அங்கும் இங்கும்/ஒளி பரப்ப வாரீர்

15. ஒளி பரப்ப வாரீர்

கல்விக்கு ஆதரவான சூழ்நிலையைப் பொது மக்களிடம் எப்படி உருவாக்கினார்கள் ? சோவியத் ஆட்சி, மலர்த்த போது, சோவியத் மக்களில் நான்கில் மூவர், எழுதப் படிக்கத் தெரியாத, தற்குறியாக அல்லவா இருந்தார்கள் ? அத்தகைய சமுதாயத்தில் கல்விப் பசியை எப்படி ஏற்படுத்தினார்கள்? எப்படி அப்பசியை ஆற்றினார்கள் ? மேலும் மேலும் பசி எடுக்கும்படி என்ன செய்தார்கள் ? இந்த வினாக்களைக் கேட்டோம். பதில் கிடைத்தது.

‘எழுதப் படிக்கத் தெரியாதவன், அரசியல் அப்பாவி. அவன், அரசியலில் பங்குகொள்ள ஆற்றல் அற்றவன். அந்நிலையை மாற்றி, கல்வியறிவு பெற்றவனாகச் செய்தால், குடிமகன், தன் நினைவோடு, அரசியலில் உரிய பங்குகொள்ள முடியும். வேறு பல பெரும் பொறுப்புகள் இருந்தாலும், ‘எழுத்தறியாமையைப் போக்குவதில், தற்குறித்தனத்தைப் போக்குவதில் முதற் கவனம், பெருங் கவனம், விரைவான முயற்சி தேவை’, என்று லெனின் உரைத்தாராம். அதை ஆட்சியும் கட்சியும் ஏற்றுக்கொண்டன. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை ; கொள்கையை நிறை வேற்றக் குதித்தனர். நாடு முழுவதற்கும் எழுத்தறிவிப்பு இயக்தித்திற்குத் திட்டமிட்டனர். பல தரத்தினர் ஆதரவைத் திரட்டினர்.

மேற்கொள்ள வேண்டிய பணி சிறியதா ? இல்லை; பெரியது. நான்கில் மூவர் தற்குறி என்றால், நோயின் விரிவு விளங்காது. அன்றிருந்த பதினாறு கோடி மக்களில் பன்னிரண்டு கோடி மக்கள் தற்குறிகள். பன்னிரண்டு கோடி முதியோருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது, சில ஆண்டுகளுக்குள் கற்றுக்கொடுப்பது என்றாலே பலருக்குச் சிரிப்பு வரும். கனவு என்று ஒதுக்கிவிடத் தோன்றும்.

பெருந்தொடர்மலை போல், ஒங்கி உயர்ந்துள்ள தற்குறித் தன்மையைக் கண்டு மலைக்கவில்லை, தயங்கவில்லை, பின்னடையவில்லை சோவியத் மக்கள். அதன் மேல் போர் தொடுத்தனர். பெரும் போர் தொடுத்தனர். இங்கும் அங்கும் சிற்சில நகரங்களில் மட்டுமல்ல, பட்டி தொட்டிகளில் எல்லாம் தற்குறித் தன்மையை அழிக்கும் போர் நடந்ததாம். நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் மிகத் தீவிரமாக நடந்ததாம்.

இத்தனைக் கோடிப் பேரைப் படிக்க வைக்க எத்தனை இலட்சம் ஆசிரியர்கள்,-முதியோர் கல்வி ஆசிரியர்கள் - தேவைப்படுவர். அத்தனை இலட்சம் ஆசிரியர்கள் இருந்தனரா ? இல்லையாம். பின்னர் என்ன செய்தனர்?

எழுத்தறிவு இயக்கத்தை, ஆட்சியின் திட்டமாக ஏற்றுக் கொண்டதும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், இந்தப் பொதுப் பணிக்காகத் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் உதவ முன் வந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி ஆசிரியர்களும், இந்த ஞான வேள்வியில் ஈடுபட முன் வந்தனர்.

ஆயினும், மேலும் பலர் தேவைப்பட்டனர். வேண்டுகோள் எழுந்தது. நாட்டாட்சியின் உயர்மட்டத்திலிருந்து வேண்டுகோள் எழுந்தது. பலன் விளைந்தது. ஆசிரியர் அல்லாத பலரும் இவ் வேள்வியில் ஈடுபட முனைந்தனர். படித்தவர்களிலே பல இலட்சம் பேர், அறியாமையை அழிக்கப் போர் தொடுக்க வந்தனர். அலுவலகங்களில் பணி புரிவோர் வந்தனர். தொழிற் கூடங்கிகளிலே பணிபுரிவோர் வந்தனர்.

அம்மட்டோ ? மாணவ, மாணவிகள் வந்தனர். உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலுள்ள மாணவ மாணவிகள் பல நூறாயிரவர் எழுத்திதறிவிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் எந்தப் பிரிவினரும், ஏற்கனவே, மேற் கொண்டுள்ள தங்கள் பொறுப்புகளைக் கழித்து விட்டு, புதுப் பொறுப்பிற்கு வரவில்லை. ஆசிரியர்கள் தங்கள் கல்விக் கூடப் பணியோடு, இப் பொதுத் தொண்டைக் கூடுதலாக மேற்கொண்டார்கள். அலுவலகத்தாரும் அப்படியே. மாணவ மாணவிகளும் தங்கள் படிப்பையும் கவனித்துக் கொண்டு, இத் தேசத் தொண்டை மேற்கொண்டார்கள்.

எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டோரில் பலர், மேற் கொண்டு ஊதியம் பெறாமல், தியாகிகளாகப் பணிபுரிந்தனர். குடும்பச் சூழ்நிலை காரணமாக, அதிகப் படியான ஊதியம் தேவைப்பட்ட ஓரளவினர் மட்டுமே, முதியோர் கல்விக்காக ஊதியம் பெற்றனர்.

