அண்ணலாரும் அறிவியலும்/11
ஐரோப்பாவின் எழுச்சியும் விரைந்து எழுந்த தொழிற்புரட்சியும்
முஸ்லிம்களிடமிருந்த விஞ்ஞான அறிவை லத்தீன்,ஹீப்ரு மொழிகள் வாயிலாகப்பெற்ற ஐரோப்பியர் அவற்றை அடித்தளமாகக் கொண்டு விரைவான ஆய்வு முயற்சி மூலம் பல அறிவியல் விந்தைகளை உருவாக்கினர்.அவற்றைத் தொடர்ந்து கல்வியில் முனைப்பும் தொழிலியல் வளர்ச்சியில் விரைவுத் தன்மையும் உருவாக்கியது தவிர்க்க முடியாதாகியது.
இதன் மூலம் ஐரோப்பாவில் கால் கொண்ட தொழிற்புரட்சியும் அதன் விளைவாக உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் உருவான ஐரோப்பிய காலனி ஆதிக்கமும் முஸ்லிம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகவும் குந்தகமாகவும் ஆயின. ஆட்சியுரிமை இழந்த மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு சில மட்டும் பெயரளவுக்கு முஸ்லிம் ஆட்சிகளாக இருந்த போதிலும் அறிவியல் உணர்வோ சிந்தனையோ அதன் வளர்ச்சியில் நாட்டமோ அவ்வாட்சியாளர்கள் கொண்டிருக்கவில்லை
மேற்கண்ட அரசியல் காரணங்களன்னியில் வேறு சில சமுதாயக் காரணங்களும் கூட முஸ்லிம் விஞ்ஞான தொடர் வளர்ச்சிக்குப் பெருந்தடைகளாயின. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சில இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் முஸ்லிம்கள் முனைப்போடு வளர்ந்து வந்த விஞ்ஞான வளர்ச்சிப் போக்கைப் பாராட்டாதது மட்டும் மல்ல, அவை இஸ்லாமிய நெறிக்கு உகந்ததில்லை எனப் பிரச்சாரமும் செய்யலாயினர் அவர்கள் அக்காலத்தில் பெற்றிருந்த புகழும் சமுதாய அந்தஸ்தும் இவர்கள் கருத்துக்களுக்கு முஸ்லிம் மக்களிடையே எதிரொலிப்பு ஏற்படுத்தத் தவறவில்லை .
இதற்கு உலகப் புகழ் பெற்ற வரலாற்று மேதையான இப்னு கல்தூன் ஆன்மீகச் செல்வர் அல் கஸ்ஸாலி போன் றவர்கள் முஸ்லிம்களின் விஞ்ஞான முயற்சி பற்றிக்கொண்டிருந்த எண்ணங்களையும் கருத்துரைகளையும் சான்றாகக் கூறலாம். இப்னு கல்தூண் (1332-1406) தனது புகழ்பெற்ற ‘முகத்தமா’ (வரலாற்றுக்கு முன்னுரை) என்ற நூலில் கூறுகிறார்:
“பரங்கியர் நாட்டிலும், மத்திய தரைக் கடலின் வடகரைகளிலும் அறிவியல் துறைகள் ஆழ்ந்து பயிலப்படுவதாக அறிகிறோம். பல வகுப்புகளிலும் அவை விரிவாக விளக்கப்படுவதாகவும், பலர் அவை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றும், அவற்றைப் பயிலும் மாணவர்கள் மிகப் பலர் என்று கூறப்படுகின்றது உண்மை நிலையாது என்பதை அல்லாஹ்வே அறிவான். ஆனால், நம்முடைய மார்க்கவியலில் இயற்பியல் முக்கியமல்ல; எனவே நாம்அதை விட்டு விடலாம்.”
