அகமும் புறமும்/007-008

தமிழர் கண்ட அமைச்சன்

இத்தாலியனுடைய நூல்

இற்றைக்கு ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னர் இத்தாலித் தேசத்தைச் சேர்ந்த ‘மெக்காவிலி’ என்ற பெருஞ்செல்வன் அரசன் (The Prince) என்ற பெயரால் ஒரு நூலை எழுதினான். அரசனுக்குரிய இலக்கணம், ஆட்சி முறை என்பன அந்நூலில் ஓரளவு கூறப்பெற்றுள்ளது உண்மையே. ஆனால், அதைவிட மிகுதியாக, எத்தகைய சூழ்ச்சிகளிழைத்தால் ஒருவன் அரசனாக முடியும் என்பதையே அந்நூல் பேசிற்று. மிக சமீப காலம்வரை அந்நூல் ஈடு இணையற்றதாய் ஐரோப்பா தேசம் முழுவதிலும் விளங்கி வந்தது.

குறளும் கூறுகிறது

ஆனால், மெக்காவிலி தோன்றுதற்கு ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே இத்தமிழ்நாட்டில் ஒப்பற்ற அரசியல் நூல்கள் தோன்றின. அத்தகைய நூல்களுள் திருக்குறளும் ஒன்று என்று கூறத் தேவை அன்று. திருக்குறள் அல்லாத ஏனைய தமிழ் நூல்களிலும் அரசியல் பற்றிய பல கருத்துக்கள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. அரசியல் கருத்துக்களை அறிவிப்பது அவற்றின் தலையாய நோக்கம் அன்றாகலின், இலை மறை காயாய் இவ்வுண்மைகள் அப்பாடல்களில் அமைந்துள்ளன.

அரசாட்சியில் அரசனுக்கு அடுத்தபடியில் நிற்பவன் அமைச்சனேயாவன். மிகு பழங்காலத்தில், அரசன் உலகின் உயிர் என்று கருதப்பெற்ற காலத்திற்கூட, அமைச்சனை அரசனுடைய கண்களாகவே கருதினர். உலகப் பொதுமறை தந்த பெரியார்,

“சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்,
 சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.”
  (குறள்–445)

என்று விதித்துப் போனார்.

மெக்காவிலியின் கூற்று

மெக்காவிலி தன் நூலின் 22ஆம் பிரிவில் அரசன் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதுப் பற்றிப் பின்வருமாறு குறிக்கிறான்: “அமைச்சரைத் தேர்ந்தெடுப்பது எத்துணைப் பெரிய காரியமென்பதைக் கூறத் தேவை இன்று. மன்னன் தன் அறிவு விளக்கத்திற்கேற்பவே அமைச்சரைத் தேர்ந்தெடுப்பான். அறிவுடை அமைச்சரைத் தேர்ந்தெடுப்பவன் அறிவுடை மன்னனாகக் கருதப்படுவான். அமைச்சனுடைய தகுதியை மன்னன் அறியச் சிறந்த வழி ஒன்று உண்டு. எப்பொழுது ஓர் அமைச்சன் மன்னனைக் காட்டிலும் தன்னைப் பெரியவனாக மதிக்கிறானோ, அப்பொழுதே அவன் அத்தொழிலுக்குத் தகுதியற்றவனாகிறான். எவன் ஒருவன் அனைத்திலும் தன்னுடைய ஊதியத்தைப் பெரிதென மதிக்கிறனோ, அவனும் அமைச்சனாகத் தகுதியற்றவன். ஒரு முறை அமைச்சனுடைய தகுதி பற்றி மன்னன் ஆய்ந்து தெளிந்து அவனுடைய உண்மை அன்பை அறிந்துவிட்டால், பிறகு அவன் அன்பை நிலைபெறச் செய்யத்தக்கனவற்றை இயற்ற வேண்டும்; மேலும் பொறுப்புக்களையும் பதவியையும் பயத்தையும் தருவதால் அமைச்சனுடைய அன்பு மாறாமல் இருக்கச் செய்ய வேண்டும். இத்தகைய முறையில் இருவரும் நடந்துகொண்டால், இருவரும் பெறாத நன்மையும இல்லை; இம்முறை மாறினால், இருவரும் அடையும் தீமைக்கும் ஓரளவில்லை.”

