அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இரணியன் பாடு


சூரன் இரணியனாய் தோன்றினான் அவ்யுகத்தில்
மாயனொரு கோலம் மகவாயுருவெடுத்து
வாயினடையில் வைத்து மாபாவி சூரனையும்
நெஞ்சையவர் நகத்தால் நேரே பிளந்து வைத்து
வஞ்சகனோடே மாயன் மிகவுரைத்து
சூரபர்ப்பனாகத் தோன்றினானன்னாளில்
ஊரிரப்பனாக உருவாக நாந்தோன்றி
கொன்னேனானென்று கூறினேனப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்ல கொன்றதென்றாய்
வேலாயுதத்தாலே வென்றாய் நீயல்லாது
ஏலாதுன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்களம்பு அஸ்திரம் வாளில்லாமல்
வாயிதமாயென்னகத்தால் வகிர்ந்தே நானுன் வயிற்றை
என்று மாயனுரைக்க ஏதுரைப்பான் சூரன்
பத்து மலையைப் பாரநகமாய்ப் பதித்து
இத்தலத்திலென்னை இறக்க வைத்தாயல்லாது
ஏலாதுன்னாலே இந்த மொழி பேசாதே
மாலானவே தன் மனது கோபம் வெகுண்டு
உன்னையின்ன மிந்த உலகில் பிறவி செய்து
கொன்றாலே விடுவேன் கிறேதாயுகம் வைத்து
திகைந்தல்லோ போச்சு திறேதாயுகம் பிறந்தால்
முப்பிறவி துண்ட உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னிலிசைந்த மொழி கேள்ப்பேனான்
என்று இரணியனை இரண சங்காரமிட்டு
அன்று கிறேதாயுகம் அழித்தாரம்மானை
அந்தக் கிறேதா யுகமழித்தன்னாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப்பதியில்ச் சேர்ந்திருந்தாரம்மானை.