இப்னு கல்தூன் போன்ற இஸ்லாமிய வரலாற்று மேதைகள் முஸ்லிம்களின் விஞ்ஞான வெற்றிகளைப் பாராட்ட முன் வராததோடு அது இஸ்லாமிய மார்க்கக் கொள்கை,கோட்பாட்டிற்கு உகந்தது அல்ல என்பதை இலைமறை காயாக பிரச்சாரம் செய்யத்தவறவில்லை இத்தகைய இஸ்லாமிய விஞ்ஞான எதிர்ப்புணர்வு பொது மக்களிடையேயும் அறிஞர்களிடையேயும் ஆட்சியினரிடையேயும் ஆர்வமின்மையையும் ஒருவிதத் தொய்வையும் புறக்கணிப்பையும் உருவாக்கி விட்டன எனலாம்.
இதன் விளைவாக முஸ்லிம்கள் விஞ்ஞானத் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கினர். தாங்கள் அறிவியல் துறையிலிருந்து ஒதுங்கியதோடமையாது மேலை உலகில் விரிந்து வளர்ந்து வந்த விஞ்ஞானப் போக்கோடு தங்களுக்குள்ள தொடர்புகளையும் காலப்போக்கில் துண்டித்துக் கொள்ளலாயினர். இவ்வாறு அறிவியல் துறையில் புதியன புனைந்து பேராற்றலோடு எழுந்து நின்ற மேலை உலக விஞ்ஞானத்தோடு இஸ்லாமிய அறிவியல் தொடர்பு அறுந்த நிலையில் தனித் திட்டாகி முழுமையாக பலமிழந்து நலியலாயிற்று.
காலனி ஆதிக்க முடிவும் முஸ்லிம் அறிவியல் எழுச்சியும்
காலப் போக்கில் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.அடிமைப்பட்டிருந்த பல முஸ்லிம் நாடுகள் தன்னாட்சியுரிமை பெற்றன. அடிமைப்பட்டிருந்த முடியாட்சிகள் மீண்டும் அரசுரிமை பெற்று தம் போக்கில் இயங்கலாயின.முழு விடுதலை பெற்ற இஸ்லாமிய முடியரசுகளில் குடியாட்சிகள் எழலாயின. எனினும், அவை ஆட்சித் துறையிலும் சமுதாய வளர்ச்சி நிலையிலும் பல மாற்றங்களைக் கண்ட போதிலும் விடுபட்டுப் போன முஸ்லிம் அறிவியல் வளர்ச்சியில் மீண்டும் பழைய வரலாற்றோடு இணையவோ. அத்தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை .
எழுச்சி பெறும் இஸ்லாமிய அறிவியல் போக்கு
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பல எண்ணெய் வளத்தால் பொருளாதாரத் துறையில் மிகுந்த வளமுடையனவாகத் திகழ்ந்த போதிலும் அவை மேலை உலகின் அறிவியல் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் காட்டுகின்ற நாட் டத் தில் கால் சதவிகிதம் கூட தங்கள் சொந்த அறிவியல் வளர்ச்சியில் நாட்டம் செலுத்த முயற்சி மேற்கொள்ள விழையவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு கசப்பான உண்மை. தங்கள் சொந்த நாட்டு மக்களிலிருந்து அறிவியல் வல்லுநர்களை உருவாக்குவதற்கான சிந்தனையிலோ முயற்சியிலோ அண்மைக் காலம்வரை நாட்டம் செலுத்தவில்லை என்றே கூற வேண்டும். அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளமான அடிப்படை விஞ்ஞான அறிவை தம் நாட்டு இளைஞர்கட்கு அளிக்கவோ அல்லது தன்னாட்டில் அடிப்படை விஞ்ஞான அறிவை முறையாகப்பெற்று ஆய்வு செய்ய விழையும் அறிவியல் வல்லுநர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவோ முன் வருவதில்லை இதன் விளைவாக அறிவியல் வல்லுநர்களாகும் முஸ்லிம் விஞ்ஞானிகள் நோபெல் பரிசு பெற்ற பாகிஸ்தான் நாட்டு அப்துஸ்ஸலாம் போன்ற இயற்பியல் மேதைகள் அமெரிக்க போன்ற நாடுகளில் வாழ்ந்து, அங்குள்ள அறிவியல் சோதனை கள மேம்பாட்டு வசதிகளைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அருஞ்சாதனை புரிய நேர்கிறது.