அடை மொழிகள்

இத்தாலிய நாட்டு அரசியல் ஞானி கூறின இவற்றைக் காட்டிலும் சிறந்த பல உண்மைகளைத் தமிழர் இராண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கண்டுள்ள முறையச் சற்று விரிவாகக் காணலாம். அமைச்சரையும் அவரது தொழிலையும் எத்துணைச் சிறப்பாகத் தமிழர் கருதினர் என்பதை இவ்வமைச்சரைக் குறிப்பிடும்பொழுது கொடுத்த அடைமொழிகளாலேயே ஒருவாறு அறியலாம்.


‘நூல் அறிபுலவர்’ (சிலம்பு, 25,116)
‘நுணங்கு பொருள் அமைச்சர்’ (பெருங்கதை 650)
‘நுண்மதி யமைச்சர்’ (பெருங்கதை 302)
‘நுண்வினை அமைச்சர்’ (பெருங்கதை 415)
‘தெரிமதி யமைச்சர்’ (பெருங்கதை 422)
‘நூல் வல்லாளர்’ (பெருங்கதை 469)

என்ற அமைச்சரைப்பற்றி நூல்கள் நுவல்கின்றன.

பண்புகள்

இவ்வடைமொழிகளிலிருந்து அறியப்படுவது ஒன்று உண்டு. பல்வகை மக்களொடும் பழகவேண்டிய கட்டுப்பாடுடைய அமைச்சன், கூரிய அறிவுடையவனாய் இருத்தல் வேண்டும். ஒருவர் பேசும் பேச்சுக்களிலிருந்து மட்டும் அவருடைய மனநிலையை அறிதலென்பது இயலாத காரியம். ‘மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய் போலும்மே’ என்ற முதுமொழியையும் அதன் எதிர் மொழியையும் அமைச்சன் கவனத்திற் கொள்ள வேண்டும். பேசுவோர் சொற்களை மட்டும் கொண்டு முடிவு செய்யாமல், அவர் முகக் குறிப்பு முதலியவற்றைக் கொண்டும் உண்மை காண முயல வேண்டும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்ட ஆசிரியர்,


‘தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார்
அழுத கண்ணிரும் அமைத்து.’
                                                                        (குறள்–828)

என்று கூறினார். எனவே, பிறருடைய அழுகையைக் கண்டு மயங்கிவிடக்கூடாது என்பதையும் அறிவித்தார் ஆசிரியர். இதன் மறுதலையாகக் கல் நெஞ்சுடையவனாய் அமைச்சன் இருப்பினும் பெருந்தீமையாகும். ‘நடுவு நிலையினின்றும் நீங்கிய அமைச்சன் மனத்திற் கிடந்ததை வெளிப்படுத்த அதனைக் கேட்ட மன்னவன் கொடுந்தொழிலைச் செய்வது போலக் கதிரவன் கொதிக்கிறான்’ என்ற கருத்தில்,


நடுவுஇகந்து ஒரீஇ நயன்இல்லான் வினைவாங்கக்
கொடிது ஒர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு

கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின்
(பாலைக்கலி 8)

என்று பாலைக்கலிப் பாடல் ஒன்று கூறிச் செல்கிறது.

நூலறிவும் நுண்ணறிவும்

இப்பழம் பாடல்கள் அமைச்சனுடைய நுண்ணறிவுத் தேவையை இத்துணைப் பெரிதுப்படுத்திப் பேசுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கும். கடுகைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டவந்த பெருமகனாருங்கூட, ‘அமைச்சு’ என்றதோர் அதிகாரம் வகுத்து, அதனுள் இருக்கும் பத்துக் குறளிலும் அமைச்சனுக்கு நுட்பமான அறிவு வேண்டும் என்பதைக் குறிப்பாலுணர்த்திப் பின்னர்த் தனியே அதற்கென்றே ஒரு குறளும் அமைக்கின்றார்.


