கூறுகிறான். எவ்வாறு?

‘எழுவரையும் அருஞ்சமம் சிதையத்தாக்கி
முரசமோடு ஒருங்கு அகப்படேன் ஆயின்

(புறம். 72)

‘யான் இவ்விவ்வாறு போவேனாக!’ என்று அவன் கூறுவதால் அவனுடைய உறுதி வெளிப்படுகிறது. இத்தகைய மனவலி படைத்தவர்கள் அரசராயிருந்த காரணத்தாலேதான் வீரர்களும் அத்தகையவர்களாய் இருந்தார்கள். இவர்களின் நெஞ்சு உரத்தை நன்கு அறிந்த வள்ளுவர்,

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

(குறள்-774)

என்பது போன்ற குறள்களால் இவ்வீரர்க்குச் சாவா வரந்தந்துவிட்டார்.

உடலழகு

ஓயாது போரிடுதலில் மிக்க விருப்பம் உடையவர்களாய் இருந்தார்கள் தமிழ் மன்னர்கள் என்று நினைக்க ஆதாரங்கள் பல உள.

‘இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாது.’ (புறம். 8)

என்பன போன்ற அடிகள் இவ்வரசர்களின் மனவெழுச்சியை அறிவிக்கின்றன. நெடுஞ்செழியன் ஓயாது போர் புரிந்து வாணாளைக் கழிப்பதைத் தடுத்து அவனை வாழ்க்கையை அனுபவிக்கச் செய்யவே ‘மதுரைக் காஞ்சி’ என்னும் மாபெருங்கவிதை தோன்றிற்று. மார்பிலும் முகத்திலும் புண்படுவதை விழுப்புண் என்று கூறுவர். அரசரும் வீரரும் இவ்விழுப்புண்களைப் பெற ஒருங்கே விரும்பினர். விழுப்புண் படாத நாட்களை வீணாளாகக் கருதுபவர் வீரர் எனக் குறள் கூறுகிறது. ஏனாதித் திருக்கிள்ளி என்பவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்ற புலவர் பாடிய பாடல் அந்நாள் அரசனின் உடல் அழகை எடுத்துக் காட்டுவதாய் உளது.

‘நீயே, அமர்காணின் அமர்கடந்துஅவர்
படைவிலக்கி எதிர்நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்குஇன் னாயே.”’

(புறம். 167)

ஓயாமற் செய்த போர்களிற் பெற்ற விழுப்புண் காரணமாக இவனுடைய உடல் முழுதும் தழும்பு ஏறியிருத்தலின், கண்ணுக்கு அழகு அற்றவனாய் உள்ளான். ஆனால், மிக்க புகழ் படைத்திருத்தலின், கேள்விக்கு இனியவனாகவும் உள்ளான் என்பதே இப்பாட்டின் கருத்தாகும்.

புலவர் பாடும் புகழ்

இத்துணைச் சிறந்த வீரர்களாக அரசர் இருப்பினும் பயனில்லை, அவர்களுடைய மனம் சிறந்து இல்லையாயின். இவ்வரசர்கள் என்றும் குடிகளுக்காகத் தாம் வாழ்வதை மறந்தார் அல்லர். உயர்ந்த குறிக்கோளைப் பெற்ற வாழ்க்கையே வாழ்ந்தனர்,

‘உள்ளுவ தெல்லாம் உயர்வுஉள்ளல், மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்ந்து,’

(குறள்-596)

என்ற பொய்யா மொழியை வாழ்க்கை விளக்கமாகக் கொண்டிருந்தனர் இன்றேல், இத்துணைப் பெரும்புலவர் பாடும் சிறப்பு இவர்கட்கு இருந்திராதன்றோ? கேவலம் உடல் வீரம் மட்டுமே உடையராய் இருந்திருப்பின், புலவர்கள் இவர்களை மதித்துப் பாடி இரார். அவ்வாறுள்ள அரசர்களைப் புலவர்கள் பாடுவதில்லை என்ற கருத்தையும் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் கூறுகிறார்.

‘வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வல்லவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப’

(புறம். 27)

[ஏற்றத் தாழ்வு இல்லாத சிறந்த குடியின்கண் பிறந்த அரசரை எண்ணுங்காலத்து, புகழும் பாட்டும் உடையோர் சிலரே. தாமரையின் இலையைப் போலப் பயன்படாமல் இறந்தவர் பலர். புலவரால் பாடப்படும் தகுதியுடையோர் ஆகாயத்திற் செல்லும் மனிதனால் செலுத்தப்படாத விமானத்தில் செல்வர்.]

இவ்வாறு கூறுவதால், ஆயிரக்கணக்கான தமிழ் மன்னருள் ஒரு சிலரே அவர்தம் சிறப்புக் காரணமாகப் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கினர் என அறிய வேண்டும். என்ன சிறப்பைப் புலவர் பாராட்டினர் என்று அறிதல் வேண்டும். அடுத்து, உடல் வீரத்தை அவர்கள் மதிக்கவில்லை எனில், மனவலி அல்லது ஊக்கம் ஒன்றையே போற்றி இருத்தல் வேண்டும். அரசருடைய மனநிலை எவ்வாறு இருந்தது என்று காணத் தமிழ் மன்னன் ஒருவன் பாடிய பாடலே நமக்குத் துணை செய்கிறது. சோழன் நல்லுருத்திரன் என்பவன் அரசனாய் இருந்தமையோடு பெரும் புலவனாயும் இருந்துள்ளான்.

மன்னன் மனநிலை

இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் கூடிய மன்னர் வாழும் நாடும் எத்தகைய சிறப்புடன் விளங்கியிருக்கும் என கூறவும் வேண்டுமோ? நெடுஞ்செழியனைப்பற்றி மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறிய சொற்கள் இன்றும் இக்கருத்தை விரிவுபடுத்தல் காணலாம், ‘உலகத்தையே பெறுவதாயினும், பொய்கூறாத வாய்மை உடையன். மனிதரே அன்றித் தேவரேவரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியமாட்டான். வாணனுடைய புகழ்பெற்ற செல்வத்தையே பெறுவதாயினும், பழியொடு வருவதாயின், விரும்பமாட்டான்!’

‘உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்துஒழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே’

(மதுரைக்காஞ்சி, 197–205)

தமிழ் மன்னருடைய மனநிலைக்கு இதைவிடச் சிறந்த இலக்கணம் கூறல் இயலாது. தன்னலம் என்பதைக் கனவிலும் கருதாத அப் பெருமக்கள் பிறர் பொருட்டே வாழ்ந்தார்கள் என்பது இதிலிருந்து விளங்குகின்றதன்றோ? இன்னும்,

‘அரிய எல்லாம் எளிதினின் கொண்டு
உரிய எல்லாம் ஓம்பாது வீசி’

(மதுரைக்காஞ்சி 145-64)

என வரும் அடிகள் முற்கூறிய கருத்தை வலியுறுத்தல் காணலாம்.

அறப்போர்

போரிடுங் காலத்திலும் இவர்கள் தம்முடைய பண்பாட்டிலிருந்து தவறுவதில்லை. போர் புரியத் தொடங்கு முன்னரே பகைவருடைய நாட்டில் உள்ளவர்களைப் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடிவிடுமாறு எச்சரிக்கும் நற்பண்புடையவர். “பசுக்களும், பசுத்தன்மை பெற்ற அந்தணர்களும், பெண்டிரும், பிணியுடையவர்களும் பிதிர்க்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர் பெறாதவர்களும், யாம் போர் தொடுக்கப் போவதால் உடனே உமக்குப் பாதுகாவலான இடத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்” (புறம். 9) என்று பறை அறிவிப்பர் இம் மன்னர் எனில், இவர் பண்பாட்டை அறிய இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

விதிவிலக்கு

அறநெறி பிழையாது போர் இட்ட இம்மன்னர் கூட்டத்தின் நடுவே ஒரு சிலர் இம்முறைக்கு மாறாகவும் நடந்துகொண்டனர் என்பதும் உண்மையே. ஏனைய சமயங்களிற் செம்மையாக நடந்துகொள்ளும் நல்ல அரசர்கள்கூட ஒவ்வொரு சமயத்தில் இடித்துக் கூறுவார் இல்லாத காரணத்தாலோ, என்னவோ தவறு இழைத்து உள்ளனர். பகைவருடைய நாட்டையும் அரணையும் அழித்து அவர் நிலங்களில் கழுதை பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுவித்தலையும் (புறம். 15) ஒரு பாடலில் கேட்கத்தான் செய்கிறோம்.

கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழாக,
ஏம நன்னாடு ஒள் எளி ஊட்டினை

(புறம். 16)

என்பது போன்ற பாடல்கள் மிக மிகச் சிலவே. தொகையாகச் சேர்க்கப் பெற்ற புறம் போன்ற நூல்களில் இத்தகைய பாடல்கள் ஒன்றிரண்டு காணப்படுதலான் ஓர் உண்மை நன்கு விளங்கும். அற்றை நாளில் தமிழ் மன்னர் இருந்த நிலையை உள்ளவாறு விளக்கவேண்டும் என்ற காரணத்தால் பொய் அறியா நன்மாந்தர் வேண்டும் என்றே இத்தகைய பாடல்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான மன்னர் மிகச்சிறந்தவராய் இருந்தனர் என்பதும், ஒரு சிலர் தவறான வழியில் சென்றனர் என்பதும் அறிய முடிகிறது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து இதைப் பெருந்தவறு என்றும் கூறுவதற்கில்லை. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் போரில் தோற்றாரைத் துன்புறுத்தலினும் அவர் நாட்டை எரி ஊட்டலினும் தவறு ஒன்றும் இல்லை என நினைத்திருக்கலாம் அல்லவா? எரியூட்டல் முதலிய செயல்கள் நாகரிகம் முதிர்ந்ததாகக் கருதப் பெறுகிற இற்றை நாளிலும் மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒன்றுதானே? இற்றை நாள் மேலை நாட்டார் நாகரிகத்துடன் ஒப்பிட்டால் இச்செயல்கள் தவறுடையன எனக் கூறுவதற்கில்லை. ஆனால், ‘யாதும் ஊரே யாவருங் கேளிர்’ என்ற பழந்தமிழன் பண்பாட்டோடு ஒப்பிட்டால், தவறுடையதுதான் என்பதில் ஐயமில்லை.

தூய படுக்கை

இத்தகைய அரசர்களுடைய புறச்செயல் முதலியவற்றைக் கண்டோம். இனித் தனித்த முறையில் அரசனைப் பற்றிச் சிறிது காண்டல் வேண்டும். தமிழ் மன்னன் காட்சிக்கு எளியனாய் இருந்தமையோடு காட்சிக்கு அழகனாயும் இருந்தனன் என நினையவேண்டியுளது. அவன் உடை முதலியவற்றால் பொலிவுற்றிருந்ததை இலக்கியத்தில் காணலாம். அவன் படுத்து உறங்கும் கட்டில் தூக்கு மாலைகளால் பொலிந்து விளங்கினது என்ற கருத்தில்,

‘கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி’

(மதுரைக்காஞ்சி 7131)

என்ற ‘மதுரைக் காஞ்சி’ ஆசிரியர் குறிக்கிறார். ‘சிந்தாமணி’யாரும்,

‘ஐந்து மூன்று அடுத்து செல்வத்து அமளி இயற்றி’

(சீவகசிந்தாமணி 888)

என்று கூறுகிறார். ஆதலின், இம்மன்னர்கள் தாம் உறங்கும் படுக்கையிடத்து எத்துணைக் கருத்துச் செலுத்தினர் என்பது ஆய்தற்குரியது. ‘நெடுநல் வாடை’ என்ற பாடல் அரசனுடைய கட்டிலைப் பற்றி வருணிக்கின்ற முறையை இன்றுங்கூட முழுவதும் அறிவது கடினமாய் உள்ளது.

இன்று நம்முடைய நாட்டில் செல்வர்கள் கூடப்படுக்கை எவ்வாறு இருந்தால் என்ன என்ற கருத்துடன் இருக்கக் காண்கிறோம். வீட்டின் பிற பகுதியை நன்கு வைத்துக் கொள்பவர்கள் கூடப் படுக்கையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கக் காண்கிறோம். ஆனால் நடுத்தர வாழ்வு வாழும் ஆங்கிலேயர்கள் முதலிய பிற நாட்டார் படுக்கையை வைத்துக்கொள்ளும் சிறப்பையும், பழைய தமிழ் மன்னர்களின் படுக்கை பற்றிய வருணனைகளையும் காணும் பொழுது இதில் ஓர் உண்மை இருப்பதை அறிய முடிகிறது. படுக்கை இருக்கும் தூய்மை, சிறப்பு என்பவற்றிற்கேற்பப் படுப்பவனுடைய மனமும் துய்மை உடையதாய் இருக்கும் போலும்! ஆடம்பரமற்ற முறையில் படுக்கை இருப்பினும். அது தூய்மையுடன் வைத்துக் கொள்ளப்பட வேண்டுவது என்ற கருத்தை வள்ளுவப் பெருந்தகையும் வலியுறுத்துகிறார்,

“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்” (குறள்-840)

என்ற குறளில்,

திருந்து துயில்

இத்தகைய படுக்கையில் உறங்கும் வாய்ப்பைப் பெற்றவர் அனைவரும் நன்கு உறங்குகின்றனர் என்று கூறல் இயலாது. மனிதனுடைய மனம் எவ்வளவுக் கெவ்வளவு கவலையற்றிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு ஆழ்ந்து இனிமையாகவும் உறங்க முடியும் என்பதை அவரவர் அனுபவத்திலும் மனோதத்துவர் கூற்றிலும் காண்டல் கூடும். பெரிய பொறுப்பு வாய்ந்த பதவியை நடாத்திய தமிழ் மன்னர்கள் மனநிலையில் எவ்வாறு இருந்தார்கள் என்பதையும் தமிழ்ப் பாடல்களிலிருந்து ஒருவாறு அறிய முடிகிறது. மதுரைக் காஞ்சியாசிரியர் மன்னன் ஒருவன் உறக்கத்தை நீத்து எழுந்தான் என்று கூறவரும் பொழுது,

‘திருந்து துயில் எடுப்ப இனிதின்னழுந்து’

(மதுரை. 714)

என்று கூறும் அடி அம்மன்னனைப் பற்றிய பல உண்மைகளை நமக்கு அறிவிக்கிறது. சாதாரணமாகவே அதிகப் பொறுப்புள்ள வாழ்க்கை வாழ்கிறவர்கள் நன்கு உறங்கமுடியாது. அவருள்ளும் மன்னன் வாழ்க்கை பற்றிக் கேட்க வேண்டுமா?

