தீராத நோயைத் தீர்க்கும் திறன்

இளம் வயதிலேயே நுண்மாண் நுழைபுலம் மிக்கவராக விளங்கிய இவர் மருத்துவத் துறையில் தனித்தன்மை பெற்றவராக விளங்கினார். அக்காலத்தில் மற்றவர்களால் தீர்க்கப்படாத நோய்களையெல்லாம் இவர் போக்கினார், ஒருமுறை சுல்தானின் கடுமையான நோயைப் போக்கியதன்மூலம் நாடறிந்த மருத்துவராகப் புகழ்பெற்றார். இவரை அரண் மனை மருத்துவராக வரித்துக் கொள்ள அக்காலத்தின் மன்னர்களிடையே ஒரு போட்டியே நடந்துவந்தது என்பது இவரது மருத்துவத் திறமைக்குக் கட்டியங் கூறுவதாகும்.

முதல் மருத்துவ வழிகாட்டி நூல்

இவர், தான் கற்றுணர்ந்த அறிவியல் துறைகள் அனைத்தையும் பற்றி நூல்கள் எழுதினார். அவற்றுள்ளும் தனித்தன்மை பெறுவன இவர் எழுதிய மருத்துவ நூல்களாகும். இவர் எழுதிய ‘அல் கானூன் பில் தீப்’ (மருத்துவ விதிமுறை) என்ற நூல் மத்திய கால ஐரோப்பிய மருத்துவ வழிகாட்டி நூலாக விளங்கும் பெருமை பெற்றது. தன் காலத்தில் உயர்வாகப் போற்றப்பட்ட மருததுவ அறிவையெல்லாம் திரட்டித் தொகுத்து முறைப்படுத்தினார். மூளை அழற்சி, கொள்ளை நோய். மனக்கோளாறு போன்ற நுண்ணிய நோய்கள் பற்றிய இவரது ஆராய்ச்சி இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.

நவீன மருத்துவத்திற்கு அடிப்படையான ஆராய்ச்சி முடிவுகள்

பல்வேறு வகையான நோய்கள் பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவுகள் நவீன மருத்துவத்துறை வளர்ச்சிக்கே அடித்தளமாயமைந்தன லெனினும் பொருந்தும்.

எலும்புருக்கி நோய்க்குத் தொற்றும் தன்மை உண்டு எனக் கண்டறிந்து கூறினார். இவர் எழுதிய மொத்த மருத்துவ நூல்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆகும்.இப்னு சீனாவின் மருத்துவச் செல்வாக்கு உலகில் சுமார் 500 ஆண்டுக் காலம் அரசோச்சியது எனலாம். இவரது மருத்துவ நூல்கள் பல பதிப்புகளைக் கண்டன அவை இன்றும் மருத்துவ உலகால் மதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருங்கச் சொன்னால், கி.பி. பத்தாம் நூற்றாண்டை மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாகக் குறிப்பிடலாம்.அக்கால மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவே இருந்தனர். தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்வு செய்யப்பட்டனர். பாக்தாது நகரில் மட்டும் 800 மருத்துவர்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என வரலாறு கூறுகிறது.

பத்தாம் நூற்றாண்டின் உலகப் பெரு மேதைகள் இருவர்

இப்னு சினாவின் ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் யுனெஸ்கோ உலகளாவிய முறையில் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தது அதன் தொடர்ச்சியாக‘யுனெஸ்கோ கூரியர்’ சர்வதேச இதழ் சிறப்பு மலர் ஒன்றை 1981 இல் வெளியிட்டது. அதில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு மருத்துவம் உட்பட அனைத்து அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளில் தலைசிறந்து விளங்கியவர்கள் இருவர் ஒருவர் இப்னு சினா,மற்றொருவர் சகலகலா மேதை அல்-பிரூனி என்ற சிறப்புக் குறிப்புடன் அச்சிறப்பிதழ் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அறிவு வேட்கை கொண்ட அல் - பிரூனி இந்தியாவுக்கு வந்து, இந்தியச் சிந்தனைகளை யெல்லாம் அறிந்து, அவை பற்றி விரிவாக நூல் எழுதி, பின்னர் அதை மேலை உலகும் முதன்முறையாக அறியச் செய்த மேதையாவார்.சம காலத்தவர்களான அல்-பிரூனி, இப்னு சினா,பற்றிச் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் அறிவியல் வளர்ச்சிப் பங்களிப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ள மேலும் வாய்ப்பாக அமையும்.

இவர்கள் இருவரும் சம கால மேதைகளாகத் திகழ்ந்த போதிலும் அல்-பிரூனி வயதில் சற்று மூத்தவராகவும் இப்னு சினா இளைஞராகவும் இருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி அவ்வப்போது இவர்கள் விவாதங்கள் உலகப்புகழ் பெற்றவைகளாகும்.

