அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/2. மாபெரும் அக்டோபர் புரட்சியும், அதன் பிறகும்

2

மாபெரும் அக்டோபர் புரட்சியும், அதன் பிறகும்

எனவேதான் 1917 ஆம் ஆண்டின் மாபெரும் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே, பல மொழி பேசும் பாரத நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் அனைவரிலும், அப் புரட்சியை முதன் முதலில் வாழ்த்தி வரவேற்றுப் பாடிய கவிஞராகத் திகழ்ந்தார் பாரதி. 'புதிய ருஷ்யா' என்ற தமது அற்புதமான அமரகவிதையில், அவர் அந்தப் புரட்சியை இவ்வாறு வாழ்த்தினார்:

குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்.
அடிமைக்குத் தளையில்லை, யாரும் இப்போது
அடிமையில்லை அறிக என்றார்.
இடிபட்ட சுவர் போல கலிவிழுந்தான்,
கிருத யுகம் எழுக மாதோ!

இதே கவிதையின் தொடக்கத்தில், அவர் அந்தப் புரட்சியை "ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று கூறி, "வையகத்தீர், புதுமை காணீர்" என்று உலகினரையும் அறைகூவி அழைத்து அதனைக் காணுமாறு கூறினார். எனவே அவர் மனிதகுலத்துக்கு ஒரு புதிய யுகத்தைக் கொண்டு வந்த அந்தப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார் என்பது தெளிவு.

எனினும், பாரதியின் கவிதைகள் வெளிவந்ததைக் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களையெல்லாம் கொண்டு பார்க்கும் போது, அக்டோபர் புரட்சியைப் பற்றிய பாரதியின் இந்த அமர கவிதை அந்நாளில் பிரிட்டிஷ் இந்தியாவில் பிரசுரமானதாகத் தெரியவில்லை. அது பிரெஞ்சு இந்தியாவில், பாண்டிச்சேரியில் தான் வெளிவந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. முதல் உலக யுத்த காலத்தின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கு விதித்திருந்த கடுமையான தணிக்கை விதிகளும், பிரிட்டிஷ் இந்தியாவில் இப்போது அமலிலிருந்து வந்த பத்திரிகைச் சட்டமும் தான் இதற்கான காரணங்களாகும். என்றாலும் பாரதி அக்டோபர் புரட்சிகளின் செய்தியையும், அதன் தலைவரான லெனினது சாதனையையும், உருவகக் கவிதை வடிவத்தைப் பயன்படுத்தி, மறைமுகமான முறையில், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த வாசகர்களுக்குத் தெரிவிக்கவே செய்தார். பாரதி தமது கவிதைகள் எதிலுமே லெனினைப் பெயர் சொல்லி நேர்முக வாகக் குறிப்பிடவில்லை என்பது உண்மையே. எனினும், காலைப் பொழுது' என்ற தலைப்பில் அவர் பாடியுள்ள தனிப் பாடல், லெனினையும், அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் உதயமான புதிய சமுதாயத்தையும் தான் குறிப்பிடுகிறது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

அப்போது காக்கை, "அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர், சில நாளாக் காக்கையுள்ளே
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின் மேற் கண்டீரே!
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே!
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழு நாள் முன்னே இறைமகுடம் தான்புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெலாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை; துன்பமில்லை;
போற்றற் குரியான் புது மன்னன், காணீரோ?"

