அணியும் மணியும்/இரண்டு காட்சிகள்

3. இரண்டு காட்சிகள்

சிலம்பைச் சுற்றியெழும் சிலப்பதிகாரக் கதையில் இளங்கோவடிகளின் கதையமைக்கும் ஆற்றலும், நிகழ்ச்சிகளைப் பொருத்தும் திறனும், காட்சிகளை அமைத்துக் காட்டும் கவினும் போற்றத்தக்கனவாய் அமைந்துள்ளன. சிறப்பாக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இரண்டு காட்சிகளாக அமைத்துக் காட்டும் அழகு சிலப்பதிகாரத்தில் பலவிடங்களில் அமைந்துள்ளது. உவகையில் அவலத்தையும், கொடுமையில் செம்மையையும், காதலில் கலக்கத்தையும், ஒன்றனோடு ஒன்றைப் பொறுத்திக்காட்டி விளக்கும் திறன் இவர்பால் அமைந்துள்ளது.

கண்ணகி மாதவி இருவரையும் படைத்து, அவர்கள் பண்பை வெளிப்படுத்தும் வகையில் கோவலனின் வாழ்வை அவர்களோடு பிணைத்து, அவ்வப்பொழுது இருவரின் இருவேறு நிலைகளையும் ஒருங்குவைத்துக் காட்டும் அமைப்பைப் பலவிடங்களிற் காண்கிறோம்.

ஆடல், பாடல், அழகு இம்மூன்றும் கூடிய மாதவியின்பால் விருப்புற்றுக் கோவலன் அவளோடு உறைந்து வாழ்கின்றான் என்ற செய்தியைச் சொல்லவந்த விடத்தில் கண்ணகியின் இல்லத்தினை மறந்துவிடுகிற செய்தியையும் உடன் சேர்த்தே கூறுகின்றார்.

மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதலறியா விருப்பின னாயினன்

வடுநீங்கு சிறப்பின்தன் மனையக மறந்து

- அரங்கேற்று காதை

என்று கூறுகின்றார். வடுநீங்கு சிறப்பினையுடைய தன் மனைவியின் இல்லத்தை அறவே மறந்துவிட்டான் என்று கூறுகிறார். அவள் ஒருத்தி இவன் வருகைக்காகக் காத்துக் கிடப்பாளே என்ற நிலையை மறந்து, மாதவியை விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்று கூறுகின்றார். மாதவியின் மணமனை புகுந்தவன் கண்ணகியின் மனையகத்தை மறந்துவிட்டான் என்று இருவேறு காட்சிகளை ஒருங்கு வைத்துக் காட்டுகின்றார்.

இதைப் போலவே அந்திமாலையைச் சிறப்பித்துக் கூறும்பொழுது நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்தில் ஆர்வ நெஞ்சத்தளாய்க் கோவலனோடு உடன் அமர்ந்து கோலங்கொண்ட மாதவியின் மகிழ்ச்சியை விவரிக்கும் பொழுது, கையறு நெஞ்சத்துக் கண்ணகியின் கண்ணீரை அவரால் காட்டாமல் இருக்க இயலவில்லை. கண்ணகி அணியிழந்து கோலமிழந்து தனிமையுற்றாள் என்ற செய்தியையும் உடன் சேர்த்துக் கூறுகின்றார். ‘ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக் கோலங்கொண்ட மாதவி’யின் நிலையைச் சொல்லும் அதே தொடர்ச்சியில்,

மங்கல் வணியிற் பிறிதணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்

என்றும், “அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிந்தது” என்றும், “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தது” என்றும் கூறி, அவள் அணியிழந்த தோற்றத்தையும் கோலம் கொள்ளாக் கொள்கையையும் உணர்த்துகிறார். மேலும் கண்ணகியின் தனிமையான நிலையைச் சொல்லும் பொழுது அவள் தன் மேனியை அழகு செய்த பல அணிகளை இழந்து நின்றாள் என்று கூறுவதோடு அமையாமல், முகத்தை மலரச்செய்யும் முறுவலையும் மறந்தாள் என்று நகைமுகம் மறைத்த செய்தியையும் உடன் உணர்த்துகிறார். கோவலன் அவளோடு இருந்து அவளுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை யென்பதை, ‘தவளவாள்நகை கோவலனிழப்ப’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். கோவலன் எதிரில் மாதவி இருந்தாள் என்று கூறிய அவர், கண்ணகிமுன் கோவலன் இல்லை என்பதையும் உடன் உணர்த்துகிறார்.

