அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அசுரர்கள் அழிவு
- சூரனவன்செய்த துட்டம்பொறுக்காமல்
- வீரமுள்ளதேவர் விரைந்தேமுறையமிட
- தேவர்முறையஞ் சிவனார்மிகக்கேட்டு
- காவலாய்நித்தங் கைக்குள்ளிருக்கின்ற
- பெண்ணமுதைப்பார்த்து புகல்வாரங்கீசுரரும்
- கண்ணேமணியே கருத்தினுள்ளானவளே
- பூலோகந்தன்னிலுள்ள புருடராயுதத்தாலே
- மேலோகம்வாழும் விமலராயுதத்தாலும்
- மலைமேலேவாழும் மாமுனிவர்தன்னாலும்
- அளியாவரம் அச்சூரனுக்கேகொடுத்தோம்
- தரியாமுடுக்கந் தான்பொறுக்காத்தேவரெல்லாம்
- அரியோயெனமுறையே மனேகம்பொறுக்கரிதே
- என்றீசர்சொல்ல இயல்கன்னியேதுரைப்பாள்
- மலைலோகம்மேலோகம் வையமதிலாகாட்டால்
- அலைமேல்றுயிலுமொரு ஆண்டிவுண்டுகண்டீர்
- முன்னேயசூரனுக்கு முற்சாபமிட்டதொரு
- வன்னச்சுருதிமுனி மந்திரபுரக்கணையாய்
- வளர்ந்திருப்பான்காண் மாயருடபக்கலிலே
- கிளர்ந்தமொழிகேட்டு கிருபைகூர்ந்தேயீசர்
- மாலைவரவழைத்து வழப்பமெல்லாமுரைக்க
- சாலப்பொருளுஞ் சம்மதித்தாங்காரமுடன்
- அலையில்வளர்ந்த அதிகணைஎடுத்து
- சிலையேத்தியம்பைச் சிரித்துமிகத்தொடுக்க
- அம்புபகையாலும் அதிகமால்பகையாலும்
- பம்யழித்துச்சூரனூர் பர்ப்பம்போல்தானாக்கி
- சூரரிருவருட சிரசைமிகவறுத்து
- வாரிதனில்விட்டெறிந்து வாளிசுனையாடி
- மலரோனடிவணங்கி வைகுண்டம் கேட்டிடவே
- பலமானகுண்டப் பதவிமிககொடுத்தார்
- அவ்யுகத்தைமாயன் அன்றழித்துஈசரிடம்
- செவ்வாகனின்று செப்பினாரீசருடன்