என்றும், பிறவாறும் இந்தப்பாடலில் பாரதி பாடியுள்ளவை. அக்டோபர் புரட்சியையும், அதன் தலைவரான லெனினை யுமே குறிக்கிறது என்ற புதிய உண்மையைப் பேராசிரியர் தா. செல்லப்பா அண்மையில் கண்டறிந்து கூறியிருக்கிறார், (தாமரை, டிசம் 16). பாரதி குறிப்பிட்டுள்ள "புதுமை" அக்டோபர் புரட்சிதான் என்பதும், "கற்றறிந்த ஞானி" என்பவர் லெனினேதான் என்பதும் அவரது கருத்து. உண்மையில் பாரதியின் வசனப் பகுதியில் காணப்படும் 'காக்காய்ப் பார்லிமெண்ட்' என்ற உருவகக் கட்டுரையும் இதே பாணியில் இருப்பதும், அதிலும் ரஷ்ய நாட்டின் அரசியல் நிலைமை பற்றிக் காக்கைகள் பேசிக்கொள்வதாகப் பாரதி எழுதியிருப்பதும், பேராசிரியர் செல்லப்பாவின் கருத்தை ஊர்ஜிதம் செய்ய நமக்கு உதவும் துணைச்சான்றாக விளங்குகிறது. இது உண்மையானால், பாரதி அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற தருணத்திலேயே, அதாவது ஒரு வார காலத்திலேயே ("ஏழு நாள் முன்னே") லெனினைக் குறித்தும் மறைமுகமாகப் பாடியுள்ளார் என்றே கொள்ளலாம்.

லெனின் பற்றிய நேர்முகக் குறிப்புகள்

என்றாலும், அந்நாட்களில் பாரதி சுதேசமித்திரன் தினசரியில் எழுதிவந்த பல செய்தி விமர்சனக் கட்டுரைகளில் அக்டோபர் புரட்சியின் சாதனைகளையும் லெனினது சாதனை களையும் குறித்து நேர்முகமாகவே விதந்தோதி எழுதியுள்ளார். உதாரணமாக, அக்டோபர் புரட்சி வெற்றி பெற்ற சில நாட்களில், 29-11-1917 அன்றே தாம் எழுதிய செல்வம் என்ற கட்டுரையை, பாரதி இவ்வாறு தொடங்குகிறார்: “ருஷ்யாவில் சோஷலிஸ்ட் கட்சியார் ஏற்க்குறைய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி விடக் கூடுமென்று தோன்றுகிறது”. இதன் பின் சோஷலிசம் என்றால் என்ன என்பதை அவர் விளக்கிவிட்டு, ரஷ்யாவைப் பற்றித் திரும்பவும் குறிப்பிடும் போது, "இக்கொள்கை மேன்மேலும் பலமடைந்து வருகிறது. ஏற்கெனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின்... முதலியவர்களின் அதிகாரத்தின்கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளை நிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொது உடைமையாகி விட்டது... ருஷ்யாவிலிருந்து இது (இக்கொள்கை) ஆசியாவிலும் தாண்டி விட்டது" என்று எழுதுகிறார். மேலும், "இந்த ஸித்தாந்தம் பரிபூரண ஜெயமடைந்து மனிதருக்குள்ளே ஸகஜ தர்மமாக ஏற்பட்ட பிறகு தான் மானிடர் உண்மையான நாகரிகம் உடையோராவர்" என்றும் பாரதி திட நம்பிக்கை தெரிவிக்கிறார். லெனினைப் பற்றி பாரதி குறிப்பிடும்போது, 'ஸ்ரீமான்' என்ற அடைமொழியைச் சேர்த்துக் குறிப்பிடுவதிலிருந்தே, அவர் லெனினை எத்தனை உயர்வாக மதித்துப் போற்றி வந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் (பாரதி கட்டுரைகள் - சமூகம்).

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததோடு, இளம் சோவியத் குடியரசைப் பதினான்கு அன்னிய நாடுகளின் ஆயுதந் தாங்கிய தலையீட்டுப் போரும் அச்சுறுத்திய காலத்தில், பாரதி இதனை அறிந்து பெரிதும் மனம் கலங்கினார்; இந்தக் கவலை அதிபரை இரவிலும் தூங்க விடவில்லை. ரஷ்யாவில் உள்நாட்டு எதிர்ப் புரட்சிக் கொள்ளைக் கூட்டமும் அன்னியத் தலையீட்டாளர்களும் புரிந்து வந்த ரத்த பயங்கரமான அக்கிரமங்களைப் பற்றிக் கூறும் ”பேய்க் கூட்டம்” என்ற தமது கதையில், ”ருஷியா விஷயம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை .... பிறகு எனக்கு ருஷியக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லக்ஷம் பக்கத்திலே!” (பாரதி - கதைகள்) என்று லெனின்மீது பூரணப் பரிவும் பாசமும் கொண்டவராக எழுதினார் பாரதி.

