அண்ணலாரும்
அறிவியல் ஆய்வும்

இறைவனின் இறுதித் தூதராய், அவனிக்கோர் அருட்கொடையாக வந்துதித்த நம் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய பெருவாழ்வை மொழிந்து சென்ற அருங் கருத்துகளை பல்வேறு கோணங்களில் அறிவுலகம் ஆய்ந்து அரிய உண்மைகளை நாளும் வெளிப்படுத்தி வருகிறது.

அண்ணலார் வாழ்ந்து காட்டிய, வகுத்தளித்த ஆன்மீகச் சிந்தனைகளையும் பொருளியல், அரசியல் நெறிகளையும் பற்றி எத்தனையெத்தனையோ ஆய்வுகள் வெளி வந்துள்ளன. அவையெல்லாம் அறிவுலகின் புதிய சிந்தனைகட்கு, செயற்பாடுகட்கு ஊற்றுக் கண்ணாகவும் உந்து சக்தியாகவும் அமைந்து வருவது கண்கூடு.

இன்றையச் சூழலில், உலகின் அனைத்துத் துறை வளர்ச்சிகளுக்கும் அடிப்படையாய் அமைத்திருப்பது அறிவியல் எனக் கூறின் அது மிகையாகாது. உலகின் ஒட்டு மொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் உயிர் நாடியாகக் கருதப்படும் அறிவியல் உணர்வும் சிந்தனையும் இறையருட் கொடையாய் வந்த அண்ணலாரால் ஊட்டி வளர்க்கப்பட்டதென்ற உண்மை சிலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால், அதுவே முழு உண்மை என்பதை பெருமானாரின் சொல், செயல் வழி ஆராய்வோருக்கு இனிது புலனாகும். இவ்வுண்மையை உணர சிறிது பின்னோக்கிப் பார்ப்பது அவசியம்.

காலம்தோறும்
இறைதூதர்

இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கும் முன்னதாக பலப்பல நபிமார்கள் வல்ல அல்லாஹ்வின் இறைதூதர்களாக, உலக மக்களுக்கு இறைவழி காட்ட அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் என்பர். இவர்களில் சிலர் ஒரு இன மக்களை வழி நடத்தினர்; சிலர் ஒரு நாட்டு மக்களை நல்வழிப்படுத்தினர்; இன்னும் சிலர் ஒரு மொழி பேசிய மக்களுக்கு இறை வழி காட்ட முயன்றனர். இவ்வாறு இந்நபிமார்கள் எல்லாம் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றி இறை வழியில் மக்களை வழி நடத்தினர்.

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு.” (10:47)

“அச்சமூட்டி எச்சரிகை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை” (35:24)

இவ்விரு திருமறை வசனங்களிலிருந்தும் உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனததிலும் இறை தூதர்கள் தோன்றி, மக்களை நல் வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது.

அகவாழ்வும்
புறவாழ்வும்

இந்நபிமார்கள் அனைவருமே ஆன்மீக உணர்வு பொங்கும் அக வாழ்வின் வளத்துக்கே அடித்தளமிட்டு வளர்க்க முனைந்தனர். அகத்தின் சாயலிலேயே புற வாழ்வைக் காணத் தூண்டினர். ஆனால், இறுதி நபியாக வந்துதித்த நம் பெருமானார் முஹம்மது நபி (சல்) அவர்களோ அகவாழ்வைச் செம்மைப்படுத்துவதோடமையாது புற வாழ்வையும் போற்றி வளர்த்து உன்னதமாக்கும் உயர் வழியை வகுத்தளித்த பெருமைக்குரியவராகவும் விளங்குகிறார். அக வாழ்வின் வளர்ச்சிக்கு வளமூட்டிய வள்ளல் நபி புற வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் முனைப்புடன் வளர்க்க—வளப்படுத்த வழிகாட்டிய சிறப்புக்குரியவரும் ஆவார்.