மதிநுட்பம் நூலொடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன் நிற்பவை?
(குறள்–636)
என்ற குறள் ஆய்தற்குரியது. நுண்மதி என்றும், நூலறிவு என்றும், இரண்டாகப் பகுத்து இயங்கு பேசப்படுவதைக் காணலாம். நூலறிவில்லாவிடத்தும் நுண்ணறிவு இருத்தலையும், பலரிடம் நுண்ணறிவில்லாவிடத்தும் நூலறிவு இருத்தலையும் காணலாம். எனினும், இவை இரண்டும் சேர்ந்தமைந்தாலொழிய, முழுப்பயனை விளைப்பதில்லை. எத்துணைச் சிறந்த நுண்ணறிவாயினும், நூலறிவு இல்வழி வகைதொகையற்றுச் சென்றுவிடும். நுண்ணறிவில் வழி, நூலறிவு செக்கிழுக்கும் மாடு போலச் சென்ற வழியே செல்லுமே தவிர புதியன காண முற்படாது.

புதுமையும் பழமையும்

ஒரு காலத்து ஓரிடத்து அனைவரும் நம்பின ஒன்றை நூல் வழக்குச் சிறந்ததெனப் பேசும். ஆனால், காலமும் இடனும் மாறியவிடத்து இந்நிலை முறை மாறிவிடும். அதனால், முன்னர் எழுதப்பெற்ற நூலில் இப்புதுவழக்கு இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, நுண்ணறிவுடன் உலகியலறிவும் இல்லாதான் இம்மாற்றங்கொண்டு மருட்சி அடைய நேரிடும். கால மாறுபட்டான் ஏற்படும் வழக்கு மாறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நூலறிவு, வளர்ச்சியை மறுக்கும் அறிவாகும். ஆதலால், வள்ளுவர் இவ்வளர்ச்சியைக் காணுமிடத்து உடன் அறிந்துகொள்ளும் நுண்ணுணர்வை முதலிற் கூறினார். ‘அவ்வாறாயின், மதிநுட்பம் மட்டும் போதாதா? நூலறிவு எற்றுக்கு? என்ற வினாத் தோன்றுமன்றே? வளர்ச்சி என்பது தனித்துத் தோன்றுவதொன்றன்று. பழமையிலிருந்துதானே புதுமை தோன்றுதல்கூடும்? விதையிலிருந்துதானே மரம் தோன்றல் கூடும்? மரத்தில் விதையின் தன்மை காணப்படுமாறு போலப் புதுமையிலும் பழமையின் இயல்பு காணப்படும். பழமையை அறவே ஒழித்த புதுமை வேண்டுவது, விதை இல்லாத மரம் வேண்டுவது போலவாகும். எனவே, பழமையை நன்கு ஓதும் நூலறிவை அடுத்துக் கூறினார் ஆசிரியர்.

ஆழங்காணமுடியாத மனித மனத்தை ஆட்சி செய்யும் அமைச்சருக்கு நுண்ணறிவும் உலகியலறிவும் நூலறிவும் தேவை என்பது கூறவும் வேண்டுமோ?

நல்லமைச்சர்

நுண்ணறிவோடு நூலறிவும் உடையாரே அமைச்சராயிருக்கத் தகுதியுடையார் என்பது கண்டோம். இதில் ஒரு சிறப்பென்னையெனில், நுண்ணறிவு பிறப்பிலேயே கிடைப்பது; நூலறிவு முயற்சியால் பெறுவது. முயற்சியால் ஒருவன் நுண்ணறிவைப்பெற முடியாது. இவை இரண்டையும் நன்கு பெற்றபொழுதும், மனிதப் பண்பாடு நிறைந்தவனாய் இருத்தல் வேண்டும் அமைச்சுத் தொழிலுக்கு வருபவன் என்பதை நம் முன்னோர் நன்கு கண்டனர்.

‘வடு நீங்கு அமைச்சர்’ (பெருங்கதை 484)
‘நற்புடை அமைச்சர்’ (பெருங்கதை 487)
‘நெஞ்சு புரை அமைச்சர்’ (பெருங்கதை 487)
‘அருமை அமைச்சர்’ (பெருங்கதை 529)

என்று பெருங்கதை கூறிச் செல்கிறது. சிலப்பதிகாரமோ, இவ்வாறு இல்லாதவரை

அறைபோகு அமைச்சர் (சிலம்பு 5; 130)

என்று கூறுகிறது.