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம்
குடிபுரவு உண்டும் கொடுங்கோல் அஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல்.

(சிலம்பு25 : 100-104)

(மழை குறைந்தாலும், உயிர்கள் துன்புற்றாலும் மன்னன் கொடுங்கோலனென்று துாற்றப்படுகிறான். ஆதலின், மக்களைக் காக்கும் மன்னர் குடிப்பிறத்தலினும் துன்பம் வேறு இல்லை)

என்று அரசர் குடியிற்பிறந்த இளங்கோவடிகளே குறிக்கின்றார். எனவே, மன்னனாய்ப் பிறந்த ஒருவன் மன அமைதியோடு உறங்குகிறான். எனில், அதில் பெரியதோர் உண்மை இருத்தல் வேண்டும். இக்காலத்தில் அமெரிக்கா போன்ற நாகரிகமும் பணமும் நிறைந்த நாடுகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் ‘உறக்க மாத்திரைகள்’ பயன்படுத்தினால் ஒழிய உறங்க முடிவதில்லை என்பதை அறிகிறோம்.

இவை அனைத்தையும் மனத்திற்கொண்டு மதுரைக் காஞ்சியார் கூறிய ‘திருந்து துயில்’ என்ற சொற்களைக் காண்போம். ‘திருந்து’ என்ற அடைமொழியைத் துயிலுக்கும் ‘இனிதின்’ என்ற அடைமொழியை எழுந்து என்ற சொல்லுக்கும் பெய்து பாடுகிறார் ஆசிரியர். இக்காலம் போன்று பயனின்றி அடைமொழி தந்து பாட மாட்டார்கள் சங்கப் புலவர்கள். அவ்வாறு மிகுதியான சொற்கள் காணப்பட்டால், அங்கு நின்று ஆய வேண்டும். ‘திருந்து’ என்றும் ‘இனிதின்’ என்றும் கூறும்பொழுது ஆசிரியர் ஏதோ ஒரு பெரிய கருத்தைத் தெரிவிக்கின்றார். துயிலைத் திருந்து துயில் என்று குறிப்பிடுவதால், மனக் கவலையின்றி ஆழ்ந்து உறங்கும் உறக்கத்தையே குறிக்கிறார் ஆசிரியர். இத்தகைய ஆழ்ந்த உறக்கத்தை யார் பெற முடியும்?

பச்சிளங் குழந்தைகளும் மெய்ஞ்ஞானிகளும் மட்டுமே படுக்கையிற் படுத்தவுடன் உறங்கிவிடுகிறார்கள். மேலும், உறங்கும்பொழுதும் அரைகுறையாய் உறங்காமல், கனவு முதலியவற்றால் அல்லற்படாமல், நன்கு உறங்குகிறார்கள். குழந்தைகளும் மன உறுதியுடையாரும் இவ்வாறு உறங்கக் காரணம் யாது? இவ்விருவரும் மனக் கவலை இன்றி இருப்பதால் உறங்க முடிகிறது. எனவே, ஒருவன் திருந்திய துயில் கொள்ளுகிறான். எனில், அவன் மனம் கவலை அற்றுள்ளது என்பதே பொருள். துறவியின் மனம் கவலை இன்றி இருத்தல் கூடும். ஆனால், மன்னன் ஒருவன் இவ்வாறு சிறிதும் கவலை இன்றி இருக்கிறான். எனில், அது வியப்பானதே. பழந்தமிழ் மன்னர்கள் கவலையின்றி இருந்தார்கள். கவலை இன்றி இருப்பதென்றால், அது இருவகையிற் கூடும். கல் மனம் உடையவனாய், பிறர் வாழ்வு தாழ்வில் கவலையற்றவனாய், பொறுப்பற்றவனாய் இருக்கும் ஒருவனும் கவலையற்றிருத்தல் கூடும்.

தமிழ் மன்னர்கள் பற்றிய பாடல்களைப் பார்த்தால், அவர்கள் இவ்வாறு பொறுப்பற்றிருந்தார்கள் என்று கூறல் இயலாது. எனவே, வேறு ஒரு காரணம் பற்றியே அவர்கள் திருந்திய துயில் கொண்டிருத்தல் கூடும். அக்காரணமாவது யாது? வாழ்வின் உட்பொருளை நன்கு உணர்ந்தும் அரசராய்ப் பிறந்துள்ள தம் பொறுப்பை நன்குணர்ந்தும் வாழ்ந்தனர் அற்றை நாள் மன்னர்கள். மேலும், அக்கடமையை நன்கு நிறைவேற்றினமையின், கிடைத்தற்கரிய அமைதி என்ற பரிசைப்பெற்றனர். கடமையை நன்கு நிறைவேற்றியதால் உண்டாகும் மன நிறைவில் பிறந்த உறக்கமே அவர்கள் உறங்கிய உறக்கமாகும். இதனையே ஆசிரியர் ‘திருந்து துயில்’ என்ற சொற்றொடரால் குறிப்பிடுகிறார்.

இதனையடுத்து, ‘இனிதின் எழுந்து’ என்று வரும் சொற்களும் ஆய்தற்குரியன. விடியற்காலை எழும்பொழுது நம்மில் எத்துணைப் பேர்கள் மன நிறைவுடனும் சிரித்த முகத்துடனும் எழுகின்றோம்? இவ்வாறு எழவேண்டுமாயின், இரவு நல்ல முறையில் உறங்கி இருத்தல் வேண்டும். எனவே, இனிய முகத்துடன் மன்னன் எழுந்தான் என்று ஆசிரியர் கூறும்பொழுது அம்மன்னனுடைய வாழ்வையும் பண்பாட்டையுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டி விடுகிறார். தெளிந்த மனத்துடன் எழும் அம் மன்னன் நன்கு கடமையாற்றத் தயாராகிவிடுகிறான்.

வழிபாடு

இவ்வாறு எழுந்தவுடன் அம் மன்னன் படுக்கையில் இருந்தபடியே அன்றாடம் ஆற்றிமுடிக்கவேண்டிய கடமைகளைப் பற்றிச் சிந்திக்கிறான். பழந்தமிழர் போற்றிச் செய்து வந்த இச்செயலைப் பிற்காலத்தெழுந்த ஆசாரக் கோவை என்ற நூல் அனைவருக்கும் உரிய கடமையாக வகுக்கின்றது.

‘வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல் அறனும் ஒண்பொருளும் சிந்தித்து’

(ஆசாரக்கோவை)

என்று கூறும் அடிகளில், இக் கடமை முடிந்தவுடன் அரசன் நீராடிவிட்டு உடையுடுக்கிறான்; அடுத்துக் கடவுட் பூசையில் ஈடுபடுகிறான்.

வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி

(மதுரைக்காஞ்சி–723.724)

என்ற மதுரைக் காஞ்சி அடிகள் அவன் செய்யும் இச்செயலையும் நமக்கறிவுறுத்துகின்றன. பின்னர் உணவுண்டு, நல்ல மணம் பொருந்திய சந்தனத்தைப் பூசி, பெரிய முத்து மாலையை அணிகின்றான். ஒளி பொருந்திய ஏனைய மணிமாலைகளுடன், மலர் மாலையையும் அணிகின்றானாம்; கைவிரல்கள் நிறைய மணிகள் அழுத்தின மோதிரங்களையும் அணிகின்றானாம்; இத்தனைக்கும் மேலாக அன்றாடம் சலவை செய்யப்பெற்ற உடைகளை அணிகின்றானாம். துணிகட்குக் கஞ்சியிட்டுச் சலவை செய்தல் இக்கால வழக்கம் என்று யாரும் நினைத்துவிட வேண்டா. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நாட்டில் மன்னர்கள் இதனையே அணிந்தனர் என்பதைச்

“சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்”

(மதுரைக்காஞ்சி–721)

என்ற அடியால் அறியலாம்.

உடைச் சிறப்பு

இத்துணை அலங்காரங்ளுடன் காலை நேரத்தில் மன்னன் காட்சி தருகின்றான். ஆங்கிலர் ஆட்சித் தொடக்கம் வரையில் நிலை பெற்றிருந்த இந்திய நாட்டின் உடைச் சிறப்புத் தமிழ் நாட்டில் தொடங்கியதெனக் கூறலாம். அற்றை நாளில் தமிழ் நாட்டில் நெய்யப்பெற்ற மெல்லிய துணிகட்கு என்ன பெயர்கள் தந்தார்கள் என்று கூற முடியாவிடினும், ‘டாக்கா மஸ்லின்’ போன்றிருந்தன அவை என்று மட்டும் கூற முடியும். பழந்தமிழ் மன்னர்களும் பிற செல்வர்களும் உடுத்த உடைகள் எவ்வாறிருந்தன என்பதை அவர்கள் பாடலில் தோன்றும் உவமைகளால் மட்டுமே அறிய முடிகிறது. உடைகளைப் பற்றிய சில குறிப்புகள் அறியற்பாலன.

“புகைவிரிந் தன்ன பொங்குதுகில்” (புறம். 398)
“ஆவி நுண்துகில் யாப்புறுத்து” (பெருங்கதை 136–64)

நிறங்கிளர் பூந்துகில் (சிலம்பு. 688)

நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

(சிலம்பு.1:207)


என வரும் இவ்வடிகள் தமிழ்நாட்டின் தொழில் வளத்தைக் காட்டுவதுடன் மன்னர் அணிந்த உடை வளத்தையும் காட்டி நிற்கின்றன. அடுத்து உணவுகொண்டு மன்னன் நாள் ஓலக்கத்திற்குச் சென்றமை அறியமுடிகிறது. இவ்வரசர்கள் அவைக்குச் செல்லு முன் அன்றைப் பொழுதுக்கு இவருக்கு ஏவலராக அமைந்துள்ளவர் பெயர்ப் பட்டியலை வாசிக்கும் பழக்கம் இருந்ததாகவும் அறிய முடிகிறது. அன்றாடம் அரசனுடைய மெய் காப்பாளர், உறங்கும் இடத்தைக் காவல் புரிபவர் என்ற இருவகை ஏவலாளருமாவர் இவர். பெருங்கதை என்ற நூலில்,


புரிதார் நெடுந்தகை பூவணை வைகிய,
திருவீழ் கட்டில் திறத்துளி காத்த
வல்வேல் சுற்றத்து மெய்ம் முறை கொண்ட
பெயர் வரி வாசனை கேட்ட பின்

(பெருங்கதை–34:5–8)

என வரும் அடிகள் பழந்தமிழ் மன்னரின் வாழ்வில் ஒரு பகுதியை அறிவிக்கின்றன. இப்பழக்கம் ஹிட்லர் காலம் வரையும் இருந்ததைக் கண்டோம்.

உணவுச் சிறப்பு

அரசர்கள் உணவும் பல்வகைச் சுவையுடையதாய், சத்துள்ளதாய் இருந்துளது. அரிசி உணவையே பெரிதும் விரும்பியுண்டனரெனினும், இற்றை நாளில் யாண்டுங் கிடைக்காத செந்நெல் என்பதை அற்றை நாளில் மிகுதியும் பயன்படுத்தினர். சத்துப்பொருள் முறையில் இச்செந்நெல் அரிசி மிகுதியும் சத்துடையதாய் இருந்திருக்குமெனத்– தெரிகின்றது. ஒரு மன்னன் பாடிச்சென்ற பரிசிலர்க்கு உணவு தருமுறை கூறப்படுகிறது சிறுபாணாற்றுப் படை என்ற நூலில், அதிலிருந்து மன்னன் உணவையும் அதனை உட்கொள்ளு முறையையும் ஒருவாறு ஊகிக்கலாம். வீமன் இயற்றிய சமையற்கலை நூலின் நெறியில் தப்பாமல் பல சுவையுடன் செய்யப்பெற்ற அடிசிலை விண்மீன்கள் சூழப்பட்ட இளஞாயிறு போலக் காட்சிதரும் பொன் பாத்திரத்திடத்தே தந்தனனாம். இக்கருத்துப்பட வரும் பாடற்பகுதி.

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவளின் வழாப் பல்வேறு அடிசில்
வாள்நிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்குபொன் கலத்தில் தான் நின்று உட்டி

(சிறுபாணாற்றுப்படை 237–244)

என்பதாகும். அரசன் பரிசிலர்க்குந் தரும் முறை இதுவானால், அவன் உணவு முறை பற்றிக் கூறவும் வேண்டுமோ? தமிழ் மன்னன் பெருஞ்செல்வம் பெற்றிருந்ததுடன் அதனை நன்கு அனுபவிக்கவும் பழகி இருந்தான்.

அரசர் அவை

பழந்தமிழ் மன்னர்கள் உண்டு உடுத்து வாழ்வதையே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய இடம் அரசவையாகும். பழந்தமிழ் மன்னர்கள் அலங்கரித்த அவைகள் பல பெயர்களால் வழங்கப் பெற்றன. ஓலக்கம், நாளோலக்கம், பெருநாளவை என்ற பெயர்களால் அவ்வகைகள் குறிக்கப்பெற்றன. அரசர்கள், அமைச்சர், ஐம்பெருங்குழு, எண்பேராயம், பிற நாட்டுத் தூதுவர் முதலியவர்களால் சூழப்பட்டிருப்பார்கள். அவ்வவைகளில் பரிசிலர் இனம் மட்டுமே அவ்வோலக்கத்தின் கண் ஆணை இன்றியும் நுழைதல் கூடும்.

“நசையுநர்த் தடையாநன்பெரு வாயில்”

(பொருநராற்றுப்படை 66,71)

என்றும்,

பொருநர்க்காயினும், புலவர்க்காயினும்,
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி

(சிறுபாணாற்றுப்படை 203-6)

என்றும் வரும் அடிகள் பெரு நாளவைகளின் சிறப்பை அறிவிக்கின்றன.

