அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெச்சணத்தின் இயல்பு

தெச்சணத்தின் இயல்பு
புன்னை மலர்க்காவில் பொறி வண்டு இயல்பாட
அன்னமது குதித்து ஆராடும் சோலைகளும்
கன்னல் கதலி கரும்புப் பலாச்சுளையும்
எந்நேரமும் பெருகி இலங்கி நிற்கும் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கும் கதிரோன் பூமேல் குடை நிழற்ற
நந்தவனம் பூத்து நகரி மணம்வீச
செந்தாமரை பூத்து சிலம் பூமணம் வீச
அரகரா என்று அபயமிடும் ஒலியும்
சிவசிவா என்று துதிக்கின்ற பேரொலியும்
மடியில் பணம் போட்டு மார்குத்தும் பேரொலியும்
முடியும் அடியுமில்லா முதலோனைப் போற்றும் ஒலியும்
முத்தாலே பாண்டி முதல்மடவார் ஆடல் ஒலியும்
மத்தாலே மோரு மடமட என்னும் பேரொலியும்
சமுத்திரத்து முத்துதான் கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை இடும் பேரொலியும்
சங்கீத மேளம்தான் ஓதும் ஆலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்
வாரணத்தின் மீதில்வரும் பவனி ஆரவமும்
மாவேறி வீதிவரும் பவனி வீதிகளும்
கூரையிலே முத்துக்குலை சாய்க்கும் கன்னல்களும்
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் அளிப்பாரும்
அன்னமிடும் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ணம் அளித்துச் சொகுசு பெற நிற்பாரும்
சிவனே சிவனே என்றுசிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிது எனவே தவ நிலைகள் செய்வாரும்
கோவிந்தா என்று குருபூசை செய்வாரும்
நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும்
மாரி பொழியும் மாதம் ஒன்று மூன்று தரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளர் எல்லாம்
நாத்து நடும் புரசி நளினம் மிகுசொல் ஒலியும்
கூத்து ஒலியும் குருபூசைதன் ஒலியும்
எப்பார் எல்லாம் புகழும் ஏகாபதி அதுபோல்
தப்பாத தெச்சணத்தின் தன்மை ஈது அம்மானை
காமனை எரித்த ஈசன் கழலினை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமம் அவர் தர்மஞாய நிலைதனை நிகழ்த்துவாரே