அல் - பிரூனி அவர் காலத்திய அறிஞர்களினின்றும் சற்று மாறுபட்டவராக விளங்கினார் தூர நோக்குப் படைத்த அறிவியல் சிந்தனையாளராகத் திகழ்ந்தார். புதுவை நாட்டம் மிக்கவரான அல் பிரூனியின் கண்டுபிடிப்புகள் மற்றவர்கட்குப் புதுமையான தாகவும் புதிராகவும் புரிந்து கொள்ள இயலாததாகவும் கூட இருந்ததுண்டு

அக்கால முஸ்லிம்களிலேயே இந்தியாவுடன் மிக அதிகத் தொடர்புடையவராக விளங்கியவர் அல்-பிரூனியே யாவார். இந்தியாவை மிக அதிகமாக அறிந்திருந்தவரும் இவரேயாவார்.

‘சதுரங்கம்’ விளையாட்டின் தாயகம் இந்தியா

அல் - பிரூனியின் காலத்தில் அராபிய, பாரசீக இலக்கியங்கள் இந்தியாவைப் பற்றி மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடாகச் சித்திரித்து வந்தன. ‘கணிதப் புலமையும் வானவியலறிவும் மிக்கவர்கள் இந்தியர்கள்’ எனப் பெருமையாகப் பேசின. அக்கால முஸ்லிம்களிடையே அறிவுத்திறன் மிக்க விளையாட்டாகக் கருதப்பட்ட சதுரங்கத்தை(செஸ்) உலகுக்களித்த நாடு இந்தியாவே என்ற தகவலும், மிகச் சிறப்பாக வளர்ந்திருந்த இந்திய மருத்துவத் தனித்தன்மைப் பற்றிய செய்திகளும், கவின்மிகு கலைத்திறனும் கவிப்புலமையும் சிற்பச் சிறப்பும் கொண்ட இந்தியா மெய்யறிவுக் கலையின் தோற்றுவாயாகவும் அமைந்திருந்ததை நூல்களின் மூலம் பயணிகள் வாயிலாகவும் அல்பிரூனி அறிந்தபோது இந்தியாவைக் காணவேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அவருக்கு எழுந்தது.

பன்முறை இந்தியா சென்று வந்த அல் பிருனி

கஜினி முஹம்மதுவின் பெரும்படை அல்-பிரூனி வாழ்ந்த குவாரிஸத்தைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆயிரமாயிரம் மக்களைச் சிறைப்படுத்தியது. அதே போன்று கஜினி முஹம்மது இந்தியாவையும் தாக்கி,அங்கிருந்து பல நூறு பேரைச் சிறைப்பிடித்துக் குவாரிஸம் கொண்டு வந்தார். இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டவர்களுள் அல்- பிரூனியும் ஒருவர் சிறைப்பட்ட அல் - பிரூனியும் இந்திய அறிஞர்களும் அப்போது சந்தித்துப் பழகும் வாய்ப்பு எதிர்பாரா நிலையில் ஏற்பட்டது. அப்போது இந்தியாவைப் பற்றி அதிக அளவில் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பும் அல்-பிரூனிக்கு உண்டாகியது. இதன் பின்னர் விடுதலை பெற்றபின் எப்படியும் இந்தியா சென்று அங்குள்ள அனைத்துச் செய்திகளையும் அறிந்து வரவேண்டும் என்ற அறிவுத்தாகம் அடக்க முடியாத அளவுக்கு அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பொங்கத் தொடங்கியது அறிவை வளர்க்க வளப்படுத்த எங்கும் சென்று வருதல் வேண்டும் என்ற அண்ணலாரின் அறிவுரையை நெஞ்சத்தில் அழுந்தப் பதித்திருந்த அல்-பிரூனி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா வேட்கையோடு இருந்தார். அதற்கு முன் இந்தியா சென்று வந்த இஸ்லாமிய அறிஞர்கள் - பயணிகளிடமிருந்தெல்லாம் செய்திகளைச் சேகரித்தார். அவரை இந்தியாவைப் பற்றி எழுப்பட்டிருந்த நூல்களையும் குறிப்புகளையும் படித்தறிந்தார்.அதன்பின் ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை இந்தியா சென்று வந்தார்.

