அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/3. 1920 ஆம் ஆண்டுகளில்

3

1920 ஆம் ஆண்டுகளில்

மகாகவி பாரதியின் எழுத்துக்களைத் தவிர, பாரதி பாண்டிச்சேரியில் அரசியல் அஞ்ஞாத வாசம் புரிவதற்கு முன்பும் பின்பும் அவர் உதவியாசிரியராக வேலை பார்த்து வந்த மிகப் பழமையான தமிழ்த் தினசரியான சுதேசமித்திரன் பத்திரிகையும், அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் இளம் சோவியத் குடியரசில் நிகழ்ந்து வந்த சம்பவங்களைக் குறித்து, தானும் பல கட்டுரைகளை வெளியிட்டதோடு வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கத்தையும் அந்நாளில் வெளியிட்டு வந்தது. நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு பார்த்தால், சுதேசமித்திரன் ஒருபுறத்தில் மேலை நாட்டுப் பத்திரிகைகளும் செய்தி ஸ்தாபனங்களும் இளம் சோவியத் குடியரசைப் பற்றிப் பரப்பி வந்த பல்வேறு கட்டுக் கதைகளையும் பொய்ப் பிரசாரத்தையும் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் வந்ததோடு, மறுபுறத்தில் சோவியத் நாட்டில் நிகழ்ந்து வந்தவற்றைப் பற்றிய உண்மைகளை உள்ளவாறே எடுத்துக் கூறிய கட்டுரைகளை அயல்நாட்டுப் பத்திரிகைகளிலிருந்து எடுத்து வெளியிட்டும் வந்தது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். உதாரணமாக, இளம் சோவியத் குடியரசைப் பற்றி இங்கிலாந்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நியூ ஸ்டேட்ஸ்மென் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை செய்து வந்த தவறான பிரசாரத்துக்குப் பதில் அளிக்கும் விதத்தில் சுதேசமித்திரன் தனது 13.12.1979 தேதியிட்ட இதழில், அக்டோபர் புரட்சியை நேரில் கண்ணாரக் கண்டவரும், “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற தலைப்பில் அந்தப் புரட்சியைப் பற்றிய அற்புதமான நூலை எழுதியவருமான பிரபல அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜான் ரீட், 12. 10. 1818 தேதியிட்ட அமெரிக்க லிபரேட்டர் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையில் கண்டிருந்த விஷயங்களை மேற்கோள் காட்டி ஒரு குறிப்பை எழுதியுள்ளளது. அதில், ஜான் ரீட் ரஷ்யாவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நேரில் கண்டு தெரிவித்துள்ள விவரங்களைப் பார்த்தால், மேலை நாட்டுப் பத்திரிக்கைகள் சொல்லி வந்த கருத்துக்களுக்கு மாறாக, போல்ஷிவிக்குகள் “பெரும்பாலும் ருஷ்ய மகா ஜனங்களின் சம்மதத்தைப் பின்பலமாகக் கொண்டு” ஆட்சி புரிந்து வருவதாகத் தெரியவருவதைக் குறிப்பிட்டு, “லிபரேட்டர் பத்திரிகையில் ஜான் ரீட் எழுதியிருப்பதைப் பார்த்தால், அமித வாதிகள் போல்ஷிவிக்குகள் - ஆ-ர்) ஆட்சி முறை அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்றும், கூடிய வரையில் ஒழுங்காகவும், அநேகமாக முன்னையிலும் நேர்மையாகவும் இருக்கிறதென்றும் சொல்லாமலிருக்க முடியவில்லை” என்று எழுதியுள்ளது. (தமிழகம் கண்ட லெனின்தொகுப்பு : சி.எஸ்; கே. எம்.) எல்லாவற்றுக்கும் மேலாக 3. 5. 1917 அன்று சுதேசமித்திரன் “ருஷ்யாவின் பிரஸிடெண்டு மிஸ்டர் லெனின் குணாதிசயங்கள்” என்ற கட்டுரையை அந்த இதழின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. தமிழில் லெனினையும் அவரது வாழ்க்கையையும் பணியையும் பற்றி முதன்முதலில் பிரசுரமான முழுநீளக் கட்டுரை இதுவே எனக் கூறலாம்.