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

அரசர்களைச் சுற்றியுள்ளவர்கள் ‘உழைவர்’ (பெருங். 4:13:23) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். ஐம்பெருங் குழுவும், எண்பேராயமும் இவ்வுழையர்கள் சேர்ந்தனவே. ஐம்பெருங்குழுவினுள் யார் யார் அமைவர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் (சிலம்பு. 5:157) எனவரும் இடத்தில் அரும்பத உரையாசிரியர் இவர்களை “சாந்து, பூ, கச்சு, ஆடை, பாக்கு, இலை, கஞ்சுகம், நெல் ஆய்ந்த இவர் எண்மர் ஆயத்தார்” என்றும், “வேந்தர்க்கு மாசனம், பார்ப்பார், மருத்தர், வாழ்நிமித்தரோடு அமைச்சர் ஆசில் அவைக்களத்தார் ஐந்து” (சிலம்பு 5:157 குறிப்புரை) என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அடியார்க்கு நல்லார், ‘அமைச்சர் புரோகிதர், சேனாபதியர், தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப்படுமே என்றும், கரணத்தியலவர், கருமகாரர், கனகச் சுற்றம், கடை காப்பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவளி (குதிரை) மறவர், இணையர் எண்பேர் ஆயம் என்ப,’ (சிலம்பு. 5:157 உரைப்பகுதி) என்றும் கூறுகிறார்.

இவ்விரு உரையாசிரியர் கூற்றையும் நோக்குமிடத்து அரசரைச் சுற்றி இருப்போர் காலாந்தரத்தில் மாறினர் என்று நினைக்க இடமுண்டு என்றாலும், அடியார்க்கு நல்லார் கூறினவர்களே அரசவையில் உடனிருந்து பங்கு கொள்ளத்தக்கவர்கள் என்று கூறல் பொருந்தும். சாந்து கொடுப்போர், பூக்கொடுப்போர் முதலியவர்கள் அரசவையில் இருக்கக்கூடிய தகுதியுடையவர்களா என்று ஆயுமிடத்து அடியார்க்கு நல்லார் கூறினவர்களே தகுதியுடையார் என்பது நன்கு விளங்கும். அரசவையில் இருப்போர் அரசனுடன் மந்திர ஆலோசனையில் ஈடுபடத் தகுதியுடையவராய் இருத்தல் வேண்டாவா? அமைச்சர் முதலானோருடன் பூத்தருவோரையும், உடை அணிவிப்போரையும் வைத்தெண்ணுதல் பொருத்தமுடையதாகப்படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்யுமிடமும், பரிசிலர் முதல் வெளிநாட்டுத் துதுவர் வரை அனைவரையும் வரவேற்குமிடமும் இந்நாளோலக்கமேயாகும்.

பழந்தமிழ் மன்னர்களுடைய நாளோலக்கத்தை நாம் இன்றும் அறிய வாய்ப்பைத் தந்தது. அவர்கள் பரிசிலர்களையும் இவ்வோலக்கத்தில் அனுமதித்ததேயாகும். ஏனையோர் பலநாள் காத்திருந்தும் அரசனுடைய செவ்வி கிடைக்கப் பெறாமல் மனம் மறுகி இருக்கவும், பரிசிலர் மட்டும் யாதொரு விதமான தடையும் இன்றி உட்புகுதல் எத்தகைய செயல்? தமிழ் மன்னர்களுடைய மனநிலையை எடுத்துக்காட்ட இதைவிடச் சிறந்த செயல் வேறு யாது வேண்டும்?

‘செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே தப்புந பலவே,’

(புறம்–189)

என்று நக்கீரர் புறநானூற்றில் (189) கூறியதை இம்மன்னர்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டனர் போலும்! தமிழ் மன்னர்கள்,

‘காட்சிக் கெளியராய்’

(குறள். 396)

இருத்தல் வேண்டும் என்று பொது மறை வகுத்த சட்டத்திற்கும் இம்முறை ஏற்றதாய் உளது.

அரசன் எதிரில்

அரசனுடைய அவையில் உள் நுழைவோர் நடந்து கொள்ளும் வகையை அறியப் பல வாய்ப்புக்கள் உள்ளன. இன்று பெருங்கதை என்ற நூலும் சிலப்பதிகாரமும் அரசவையில் புகுவோர் நடந்து கொள்ள வேண்டிய முறையை அறியப் பயன்படுகின்றன. கணவனை இழந்த கண்ணகி இணையரிச்சிலம்பு ஒன்று ஏந்திய கையளாய்ப் பாண்டியன் அரண்மனை வாயிற்காவலனை உள்ளே சென்று அறிவிக்க வேண்டுகிறாள். அவள் தோற்றத்தைக் கண்டஞ்சிய காவலன் உள்ளே ஓடுகிறான். காணாத செயலைக் கண்டிருப்பினும், நடவாத செயல் நடந்துவிட்ட தென்பதை அறிந்துங்கூட, உள்ளே சென்று மன்னன் அவையில் நுழைந்த அவன் பேசுவது வியப்பையே தருகிறது.

பாண்டியன் அவையுள் நுழைந்த வாயிற்காவலன்,


‘வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி!’

(சிலம்பு 20:30–34)

என்று கூறிவிட்டுப் பின்னரே தான் கூற வந்ததைக் கூறுகிறான். எனவே, இவ்வாறு அரசனைக் காண்போர் வாழ்த்திய பின்னரே வந்த காரியத்தை எடுத்தியம்ப வேண்டும் என்ற வரன்முறை அற்றை நாளில் இருந்திருக்கும் போலும்! இவ்வாறு வரன்முறை வைத்ததற்கும் ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அரசனைப் பார்க்க வருபவர் பல்வகையான செய்தியையும் கொணர்வர். அவ்வாறு நுழைபவர் தம்முடைய உணர்ச்சிகட்கு இடந்தந்து பேச முற்படுவாராயின், அரசனுக்கு அதனால் நடுவு நிலை நீங்க நேரிடும். எனவே, செய்தி கூற வருபவர், தாம் வந்த காரியத்தை உடனே கூறாமல், அவனைப் பல படியாக வாழ்த்திவிட்டுத்தான் கூறவேண்டுமெனில், வந்த உணர்ச்சி வேகத்தில் பாதியை இழந்துவிடுவர். இவ்வகையான ஒரு நலத்தையும் இவ்வாழ்த்து முறை தருதலைக் காணலாம். பழந்தமிழ் மன்னர் அவைக்களம் முழுவதிலுமே இப்பழக்கம் இருந்துவந்ததென்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.

வணங்கிய தலையர்

அவையுள் அரசனைக் காண வருபவர் இவ்வாழ்த்தை வாயினாற் கூறுவதோடன்றிச் செய்யவேண்டிய செயல்கள் சிலவும் உண்டு. அவற்றை அறியப் பெருங்கதை உதவுகிறது. “பிரச்சோதன மன்னன் கணக்கர்களையும், அரசன் கருவூலத்தைக் (பொக்கிஷம்) காப்பவரையும் அழைத்து வர ஏவுகின்றான். இவ்விரு கூட்டத்தாரும் அரசவையுள் நுழையும்பொழுது முழங்காலிவிட்டு, போர்வையாகிய மேலுடையை மடக்கிக்கொண்டு, நிலம் தொட்டு வீழ்கின்ற தம் உடையை மடக்கிக்கொண்டு, வணக்கஞ் செலுத்திக் கொண்டு, அண்ணாந்து அரசனைக் காணாமல், குனிந்த படியே அவன் ஏவலைக் கேட்டனர்,” என்று அந்நூல் கூறுகிறது.


கணக்கரை வியன்கரக் கலவரைக் காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமின் ஈங்கெனப்
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய்வு உடுத்த நெடுநுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந்து இயலா ஆன்றுபுரி அடக்கத்துக்
கண்ணி நெற்றியர் கைதொழுஉப் புகுதர

(பெருங்கதை 1:62–67)

என்ற அடிகள் அரசவைப் புகுந்த அரசன் ஊழியர் யாவரேனும் நடந்து கொள்ளும் முறையை நன்கு அறிவிக்கின்றன. இவ்வித முறையில் மரியாதை காட்டுவதால்தான் அரசன் பெருமையடைகிறானோ என்று ஐயுற வேண்டா. என்ன இருந்தாலும் மன்னனே நாட்டிற்கு உயிர் போன்றவன் என்று கருதப்பட்ட நாளில் இவ்வாறு ஏவலரும் பிறரும் அவனிடம் பணிவு காட்டியதே அவனுடைய பெருமையை அறியாதாருக்கு அறிவிப்பதாயிருந்தது. இவ்வாறு பெருமை தரும் இயல்பு மன்னன் என்னும் மனிதனுக்கு மட்டுமின்றி, அவனுடைய அதிகாரத்திற்கும் காட்டப்பட்டது என்று கருதுதலும் தவறன்று.

உறங்குமாயினும் மன்னவன் தன்ஒளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்,

(சிந்தாமணி–248)

என்று திருத்தக்க தேவர் கூறுவது இது கருதியேயாம். மன்னன் இல் வழியும் அவன் அமர்ந்து ஆட்சி செய்யும் இடத்திற்கும் இம்மரியாதை காட்டப்பட்டது.

தேவி உடனிருத்தல்

இத்துணைப் பெருமைவாய்ந்த அரசவையில் அரசன் வீற்றிருக்கும் பொழுது அரசியும் உடன் இருந்தாள் என்றும் அறிகிறோம்.

தேவியர்க்கு எல்லாம் தேவி யாகிக்
கோவீற்று இருப்புழிப் பூவீற்று இருந்த
திருமகள் போல ஒருமையின் ஒட்டி
உடன்முடி கவித்து கடன்அறி கற்பின்
இயற்பெருந் தேவி

(பெருங்கதை 24:20)

என்ற அடிகள் அற்றை நாள் தமிழ் மன்னர் பெண் இனத்திற்குக் காட்டிய பெருமையை எடுத்தியம்புகின்றன. ஆம்! ஔவையும், வெள்ளிவீதியும், ஒக்கூர் மாசாத்தியும் பிறந்த தமிழ்நாட்டில் பெண்கட்கு மதிப்புத் தருதலும், சமஉரிமை தருதலும் இயல்பே அன்றோ? இத்துணை உரிமைகளை மகளிர்க்கு அளித்திருந்தும், வருந்தத்தக்க ஒரு நிலையாதெனில், இம்மன்னர்களனைவரும் பலதார மணஞ்செய்து கொண்டவர்களாகவே இருந்தனர். பெருங்கதை போன்ற காப்பியங்கள் இவர்களை ஆயிரக் கணக்கில் கூறுவதைக் காணலாம்.

காணிக்கை

அரசனை அவையிற்சென்று காண்போர் காணிக்கையாகச் சில பொருள்களைக் கொண்டு சென்று காண்டல் மரபாகும். இப்பொருளைப் பண்ணிகாரம் (3.18.24) என்ற சொல்லால் குறிக்கிறது பெருங்கதை. செல்பவர் தகுதிக்கேற்பவும், அவர் வேண்டும் குறைக்கு ஏற்பவும் உயர்ந்தனவும் சாதாரணமானவும் ஆன பொருள்களைக் கொண்டு செல்லல் மரபு. சேரன் செங்குட்டுவன் மலை வளங் காணச்சென்று தங்கிருந்த பொழுது மலைவாணர் மலைபடு பொருள்களைக் கொணர்ந்து தந்து அவனை வழிபட்டமையைச் சிலப்பதிகாரம் விரிவாகப் பேசுகிறது. (சிலம்பு 25, 36—55)

அவையே நீதி மன்றம்

பழந்தமிழ் மன்னனுடைய அவை நீதிமன்றமாகவும் இருந்தமையைக் கண்ணகி வழக்குரைத்தல் மூலம் கண்டோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியை நோக்கிப்,


பெண் அணங்கே, ...
கள்வனைக் கோறல் கடுங்கோலன்று!
வெள்வேல் கொற்றம் காண்!

(சிலம்பு 20:63)

எனக்கூறியதும் அவனுடைய அவையிடத்தேதான். அற்றைநாளில் கொலையல்லாத பிற குற்றம் செய்தவர்கள் வேறு தண்டனை பெறாமல் தம் நிறையளவு பொன்னை அரசனுக்குத் தண்டமாகக் கொடுத்து விடுதலை பெறும் பழக்கமும் இருந்ததாக அறிய முடிகிறது. இக்கருத்தைப் பழைய குறுந்தொகைப் பாடல் விரிவாகப் பேசுகிறது.


மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும்

(குறுந்தொகை–292)

கொள்ளாத மன்னன் நன்னன் ஆவான். தமிழ் மன்னர் பல சந்தருப்பங்களில் அளவு மீறிய தண்டனையளித்தனர் என்பதையும் அறிவிக்கிறது. நீராடு துறையில் நீருடன் வந்த மாங்காயைத் தின்றுவிட்டாளாம் ஒரு பெண். அந்நாட்டு மன்னன் நன்னன் மாங்காய் தின்ற குற்றத்திற்கு அவள் தந்தை தருவதாகக் கூறிய பொருள்களையும் (81யானைகளும் அவள் நிறை பொன்னும்) பெற மறுத்து, அவளைக் கொன்றே விட்டானாம்! இத் தீச்செயலால் அவன் பெண் கொலை புரிந்த மன்னன், என்ற பழிச்சொல்லைப் பெற்றான்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகால்பெருவளத்தான், பாரி போன்ற நன்மன்னர்களே தமிழ்நாட்டை ஆண்டிருப்பார்கள் என்று கூறுவது பொருத்தம் ஆகாது.

ஒரோவழி நன்னன் போன்ற கொடுங்கோலர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

எனவே சங்கப் பாடல்களில் கொடுங்கோல் மன்னர்ப் பற்றிய குறிப்புகள் பொதுவாகவே உள்ளன.


அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து
தொல்கவின் அழிந்த கண் அகன் வைப்பு
                                                                (பதிற்றுப்பத்து 13)
அம்புடை ஆர்எயில்உள் அழித்துஉண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்
                                                               (பதிற்றுப்பத்து 20)
பின் பகலே அன்றி பேணார் அகநாட்டு
நண்பகலும் கூகை நகும்

அளவிற்கு நகர்கள் பாழாயின. ‘அறத்தாறு நுவலும் பூட்கை’ என்று புறநானூறு போர் அறம் கூறுமேனும் அதற்கு மாறாக நிகழ்ந்த போர்வெறிச் செயல்களின் மிகுதியைப் பதிற்றுப் பத்தும், புறநானூறுமே கூறக் காண்கிறோம்.