சம்ஸ்கிருதப் புலமை பெற்ற முஸ்லிம் மேதை

இந்திய ஆய்வில் முழுமை பெற விரும்பிய அல் - பிரூனி தம் நாற்பதாவது வயதில் சம்ஸ்கிருத மொழியைக் கற்றுக்கொண்டார். அதில் அவர் நல்ல பாண்டித்தியமும் பெற்றார். இந்தியா பற்றி இவர் எழுதிய 'இந்தியா' என்ற பெரு நூலே பிற்காலத்தில் மேலை நாட்டார் இந்தியாவைப் பற்றித் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிந்து கொள்ள வழி வகுத்தது. இவர் மூலமே ஹிந்து சமயக் கருத்துக்களும் இந்தியர் கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகளில் பெற்றிருந்த அறிவாற்றலும் மேலை உலகை எட்டியது.

இவர் யூக்ளிடின் ‘அடிப்படைகள்’ (Elements) என்ற நூலையும் தமது வானவியல் ஆராய்ச்சி நூலையும் சம்ஸ்கிருத மொழியில் பெயர்த்தளித்துள்ளார்.

யானைச் சுமை வெள்ளிப் பரிசை ஒதுக்கித் தள்ளிய அறிவியல் நெடும்பயணம்

கஜினி முஹம்மவுக்குப்பின் அரியணையேறிய அவர் மகன் மஸ்து கஜினி அறிவாற்றல் மிக்கவர். விஞ்ஞான உணர்வு கொண்டவர். அல்-பிரூனியின் பலதுறைப்பேரறிவைக் கண்டு வியந்து, தன் அரசவை அறிஞர் குழாமோடு இணைத்துக் கொள்ள விரும்பி, யானைச் சுமை வெள்ளிக்குவியலைப் பரிசாக அனுப்பி அழைத்தார். இதைக் கண்ட அல்-பிரூனி‘இப்பரிசு, என்னை அறிவியல் ஆராய்ச்சியிலிருந்து தவறி நெறி பிறழச் செய்யும் விரைவில் வெள்ளிக் காசுகள் செலவழிக்கப்பட்டுவிடும். ஆனால், அறிவியல் என்றென்றும் வாழும் பெற்றியுடையது. இஃது அறிஞர் பெரு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று, குறுகிய வாழ்நாளையுடையதும் அலங்கோலமானதும் ஒளிரும் தன்மையுடையதுமான வெள்ளிக்காசுகளுக்குப் பகரமாக, என்றும் நிலைத்து வாழ வல்ல அறிவியல் அறிவினை மாற்றாகத் தர விரும்பவில்லை. இதற்கு நான் ஒரு நாளும் இசைய மாட்டேன்,” எனக் கூறி மறுத்துவிட்டதாக அவரது வாழ்க்கைச் சுவடி கூறுகிறது.

அறிவியலின் பல்துறைத் திறமை

அல் - பிரூனி கணிதம், வானவியல். நிலவியல், இயற்பியல், நில அளவையியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.மருத்துவத் துறைக்கும் இவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் என்பதற்கு இவர் தொகுத்த ‘மருந்தியல்’(Pharmacology) நூல் சிறந்த சான்றாக உள்ளது. இதில் இவர் பல்வேறு வகையான மூலிகைச் செடி, கொடிகளையும் மருந்துக்குதவும் விலங்குகள், கனிமங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றிலிருந்து மருந்து தயாரிக்கும் முறைகளையும் திறம்பட விளக்கியுள்ளார். இதில் பலநூறு அராபிய மூலிகைப் பெயர்களோடு 900 பாரசீகப் பெயர்களையும் 700-க்கு மேற்பட்ட கிரேக்கச் சொற்களையும் 350 இந்திய மூலிகைப் பெயர்களையும் தொகுத்துள்ளார்.

பன்னூலாசிரியர் அல் - பிருனி

அல் பிரூனி எழுதியுள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கை 150-க்கு மேலாகும். இதற்றுள் வானவியல் பற்றிய நூல்கள் சுமார் 70 ஆகும். இவர் எழுதிய கணித நூல்கள் 20-க்கு மேலாகும். வானவியலையும் அதனோடு இணைந்த பல்வகை அறிவியற் கலைப் பிரிவுகளின் தகவல்களடங்கிய முழுமையான கலைக்களஞ்சியமே ‘மாசுடிக்

கானூன்’ எனும் கலைக்களஞ்சிய நூல் மற்றும் அண்டவியல், காலமுறை . பூகோளம், கணிதம், வானவியல் முதலான 11 தொகுப்புகளையும் இவர் எழுதியுள்ளார்.

பல்துறை வல்லுநர் இப்னு சினா

அல் - பிரூனியைப் போன்றே இப்னு சினாவும் மருத்துவத்துறை உட்பட அறிவியல் துறைகள் பலவற்றிலும் ஆழ்ந்த புலமைமிக்கவராகவும் ஆராய்ச்சி வல்லுநராகவும் விளங்கினார்.