சுதேசமித்திரன் இதன் பின்னரும் ரஷ்யாவைப் பற்றிப் பல குறிப்புக்களை வெளியிட்டு வந்தது. சோவியத் நாட்டில் மத நம்பிக்கை உள்ளவர்களையும், மத குருக்களையும் சோவியத் அரசு கொடுமைப் படுத்தி வந்ததாக மேலை நாட்டுப் பத்திரிகைகள் பரப்பிவந்த அவதூறுப் பிரசாரத்துக்குப் பதிலாக, சுதேசமித்திரன் தனது 10.4.1923 தேதியிட்ட இதழில் ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில் எழுதியிருந்தாவது :

“ருஷ்யா தேசத்தில் ஐந்து வருஷ காலமாக அதிகாரம் நடத்திவரும் போல்ஷிவிக்கர்கள் ஜனநாயகக் கொள்கைகளிலும், பொருளுரிமைக் கொள்கைகளிலும் வெகு உயர்ந்த நோக்கங்களைக் கொண்டவர்கள். ஐரோப்பாவிலுள்ள மற்ற வல்லரசுகளெல்லாம், பெரும் முதலாளிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் மற்ற தேசங்களில் வெளியாகும் பத்திரிகைகள் விசேஷமாக முதலாளிகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றன. ஆனதால் அந்தப் பத்திரிகைகளில் ருஷ்யாவைப் பற்றி வரும் விஷயங்களெல்லாம் பாரபட்சமில்லாமல் எழுதப்பட்டனவென்று கொள்ள முடியாது. ருஷ்யா தேச மகா ஜனங்களோ போல்ஷிவிக்கர்களையே ஆதரித்து வந்திருக்கிறார்கள். இவ்விதம் ஐந்து வருஷ காலத்திற்கு மேலாகவே தேச மகா ஜனங்களுடைய நன்னம்பிக்கையைக் கவரக் கூடியவர்களை துர்க்குணம் நிரம்பியவ கள் என்று கருதக்காரணம் ஒன்றுமே இல்லை.”

இவ்வாறு எழுதிவிட்டு, போல்ஷிவிக்குகளுக்கு எதிராகக் கூறப்பட்ட பொய்ப் பிரசாரத்துக்குப் பதிலளிக்கும் முகமாக, சுதேசமித்திரன் அதே தலையங்கத்தின் இறுதியில் பின் வருமாறு எழுதியிருந்தது :

“அவர்கள் தத்துவம் சமத்துவம் சகோதர பாவம் இவைகளைத் தழுவியதாகவே இருக்கிறதென்று நினைக்க இடமிருக்கிறது. போல்ஷிவிக்கர்களுடைய பொருளுரிமைக் கொள்கைகள் தற்காலத்திய பெரிய முதலாளிகள் சிலருக்கு அல்லது பலருக்கு வேம்பாக இருக்கலாம். ஆனால் பசியால் ஆயிரக்கணக்கான ஜனங்கள் மடியும்போது மட்டுக்கு மிஞ்சிய பணம் படைத்த ஒரு சிலர் தங்கள் மடிநாய்களுக்குப் பாலும் தெளிதேனும் கலந்து விருந்திடும் கோரத்தை மாற்றி, எல்லாரும் பசியாற உண்ணக் கூடிய வழிகளைக் கண்டுபிடிக்க முயல்வது மேலான முயற்சி என்பதை எவரும் மறுக்க முடியாது. மத குருமார்கள் உபதேசிக்கும் சடங்கு நுட்பங் களைக் காட்டிலும், போல்ஷிவிக்கர்கள் பெரு முயற்சியே இல்லார்க்கும் உள்ளார்க்கும் ஒரு பொதுவான கடவுளின் உண்மை மதத்தை அனுசரித்திருக்கிறது” (தமிழகம் கண்ட லெனின்).