வாழ்த்தியல் துறையினும், வாடுக, இறைவ! நின் கண்ணி–ஏனோர் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே என்றெல்லாம் அறம் வேட்கும் புலவர் பெருமக்களே பாடியுள்ளமையும் காணப்படுகிறது.

தமிழ் மன்னர் நாளோலாக்கம் மிக்க சிறப்புடையதாயினும் அவருள்ளும் சில பேதையர் இல்லாமற் போகவில்லை. இளவிச்சிக்கோ என்பானுடைய அரசியலைப் பாட வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்,


வயங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின்
அணங்குசால் அடுக்கம்பொழியநும் ஆடுமழை,
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.
                                                                    (புறம், 151)

என்று பாடுவதால், பரிசிலரை வரவேற்காத அவைகளும் ஒரோ வழிச் சில இருந்தன என்பது அறியப்படுகிறது.

ஆட்சியாளர்க்கு

உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதஇனம் தோன்றி வளருமுன்பே இத்தமிழகத்தில் மனிதன் தோன்றிவிட்டான் என்பது இற்றை நாளில் நிலநூல் அறிஞர் பலரும் ஒப்புகின்ற முடிபாகும். மிகப் பழைய காலத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் இத்தமிழனுடைய நாகரிகமும் பழமையானதாகும். சரித்திரம் எட்டிப்பாராத அந்த நாளிலேயே இத்தமிழர் செம்மையான அரசியல் அமைப்பைப் பெற்று வாழ்ந்தனர் என்றும் அறிய முடிகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள பழமையான நூல், பல புலவர்கள் பாடிய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். ‘புறநானூறு’ என்ற நூல், தொகுக்கப்பெற்றது எக்காலம் என்பது இன்று உறுதியாக அறியக்கூடவில்லை. எனினும், கிறிஸ்து நாதர் தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டாவது முற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு. தொகுத்தது அந்த நாளில் என்றால், அதில் காணப்பெறும் பாடல்கள் பல அதற்குக் குறைந்த அளவு ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டு முற்பட்டாவது தோன்றி இருத்தல்கூடும். எனவே, புறநானூற்றில் வரும் கருத்துக்கள் கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழர் கொண்ட கருத்துக்கள் என்று கூறுவதில் அதிகம் பிழை இருக்க இயலாது.

இத்தகைய பெருநூலில் ஆட்சியாளர் இன்றும் கவனிக்க வேண்டிய குறிப்புக்கள் மிகப் பல உள.

பதவியால் மாற்றம்

ஒருவர் எத்துணைப் பெரிய பதவியில் இருப்பினும் தாமும் மற்றவரைப் போன்ற மனிதர்தாம் என்பதை அவர் உணரவேண்டும், இதை நாம் எடுத்துக் காட்டினால் பயன் விளையாது. எத்துணை நல்லவர்களாயினும், ஆட்சி கைக்கு வந்தவுடன், மனம் மாறிவிடுகின்றனர். இக்குறைபாடு உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படுகிற ஒன்றுதான். எனினும், இத்தமிழர்கள் என்றுமே இதனை ஆட்சியாளர்க்கு நினைவூட்ட மறந்ததில்லை. தான் பொது மக்களின் தொண்டன் என்ற நினைவு ஒருவனுக்கு இல்லையாயின், அவன் நல்ல ஆட்சியாளன் ஆதல் இயலாது. எனவே, இவர்களைப் பற்றிக் கூறவந்த பொதுமறை,

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்
வேறுஆகும் மாந்தர் பலர் (குறள்–514)

என்று கூறிற்று. ‘எத்தனை முறைகளில் ஒருவரைச் சோதித்து முடிபு செய்தாலும் அதிகாரம் கைக்கு எட்டியபின் அவர் எவ்வாறு ஆவார் என்பதைக் கூற முடியாது, என்பதே இக்குறளின் திரண்ட பொருளாகும். குறள் வகுத்த இந்த இலக்கணத்தை ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்ந்த கம்பநாடனும் தன் இராம காதையில் பேசுகிறான்:

அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும்

பெறல் அருந் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்.

(கம்பன்–1476)

பண்பாட்டால் நிறைந்தவர்கட்குக்கூட, பெறுதற்கரிய செல்வம் கிடைத்துவிட்டால், மனம்மாறிவிடும் என்கிறான் கவிஞன். மேனாட்டு ஆக்டன் பிரபு, ‘அதிகாரம் மனிதனைச் சீரழியச் செய்கிறது; எதேச்சாதிகரம் முற்றிலும் அழிந்துவிடச் செய்கிறது.’ என்று கூறியதும் ஆய்தற்குரியது. ஆட்சியாளர் இவ்வாறு மாறிவிடாமல் இருக்க வழி யாது? இதற்குற்ற வழி யாது என்ற வினாவை மிகவும் பழங்காலத்தில் வாழ்ந்த ‘நக்கீரர்’ என்ற புலவரும் கேட்டார். பல நாள் சிந்தித்த பின் அவர் ஒரு முடிபுக்கு வந்து விட்டார். ஆட்சியாளர் சீர்திருந்த வேண்டுமாயின், அதனைப் பிறர் கட்டளை இட்டுச் செய்ய இயலாது. அவர்களாகவே திருந்த வேண்டும். எவ்வாறு திருந்துவது? இதோ புலவர் வழி கூறுகிறார். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் தவறாமலும் ஓயாமலும் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டிய கருத்து இது.

திருந்த வழி

தெளிந்த நீரால் சூழப்பெற்ற உலகம் முழுவதையும் பிறவேந்தருக்கும் பொது என்று இல்லாமல் தாமே ஆளும் வெண்கொற்றக் குடையை உடைய ஒப்பற்ற பேர் பெற்ற அரசருக்கும், நடு இரவிலும் பகலிலும் தூக்கம் இல்லாமல் விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடும் கல்வியறிவில்லாத ஒருவனுக்கும் உண்பதற்குரியது ஒரு நாழி அரிசி; உடுக்கப்படுவன இரண்டே துணிகள்; பிற எல்லாம் ஒன்றே; என்ற பொருள்பட,

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோக்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பன இரண்டே
பிறவும் எல்லாம் ஓர்ஒக் கும்மே. (புறம்,189)

என்று பாடுகிறார் தமிழ்ப் புலவர். இற்றை நாள் ஆட்சியாளர் அனைவரும் இதனை நினைவில் வைத்துக்கொண்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்! பொது மக்களினின்றும் தம்மை வேறாக நினைத்துக்கொண்டு, அவர்கள் விரும்பாதவற்றையும் அதிகாரபலத்தால் திணிக்க மனம்வருமா, இந்த எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தால்?

காட்சிக்கு, எளியர்

தம்மைச் சாதாரண மனிதராக இவர்கள் நினைத்துக் கொண்டால்தானே முறை வேண்டியவர்களும், குறை வேண்டியவர்களும் வந்து இவர்களைக் காண முடியும்? இதனை மனத்துட் கொண்ட வள்ளுவர்,

‘காட்சிக்கு எளியனாய்க் கடுஞ்சொல்லன்
அல்லனாய்’ (குறள்–386)

மன்னன் இருக்கவேண்டாம் என்று கூறுகிறார்.

ஆட்சியாளர் காட்சிக்கு எளியராய் இருக்க வேண்டும் என்று கூறுவதில் ஆழ்ந்த பல கருத்துக்கள் உள்ளன. இக்காலத் தேர்தல் முறையில் இக்குறைபாடு மிகுதியும் இருக்கக் காண்கிறோம். ஏதாவது ஒரு கட்சியின் சார்பிலே நின்றுதான் வாக்குரிமை பெறுகின்றனர் பலரும். தனிப்பட்டவர் என்று கூறிக் கொள்கிறவர்கட்கு இக்கால அரசியல் அமைப்பில் இடமில்லை. மேலும், தனிப்பட்ட ஒருவர் பிறர் உதவியை வேண்டாமல் தேர்தலுக்கு நின்று வெற்றி பெறுவது என்பதும் இயலாத காரியம். எனவே, பிறருடைய உதவி நாடப்படும் பொழுது அப்பிறர் எத்தகையவர் என்பதை ஆராய்தல் இயலாத காரியம்.

கூடா நட்பு

எவ்வாறாயினும் ஒருவருடைய உதவி தேவை என்று நினைக்கும் அந்த நேரத்தில் தம் கருத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்பவர் உதவியை மட்டும் நாடுவதென்பதும் இயலாது. உதவ வருபவர் பண்புடையாளரா, அல்லரா என்று ஆராய்ந்துதான் அவருடைய உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் முடிபு செய்தால், அவர் தேர்தலுக்கு நின்றும் பயன் இல்லை. எனவே, பலருடைய உதவியையும் நாடித்தான் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது. எனில், அந்தப் பலருள் பல்வேறு பண்புடையவரும் இருப்பர் அல்லவா? தன்னலவாதிகள், பிறருக்குத் தீங்கு இழைப்பதைக் கலையாக வளர்த்தவர்கள், பிறர் பொருளைத்தம் பொருளாகக் கருதுபவர், பொதுப்பணம் என்பது தம்முடைய நலத்துக்கெனவே கடவுளாற் படைக்கப்பட்டது என்று கருதி வாழும் பண்புடையாளர் ஆகிய பல திறப்பட்டவரும் அப்பலருள் இருக்கத்தானே செய்வர்? இவர்களுடைய உதவியால் தேர்தலில் வெற்றி பெறுபவர் பிறகு அதிகாரத்துக்கு வந்தவுடன் இவர்களை எளிதில் நீக்கிவிட முடியுமா? டாலர் பெருமான் முழு ஆட்சி நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களாட்சியில் இக்கூற்றை நன்கு காணலாம்.

எனவே, ஆட்சியாளர் தீயவர்கள் நெருக்கத்திலிருந்து மிக விரைவில் விடுபட வேண்டும். அத்தகையோருடைய உதவியை மேற்கொண்டு தேர்தல் முதலியவற்றில் வெற்றிபெறுவது அரசியல் நீதியாயினும், ஆட்சியில் அமர்ந்தவுடன் இத்தகையவர்களை நீக்கிவிட வேண்டுமென்பதே பழந்தமிழர் கண்ட அரசியல் நுணுக்கமாகும். ‘வெள்ளைக் குடி நாகனார்’ என்ற புலவரும் இந்தக் கருத்தையே வற்புறுத்துகிறார்.

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் (புறம்,31)

என்ற அடிகளில் நடுவுநிலை பிறழாமலும், முறை வேண்டுபவர்கள் எளிதில் வந்து காணுமாறும் ஆட்சியாளர் இருக்க வேண்டும் என்பதையே கூறுகிறார்.

சொல்செயல் வேறுபாடு

ஆளப்படும் பொதுமக்கள் பல்வகை நலன்களை ஆட்சியாளர் தமக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தல் இயல்பே. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கட்குத் தாம் எவற்றைச் செய்யமுடியும், எவற்றைச் செய்ய முடியாது என்பவை தெரியும். ஆட்சியில் அமர்வதற்கு முன்னர்ப் பலவற்றையும் செய்வதாக வாக்களித்தலும், அமர்ந்த பின்னர் இந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுதலும் இன்று நாம் காணும் காட்சி. இக்காலத்து மக்கள் அனைவருமே இதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றனர் போலும்! ஒரு கட்சியார் மட்டும் அல்லாமல் அனைவருமே இவ்வாறு சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாயிருத்தலின், ஒருவரும் இதைத் தவறாகக் கருதவில்லை. ஆனால், பொதுமக்களைப் பொறுத்தமட்டில் ஆட்சியாளரின் இந்தச் சொல், செயல் மாறுபாடு மன வருத்தத்தை உண்டாக்கத்தான் செய்யும்.

ஆழ்ந்த வருத்தம் உண்டாகுமாயின், நாளடைவில் அது ஆட்சியாளருக்குத் தீமையாய் முடியும். பொதுமக்களிடம் தோன்றிய இந்த வெறுப்புச் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தருவதும் உண்டு. இன்னும் சில சந்தருப்பங்களில் உடனே பயன் தராது. இவ்வாறு பயன் தராதபோது மக்கள் வெறுப்புக் கொள்ளவில்லை என்று ஆட்சியாளர் நினைத்து விடக் கூடாது. ஆட்சியில் இருப்பவர்களைவிடச் சிறந்த பண்புடைய கட்சி வேறு இன்மையால் மக்கள் தம் வெறுப்பைக் காட்டாமலும் இருத்தல் கூடும். சந்தருப்பம் வந்தபொழுது தவறாமல் வெறுப்பைக் காட்டிவிடுவர். அமெரிக்காவில் நெடுநாட்களாய் ஆட்சியில் இருந்த ‘டெமாகிராட்டிக்’ கட்சியார் சென்ற தேர்தலில் தோல்வி யடைந்தமைக்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்று. எனவே, ‘கூடுமான வரை செய்யக் கூடியவற்றைச் செய்கிறோம்’ என்று கூறுதலும், இயலாதவற்றை ‘இயலாது’ என்று கூறுதலும் நலத்தைத் தவறாமல் விளைக்கும். ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் இதோ இக்கருத்தைக் கூறுகிறார்:

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவக்கும்
ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லுக என்றலும் ஒல்லுவது

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் (புறம்.196)

[ஒல்லுவது—கொடுக்கக்கூடியதை; ஒல்லாது—தர இயலாததை; ஆள்வினை மருங்கு—முயற்சி செய்வோரிடத்து உள்ள; கேண்மைப்பாலே—நட்பின் செயலாகும்; இரப்போர் வாட்டல்—எதிர்பார்க்கின்றவர்களை வீணாகத் துன்புறுத்தலும்; புரப்போர் புகழ் குறைபடூஉம்—ஈவோர் (ஆட்சியாளர்) புகழைக் குறைக்கும்.]

இக்காலத்தே நாகரிகமும் அரசியல் முறையும் மிகுதியும் வளர்ந்து விட்டன என்று கூறித் தருக்கடைகிறோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இத்தமிழன் கண்ட அரசியல் அறம் இன்னும் தேவைப்படுதலைக் காணலாம்.

மன்னனுக்கு வேண்டுவது

நாட்டை ஆளும் அரசனுக்கு எத்தனையோ பண்பாடுகள் தேவை. என்றாலும், அவை அனைத்தையுங்காட்டிலும் மிகவும் இன்றியமையாதது அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் என்றே பழந்தமிழர் கருதினர்.