மனிதனின் மாண்பு

இஸ்லாத்தைப் பொருத்த வரை மனிதனைப் பற்றிய கணிப்பே மகத்தானதாகும். வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் இறையம்சமுடைய உன்னத உயிரினமாக உருவாக்கப்பட்டுள்ளான். இறைவனின் படைப்பினங்களிலேயே—உயிரினங்களிலேயே உன்னதமான தனித்துவமுள்ளவனாக மனிதன் விளங்குகிறான். இந்த தனித்துவம் எதன் அடிப்படையில் அமைந்துள்ளது?

உயிரினங்களிலேயே மனிதன் மிகுந்த பலமுடையவனா? யானை இவனை விடப் பெரியது மட்டுமல்ல இவனை விடப் பல மடங்கு பலமுள்ளதுமாகும். உயிரினங்களிலேயே மிகுந்த வீரம் உள்ளவனா என்று பார்த்தால், அதுவும் இல்லை என்றே கூற வேண்டியதாக இருக்கிறது. புலியும், சிறுத்தையும் மனிதனை விடப் பல மடங்கு வீரம் செறிந்தவைகளாகும். பிற உயிர்களை விட மனிதன் வீரியம் மிக்கவனா என்றால், அப்படியும் சொல்வதற்கில்லை. சிட்டுக்குருவி இவனை விட வீரியம் மிக்கதாகப் பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், மனிதன் தன் வீரிய விருத்திக்கே ‘சிட்டு குருவி லேகிய’மல்லவா சாப்பிடுபவனாக இருக்கிறான்!

பிற உயிரினங்கள்
பெற்றுள்ள பேராற்றல்

சரி, பிற உயிரினங்களைவிட மனிதன் நுட்பத்திறன் மிக்கவனா என்றால், அப்படியும் கூறுவதற்கில்லை. இவனை விட மிக நுட்பமாகச் செயல்படும் பல உயிரினங்கள் இவ்வுலகில் உண்டு. இக்காலக் கட்டடக் கலை வல்லுநர்களே வியந்து போற்றும் வண்ணம், மிக நுட்பமாக சிலந்திகள் வலை பின்னுகின்றன. தேனீக்கள் தேனடைகளை உருவாக்குகின்றன. காற்றில் அலைந்தாடும் தென்னை மட்டை ஓலைகளின் நுனியில் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு வீடு—அதுவும் அறைத் தடுப்புகளோடு கூடிய கூட்டைக் கட்டும் தூக்கணாங் குருவிகளின் கட்டுமானத் திறன் மனிதனையும் விஞ்ச வல்லனவாகும். கறையான் எறும்புகள் உருவாக்கும் புற்றுகளின் ஒழுங்கமைவுடைய கட்டுமானத் திறன் இன்னும் மனிதர்களலேயே முழுமையாக அறிந்துணர முடியாத அற்புத அமைப்புடையதாகும். தொலைத்தகவல் தொடர்பியல் வல்லுநர்களை வியப்பிலாழ்த்தும் வண்ணம் விசித்திர அலைகள் மூலம் செய்தி அறிவிக்கும் ஆற்றல் பெற்றவை டால்பின்கள். ‘ரேடார்’ தொழில்நுட்பத் திறனையே பின்னுக்குத் தள்ளும் வண்ணம் கேளா ஒலிபரப்புத் திறனில் வவ்வால்களை விஞ்சியவனா மனிதன்? கூட்டு லென்சுகள் மூலம் ஒளி பெருக்கும் பார்வை கொண்ட வண்டுகளின் கண் அமைப்பு ஒளி பெருக்குத் திறனுக்கு எடுத்துக் காட்டாகவன்றோ உள்ளது! இன்னும் இது போல எத்தனையெத்தனையோ தனித் திறன் கொண்டஉயிரினங்கள் பல உலகில் இன்னும் உண்டு.

சிந்தனைத் திறனும்
பகுத்தறியும் பண்பும்

வேறு எந்த வகையில் மனிதன் பிற உயிரினங்களினின்றும் உயர்ந்தவனாக—மேம்பட்டவனாக இருக்கிறான் என்பதை மிக நுணுக்கமாக ஆராயும் போதுதான் அந்த வேறுபாடு நமக்கு நன்கு விளங்க வருகிறது. அதுதான் மனிதனிடம் தனித்துவமுள்ள தனிப்பெரும் ஆற்றலாக அமைந்துள்ள சிந்தனைத் திறன் ; பகுத்தறியும் பண்பு.

