அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/4. எம். சிங்காரவேலு செட்டியார்

4
எம். சிங்காரவேலு செட்டியார்

திரு. வி. க. வோடு அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளில் நெருங்கிய தோழராக இருந்தவரும், தமிழ் நாட்டில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின், தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான காலஞ்சென்ற எம். சிங்காரவேலு செட்டியாரும், அக்டோபர் புரட்சின் செய்தியையும், விஞ்ஞான சோஷலிசக் கருத்துக்களையும் பரப்பவும், சென்னையில் ஒரு கம்யூனிஸ்டுகள் கோஷ்டியை உருவாக்கவும் முதன்முதலில் பாடுபட்டவர் களில் ஒருவராவார். வழக்கறிஞராக இருந்த சிங்காரவேலர் தேசத்தின் அழைப்புக்குச் செவி சாய்த்து, தமது வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார்; இருபதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் அவர் இருந்தார் . அ. இ. காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் அவர் 1922-ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்குச் சென்று, அங்கு பூரண சுதந்திரம் பற்றிய ஒரு தீர்மானத்தையும் பிரேரேபித்தார்; தொழிலாளர் நலம் பற்றிய தீர்மானம் பற்றியும் பேசினார்; "காங்கிரஸ்காரர்களுக்கான புதிய பிரகடனம்" என்ற அறிக்கையையும் அங்கு சுற்றுக்கு விட்டார். 1923 மே மாதத்தில் இந்தியாவில் முதன்முதலாக நடந்த மே தினக் கூட்டம் அவரது தலைமையில் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் அவர் இந்துஸ்தான் தொழிலாளர் - விவசாயிகள் கட்சியின் (Labour Kisan Party of Hindustan) உதயத்தை அறிவித்தார்; அதன் அறிக்கையை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டார். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடந்த கான்பூர் சதி வழக்கின்போது, அவருக்கு எதிராகவும் ஒரு கைது - வாரண்ட் இருந்தது. ஆனால் அவரது உடல் நலக்குறைவு காரணமாக அந்த வாரண்ட் அமல் நடத்தப்படவில்லை; பின்னர் அது ரத்தும் ஆகிவிட்டது. 1925-ல் அவர் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்டு மாநாட்டுக்குத் தலைமை வகித்து, அதன் தொடக்கவுரையை நிகழ்த்தினார். 1923 இறுதியில் அவர் தம்மீது வாரண்ட் பிறப்பிக்கப்படும் வரையிலும் லேபர் அண்டு கிஸான் கெஜட் என்ற ஆங்கில மாதமிருமுறைப் பத்திரிகையை வெளியிட்டு வந்தார்; இருபதாம் ஆண்டுகளிலும் முப்பதாம் ஆண்டுகளிலும் அவர் தொழிலாளி என்ற தமது வாரப்பத்திரிகை உட்பட பல தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வந்தார்; அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்டிருந்தார்.

முப்பதாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், அவர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவரான பெரியார் ஈ.வே.ராமசாமியோடு தொடர்பு கொண்டு, சுய மரியாதை இயக்கத்தின் குடியரசு பத்திரிக்கையில், அக்டோபர் புரட்சியையும், லெனினையும், சோவியத் யூனியனையும் பற்றிப் பல கட்டுகரைகள் எழுதினார். அந்த இயக்கத்தில் அக்காலத்தில் சோஷலிஸ்டுகளின் அணி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. 1932 இறுதியில், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகளின் மாநாடு நடந்தபோது, அந்த சோஷலிஸ்டுகளுக்கான ஒரு திட்டத்தைச் சிங்காரவேலர் சமர்ப்பித்தார்; விவாதத்துக்குப் பின்னர் திட்டம் ஏற்றுக்கொள்ளவும் பட்டது. என்றாலும் பின்னர் பெரியார் ஈ.வே.ரா, பிரிட்டிஷ்-ஆதரவு மனப்பான்மை கொண்ட இஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கத் தீர்மானித்து விட்டதால், சுய மரியாதை இயக்கத்திலிருந்த சோஷலிஸ்டுகள் அதனை விட்டு 1934-ல் வெளியேறினர்.

