காகிதத் தயாரிப்புக் கலையில் புரட்சிகர மாற்றம் கண்ட முஸ்லிம்கள்

தாவரப் பொருட்களிலிருந்து காகிதம் செய்யும் முறையைப் புரட்சிகரமாக உருவாக்கிய பெருமை அரபுநாட்டு முஸ்லிம்களையே சாரும். அன்று முதல் இன்றுவரை அறிவுப் பரிமாற்றத்துக்கு அடிப்படைப் பொருளாக அமைந்துள்ள காகிதம் செய்யும் கலை சீன நாட்டில் வேர் விட்டிருந்தாலும் செழுமையாக வளர்ந்த வளர்ப்புப் பண்ணையாக இருந்தது அரபு நாடேயாகும். இன்றுள்ள வடிவில் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பங்களை உருவாக்கிய பெருமையும் முஸ்லிம்களையே சாரும்.

சீனாவில் தோன்றிய காகிதக்கலை அரபுநாடு சென்றது ஒரு சுவையான வரலாறு ஆகும்.

தரமான தாள் செய்த அரபிகள்

சீன நாட்டு அறிவியல் ஆய்வாளரான சாய் லுன் என்பவர் தான் முதன் முதலாகக் காகிதம் செய்யும் முறையை உருவாக்கினார். அதுவும் அவசிய, அவசரத் தேவையின் பொருட்டேயாகும்.

சாய் லுன் காலம்வரை வசதியான எழுது பொருள் எதுவும் இருக்கவில்லை அக்காலத்தில் எழுது பொருளாக ஆட்டுத் தோல், கன்றுகளின் தோல், மூங்கில் ஆகியவற்றின் மீது எழுதுவது வழக்கமாக இருந்து வந்தது.

அதே சமயத்தில் எகிப்து போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் மேற்கு நாடுகளிலும் ‘பாப்பைரைஸ்’ எனும் ஒருவகை எழுது பொருள் எழுதுவதற்குரிய சாதனமாகக் கையாளப்பட்டு வந்தது. இஃது பல குறைபாடுகளை யுடையதாக இருப்பினும் மூங்கிலில் எழுதுவதை விட எளிதானதாக இருந்தது மரம் அல்லது மூங்கிலிலான நூல்களைவிட 'பாப்பைரைஸ்' கையாளுவதற்கும் பிற இடகளுக்கு எடுத்துச் செல்வதாகும் ஏற்புடைத்தாகவே இருந்தது. என்றாலும் சீன அறிஞர் ஒருவர் தன்னோடு ஒரு சில நூல்களை எடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது.

சாய் லுன் காகிதத்தைக் கண்டுபிடித்த பின் நிலைமை வெகுவாக மாறியது. அறிவு விரைவாக வளரும் இனிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கலை, இலக்கியம், தத்துவம் முதலான நாகரிகக் கூறுகள் துரித வளர்ச்சி பெறலாயிற்று. இதனால் சீனா அன்று உலகத்தின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

சீனரைக் கடத்தி காகிதக் கலையைக் கற்றனர்

காகிதக் கண்டுபிடிப்பின் இரகசியங்களை அறிந்து கொள்ள அறிவு வேட்கை கொண்ட அக்கால அரபிகள் பெரிதும் அவாவினர். காகிதச் செய்முறைகளைத் தெரிந்து கொள்ள முயன்றனர். ஆனால், காகிதத் தயாரிப்பு முறைகளை மிகவும் இரகசியமாக வைத்திருந்த சீனா வேற்று நாட்டைச் சேர்ந்தவர்கட்குக் கற்றுத்தர அறவே விரும்பவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அராபிய முஸ்லிம்களில் சிலர் காகிதத் தயாரிப்பு தொழில் இரகசியங்களை நன்கு அறிந்து கொள்ளும் பொருட்டு கி பி. 751 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு போரின்போது காகிதத் தயாரிப்பு தொழில் நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்த சில சீன வல்லுநர்களைத் போர்க் கைதிகளாகத் தந்திரமாக அரேபியாவுக்குக் கடத்திச் சென்று அவர்கள் மூலம் காகிதத் தயாரிப்பு முறைகளை அறிந்து கொள்ளலாயினர். சீன முறையில் காகிதத்தைத் தயாரிக்க மூங்கில் கழிகளை வெட்டிக் கழுவி, நீருள் அழுத்தி, நன்கு ஊறவைத்து, அதை மீண்டும் சீவிச் சீவிச் சின்னஞ்சிறு பகுதிகளாக்குவர் பின்னர் அவற்றைத் தூளாக்குவர். அதன்பின் அம் மூங்கில் துளை நன்கு வேகவைத்துக் கூழாக்குவர் சின்னஞ்சிறு துளைகளுள்ள சல்லடை மீது அக்கூழைப்பரப்பி கனமான பொருளைக் கொண்டு அழுத்துவர். நுண் துளை வழியே நீர் வெளியேறிய பின் அந்த ஈரத்தாளை சற்று உலர்த்திய பின் வெளியே எடுத்துக் காய வைப்பர். அதன் பிறகே தாள் பயன்படுத்தக் கூடியதாக அமையும்

