சீனா செல்லப் பணித்தது ஏன்?

அக்காலத்தில் அரேபியாவிலிருந்து சீனா நாடு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நினைத்துப் பார்க்கவியலா இடர்பாடுமிக்க பயணமாகும். பாலைவனங்கள் பலவற்றைக் கடக்கவேண்டும். மலைகள் பல ஏறி இறங்க வேண்டும். காடுகளையும் வனாந்தரங்களையும் கடந்து செல்ல வேண்டும். குறுக்கிடும் ஆறுகளைக் கடப்பதோடு, பரந்து விரிந்து காணும் கடல் நீர்ப் பரப்புகளையும் தாண்டிச் செல்ல வேண்டும். இவ்வளவு தொலை வையும் தொல்லைகளையும் கடந்தாவது சீனம் சென்று சீர் கல்வி பெறுவதில் கருத்தூன்ற வேண்டும் எனப் பெருமானார் கூறியதாகக் கொள்கின்றோம். இதைக் கல்வியின் பெருமைக்குக் கட்டியங் கூறும் அறைகூவலாக எண்ணி மகிழ்கிறோம்.

ஆனால், நாம் சற்று ஆழ்ந்து சிந்திக்கும்போது வெறும் தொலைவையும் தொல்லைகளையும் மட்டும் மனதிற் கொண்டா பெருமானார் இக் கருத்தைக் கூறியிருப்பார்? என்ற கேள்வி நம் முன் எழவே செய்கிறது.

அத்தகைய உணர்வில், கருத்தில்தான் பெருமானார் அவ்வாறு கூறியிருந்தார் என்றால் அதே தொலைவில் இருந்த வேறு சில புகழ்பெற்ற நாடுகளுக்கும் கல்வி கற்கப்போகச் சொல்லியிருக்கலாமே! இஸ்லாத்தின் நறுமணம் எப்போதும் வீசிக்கொண்டிருப்பதாகக் பெருமானார்(சல்) அவர்களால் அடிக்கடி புகழப்பட்ட இந்தியாவுக்குச் செல்லுமாறு பணித்திருக்கலாமே!

ஏன் அவ்வாறு சொல்லவில்லை?

இன்னும் ஆழ்ந்து நோக்கின் அக்காலத்தில் கலைகளின் வளர்ப்புப் பண்ணையாக, நாகரிகத்தின் தொட்டிலாகப் புகழ்பெற்று விளங்கிய ‘மிஸ்ர் நாடு’ என அழைக்கப்பட்ட எகிப்து நாட்டிற்குச் சென்று ‘சீர் கல்வி பெறுக! என ஏன் பணிக்கவில்லை?

அன்று தத்துவச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த உறைவிடமாகத் திகழ்ந்த கிரேக்க நாடு சென்று ‘சீர் கல்வி பெறுக!’ எனக் கூறியிருக்கலாமே! ஏன் அண்ணலெம்பெருமானார் அவ்வாறு கூறவில்லை?

சீன நாட்டை மட்டும் சீர் கல்வி பெறத்தக்க சிறப்பிடமாகப் பெருமானார் அவர்கள் தேர்ந்தெடுத்ததற்குச் சிறப்புக் காரணங்கள் ஏதேனும் இருக்கலாமே?

இந்த வினாவுக்கு விடை காணும் முயற்சியில் முனைப்புக் காட்டும்போது தான் பெருமானார் (சல்) அவர்கள்‘சீர் கல்வி பெற’ ஏன் சீனாவைச் சிறப்பிடமாகத் தோந்தெடுத்தார் என்ற பேருண்மை புலனாகிறது.

அறிவியல் அறிவு பெற விரைவீர் சீனம்

நாயகத் திருமேனி வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் தத்துவச் சிந்தனைகளால் சிறப்புற்ற நாடுகள், கலை வளர்ச்சியில் இமயமென எழுந்து நின்ற நிலப் பகுதிகள், நாகரிக வளர்ச்சியில் வியக்கத் தக்கச் சிறப்புக் கொண்ட நாடுகள், பண்பாட்டின நிலைக்களனாகத் திகழ்ந்த நாடுகள் பல உலகில் இருந்த போதிலும் துரிதமான அறிவு வளர்ச்சிக்கு விறுவிறுப்பும் ஊட்டவல்ல புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் அன்று சீன நாட்டில் மட்டுமே வியக்கத்தக்கஅளவில் நிகழ்ந்து வந்தன. புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, அறிவியல் வளர்த்து வந்த நாடக சீனநாடு விளங்கி வந்தது. அச்சுக்கலை தோன்றிய நாடு

விரைந்து அறிவைப் பரப்பும் அருஞ்சாதனமான அச்சுக் கலைத் தொடர்பான அனைத்துக் கண்டுபிடிப்புகளும் அந்நாட்டிலேதான் கால் கொண்டிருந்தன பாள அச்சுமுறை அங்கேதான் உருவாக்கப்பட்டிருந்தது. எழுதுவதற்குதவும் தான் செய்யும் தொழில் நுணுக்கமும் இந்நாளில சீனர்களாலேயே கண்டறியப் பட்டிருந்தது. அச்சிடுவதற்கான மையும் எழுதுகோல் கொண்டு எழுதுவதற்கான மசியும் அந்நாட்டிலேதான் உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வாறு துரிதமான அறிவு வளர்ச்சிக்கு, கல்விப் பெருக்கத்துக்கு ஆதாரமான அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஒருசேர சீனாவில் உருவாக்கப்பட்டதனால உலக அறிவு வளர்ச்சிக்கான ஆதார சுருதியாக அந்நாடு பெருமானாரால் கண்டறியப்பட்டது.

மருத்துவப் புதுமை பொலிந்த நாடு

அறிவுத்துறை வளர்ச்சிக்கு மட்டுமல்லாது உடல்துறைக்கான பலவகையான மூலிலை மருந்துகளும் ‘அக்குபஞ்சர்’ என்று உலகினரால் இன்று வழங்கப்படும் ‘ஊசிகுத்தல்’ மருத்துவமுறையும் அன்றே அங்கு உருவாக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு புதியன புனையும் அறிவியல் அறிவு வளரவும் வளம் பெறவும் அங்கு வாய்ப்பேற்பட்டிருந்ததனால் தான், அறிவு வேட்கை மிக்க ஒவ்வொருவரும், எப்பாடுபட்டேனும் சீனம் சென்று சிறப்பான கல்வியறிவு பெறமுயல்வேண்டும் என அவாவினார் பெருமானார் அவர்கள்.சீன நாட்டைக் குறிப்பாகக் கூறியிருந்தாலும் புதிய புதிய ஆய்வறிவு எங்கெல்லாம் கிடைக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று புத்தறிவு பெற்று வருக என்பதே அண்ணலாரின் அன்றைய அறைகூவலாகவும் இருந்தது. இதன்மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் எப்போதும் அறிவு வேட்கை மிக்கவர்களாக புத்தறிவைச் சேகரித்து, அதன் அடிப்படையில் ஆய்வுச் சிந்தனையுடையவர்களாக விளங்கவேண்டும் என்பதே பெருமானாரின் உள்ளக் கிடக்கையாகும்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே உன்னதமான சிறப்புத்தன்மை பெற்றவன் மனிதன். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத அம் மாபெரும் சிறப்பே சிந்தனையாற்றல்; பகுத்தறியும் பண்பு; ஆய்வுத் திறன் என்பதை முன்பே கூறினோம்.

அளவிட இயலா மனிதத் தேவை

மனிதனைத் தவிர்த்து மற்றைய உயிரினங்களின் தேவை மிகமிகக் குறைவானவைகளாகும். உண்ண உணவு, இருக்க இடம், இனப்பெருக்க முயற்சி இவற்றைத் தவிர வேறு பெரிய தேவைகள் அவற்றிற்கு ஏதும் இல்லை.அத்தேவைகளையும் கூட வெகு எளிதாக அவை பெற்றுப் பயனடையும் வகையில் அவற்றின் கண்ணெதிரிலேயே காணும் வண்ணம் அவற்றை இறைவன் கொடுத்துள்ளான். சிறிதளவு முயற்சியும் உழைப்பும் இருந்தாலே போதும். அவற்றை எளிதாகப் பெற்று பயன் துய்க்க இயலும். சான்றாக, ஆடு, மாடு போன்றவைகட்குத் தேவையான தழையையும் புல்லையும் அவை பார்க்கும் படியாகவே படைத்துள்ளான். உண்டு முடித்தபின் ஓய்வெடுக்கத் தேவையான மரநிழலையும் கண்ணெதிரிலேயே காட்டியுள்ளான் இறைவன் பிற பிராணிகள், விலங்குகளின் நிலையும் இதுவேயாகும்.