தமிழ் நாட்டின் முதுபெரும் தொழிற்சங்கத் தலைவரான கே.முருகேசன் இவ்வாறு எழுதுகிறார்: “1935-ல் ’புது உலகம்’ பத்திரிகை தொடங்கப்பட்டது. தலைவர் ம. சிங்காரவேலு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வெளிவந்த இந்த ஏட்டின் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் தான் பொறுப்பேற்றேன். தோழர் சிங்காரவேலு அவர்களின் முற்போக்குக் கட்டுரைகள் அதில் இடம் பெற்றன... இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை 1934-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தடை செய்தது. எனவே சென்னை நகரில் ”தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்” (Labour Protection League) என்ற பெயரில் கம்யூனிஸ்டுகள் இயங்கி வந்தனர். புது உலகம் பத்திரிகையை நடத்தி வந்த நாங்கள் இந்தச் சங்கத்துடன் தெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டோம். ... மார்க்சிய - லெனினியக் கட்டுரைகளைப் புது உலகம் விரும்பி வெளியிட்டது” (தாமரை - ஏப். 70). புது உலகம் ஈராண்டுக் காலம் வெளிவந்து பிறகு நின்று விட்டது. இந்தப் பத்திரிகையோடும் கம்யூனிஸ்டுகளோடும் தொடர்பு கொண்டிருந்த சிங்காரவேலர் 1946-ல் தாம் காலமாகிற வரையிலும் சோவியத் யூனியனின் நண்பராக வும், சோஷலிசத்தின் ஆதரவாளராகவுமே இருந்து வந்தார். மார்க்சிய-லெனினியத்தையும், அக்டோபர் புரட்சியின் பணியையும் செய்தியையும் பற்றித் தமிழ் நாட்டின் சாதாரண வாசகர்கள் சிங்காரவேலரின் எழுத்துக்ககரின் மூலமே முதன் முதலில் தெரிந்து கொண்டனர் எனலாம். அவரும் இத்தகைய எழுத்துக்களைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்தார்.

லெனின் மறைந்தபோது

லெனின் காலமானபோது, அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப்பின் உடன் வெளிவந்த சிங்காரவேலரின் லேயர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையின் 37-1-1924 தேதியிட்ட இதழ், "தோழர்நிக்கொலாய் லெனின் - நினைவாஞ்சலி" என்ற கட்டுரையை முதல் பக்கத்தில் தாங்கி வெளிவந்தது . அதில் சிங்காரவேலர் இவ்வாறு எழுதியிருந்தார்: "மானிடத் துயரங்களைக் களைய முயன்று வந்துள்ள மனித புத்திரர்களிடையே நிக்கொலாய் லெனின் இன்று ஈடிணையற்று விளங்குகிறார். வறுமையின் காரணம் பற்றியும் அதற்கு முடிவு கட்டுவது பற்றியும் ஏனையோர் யாவரும் தெளிவற்ற கற்பனைகளில் ஈடுபட்டுக் கொண்டும், சமுதாய நீதிக்கான கடைசி எல்லை தானம் தான் என்று உபதேசித்துக் கொண்டும் இருந்த வேளையில், உலகத் துயரங்களுக்கான உண்மையான காரணம் சிலர் பலரைச் சுரண்டி வாழ்வதிலேயே அடங்கியிருந்ததை நிக்கொலாய் லெனின் கண்டறிந்தார்; இந்தச் சமுதாய அநீதியைத் தமது சொந்த நாட்டில் சாத்தியமற்ற தாக்குவதிலும் அவர் வெற்றி கண்டார். உலகத் தொழிலாளர்களிடையே இன்று ரஷ்யத் தொழிலாளி தான் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகக் கருத முடியும். அவரது தோழர்களான நாம் இப்போது யாருடைய மரணத்துக்காக வருந்துகிறோமோ, அந்த அலுப்புச் சலிப்பற்ற உழைப்பாளியே இதற்குப் பிரதான காரணம்."

லேபர் அண்டு கிசான் கெஜட் பத்திரிகையைத் தவிர, சுதேசமித்திரன் பத்திரிகையும் 25-1-1924 அன்று லெனினது மரணம் குறித்துத் தலையங்கம் எழுதி, அவரது சாதனைகளைப் புகழ்ந்து நினைவாஞ்சலி செலுத்தியது. இதன்பின் வந்த இதழ் ஒன்றில், லெனினது மரணத்துக்குப் பின் இரு வாரங்கள் கழித்து சென்னையில் நடந்த சென்னை தொழிற் சங்கங்களது மாநாட்டில், முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான திரு.வி.க.வும், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவும், லெனினைக் குறித்துப் பேசிய பேச்சுக்களின் பகுதிகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. இந்த மாநாட்டில் எட்டுத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் லெனினுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.