இவ்வடைமொழிகளனைத்தும் ஒரே கருத்தை உட்கொண்டுள்ளன. அரசனுக்கு அடுத்தபடியாக உள்ள அமைச்சன், அரசனிடத்தும் நாட்டினிடத்தும் உண்மையான அன்பு பாராட்டாமல், தன்னுடைய நலத்தையே பெரிதென மதிப்பானாகில், அதனால் நாட்டிற்கு எத்துணைப் பெரிய தீமை ஏற்படும் என்பது கூறவும் வேண்டுமோ? அமைச்சன் இரண்டு பெருங்காரணங்கள் பற்றியும் தூய்மையும் அன்பும் உடையவனாய் திகழலாம். இயற்கையிலேயே அரசன்மாட்டுப் பற்றும் அன்பும் உடையனாய் இருத்தல் ஒன்று; பழி நாணும் பண்பாட்டால் நல்லனாய் இருத்தல் இரண்டாவது. தன் கடமையை உணர்ந்து நன்மையை நன்மைக்காகவே கடைப்பிடித்தல் முதல் முறையாகும். ‘நற்புடை அமைச்சர்’ என்று பெருங்கதை கூறும் பொழுது நன்மையை உடைய அமைச்சர் என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதனையடுத்து, ‘நெஞ்சுபுரை அமைச்சர்’ என்று கூறுவதும் இத்தகைய மன நிலையைக் கருதியேயாம்.

குடிப் பிறப்பு

இயற்கையாகவே தீமையிலிருந்து நீங்கின மனப்பான்மையுடன், தீமை புரிய அஞ்சுகிற மனப்பான்மைகள் சில உண்டு. நன்மை புரிவதால் ஏற்படும் நற்பயன்களைக் கருதி விரும்பியோ, தீமை புரிவதால் ஏற்படும் தீப்பயன்களைக் கண்டு அஞ்சியோ, இத்தகையோர் ஒன்றைச் செய்வதில்லை. நன்மை புரிதலும், நம்பிக்கையுடன் நடத்தலும், சொன்ன சொற்களைக் காத்தலும், பிறர்மாட்டு அன்பு கொள்ளுதலும் இவர்கள் உடன்பிறந்த பண்பாடுகள். நன்மையை நன்மைக்காகக் கடைப்பிடிக்கும் தலையாய பண்புடையார் இவர். இப்பண்பாடுகள் பெரும்பான்மை நற்குடிப் பிறப்பினால் உண்டாவன. மனிதனுடைய பண்பாடுகளுள் சில இயற்கையாய்ப் பிறப்பிலேயே உறுவன; ஏனைய சில, வாழும் பொழுது பெறுவன. இங்குக் கூறிய அனைத்தும் பிறப்பில் தோன்றுவனவாகலின், நற்குடிப்பிறப்பு என்று ஒரு சொல்லால் இவற்றைக் குறித்துவிடலாம். இக்கருத்தை மனத்துட்கொண்டே பொதுமறையாசிரியர்,

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

(குறள்–68)

என்று கூறுகிறார். இக்குறளில் தூது என்ற பெயர் தரப்படினும், அது அமைச்சரையே குறிக்கும் என்பதைச் சந்தருப்பத்தாலும் பரிமேலழகர் உரையாலுங் காணலாம்.

