அறிவியல் பொற்காலம் கண்ட முஸ்லிம்கள்

இதுவரை கூறியவைகளிலிருந்து அறிவியல் துறைகள் அனைத்தின் வளர்ச்சிக்கான அடிப்படைகளை அமைத்த பெருமை முஸ்லிம் அறிவியல் அறிஞர்களை சாரும் என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அறுநூறு ஆண்டுகள் அறிவியல் துறைகளின் பொற்காலத்தை உருவாக்கி,அதைக் கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்து வளர்த்தார்கள் என்பதை அறிவியல் வரலாறு நன்றிப் பெருக்கோடு சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது.

கார்டோபாவில் இயங்கிய மொழிபெயர்ப்புக் கல்லூரி

முஸ்லிம் அறிவியலறிஞர்களின் ஆராய்ச்சிகளையும் அரிய கண்டுபிடிப்புகளையும் விளக்கிக் கூறும் பல நூறு அரபி மொழி நூல்களை லத்தீன் மொழியிலும் ஹீப்ரு மொழியிலும் மொழி பெயர்ப்பதற்கென்றே ஸ்பெயின நாட்டில் கார்டோபாவில் ஒரு மொழிபெயர்ப்பு கல்லூரியே இயங்கி வந்தது என்ற தகவல் அன்றைய ஐரோப்பா முஸ்லிம் அறிவியலாளர்களின் சிந்தனைகளையும் ஆராய்ச்சிகளையும் அறிந்து கொள்வதில் எந்த அளவுக்கு ஆர்வமும் முயற்சியும் கொண்டிருந்தது என்பதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது. கார்டோபா மொழிபெயர்ப்புக் கல்லூரி தொடக்கக் காலத்தில் பாக்தாது நகரில் அப்பாஸியக் கலீஃபாலினால் கிரேக்க அறிவியல் நூல்களை அரபி மொழியில் பெயர்க்க அமைக்கப்பட்ட அறிவு இல்லம் (பைத் அல் ஹிக்மா)வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்து இயங்கியதெனலாம்.

உலக வரலாற்றிலேயே மொழி பெயர்ப்புக்கென தனி அமைப்பை ஆரம்ப காலத்தில் உருவாக்கி அறிவியல் சிந்தனைகளை இறக்கு ‘மதி’ செய்த முஸ்லிம்களே தங்கள் ஆளுகைக்குட்பட்டிருந்த இஸ்லாமிய ஸ்பெயினிலிருந்து ஐரோப்பாவுக்கு தங்கள் அறிவியல் அறிவை ஏற்றுமதி செய்ய மொழிபெயர்ப்பு கல்லூரியையே உருவாக்கினார்கள் எனும் செய்தி எண்ணத்தக்கதாகும்.

அறிவியலை ஆட்கொண்ட ஐரோப்பா

இதன் பின்னரே, ஐரோப்பா தன் இருள் அகற்றி விழிப்புக்கொண்டது. முஸ்லிம் விஞ்ஞானிகள் வகுத்தமைத்த அறிவியல் அடிப்படையில் தங்கள் சிந்தனைகளைச் செலுத்தினார்கள். வணிக நிமித்தம் சென்ற இடங்களிலே அமைத்த காலனி ஆட்சிகள் ஐரோப்பிய நாடுகளை வளங்கொழிக்கச் செய்தன. வணிகத் தேவைகள் வானளாவ உயர்ந்தன. எனவே, தொழிற்புரட்சி தோன்ற வேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையே விஞ்ஞான வளர்ச்சிக்கு வேக முடுக்கியாக அமைந்தது.தங்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்த அறிவியல் துறையை ஐரோப்பியர்களிடம் ஒப்படைத்து விட்டு அமைதி கொள்ளும் சூழ்நிலைக்கு முஸ்லிம் ஆட்சிகளும் முஸ்லிம் அறிவியலாளர்களும் ஆடப்பட்டனர்.

