அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இறைத்துதி

எம்பிரானான இறையோன் அருள் புரிய
தம்பிரான் சொல்லத் தமியேன் எழுதுகிறேன்
எழுதுவேன் என்பதெல்லாம் ஈசன் அருள் செயலால்
பழுது ஒன்றும் வாராமல் பரமேசுவரி காக்க
ஈசன் மகனே இயல்பாய் வா இக்கதைக்கு
தோசம் அகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் கர்ம சஞ்சலம் ஆனதுவும்
வாலைக் குருவே வாராமலே காரும்
காரும் அடியேன் கௌவை வினைதீர
வாரும் அடியேன் மனதில் குடிகொளவே
தர்மயுகம் ஆக்கித் தாரணியை ஆளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்த கதை
சாகாது இருக்கும் தர்ம அன்புள்ளோர் முன்
வாகாகத் தர்ம அம்மானைதான் வகுத்தார்
வகுத்த பரமனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரம் தோத்திரமே