பழிக்கு நாணல்

இரண்டாம் முறையில் நல்லவனாய் இருத்தல் பழி நாணும் பண்புடைமையால் ஏற்படுதாகும். தாம் செய்யும் தவறு பற்றி வரும் பழிக்கு அஞ்சி நடத்தல் என்பது அனைவருக்கும் இயலுவதொன்றன்று. இயல்பாகவே சில மனங்கள் பழியைக் கண்டு நடுங்கும். இத்தகையவர்களைப் பற்றிக் கூற வந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று,

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்

(புறம்–182)

என்று கூறுகிறது பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்றுவிடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யாவிடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த வழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

 பிறர் பழியும் தம்பழிபோல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு

(குறள்–1015)
எனவே, அரசனே பழிக்குரியவற்றைச் செய்யினும் அரசன் செயலாதலின் தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்ததுபோலக் கருதி நாணமடையும் பண்பாடே பழியஞ்சி நடத்தலில் தலையாயவன் செய்வது. இதை மனத்துட்கொண்டே பெருங்கதை,

“வடுநீங்கு அமைச்சர்” (பெருங்கதை 484)

என்ற அடைமொழியைத் தருகிறது. மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது.

காவிதி மாக்கள்

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த மாங்குடிமருதனார் என்ற புலவர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனின் உற்ற துணைவராய் இருந்து கழித்தார். பாண்டியனோ, தமிழ்நாடு முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்தவன். அத்தகைய மன்னனுடனும் அவனுடைய அமைச்சர்களுடனும் நன்கு பழகிய காரணத்தாலும், தம் கூர்த்த அறிவால் பலவற்றைக் கண்ட காரணத்தாலும் மாங்குடிமருதனார் அமைச்சருக்கு வேண்டிய பண்பாட்டைக் குறித்துப் பாடினார். ‘அரசனிடம் காணப்படும் நலம் தீங்கு என்ற இரண்டையும் கண்டு, அவற்றுள் படாமல் அவனை அடக்கி, அன்பையும் அறத்தையும் தவறாமல் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து, பரந்த புகழ் நிறைந்த காவிதிப்பட்டம் பெற்ற அமைச்சர்’ என்ற கருத்தில்,

மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும்
(மதுரைக்காஞ்சி 495 : 499)

என்று அவர் பாடியுள்ளார்.

ஆயும் அமைச்சர்

இவ்வைந்து அடிகளில் அமைச்சருக்குக் கூறிய இலக்கணமும் பண்பாடும் மெக்காவிலி போன்றவர்களால் இரண்டு அச்சுப் பக்கங்களிற்கூடக் கூறப்படவில்லை. ’நன்றும் தீதும் கண்டு’ என்ற சொற்களால் அமைச்சரின் அறிவுத்திறம் பேசப்படுகிறது. மேலும் ‘கண்டு’ என்று மட்டும் கூறி நிறுத்திவிடாமல், ‘ஆய்ந்து’ என்றுங் கூறப்பெற்றதால், நுண்மாண் நுழைபுலமும் பேசப்படுகிறது. நடைபெறுகின்ற நிகழ்ச்சியை அப்படியே பொருள் செய்வதானால், உண்மை காண்டல் இயலாது. தீயது போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் நலமாகவும், நலம் போன்று காணப்படும் நிகழ்ச்சியின் உட்கோள் தீமையாகவும் இருக்கலாமன்றோ? எனவே புறத் தோற்றத்தையும் நிகழ்ச்சியையும் கண்டு அவற்றின் பயனைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், தன் நுண்ணிய அறிவால் நிகழ்ச்சியின் அப்பாலுள்ள பொருளை அறிதல் வேண்டும். இதனை ஆசிரியர் ‘ஆய்ந்து’ என்ற சொல்லல் கூறிவிட்டார்.

இருவகைத் தீமை

நலம் கண்டவிடத்து அதனிடத்து அன்பும், தீமை கண்டவிடத்து வெறுப்பும் கொள்வானேயாகில் அது அமைச்சனுக்கு ஏலாது. எனவே, அன்பையும் அறத்தையும் ஒருசேரக் கூறினார் ஆசிரியர். ‘இக்காலத் தீமை, நிலை பெற்ற தீமை’ எனத் தீமை இருவகைப்படும். நிலைபெற்ற தீமையைத் தடுக்க இக்காலத் தீமை பயன்படும்; உயிரை மாய்க்கும் கழலையை அறுத்துவிடுதல்போல; அமைச்சனாவான் இவை இரண்டின் தராதரத்தையும் ஆய்ந்து தீமையைத் தடுக்கும் இடத்திலும் அன்பிலிருந்தும் அறத்திலிருந்தும் வழுவாமல் காத்தல் வேண்டும். மேலும் அன்புள்ளவிடத்து அறம் மாறிவிடுமாகலானும் இவை இரண்டையும் உடன்சேர்த்துக் கூறுகிறார். அரசியல் நுணுக்கத்தையும் மனத்தத்துவத்தையும் நன்குணர்ந்த கவிஞர்.