சுமார் அறுநூறு ஆண்டுகள் அறிவியல் சாதனைகள் மூலம் பொற்காலத்தை உருவாக்கி நிலைபெறச் செய்த முஸ்லிம்களின் இத்தகு விஞ்ஞான வெற்றிக்கு அடித்தளமான முக்கிய காரணங்களை அறிவுலகம் நன்கு ஆய்ந்து கூறியுள்ளது.

அண்ணலார் பணிப்பும் அல்குர்ஆன் கட்டளையும்

முதல் காரணம், தொடக்கத்தில் கூறியது போன்று பொருமானார் (சல்) அவர்களும், அவர்கள் வாயிலாக உலகுக்குக் கிட்டிய திருமறையும் அறிவுத் தேடலின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகும்.

இதைக் குறித்து திமிஷ்கு (டமாஸ்கள் ) பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது இஃப் ஜாஸுல்கதீப் கூறுகிறார்,

“சட்டமியற்றுதல் பற்றிப் புனிதத் திருமறையாம் திருக்குர்ஆனில் இருநூற்று ஐம்பது திருவசனங்கள் தாம் உள்ளன. ஆனால், இயற்கை பற்றி ஆராயவும் சிந்திக்கவும் அறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் அறிவியல் ஆய்வுகளை சமுதாய வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி வலியுறுத்தும் திருவசனங்கள் எழுநூற்று ஐம்பது உள்ளன.”

அது மட்டுமல்ல, அகத்துறை பற்றிய ஞானமும் புறத்துறை விஞ்ஞான அறிவும் நிரம்பப் பெற்ற வல்லுநர்களாகிய ஆலிம்களுக்கு இஸ்லாம் உயரிய அந்தஸ்து அளிப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அல்லாஹ்வின் படைப்புத்திட்டத்தையும் அதன் உயரிய மேம்பாட்டுத் தன்மை பற்றியும் உயர்வு குறித்தும் ஆழ்ந்து உணர்ந்து தெளியும் அறிவியலாளர்களை - இறை நம்பிக்கையாளர்களான மூமீன்களை நபிமார்களின் வாரிசுகளுடன் ‘வரதத்துல் அன்பியா ; என்னும் பெருமையும் சிறப்புமிகு அடைமொழி தந்து அண்ணலார் அழைத்துச் சிறப்பிப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆட்சியாளர் அரவணைப்பில் அறிவியல் வளர்ச்சி

அன்றைய முஸ்லிம்களின் அறிவியல் சாதனைகளுக்கு முக்கியக் காரணமாக அமைவது அன்றைய அரசுகளின் போக்கும் அரசை நடத்தியவர்களின் அரவணைப்புமாகும் நாடாண்ட கலீஃபாக்களும் அவ்வப்பகுதிகளை நிர்வகித்தவர்களும் அறிவியல் வளர்ச்சியிலே பேரார்வம் காட்டினார் அதன் வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதில் பெருமையும் பெருமிதமும் கொண்டனர். அதைத் தங்களின் இன்றியமை யாக் கடமையாகவும் கருதினர். ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என்பது போல அறிவியல் துறைகளில் கிட்டுகின்ற வெற்றி இஸ்லாத்துக்குக் கிடைக்கும் வெற்றியாக அப்பணியைக் கருதி மகிழ்ந்தனர். நாட்டின் வளர்ச்சியாகவும் மக்கள் சமுதாய முன்னேற்ற வேக முடுக்கியாகவும் அறியவியல் முயற்சியைக் கருதினர்.

இதைப் பற்றிய புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஹெச் ஏ.ஆர்.கிப் அவர்கள் கூறுகிறார்.

