அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சாதி வளமை
- சான்றோர் முதலாய்ச் சக்கிலியன் வரையும்
- உண்டான சாதி ஒக்க ஒருவினம் போல்
- தங்கள் தங்கள் நிலைமை தப்பி மிகப்போகாமல்
- திங்கள் மும்மாரி சிறந்து ஓங்கியே வாழ்ந்தார்
- செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
- அல்வல் தினம் செய்து அன்புற்று இருந்தனராம்
- தான்பெரிது என்று தப்புமிகச் செய்யாமல்
- வான் பெரிது என்று மகிழ்ந்திருந்தார் அம்மானை
- ஒருவருக்கு ஒருவர் ஊழியங்கள் செய்யாமல்
- கருதல் சிவன் பேரில் கருத்தாய் இருந்தனராம்
- செய்யும் வழக்குச் சிவன்பேரில் அல்லாது
- வையம் வழக்கு வாராதே இருந்தார்
- அடிபணிய என்று அலைச்சல் மிகச்செய்யாமல்
- குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தார் அம்மானை
- சேயினுட ஆட்டு செவிகேட்டு இருப்பது அல்லால்
- பேயினுட ஆட்டோர் பூதிர் அறியாது இருந்தார்
- இந்தப்படி மனுவோர் எல்லாம் இருந்து ஒரு
- விந்துக் கொடி போல் வீற்றிருந்தார் அம்மானை
- இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
- மற்படி தேச மனுவுட நீதமும்
- நற்புடன் தேசம் நாடி வாழ்வதை
- கற்புடன் ஈசர் கண்டு மகிழ்ந்தார்