பழந்தமிழ் அமைச்சர்

மூன்றாவது அடி நன்கு ஆய்தற்குரியது. ‘பழி ஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த’ என்ற அடியில் கவிஞர் தம் வன்மை முழுவதையும் கொட்டித் தீர்த்துவிடுகிறார். மனிதன் பல்வேறு வகையில் உயரக்கூடும். உயரவேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்பெற்றும் பலவகை செயல்களைச் செய்பவர் உண்டு. இவர்கள் செயல் செய்வதன் நோக்கம் உயர வேண்டுமென்பதே. அச்செயல்களின் பயனாகத் தாம் உயர்வதை மட்டும் கவனிப்பாரே தவிர, அச்செயலால் பிறருக்கு நன்மையா தீமையா என்பது பற்றி இவர்கள் கவல்வதில்லை. பழியுடைய செயலைச் செய்தால்தான் உயரமுடியுமென்றும் அஞ்சாமற் செய்வர். அரசனுக்கு விருப்பம் என்பதற்காகத் தீயனவற்றைப் புரிந்து அவனுடைய மதிப்பில் உயர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கும் அமைச்சர் எத்துணைப் பேர்! மதுரைக் காஞ்சி கண்ட மாண்புடை அமைச்சர் இவ்வினத்தைச் சேர்ந்தவரல்லர்; உயரவேண்டும் என்ற குறிக்கோளுடைய வரேயாவர். ஆனால், பழியிலிருந்து நீங்கின உயர்ச்சியையே விரும்புகிறார்களாம் இவர்கள். ‘ஒரீஇ’ என்று அளபெடுத்த மையின் ‘நீக்கி’ என்ற பொருளைப் பெறவைக்கிறார் ஆசிரியர். ‘நான் என் போக்கில் செயல் செய்தேன். பழி வந்தால் யான் என்ன செய்ய முடியும்?’ எனப் பேசுபவர் உண்டு. அவ்வினத்திலுஞ் சேராமல் இவர்கள் கவனத்துடன் பழியை விலக்குகிறார்களாம். எளிதாக உயர்ந்துவிட வேண்டும் என்று கருதாமல் பழியை நீக்கின செயல்கள் புரிந்தே உயரவேண்டும் என்றமையின், உயருவதைவிடப் பழி நீங்கின செயல் புரிவதே தலைமையுடையதாயிற்று. அடையும் பயனையே பெரிதாகக் கொண்டு, அதனை அடைய மேற்கொள்ளும்வழி பற்றிக் கவலை கொள்ளாமல் தொழிலாற்றுபவர் பலர் உண்டு. கருதிய பயனை அடைய எவ்வழியாயினும் சரியே என்று கருதும் கயவர்கள் அல்லர் இப்பழந்தமிழ் மக்கள். பயன் எத்துணைச் சிறப்புடையதோ, அத்துணைச் சிறப்பு வழியிலும் அமையவேண்டும் என்றே கருதினர். புகழ் என்பது இறுதியில் பெறும் பயனாகும். அதற்கு அடைமொழி கூறவந்த ஆசிரியர் ‘பழி ஒரீஇ’ என்று கூறுவாரேயாயின், அதனுடைய கருத்து யாது? புகழாகிய பயனை அடைய மேற்கொண்ட வழியும் பழியற்றது என்பதேயன்றோ?