பவள வாணுதல் திலக மிழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி

என்று காதலனைப் பிரிந்து அவள் அடைந்த வேதனையைக் காட்டுகின்றார். ஆர்வ நெஞ்சிற் கோலங்கொண்ட மாதவியின் கோல்த்தை அவனால் காணமுடிந்ததேயன்றிக் கோலம் இழந்த கண்ணகியின் கையறு நெஞ்சை அவனால் காணமுடியவில்லை என்பார் போலக் “கோலங்கொண்ட மாதவி” என்றும், “கையறு நெஞ்சத்துக் கண்ணகி” என்றும், முறையே மாதவியையும் கண்ணகியையும் சித்திரித்துக் காட்டுகின்றார்.

கண்ணகியைப் பாராட்டும் கோவலன் உரைகளிலும் இறுவேறு நிலைகளைக் காட்டுகின்றார். மணவினை முடிந்து இன்பவாழ்வு தொடங்கும்போது காதல் உணர்வில் பாராட்டிய பாராட்டுரைக்கும் வாழ்க்கையின் நெருங்கிய பழக்கத்தால் பண்பு அறிந்து பாராட்டும் பாராட்டுதலுக்கும் வேற்றுமை அமைத்து, முதலில், தொடங்கிய பாராட்டுரையை முடிவில் கூறும் பாராட்டுரையால் நிறைவு படுத்தி, முழுக்கட்சியாகக் காட்டுகின்றார் எனலாம்.

முதற்கண் கோவலன் கண்ணகியைப் பாராட்டும் புகழுரையில் அவள் அழகையும் மற்றுமுள்ள நலன்களையும் மட்டும் சிறப்பிக்கின்றான். அப்பொழுது அவள் பண்பை அறிவதற்கு வாய்ப்பில்லை. பின்னர் அமைந்த பாராட்டுரையில் அவள் பண்பையே சிறப்பித்துக் கூறுகின்றான். இவ்வாறு முன்னும் பின்னும், வாழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும், இறுவேறு காட்சிகளில் கண்ணகியின் நலனும் பண்பும் பாராட்டப்படுகின்றன.

கயமலர்க் கண்ணியாகி கண்ணகியும் அவள் காதற் கொழுநனான கோவலனும் நெடுநிலை மாடத்தில் மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசையிருந்துழித் தீராக்காதலால் அவள் திருமுகம் நோக்கி அவள் அழகையும் நலனையும் வியந்து பாராட்டுகிறான்.

மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே கரும்பே தேனே

என்று, அவள் நலன்களை மட்டும் பாராட்டிக் கூறுகின்றான். பொன்னைப் போன்ற நிறத்தையும், முத்துப் போன்ற மென்மையையும், குற்றமற்ற நறுமணத்தையும், கரும்பு போன்ற இனிமையையும், தேன் போன்றுமிழற்றும் இனிய மொழியையும் அவன் பராட்டுரையில் அமைக்கின்றான். வெறும் புலன்களின் இன்பங்களைச் சுற்றியே அவன் புகழுரை அமைந்துள்ளது. இந்தப் புகழுரையால் கண்ணகியின் கற்பும், பொற்பும் சிறப்பிக்கப் பெறவில்லை. எனவே இந்தப் பாராட்டோடு விட்டுவிட்டால் கண்ணகியின் உயர்ந்த பண்புகளை அறிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. வாழ்விலும் தாழ்விலும் அவளை நன்கு அறிந்த பிறகே கோவலனால் அவள் பண்பைப் பற்றிப் பேசமுடியும் என்பதை நண்குணர்ந்த அடிகள், தக்க விடத்தில் அவள் பண்பைப் பாராட்டுமாறு செய்து, முழுமையான காட்சியாக அமைத்துக் காட்டி, நலனும் பண்பும் வெளிப்படுமாறு செய்து, கண்ணகியைப் பற்றிய கோவலன் முழுவறிவையும் காட்டுகிறார்.