நீலகண்ட பிரம்மச்சாரி

1905ம் ஆண்டின் முதல் ரஷ்யப் புரட்சியின் காலத்தொட்டே, தீவிரத் தேசியவாத இயக்கம் தமிழ் நாட்டிலும் மும்முரமாகவே இருந்தது. மேலும் புரட்சி மனப்பான்மை கொண்ட அந்நாளைய இளம் தேச பக்தர்கள் பலர் அந்தப் புரட்சியைப் பற்றி அறிந்து கொள்வதில் மட்டுமல்லாது, ரஷ்யப் புரட்சியாளர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கையாண்ட முறைகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். என்றாலும் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நரோத்னிக்குகளைப் பின்பற்றி வந்த சமூகப் புரட்சிவாதிகளின் நடவடிக்கைகளைப் பற்றிய புத்தகங்கள் முதலியவற்றையே அந்த இளைஞர்கள் அச்சமயத்தில் பெற முடிந்தது. அத்தகைய இலக்கியங்களை, இந்தியப் புரட்சிவாதிகள் மிகவும் மும்முரமாகச் செயல்பட்டு வந்த வங்காளத்திலிருந்தோ அல்லது ஐரோப்பாவிலிருந்த இந்தியப் புரட்சி வாதிகளிடமிருந்து, அப்போது பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த பாண்டிச்சேரியின் வழியாகவோதான் அவர்கள் பெற்று வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் அதிகார பூர்வமான ரெளலட் அறிக்கை, 1908-ம் ஆண்டுத் தொடக்கத்திலேயே, சென்னையிலிருந்த ‘பப்ளிக் ஒர்க்ஸ் இஞ்சினீயரிங் ஒர்க்ஷாப்’பில் பயின்று வந்த மாணவர்களிடம் ரஷ்யர்களது ரகசிய ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளை விவரித்துக் கூறும் ஒரு பிரசுரத்தின் பல பிரதிகள் இருந்தது கண்டறியப்பட்டதாகக் கூறியது.

எனவே பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஆயுதந் தாங்கிய கலகங்களைப் புரிவதிலும் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்கள் தமக்குள் ஸ்தாபன ரீதியாகத் திரண்ட போர்க்குணம் மிக்க கோஷ்டி ஒன்றும் தமிழ் நாட்டில் அன்று இருந்தது. அந்த கோஷ்டியின் தலைவரே நீலகண்ட பிரம்மச்சாரி. இவர் மகாகவி பாரதிக்கும், எம்.பி.டி. ஆச்சார்யாவுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். 1908ல் தமிழ் நாட்டிலிருந்த தீவிரத் தேசியவாதிகள் கைது செய்யப்படக் கூடிய அபாயம் ஏற்பட்டபோது, நீலகண்ட பிரம்மச்சாரி தலைமறைவாகி, இந்திய நாட்டின் பிற பகுதிகளிலிருந்த பயங்கரவாதத் தேசபக்தர்களோடு சேர்ந்து பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் தமிழ்நாடு முழுவதிலும் ரகசியமாகச் சுற்றுப் பயணம் செய்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பலாத்காராகத் தூக்கியெறிய வேண்டும் என்று ரகசியக் கூட்டங்கள் நடத்தி வந்ததோடு, இதற்காக, ஆயுதந்தாங்கிய இளைஞர்களைக் கொண்ட ரகசிய ஸ்தாபனத்தையும் திரட்டி வந்தார்.

1911-ம் ஆண்டின் ஆஷ் கொலை வழக்கு என்ற அந்தக் காலத்தின் பிரபல அரசியல் கொலை வழக்கில், நீலகண்ட பிரம்மச்சாரிதான் அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பெற்ற “முதல்எதிரி”. அந்நாளில் திருநெல்வேலி ஜில்லாக் கலெக்டராக இருந்த எஸ். டபிள்யூ. டி. ஆஷ் என்ற வெள்ளைக்காரனே, நீலகண்ட பிரம்மச்சாரியின் சீடனான வாஞ்சி என்ற இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை புரிந்து கொண்டுவிட்டான். இதன் விளைவே மேற்கூறிய கொலை வழக்கு. 1908-ல் திருநெல்வேலி ஜில்லாவில் நிகழ்ந்த ஈவிரக்கமற்ற அடக்கு முறைக்கு ஆஷ்தான் பொறுப்பாளி. அவனே சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற முதல் தேசியக் கப்பல் போக்குவரத்துக் கம்பெனியைத் தோற்றுவித்தவரும், மாபெரும் தேசபக்தருயா என வ. உ. சிதம்பரம் பிள்ளையைச் சிறைக்குள் தள்ளி, இந்திய தேசியக் கப்பல் தொழில் முயற்சியை நசுக்குவதற்குக் கருவியாக விளங்கியவன். எனவே அப்போது முதற்கொண்டே , மேற்கூறிய புரட்சிவாதிகள் அவனைக் ‘குறி’ வைத்திருந்தார்கள். இறுதியில் அவன் வாஞ்சியின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியானான். ஆஷ் கொலையானது, 1911- ல் இந்தியாவுக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வர உத்தே சித்திருந்த வேளையில், காலனியாட்சியாளருக்கு ஓர் எச்சரிக்கையாக நிகழ்த்திய கொலைதான் என்றும், அப்போது ஐரோப்பாவில் இருந்து வந்த எம்.பி. டி. ஆச்சாரியாவிட மிருந்து வந்த உத்தரவின் பேரிலேயே இது நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது.

நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தாவில் கைது செய்யப் பாட்டு, சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சென்னையில் 75 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின்னர், அவருக்கு ஏழாண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலிருந்த காலத்தில் முதல் உலகப் போரும் வெடித்தது. அப்போது இந்தியாவிலிருந்த பல புரட்சி யாளர்களும் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கான தருணம் வந்துவிட்டதாகவும், அதற்குத் தேவையான உதவி வெளிநாட்டிலிருந்து வந்து சேருமென்றும் நம்பினார்கள். இதேபோல் நம்பிய நீலகண்ட பிரம்மச்சாரி சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். என்றாலும் அவர் விரைவிலேயே பிடிபட்டார்; மேலும் ஆறு மாதச் சிறைத்தண்டனையோடு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதன்பின் அவர் தமது தண்டனைக் காலம் முழுவதும் முடிந்து 1919 ஆகஸ்டு மாதத்தில்தான் விடுதலையானார். விடுதலையாகி வெளிவந்ததும், அவர் மீண்டும் புரட்சிப் பணியில் முழு மூச்சோடு இறங்கினார். எனினும் பழைய முறையில் அல்ல. அக்டோபர் புரட்சி அவருக்கு அதற்கான வழியைக் காட்டியது. அவர் கம்யூனிஸ்டுக் கொள்கைகளின்பால் ஈடுபாடு கொண்டு, அவற்றைப் பரப்பவும் தொடங்கினார். இது விஷயத்தில், அவர் இந்த நாட்டில் கம்யூனிசத்தை முதன் முதலில் பிரசாரம் செய்தவர்களின் ஒருவராக விளங்கினார் என்று அவரது வரலாற்றை எழுதியுள்ள ரா. அ. பத்மனாபன் எழுதுகிறார். (The Revolutionary who has turned a Sadhu, Free India, 1972). இவரைக் குறித்து புதிய அலை பத்திரிகை ஆசிரியை டாக்டர் எஸ். விஜயலஷ்மி அண்மையில் எழுதிய கட்டுரையொன்றில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்துக்கும், தொழிற் சங்க இயக்கத்துக்கும் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவராக விளங்கிய சிங்காரவேலு செட்டியாருடன், இவர் சென்னையில் தங்கியிருந்து கம்யூனிஸ்டுத் திட்டம் (Communist Manifesto) ஒன்றைத் தயாரித்து வெளியிட்டதாக எழுதியிருக்கிறார். (புதியா அலை, 26.1.1975 இதழ்). இந்நூலின் பிரதி இதுவரை நமக்குக் கிடைக்காத காரணத்தால், இதன் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியவில்லை. என்றாலும், 1922-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தடைவிதித்த புத்தகங்களின் பட்டியலைப்பற்றி இந்திய நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள தஸ்தாவேஜியில், சென்னை, செங்கல்பட்டைச் சேர்ந்த மில்லர் அன் கம்பெனி அச்சிட்டு வெளியிட்ட "இந்தியக் கம்யூனிஸ்டுச் சமஷ்டிக் கழகம்", (The Communist Federal League of India) என்ற நூலும் இடம் பெற்றுள்ளது. மேலும், இருபதாம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் உளவு இலாகாவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தவரும், "இந்தியாவில் கம்யூனிஸம்" (1926) என்ற ரகசிய அறிக்கையை எழுதியவருமான ஸெஸில் கோயி, நீலகண்ட ஐயர் எழுதி வெளியிட்ட "இந்தியக் கம்யூனிஸ்டுச் சமஷ்டிக் கழகம்" என்ற 1922-ல் தடை செய்யப்பட்ட நூலும், அப்போது ஐரோப்பாவிலிருந்து எம். என். ராய் வெளியிட்டு வந்த வான்கார்டு (Vangurd) என்ற கம்யூனிஸ்டு மாதமிருமுறையின் விளைவேயாகுமென எழுதியிருக்கிறார். (Documents of the History of the CPI, Vol. I).

