அடிமனம்/இயல்பூக்கம்
மனத்திலே இத் என்பதுதான் மிகப் பெரிய பகுதியாக இருக்கிறதென்று பார்த்தோம். அதனுடைய ஆழத்திலே போகப் போக ஒரே இருட்டாக இருக்கிறது. அதாவது அங்குள்ளவை ஒன்றும் நமக்குத் தெரிவதில்லை. ஒரே அந்தகாரத்தில் அவை அழுந்திக் கிடக்கின்றன. இந்த அந்தகாரத்தில்தான் அடக்கப்பட்ட இழிந்த இச்சைகளும் பெரிய அதிர்ச்சியனுபவங்களும் மறைந்துள்ளன என்று தெரிந்துகொண்டோம். அதீத அகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு அடக்கப்பட்ட இச்சைகள் இங்கே பதுங்கி நனவுக்குத் தெரியாமலிருக்கின்றன.
இவை மட்டுந்தான் இத்தில் இருப்பதாகத் தீர்மானம் செய்யக் கூடாது. அங்கே மனிதனுக்கு இயல்பாகவே அமைந்திருக்கின்ற சில உந்தல்களும் இருக்கின்றன. அவை அநுபவத்தால் கற்றுத் தெரிந்து கொண்டவை அல்ல. பிறவிலேயே அமைந்துள்ள வேகங்கள் அவை. அவற்றைப் பிறவிச் சக்திகள் என்று கூறலாம். அவை மனிதனை உந்திப் பலவகையான செயல்களிலே ஈடுபடச் செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதால் அவற்றை இயல் பூக்கங்கள் என்று சொல்லுகிறார்கள். கலவியூக்கம், உணவு தேடூக்கம் என்று இப்படிப் பல இயல் பூக்கங்கள் இருக்கின்றன. இவை விலங்குகளிடத்திலும் காணப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக இவற்றால் உந்தப்பட்டுச் செயல் புரிகின்றன. பறவை கூடுகட்டுகிறது. தூக்கணாங் குருவி அழகான கூடொன்றை நாரைக் கொண்டு பின்னி விடுகிறது. அந்த வித்தையை அதற்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. இது இயல்பூக்கத்தால் உண்டான திறமை. ஆனால் மனிதன் விலங்குகளைப்போல முற்றிலும் இயல் பூக்கங்களின் உந்தல்களாலேயே செயல்புரிவதில்லை. அந்த இயல் பூக்கங்களால் ஏற்படும் சில இச்சைகள் இழிந்தவை என்று அவற்றை அடக்க முயலும் மனச் சான்றும் அவனிடத்திலே அமைகின்றது. அதீத அகம் அந்த வேலையை மேற்கொள்ளுகின்றது.
இயல்பூக்கங்களைப் பற்றிப் பல வகைப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இயல்பூக்கங்களின் எண்ணிக்கையை நிருணயம் செய்யவும் அவற்றால் தனித்தனி உண்டாகும் உள்ளக்கிளர்ச்சிகளை வகுக்கவும் மெக்டூகல் போன்ற மனவியலறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். மெக்டூகல் பதினான்கு இயல்பூக்கங்கள் முக்கியமானவை என்று வகுத்திருக்கிறார். பிராய்டு இயல்பூக்கங்களைப் பற்றி முடிவாக ஒரு கருத்திற்கு வந்தார். அவர் கருத்தின்படி இயல்பூக்கங்களை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருதொகுதி உயிர் நிலைபெற்றிருப்பதற்கு உதவுகின்றது. மற்றொரு தொகுதி உயிர் நீங்கிச் சாவு ஏற்படுவதற்கு உதவியாக நிற்கின்றது. சடப் பொருளாக இருந்த உலகத்திலே முதலில் எப்படியோ உயிர் தோன்றியிருக்கிறதல்லவா? அப்படித் தோன்றிய பிறகும் பழைய நிலைக்கே செல்லுவதில்தான் இந்த உயிர் வாழ்க்கை முடிகின்றது. அவ்வாறு முடிவதற்கு இந்தத் தொகுதி உதவி செய்கின்றதாம்.