வாழ்விலும் வழிநடையிலும் அவனுக்குத் துணையாகப் பங்கு கொண்ட பிறகுதான் அவள் பண்பை அவனால் முழுமையும் அறிய முடிகிறது. தொடக்கத்தில் ‘பொன்னே’ என்று பாராட்டிய அவன், பின்னரும் ‘பொன்னே’ என விளித்தாலும், முதற்கண் ‘பொன்னே’ எனக் கூறியதற்கும் முடிவில் ‘பொன்னே’ எனக் கூறியதற்கும் காரணங்களும் கருத்துகளும் வேறாக உள்ளன. அழகால் பொன்னைப் போன்றவள் என்று கூறிய அவன். சுடச்சுட ஒளிரும் பொன் போலத் துன்பம் படப்பட மிளிரும் பண்புடையாள் என்ற காரணத்தால், ‘பொன்னே’ என்று மீண்டும் கூறுகிறான்.

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னோடு போந்தீங்கென்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
நாணின் பாவாய் நீணில விளக்கே

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி

என்று பாராட்டுகிறான். மாதரி அமைத்துக் கொடுத்த தனிவீட்டில் கண்ணகி அடிசில் ஆக்கி அளிக்க, அதனை உண்டு இனிதின் இருந்த கோவலன் அன்போடு அளவளாவும் போது, இவ்வாறு மகிழ்வுரை கூறுகிறான். அவள் பண்புச் சிறப்பைத் தன் அன்புச் சொற்களால் வெளியிடுகிறான். துன்பத்தை நோற்றாலும் பண்பு குறையாத தன்மையால் அவளைப் ‘பொன்னே’ என்றும், காற்றுக்கு அசைந்தாலும் தன்னிலை கெடாத கொடியைப் போலத் துன்பத்தால் துவண்டாலும் மனம் முறிந்து போகாத இயல்பு பற்றியும், கொழுகொம்பு நாடித் தழுவி நிற்கும் கொடியைப்போலக் கொழுநனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் இயல்பு பற்றியும், ‘கொடியே’ என்றும், இனி அவள் மலர்ச்சி பெரும் வாழ்வு வாழவேண்டும் என்ற அவன் கொண்ட நல்லெண்ணத்தால் ‘புனைபூங்கோதாய்’ என்றும், நாணமே துணையாக அவள் துன்பத்தைத் தாங்கிய இயல்பு பற்றி ‘நாணின் பாவாய்’ என்றும், தன் இருண்ட வாழ்வில் அவள் ஒளிவிளக்காக விளங்கும் இயல்பு பற்றி 'நீணில விளக்கே என்றும், கற்பின் சிறப்பால் அவள் அடைந்துள்ள பொற்பின் சிறப்பைப் பாராட்டிக் ‘கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி’ என்றும் பாராட்டுகிறான். இப் பாராட்டுரைகளிலெல்லாம் அவள் பண்பின் சிறப்பே இடம் பெற்றிருக்கின்றது. முதலில் அவன் கண்டுணர்ந்த புறத்தோற்றக் காட்சி நலனைமட்டும் நவிலும் அன்புரையாகவும், இறுதியில் பழகியுணர்ந்த பண்பு அவள் பண்பை உணர்ந்து பேசும் பண்புரையாகவும் அமைய, இரு வேறு காட்சிகளில் அவள் மாட்சிகளை உணருகிறான்.

பாண்டியன் ஆட்சியில் ஏற்பட்ட கொடுங்கோன்மையை விளக்கும் பொழுது சோழநாட்டின் செங்கோன்மையைச் சிறப்பிக்கக் காண்கிறோம். புகுந்த இடத்தில் நடந்த கொடுமையை விளக்கத் தான் வாழ்ந்த இடத்தின் செம்மயைக் கண்ணகி உணர்த்துகிறாள். பாண்டியன் அவைக்களத்தில் அவன் இழைத்த கொடுமையை எடுத்துக் காட்டச் சோழநாட்டு மன்னவர்களின் செங்கோன்மை குன்றாமாட்சியை எடுத்துக் கூறுகின்றாள்:

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியே

- வழக்குரை காதை

எனச் சோழநாட்டின் நீதிவழுவா நெறிமுறையைக் காட்டிப் பாண்டிய நாட்டின் கொடுங்கோன்மையை மிகுதிப்படுத்திக் காட்டுகின்றாள். புள்ளுறு புன்கண் தீர்த்த சிபிச் சோழனின் சிறப்பையும், ஆவின் கண்ணீர் நெஞ்சைச் சுடத்தன் மகனை அதே தேராழியில் மடித்த மனுநீதிச் சோழனின் மாண்பையும் புலப்படுத்துகிறாள்.