ஒரு நாட்டை ஆள்பவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது யாது? இவ்வினாவிற்குப் பலரும் பலவாறு விடை கூறுவர். ஆனால், அவர்களுடைய விடைகள் அனைத்தையும் கூட்டி ஒரு சொல்லில் கூற வேண்டுமாயினும் கூறலாம். ஆட்சியாளனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது ஒரு குறிக்கோள். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை சிறப்படையாது. விலங்குகளும் பிறந்து உண்டு, வாழ்ந்து, முடிவில் இறக்கின்றன. மனிதனும் இவ்வாறே இருந்துவிடுவானாகில், இருவருக்கும் வேறுபாடு இல்லையாய் விடும். விலங்கினத்திலிருந்து மனிதன் பிரிக்கப்படுவதற்கு ஒரு சிறந்த காரணம் அவன் வாழ்க்கையில் மேற்கொள்ளும் குறிக்கோள்தான். குறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை உப்புச் சப்பு இல்லாமல் ஏதோ நடைபெறுகிறது என்று கூறும் முறையிலேதான் இருக்கும். தனிப்பட்ட மனிதன் வாழ்வுக்கே குறிக்கோள் தேவை என்றால், பலருடைய வாழ்க்கையை வழிகாட்டி நடத்தும் நாடாள்வானுக்கு இது தேவை என்று கூறினால் அதில் வியப்படையக் காரணம் இல்லை. இன்று நாட்டை ஆள்பவர்கள் எத்துணைப் பெருமுயற்சியுடன் ஐந்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற அரும்பாடுபடுகின்றனர்! இத் திட்டம் முடிந்து பயன்தரும் பொழுது, இன்று ஆட்சி செலுத்துபவர்களே அப்பொழுதும் இருப்பார்கள் என்று கூறுவதற்கில்லை. எனினும், இன்று ஆள்பவர்கள் அது பற்றிக் கவலை கொள்வதில்லை. தாங்கள் மீட்டும் ஆட்சியில் அமர முடியுமா என்பது பற்றிக் கவலை கொள்ளாமல், திட்டங்களை நிறைவேற்றவே முற்படுகிறார்கள். ஏன்? இதுதான் குறிக்கோள் என்று கூறப்படும் நாட்டுக்கும் பெரும்பாலான மக்கட்கும் நலந்தருவன எவை என்று ஓயாமல் நினைந்து, அவ்வாறு நலந்தருவனவற்றை நாடுதலே ஆட்சியாளனுடைய ‘குறிக்கோள்’ எனப்படும்.

குறிக்கோள் இன்மை

சிறந்த குறிக்கோள் இல்லாதவர்களும், இல்லாத கட்சியும் எத்துணை வன்மையும், கூட்டச் சிறப்பும் பெற்றிருப்பினும் சரி, அவை பயன் தாரா. இன்றைய சூழ்நிலையில் உலகம் முழுவதிலும் கட்சிகள் தாம் நாட்டை ஆள்கின்றன. மக்களாட்சி நடைபெறுவதாகப் பறை சாற்றப்படும் நாடுகளிலும், தனிப்பட்டவர் ஆட்சி என்று கூறப்பெறும் நாடுகளிலும் உண்மையில் நடைபெறுவது கட்சி ஆட்சியே! கட்சியாட்சியின் குறைவு நிறைவுகளை ஆய்வது நம்முடைய கருத்தன்று. என்றாலும், ஒரு கட்சி சிறப்படைவதும், சிறப்பை இழப்பதும் அதனுடைய குறிக்கோளைப் பொறுத்தனவே யாகும். குறிக்கோள் இல்லாதவர்கள் கட்சித் தலைவராகவோ நாட்டை ஆள்பவராகவோ இருந்துவிடின், நாட்டுக்குத் தீமை இதனைவிட வேறு தேவை இல்லை. எனவே, பலர் அடங்கிய நாட்டையோ கட்சியையோ தலைமை வகித்து நடத்துபவனுக்கு வேண்டிய உயர்ந்த குறிக்கோள்களைப் பற்றிப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் பாடிய பாடலை இங்குக் காணலாம்.


உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள்-596)

என்ற குறளில் வள்ளுவர் குறிக்கோளைப் பற்றித்தான் குறிப்பிடுகிறார். ஒருவனுடைய வாழ்க்கையில் கொள்ளவேண்டிய குறிக்கோள் எத்தகையதாய் இருத்தல் வேண்டும்? அது மிக உயர்ந்ததாய் இருத்தல் வேண்டுமாம். அவ்வாறாயின், அது கைகூடாததாகவும் இருக்கலமோ எனில், இருந்தாலும் கவலை இல்லை என்கிறார் வள்ளுவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய ஒருவன் தன்னால் ஆளப்படும் நாட்டிற்குப் பெருநன்மை செய்யவேண்டும் என்று விழைகிறான். நாட்டுக்கு நலன் விளைக்கவேண்டும் என்று நினைக்கும் அவனே ஆள்பவனாகவும் இருந்து விட்டால், அவனை யார் தடை செய்யமுடியும்? அவன் வேண்டுமானவரை நலம் புரியலாமே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும், ஆட்சி முறையில் பழகியவர்கட்குத்தான் அதிலுள்ள இடையூறு நன்கு தெரியும். ஆளும் தலைவன் எத்துணைச் சிறந்தவனாயினும், அவனுடைய குறிக்கோள் எத்துணைச் சிறந்ததாயினும், பயன் இல்லை, அதனைக் கொண்டு செலுத்துவோர் தக்கவராய் இல்லா விடத்து!

இன்று நம்முடைய அரசியலார் செய்யும் பல நன்மைகளைப் பொதுமக்கள் அனுபவிக்க முடியாமற்போய்விடுகிறது. காரணம், இடை நிற்போர்! எனவே, ஆள்வோருடைய குறிக்கோள் சிறந்ததாகவும் இருந்து, அது பயன்படவும் வேண்டுமாயின், ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது, ஆள்வோர்கள் தக்கவர்களைத் தம்முடன் இருத்திக்கொள்ளுதல். உடன் இருக்கும் அத்தக்கவர்களாலே தான் ஆட்சியாளர் குறிக்கோள் நற்பயன் விளைத்தல் கூடும்.

அரசன் குறிக்கோள்

சோழன் நல்லுருத்திரன் என்பவன்–நாடாளும் சோழர்குடியில் பிறந்த மன்னன்–அரசாட்சியின் இந்த நுணுக்கத்தை அனுபவத்தில் கண்டான் போலும்! இதோ குறிக்கோளைக் கொண்டு செலுத்த உதவும் நண்பர்களைப் பற்றிப் பேசுகிறான் அவன்;

“நன்கு விளைந்து முற்றி வளைந்த நெல் கதிராகிய உணவைச் சிறிய இடத்தையுடைய வளையில் நிறைய வைக்கும் எலி முயன்றாற்போலச் சிறிய முயற்சியை உடையவர்களாகி, இருக்கும் தம்முடைய செல்வத்தை அனுபவிக்காமல் இறுகப் பிடிக்கின்ற பரந்த மனப்பான்மை இல்லாதவர்களுடன் பொருந்திய நட்பு இல்லாமல் போவதாக! தறுகண்மையுடைய பன்றியைப் புலி அடித்த பொழுது அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்துவிட்டதாயின், அன்று அவ்விடத்தில் உணவு உட்கொள்ளாமல் மறுநாள் பெரிய மலையின்கண் உள்ள தனது குகை தனிமைப்பட உணவை விரும்பிப் புறப்பட்டு வந்து பெரிய ஆண் யானையை நல்ல வலப்பக்கத்தில் விழும்படியாக அடித்து உண்ணும் புலி பசித்தாற்போலக் குறை இல்லாத நெஞ்சுரம் உடையவர்களின் நட்புடன் பொருந்திய நாட்கள் உளவாக!” என்ற கருத்தில் பேசுகிறான் அவ்வரசப் புலவர்.

விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலிமுயன்று அனைய ராகி உள்ளதம்
வளன்வலி யுறுக்கும் உளம்இ லாளரொடு
இயைந்த கேண்மை இல்லா கியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றுஅவண் உண்ணாது ஆகி வழிநாள்
பெருமலை விடர் அகம் புலம்ப வேட்டுஎழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
புலிபசித்து அன்ன மெலிவில் உள்ளத்து
உரன்உடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ!
(புறம். 190)


[விளைபதம்—முற்றிய பருவம், வல்சி—உணவு, அளை—வளை, வளன்—செல்வம், வலியுறுக்கும்—இறுகப் பிடிக்கும், கேண்மை—நட்பு, கேழல்—பன்றி, வழிநாள்—மறுநாள், விடர் அகம்—குகையில், புலம்ப—தனித்துவிட; இருங்களிறு—பெரிய ஆண் யானை, உரன் உடையாளர்—நெஞ்சு வலிமை உடையார், வைகல்—நாட்கள்.]

எலி மனிதர்

உலகில் வாழும் மனிதர்கள் பல திறப்படுவார்கள். எனினும், இப்பாடல் பாடிய கவிஞன் அவர்களை இரண்டே பிரிவில் அடக்கி விடுகிறான். முதற் பிரிவினர் எலியைப் போன்றவர். மனிதனுக்கு வேண்டப்படும் குறிக்கோள் என்பது சிறிதும் இன்றி, எவ்வாறாயினும் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இந்த எலி கூட்டத்தார், இன்றும் உலகிடை மிகுதியாகக் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் வாழ்வில் தமக்காகவோ பிறருக்காகவோ முயற்சி சிறிதும் செய்யமாட்டார்கள்; ஆனால், தமக்குரிய நலங்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வாறு முயற்சிகள் சிறிதும் இல்லாமல் இந்த நலங்களைப் பெறுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறதா? பிறர் முயற்சியில் ஏற்படும் பயனை இவர்கள் திருடுகிறவர்கள். யாரோ முயன்று பயிரிட்ட வயலில் கதிர் முற்றிய நிலையில் அதனைத் திருடித் தன் வளையில் வைத்துக் கொள்ளும் எலியைப் போன்ற மக்களும் உண்டு அல்லவா? அத்தகையவர் ஆட்சியாளரை அண்டி இருந்தால் நாடு கெட்டுப்போவதற்கு வேறு காரணமும் வேண்டுமா? இவர்களுடைய பொருள் தவறான வழியில் சேர்க்கப்பட்டிருப்பினும், அதனைக்கூட இவர்கள் பிறருக்குத் தரமாட்டார்கள். சில காலத்திற்கு முன்பு கள்ளச்சந்தையில் நிறையப் பொருளைச் சேகரித்துத் தாமும் உண்ணாமல் அரசியலாருக்குத் தரவேண்டிய வரிப்பணத்தையும் தாராமல் ஏமாற்றியவர் எத்தனை பேர்? அவர்கள் அனைவரும் இந்த எலிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே யாவர்.

புலி மனிதர்

இவரினும் வேறுபட்ட ஒரு கூட்டத்தாரும் உண்டு. இவர்கள் புலி போன்ற கோட்பாட்டினை உடையவர். புலி பசி தாளாமல் பன்றியை அடித்தாலும், அப்பன்றி இடப்பக்கம் வீழ்ந்துவிட்டமையின் அதனை உண்ணாமற் சென்றுவிட்டதாம். பசித்த காலத்து எது கிடைத்தாலும் சரி என்று நினையாமல் தன் கொள்கைக்கு முரணானவிடத்துப் பசியையும் பொறுத்துக்கொள்ளுகின்ற புலி, மனிதனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். அன்று உண்ணாத புலி மறுநாள் புறப்பட்டு யானையை வலப்புறம் வீழுமாறு அடித்து அன்றுதான் உண்டதாம். எனவே, கொள்கையே பெரிதென்று வாழும் மனிதர்கள் புலியின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பிற விலங்குகள் அடித்துக் கொன்ற விலங்கைப் புலி உண்பதில்லை. அது போல இவர்களும் பிறருடைய முயற்சியால் வந்த பொருளைத் தாம் அனுபவிப்பதில்லை. தன்னால் அடிக்கப்பட்ட விலங்கு இடப்புறம் வீழ்ந்துவிடின் புலி அதனை உண்ணாதாம். அதே போல இவர்கள் செய்த முயற்சியில் வந்த ஊதியம் தவறானதாய் இருப்பின், இவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. புலி பசியைப் பொறுத்துக்கொள்வது போல இவர்களும் வாழ்க்கையில் உண்டாகும் எத்தகைய துன்பத்தையும் தங்கள் கொள்கைக்காகப் பொறுத்துக்கொள்வர். புலி முயற்சியால் கொன்ற விலங்கைத் தான் உண்டு விட்டு எஞ்சியதை நாளைக்கு வேண்டுமே என்று வைத்துக் கொள்ளுவதில்லை. அந்த எஞ்சிய உணவைப் பிற விலங்குகள் பல உண்டு உயிர் வாழும். அதே போல இந்தப் பெரியவர்கள் தாம் செய்த முயற்சியால் பெற்ற ஊதியத்தை தமக்கே வேண்டும் என்று வைத்துக்கொள்வதுமில்லை; தங்கள் தேவை தீர்ந்தவுடன் எஞ்சியதைப் பிறருக்கு வரையாமல் வழங்குவர். இத்தகைய புலிக்கூட்டத்தாருடன் நட்பு வேண்டும் என்று கூறுகிறான். வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் வேண்டும் என்று கருதுவான் அப்பழந்தமிழ் ஆட்சியாளன். ஐந்தாண்டுத் திட்டங்கள் வெகுவாக நடைபெறும் இக்காலத்தில் நமது அரசியலாருக்கு எலிக் கூட்டத்தார் நட்பினர் ஆகாமல், புலிக் கூட்டத்தார் நட்பினர் ஆனால் எவ்வளவு பெரிய நன்மை உண்டாகும்!