உயிர் நிலைப்பதற்கு உதவி செய்யும் இயல்பூக்கங்களைப் பற்றி நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உணவு தேடூக்கம், கலவியூக்கம் முதலானவை உயிர் நிலைப்பதற்கு உதவுகின்றன அல்லவா? இவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதுபோல மற்றத் தொகுதியைச் சேர்ந்த இயல்பூக்கங்களைப்பற்றித் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அகம், அதீத அகம் ஆகியவற்றின் செயல்களைப்பற்றி இன்னும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இத்திலிருந்து அகம் பிறக்கிறதென்றும், அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறதென்றும் கண்டோம். இத் தனது இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆசைப்படுகிறது; அதற்கு வேறு எண்ணம் கிடையாது. இன்ப நாட்டமே அதன் லட்சியம்.
இந்த இத் வெளியுலகத்தோடு மோதும்போது சில ஒழுங்குமுறைகளை அனுசரிக்க வேண்டிய அவசியத்தை அநுபவத்தால் அறிந்து கொள்ளுகிறது. அப்படி அறியும் பாகமே அகமாக உருவெடுக்கின்றது. ஆதலால் அகம் இன்ப நாட்டக் கொள்கையிலிருந்து வேறுபட்டு ஒழுங்கு முறை நாட்டக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக அமைகின்றது. சூழ்நிலையும் சமுதாயமும் உருவாகியிருக்கின்ற உண்மை நிலையையுணர்ந்து அவற்றிற் கேற்றவாறு நடத்தையை அமைக்கவே அகம் விரும்புகின்றது. ஆதலால் இத் தனது விருப்பம் போல் காரியம் செய்ய அகம் விடுவதில்லை. இருந்தாலும் அது இத்துக்கு விரோதமானதல்ல. சமுதாயத்திற்கு உகந்த வழியில் இத்தின் இச்சைகளை நிறைவேற்ற அது முயல்கிறது. இத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் காவல் சக்தியெல்லாம் இந்த அகத்திலேயே இருக்கின்றது. கலவியூக்கத்தால் உந்தப்பட்டு இத் பொங்கி யெழுகின்றது என்று வைத்துக் கொள்ளுவோம் அந்த நிலையிலே இத் தன் விருப்பம்போல விலங்கு முறையிலே நடக்குமானால் சமூகத்தில் அமைதி குலைந்து குழப்பமே மிஞ்சும். அந்தச் சமயத்திலே அகம் இத்தைக் கொஞ்சம் பொறுக்கும்படி கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தின் கலவியூக்கத்தைச் சமூகம் ஏற்றுக் கொள்ளும் வழியில் நிறைவேற்ற முயல்கிறது. கலியாணம் போன்ற சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஒழுங்குக்கு உட்பட்டு இத்தின் விருப்பத்தை நிறைவேற்றுகிறது. இந்த அகம் பெரும்பாலும் சூழ்நிலையோடு மோதுவதால் ஏற்படுவதாயினும் இதன் அமைப்புக்குப் பாரம்பரியமும் துணை செய்கின்றது.
சில சமயங்களிலே இத் இந்த அகத்தின் கட்டுக்கு மீறித் தொழில் செய்துவிடும். அப்போதுதான் உணர்ச்சி வேகத்தால் காரியம் நடந்ததாக நாம் கூறுகிறோம். உணர்ச்சி வேகத்தால் கொலை செய்பவர்களும் உண்டு.
அதீத அகம் லட்சியத்திலே நாட்டமுடையது. அகம் வரம்பு மீறி இத்தின் இச்சையை நிறைவேற்ற முயலும் போது அதைக் கண்டிக்கிறது. இத் தனது உணர்ச்சி வேகத்தால் இழிந்த தொழில் செய்வதையும், அகம் அந்த இழிதொழிலை வேறு வழிகளில் நிறைவேறும்படி செய்ய முயலுவதையும் அதீத அகம் கண்டிக்கும்.
