அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெய்வ நீதம்
- வாரமது இல்லாமல் மன்னன் அதிசோழன்
- நீதமாய்ப் பூமி நிறுத்தி அரசு ஆளுகையில்
- கண்டு வேதாவும் கமலத் திருமாலும்
- நன்று தெய்வாரும் நாராயணரும் மெச்சி
- அன்று அந்த மாமுனிவர் எல்லோரும் தாம்கூடிச்
- சென்று சிவனார் திருப்பாதம் தெண்டனிட்டு
- சாகாது இருக்கும் சமூலத் திருப்பொருளே
- ஏகாபரனே இங்கும் நிறைந்தோனே
- மூலப்பொருளே முதற்பொருளே காரணரே
- சாலப்பொருளே தவத்தோர் அரும்பொருளே
- நாரணரும் வேதாவும் நாடிப்பெரும் போரில்
- காரணரே நீரும் கனல்கம்பம் ஆனோரே
- ஆலமது அருந்தி அரவையும் மிகஉரித்துக்
- கோலத் திருக்கழுத்தில் கோவையாய் இட்டோரே
- ஆனைதனை உரித்து அங்கமதிலே புனைந்து
- மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
- கோவேங்கிரியில் குடியிருக்கும் கோவே
- தானே இருக்கும் தவமே தவப்பொருளே
- ஆதியாய் நின்ற அரிய திருமுதலே
- சோதியே சோழன் சொல்நெறியைக் கேளும் அய்யா
- வாடிவந்த பட்சினுக்கு வாளால் அவனுடம்பைத்
- தேடிவந்த வேடனுக்குத் தொடை அரிந்து ஈந்தவன்காண்
- ஆறில் ஒருகடமை அவன் வேண்டிற்றான் எனவே
- மாறி அவன் புவியோர் மனதில் கௌவைகள் இல்லை
- கோவில் சிவாலயங்கள் குளம் கூபம் வாவிகளும்
- சேவித்து அனுதினமும் செய்வானே தானதர்மம்
- ஆதலால் சோழன் அரசாளும் சீமையிலே
- நீதமாய்த் தெய்வநிலை நிறுத்த வேணும் அய்யா
- என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
- கண்டிருந்த ஈசர் கரியமாலோடு உரைப்பார்
- நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
- வல்லவனே பூமாதேவிதனை வருத்தி
- வருணந்தனை அழை நீ மாதம் மும்மாரி பெய்ய
- கருணைக்குடை விரிக்க கங்குல்தனை அழையும்
- வாசியது பூவாய் வழங்க வரவழையும்
- தோசி மறலியையும் சொல்லி விலக்கிடு நீ
- குருபூசை செய்யும் கூட்டமதி சிவமாய்த்
- திருவீற்று இருக்கச் செய்திடுநீ கோலமது
- நித்திராதேவி நித்தம் அந்தப் பூமியிலே
- மத்திபமாய்க் காக்க வை என்றார் ஈசுரரும்
- நினத்தொருக்கு உறுதி நினைவில் அறிவு தோன்றி
- என்னைத் தோத்திரங்கள் இளகாமல் வை என்றார்
- பன்றியோடே கடுவாய் பாவித்து இருந்திடவும்
- அன்றிலோடே குயிலும் அன்புற்று இருந்திடவும்
- கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
- வாரிகுளம் போல்வரம்பில் நின்றிடவும்
- இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
- பட்டியும் முயலும் பண்புற்று இருந்திடவும்
- பசுவும் புலியும் ஒரு பக்கம் நீர் உண்டிடவும்
- கசுவும் கரைபுரளக் கரும்பு முத்து ஈன்றிடவும்
- சாத்திர வேதம் சமயம் வழுவாமல்
- சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும்
- மனுவோர் தழைத்து மக்கள் ஒருகோடி பெற்று
- இனிதாக நாளும் இறவாது இருக்க என்றும்
- சந்திர சூரியர்கள் தட்டு மிகமாறாமல்
- இந்திரரும் தேவர்களும் ரிஷிநிலை மாறாமல்
- தானதவங்கள் தப்பி மிகப் போகாமல்
- ஈனம் இல்லாமல் இதுவும் தெய்வநீதம் எல்லாம்
- மானம் நிறுத்தி வையும் என்றார் ஈசுரரும்
- இப்படித் தெய்வ நீதம் ஈசுரம் இதுவே கூற
- செப்படி மறவா வண்ணம் திருமருகோனும் செய்தார்
- அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ
- மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே