அண்ணலாரும் அறிவியலும்/முன்னுரை

முன்னுரை

அண்மையில் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நானும் என் துணைவியாரும் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள பால்டிமோரில் தங்கியிருந்தோம். அப்போது எனது இனிய நண்பரும் கணிப்பொறி விஞ்ஞானியும் 'தி ஹன்ரட்' (The 100) நூலின் ஆசிரியருமான டாக்டர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவரோடு நான் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தேன். அப்போது அவர் துணைவியாரும் உடன் இருந்தார்.

அவரது ‘தி ஹன்ரட்’ நூலில் தம் செல்வாக்கால் உலகத்தின் வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்த நூறு உலகப் பெரியார்களில் முதன்மை இடம் பெற்றிருந்த பெருமானார் (சல்) அவர்களைப் பற்றி எங்கள் விவாதம் திரும்பியது. அவர் தம் பேச்சினிடையே ஒரு கருத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்தினார். ‘உலகச் சமயத் தலைவர்கள் எல்லோருமே அக வளர்ச்சி பற்றியே அதிகம் பேசியுள்ளனர். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திய நபிகள் நாயகம் (சல்) மட்டுமே அகத்தையும் புறத்தையும் பற்றி ஒரு சேர அதிகம் போதித்தவர் அதிலும் அவரது சிந்தனையும் செயலும் அறிவியல் போக்கிலானது என்பதை ஆழ்ந்து பார்த்தால் நன்கு புரியும். திருமறையும் அறிவியல் உணர்வையே அதிகம் ஊட்டுவதாக உள்ளது. இதனால்தானோ என்னவோ பெருமானார் முதற்கொண்டு ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் முயன்று உழைத்து, இன்றைய அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் அடிப்படைகளையும் அழுத்தமாக அமைத்துச் சென்றுள்ளார்கள். இந்த வரலாற்றை சரிவர அறிய இயலாத இன்றைய உலகம் அவர்களைப் பழமைவாதிகள் எனப் பேசுவது விந்தையாக உள்ளது. இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ‘இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குத் தங்கள் முன்னோர்களே மூல காரணம் என்பதை முஸ்லிம்களே சரியாக அறியாமல் இருப்பதுதான்’ என்பதாக இருந்த அவரது எண்ணங்களை அறிந்த போது என் உள்ளுணர்வு விழித்துக் கொண்டது.

இதைப் பற்றி என் மனம் இடைவிடாது அசை போடத் தொடங்கியது. அதற்கேற்ற இனிய வாய்ப்பாக அண்மையில் நானும் என் துணைவியாரும் மேற்கொண்ட புனித ஹஜ் பயணம் அமைந்தது. பெருமானாரின் வாழ்வும் வாக்கும் எந்த அளவுக்கு அறிவியல் உணர்வுகளை உள்ளீடாகக் கொண்டிருந்தது என்பதை ஆழமாகச் சிந்தித்துத் தெளிந்தபோது என் உள்ளம் உவகையால் விம்மியது.

அரபி மொழியில் 'இல்ம்' என்ற சொல் அறிவைக் குறிப்பதாகும். அறிவின் மிணை கொண்டு உருவாக்கப்படுவதே அறிவியல். எனவே, இஸ்லாம் அறிவியல் வளர்ச்சியை ஆன்மீக உயர்வை குறியாகக் கொண்டதெனக் கூறினும் பொருந்தும்.

மேலும், ‘சீனாவுக்குச் சென்றேனும் சீர்கல்வி பெறுக. தியாகியின் இரத்தத்தை விட அறிவாளியின் எழுதுகோல் மை மேலானது’, 'அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை' என்பன போன்ற அண்ணலாரின் அறிவுரைகள், அறிவுத் தேடலின் அவசியத்தை ஆழ்ந்தகன்ற முயற்சிகளை ஊக்குவிப்பனவாக உள்ளதை உணர்ந்தேன். இதன் விளைவாக பெருமானார் (சல்) அவர்களின் அறிவுத் தேடல் பணியை சிரமேற்கொண்டு செயலாற்ற முனைந்த முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தார்கள். அதற்காக அவர்கள் மேற் கொண்ட முயற்சிகள், பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றிய தகவல்களை யெல்லாம் திரட்டி, தொகுத்து வகுத்த போது இன்றைய அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்கும் அடிப்படை அமைத்த பெருமை முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும் என்பதை என்னால் ஆதாரப்பூர்வமாக உணர்ந்து தெளிய முடிந்தது. ‘யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்’ எனும் உள்ளத்து உணர்வால் உந்தப்பட்டு, அவற்றையெல்லாம் கோடிட்டுக் காட்டும் முயற்சியாக இச்சிறு நூலை எழுதி வெளியாக்கியுள்ளேன். இம் முயற்சியில் முன்னரும் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் முயன்ற போதிலும் அம் முயற்சிகள் சிறிய அளவிலேயே அமைவதாயிற்று. எனினும் முஸ்லிம்களின் அறிவியல் முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை விரிவாக, எந்தெந்த அறிவியல் துறை யார், யாரால் உருவாக்கப்பட்டு, எந்தெந்த கால கட்டங்களில் வளர்த்து வளமாக்கப்பட்டது என்பதையெல்லாம் கால முறைப்படி எழுத எண்ணங் கொண்டு, அம்முயற்சியிலும் முழு அளவில் ஈடுபட்டு எழுதத் தொடங்கியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அந்நூலும் உங்கள் கரங்களில் தவழ இறைவனின் திருவருள் துணை செய்யும் என நம்புகிறேன்.

எனது முப்பத்தைந்தாண்டு கால அறிவியல் தமிழ்ப் பணியால் பெற்ற பட்டறிவு இத்தகைய நூல்களை உருவாக்கும் எனது முயற்சிக்குப் பெரும் துணையாய் அமைந்துள்ளது.

எனது மற்ற நூல்களை ஏற்று ஆதரவு நல்கி வரும் வாசகர்கள் இந்நூலையும் ஏற்று ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.


அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியர்.




என் பெற்றோர்களின்
இனிய நினைவுக்கு