“வேறெங்கும் இல்லாத அளவுக்கு, இஸ்லாத்தினால் அறிவியல்கள் விஞ்ஞானங்களின் மலர்ச்சி - உயர் பதவிகளில் இருந்தோரின் ஆதரவையும் வள்ளல் தன்மையையும் சார்ந்தே இருந்தது. முஸ்லிம் சமுதாயம் வலிமை குன்றியபோது விஞ்ஞான வளர்ச்சி அதன் ஆற்றலையும் வீரியத்தையும் இழந்தது. ஆனால் ஏதாவது ஒரு தலை நகரில் இளவரசர்களும், அமைச்சர்களும் இன்புறு நிலைக்காகவோ, லாபத்துக்காகவோ, அல்லது புகழுக்காகவோ கூட அறிவியல் துறைகளுக்கு ஆதரவு அளித்தபோது அவற்றின் சுடர் ஒளிவீசிக் கொண்டுதான் இருந்தது.”

அனைத்துலகப் பொதுநோக்கும் அறிவியல் வளர்ச்சியும்

அறிவியல் வளர்ச்சியில் முஸ்லிம்கள் முனைப்பான பங்கு கொண்டு விரைவான வளர்ச்சிக்கு வழியமைத்ததில் இஸ்லாமிய நெறிக்கும் அதன் தன்மைக்கும் பெரும் பங்கு உண்டு உலகளாவிய நோக்கில் அமைந்த . ஒப்பற்ற நெறி இஸ்லாமிய நெறி வயலுக்குவயல் வரப்புத் தேவை ஏரிக்கு ஏரி கரை தேவை. ஆனால், வரப்புகளும் கரைகளும் தடுப்புச் சுவர்களாக அமைவதை இஸ்லாம் ஏற்கவில்லை,அதை அறவே வெறுக்கிறது. இதே அடிப்படையில் தான் அன்றைய இஸ்லாமிய அரசுகளும் அமைந்து இயங்கின.அறிவியல் வளர்ச்சியைப் பொருத்தவரை பன்னாட்டு உணர்வோடவே அன்றைய ஆட்சிகளும் செயல்பட்டன. அறிவியல் அறிஞர்களும் ஒருங்கிணைந்து உழைத்துப் பணியாற்றினர்.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய பேரரசாயினும் சிற்றரசாயினும் நாடு. இனம், நிறம். மொழி போன்ற வேற்றுமை உணர்வுகட்கு அப்பாற்பட்டனவாகவே இயங்கின அறிஞர்களிடமும் ஆய்வாளர்களிடம்மும் மிகுந்த தாராளத் தன்மையோடு அன்றைய அரசுகள் நடந்து கொண்டதை வரலாறு சிறப்புற விளக்குகிறது.

மனிதகுல விஞ்ஞான சாதனைகள் ஜார்ஜ் சார்ட்டனின் பகுப்புமுறை

விஞ்ஞான வரலாற்றாசிரியர்களில் மிகப் புகழ்பெற்ற பேரறிஞராக உலகில் விளங்குபவர் ஜார்ஜ் சார்ட்டான் என்பவராவார். இவரது அறிவியல் வரலாற்று நூல்களுள்‘விஞ்ஞான வரலாற்றுக்கு ஒரு முன்னுரை’ (இன்ரடொக்ஷன் டு தி ஹிஸ்டரி ஆஃப் சயின்ஸ் ) என்ற நூல் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.