மூங்கிலுக்கு மாற்றான தாவர மூலப்பொருட்கள்

ஆனால், காகிதத தயாரிப்புக்கு மூலப்பொருளான மூங்கில் அரேபியப் பகுதியில் அரிதாதலின் வேறு முறைகளைப் பின்பற்றி காகிதம் செய்ய அரபு நாட்டு முஸ்லிம்கள் பேரார்வம் கொண்டனர். இதற்காக ஆய்வாளர்கள் முனைப்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அதன் விளைவாகப் புதிய முறையில் மூங்கிலுக்குப் பதிலாக வேறு சில தாவரப் பொருட்களைப் பயன்படுத்திக் காகிதம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினர். இச்செய்முறை செலவு குறைந்ததாகவும் தரம் மிகுந்ததாகவும் இருந்தது. விரைவாகவும் அதிக அளவிலும் காகிதம் தயாரிக்க இயன்றது விரைவிலேயே இப்புதிய முறையில் காகிதம் தயாரிக்கும் கலை சாமர்கண்ட், பாக்தாது போன்ற இடங்களுக்கும் பரவியது. பின்னர், படிப்படியாக அரபு நாடுகள் அனைத்துக்கும் விரைந்து பரவியது. கல்வியும் கருத்துப் பரவலும் விரைவு பெற்றன. ஆய்வுச் செய்திகளும் செய்தி தொடர்புகளும் புதிய பரிமாணத்தை அடைந்தன. பெருமளவில் நூல்கள் வெளிப்பட ஏதுவாயின.

சாமர்கண்டில் தயாரிக்கப்பட்ட காகிதங்கள் மிக உயர்தரமாக இருந்ததாக ஒரு குறிப்புக் காணப்படுகிறது. கி.பி. 794இல் பாக்தாத் நகரில் பெரும் காகிதத் தொழிற்சாலை ஒன்று இருந்தது.

காய்கறிகள் மூலம் உயர்தரக் காகிதம்

ஜெஹ்மா எனும் நகரில் காய்கறிகளிலிருந்து உயர்தரக் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப் பட்டிருந்தது. இதே போன்ற மற்றொரு காகிதத் தொழிற்சாலை சிரியாவில் இருந்தது. திரிப்போலி நகரக் காகித தொழிற்சாலையில் மிக உயர் தரமான காகிதம் தயாரிக்கப்பட்டது. எகிப்தில் காகிதத் தொழிற்சாலை கி.பி. 900 ஆண்டில் நிறுவப்பட்டது. கி பி , பத்தாம் நூற்றாண்டு வாக்கில் காகிதம் செய்யும் தொழில் நுட்பம் இஸ்லாமிய நாடுகள் எங்கணும் பரவி, அங்கெல்லாம் காகிதத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் உருவாயின. இதனால், எழுத்துக்கலையும் நூல் உருவாக்கமும் துரிதமடைந்தன. கி.பி 837 இல் புதுவிதக் காகிதத்தில் ‘கலீல் அல் ஹதீத்’ எனும் நூலை அபூ உபைத் என்பவர் எழுதி வெளியிட்டார் இந்நூல் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஹாலந்தில் உள்ள லெய்டன் பல்கலைக் கழக நூலகக் காப்பகத்தில் இந்நூல் இன்றும் உள்ளது.