மறை பொருளாக உள்ள மனிதத் தேவை

மனிதனின் தேவைக்காக எண்ணிடலங்கா தவற்றை இறைவன் படைத்துள்ள போதிலும் அவற்றை. பிற உயிரினங்களுக்கு கண் முன்னால் காட்டியிருப்பது போல் வெளிப்படையாகப் படைத்தளிக்கவில்லை. அவற்றை வல்ல அல்லாஹ் மறைபொருளாகவே படைத்தளித்துள்ளான். அவை மண்ணிலும் விண்ணிலும் கடலிலுமாக அமைந்துள்ளன. அவற்றையெல்லாம் அவன் தானாகவே, தன் அறிவாற்றல் மூலம் கண்டறிந்து துய்த்து மகிழ வேண்டும் என்பதுதான் இறைநாட்டம். அம் மறை பொருட்களைக் கண்டறிந்து துய்க்கும் வழிமுறையாகத் தான் சிந்திக்கும் ஆற்றலும் ஆராய்ந்து காணும் அறிவுத்திறனும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன.அதன் துணைகொண்டு, ஆய்வு செய்து இறைவனால் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளவற்றைப் தேடிப்பெற இறைவனின் படைப்புகளைப் பற்றிய ரகசியங்களை அறிய — சிந்தனை செய்ய — இடையறா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இறைகட்டளை இதற்காக அவன் மேற்கொள்ளும் ஒரு விநாடி சிந்தனை — முயற்சியானது எழுபதாண்டுத் தொழுகைகுச் சமம் எனப் பெருமானார் கூறியிருப்பதிலிருந்து. மனிதன் அல்லாஹ்வின் படைப்பு ரகசியங்களை அறிந்துகொள்ள இடைவிடா முயற்சி மேற்கொள்ளவேண்டியது மிக மிக அவசியம் என்பது புலனாகும்.

அகம் புறம் வளர்க்கும் மதரஸா

இவ்வாறு அண்ணலாரும் அவரது வாழ்வும் வாக்கும் வல்ல அல்லாஹ்வின் திருமறையாம் திருக்குர்ஆனும் எல்லா வகையிலும் இறைவனுடைய படைப்பு ரகசியங்களை அறிந்து கொள்ள ஆர்வப் பெருக்கோடு மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவதாகவே உள்ளது. இதன் காரணமாகவே மறை பயிற்றும் மதரஸாக்கள் அக வளர்ச்சிக்கு அடித்தளமாக மட்டும் அமையாது புற வாழ்வு முன்னேற்றத்துக்கான ஆய்வுக்களமாகவும் அமையலாயிற்று. ஆன்மீக உணர்வோடு வாழ்வின்அனைத்துத் துறைகளைப் பற்றிய அறிவைப் பெறும் நிலைக்களமாகவும் மதரஸாக்கள் விளங்கலாயின. இதற்கேற்ப நூலகங்களையும் ஆராய்ச்சிக்கூடங்களையும் உள்ளடக்கிய அறிவுப் பூங்காவாக — ஆய்வுக்களமாகமதரஸாக்கள் மாறலாயின. இத்தகைய இஸ்லாமிய மதரஸாக்கள் இல்லாத கிராமமோ நகரமோ இல்லை எனக் கூறும் வகையில் பள்ளி வாசல்கள் தோறும் மதரஸாக்கள் உருவாயின அக வாழ்வுச் செழுமைக்கு இறை வணக்கமும் புறவாழ்வுச் சிறப்படைய ஆய்வறிவும் ஒருங்கிணைந்து பெற இறையில்லங்கள் வழியாயமைந்தன.