எனினும். இன்று இஸ்லாமிய நாடுகளில் அறிவியல் வளர்ச்சியைப் பொருத்தவரை ஒரு புதிய எழுச்சி உருவாகியுள்ளது. இஃது இஸ்லாமிய அறிவியல் மறுமலர்ச்சிக்கு வழிகோலும் என்ற நம்பிக்கையும் அழுத்தமாக எழுந்துள்ளது.
மேலை நாட்டு அறிவியல் அறிவை மட்டும் மேனாட்டு ஆட்கள் மூலம் பயன்படுத்தி வந்த இஸ்லாமிய அரசுகள் ,இன்று தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கட்கு அடிப்படை அறிவியல் அறிவைக் கற்பிக்கவும், தேர்ந்து வருபவர்கட்கு உயர் அறிவியல் அறிவை அளிக்க மேனாட்டுக்கு அனுப்பியும் அறிவியலாளர்களைப் பெருமளவில் உருவாக்கும் முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இத்தகைய முயற்சியின் விளைவாக அறிவியல் அறிவாற்றல் மிக்கவல்லுநர்களின் தொகை பெருகி வருகிறது. இதற்கு நாட்டு அளவிலும் பன்னாட்டு அளவிலும் அறிவியல் வளர்ச்சிக்கான அமைப்புகளை உருவாக்கியும் செயல் திட்டங்கள் வகுத்துச் செயலாற்றியும் வருகிறது. முஸ்லிம் விஞ்ஞானிகட்கு வாய்ப்பளித்தால் தனித்துவமுள்ள தங்கள் திறமையை வெளிப்படுத்தி அருஞ்சாதனை நிகழ்த்திக் காட்டமுடியும் என்பதற்கு இந்திய விண்வெளி ஆய்வுத் திட்ட இயக்குநராகத் திகழும் ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே தக்க சான்று தமிழ்நாட்டிலுள்ள இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இவர் இன்று ஏவுகணைத் திட்ட பிதாமகனாகத் திகழ்கிறார்.இரண்டாயிரம் கிலோமீட்டர் பாய்ந்து சென்று தாக்கவல்ல ‘பிரித்வி’ ஏவுகணைத் திட்ட வெற்றிக்கு இவரே மூலவராகவும் இன்று விளங்குகிறார்.
இன்று இஸ்லாமிய நாடுகளில் சில. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் பெரும் கவனம் செலுத்தத் துவங்கியதன் விளைவாக மின்னல் வேக வளர்ச்சி பெற்று வருகின்றன. நவீன ஆயுதங்களுக்காக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை நம்பியிருந்த நிலை இன்று வெகுவாக மாறிக்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் ஈராக், ஈரான், லிபியா போன்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பு வரை தங்கள் அறிவியல், தொழில் நுட்பத் திறனை வளர்த்துக்கொண்டு வருகின்றன. எழுச்சி பெற்றுள்ள இவ்விஞ்ஞான முன்னேற்றம் மக்களின் நல்வாழ்வையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்பதே அனைவரின் வேணவா . இதே உணர்வில் தான் அன்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அறிவுத்தேடலின் மூலம் அறிவையும் அறிவியல் உணர்வையும் பெறத் தூண்டினார்கள் என்பதை கருத்திலிறுத்திச் செயல்படுவோமாக!
இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கான ஆழமான அடித்தளங்களை அன்றைய முஸ்லிம்கள் அழுத்தமாக அமைத்துச் சென்றுள்ளார்கள் அதற்கு அடிப்படைக்காரணம் அண்ணலாரின் அறிவுத்தேடல் பணிப்பும்,இஸ்லாமிய மார்க்கம் அறிவியல் பூர்வமான மார்க்கமாகஅமைந்திருப்பதுமே யாகும்.