ஆகவே இத்துக்கு அகம் உடந்தையான தென்றும், அதீத அகம் அகத்தையும் அதன் வாயிலாக இத்தையும் அதன் இழி செயல்களுக்காகத் தண்டிக்கிறதென்றும் தெரிந்து கொள்ளலாம் சில சமயங்களில் அதீத அகம் மிக வன்மையாகக் கண்டிப்பதால் அகம் மிகவும் நைந்துருகும். அந்த நிலையிலே ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்ள முனைவதோடு தற்கொலை செய்து கொள்ளவும் ஒவ்வொரு சமயத்தில் எண்ணுகிறான். இதிலிருந்து அதீத அகம் எப்பொழுதுமே இத்துக்கு உடந்தையாக இருக்காது என்று தோன்றலாம். ஆனால் இத் மிகவும் தந்திரம் வாய்ந்தது. அப்படி லேசாக அதீத அகத்தை விட்டு விடுவதில்லை. அதீத அகத்தின் நீதி நெறி ஆர்வத்தையே சில சமயங்களில் தனது இயல் பூக்கங்களைத் திருப்தி செய்து கொள்ளப் பயன் படுத்திக்கொள்ளுகிறது.
அது எப்படி முடியும் என்ற சந்தேகம் உடனே தோன்றலாம். அதை நிவர்த்தி செய்ய ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவன் நீதிமார்க்கத்தில் செல்லுவதிலே மிகுந்த ஆர்வமுடையவன் என்று வைத்துக் கொள்வோம். அவன் தவறு செய்கின்றவர்களிடம் கோபங்கொள்ளுகிறான், தனக்கு அதிகாரமிருந்தால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் அந்தத் தவறான வழிகளையே ஒழித்துக் கட்ட முயல்கிறான். தவறு செய்தவர்களெல்லாம் அவன் கையில் படாதபாடு படுகிறார்கள். அவர்களை அவன் அடிக்கிறான்; சிறைப் படுத்துகிறான்; ஹிம்சை செய்கிறான். அவன் உயர்ந்த லட்சியத்தை நினைத்து இவ்வாறு கொடுமைப் படுத்துகிறானென்றாலும் அவனிடத்திலே இத்தின் விலங்குணர்ச்சிகளின் ஆதிக்கத்தைக் காண்கிறோமல்லவா? நீதிநெறியின் பெயரால் அவனுடைய விலங்குணர்ச்சிகள் தலை விரித்தாடுகின்றன. இதற்கு அவனுடைய அதீத அகமும் உடந்தையாக நின்றிருக்கிறது! இத்தின் சூழ்ச்சியிலே அதீத அகம் மயங்கிப் போய் விட்டது. இப்படி இந்த மாய இத் அதீத அகத்தையும் வஞ்சித்துக் கெடுத்துத் தனதுவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது.
அதனால்தான் நம் நாட்டு மகான்களெல்லாம் எல்லா நிலைகளிலும் உணர்ச்சி வேகத்தை அடக்கி ஆள்வதையே உயர்ந்த சாதனை என்று கூறியிருக்கிறார்கள். உயர்ந்த லட்சியத்திற்காகவும் உணர்ச்சி வசப்பட்டுக் காரியம் செய்வதை அவர்கள் மிக மேலானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த நிலைமையிலும் உள்ளத்திலே சமநிலை கொண்டிருக்க வேண்டும். மாணிக்கவாசகர் இறைவனைப் போற்றும்போது, “வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க” என்று பாடுகிறார். இயல்பூக்கங்களின் உந்தல்களான வேகத்தையே அவர் குறிப்பிடுகிறார். ஒருவனை அறநெறியின் பெயரால் தண்டிக்கவேண்டியேற்பட்டாலும் அந்த சமயத்திலும் மனத்திலே சமநிலை இருக்கவேண்டும். அறவழியை விட்டுவிலகியவர்களை சம்ஹாரம் செய்யும் இறைவனின் இதழ்களிலே புன்முறுவல் தவழ்வது போல நம்நாட்டுச் சிற்பிகள் சிற்பம் வடித்திருப்பது இந்த உன்னத நிலையைக் காட்டுவதற்கேயாகும். உள்ளத்திலே சமநிலையடைவதே மிகப் பெரிய சாதனையாகும்.