புரட்சிக்குப் பின்னரும் ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளை பாரதி உன்னிப்பாகக் கவனித்து வந்தார் என்றே சொல்லலாம். லெனினது தலைமையில் அங்கு நிறைவேற்றப்பட்ட பல சீர்திருத்தங்களையும் பாரதி ஆதரித்து எழுதியுள்ளார். அதே சமயம் அந்த இளம் சோவியத் குடியரசின் மீதும், அது மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கைகளின் மீதும் புழுதியை வாரித் தூற்றி வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகளின் விஷமத்தனமான பொய்ப் பிரசாரத்தை மறுக்கவும் அம்பலப் படுத்தவும் பாரதி தவறவில்லை. அவரது கட்டுரைகள் பலவும் இதற்குச் சான்று பகர் கின்றன. உதாரணமாக, “நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்” என்ற கட்டுரையில் அவர் இவ்வாறு எழுதினார்: “போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பல வகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் உடைமையாகக் கருதிய சிலர், ............ போல்ஷ்விஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழியைச் சுமத்தினர். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாநாளைக்கு! ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டு விடும். ஒரு பெரிய ராஜ்யத்தைப் பற்றிய எத்தனை காலம் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்க முடியும்?” (பாரதி-கட்டுரைகள்).

பாரதி பாடல்களில் அக்டோபர் புரட்சியின் செல்வாக்கு

அக்டோபர் புரட்சியின் செல்வாக்கும் அதன் கருத்துக்களும் பாரதி இதன்பின் எழுதிய சில பாடல்களில் பிரதிபலித்துள்ளன. உதாரணமாக, "முரசு" என்ற தலைப்பில், அக்டோபர் புரட்சி வெற்றிபெற்ற தருணத்தில், 1917 நவம்பரில் எழுதிய பாட்டில் (இது முதன் முதலாக, பரலி சு. நெல்லையப்பரால் பிங்கள ஆண்டில் ஐப்பசி மாதத்தில் தனி நூலாகப் பிரசுரம் ஆகியுள்ளது), பாரதி இவ்வாறு பாடுகிறார்:

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி
எங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

இதே போல் ‘விடுதலை’ என்ற பாட்டிலும் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை;
பரவரோடு குறவ ருக்கும்
மறவருக்கும் விடுதலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)

ஏழையென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்;
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே;
வாழி கல்வி செல்வம் எய்தி
மன மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர்ச
மான மாக வாழ்வமே (விடுதலை)

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்து வோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக் குளே

தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்களோடு பெண்களும்
சரிநி கர்ச மானமாக
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)

எல்லாவற்றுக்கும் மேலாக, 1921 செப்டம்பர் மாதத்தில் பாரதி காலமாவதற்கு முன்னர் அவர் எழுதிய கடைசிக் கவிதை எனக் கருதப்படும் ‘பாரத சமுதாயம்’ என்ற அற்புதமான கவிதையில், அவர் இந்தியாவிலும் சோஷலிச சமுதாயம் மலர வேண்டும் என்ற தாகத்தோடும் கேவகத்தோடும் பின்வருமாறு பாடிவைத்துச் சென்றிருக்கிறார்:

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை - வாழ்க

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
 மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?...........

இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் ......

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் ......

இவ்வாறு பாரதியின் பல கவிதைகளின் மூலமாகவும் வசனப் பகுதிகள் மூலமாகவும், 1917-ம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின் ஆழமான சரித்திர முக்கியத்துவத்தை இந்தியாவில் முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்களில் பாரதியும் ஒருவராக விளங்கினார் என்பதையும், மேலும் இதன் பெரும் செல்வாக்குக்கு அவரும் ஆட்பட்டிருந்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.