அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அவையடக்கம்

அவையடக்கம்
அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே
மெய்யாய் எழுதி விரிப்பேன் நான் என்பதெல்லாம்
ஆனை நடை கண்டு அன்றில் நடையது ஒக்கும்
சேனை சரிவது என்ன சிற்றெறும்பு பத்தி என்ன
குயில் கூவக் கண்டு கூகைக் குரல் ஆகுமோ
மயில் ஆடக் கண்டு வான்கோழி ஆடினது ஏன்
மடந்தை தேனீக்கள் வைத்த ரசம் அறிந்து
கடந்தை தாடேற்றும் கதை போலே யான் அடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்த பிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவேன் என்பது ஒக்கும்