உடலைக்கொண்டு ஒருவன் உழைத்து வேலை செய்கிறானென்றால் அவனுடைய உழைப்புக்கும் ஒரு எல்லையுண்டு; அதற்கு மேலே அவனால் ஓய்வு பெறாமல் உழைக்க முடியாது அவனுடைய உடல் சக்தி முழுவதும் செலவழிந்து போகிறது; அதற்குமேலே அவன் வேலை செய்யவேண்டுமானால் புதிய சக்தி பெறுவதற்கு ஓய்வும் உணவும் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவனால் உடலைக் கொண்டு மேலும் உழைக்க முடிகிறதில்லை. இதிலிருந்து உடலின் ஆற்றல் ஓர் அளவுக்குட்பட்டது என்று தெரிகிறது. அதுபோலவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மனத்திற்கு உள்ள ஆற்றலும் ஓர் அளவுக்கு உட்பட்டதே. அந்த ஆற்றல் இத், அகம், அதீத அகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சேர்ந்திருக்கின்றது. ஒரு பகுதியிலே அது அதிகப்படுகிறபோது வேறு இரண்டு பகுதிகளிலே அது இயல்பாகவே குறைகின்றது. தூங்கும் நிலையிலே அகத்தின் ஆற்றல் குறைகிறது. அதிலுள்ள காவல் சக்தியும் எச்சரிக்கை குறைந்து நிற்கிறது. ஆதலால் அந்த சமயத்திலே கனவின் மூலம் இத் தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளுகிறது.
இத்தின் ஆற்றல் மிகுதியாகவுள்ளவன் உணர்ச்சி வேகத்தால் தூண்டப்பட்டுக் காரியம் செய்வான். அகத்தின் ஆற்றல் மிக்கவன் சமூகம் உள்ள நிலையை அனுசரித்து அதற்கேற்பக் காரியம் செய்வான். அதீத அகத்தின் ஆற்றல் மிக்கவன் லட்சியவாதியாக இருப்பான்.
அதீத அகம் இத்துக்கு உடந்தையாக இருப்பதும் உண்டு என்று பார்த்தோமல்லவா? ஒருவன் தனது செயலுக்காகச் சில சமயங்களில் வருந்துகிறான்; அவமானமடைகிறான். ஏதாவது ஒரு வேளையில் இந்த அவமான உணர்ச்சி எல்லை கடந்து போகும். அப்போது அவன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகிறான். இந்த நிலையிலே அதீத அகம் இத்துக்கு உடந்தையாக நின்று இத்தில் உள்ள சாவு இயல்பூக்கங்களான தொகுதிக்கு உதவியாக வேலை செய்கின்றது.
ஆரம்ப காலத்திலே பிராய்டு நனவிலி மனம் என்ற பகுதியைப் பற்றிப் பேசலானார். மனத்திலே அவ்வாறு ஒரு பகுதி இருப்பதாகவும் அது மிக வலிமை பொருந்தியதென்றும் அவர் தமது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டார். பிறகு நனவிலி மனம் என்று கூறுவதையும் விடுத்து இத், அகம், அதீத அகம் என்ற பிரிவுகளையே வற்புறுத்தலானார்.
இவ்வாறு கூறும்போது இத்தும் நனவிலி மனமும் ஒன்று என்றோ அல்லது அகமும் நனவுமனமும் ஒன்று என்றே கருதுவது முற்றிலும் சரியல்ல என்பது விளங்கும். இங்கே உள்ள படமும் அதைத் தெளிவாக்குவதைக் கவனிக்கலாம்.
வெளியுலகம் இத் என்பதுடன் மோதுகின்றது. அதன் பயனாக அகம் பிறக்கிறது. அகத்திலிருந்து அதீத அகம் பிறக்கிறது. நனவு மனத்தின் எல்லையைக் கடந்தே அகம் செல்லுகிறது. அங்கே நனவடி மனம் அகத்திற்கும் இத்துக்கும் இடையே எங்கோ இருக்கிறது. அகமானது நனவு மனத்தின் எல்லையையும் தாண்டியிருப்பது போலவே இத் நனவிலி மனத்தின் எல்லையையும் தாண்டியிருக்கிறது. அதீத அகம் நனவு எல்லையிலும் இருக்கிறது; அதைத் தாண்டி நனவிலிப் பகுதியிலும் அது இருக்கின்றது.