சிந்தனை ஆற்றலும் பகுத்து ஆராயும் தன்மையும் தான் மனிதனைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. இதன் மூலம் உயிரினங்களிலேயே மிக உயர்ந்த சிகரமான சிறப்பிடத்தை பெற்றுத் திகழ்கிறான் மனிதன்.

அறிவைப் பெருக்கும் அருங்கல்வி

மனிதச் சிந்தனையைச் கூர்மைப்படுத்தும் சாணையாக அமைந்திருப்பது தான் கல்வி, அறிவைப் பொருக்கும் அருங் கருவியாக அமைந்துள்ள கல்வியைத் தவிர்த்து அவன் உயர்வுக்கும் திறன் வளர்ப்புக்கும் வேறு எதுவும் பெரும் காரணமாக அமைவதில்லை எனத் துணிந்து கூறலாம்.

அறிவு வளர்ச்சி, சிந்தனை வளம் ஆகியவற்றிற்கான ஊற்றுக்கண்ணாக விளங்கும் கல்விப் பெருக்கிற்கேற்பவே மனிதனின் உயர்வும் சிறப்பும் அமைகிறது. நம்மைச் சரியான முறையில் கணித்தறியும் அளவு கோலாகவும் அதுவே அமைகிறது.

கல்வி எனும் பாதுகாப்புக் கேடயம்

கல்வியை மனிதனுக்குச் சிறப்பும் பாதுகாப்பும் தரும் வல்லமை கொண்ட வேறொன்று இருப்பதாகக் கூற முடியாது. மனிதன் முயன்று தேடிய செல்வமோ பிறவோ தரமுடியாத வாழ்க்கைப் பாதுகாப்பையும் உயர்வையும் கல்வியால் மட்டுமே பெறவியலும் என்பதை “சொத்தை நீங்கள் பாதுகாக்கவேண்டும். ஆனால், கல்வி உங்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது”, என்றார் ஹலரத் அலி(ரலி) அவர்கள்.

எனவேதான் பெருமானார் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை மிக அதிகமாக வற்புறுத்திக் கூறினார்கள். இவரளவுக்குக் கல்வியின் இயல்பையும் அதன் உயர்வையும் எடுத்துக் கூறி உணர்த்திய வேறொரு மனிதப் புனிதரை நானில் வரலாற்றில் காண்பது அரிது.

கல்விபற்றிப் பெருமானார்

தன் வாழ்நாள் முழுவதும் கல்வியின் சிறப்பையும் உயர்வையும் வற்புறுத்தி வந்த அண்ணலார் அவர்கள் ஒரு சமயம் கூறினார்: ‘கல்வி எங்கிருந்தாலும் அதை முயன்று தேடிப் பெறுபவன் தூய செயல் செய்தவனாவான்: கல்வியின் சிறப்பையும் உயர்வையும் எடுத்துக்கூறி விளக்குபவன் இறைவனின் புகழைப் பாடியவனாவான்: கல்வியை நாடிச் செல்பவன் இறை துதி செய்தவனாவான்; கல்வியைக் கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்; தகுதி மிக்க மக்களிடையே கல்வியைப் பரவச் செய்பவன் இறைவணக்கம் செய்தவனாவான்’ என்பதாகும்.

அது மட்டுமா?

