அங்கும் இங்கும்/படி, படி, படி.



14. படி, படி, படி!

படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை ; வெறும் புகழ்ச்சி யில்லை. அப்படியா என்று மலைக்க வேண்டா. இதோ அற்புதமான சான்று.

“எங்கள் மக்களில் மூன்றில் ஒருவர் ஏதாவதொரு கல்வி முறையில் சேர்ந்து கல்வி பெற்று வருகிறார்கள். இக் கூற்றினைக் கேட்டேன் : அடுத்தடுத்துக் கேட்டேன் ; நான்கு வாரங்கள் கேட்டேன். பெருமிதத்தோடு கூறக் கேட்டேன். வெற்றியொளி வீச, மகிழ்ச்சியோடு கூறினர், யாரோ வழிப்போக்கர், காற்று வாக்கிலே கூறவில்லை. விவர மறிந்தோர், பொறுப்புடையோர், ஈடுபாடுடையோர் கூறினர். புள்ளி விவரத்தோடு கூறினர். புள்ளி விவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

‘எங்கள் நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 23 கோடியை நெருங்குகிறது. இந்த இருபத்து மூன்று கோடி பேர்களில் ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்கள் இன்று கல்வி கற்று வருகிறார்கள்.’ இவை நான் கேட்ட புள்ளி விவரங்கள். இவை நம் நாட்டுப் புள்ளி விவரங்கள் அல்ல நம் மக்கள் எண்ணிக்கை ஐம்பது கோடியை நெருங்குவது யாருக்குத் தெரியாது ! பின், எந்தநாட்டைப் பற்றிய தகவல் இது ? இதோ சொல்லி விடுகிறேன். என் மேல் கோபக் கனல் வீசாதீர்கள். சோவியத் நாட்டைப் பற்றிய தகவல் இது. அந்நாட்டிற்கு 1931 ஆம் ஆண்டில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் எண்ணிக்கை இருபது கோடி. 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மீண்டும் சென்று வர நேர்ந்தது. அம்மக்கள் எண்ணிக்கை இருபத்து மூன்று கோடியை நெருங்குவதைத் தெரிந்து கொண்டேன்.

மக்கள் பெருகப் பெருக, படிப்போர் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்நாட்டில் கல்வி வாய்ப்புக்களும் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டேயிருக்கின்றன.

‘கல்வி கற்பவர்கள்’ என்னும் சொற்றொடர் நம் மனக்கண் முன்னே யாரை நிறுத்தும்? ஐந்து வயதுச் சிறுவனை, சிறுமியை பத்து வயதுப் பையனை பெண்ணை, பதினெட்டு வயது காளையை கன்னியை நிறுத்தும். இருபத்தைந்து வயது இளம் தம்பதிகள் கற்போர்களாகக் காட்சியளியார். நமக்கு முப்பத்தைந்து வயது குடும்பிகள் மாணவ. மாணவிகளாகத் தோன்றுவதில்லை இங்கு. நாற்பத்தைத்து: வயதினரோ மாணவப் பருவத்தை விட்டு நெடுந்துாரம் விலகி விட்டவர் ; நாள்களை எண்ணிக் கொண்டிருப்பவர், நம் சூழ் நிலையில் ; மன நிலையில்.

‘மூன்றிலொருவர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்றதும்,

“உங்கள் நாட்டின் மக்களில், மூன்றில் ஒருவர், பள்ளி வயதினரான பாலர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், வாலிபர்களும் என்று பொருளா ?” என்னும் ஐயத்தைக் கிளப்பினோம்.

“ ‘பள்ளி வயது’ என்று ஒன்று இல்லை. படிப்பிற்குத் கால வரம்பு கிடையாது. வாய்ப்பு வரம்பு உண்டு பல நாடு களில் ; அதுவும் இங்கு இல்லை ஊக்க வரம்பு உண்டு, பல சமுதாயங்களில்; அதையும் இங்குக் காண முடியாது. இங்குக் கல்வித் தாகம் தணியாத் தாகம். பாடம் ஏற, பரீட்சையில் தேறத் தேற, சான்றிதழ் பெறப் பெற புதுப் புதுக் கல்வியினைக் கற்பதையே காண்பீர்கள். கற்போர் ஏழு கோடி எழுபது இலட்சத்தில் சிறுவர் சிறுமியர் உண்டு : இளைஞர் உண்டு : காளையரும் கன்னியரும் உண்டு; தந்தையரும் தாயாரும் உண்டு...”

விளக்கம் முடிவதற்குள், குறுக்கு வினாக்கள் எழுந்தன. என்ன வினாக்கள் ?