இதிலிருந்து நீலகண்ட பிரம்மச்சாரி காரல் மார்க்ஸின் "கம்யூனிஸ்டு அறிக்கை"யை வெளியிடவில்லை. மாறாக, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்தை உருவாக்குவதற்காக, கம்யூனிஸ்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவரோ அல்லது அவரது கோஷ்டியோ தயாரித்திருந்த அறிக்கையைத்தான் வெளியிட்டார் என்று நாம் முடிவு கட்டலாம். இது உண்மையானால், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு இயக்கத்தை உருவாக்குவதிலும், அக்டோபர் புரட்சியின் செய்தியைப் பரப்புவதிலும் முன்னோடியாக விளங்கியவர்களில் அவரும் ஒருவர் என்றே நாம் கூறலாம். இரு பதாம் ஆண்டுகளில் அவர் எழுதிய எழுத்துக்கள், மற்றும் அவரது நடவடிக்கைகள் முதலியவை பற்றி நமக்கு இன்னும் விவரங்கள் கிடைக்கவில்லை. என்றாலும், அவரது வரலாற்றை எழுதியுள்ள ரா. அ. பத்மனாபன் கூறியுள்ளது போல், "அவரது பேச்சுக்களும் பிரசுரங்களும் அவரை மீண்டும் தொல்லைக்கு உள்ளாக்கின". 1922-ல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்; ராஜத்துரோகம் மற்றும் பிற "குற்றங்களுக்காக"ப் பத்தாண்டுச் சிறைத் தண்டனையும் பெற்றார். அவர் தமது சிறைவாசத்தை அப்போது பிரிக்கப்படாதிருந்த பஞ்சாபில் மாண்ட் கோமரி சிறையிலும், மூல்ட்டான் சிறையிலும், சிறிது காலம் ரங்கூன் சிறையிலும் கழித்தார். ரங்கூன் சிறையிலிருந்து 1930 - ல் விடுதலையாகிச் சென்னைக்கு வந்தார். ஆயினும் அதன்பின் அவர் அரசியல் நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டு, நாடு முழுவதிலும் சுற்றித் திரிந்தார் ; 1933-ல் சன்னியாசியாக மாறிவிட்டார். அன்று முதல் அவர் தம் பெயரையும் சாது சத்குரு ஓம்கார் என்று மாற்றிக்கொண்டார். இப்போது 90 வயதை எட்டிவிட்ட அவர் மைசூரில் நந்தி மலையின் அடிவாரத்திலுள்ள ஓர் ஆசிரமத்தில் துறவியாக வாழ்ந்து வருகிறார்.

திரு. வி. க.

மகாகவி பாரதி தமது 39 - வது வயதில் 1921-ல் அற்பாயுளில் மறைந்து விட்ட போதிலும் அவர் ஏற்றி வைத்த கண்ணோட்ட தீபத்தை , அபிலாஷையின் ஜோதியைத் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலர் உடனே ஏந்திக்கொண்டு விட்டனர். அவர்களும் அக்டோபர் புரட்சியைத் தமது விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் துருவ தாரகையாகவே கண்டனர். அவர்களில், தமிழ் மக்கள் "திரு. வி. க." என்று அன்போடு குறிப்பிட்டு வந்த வி. கல்யாணசுந்தர முதலியார் முன்னணியில் நின்றார். திரு. வி. க., பாரதி காலத்திலேயே பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். அவர் முதலில் தேசபக்தன் என்ற பத்திரிகைக்கும், பின்னர் நவசக்தி என்ற பிரபல செய்திப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந் தார். மேலும், தமிழ்நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்த மூலவர்களில் அவரும் ஒருவர். அக்டோபர் புரட்சிக்குப் பின் இந்தியாவில் தானாகவே எழுந்த வேலை நிறுத்த அலையோடு, தொழிற்சங்கங்களை ஸ்தாபிக்கும் ஆரம்பம் முயற்சிகளும் தொடங்கியபோது, அத்தகைய முதல் முயற்சி சென்னையிலேயே தொடங்கப்பட்டது; மேலும். 1918 - 19 ஆண்டிலேயே பக்கிங்ஹாம் அண்டு கர்னாட்டிக் மில் தொழிலாளர் சங்கத்தைச் சென்னையில் உருவாக்கிய முன்னோடிகளில் திரு. வி. க.வும் ஒருவர். "சென்னைத் தொழிலாளர் (பி அண்டு சி) சங்கத்"தின் தலைவராகவும் அவர் இருந்தார்.

