அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெச்சணத்தின் பெருமை
- நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
- பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டு அங்கிருந்து
- ஆண்டு ஆயிரத்து அ என்னும் இலக்கமதில்
- நன்றான மாசி நாளான நாளையிலே
- சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
- மூன்றான சோதி உறைந்திருக்கும் தெச்சணத்தில்
- வந்திருந்த நற்பதியின் வளமைகேள் அம்மானை
- மூவாதி மூவர் உறைந்திருக்கும் தெச்சணமே
- தேவாதி தேவர் திருக்கூட்டம் தெச்சணமே
- வேதப் புரோகிதர் விளங்கி இருக்கும் தெச்சணமே
- நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
- அகத்தீசுவரரும் அமர்ந்திருக்கும் தெச்சணமே
- மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
- தாணுமால் வேதன் தாமசிக்கும் தெச்சணமே
- ஆணுவம் சேர் காளி அமர்ந்திருக்கும் தெச்சணமே
- தோசம் மிகுகர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
- நீசவினை தீர நீராடும் தெச்சணமே
- மாது குமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
- பாறு படவு பரிந்து நிற்கும் தெச்சணமே
- ஆனைப் படைகள் அலங்கரிக்கும் தெச்சணமே
- சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
- ஆகமக் கூத்து ஆடுகின்ற தெட்சணமே
- பார்வதியாள் வந்து பதிந்திருக்கும் தெச்சணமே
- சீர்பதியை ஈசன் செய்திருக்கும் தெச்சணமே
- மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
- ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
- தெட்சணத்தின் புதுமை செப்ப முடியாது
- அச்சமில்லாப் பூமி அடைவு கேள் அம்மானை
- கச்சணி தனத்தாளோடு கறைமிடற்று அண்ணல் ஈசர்
- பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி
- நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
- தெச்சணா புதுமை சொல்லிச் சீமையின் இயல்பும் சொல்வோம்