ஆட்சியாளர் கவனிக்க வேண்டுவன

ஆட்சியாளர் அன்றும், இன்றும் நாட்டுக்கு எவ்வாறு நன்மை புரிந்தனர், புரிகின்றனர்? பொது மக்கள் தருகின்ற இறைப்பணத்தை (வரி) வைத்துத்தானே ஆட்சி நடைபெறுகிறது? இன்றும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தின் தலையாய கடமைகளுள் ஒன்று அன்றோ? எவ்வாறு புதிய வரிகளை விதித்துப் பணம் சேகரிக்கலாம் என ஆட்சியாளரும், எவ்வாறு வரிச்சுமையைக் குறைக்கலாம் எனப் பொதுமக்களும் சிந்தித்தல் இயற்கை. புதிய வரிகளை விதித்தலில் எந்த அளவைக் கொள்வது என்பது பற்றி எந்த அரசினும் முடிந்த முடிபாக இதுவரை ஒன்றும் கூறப்படவில்லை, கொடுப்போருடைய வன்மைதான் வரி விதிப்போருக்கு அளவாக அமைதல் வேண்டுமே தவிர, அரசியலாருக்கு ஏற்படும் செலவு அளவாக அமைதல் கூடாது. இக்கருத்து இன்றும் சிறந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஒத்துக் கொள்கிற கொள்கையாகும். இக்கருத்தைப் பிசிராந்தையார் என்ற புலவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் அழகிய ஓர் உதாரணத்துடன் விளக்கினார்.

‘யானை பெருந்தீனி தின்னும் பிராணி. ஆனாலும், சிறிய மா அளவுள்ள நிலத்தில் விளையும் நெல்லை அறுத்து அரிசியாக்கித் தந்தால், பெரிய யானைக்குக்கூட அது பல நாட்கட்கு ஆகும். அவ்வாறு செய்யாமல், யானை தானே சென்று தின்னட்டும் என்று அவிழ்த்து விட்டுவிட்டால், நூறு ஏக்கர் நிலமாயினும் வாயில் புகுவதைக்காட்டிலும் காலில் பட்டு அழிவது மிகுதி. எனவே, அறிவுடை வேந்தன் முறை தெரிந்து இறைப்பணத்தை வசூலித்தால், பல காலம் அவனும் மக்களும் இன்பமாக வாழ முடியும். அரசன் அறிவற்றவனாகித் தீயவர்களை நட்புக்கொண்டு செலவை முன்னிட்டு வரியைப் பெற்றால், யானை புகுந்த வயலைப் போல நாட்டையுங் கெடுத்துத் தானும் கெடுவான்’, என்ற கருத்தில் அவர் பாடுகிறார்.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே.

(புறம்–184)

[காய்நெல்—விளைந்த நெல், கவளம்—யானைக்குத் தரும் சோற்று உருண்டை, மா—ஒரு சென்ட் போன்ற நில அளவு, செறு—ஏக்கர் போன்ற அளவு, நந்தும்—பெருகும், வைகல்—தினந்தோறும், கல்என் சுற்றம்—ஆரவாரக்கூட்டம், பரிவு தப—அன்பு கெடும்படி, பிண்டம்—பொருள் தொகுதி, நச்சின்—விரும்பினால்]

தமிழ் நாட்டகலம்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும்’

இந்நல் உலகத்தைப் பண்டு தொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர, சோழ, பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம்மூவரும் சேர்ந்து ஆட்சிபுரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (இப்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே), தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள், வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள், கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற விடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனையில்) இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர்.

‘மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசு முழங்குதானை மூவர்’

(புறம். 35)

என்ற புறப்பாடல் இதற்குச் சான்று. இந்த அளவுடைய நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தந்தமைக் கூறிக்கொள்ளும் பொழுது பேரரசர்களாகவே (சக்கரவர்த்திகள்) கூறிக் கொண்டனர். அவ்வரசர்கள் ஒரோவழி அதை மறந்திருப்பினும், உழை இருப்போர் அவர்கட்கு நினைவூட்டிக் கொண்டே இருந்தனர். மேலே கூறப்பெற்ற பாடலின் அடுத்த அடியே போதுமானது. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சுய கிள்ளிவளவனை ‘வெள்ளனக்குடி நாகனார், என்ற புலவர் பாடிய பாடம் அது.

‘முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
அரசெனப் படுவது நினதே பெரும்!’

(புறம்–35)

என்று கூறிய புலவர் பெருமான் இன்னும் ஒரு படி மேலே சென்று,

‘நாடு எனப்படுவது நினதே’

(புறம்–35)

என்றும் கூறிவிடுகிறார். தமிழ்நாட்டை மூவர் ஆட்சி செய்தாலும், ‘அரசன்’ என்று கூறினால் சோழனைத்தான் குறிக்குமாம்! நாடு என்று கூறினால் சோழநாட்டைத்தான் குறிக்குமாம்!

சக்கரவர்த்திகள்

இன்னுஞ் சில சந்தருப்பங்களில் அவர்கள் ஆளும் பகுதிகளை ‘உலகம்’ என்றுகூடக் குறிப்பிட்டனர்.‘பிரமனார்’ என்ற புலவர்

‘பொதுமை சுட்டிய மூவர் உலகமும்’
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்.

(புறம்–357)

என்று கூறிய அடிகள் ஆழ்ந்து நோக்கற்குரியவை. உலகம் என்ற சொல்லால் நாட்டின் ஒரு பகுதியைச் சுட்டிக்கூறுதல் அக்கால மரபுதான்.

‘மாயோன் மேய காடுறை உலகமும்’ (அகத்திணை, 5)


என்று தொல்காப்பியம் கூறுகிறது. என்றாலும் ‘மூவர் உலகம்’ என்று புறப்பாடல் புலவர் கூறும்பொழுது, அவர் இவர்களுடைய நாட்டின் பரப்பை ஓரளவு மிகுதிப்படுத்தியே கூறுகிறார் என்பது விளங்கும். ஒவ்வொரு சந்தருப்பத்தில் இம்மூவருள் வலிமை பெற்ற ஒருவன் ஏனைய இருவரையும் அடக்கி ஆளுதலும் உண்டு. இன்னும் கூறப்போனால் இவர்களுள் ஒவ்வொருவனும் ஏனையோரை அடிப்படுத்தலையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனன். புறநானூற்றில் 357—ஆம் பாடலில் ‘பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்’ என்று கூறுவது இவ்வாறு ஒரோவழி ஏனைய இருவரையும் வெற்றி கண்ட ஒருவனையே குறிக்கிறது.

தமிழருக்குள் அடிதடி

கரிகாற்பெருவளத்தான் போன்ற ஒரு சிலர் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டிச் சென்று, பிறநாடுகளிலும் வெற்றி கண்டார்களாயினும், பெரும்பான்மையான தமிழ் மன்னர்கள் வெற்றி கண்டது பிற தமிழ் மன்னர்களையேயாம். தமிழனை மற்றொரு தமிழன் போரிட்டுத் தொலைப்பதைப் பெரு வெற்றியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் அந்நாளில் பெரும்பான்மையான தமிழர். சில சந்தருப்பங்களில் இவர்களுடைய போர் அவ்வளவில் நின்றுவிடாமல், யாதொரு தீங்கும் புரியாத மக்களையும் வருத்தத் தொடங்கிற்று. வெல்லப்பட்டவர் நாட்டை (தமிழ் நாட்டின் மற்றொரு பகுதிதான்) அழித்து, நெருப்பூட்டல் ஒரு வழக்கம்.

கரும்புஅல்லது காடு அறியாப்
பெருந்தண்பனை பாழாக
ஏம நல்நாடு ஒள்எரி ஊட்டினை’.

(புறம்–16)

[கரும்பு விளையும் விளைநிலங்களை எல்லாம் நெருப்பூட்டினாய்]

என வரும் அடிகள் நம் சிந்தனையைக் கிளறாமல் இருக்க முடியாது. இவ்வாறு இவர்கள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் பொழுதுகூட தோற்றவரைப்பற்றி நினைத்ததில்லையா? அவர்களும் தம்மைப் போன்ற மொழி பேசும் ஒரே நாகரிகம் உடையவர் என்ற எண்ணம் இவ்வெற்றி வீரர்கட்கும் தோன்றி இராதா? போரில்லாத நாட்கள் மிகவும் குறைவு என்று கூறத்தக்க முறையில் இவர்கள் வாழ்ந்துள்ளனர். இப்பெரு மன்னர்கள் ஒரோவழி வாளாவிருந்தாலும், இவர்கட்குக் கீழ் வாழ்ந்த சிற்றரசர்கள் வாளாவிருப்பதில்லை. இவ்வாறு போரிட்டு மடியக் காரணம் யாது? படை வைத்திருந்தமையின் வாளாவிருக்க முடியாமல் ஓயாது போரிட்டனாரா?

போரிடக் காரணம்

புறப்பாடல்களை ஒரு முறை புரட்டினவருங்கூட ஓர் உண்மையை அறியாமல் இருத்தல் இயலாது. ஏனைய எத்துணைக் காரணங்கள் இருப்பினும், இவர்கள் ஓயாமல் பூசலிட்டதற்குத் தலையாய ஒரு காரணம் காணப்படுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் காணப்பெறும் இரண்டு உணர்ச்சிகளே இதன் காரணம் என்று நினைய வேண்டி உளது. இயற்கையாகத் தோன்றும் வெறுப்பு உணர்ச்சி ஒன்று; ஏனையது புகழ் ஈட்ட வேண்டும் என்று தோன்றும் உணர்ச்சி. இவை இரண்டும் கூடினவிடத்து விளைவது போரேயன்றி வேறு யாதாக இருத்தல் இயலும்?

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே

(புறம். 165)

[நிலைபேறில்லாத இந்த உலகில் புகழை நிலை நாட்டிப் பலர் மாய்ந்தனர்]

புகழ்ப் பைத்தியம்

இத்தமிழருடைய புகழ்ப் பைத்தியம் மிகவும் ஆழமாய் இருந்ததென்பதைக் காட்ட நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரவியலும்.

“தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.”

(குறள்–238)

என்று குறளாசிரியர் கட்டளை இடுமுன்பே இம்மக்கள் தம் வாணாளில் பெற வேண்டிய ஒரு குறிக்கோளாக இதனைக் கொண்டிருந்தனர் என்பதை நன்கு அறிய முடிகிறது. இலக்கணம் இதற்குப் பெரியதோர் இடந்தந்து, “பாடாண்திணை” என்றதொரு திணையையே வகுத்துவிட்டது.

புகழடைய வழி

மனிதனாய்ப் பிறந்தவன் புகழ் ஈட்டியே தீரவேண்டும் என்றால், அதற்குரிய வழிகள் யாவை என்று கேட்கத் தோன்றுகிறதன்றோ? வழிகள் பலவாக இருக்கலாம். எந்த வழியை மேற்கொண்டால் புகழ் பேசுகிறவர்கள் எளிமையாகப் புகழ்வார்கள்? அந்த வழியே சிறந்த வழி என்று நினைத்திருத்தல் கூடும் அக்கால மக்கள். மேலும், புகழ் ஈட்டும் வழி மூலமாகவே தம்முடைய மனக் கருத்தையும் முற்றுப் பெறச் செய்யக் கூடுமாயின், அது மிகவும் நலமானதாகப் பட்டிருக்கும். இயற்கையாக மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுப்பதன் மூலம் இரண்டு பயன்கள் கிட்டுகின்றன. முதலாவது, யாரை வெறுக்கிறோமோ அவர் மேல் போர் தொடுத்து வெற்றி காணமுடிகிறது. இரண்டாவது, அவ்வாறு பெறும் வெற்றியே பிறர் புகழவும் காரணமாகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிற் பயன் பெறக் கூடுமாயின், வன்மைமிக்க அரசர்கள் போர், என்ற வழியை மேற்கொண்டதில் வியப்பிருத்தல் இயலாது. மேலும், அந்த அரசர்கள் புரியும் இந்தப் போர்களைத் தம்முடைய நாட்டு மக்களின் நலத்திற்காகவே செய்ததாகவும் கூறினர்; அம்மக்களும் இதனை நம்பினர்.

வெற்றி வெறி

பிறருடைய நாட்டின் மேல் போர் தொடுத்துச் செல்லுதல் அரசர்க்குரிய அறமாகவும் போற்றிக் கூறப்பெற்றது. தற்காப்புச் செய்யுமுறையில் போரிடுதல் அன்றியும், பிறர்மேல் படைகொண்டு வலுப் போருக்குப் போதலும் அறமெனவே கருதப்பெற்றது. புகழ் வேட்டையாடப் பிறருடைய நலத்தைப்பற்றிக் கவலை கொள்ளாமல் போரிடுதலை ஒரு வாய்ப்பாகக் கொண்டனர் அற்றைநாள் தமிழர். எவ்வளவு பெரிய அரசனும் இதற்கு விலக்காமாறு இல்லை. மேலும், ஓரிரண்டு போர்களில் வெற்றி கண்டு விட்டால், அது குடிப்பழக்கம் போல ஆகிவிடும். அவ்வெற்றி தந்த வெறி, மேலும் மேலும் போர்செய்யத் தூண்டும். தாம் இவ்வாறு போர் செய்து அதனால் பெறுவதாகக் கருதிய புகழ் உண்மையானதா என்று ஆராயக்கூட அவர்கள் முற்படவில்லை.

வாழ்வின் குறிக்கோள் போரன்று

அரசராய்த் தாம் பிறந்ததே போர்செய்யத்தான் என்று கூடப் பலர் கருதிவிட்டனர். இத்தகைய ஒரு நிலையில் அறிவுடைப் பெருமக்கள் சிலர் மனத்திலாதல் ஓர் ஐயம் தோன்றியிருத்தல் வேண்டும். கேவலம் போரிடுதல் ஒன்றுதானா புகழை வளர்க்கும்? இது தவிர இவ்வரசர் பெருமக்கள் செய்யத்தக்க நற்செயல்கள் வேறு இல்லையா? இவ்வாறு சிலர் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டு பெற்ற விடைகளும் புறப்பாடல் முதலியவற்றில் காணக்கிடக்கின்றன. “மாங்குடி மருதனார்” என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க “மதுரைக்காஞ்சி” என்றதொரு நூலையே (எவ்வளவு பெரிய பாடல் அது!) இயற்றினார் என்றால், பழந்தமிழர் போர் வெறி என்ற பாலைவனத்தில் இது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகிறது. 782 அடிகளையுடைய அப்பாடலில், அப்புலவர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லதோர் அறிவுரை வழங்குகிறார்.


பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
விலங்குஇழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும!
வரைந்துநீ பெற்ற நல்ஊ ழியையே

(மதுரைக்காஞ்சி, 778–82)

(உனக்கிருக்கும் வாழ்நாள் ஓரளவுடையதாதலின், நல்ல முறையில் உண்டு உடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக).