திரு. வி. க. ஐம்பதாம் ஆண்டுகளில் தாம் காலமாகிற வரையிலும் தமது பொது வாழ்க்கைக் காலம் முழுவதிலும், சோவியத் யூனியனின் உறுதியான, உற்ற நண்பராகவும், கம்யூனிஸ்டு இயக்கத்தின், தொழிலாளர் இயக்கத்தின் அனுதாபியாகவுமே இருந்து வந்தார். நாற்பதாம் ஆண்டுகளில் அவர் தமது முதுமைப் பருவத்திலும் கூட, பி ஆண்டு சி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்தினார்; அதன் காரணமாக அவர் பல நாட்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டார். அவர் சைவசமய சித்தாந் தத்தில் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த போதிலும், அவரது பல நூல்களிலும் பத்திரிகைக் குறிப்புக்களிலும் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் சோவியத் நாட்டில் சாதிக்கப்பட்ட சோஷலிச வாழ்க்கை முறையை வெகுவாகப் பாராட்டியே எழுதினார்.

அவரது தலைசிறந்த நூல் எனக் கருதத்தகும் "வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற சுயசரிதையில், 1919 இறுதியில் சென்னை வந்த திலகரைத் தாம் சந்தித்து, அவரோடு மார்க்சியக் கோட்பாடுகளைக் குறித்தும், இந்திய மக்களின் விடு தலை லட்சியத்திற்காக அவற்றைப் பிரயோகிக்கும் வாய்ப்பைக் குறித்தும் விவாதித்ததைப் பற்றித் திரு. வி. க. எழுதியிருக்கிறார். அதே நூலில் தமக்கே உரித்தான நடையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பல சமய ஆராய்ச்சிப்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப்படையாய் உள்ள பொதுமை - சமரசம் - ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன். சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்தவல்லது காரல் மார்க்ஸ் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது." இதன் மூலம் திரு. வி. க, சமய நம்பிக்கை மிக்கவராக விளங்கிய போதிலும், சமுதாய ஏற்றத் தாழ்வைப் போக்கிச் சமநீதி வழங்கும் சஞ்சீவி மூலிகை மார்க்சியம் ஒன்றேயாகும் என்றே அவர் கருதினார் எனத்தெரிகிறது. மேலும், "கட்டுரைத்திரட்டு”, "இந்தியாவும் விடுதலையும்" ஆகிய அவரது நூல்களும் பிற நூல்களும் மார்க்சிய - லெனினியக் கொள்கைகளைக் குறித்து அவர் நடத்திய சிந்தனை விசாரங்களையும், அக்டோபர் புரட்சியின் சாதனைகளின்பால் அவர் காட்டிய பாராட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும்.

மேலும், இன்றைய "இந்திய - சோவியத் கலாசாரக் கழகத்தின் முன்னோடியான சோவியத் நண்பர்கள் சங்கம்", இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளின்போது, நாஜி ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கிய சில நாட்களில் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக திரு. வி. க. வே தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் எழுதிய எழுத்துக்களும், மற்றும் தமிழகமெங்கணும் அவர் சுற்றுப் பயணம் செய்து ஆற்றிய சொற்பொழிவுகளும் சோவியத் யூனியனுக்குத் தமிழ் நாட்டில் பல நண்பர்களைப் பெற்றுத் தந்தன; சோவியத் யூனியனையும் அதன் சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தமிழ் மக்கள் பலரிடையே பேரார்வத்தையும் அவை எழுப்பின. அவர் ஐம்பதாம் ஆண்டுகளில், தமது அந்திம காலத்தில் எழுதிய ‘அருளும் பொருளும்’ என்ற நூலிலும்கூட, பாரத நாட்டு உன்னத புருஷர்கரும் கவிஞர்களும் மிகவுயர்வாகப் போற்றி வந்த ஆன்மிக மதிப்புக்களையெல்லாம், மார்க்சிய-லெனினியக் கொள்கைகளின் மூலம் சமுதாயத்தை நல்ல விதமாக மேம்படுத்தி மாற்றியமைத்து, மனிதனின் லோகாயத் தேவைகள் அனைத்தையும் வாழ்வில் உத்தரவாதம் செய்யும் காலத்தில்தான் எதார்த்த வாழ்வில் எய்த முடியும் என்ற முடிவுக்கே அவர் வந்திருந்தார். பாரத நாட்டின் கலாசார, ஆன்மிக மதிப்புக்களுக்கும், சோஷலிசத்தின் அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும் வேட்கையையும் இந்நூல் புலப்படுத்துகிறது.