எகிப்து கண்காட்சி காட்டும் உண்மை

நான் அண்மையில் எகிப்து நாடு சென்றிருந்தேன்.அப்போது அங்கே இஸ்லாமியப் பண்பாட்டை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இஸ்லாம் எழுச்சி பெற்ற காலத்தில் இருந்த சூழலை அப்படியேபிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் ஒழுங்குபடுத்த சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு விரிவாக அமைக்கப்பட்டிருந்த காட்சிக் கூடங்களில் ஒன்று அன்றைய மதரஸா அமைந்திருந்த நிலைமையைக் காட்டும் காட்சிக்கூடம் அதில் உயர்ந்த மேடையொன்று பாடம் புகட்டும் உஸ்தாத் (ஆசிரியர்) அமர்விடமாக அமைக்கப்பட்டிருந்தது அவர் முன்பாக மாணவர்கள் வளைவட்ட வரிசையாக அமர்ந்து பாடங்கேட்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடத்தின் ஒரு புறத்தில் (மாணவர்கள் படித்துப் பயனடைய அருமையான நூலகப் பகுதி ; அக் கூடத்தின் மற்றொரு புறத்தில் ஆய்வுக்கூடம். இத்தகைய சூழலைக் காணும் போது அக்கால மதரஸாக்கள் மார்க்கக கல்வியை மட்டும் வழங்காது வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துக் கல்வியையும் அறிவையும் அளிக்கும் அறிவாலயமாகவே விளங்கி வந்ததை அறிந்தபோது அளவிலா உவகை கொண்டேன், ஆய்வுக்கூடமும் அதற்கு உறுதுணையான நூலகப் பகுதியும் அன்றைய கல்வின் நோக்கத்தையும் அதை முழுமையாகப் பெறும் சூழலையும் உருவாக்கியிருந்த பாங்கையும் அறிந்தபோதுதான் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் திறம்பட்ட மார்க்க அறிவையும் அறிவியல் ஆய்வுகளையும் முன்னைப்புடன் கற்பித்து. உலகின் மிகப்பழமையான, அதே சமயம் உயிர்ப்புத்திறன் குன்றாத ஒரே பல்கலைக்கழகமாக விளங்கி வரும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பெருமை எனக்குத் தெளிவாகியது.

அறிவியல் கண்ணோட்டம் ஜூம்மா உரை

நான் கெய்ரோவில் தங்கியிருந்த சமயம் ரமலான் மாதமாக இருந்தால் ஒரு வெள்ளிக்கிமை ஆயிரமாண்டுக்கால அல் அஸ்ஹர் மசூதியில் ஜும்மா தொழுகை தொழவிரும்பிச் சென்றேன், என்னை அழைத்துச் சென்ற அரபு நண்பர் மூலம் தொழுகை நடத்தியவர் ஆற்றிய ஜூம்மா பேருரையின் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது திருமறைச் செய்திகளை பெருமானாரின் வாக்கின் அடிப்படையில் அறிவியல் கண்ணோட்டத்தோடு விளக்குவதாயிருந்தது அப்பேச்சு.

அறிவியல் தெளிவும் உணர்வும் ஒளிவிட, உலகப்போக்கை திருமறை தரும் இறைச் செய்திகளோடு இணைத்துப் பேசி அண்ணலாரின் வாழ்க்கைவழியே வந்திருந்தோருக்கு இதமாக எடுத்துக்கூறிய அந்த மார்க்க மேதையின் அறிவாற்றலும் வாக்குச் சாதுரியமும் வியப்பூட்டுவதாயிருந்தது. அதன் பின் அப்பள்ளிவாசலோடு இணைந்திருந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பி நண்பரோடு சென்றேன்.