சாதாரண கல்விக்கூட ஆசிரியர் கூட முதியோர் கல்விக்குப் பயிற்சி பெற்றவர் அல்ல அலுவலகத் தோழர் களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற நிலை. ஆர்வம் பிடித்துத் தள்ள, எழுத்தறிவிப்பு இயக்கத்தில் குதித்துவிட்ட பல இலட்சம் பேருக்கும் முதியோர் கல்வி கற்பிப்பதற்கான பயிற்சி தேவைப்பட்டது.

பயிற்சிக் கூடங்களைத் தொடங்கி, வேலை செய்து கொண்டிருப்பவர்களை அங்கு இழுத்து வந்து, பயிற்சி கொடுத்து அனுப்புவது ஆகாத காசியம். அதிலே பெருங் கால தாமதம் ஏற்படும். குடும்பத்தை விட்டு நெடுந்துாரம் சென்று பயிற்சி பெறவேண்டிய தொல்லை ஏற்படும். வேகம் தடைப்படும். ஒட்டைச் சட்டியை வைத்துக்கொண்டு கொழுக்கட்டை சுட்டாக வேண்டிய நிலை.

இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். அது என்ன ? முதியோர் கல்விக்கு ஆசிரியர்களாகப் போகிறவர்களுக்கு அஞ்சல் மூலம் பயிற்சி கொடுப்பது.

அத்துறையில் அனுபவமுடைய சிலரைக் கொண்டு, பயிற்சிக் குறிப்புகளை, உபாயங்களை எழுதி அச்சிட்டு அஞ்சல் மூலம் அனுப்பினார்கள். ஆசிரியர்களின் ஐயப் பாடுகள் உரியவர்களுக்கு, அஞ்சல் மூலம் சென்றன. நிபுணர்கள் அவற்றைக் கவனித்து விளக்கமாகப் பதில் எழுதி அனுப்பினர். இப்படி அஞ்சல் மூலம் பயிற்சி கொடுத்ததால் ஏராளமானவர்களுக்கு. விரைவாகப் பயிற்சி கொடுக்க முடிந்தது. எழுத்தறிவிப்பு வேலையையும் பெரும் அளவில் தொடங்க முடிந்தது. இப்புதுத் துறையில் ஒரளவு அனுபவப்பட்ட பிறகு அங்கும் இங்கும் கருத்தரங்குகளில் கூடி, சிக்கல்களை அவிழ்த்து, முறைகளைச் செப்பனிட்டுக்கொண்டு விரைந்து முன்னேறினர். திடீரென வந்த போரைச் சமாளிக்க எத்தனை வேகமாக உள்ளதை வைத்து, ஏற்பாடு செய்வார்களோ அப்படிச் செய்தனர், எந்நாட்டிலோ உள்ள நிலையையும் பயிற்சியையும் மெதுவான போக்கையும் குறிக்கோளாகக் கொண்டு மெல்ல நடக்கிற காரியமா முதியோர் எழுத்தறிவிப்பு ?

படித்தவர்களில் கிடைத்தவர்கள் அனைவரையும் பயன் படுத்தி, ஏதோ ஒரளவு சுருக்கமான பயிற்சி கொடுத்து, முதியோர் வகுப்புகளைத் தொடங்கி விட்டார்கள். முதியோர், அக் கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவேண்டுமே! கல்விக் கூடம் போக என்ன செய்தார்கள் ?

நாடு முழுவதிலும் பிரசாரம் செய்தார்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள் ; அடுத்தடுத்து, நாடு முழுவதிலும், ஊர்தோறும் பிரசாரம் செய்தார்கள். செய்தவர் யார் ?

‘ஆட்சியாளர் ஆணையை அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிறைவேற்றட்டும்’, என்று கைகட்டிக் கொண்டிருக்க வில்லை, பொதுமக்கள். பிரசாரப் பொறுப்பை, கற்போரைத் திரட்டும் பொறுப்பை பொதுவுடைமைக் கட்சி ஏற்றுத் கொண்டது. கட்சியினரோ சிலர், மற்றவர்களோ பலர். அப் பலரும் பங்கு கொண்டனர். தொழிற் சங்கங்கள், ஆசிரியச் சங்கங்கள், மாணவர் கழகங்கள். எழுத்தாளர்கள், சொற் பொழிவாளர்கள் இப் புனிதப் பணியில் பெரிதும் ஈடுபட்டார்கள். படிப்பார்வத்தை முதியோரிடம் எழுப்பினர். அவர்களை இட்டுக்கொண்டு போய்க் கல்விக் கூடங்களில் சேர்த்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்புக்கு, ஆற்றலுக்கு ஏற்றபடி இதற்குத் துணை புரிந்தனர் என்று கேட்டபோது,

“ஆண்மையாளர்கள்
     உழைப்பினை நல்கீர் !
மதுரத் தேமொழி
     மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்கு
     உரியன பேசிர்!”

என்ற மகாகவி பாரதியின் வேண்டுகோள் நினைவில் வந்தது.

இங்கும் ஊதியமில்லாமல் தொண்டாற்றக்கூடிய படித்த வர்களுக்குப் பஞ்சமில்லையே! ஒய்வு நேரத்தில் சமூகப் பணியாற்றக்கூடிய மாணவ மாணவிகளுக்காவது குறைவா ? எத்தனை கோடி ஆண்மையாளர், நம்மிலே! அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி !

திரண்டு வாரீர் தொண்டாற்ற வாரீர் ! எழுத்தறிவிக்க அறிவொளி பரப்ப வாரீர் !