கல்வியாளன் தன் அறிவுத் திறத்தால் இவ்வுலகவாழ்வில் மட்டுமல்லாது மறுமை வாழ்விலும் மாபெரும் சிறப்பைப் பெறும் தகுதியுடைவனாகிறான் என்பதை “அறிவின் துணையால் இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான். உயர்மிகு சிறப்பிடத்தைப்பெறுகிறான்” என நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இறை கட்டளை

மனிதன் கல்வியின் துணை கொண்டு தான் பெற்ற நல்லறிவின் துணையால் உலகில் நல் மாற்றங்கள் எதனையும் நிகழ்த்த வேண்டும் என்பதே இறை விருப்பமாகும் இதையே திருமறை,

“... ஒரு சமுதாயம் (நல்லறிவாலும் நற் செய்கையாலும்) தன்னை மாற்றிக் கொள்ளாதவரை, இறைவனும் அதனை நல்லருளால் மாற்றி விடுவதில்லை” (13:11) என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

இதிலிருந்து நற்சிந்தனைக்கும் நற்செயல்களுக்கும் ஊற்றுக்கண்ணாக— உந்து சக்தியாக விளங்கும் கல்வியின் முக்கியத்துவமும் சிறப்பும் எல்லாவகையிலும் வலியுறுத்தப்படுவது தெளிவாகிறது.

இதிலிருந்து அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக உள்ள அறிவு வளர்ச்சிக்காக இறையருளை வேண்டுவது ஒவ்வொரு நல்லடியாரின் இயல்பாக இருந்தது.“இறைவா! என் அறிவை வளப்படுத்துவாயா! என் அறிவைப் பெருக்குவாயாக!” என்பன போன்ற து ஆக்களை ஒவ்வொரு இறைவேட்டலாக மட்டுமல்லாது தங்கள் இதய நாதமாகவே கொண்டிருந்தார்கள் வல்ல அல்லாஹ்விடம் பெருமானார் அதிகமதிகமாகக் கேட்ட து ஆவும் இதுதான் என்பர்.

கல்வி வளர்த்த நாயகத் திருமேனி

கல்வியின் பயனையும் சிறப்பையும் நன்குணர்ந்த பெருமானார் (சல்) அவர்கள் புதுமையான வழிகளிளெல்லாம் பொது மக்களின் கல்வியறிவை வளர்க்க - வளப்படுத்த வழிகோலினார்கள்.

அக்கால போர் முறைப்படி போரில் தோல்வியடையும் எதிரிப்படை வீரர்கள் வெற்றி பெற்றவர்களால் கைது செய்யப்படுவது வழக்கம்.

பிணைத்தொகை பணமல்ல—படிப்பு

சாதாரணமாகக் கைது செய்யப்படும் போர்க் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டு, கடினமான பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படுவது அக்கால வழக்கம். போர்க்கைதிகள் விடுதலை பெற விரும்பினால் பகரமாகப் பெரும் தொகையைத் தந்துவிட்டு விடுதலை பெறுவர்.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வழக்கமான இம்முறைகளிலும் மாபெரும் புதுமையைப் புகுத்தினார். போர்க் களத்தில் சிறை பிடிக்கப்படும் போர்க்கைதிகளில் கல்வியறிவு பெற்றவர் எவரேனும் இருப்பின் அவர் கல்வியறிவற்ற பத்துப் பேர்களுக்குக் கல்வி கற்பித்தால்,அக்கைதிக்கு விடுதலை கிடைக்கும் என்பதே அப்புதுமை.

இதன் மூலம் கல்வியறிவு பெருகவும் கைதானவர்கள் கல்வி கற்பிக்கும் புனிதப் பணியாற்றுவதன் காரணமாக கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்தப்படவும் வாய்ப்பேற்பட்டது.

சிந்திக்கத் தூண்டும் கல்வி

கல்வியால் பெறும் அறிவின் முழுப்பயனே சிந்திக்கத் தூண்டுவதாகும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டாத எந்தக் கல்வியும் சிறப்புடைய கல்வியாகாது.

சீனாவுக்குச் சென்றேனும் சீர்கல்வி பெறுக!

முறையாகக் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறாத பெருமனார் எத்தனையோ வகைகளில் கல்வியின் பெருமையை, அதன் சிறப்பை, சிந்தைகொள் மொழியில் செப்பியுள்ளார். கல்வின் சிறப்பை, அதனைத்தேடிப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பெருமானாரின் புகழ் பெற்ற பொன்மொழி “சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக!” என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/1&oldid=1637054" இலிருந்து மீள்விக்கப்பட்டது