ஆயிரத்து இரு நூறு ஆண்டுக்கால அல் அஸ்ஹர் பல்கலைக் கழகம்

உலகிலேயே மிகப் பழம்பெரும் பல்கலைக் கழகமாக இன்று விளங்குவது எகிப்திலுள்ள அல் அல்ஹர் பலகலைக் கழகமாகும். இஃது ரமலான் ஹிஜ்ரி 361 (கி. பி.972 ஜூ 22இல்) உருவாக்கப்பட்டது இஸ்லாமிய ஞானஅமுது வழங்கும் கற்பக தருபோல் விளங்கி ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக லட்சக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களுக்கு இஸ்லாமிய ஞானப்பால் ஊட்டி வளர்த்து வந்த தீன் நெறிக் களமாகும். ஆன்மீக சுடர் பரப்பி வரும் அப் பல்கலைக் கழகத்தின் இன்றைய நிலையை அறியும் உள்ளத் துடிப்புடன் பல்கலைக் கழக வளாகத்துள் புகுந்தேன். பல்கலைக் கழகத்தைச் சுற்றிப்பார்த்தபோது எனக்குப் பல உண்மைகள் புலனாயின.

ஆன்மீகமும் அறிவியலும் இணைந்துள்ள எழிற்காட்சி

மசூதியுடன் இணைந்தே மதரஸாக்கள் உருவாயின் என்பதற்கு இணையற்ற, பண்டைய எடுத்துக்காட்டாக இன்றும் எழிலுடன் விளங்குவது அல் அஸ்ஹர் பல்கலைக்கழகமாகும். அக வளர்ச்சிக்கு அடிப்படையான மார்க்கஅறிவு. வாழ்க்கை நெறி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றோடு புற வாழ்வின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஆதாரமான கட்டிடக்கலை, பொருளியல், அறிவியல் சார்ந்த பல்துறை அறிவை வாரி வழங்கும் சிந்தனை ஊற்றாகவும் பன்னெடுங்காலம் பணியாற்றி வந்துள்ள அப்பல்கலைக் கழகத்தில் பாதம் பதித்து நடக்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது, ஆன்மீகத்தையும் அறிவியலையும் இரு கண்களாகக் கொண்டு இன்றும் தன் பணியை வலுவோடும் வனப்போடும் தொடரும் வியப்பூட்டும் பாங்கு வியக்க வைப்பதாயிருந்தது. அரசியல் மாற்றங்களால் எகிப்து நாடு பன்முறை அலைக்கழிக்கப்பட்ட போதிலும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் தன் பணியை கருமமே கண்ணாயினராகத் தொடர்வது ஒருவகையில் உலக அதிசயமாகவும் தோன்றியது. தன் அடிப்படை நோக்கத்திற்குக் குந்தகம் ஏற்படா வண்ணம் காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப பற்பல புதிய புதிய துறைகளை உருவாக்கிக் கொண்டே தொடர்கிறது இப்பல்கலைக் கழகம்

பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய்

பல்கலைக் கழக வளாகத்தில் புதிது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பல்கலைக் கழக கட்டிடங்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு துறைகளின் எண்ணிக்கை என்னை வியக்கச் செய்வதாயிருந்தது. ஆயிரமாண்டுக்கால பழமையும் இன்றைய புதுமையும் கைகோர்த்து நிற்பதைக் கண்டு யாரும் வியக்காமலிருக்க முடியாது.

அன்று இட்ட அடித்தளம்

இன்று அறிவியலில் எத்தனை துறைகள் உண்டோ அத்தனை துறைகளும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய நெறியோடு இணைத்துக் கற்பிக்கப்படுகின்றன என்றால் இத்துறைகளுக்கான அடித்தளக் கரு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக இந்த இஸ்லாமியப் பல்கலைக்கழத்தில் இருந்து வருவதன் விளைவுதான் என்பதில் என்ன ஐயம்?

அறிவியல் மார்க்கமே இஸ்லாம்

இஸ்லாம் அறிவியல் அடிப்படையைக் கொண்டமார்க்கமாக இருப்பதும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாகும். இஸ்லாம் ஆன்மீக அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்ற கருத்துணர்வையே அண்மைவரை மேலை அறிவுலகம் கொண்டிருந்தது. ஆனால், இன்று இஸ்லாத்தின் அடித்தளப்பண்பை அறிந்துணரும் அறிஞர் பெருமக்கள் அறிவியல் மார்க்கமாகவே இஸ்லாத்தைக் காண முனைந்துள்ளனர். இதற்கான விளக்கங்களையும் ஆதாரபூர்வமாகத் தந்து சிந்திக்கத் தூண்டி வருகின்றனர்.

ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ அறிஞரான டாக்டர் மாரிஸ்புகைல், இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த டாக்டர் அலிசன், அமெரிக்காவைச் சேர்ந்த கணிப்பொறி விஞ்ஞானி மைக்கேல் ஹெச்.ஹார்ட் போன்றவர்களெல்லாம் அண்ணலாரின் வாக்கமுதும் திருமறை தரும் இறைமொழியும் இன்றைய அறிவியல் உண்மைகளை உலகுக்குணர்த்துவதோடு நாளைய அறிவியல் வளர்ச்சிகள் இஸ்லாத்தின் மேன்மையை, உன்னதத்தை உலகுக்குத் திறம்பட உணர்த்தவிருக்கின்றன என்பதைத் தெளிவாக்கும் நூல்களை ஆராய்ச்சி அடிப்படையில்,அசைக்க முடியாத சான்றுகளோடு எழுத்துருவில் தந்து உலகைச் சிந்திக்கத் தூண்டி வருகின்றனர்.

மைக்கேல் ஹெச், ஹார்ட்டின் ஏக்கம்

உலகில் தோன்றி தங்கள் தனித்த செல்வாக்கால் உலக வரலாற்றையே ஒட்டு மொத்தமாக மாற்றியமைத்த உலகச் சாதனைச் செல்வர்களின் பட்டியலைத் தொகுத்து,அதில் தலைசிறந்து விளங்கும் நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை ஒன்று முதல் நூறுவரை வரிசைப்படுத்தி, அந்த நூறு உலக சாதனையாளர்களுள் முதலாம்வராக நாயகத் திருமேனி அவர்களைப் பொறித்த “திஹன்ரட்”(The 100) நூலின் ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள்.

கடந்த 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள பால்டிமோர் நகரில் நான் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவர் ஒரு கருத்தை மிகஆணித்தரமாக வலியுறுத்திக் கூறினார். “பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் ஆன்மீக அடிப்படையில் மட்டுமே காணுகின்ற மனப்போக்குதான் இன்றுவரை எங்கும் காணப்படுகிறது. திருமறையாம் திருக்குர்ஆனையும் இதே போக்கில் அணுகுகின்ற மனப்பான்மையே இருந்து வருகிறது. இதன் மூலம் அகவாழ்வின் ஒரு புறத்தைத் தான் முஸ்லிம்கள் காணுகின்றனர். ஆனால், மற்றொரு பக்கமாக அமைந்துள்ள புறவாழ்வின் திறம்பாடுகளை அறிகின்ற போக்கு இன்னும் முனைப்புடன் உருவாக வில்லையோ எனக் கருதுகின்றேன். ஏனெனில் இஸ்லாத்தின் உயர்வையும் காலத்தை வென்று நிற்கும் அதன் வெற்றியையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகும் போதுதான் முழுமையாக அறிந்துணர முடிகிறது. சுருங்கச் சொன்னால், என் கண்ணோட்டத்தில் இஸ்லாம் ஓர் ஒப்பற்ற அறிவியல் மார்க்கம். அதன் உன்னதத்தை அறிவியல் கண்டுபிடிப்புகளின் முடிவுகளே எண்பித்துள்ளன. எண்பித்தும் வருகின்றன. நாளையும் நிரூபிப்பதாய் அமையும். இஸ்லாத்திற்கு உண்மையான விளக்கத்தை இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மட்டுமே விளக்கியுரைக்க முடியும்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியபோது திருமறையின் திறத்தை விஞ்ஞான உலகம் எம்முறையில் அணுக முயலகிறது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.

அண்ணலார் போட்ட அறிவியல் அடிப்படை

இன்றைய வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிக்கான அடிப்படை விதையை, ஏற்ற சூழலை உலகில் ஏற்படுத்திய பெருமை பெருமானாரையும் அவர் வழியாக வல்ல அல்லாஹ் உலகுக்கு வகுத்தளித்த இறைமொழியான திருமறையையுமே சாரும் என்பதை மறுப்பதற்கில்லை.