இவர் காலத்தில் இவருக்கு இணையாக வேறு யாரும் இல்லையோ என வியக்குமளவுக்கு பல்பொருள் அறிவு நிரம்பிய தத்துவவித்தகராக, தலைசிறந்த மருத்துவக்கோட்பாட்டாளராக, திறம்படக் கற்பிக்கும் ஆசானாக,நோய் தீர்க்கும் திறன்மிகு மருத்துவராக, மருந்தியல் வல்லுநராகத் தன் காலத்தில் வாழ்ந்தவர்.

இப்னு சினா பால்க்கில் கி.பி. 980 (ஹிஜிரா 370)இல் பிறந்தார். இப்னு சினா தன் பதினாறாம் வயதிலேயே மருத்துவ அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது மருத்துவத் திறமையைக் கேள்வியுற்ற புக்காரவின் அமீர் நூஹ் இப்னு மன்ஸர் என்பவர் பதினாறு வயது இளைஞரான இவரை தனக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த அழைத்தார் என்றும் இப்னு சினாவும் அவ்வழைப்புக்கிணங்கச் சென்று மருத்துவம் செய்து அமீரைக் குணப்படுத்தினார் என்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

இணையிலா இளமைப் படிப்பு

புக்காரா அமீரின் நோயைக் குணப்படுத்தியதன் விளைவாக அவரது அன்புக்குரியவராக, அரண்மனைச் செல் வாக்குள்ளவராக ஆனார். அப்போது அமீர் அரண்மனையில் அறிவுக் களஞ்சியம் போன்று அமைந்திருந்த புகழ்பெற்ற மாபெரும் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன் மருத்துவ அறிவியல் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.

இதைப்பற்றி இப்னு சினா, “பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிற்குள்ளாகத் தத்துவ அறிவு முழுவதையும் காரண நியாயக் கருத்தியல், இயற்பியல், கணக்கியல்.வடிவியல், எண கணக்கியல், வானவியல், இசை, மருத்துவம் எனும் பற்பல துறைகளைப் பற்றி நன்கு தெரிந்தவனாக என்னை நான் ஆக்கிக் கொண்டேன். ஆதால். எனக்கு ஆசானாக இருக்கக் கூடிய எவரையுமே நான் சந்திக்கவில்லை.” என்று தன் மாணவர் ஜூஸ் ஜானியிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்பாரா நிலையில் புக்காரா நூல் நிலையம் எரிந்தபோது, அதற்காக அதிகம் வருந்தாத மக்கள் ‘அந்நூலகம் எரிந்து அழிந்து விடவில்லை’ அறிஞர்கள் இளவரசனாக விளங்கும் இப்னு சீனாவின் மூளைக்குள் மாற்றலாகியுள்ளது எனக் கூறுவார்களாம்!

479 நூல்களை எழுதிக் குவித்த அறிவுலக மாமேதை

ஐம்பத்தேழு வயதுவரை மட்டுமே வாழ நேர்ந்தாலும் இப்னு சினா அவ்வப்போது தன் கருத்துக்களை கண்டுபிடிப்புகளை எழுதி வைக்கத் தவறவில்லை தன் வாழ்நாளில் அரபி மொழியில் 456 நூல்ல்ளையும் பாரசீக மொழியில் 23 நூல்களையும் எழுதியுள்ளதாக அவர் வாழ்க்கை வரலாற்றை நான்கு ஆய்ந்த பாரசீக அறிஞர் சையத் நஃபீசி என்பார் பட்டியல் தயாரித்து வழங்கியுள்ளார். எனினும், உலகெங்கும் உள்ள பெரும் நூலகங்களில் அவரது படைப்புக்களாக 160 நூல்கள் மட்டுமே பட்டியலிடப் பட்டுள்ளன.

இப்னு சினா, அல் - பிரூனி அறிவியல் விவாதம்

அல்- பிரூனியும் இப்னு சினாவும் சமகால அறிவியல் மேதைகள் என்பதை முன்பே கண்டோம். இருவருக்குமிடையே 7 வயது வேறுபாடு இருந்தது இருவரில் இப்னு சினா இருபது வயதடைந்தபோது அவரது அறிவியல் திறமை முஸ்லிம் உலகெங்கும் நன்கு பரவியிருந்தது அல் பிரூனி ஒளி. வெப்பம். அடர்த்தி வெற்றிடம் தொடர்பாகத் தமக்கு ஏற்பட்ட பல ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள இப்னு சினாவை நோக்கிப் பல வினாக்களை அடுத்தடுத்துத் தொடுத்துப் பதிலளிக்குமாறு கேட்டார் அவர் விடுத்த வினாக்களுக்கு இப்னு சினாவும் சளைக்காமல் ஆதாரபூர்வமான காரணங்களின் அடிப்படையில் பதில் தந்து அல்–பிரூனியின் ஐயப்பாடுகளைப் போக்கினார் ஆயினும், மேலும் தெளிவு பெறவும் மேலும் பல புதிய அறிவியல் செய்திகளை அறிந்து கொள்ளவும் இப்னு சினா அளித்த பதில்களின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பினார் அல் பிரூனி. அதற்கும் தக்க விடைகளைத் தந்தார் இப்னு சினர். இக்கேள்வி பதில விவாதங்கள் அறிவியல் சிந்தனையிலும் வளர்ச்சியிலும் எந்த அளவுக்கு முஸ்லிம்கள் அன்று ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதை இப்போது எண்ணினாலும் வியப்பாக இருக்கிறது.

இது போன்ற அறிவியல் விவாதங்கள் காலந்தோறும் அறிவியலாளர்களிடையே நடைபெற்று வந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால், ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இப்னு சினாவுக்கு அல் பிரூனிக்கும் அறிவியல் தொடர்பாக நடைபெற்ற வினாவிடைவிவாதம் அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கனவாக அறிவியல் வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய அடிப்படை உண்மைகளின் எந்த அளவுக்கு ஞானம் உள்ளவர்களாக இருவரும் விளங்கினார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகட்டு முன்பு நடைபெற்ற அறிவியல் விவாதம்

அறிவியல் ஆய்வுகள் சரியான போக்கில் முளை விட்டிருந்த ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், விஞ்ஞான வளர்ச்சியின் தொடக்காலகட்டத்தில் இரு முஸ்லிம் அறிவியல் அறிஞர்களிடையே விஞ்ஞான விவாதம் எவ்வளவு நுட்பமாக நடைபெற்றுள்ளது என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ளது. இவ் விதாதங்கள் நடைபெற்றபோது அல் - பிரூனிக்கு வயது 24, இப்னு சினாவுக்கு வயது 17.

அவ்வாறு நடைபெற்ற அறிவியல் வினா - விடை விவாதங்களில் ஓரிரண்டைக் காண்போம்.

இவ்வுலகில் அகத்திலும் புறத்திலும் வெற்றிடம் இல்லையெனில் ஒரு குடுவையினுள்ளிருக்கும் காற்று வெளியே உறிஞ்சப்படும் போது தண்ணீர் ஏன்! அதனுள் ஏறுகின்றது’ என அல் புரூனி வினவுகிறார். ‘இது வெற்றிறிடம் காரணமாக நீர் ஏறுகிறது இப்னு சினா நீரின் குளிரால் குடுவையுள்ளிருக்கும் காற்றுச் சுருங்குகிறது. அதனால் குடுவையினுள் தண்ணீர் ஏறலாம் என்பது இப்னு சினா வின் விளக்கம்.

பொருள்கள் வெப்பத்தால் விரிகின்றன என்பதும் குளிரால் சுருங்குகின்றன என்பதும் சரியானால் நீர் நிரம்பிய குடுவை ஒன்று அந்நீர் உறையும் போது ஏன் உடைகின்றது எனக் கேட்கிறார் அல்-பிரூனி. இதற்கு மறுமொழியாக காற்றுக் குளிர்வதால் குடுவையினுள் வெற்றிடம் உருவாகிறதென்றும் இத்தகைய வெற்றிடத்தை உருவாக்க முடியாததால் குடுவை உடைகிறது என்றும் இப்னு சினா பதில் அளிக்கிறார்.

‘பனிக்கட்டியின் பருப்பொருள் பாகங்கள் நீரைவிட அதிகமாக இருப்பதால் அது பளுவானதாக அல்லவா இருக்கவேண்டும். ஆனால். பனிக்கட்டி ஏன் நீரில் மிதக்கிறது’ எனக் கேட்கிறார் அல் பிரூனி உறையும் போது பனிக்கட்டி தனது உள்ளிடங்களிலும் குறுக்குப் பின்னலமைப்புகளிலும் காற்றுப் பாகங்களைப் பத்திரப்படுத்தி வைக்கிறது. இறைகளே , பனிக்கட்டி நீரில் மூழ்க விடாதபடி தடுக்கின்றன’ என்கிறார் இப்னு சினா.

அல்- பிரூனியின் கேள்விகளைக் கவனமாக ஆய்ந்தால் அலை அறிவியல் வரலாற்றில் எவ்வளவு முக்கியத்துவம் மிக்கவை என்பது புலனாகும் இப்னு சீனாவின் பதில்களும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே முஸ்லிம் அறிவியல் அறிஞர்கள் இயற்கைத் தத்துவத்திலும் அதன் விஞ்ஞானப் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் ஆராய்ச்சிகளிலும் எவ்வளவு நுட்பமாக சிந்தித்து ஆராய்ச்சி பூர்வமாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள இவ்வினா விடை விவாதம் வாய்ப்பளிக்கிறது.இருவருக்குமிடை யே நடைபெற்ற வினா விடை விவாதங்கள் "அஸ்இலா வல் அஜ்விபா' எனும் நூலாக அமைந்துள்ளது. அஃது அறிவியலோடு அனைத்து அண்டங்கள் பற்றியும் தத்துவங்கள் முதலாக உள்ள அனைத்துப் பொருள்கள் பற்றியும் அமைந்துள்ளன.

அறிவியல் துறை வளர்ச்சிக்கு ஆதாரமான அறிவாற்றல், பகுத்தறிவு பற்றிய அல்- பிரூனியின் கண்ணோட்டம் அன்றைய இஸ்லாமிய அறிவுலகம் அறிவியல் பற்றிக்கொண்டிருந்த உணர்வையும் கருத்தையுமே முழுமையாகப் பிரதிபலிப்பதாக உள்ளது.

“அறிவியல் அண்மையில் தோன்றியதெனச் சிலரும் அஃது உலகைப் போன்று பழமையானதெனப் பிறரும் கருதுகின்றனர். இன்னும் சிலர், அதன் நுட்பங்கள் சமய அறிவினால் புலப்படுகின்றன” என்றும் கூறுகின்றனர்.மேலும் சிலர். ஒவ்வொரு நுட்பமும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கதரிசியினால் வெளிப்படுத்தப்பட்டு நிலைநாட்டப் பெற்றதாகவும் கூட கருதுகின்றனர். ஆனால், பிறர் மனிதன் தனது அறிவாற்றலின் பயனாக நுட்பங்களைக் கண்டுபிடிக்கிறான் என்றும் பகுத்தறிவின் வாயிலாகவே மனம் உணர்வுத் திறனைப் பெறுகிறதென்றும் கருதுகினறனர்.

“ஒருவர் பகுத்தறிவின் மூலமாக ஒரு விதியை அல்லது கொள்கையைக் கண்டு பிடிக்கும்போது பொதுக் கூற்றிலிருந்து தனிக் கூற்றிற்கு வரவேண்டும். ஆயினும் செயலாய்வும் சிந்தனையும் ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு,நுணுக்க விவரங்களை அறியச் செய்கின்றன....

“காலம் வரையற்றது; தொடர்ந்து வரும் தலைமுறைகள் ஒரு பகுதியையே கடக்கின்றன. ஒவ்வொன்றும் தனது மரபினை அடுத்ததற்கு விட்டுச் செல்கின்றது. அடுத்து வருவது அதை வளர்த்து வளப்படுத்துகிறது.”எனக் கூறும் அல்-பிரூனியின் கருத்து சிந்திக்கத் தக்கதாகும்.

பொதுவாக அறிவுத் தேட்டமே மனித வாழ்வின் மேன்மை மிகு குறிக்கோளாக இருக்க வேண்டும் என்ற பெருமானாரின் உணர்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களே அல் - பிரூனியும் இப்னு சினாவும். புகழ்மிகு கணிதவியல் மேதையாகத் திகழ்ந்த அல்-பிரூனி வானவியல் துறை முதல் மருந்தியல் துறைவரை எழுதாத துறையே இல்லை எனலாம். முதன் முதலாக நவரத்தினங்கள், உலோகங்கள் ஆகியவற்றின் எடைகளைக் கூடுமானவரை சரியாகக் கணித்தவர் அல்-பிரூனியே ஆவார்.

அல்- பிரூனியின் எடை அளவுப்படி தங்கத்தின் அடர்த்தி 19.0 ஆகும். அதன் இன்றைய துல்லியமான அளவு 19 3 ஆகும். அவர் இரும்பின் அடர்த்தியை 7.92 என்று அளவிட்டார். அதன் இன்றைய துல்லிய அளவு 7.9 ஆகும். அவர் அளவிட்டுக் கூறிய நீலக்கல் அடர்த்தி 3.91 அதன் இன்றைய சரியான அளவு 3.90 ஆகும். இவ்வாறே இவர் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு கண்டறிந்த உலோகங்கள், வைரங்கள் ஆகியவற்றின் எடை அளவு மிக மிகக் குறைந்த அளவே வித்தியாசப்படுகிறது. சிலவற்றின் அளவு சரியாகவே உள்ளது வியப்பாகவுள்ளது.

உலக மருந்து மூலிகைக் களஞ்சியம்

இப்னு சினாவைப் போன்று அல் பிரூனி மருத்துவரல்லர் எனினும் அவரது புகழ்பெற்ற மருந்தியல் நூலான “கிதாப் அல் சாய்தானா” மருந்தாக்கக் கலை நூலாக அமைந்துள்ளதேயன்றி நோய்களின் தோற்றம் பற்றியோ அல்லது அவற்றைத் தீர்க்கும் வழிவகை பற்றியோ கூறவில்லை. அஃது மருந்துகளின் குணப்படுத்தும் தன்மைகளை விளக்கிக் கூறும் நூலாகும்.

சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட இம்மருந்தியல் நூல் உலகெங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய சுமார் முப்பதினாயிரம் மருத்துவக் குணமுள்ள மூலிகைகளின் பட்டியலையும் அம்மூலிகைகளுக்கான அரபி, பெர்சியப் பெயர்களையும் கொண்டதாகும். இவ்வாறு மூலிகைகளின் மருத்துவக்குணப் பண்புகளையும் அவற்றின் பன்மொழிப் பெயர்களையும் விவரிக்கும் விவரத்தொகுப்பு நூலாகவே அஃது அமைந்துள்ளது.

இதே போன்ற ஆனால் அளவில் சிறியதான மூலிகைத்தொகுப்பு நூலை கி.மு. முதலாம் நூற்றாண்டில் கிரேக்க மருத்துவர் டியோஸ் கோரிடஸ் சுமார் 600 மருந்துச்செடிகளின் பெயர்களைத் தொகுத்துத் தந்திருந்தார். ஆனால், அதைவிட ஐந்து மடங்கு பெரிதான , மருத்துவக்குணங்களை முழுமையாக விவரிக்கும் நூலை இவரே எழுதினார்.

மூலிகை பற்றிய நூலாக இருந்தாலும் தாவரவியல் பற்றிய சிறந்த அறிவியல் நூலாகக் கணிக்கப்படுகிறது. தாவரவியல் பற்றி அன்றைய முஸ்லிம்களின் விஞ்ஞான அணுகுமுறை எத்தகையது என்பதை நன்கு தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படுகிறது. அதிலும் உலகெங்கணும் உள்ள மூலிகைகளைப் பற்றிப் பேசுவதால் இஸ்லாமியரின் விரிந்து வந்த உலகியல் கண்ணோட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள இயல்கின்றது.

தாவரவியல் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு

மூலிகை ஆராய்ச்சியில் மட்டுமல்லாது பிற தாவர ஆராய்ச்சியிலும் முன்னிலை வகித்தவர்கள் அன்றைய தாவரவியல் வல்லுநர்களான முஸ்லிம்கள். இயற்பியல்,வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் புதியன கண்டறிந்து வளர்ச்சிக்கு வழிகோலியது போன்றே தாவரவியல் துறைக்கும் பெரும் பணியாற்றியுள்ளனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதற்கு மூலிகை ஆராய்ச்சி பெரும் உந்துதலாக இருந்ததையும் மறுப்பதற்கில்லை.

மேலும், நீர்ப்பற்றாக்குறை நிலையும் குறைந்த அளவு நீரைக் கொண்டு இயன்றவரை அதிக அளவு விளைச்சலைப் பெருக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையும் தாவர வியல் ஆராய்ச்சிக்கு முஸ்லிம் விஞ்ஞானிகளை உந்தியது என்பதும் மறுக்கமுடியாத மற்றொரு காரணமாகும். இக்காரணங்களால் பயிர் வளர்ச்சியிலும் நீர்ப்பாசன முறைகளிலும் புதுப்புது உத்திகளைக் கையாண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வழங்கினர் அன்றைய முஸ்லிம் தாவரவியல் விஞ்ஞானிகள்.

நீர் இறைப்பு இயந்திரங்கள் எழுந்தன

அன்று வாய்க்கால் நீர்ப்பாசனமுறை செயலில் இருந்த போதிலும் நீர் இறைத்துப் பாய்ச்சிப் பயிர் வளர்க்கும் முறையைச் செயலுக்குக் கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்களே யாவர். இதற்காகக் காற்றாடி இயந்திரங்களையும் கீழ் மேலாக எழுந்து நீர் இறைக்கும் இயந்திரங்களையும் வடிவமைத்து உருவாக்கிப் பயன்படுத்தினார்கள் மண்ணின் தன்மைக்கேற்பப் பயிரிடும் முறையைச் செயல்படுத் தினார்கள். மண்ணின் வளம் பெருக்க உரம் தயாரித்துப் பயன்படுத்தும் முறையையும் நன்கு அறிந்திருந்தார்கள். இதற்காக உழவியல் ஆய்வுக் கூடங்களை உருவாக்கி புதிய புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி விவசாய வளர்ச்சிக்கும் அக்கால முஸ்லிம் பயிரியல் விஞ்ஞானிகள் வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.