இளம் கவிஞர் ஒருவரின் நினைவாஞ்சலி

கிட்டத் தட்ட இதே காலத்தில், மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பரும் சீடருமான பரலி சு.நெல்லையப்பர் நடத்தி வந்த லோகோபகாரி என்ற தமிழ் வாரப் பத்திரிகையின் 21-3-1924 தேதியிட்ட இதழில், பாஸ்கர ஆதிமூர்த்தி என்ற இளங்கவிஞர் லெனினது மரணம் குறித்து "காலஞ்சென்ற நிக்கொலாய் லெனின்" என்ற தலைப்பில் எழுதிய சரமகவி வெளி வந்தது. எழுசீரடி ஆசிரிய விருத்தத்தில் ஏழு பாடல்களைக் கொண்ட இந்தச் சரமகவி, லெனின் சிறையிலும் தேசப் பிரஷ்ட வாழ்விலும் அனுபவித்த துன்பங்களை நினைவு கூர்ந்தது. நீதியை நேசிப்பவர்கள் எல்லோரும், சுற்றோரும் ஞானியரும் லெனினது மரணத்துக்காக வருந்து வதாகவும், ஏனெனில் அவர் ஏழைகளின் நண்பராக அவர் களை விடுதலை செய்த வீரராக வாழ்ந்தார் என்றும் அந்தக் கவிதை அஞ்சலி செலுத்தியது. அதில் ஒரு பாடல்:

பசியொரு புறத்தும், நளிர்
குளிரொரு புறத்தும், உயிர்
பருகி யழிவுற்ற படியே

நிசி யொரு புறத்தும், மிகு
நிலையறு பலக் குறைவும்
நெடிதுயிர் நசிக்கும் எளியோர்

இசையுடன் எழும்பும் வகை
எதுவென நினைத்துவகை
எழுவதை இயற்று பெரியோய்
திசைவளர் புகழ்க்குரிய
லெனின் எனும் இயற்பெயர்
தினகர விரற்குரவனே!

பாஸ்கர ஆதிமூர்த்தி என்ற இந்த இளம் கவிஞர், காசி நகர வாசியாக, திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகளான கே.எஸ்.முத்தையா அண்டு கம்பெனி, காசி நகரில் வைத்து திருந்த கிளைக்கடையோடு சம்பந்தப்பட்டவராக இருந்தவர் என்ற விவரத்தைத் தவிர, இவரைக் குறித்து வேறு விவரம் ஏதும் தெரியவில்லை. அவர் லோகோபகாரியில் வேறு பல பாடல்களும் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல் பொது வாக சமத்துவத்தைப் பற்றிக் கூறும் பாடல்; மற்றொன்று லெனினையும் காந்தியையும் ஒப்புநோக்கிப் பாடிய பாடல்.

சமத்துவம் பற்றிய முதற் பாடலின் கருத்து வருமாறு: இன்று உலகம் யாருக்குச் சொந்தமாக இருக்கிறதோ அந்தச் சிலருக்கு அது சொந்தமானதல்ல; அது எல்லோருக்கும் சொந்தமானது. மனிதகுலம் பிறப்பித்த எல்லாக் கருத்துக்களிலும் சமத்துவமே மிக உன்னதமானது. அது போருக்கெல்லாம் முடிவுகட்டும் போர் பெற்ற குழந்தை. அத்தகைய போர் ரஷ்யாவில் வெற்றிபெற்று, கொடுங்கோலாட்சியை முறியடித்து, சமத்துவத்தைத் தோற்றுவித்துள்ளது.

லெனினையும் காந்தியையும் பற்றிய பாடலில் இருவரும் பின்வரும் விதத்தில் ஒப்புநோக்கப்பட்டிருந்தனர்: இருவேறு நாடுகளில் இரு பெரும் தலைவர்கள் உள்ளனர். எனினும் இருவரும் ஒரே லட்சியத்திற்கே, போர்களையும் வறுமையையும் எதேச்சாதிகாரத்தையும் ஒழிக்கும் லட்சியத்துக்கே போராடுகின்றனர். இந்த இருவரில் லெனின் ஜாரின் கொடுங்கோலாட்சியை எதிர்த்துப் போரிட்டு வென்று, ஏழை மக்களை விடுவித்து அவர்களுக்கு உணவும் சுதந்திரமும் வழங்கினார். காந்தி இந்திய விடுதலைக்காகப் போராடி வரு கிறார். இருவரும் விரைவில் வெற்றிபெறுவர். இந்த இருபெரும் தலைவர்களும் தேர்ந்தெடுத்த மார்க்கங்கள் வேறு வேறாயினும் குறிக்கோள்கள் ஒன்றேதான். இவர்களுக்கு நாம் தலை வணங்குவோம்.