அறிவியல் வளர்ச்சிக்கு
உந்து சக்தியான இஸ்லாமிய
அனைத்துலகப் போக்கு

அனைத்துலக நோக்குடைய இஸ்லாத்தின் ஆன்மீகக் கோட்பாடுகள் முன்னரே முளைவிட்டிருந்த அறிவியல் சிந்தனையிலிருந்து அதிகம் வேறுபடாததாகவும் அதே சமயத்தில் அதனுடைய ஏதாவதொரு அம்சத்துடன் தொடர்புடையதாகவும் இலாமிய அறிவியல் அமையலாயிற்று.

இஸ்லாமிய அறிவியல் என்பது அண்ணலாரின் அருங்கருத்துகளும் திருமறை வெளிப்படுத்திய மெய்ப்பொருளும் இஸ்லாம் மரபுரிமையாகப் பெற்ற நாகரிகங்களின் அறிவியல் அம்சங்களும் ஒன்றிணைந்ததன் விளைவாக உருவானதாகும்.

இஸ்லாமியச் சிந்தனையும் நாகரிகமும் அனைத்துலகப் பொது நோக்குடையதாதலின் இஸ்லாமிய அறிவியல் வளர்ச்சியும் உலகளாவிய பன்னாட்டு இயல்புடைய ஒன் றாகவே வளரலாயிற்று.

அறிவியல் என்றால் என்ன?

இஸ்லாமிய அடிப்படையில் பெருமானாரின் வாக்கின் வழியே விஞ்ஞான வளர்ச்சி அரபு நாட்டில் எப்படிக் கால்பதித்து வளர்ந்து வளம் பெற்றது என்பதை அறியுமுன் அறிவியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

“மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும், தான் காணும் இயற்கைச் சூழலையும், அவற்றில் மறை பொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும் தன் சொந்த முயற்சியால், அறிவின் துணைகொண்டு சோதனைகளின் உதவியோடு தெளிவாய் புரிந்து கொள்ளும் முயற்சியே அறிவியலாகும்!”

இறைவன் மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் மறைபொருளாய் தந்துள்ள நிலையில், அவைகளையெல்லாம் மனிதன் தன் சிந்தனை அறிவாற்றலால் நன்கு அறிந்து, அவற்றையெல்லாம் பெற்று, வாழ்வின் முழு இன்பத்தை நிறைவாய்ப் பெற்று மகிழ மேற்கூறிய விளக்கத்திற்கேற்ப அறிவியல் நோக்குடையவர்களாய் இருத்தல் அவசியம்.

எனவேதான், அறிவு வேட்கை மிக்கவர்களாய், ஆய்வறிவுடையவர்களாய் ஒவ்வொரு முஸ்லிமும் விளங்க வேண்டுமெனப் பெருமாளார் தூண்டினார்கள். அத்தூண்டலின் விளைவாக ஆன்மீக உணர்வோடு அறிவுத்தாகம் மிக்கவர்களாகப் புதிய செய்திகள், ஆய்வுகள் எங்கெல்லாம் உண்டோ அங்கேயெல்லாம் விரைந்து சென்றார்கள். அறிவுச் செல்வங்கள். சிந்தனை வளமிக்க படைப்புகள் எந்நாட்டில், எம்மொழியில் இருந்தாலும் அவற்றையெல்லாம் அரபி மொழிக்குக் கொண்டுவந்து, அரபி மொழி தெரிந்தவர்கட்கெல்லாம் அறிவமுதம் ஊட்டும் அருந்தொண்டில் ஆயிரமாயிரம் அரபு அறிஞர்கள் ஈடுபடலானார்கள். உலகின் நாலா பக்கங்களுக்கும் பரவிச் சென்று அறிவுத் தேடலில் முனைப்புக் காட்டினார்கள். அறிவியல் சிந்தனைகளை — புதிய புதிய கண்டு பிடிப்பு விவரங்களைத் தேடித் தொகுத்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/2&oldid=1637057" இலிருந்து மீள்விக்கப்பட்டது