பாய் புகழ்

இதனையடுத்துப் ‘பாய்புகழ் நிறைய’ வேண்டுமாம். புகழிற் சிறந்தது பாய்புகழ். பாய்புகழ் என்பதற்குப் பரந்த புகழ், விரிந்த புகழ் என்பதே பொருளாம். என்றோ ஒரு காலத்தில் புகழுடன் இருப்பவர் உண்டு. மேலும் சிறந்த செயல்கள் ஆற்றாமையின், அப்புகழும் அத்துடன் நின்று விடும். ஆனால், பரந்த புகழ் என்றமையின், மேலும் மேலும் நற்செயல்கள் புரிவதால் மேலும் விரிந்துகொண்டு செல்கிறதென்பதையும் புலவர் குறித்தாராயிற்று. பாய்புகழ் விரியுந் தன்மையுடையதாகலின் ஆழமின்றி அகலத்தில் மட்டும் பரந்துவிட்டதோ என்று எண்ணிவிட வேண்டா! பலராலும் அறிந்திருக்கப்படும் நிலை பாய்புகழ் எனப் பட்டால், மறவாமல் பல காலம் நினைக்கப்படுவதை நிறைதல் என்று கூறலாம். ‘பாய் புகழ் நிறைய’ என்று கவிஞர் கூறும்பொழுது பரந்தும் ஆழ்ந்தும் உள்ள புகழையே குறிக்கிறார்.

கடமை புரிபவன்

இவ்வாறு புகழ்பெற வேண்டுமாயின், எத்தகைய செயல்கள் நிகழ்த்தவேண்டும் என்று கூறத்தேவை அன்று நல்லன தீயனவற்றைக் கண்டு, ஆய்ந்து, இவை மன்னனிடத்துக் காணப்பெறினும் மாவிசும்பு வழங்கும் பெரியோர்போல அடக்க வேண்டுமாம் அவனை. பாம்புப்புற்றுள் கை விடுவதும் தவறு செய்கின்ற மன்னைத் திருத்தப் புகுவதும் ஒன்றுதான். எனினும் அதனால் வரும் ஏதம் பற்றிக் கவலைகொள்ளாமல் தன் கடமையைச் செய்பவனே அமைச்சன் என்று கூறப்படத் தகுதி உடையான். மன்னனை முழு வல்லமை படைத்த இறைவன் என்று கருதிய அந்நாளிற்கூட அமைச்சனுக்கு இத்துணைப் பெருமை தந்தனர் தமிழர். இப்பெருமை காரணமாகவே அவனுடைய கடமைகளும் மிகுந்து விடுகின்றன. ஏனைய நாட்டில் அமைச்சனைப்பற்றி எழுதியவர்கள் அவன் தனித் துய்மைபற்றிக் கூறினார்கள். ஆனால், அவனுடைய தலையாய கடமைகளுள் ஒன்றாக மன்னனைத் திருத்துவதையும், அத்திருத்தம் செய்யும் முயற்சியில் தனக்கு ஊறு நேர்வதாயினும் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இத்தமிழர் கருதினர்.


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்
                                                             (குறள்–538)

என்று குறளாசிரியர் குறிப்பிடுவது இதே கருத்தைத்தான்.


‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.’
                                                             (குறள்–691)

என்று மற்றவர்களை நோக்கிக் கட்டளையிட்ட வள்ளுவர் 'உழையிருந்தான்' என்ற அடைமொழியால் அமைச்சர்கள் அரசனுடன் சேர்ந்தும் சேராமலும் இருத்தல்கூடாது என்பதையும் குறிப்பிடுகிறார். தனக்கு ஏற்படப்போகும் சில தீங்கினைப் பற்றிக் கவலையுறாத அமைச்சனைப் பற்றியே பந்தமிழர் பெருமைப்பட்டனர். இத்துணைச் சிறப்புடையவனை வறிதே அமைச்சன் என்று மட்டும் வழங்காமல், காவிதி என்ற பட்டம் தந்து, தலைமை அமைச்சன் ஆக்கினர். அத்தகைய காவிதியமைச்சனைப் பற்றியே மதுரைக்காஞ்சி பேசுகிறது.

பழந்தமிழன் கண்ட இவ்வமைச்சன் எங்கே, ‘மெக்காவிலி’ கண்ட அமைச்சன் எங்கே! தமிழன் பண்பாடு எத்துணை உயர்ந்ததென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/007-008&oldid=1347430" இலிருந்து மீள்விக்கப்பட்டது