பாண்டிய நாட்டின் கொடுங்கோன்மையைச் சுட்டச் சோழநாட்டின் செம்மை வழுவா நீதியைக் காட்டியதைப் போலவே, பாண்டிய நாட்டில் நீதி குன்றிய அப்பொழுதைய நிலையை உணர்த்த நீதிவழுவாப் பண்டைய நெறி முறைமையையும் ஒப்பிட்டு வேறோர் இடத்தில் அமைத்துக் காட்டுகின்றார் ஊழ்வினையே செங்கோல் வளைந்தமைக்குக் காரணம் என உணர்த்துவார். அப்பொழுது ஏற்பட்ட விளைவை விளக்கப் பண்டுதொட்டுப் பாண்டியர் ஆட்சியில் தொடர்ந்து வந்த தூய செந்நெறியை யுணர்த்துகிறார். மதுராபதித் தெய்வம் கண்ணகிக்கு ஊழ்வினை உருத்து வந்துட்டும் என்பதை உணர்த்தும் பொழுது, குன்றிய ஆட்சியின் நிலையை உணர்ந்த கண்ணகிக்குப் பாண்டியனின் பண்புள்ள பழைய ஆட்சி முறையை விளக்கிக் கூறுவதாக அமைக்கின்றார். அந்த நாட்டில் மறைநாவோசையல்லது குறை தெரிவிக்கும் மணிநாவோசையே எழுந்ததில்லையென்றும், பகைமன்னர் தோல்வி பற்றித் தூற்றுவரேயன்றிப் பழிபற்றிக் குடிமக்கள் அவனைத் தூற்றியதில்லை என்றும் பண்டைய செங்கோன் முறையைச் சிறப்பித்துக் கூறுகின்றார்.

மறைநாவோசை யல்லது யாவதும்

மணிநாவோசை கேட்டது மிலனே

அடிதொழ திறைஞ்சா மன்னரல்லது

குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் (கட்டுரை)

என்று கூறிக் கண்ணகிக்குப் பாண்டியனின் நெறிமுறையின் இருவேறு நிலைகளைக் கூறி ஊழ்வினையால் வளையாத கோல் வளைந்த காட்சியை உணர்த்துவது போல அமைக்கின்றார்.

வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் முரணை அமைத்து இன்பத்தையும் அதற்கு எதிரான துன்பத்தையும், கொடுமையையும் செம்மையையும், அழகையும் அழுக்கையும் அமைத்துக் காட்டும் கவிஞர், வாழ்வின் ஒழுக்கநெறிகளிலும் உள்ள முரண்பட்ட வியல்புகளை மகளிர் இருவர் வாழ்க்கை முறையில் அமைத்துக் காட்டுகிறார். காமவேள் கோட்டம் வழிபட்டுக் கணவனை அடைய முயலும் தேவந்தியின் நெறியையும், கணவனை வழிபடுவோர் தெய்வத்தை வழிபடுதல் சிறப்பன்று என்று கொண்ட கண்ணகியின் நெறியையும் ஒரே இடத்தில் கூறி, இருவேறு நெறிகளில் உள்ள குறைவு நிறைவுகளை எடுத்துக் காட்டுகின்றார்.

வருங்காலத்து வரும் தீய நிகழ்ச்சிகளைத் தீக்கனா ஒன்றில் கண்ட கண்ணகி மருண்டு, தன் தோழியான தேவந்தியிடம் சொல்ல, அவள்,

சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு

தாமின் புறுவ ருலகத்துத் தையலார் (கனாத்திறம்)

என்று, பொதுவாக உலகத்தில் ஒருசிலர் மேற்கொள்ளும் நெறியாகக் கூறுகின்றாள். கற்புடைய பெண்டிர்க்கு அந்நெறி ஒவ்வாது என்பதைக் கண்ணகி, ‘பீடு அன்று’ என்று சுருக்கமாகக் கூறி மறுப்புரை தருகிறாள். கொழுநனை வழிபடுகின்றவர் தெய்வத்தை வழிபடுதல் குறையானதாகும் என்ற பண்பட்ட கருத்தை அப்பாவைக்கு உணர்த்தத் தொடங்குகிறாள். காமவேள் கோட்டம் தொழும் தையலார் செயலையும் அது பீடு அன்று எனக் கூறி மறுக்கும் கண்ணகியின் செயலையும் அடுத்தடுத்து அமைத்து முரணால் சிறப்புப் பெற வைக்கின்றார்.

