அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கயிலை வளமை
- முத்தான சீமை மூன்று நீத்தோடு
- புத்தாசையாகப் பண்பாய்த் தழைத்திடவே
- நாலான வேதம் நல்ல கலியுகமாய்
- மேலாம் பரமாய் விளங்கி இருந்திடவே
- தேவர் உறையும் திருக்கயிலைதன் வளமை
- பாவலர்கள் முன்னே பாடினார் அம்மானை
- ஈசர் உறையும் இரத்தின கிரிதனிலே
- வாசவனும் தேவர் மறையோரும் வீற்றிருக்க
- பொன்னம்பல நாதர் பொருந்தி இருக்கும் மண்டபமும்
- கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
- வேதப் புரோகிதர் விளங்குகின்ற மண்டபமும்
- சீத உமையாள் சிறந்து இலங்கும் மண்டபமும்
- நீதத் திருமால் நிறைந்து இலங்கும் மண்டபமும்
- சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும்
- ஆதவனும் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
- வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
- ஆரும் மிகஅறிந்து அளவிடக்கூடாது
- பாரு படைத்த பரமேசுரனாரை
- விசுவாச மேலோர் விமலன் அடிவணங்க
- வசுவாச தேவன் வந்து மிகவணங்க
- மறைவேத சாத்திரங்கள் மலரோன் அடிவணங்க
- இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்க
- எமதர்ம ராசன் எப்போதும் வந்து நிற்க
- பூமகளும் வேதப் புரோகிதர் வந்து தெண்டனிட
- கமலதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
- நாம நெடியோன் பதத்தை நாள்தோறும் போற்றி நிற்க
- தலைவன் இருக்கும் தங்கத் திருக்கயிலை
- நிலைமை எடுத்துரைக்க நிலையாது அம்மானை
- ஆறுசெஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழும் கயிலை வளமதை
- கூறக்கூறக் குறைவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
- வாறுவாறு வகுக்க முடிந்திடாது மகிழுங் குண்டவளம் சொல்லி அப்புறம்
- வேறுவேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள்ளோராகிய வேத அன்போரே