இதுவரை மனிதர்களால் நிகழ்த்தப் பெற்ற அறிவியல் சாதனைகள் ஒவ்வொன்றையும் அரை நூற்றாண்டு கொண்ட கால கட்டங்களாகப் பகுத்துள்ளார். ஒவ்வொரு அரை நூற்றாண்டு விஞ்ஞான சாதனைகளையும் ஒரு முக்கிய விஞ்ஞானியோடு தொடர்புபடுத்துகிறார்.இவ்வகையில் அவரது விஞ்ஞான சாதனை வளர்ச்சிக்கணக்கெடுப்பு கி.மு. 450-லேயே தொடங்கி விடுகிறது. முதல் கட்டமாக கி.மு. 450 - 400ஐ கிரேக்கப் பெருஞ்சிந்தனையாளர் பிளேட்டோவின் காலமாகக் கணித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஞ்ஞான சாதனைக்காலக் கட்டங்களாக அரிஸ்டாட்டில், யூக்ளிட், ஆர்க்கிமிடிஸ் ஆகியோர் காலங்களாகக் குறிப்பிடுகிறார். அதன் பின் கி.பி 600 முதல் 700 வரையுள்ள காலத்தை சீனா வின் விஞ்ஞான சாதனைக் கால கட்டமாகத் கணித்துள்ளார். இக்காலப் பகுதியில் அறிவியல் சாதனைகளை நிகழ்த்தியவர்களில் தலையாயவர்களாக ஹிஸியன் ஸாங்கி ஐ சிங்க் ஆகிய இருவரின் கால கட்டமாகக் கணித்துள்ளார். இதன் பின்னர் கி.பி. 750 முதல் 1100 வரையிலானகாலப் பகுதியை இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சிக் கால பகுதியாகிய 350 ஆண்டுகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் விஞ்ஞான வளர்ச்சிக்கான காலமாகவே அமைந்துள்ளதை விவரிக்கிறார். இக்காலகட்டத்தில் முஸ்லிம் விஞ்ஞான விற்பன்னர்களாக - அறிவியல் துறைகளின் ஆற்றமிகு தலைவர்களாக ஜாபிர் கவாரிஸ்மி, அர்- ராணி,மஸ்ஊதி. வசபா, அல்பிரூனி, இப்னு சினா, உமர் கையாம் போன்றவர்களைக் குறிப்பிடுகிறார்.

இக்கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டவர்களில் அரபுகள், துருக்கியர்.ஆஃகானியர், பாரசீகர் என முஸ்லிம் இனத்தவர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் அறிவியல் துறையின் பெரும் பிரிவுகளான குறிக் கணக்கியல் (Algepraists), வேதியியல்,இயற்பியல், மருத்துவவியல் பூகோளவியல், கணிதவியல் ,வானலியல் போன்றவற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியவர்களாகப் போற்றப்படுகின்றனர்.

ஜார்ஜ் சார்ட்டனின் இவ்விஞ்ஞான வரலாற்று நூலில் முதன்முறையாக மேனாட்டார் பெயர் கி. பி.1100-க்கு பிறகே குறிக்கப்படுகிறது. கிரிமோனாவைச் சேர்ந்த ஜெரார்ட் ரோஜர், பேக்கர் ஆகியோரின் பெயர்கள் குறிக்கப்பட்டாலும் கூட. அவர்கள் அறிவியலில் பெருஞ்சாதனை எதையும் நிகழ்த்தியவர்களாகக் குறிக்கப்படவில்லை .

அதன் பின்னர் உலகில் அறிவியல் சாதனையாளர்களாகத் தொடர்ந்து முஸ்லிம் விஞ்ஞானிகளும் அவர்களது அறிவியல் சாதனைகளுமே குறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும், அடுத்து வந்த 250 ஆண்டுகளில் அறிவியல் துறையில் அருஞ்சாதனை நிகழ்த்தியவர்களாக இப்னுருஷ்து, நஸிருத்தீன் தூஸீ, இப்னு நபீஸ் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன

அறிவியல் வரலாற்றாசிரியர் ஜார்ஜ் சார்ட்டனின் கணிப்பிலிருந்து கி.பி. 750-லிருந்து கி பி. 1350 வரை சுமார் 600 ஆண்டுக்காலம் அறிவியல் துறை வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க முஸ்லிம்களாலேயே நடைபெற்று வந்துள்ளது என்பது வரலாற்று பூர்வமாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளது தெளிவாகிறது. அதன் பிறகே, முஸ்லிம்களின் அறிவியல் கண்டுபிடிப்புச் செய்திகள் லத்தீன், ஹிப்ரு மொழி பெயர்ப்புகள் மூலம் ஐரோப்பாவெங்கும் பரவியபின் ஐரோப்பியர்கள் இதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது புலனாகிறது.