அன்றே பூச்சிக்கொல்லி மருந்து கண்டவர்கள்

எதிர்பாரா நிலையில் பூச்சிகள் பயிர்களைத் தாக்கி அழிக்கும்போது, தாவரங்களைப் பலவித நோய்கள் பிடித்துப் பாழ்படுத்தும் போதும் செய்வகை தெரியாது திகைத்து நின்றவர்கள் உழவர்கள் இவற்றிலிருந்து உழவர்களையும் பயிர் பச்சைகளையும் காக்கப் பலவிதமான சோதனைகளையும் ஆராய்ச்சிகளையும் முஸ்லிம் விவசாய வல்லுநர்கள் மேற்கொண்டு எம்முறையைப் பயன்படுத்தி பூச்சித் தொல்லைகளிலிருந்து தாவரங்களைக் காப்பது என்பதைக் கண்டறிந்தார்கள். அதேபோன்று பயிர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைப் போக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் கண்டுபிடித்து தாவரங்களைக் காக்க வழி வகுத்தார்கள்.

ஓட்டு முறையில் புதுப்புது மலர் புதுப்புதுப் பழம்

இன்றைக்குப் புதுவகைப் பயிர்களையும் புதுவகை மலர்களையும் சுவையூட்டும் புதுப்புது பழவர்க்கங்களையும் கலப்பின அடிப்படையில் உருவாக்கித் துய்த்து வரும்கிறோம். ஆனால், தாவரவியல் ஆராய்ச்சியில் முஸ்லிம் ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த அன்று மலர்ச் செடிகளிலிருந்து ஓட்டு முறையில் புதுப்புது மலர்களையும் மரங்களிலிருந்து கலப்பின அடிப்படையில் புதுப்புதுப் பழங்களைப் பெறும் முறைகளையெல்லாம் கண்டறிந்திருந்தார்கள் என்ற செய்தி அன்று அவர்கள் எழுதி வைத்துள்ள நூல்களிலிருந்து அறிய முடிகிறது. இத்தகைய விவசாய விந்தைகளைச் செய்ய தாவரங்களைப் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து ஒட்டுக் கலப்பின முறைகள் மூலம் பலவிதப் புதுரகங்களை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

எண்ணெய் பிழிந்தெடுக்கும் புதுமுறை கண்டவர்கள்

எண்ணெய் வளமிக்க ஆலிவ் மரப்பழங்களிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் புது முறைகளை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களேயாவர், அரபு நாடுகளிலிருந்து ஆலிவ் மரங்களை அன்று முஸ்லிம்களின் ஆட்சியின் கீழிருந்த ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்களே யாவர். இதன்மூலம் ஸ்பெயின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிலையுடைய நாடாக மாறியது.

மேலும், தாவரங்களில் சில மருத்துவத்திற்குப் பயன் படக்கூடிய மருந்துக் குணமுடையவைகளாக இருப்பதை அன்றைய முஸ்லிம்கள் ஆராய்ச்சிகள் மூலம் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை முன்பே நாம் கண்டோம். இம் மருந்துச் செடிகள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொண்டு பலவித நோய்கள் போக்கப்பட்டன என்பதையும் நாம் முன்பே அறிவோம். செடி கொடிகளை எவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தவர்களிலேயே தலையாயவராகக் கருதப்படுவர் அஹமத் இப்னு அல் பைத்தார் என்பவராவார். முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர் தாவரவியல் ஆராய்ச்சிக்காக ஆசியா, ஆஃப்ரிக்கா நாடுகள் பலவற்றின் விரிவாகப் பயணம் செய்து ஆய்வு நடத்தியவராவார். இவர் தம் தாவரவியல் ஆராய்ச்சிகளை ஆய்வுக் கட்டுரைகளாக அவ்வப்போது எழுதி வந்தார். அவைகள் அனைத்தையும் தொகுத்து “அல் முப்ரதா” எனும் பெயரில் பெரும் நூலாக வெளியாக்கினார். இந்நூலில் சுமார் 1,400 மூலிகைகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவக் குணம் பற்றியும் ஆராய்ச்சிகளையும், அவற்றை மருத்துவத் துறையில் பயன்படுத்துவதால் குணமாகும் நோய்களைப் பற்றிய குறிப்புகளையும் கொண்ட அரிய தொகுப்பாக அமைந்துள்ளது.

இவரைப் பொருத்தவரை மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. இவர்தான் முதன் முதலில் மிருகங்களிலிருந்தும் தாதுப்பொருட்களிலிருந்தும் மருந்து தயாரிக்கும் முறையை ஆய்ந்து கண்டவர். அவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் பிற்காலத்தில் நவீன மருந்தியல் துறையின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் ஆக்கம் தருவாக அமைந்தன,

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/7&oldid=1637065" இலிருந்து மீள்விக்கப்பட்டது