இப்புலவரே இம்மன்னனையே பாடும் புறப்பாட்டு ஒன்றில் இன்னும் ஒருபடி மேலே செல்கிறார்.


ஒண்தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப..........

(புறம்–24)

இவ்வாறு இன்புற்று வாழ்வதே வாழ்க்கை எனப்படும் என்று அவர் கூறும் பொழுதுதான், இவ்வாறு செய்யாதவர்களுடைய வாழ்வு எவ்வளவு பயனற்றது என்பதையும் அறிய முடிகிறது.

ஏனைய வழியால் பெரும் புகழ்

போர் செய்தலையே தம் வாணாளின் குறிக்கோளாகக் கொண்ட இம்மன்னர்கள் புகழடைவதற்கு மேற்கொண்ட வழி சற்று விந்தையானதே! இதனைக் காட்டிலும் வேறு வழியில் வாழ்வதால் நல்லதொரு புகழை அடைய முடியும் என இவர்கள் ஏனோ நினைக்கவில்லை! ஆனால், இப்பேரரசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் சில சிற்றரசர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட குறிக்கோள் முற்றிலும் வேறானதாகக் காணப்படுகிறது. கடைஏழு வள்ளல்களைப் பற்றியும் இப்புறப்பாடல் முதலியன பேசுகின்றன. அவர்களும் புகழ் படைத்தவர்களாகவே உள்ளனர். என்றாலும் என்ன வேற்றுமை? புகழ் என்ற ஒன்றை அடைய முற்றிலும் வேறுபட்ட இரு வழிகளைக் கையாண்டுள்ளனர். யாருடைய வழி சிறந்தது? போர் வெறி கொண்டு, நாட்டிற்கு நன்மை என்ற பெயரால் தமிழர்களுடைய குருதியைத் தமிழ் மண்ணில் ஆறாகப் பெருகவிட்டுத் தம்முடைய மக்களும் தோற்ற மக்களும் ஒருசேர அவதிப்படச் செய்த இப்போர் வெறியர்களும் புகழடைந்துவிட்டதாகச் செருக்குற்றிருந்தனர். இவர்கள் செருக்கை வளர்க்கத் தமிழ்ப் புலவர்களும் காரணர்களாய் இருந்தனர். குறுநில மன்னர்கள் எழுவரை ஒரே நாளில் வென்றுவிட்டான் என்பதற்காகத் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை எத்தனை புலவர்கள் புகழ்ந்துள்ளனர்! அதுவும் அளவு மீறிப் புகழ்ந்துள்ளனர். நன்கு ஆராய்ந்து பார்த்தால், இதனை மிகப் பெரிய வெற்றிகளுள் ஒன்று என்றுகூடக் கூறவியலாது. தம்முடைய நாட்டைவிட்டுப் பன்னூறு மைல்கள் கடந்து சென்று வேற்று நாட்டில் போர்கள் புரிந்து வெற்றி பெற்ற செங்கிஸ்கான் அலெக்ஸாந்தர் முதலானோருடன் ஒப்பு நோக்கினால் நெடுஞ்செழியன், கரிகாலன் போன்றார்கள் வெற்றி மிகச் சிறியதாகிவிடக் காண்கிறோம். ஆனால், அலெக்ஸாந்தர் கிரேக்கர்களுடனும், செங்கிஸ்கான் மங்கோலியருடனும் போரிடவில்லை. நெடுஞ்செழியனோ என்னில், தமிழருடன் போரிட்டான். வென்றவனும் தமிழன்; தோற்றவனும் தமிழன். இவ்வெற்றியை என்னவென்று பாராட்டுவது? இவ்வெற்றியால் புகழடைந்ததாகக் கருதிய மன்னரும் நம் இரக்கத்திற்கு உரியர். புகழுக்குரிய ஒரு செயலைச் செய்துவிட்டான் அம்மன்னன் என்று கருதி அவன்மேல் பாடாண்திணைப் பாடல்கள் பாடிய புலவர்களும் நம் இரக்கத்திற்கு உரியவரேயாவர்.

இவ்வெற்றிகளால் பெறுவது இன்பமாயினும், புகழாயினும் அவை விரும்பத்தக்கனவல்ல. இவ்வுண்மையை தமிழர் நன்கு அறிந்திருந்துங்கூடப் போரால், வெற்றியால் இன்பங்காண முயன்றனர். அதனால் பெற்ற புகழையும், அப்புகழ் நிலையற்றதாயினும், விரும்பினார்கள். போர் செய்தலாகிய முறையை மேற்கொண்டு புகழடைய முயன்ற இவர்களினும் வேறுபட்ட முறையைக் கையாண்டு புகழீட்டியவர்களும் உண்டு. பிறருக்குத் தீங்கு புரிவதைக் கனவிலும் கருதாதவர்களாய் வாழ்ந்த அவ்வள்ளல்களும் புகழ் பெற்றனர். அறிவின் துணைகொண்டு புகழ் தேட முயன்ற இப்போர் வெறியர்கள் எங்கே, உணர்வின் துணைகொண்டு கொடை என்ற சிறப்பால் புகழ் படைத்த வள்ளல்கள் எங்கே! இவ்விரு சாராரும் பெற்றது ஒரே புகழ்தான் என்றாலும், இருவர் கையாண்ட வழிகள் எவ்வளவு மாறானவை! அடையும் பயன் ஒன்றேயாயினும், மேற்கொள்ளும் வழி வேறுபாட்டால் இருவரும் இரு வேறு துருவங்கட்குச் சென்றுவிட்டனர்.

புகழடைய இரு வழிகள்

அறிவு வழி மேற்கொண்ட இவர்கள் புகழ் சிறந்ததா, அன்றி, அன்பு வழி மேற்கொண்ட அவர்கள் புகழ் சிறந்ததா? அறிவு அறிவு என்று கூவி அறிவிற்கு வணக்கம் செலுத்தும் இக்காலத் தமிழ்நாடு, ஒரு வேளை இப்போர் வெறியர்களை பாராட்ட முன் வரலாம். ஆனால், உண்மையில் இவர்கள் புகழ் நிலை நின்றதா? இது நன்கு ஆராயற்பாலது. அன்பு வழி மேற்கொண்டு புகழ் படைத்தார் பற்றி அடுத்துக் காண்போம்.

எவ்வழி சிறந்தது?

அறிவு வழியை மேற்கொண்டு படை திரட்டித் ‘தன்வலியும் துணைவலியும் மாற்றான் வலியும் இருள் தீர எண்ணிப்’ போர் மேற்கொண்டு வெற்றி பெற்றுப் புகழடைந்தவர்கள் பற்றியும் கண்டோம். புகழ் தேட வேண்டும் என்ற தலையாய விருப்பும், உள்ளே தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு வடிவு கொடுக்கும் முயற்சியும் சேர்ந்து போராக வெளிப்பட்டன என்றும் கண்டோம். இவ்வரசர்கள் வாழ்ந்து இன்று இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகுகூட இவர்கள் செய்கை போற்றத்தக்கது என்று ஒரு தலையாகக் கூறக்கூட வில்லை.

அகங்காரமும் மமகாரமும்

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஆணவமும் மமகாரமும் இயற்கையாக அமைந்துவிடுகின்றன. பல சந்தருப்பங்களில் வேறு வழியாற் கூறினவிடத்தும் ஏற்றுக் கொள்ளாதவர்களை மடக்க இது பயன்படுகிறது. ‘இத்துணைப் பெரியவனான நீ இந்தக் காரியம் செய்யலாமா என்று கேட்டால் சிலர் திருந்திவிடக் காண்கிறோம். எனவே, ஒவ்வொருவனும் தன்னைப் பற்றி ஒரு மதிப்பைத் தானே வகுத்துக்கொண்டுள்ளான் என்பது தெரிகிறது. தான் செய்யும் காரியம் தன் மதிப்புக்கு ஏலாதது என்பதை ஒருவர் எடுத்துக்காட்டியவுடன் அச்செயல் செய்வதிலிருந்து விலகி விடுகிறான். இதிலிருந்து ஒன்றை அறிய முடிகிறது, மனிதனிடத்து அமைந்து கிடக்கும் ‘அகங்காரம்’ எனப்படும் ‘யான்’ என்பதையோ ‘மமகாரம்’ எனப்படும் ‘எனது’ என்பதையோ தொட்டுவிட்டால், அவன் துள்ளி எழுகிறான். உறங்கிக் கிடக்கும் ஒருவனைத் தொழிற்படுத்த வேண்டுமாயின், இவற்றைத் தூண்டி விடுவது சிறந்த வழி என்றே படுகிறது.

தூண்டிலில் இரை

‘யான் எனது’ என்பனவற்றைத் தூண்டுவதன் மூலம் ஒருவனை நல்லது செய்யவும் தூண்டலாம்; அல்லது தீயவை செய்யவும் செலுத்தலாம். இவை இரண்டும் தூண்டுபவன் மன நிலையைப் பொறுத்தவை. பழந்தமிழ் அரசர்களின் புகழ் விருப்பம் இவ்வகங்காரத்திலிருந்து அரும்பினதேயாகும். அவன் புகழைப் பாடினவர்கள் ஒரு வகையில் அம்மன்னனுடைய ‘யானுக்கு’ இரை இட்டனர். ‘யான்’ என்ற மீனுக்குப் ‘புகழ்’ என்னும் இரையைக் காட்டிலும் சிறந்தது ஒன்றில்லை. அதிலும் ‘கவிதை’ என்னும் தூண்டிலிற்கோத்த ‘புகழ்’ என்னும் இரையைக் கண்டு மயங்காத மனிதர்களே மிகமிகக் குறைவாவர்; பழந்தமிழ் மன்னர்களில் பெரும்பான்மையானவர் ‘மனிதர்’களே. எனவே, அவர்கள் இத்தூண்டிலில் சிக்குண்டதில் வியப்பில்லை. இது கருதியே போலும் வள்ளுவப் பெருந்தகை ‘புகழ்’ என்ற அதிகாரத்தை இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்துப் போனார்! மேலே கூறப்பட்ட முறையில் அறத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று கூறிய ஆசிரியர், மக்கள் இனத்தை மறுமுறையும் கூர்ந்து நோக்குகிறார். ஒரு சிலர் பயன் என்ற ஒன்றைக் கண்டால் ஒழிய நன்னெறி ஒழுகமாட்டார்கள். ஆனால், பயன் என்பது இம்மையில் அன்றி மறுமையில்தான் கிடைக்குமெனின், ‘அது கிடக்கட்டும்’ என்று கூறுகிறவர்களும் இம்மக்கள் தொகுப்பில் உளராகலின், அவர்கள் பொருட்டாகவே ‘புகழை’ இறுதி அதிகாரமாக வைத்தார் போலும்! இந்தத் தூண்டில் பொன் முள்ளாகலின் இல்லறத்தார்க்கே உரியது என்பார் போல இல்லறவியலின் இறுதி அதிகாரமாக வைத்து உள்ளார். துறவு நெறி செல்வபவர் இப்புகழ் என்னும் வலையில் பட்டால் மீள்வது அரிதன்றோ?


யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
                                                           (குறள்–346)

என்று கூறிய பிறகு துறவிக்குப் புகழ்மேல் ஆசை இருத்தல் முறையன்று. எனவே, துறவறத்தில் இவ்வதிகாரத்தை வள்ளுவர் வைக்கவில்லை.

புகழ் தேட வழி

இல்லறவியலில் ‘புகழ்’ அதிகாரத்தை வைக்கும் பொழுது ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் வைத்துள்ளார் என்பதை முன் பின் பார்த்தால் நன்கு விளங்கும். ஈகை என்ற அதிகாரத்தின் பின்னர் இவ்வதிகாரம் அமைந்துள்ளது நோக்கற்குரியது. அதனை ஒருவேளை மக்கள் கவனியாமல் விட்டு விடுவார்களோ என்று அஞ்சிப்போலும் ஆசிரியர் புகழ் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில் முதல் இரண்டு குறள்களிலும் ஈகை உடையானுக்கே புகழ் உண்டு என நினைவூட்டுகிறார்! புகழ் தேடவேண்டும் எனினும் அதற்குப் போரைக் கருவியாகக் கொள்வதை வள்ளுவர் விரும்பியிருக்க மாட்டார். பிறர்க்குத் தீமை புரிந்து அதனால் புகழ் வருவதாயின் அதனைப் புகழ் என்றுகூற ஒருப்பட மாட்டார்.


‘மறந்தும் பிறன்கேடு சூழற்க’
                                                           (குறள்–204)

என்று கூறிய பெரியார்.

பிழை எங்கே?

வள்ளுவர் கருத்து இதுவாயின், பிழை எங்கே நேர்ந்தது பழந்தமிழ் மன்னர்கள் ஏன் போரைக் கருவியாகக் கொண்டனர்? அறிவை அதிகம் நம்பியதால் ஏற்பட்ட பயன்தான் அது. ஓயாது பிறரைப் பற்றியும் அவருடைய வலிமை பற்றியும் எண்ணிக்கொண்டிருந்த அம்மன்னர்கள் இப்பிழை செய்வது எளிய காரியம். அதிலும் மன்னராய்ப் பிறந்த தாங்கள் செய்வன அனைத்தும் சிறந்தவை என்ற எண்ணமும் உடன் தோன்றி விட்டால் பிறகு கேட்வும் வேண்டுமா? பெற்ற பயன் இதுதான்.

அறிவாராய்ச்சியும் பயனும்

இந்தப் பாலைவன வாழ்வில் வேறு கருத்துடையவர்களே இருந்ததில்லையா? இல்லாமல் இல்லை. ஆனால், அறிவும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டிய இவ்வுலகில் அறிவின் துணைகொண்ட இவ்வரசர்கள் கூட்டம் மிகுதி. ஆனால், உணர்வின் துணைகொண்ட மன்னர்கள் கூட்டம் சற்றுக் குறைவு. அறிவைத் துணைக்கொண்டு உலகை நோக்கும்பொழுது, உலகம் வழங்குகின்ற காட்சியே வேறு உணர்ச்சியைத் துணைகொண்டு காணும் பொழுது கிடைக்கும் காட்சியே வேறு; அறிவால் ஆராய்ந்த மன்னன் முதலிற் கண்டது தன்னையும், தன் பெருமையையும் ஆம். அடுத்துக் கண்டது தன்னைப் போன்ற மன்னர்களையும், குடிமக்களையும். ஆனால், அறிவுக்காட்சி அம்மட்டோடு நிற்கவில்லை. அந்த அரசர்களைத் தன்னுடன் ஒப்புமை செய்து பார்த்து அவர்களுடைய வன்மைக் குறைவை எடுத்துக்காட்டிற்று. தன் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் கூறிற்று. வந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டிற்று. பிறருடன் தன்னை எடை போடத் தொடங்கியவுடன் எவ்வாறாயினும் அவர்களினும் தான் மேம்பட்டவன் என்று பிறர் கூற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் ஆளும் இந்த நிலம் ‘பிறமன்னர்கட்கும் பொது’ என்ற சொல்லைப் பொறுக்காத ஒரு நிலை வந்துற்றது.


“வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறா அது
இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப”
                                                               (புறம்-8)

[பிற அரசர் புகழும்படி இன்பத்தை விரும்பிய வாழ்வை நடத்தாமல், இந்த உலகம் பிற மன்னருக்கும் பொது என்று பிறர்சொல்லும் சொல்லைப் பொறுக்காமல்.]

அறிவால் ஆராய்ந்த பொழுது பெற்ற பயன் இதுவாகும்.

உணர்வு வழி வாழ்வு

உணர்ச்சியால் ஆண்ட பெருமக்களுள் தலையாயவன் பாரி வள்ளல். அறிவை அடக்கிக்கூட உணர்ச்சிக்கு இடந்தந்த பெருமை அப்பெருமகனுக்கே உண்டு. ‘இவ்வளவு தூரம் அறிவை இழந்து உணர்ச்சி வசப்படலாமா? அதுவும் மன்னனாகிய அவன் இவ்வாறு செய்யலாமா?’ என்றுகூடக் கேட்கப்படலாம். உணர்வை இழந்து, அன்பை இழந்து, தம்மொடு பொருது மடிகிறவரும் தம்மைப் போன்ற தமிழர் என்பதை மறந்து, தமிழ் மண்ணில் தமிழ்க் குருதியைப் பரவவிட்ட நூற்றுக் கணக்கான தமிழ் மன்னர், உணர்ச்சியை விட்டு அறிவின் துணை கொண்டனர். அவர்கள் எதிரில் பாரியும் பாரி போன்ற ஒருசிலரும் அறிவைவிட்டு உணர்ச்சியைப் பெருக்கி வாழ்ந்தது தவறா? ‘உடையுடுத்தாத ஊரில் உடையுடுத்தவன் பைத்தியக்காரன்’ என்பது முதுமொழி. அவ்வாறு கூறுவது சரிதான் என்று கூறும், அறிவுவாதிகள் வேண்டுமானால் பாரியைத் தவறு கூறட்டும். மற்றவர் அனைவரும் பாரியைப் போற்றத்தான் செய்தனர்; செய்கின்றனர்; செய்வர்.

கொடைக்கு உவமை

பாரியின் கொடைத்திறத்திற்கு உவமை கூற வந்த புலவர், உலகம் முழுவதும் தேடியும் உவமையைக் காண முடியாமல், இறுதியில் ‘மேகம்’ ஒன்றைத்தான் கூறினார். ‘என்ன அழகான உவமை! இதைவிடப் பாரியைத் திட்ட ‘வேறு உவமை வேண்டுமா?’ என்கிறார் அறிவுவாதியர்; மேகம் செய்யும் தொழிலைப்பற்றிப் பரணர் இதோ பாடுகிறார்; அதுவும் ‘மேகம்’ என்ற வள்ளலைப் பற்றித்தான் பாடுகிறார்.


அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல
                                                             (புறம்–142)

[வற்றிய குளத்திலும் விளை வயலிலும் பெய்து, அதனால் நாம் நினைக்கும்படியான பயனை உண்டாக்காமல், கார் நிலத்தில் பொழிந்து எவ்விடத்தும் வரையாத இயல்புடைய மேகம் போல]

இவ்வாறு கொடுப்பதை ஆராயாமல் தருவதை என்னவென்று கூறுவது? இது முறையா? பெருமையா? அறந்தானா? இல்லை என்பார் என்க. ஆனால், இவ்வாறு தருவதன் அடிப்படையை உணர்ந்துகொண்டாலன்றிப் பாரியை அறியுமாறு இல்லை.

தனி இனம்

பாரி போன்றோர் ஒரு தனி இனமாவர். ஏனையோருக்கு மனம் வேலை செய்வதைப் போல இவர்கட்குச் செய்வதில்லை. அறிவாளன் உலகைக் காணும்பொழுது முதலிற் காண்பது தன்னை (அகங்காரம்) என்றும் அடுத்துக் காண்பது தனதை (மமகாரம்) என்றும் கூறினோம். பாரி போன்றோர் முதலிற் காண்பது இவற்றையன்று, கூறப்போனால் இறுதியிற்கூட இவற்றைக் காண்பதில்லை அவர்கள். இதுவே வேற்றுமை. இதை உதாரணத்தால் நன்கு அறியலாம். யானும் எனதும் அவர்கள் பார்வையில் வராமையின், ‘புகழ்’ என்னும் தூண்டிலில் அவர்கள் சிக்குவதும் இல்லை. யான், எனதை உடைய மீன்கட்கே புகழ் என்னும் பொன் தூண்டில் உரியது. அவற்றிலிருந்து விடுதலைப் பெற்ற திமிங்கிலங்கள் போல்வர் இவ்வள்ளல்கள். ‘யான் எனது’ அற்றவன் பாரி என்பதைச் சற்று விளங்கக் காணலாம்.

அறிவால் ஆய்ந்தால்....... ?

காட்டில் தேரூர்ந்து சென்ற பாரி முல்லைக்கொடி ஒன்று கொழுகொம்பு இல்லாமல் வாடிய துயரைக்கண்டான். கண்டவன், ‘ஆறு அறிவு படைத்த’ மனிதனாய் பாரி காணப்பட்டது, ‘ஓர் அறிவு’ மட்டும் உடைய உருகொடி. பாரியின் அறிவு வேலை செய்யத் தொடங்கியிருப்பின் யாது நிகழ்ந்திருக்கும் என்று காணலாம். முதலில் இக்கொடிக்கு ஒரு கொழுகொம்பு தேவை என்று நினைத்திருப்பான். ‘எத்தகைய கொம்பு தேவை? சிறிய ஒரு கொம்பு போதுமா, அன்றிப் பெரியதொரு மரம் தேவைப்படுமா? வீட்டிற்குச் சென்றவுடன் ஏவலாளன் ஒருவனை ஏவி நல்லதொரு கொம்பை நடச்சொல்ல வேண்டும்,’ என்ற முறையில் நினைந்திருப்பான். இன்னுங் கொஞ்சம் அறிவு முதிர்ந்திருந்தால், கீழ்க்காணும் முறையில் அவன் நினைவு ஓடியிருப்பினும் வியப்படைவதற்கு ஒன்று இல்லை: “இது நாம் வளர்க்கும் கொடியன்று. காட்டில் இயற்கையாய் இந்த ஒரு கொடிதானா வளர்கிறது? எத்தனையோ ஆயிரக்கணக்கான கொடிகள் உள. முல்லை மட்டும் என்ன? எத்தனையோ கொடிகள்! இவற்றிற்கெல்லாம் கொழு கொம்பு தேவையா என்று காண்பதுதானா நமது வேலை: அரசனாய் இருக்கும் நமக்கு எத்தனை தொல்லைகள்! முறை வேண்டியும் குறை இரந்தும் நம்மிடம் வருபவர்கட்கே தக்க வழிதேட முடியாத பொழுது இந்தக் கொடிக்காகக் கவலைப்படுவது அறிவீன மன்றோ? கிடக்கட்டும். இன்று நாம் இந்தக் கொடிக்கு ஒரு கொம்பு நட்டுவிட்டால் நாளை வரும் கொடிகளையெல்லாம் யார் காப்பாற்றப் போகிறார்கள்? அப்படியே இத்தக் கொடி அழிந்துவிட்டால்தான் என்ன? உலகமா முழுகி விடும்? செலுத்துத் தேரை மேலே!” இவ்வாறு நினைக்க அறிவுவாதிக்கே முடியும். ஆனால், பாரி அறிவுவாதி அல்லனே!

பாரியின் மனநிலை

பாரி செய்தது யாது? தான் ஓர் அரசன் என்பதையும் எதிரே இருப்பது கேவலம் ஒரு கொடிதான் என்பதையும் அறவே மறந்துவிட்டான். அந்தப் பண்பட்ட உள்ளத்தில், கலை மனத்தில், உலகிலுள்ள உயிரெல்லாம் ஒன்று என்று கருதும் கருணை உள்ளத்தில், எதிரே முல்லைக் கொடி தெரியவேயில்லை. பின்னர் என்ன தெரிந்தது? கொழு கொம்பின்றி வாடும் ஓர் உயிர்தான் தெரிந்தது. பாரியின் உயிரே ஊசலாடிவிட்டது. கொடி கொம்பில்லாமல் ஆடினதைக் கண்ட கருணை மறவனின் உள்ளம் துடித்தது; உயிர் துடித்தது. ஓர்உயிர் மற்றோர் உயிரின் வாட்டத்தைக் கண்டுவிட்டது. தன்னுடைய இனமாகிய மற்றோர் உயிர் வருந்துவதைக் கண்டுவிட்டது. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் என்னுள்ளம் வருந்திய வருத்தம் நீயே அறிவாய்!” என்று பிற்காலத்தில் ஒரு கருணை உள்ளம் (இராமலிங்க வள்ளலார்) பேசிற்று. பாரி இக்காட்சியில் தன்னை மறந்து, தன்னிலைமையை மறந்து, அறிவிழந்து, கூர்த்த, அறிவெல்லாம் கொள்ளை கொடுத்து, வருந்தும் கொடியுடன் உணர்வின் உதவியால் ஒன்றாகிவிட்டான். பாரியின் இந்த நிலையைக் கற்பனை செய்துகொண்டு தான் ஆசிரியர்,

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை?
                                                                 (குறள்–315)

என்று பாடினார் போலும்! அந்த ஓரறிவுயிர் தன்னுடைய துயரை நம் போன்றவர் காதாற் கேட்கும்படி வாய்விட்டுக் கூறவில்லை. முல்லைப் பூக்கள் பற்கள் போல இருப்பினும், வாய்விட்டு ஒன்று வேண்டும் என்று கேட்பது உயிர் போகும் நேரத்திற்கூட இழிந்த செயலாகலின், கேட்க வில்லை போலும்! அது தமிழ்நாட்டு முல்லைக் கொடியன்றோ? ஆனால், எதிரில் நிற்பவனும் ஒரு தமிழ் மகன் அல்லனோ? எனவே, வாய் திறந்து கேட்பதன் முன்னரே தருவதுதான் முறை என்று கருதித் தந்து விட்டான். எதனைத் தந்தான்? தன் பெருமைக்கேற்பத் தன் தேரையே தந்துவிட்டான். வேறு ஆராய நேரம் ஏது? அறிவின் துணைகொண்டு ஆராய்ந்திருப்பின், பாரியாக முடியாதன்றோ? உணர்ச்சி உலகத்தில் வாழும் அந்தக் கருணை வள்ளலுக்குத் தனக்கும், கொடிக்கும், தேருக்கும் உள்ள வேறுபாடு எங்கே தெரியப் போகிறது! தான் நடந்து செல்ல முடியும். ஆனால், அம் முல்லைக் கொடி பற்றிப்படரக் கொம்பு வேண்டும். கொம்பின் வேலையைத் தேரும் செய்யும். எனவே, தேரை நிறுத்தி விட்டான்.

மடவன் பாரி

விலையுயர்ந்த அந்தத் தேர் முல்லைக்கொடிக்குத் தேவை இல்லை; ஆனால், அரசனாகிய தனக்கு மிகவும் இன்றியமையாதது என்று கருதினானா? அரசனுக்குப் பயன்படும் தேரைத் தேவையற்ற முல்லைக்கொடிக்குப் பயன் படுத்தியது அறிவுடைய செயலா? அன்று. ஆகலாற்றான் அவனை அறியாமையுடையவன் என்று புலவர்கள் பாடினார்கள், ‘மடவன் பாரி’ என்று கூறி மகிழ்ந்தார்கள்.

இத்தகைய செயலால் பாரி புகழ் பெற்றானா இல்லையா? பெற்றான்; அழியாப் புகழைப் பெற்றான்.

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்களனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாளி
                                                              (புறம்– 200)

[நிறைந்த பூக்களையுடைய முல்லைக்கொடி பாரியைப் புகழ்ந்து பாடவில்லை எனினும், ஒலிக்கின்ற மணிகள் கட்டிய தேரைக் கொடுத்த பரந்த புகழையுடைய பாரி]

என்று கபிலராலும்,

கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி
னும்கொடுப் பார்இலை
                                                         (தேவாரம் 7, 34–2)

என்று இறைவனையன்றி மக்களைப் பாடாத சுந்தரமூர்த்தி நாயனாராலும்.

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டும் அறிதும்
                                                          (பழமொழி–361)

என்று பழமொழியாசிரியராலும் போற்றப்பட்டான். போர் வெறியர்களின் புகழ் பரந்ததைக் காட்டிலும் இவனுடைய புகழ் ஓங்கி வளர்ந்தது உண்மை. அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் என்பவர்களுடன் ஒப்புநோக்கக் கரிகாலன் நெடுஞ்செழியன் முதலானோர் வெற்றிப் புகழ் மங்கி விடுகிறது. ஆனால், யாருடன் ஒப்பு நோக்கினும், பாரியின் புகழ் மங்குமாறு இல்லை. காரணம், அவர்கள் புகழை வேட்டையாடிச் சென்றனர். ஆனால், புகழோ, அவர்களை விட்டுவிட்டுத் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாமல் உள்ளத் துறவால் உயிர்கள் அனைத்தும் ஒன்று என்று கருதி வாழ்ந்த பாரியைத்தான் வேட்டையாடிச் சென்றது. புகழை வேட்டையாடிய அவர்களினும், புகழால் வேட்டை ஆடப்பெற்ற பாரி, அறிவைவிட உணர்வு, வாழ்வே சிறந்த தென்பதை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறான்!
"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/006-008&oldid=1347429" இலிருந்து மீள்விக்கப்பட்டது