“ஞானம் எங்கிருந்தாலும் அதை ஏற்று எடுத்துக்கொள்வது பற்றி நாம் வெட்கப்பட வேண்டியதில்லை மாறாக அது தான் பொருத்தமானது. உண்மையைத் தேடுவோருக்கு அதை எய்துவதைவிட உன்ன தான இலக்கு வேறெதுவுமில்லை. தன்னைத் தேடுபவனை சத்தியம் என்றுமே இழிவுபடுத்துவதில்லை” என்று புகழ் பெற்ற முஸ்லிம் அறிஞர் அல் கிந்தீ ஆயிரத்து நூழு ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க கருத்துரையாகும். இந்த உணர்வும் சிந்தனையும் முஸ்லிம்களின் அறிவியல் முயற்சிகளுக்கு ராஜ பாட்டையாக அமைந்தது. தாங்கள் புத்தறிவைத் தேடிப் பெறுவதில் மிகுந்த நாட்டம் செலுத்தியதைப் போன்றே 'தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பொருள் மொழிக்கொப்ப தங்களது விஞ்ஞான அறிவியல் சாதனைகளை மேனாட்டிற்கு வழங்கவும் முஸ்லிம்கள் தவறவில்லை.

முஸ்லிம் அறிவியல் வளர்ச்சியில் தேக்கமும் - வீழ்ச்சியும்

பெருமானார் (சல்) காலம் தொடங்கி விரைவு நடைபோட்டு, பின்னர், மின்னல் வேக வளர்ச்சி பெற்ற அறிவுதேடல் முயற்சி. அறிவியல் தேட்டமாக வலுப்பெற்று.எண்ணற்ற விஞ்ஞான விந்தைகளை உலகுக்களித்து உலகின் போக்கையே முற்றாக மாற்றியமைத்த அறிவியல் முயற்சியில் திடீரென ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளால் இத்தேக்க நிலை நலிவாக உருமாறி மாபெரும் சரிவுக்கு வழியாயமைந்துவிட்டது. கி.பி. 1100இல் தொடங்கிய இச்சரிவு கி.பி.1350 வாக்கில் முற்றாக நலியும் நிலை ஏற்பட்டது.

இதற்கு முழு முதற்காரணமாக அமைந்தது இஸ்லாமிய நாடுகள் மீது நடத்தப்பட்ட மங்கோலியப் படையெடுப்பாகும். மங்கோலிய மாமன்னன் செங்கிஸ்கானின் படையெடுப்பு மக்களின் வாழ்க்கைப் போக்கைப் பெரிதும் தடம் புரளச் செய்தது அறிஞர்கள், விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நிலை குலைந்தன. அரசு ஆதரவு என்பது அடியோடு இல்லாத நிலையில், அதுவரை முஸ்லிம் விஞ்ஞானிகள் பெற்றிருந்த அறிவியல் சாதனைகள் பழங்கதையாக மாறத் தொடங்கின. மத்திய கிழக்கு நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனைக்கு மேல் சாதனைப் படைத்து, அங்கிருந்து அவை முஸ்லிம் ஸ்பெயினை அடைந்து, அங்கு அவை அழுந்தக் காலூன்றி வளமடைந்து பூரணமாய் மலர்ந்து மணம் வீசும் தருணத்தில் சிலுவைப் போரின் காரணமாக முஸ்லிம்களின் ஆட்சியுரிமைகள் அடுத்தடுத்து அகற்றப்பட்டன. தங்களின் விஞ்ஞானப் பேரறிவை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்த முஸ்லிம் அறிவியலாளர்கள் இருந்ததையெல்லாம் இழந்தவர்களானார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/10&oldid=1637069" இலிருந்து மீள்விக்கப்பட்டது