அவலத்தின் எல்லையாகக் கோவலனின் கொடிய முடிவைச் சொல்லுமிடத்து, அவள் அவனோடுவாழ்ந்த காலத்துக் கொண்ட உவகைக் காட்சிகளை உடன் வைத்துக் காட்டி அவலத்தின் நிலையை மிகுதிப்படுத்தி இறுவேறு உணர்வுகளை மோதவைத்துச் சுவையை மிகுவிக்கின்றார். அவலத்தோடு உவகையை ஒருங்கு வைத்துக் காட்டுவதோடு வேறு வகையாகவும் இறுவேறு காட்சிகளை அமைத்து அவள் கொண்ட துன்பத்தின் துடிப்பையும் துடைக்க முடியாத் துயரத்தையும் காட்டிச் செல்கிறார். கண்ணகி அலையுண்ட மனத்தோடு கோவலன் கொலையுண்ட இடந்தேடிக் கவலையோடு செல்கிறாள். கம்பலை மாக்கள் கண்ணீர் சிந்தும் அவள்முன் வந்து அவனைக் காட்ட, அவள் மட்டும் அவனைக் காண முடிந்தது; அவன் அவளைக் காணவில்லை என்று இரண்டு வேறுபட்ட நிலைகளைச் சொல்லிச் சோகத்தை மிகுதியாகக் காட்டுகின்றார்.

கண்ணகியின் கண்கள் அவன் மூடிய கண்களைக் காண்கின்றன. காலையிலிருந்து மாலைவரை நடந்த செய்திகளைச் சொல்ல வேண்டிய அவன் கண்கள், திறந்தும் பாராமல் மூடிக்கிடந்தன. காதற்கதை பேசிய அக்கண்கள் துன்பக் கதைகளைக் கண்மூடிய வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தன. காதலால் ஒருமிக்க சந்திக்கும் அக்கண்கள் சாதலால் சந்திப்பை இழந்துவிட்டன என்ற செய்தியை இளங்கோவடிகள் நன்கு காட்டுகின்றார்.

கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்

செம்பொற் கொடியனையாள் கண்டாளைத்தான் காணான்
என்று கண்ணகி அவனைக் கண்டதையும், அவன் அவளைக் காணாததையும் ஒருங்கு வைத்துக் கூறுகின்றார்.

அவள் அழுது அரற்றும் துன்பக் குரல் அவன் செவிகளில் விழவில்லை. கண்ணகியைச் சந்தித்து, ‘மாசறு பொன்னே!’ என்றும், ‘பொன்னே! கொடியே!’ என்றும் முன்னால் புகன்று பாராட்டிய அந்த வாய், இப்பொழுது மூடிக் கிடக்கிறது என்றும், அவனால் பாராட்டப் பெற்ற அதே செம்பொற்கொடியனையாள் அவன் கண்முன் நின்றும் அச் செம்பொன்கொடியாளின் அழகை அவன் கண்கள் அப்பொழுது காணவில்லையே என்றும் அறிவுறுத்துவார் போன்று, செம்பொன் கொடியனையாள் என்ற தொடரால் கண்ணகியைக் குறிப்பிடுகின்றார். கொடியே என்று முன்னர் அவனால் பாராட்டப் பெற்ற கண்ணகி இப்பொழுது கொழு கொம்பின்றித் துவள்கின்றாள்; இனித் தழைப்பதற்கு வழியில்லை என்பார், ‘கொடியனையாள்’ என்ற குறிப்பால் உணர்த்துகிறார். கொழு கொம்பு இழந்த கொடிபோன்று கொழுநனையிழந்து அவள் உள்ளம் அழிகின்ற காட்சியை இத்தொடரால் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

அன்று காலை நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகளும் மாலையில் நேர்ந்த துன்ப அதிர்ச்சியும் இளங்கோவின் நினைவுக்கு வருகின்றன. அன்றைய காலைப் பொழுதில் மாலை தவழும் மார்பால் அவளை அவன் தழுவிக் கொண்டதும், அவன் தலை மாலையில் இருந்த மலரை வாங்கித் தன் வார்குழல் மேல் அவள் சூட்டிக்கொண்டதும், அதே மாலைப்பொழுதில் மண்ணில் கிடந்த அவன் உடலையும் மாலைபுரண்ட மார்பில் குருதிவடியும் நிலையையும் அவள் காணுவதும் ஆக, இருவேறு நிலைகளை ஒருங்கு வைத்துக் காட்டி இன்பதுன்பத்தை அடுத்தடுத்து வைத்துத் துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்ட துயரத்தை மிகுதிப்படுத்திக் காட்டுகின்றார்.

வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்

புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்

கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம்

(ஊர்சூழ்வரி)

என்று உணர்த்தி, அவள் என்றும் காணாத்துயரத்தை அன்று காணுவதாகக் கூறுகிறார்.

“சுண்ணத் துகள் அவன் பொன்னிற மேனியிற் படிந்து அவன் வண்ணத்தை அழகு செய்தது. அத்தகைய மேனி இப்பொழுது மண்ணிற்கிடந்து புழுதி படிந்து பழுதுறுவது எங்ங்ணம் அடுக்கும்?” என்று அரற்றிக் கூறுகின்றாள்.

பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ

என்று, அவன் வெட்டுண்ட உடலைப் பார்த்துக் கட்டவிழ்ந்த மனத்தோடு கதறுகின்றாள். பொன் உறு மேனியில் இப்பொழுது துகள் தவழ்கிறதே என்று கேட்கிறாள். சுண்ணம் பூசிய மேனியில் மண்ணின் புழுதி படிவது அடுக்குமா என்று கேட்பதுபோல் இருக்கிறது.

இறுதியாக, வேறுபட்ட இரண்டு காட்சிகளை ஒருசேர வைத்துக்கூறிக கண்ணகியின் அவலத்து எல்லையை அளவிட்டுக் காண்பதுபோல் ஒப்புமைப்படுத்தி அமைக்கின்றார். மதுரை மாநகருள் புகுந்தபோது கணவன் துணையாக வந்த காட்சியையும், மதுரையை விட்டுத் தனித்து ஏகும்போது அவள் பெற்ற தனிமை உணர்வையும் ஒரே இடத்தில் அமைத்துக் கூறுகின்றார்.

காதற் கணவனோடு மதுரையில் கண்ணகி புகுந்த போது அவள் நிலைவேறு; அதைவிட்டுச் செல்லும் போது அவள் நிலைவேறு மாதவியோடு கொண்ட தொடர்பால் அறுந்துபோன இல்லற வாழ்வு, மீண்டும் கூடி இணைப்புண்டதால் செம்மையுற்றபடியால் வழிநடைத் துன்பத்திற்கும் வாழ்க்கை நெறிக்கும் அவன் தோள்கள் அவளுக்குத் துணையாக இருந்தன. கணவனையிழந்து, தனியே துன்பம் உழந்து, வறிதே மதுரையை விட்டு வெளியேறும்பொழுது அவள் உள்ளத்தில் பல எண்ணங்கள் மோதுகின்றன. கணவனோடு வந்து கவின்பெற்ற வாழ்வு கலைந்து விட்டதை உணர்கிறாள்; அவள் கண்ட கனவுகளும், கொண்ட உறுதிகளும் சிதைந்து அவள் உள்ளம் சிலையில்லா வெறுங்கோயிலாகிவிடுகிறது. தான் போற்றிவந்த பெரிய பொருளைத் திடீரென்று எதிர்பாராமல் இழந்துவிட்ட அவலம் அவள் உள்ளத்தைக் கவ்வுகின்றது. சேரநாடு நோக்கிச் செல்லும் அவள் சிந்தை சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்புகுந்த அந்த நாட்களை எண்ணுகின்றது. அவலத்தின் எல்லையை அடைந்து உள்ளத்தின் சுமையாக இருந்த துன்பம் அனைத்தையும் சில சொற்களால் சொல்லிக் கையறுகின்றாள்:

கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன்

மேற்றிசை வாயிற் வறியேன் பெயர்கு (கட்டுரை)

எனச் செயலற்றுப் பேசுகின்றாள். மதுரை மாநகருள் கணவனோடு புகுந்ததும், அதைவிட்டுச் செல்லும் பொழுது கணவனின்றி நீங்குவதுமாகிய இரண்டு காட்சிகளையும் ஒரே இடத்தில் வைத்துக் காட்டியிருப்பது அவலச் சுவையை மிகுதிப்படுத்துகிறது.

இவ்வாறு இளங்கோவடிகள் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை இரண்டு காட்சிகளால் ஆங்காங்குக் காட்டி, அக்காவியத்தின் சுவையையும், அழகையும் உயர்வுபடுத்திக் கற்பார் நெஞ்சத்தை அக் காட்சிகள் கொள்ளும் வண்ணம் செய்து அதனை நெஞ்சை அள்ளும் காவியமாக அமைத்து விட்டார் எனலாம்.