“உங்கள் நாட்டில், எல்லா வயதினரும் கல்வி கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இளைஞர்கள், வாலிபர்கள் மட்டு மன்றி முதியோரும் கல்வி பெறுகிறார்கள் என்பதை விளக்குகிறீர்கள், நல்லது. இத்தொடர் கல்வி ஈடுபாடு, தொழிலாளர்களிடையே உண்டா ? நகர்ப்புறத் தொழிலாளர்களிடை மட்டுமா ? நாட்டுப்புறத் தொழிலாளர்களிடையிலுமா? ஆலைத் தொழிலாளர்களைப் போல் பண்ணைத் தொழிலாளர் களும் தொடர்கல்வி பெறுகிறார்களா ? கல்வியில் தொடர் வளர்ச்சி ஆண்களோடு நின்று விடுகிறதா ? பெண்களுக்கும் உண்டா ? இவ்வினாக்களுக்கு விடை இதோ :

“முன்பு சொத்தைப் போல் , கல்வியும், ஒரு சிலருடைய தனி உடைமையாக இருந்தது. ஜார் காலத்தில் கல்வி பொது மக்களுக்கு எட்டாததாக இருந்தது. எழுதப் படிக்க கூடத் தெரியாதவர்களே ஜாரின் குடிகளிலே நூற்றுக் எழுபத்து நான்கு பேர். சோவியத் மக்களின் நிலை அடியோடு மாறி விட்டது. ஐம்பது வயதிற்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் எழுத்தறிவு பெற்றனர் ; அதோடு நின்று விடவில்லை, எங்கள் கல்வி வளர்ச்சி. எழுத்தறிவு பெற்றவர்கள் நான்காவது வகுப்பு நிலையை எட்டிப் பிடித்தனர். அடுத்து எட்டாம் வகுப்பு நிலைக்குக் கற்றனர். நின்றனரா அதோடு ? தொடர்ந்து படித்தனர். பள்ளியிறுதிவரை படித்துத் தேறினர். தொடர்ந்து, மேல் படிப்பும் படித்து வெற்றி பெற்றவர், எண்ணற்றவர்.

சோவியத் ஆட்சியிலேயே, முதல் முதல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு தொடர் கல்வியால் வளர்ந்தவர்கள் பாட்டாளிகளும் உழவர்களுமே. நகர்ப்புறப் பாட்டாளிகள் மட்டுமல்ல ; நாட்டுப்புற, சிற்றாள் தொழில் புரியும் பாட்டாளிகளும், பண்ணைகளில் பாடுபடும் உழவர்களும் இவ்வழியில் வளர்ந்துள்ளனர். ஆண்களைப் போலப் பெண்களும் சோவியத் கல்வி வெள்ளத்தின் பலனை நிறையப் பெற்றுள்ளனர் ; பெறுகின்றனர் ; இனியும் பெறுவர். ஏழு கோடியே எழுபது இலட்சம் பேர் இப்போது இங்குக் கல்வி கற்று வருவதாகக் கூறினேன். அவர்களில் நான்கு கோடியே பத்து இலட்சம் மக்கள் தொழில் புரியும் தொழிலாளி மக்களும் பணிபுரியும் பண்ணையாட்களும் ஆவர். மற்றவர்கள் சிறுவர். சிறுமியர், இளைஞர், காளையர் உட்பட, மூன்று கோடியே அறுபது இலட்சம் பேர்களே; இப்போது தெரிகிறதா, இந்நாடு உழைப்பாளிகளுக்கு உணவும் உடையும் உறையுளும் தேடிக் கொடுப்பதோடு நில்லாமல், கல்வி, மேலும் மேலும் கல்வி,, காலமெல்லாம் கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி கொடுக்கிறது என்ற உண்மை ?

“வாழ்க்கைத் தர உயர்விற்குப் பாடுபடுவதைப் போல், பொது மக்களின் கல்வியறிவு நிலையை உயர்த்துவதற்கும் இனிக் கவனஞ் செலுத்தி வருகிறோம் நாங்கள். போதிய கல்வியறிவே-காலத்திற்கேற்ப வளரும், மாறும், கல்வி அறிவே-பிற முன்னேற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஆணி வேர். அவ்வாணி வேர் இரண்டொருவரிடம் உறுதியாக இருந்தால் போதாது. பரவலாக எல்லாரிடமும் பரவியதாக இருக்க வேண்டும். இது எங்கள் அடிப்படைக் கொள்கை அசைக் முடியாத கொள்கை. சோவியத் ஆட்சி அமைந்த அன்று முதல் இன்றுவரை இடையறாது இக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கல்வியை ஒடுக்கும் எண்னம் எதிர்காலத்திலும் எழாது” என்று விளக்கினார், சோவியத் கல்வியாளர்களில் ஒருவர்.