அரபுக் காகிதக் கலை ஸ்பெய்ன் வாயிலாக ஐரோப்பாவுக்கு

அரபு நாடெங்கும் நன்கு பரவி காலூன்றிய காகிதக்கலை கி.பி 1250 இல் மொரோக்கோவிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில் முறை ஸ்பெயின் நாட்டிற்குப் பரவியது. பிறகு அங்கிருந்து எளிதாக ஐரோப்பியர் முஸ்லிம்களிடமிருந்து கற்றனர். அதன் பின்னரே காகிதம் தயாரிக்கும் கலையும் அதன் பயன்பாடும் உலகெங்கும் பரவிநிலை பெறலாயிற்று.

காகிதம் தயாரிப்புக் கலை சீனாவில் பிறந்ததெனினும் அஃது செப்பமான முறையில் உருவாகி வளமாக வளர வழி வகுத்த பெருமை அரேபிய முஸ்லிம் ஆய்வாளர்களையே சாரும். குறைந்த செலவில் சிறந்த காகிதங்களைப் பெருமளவில் உருவாக்கும் தொழில் நுட்பத் திறனை உருவாக்கி உலகுக்கு வழங்கியவர்கள் முஸ்லிம்களே என்பது வரலாற்று உண்மையாகும்.

அரபு மொழியில் ஆயிரக்கணக்கான புதுப்புது தலைப்புகளில் (Topics) நூல்கள் விரைந்து வெளிவர வாய்ப்பாக அமைந்ததற்குக் காகிதக் கண்டுபிடிப்பே அடிப்படைக் காரணமாகும்.

மருத்துவத்துறை வளர்ச்சிக்கு ராஜபாட்டை அமைத்த முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள்

இயற்பியல் அடிப்படையில் கண் ஒளித் தன்மையைச் சரியாக இப்னு அல் ஹைத்தாம் வகுத்தளித்த பின்னர் கண்களைப் பற்றிய ஆய்வுகள் வேகமும் விறுவிறுப்பும் பெற்றன.

கண்ணொளி, பார்வைத் தன்மை போன்றவை பற்றிய நுணுக்கங்களை முதன் முதலாகக் கண்டறிந்து. உலகுக்குணர்த்தி நிலைப்படுத்தி ‘கான்ணொளியியல் தந்தை’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற இப்னு அல்ஷைத்தாம் அவர்களைப் பற்றி முன்பே கூறியுள்ளோம்.இவர் கணிதவியலிலும் இயற்பியலிலும் வல்லுநரேயன்றி உயிரியல் மருத்துவ விற்பன்னர் அல்லர். ஆயினும், கண் ஒளி பற்றிய அவரது புதிய கோட்பாடுகள் மருத்துவத்துறைக்கு வழிகாட்டியாய் அமைந்ததை மறுப்பதற்கில்லை. ஒளி, வண்ணம் பரவுதல் பற்றிய அவரது கோட்பாடுகள் பிற்கால இயற்பியல் வளர்ச்சிக்கு வழிகாட்டிக் கொள்கைகளாக விளங்கின எனலாம்.

அவரைத் தொடர்ந்து கண் சம்பந்தப்பட்ட பல மருத்துவ நுணுக்கங்களைத் திறம்பட அறிந்து கண் மருத்துவத் துறை வளர்ச்சிக்கு வழிகோலியவர் அலீ இப்னு ஹபில் ஹஸ்ம் என்பவராவார்.

முதல் கண் அறுவை சிகிச்சை

மருத்துவ ஆய்வுகள் வேகமாக வளரத் தொடங்கிய போதே ரண சிகிச்சை முறைகளும் ஆய்ந்து, கடைப்பிடிக் கப்பட்டன. இத்துறையில் முத்திரைப் பணியாற்றியவர் கர்மானீ எனும் முஸ்லிம் ரண வைத்திய வல்லுநராவார்.

இவர் ரண சிகிச்சைக்கான புதிய புதிய நுட்பங்களை கண்டறிந்து பல நூறு அறுவை சிகிச்சைகளைத் திறம்படச் செய்தவர்.

கண் அறுவை சிகிச்சை முறையை முதன் முதல் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றி கண்டவர் ஜக்கரியா ராஜ் எனும் கண் மருத்துவ வல்லுநராவார்.

மனித உடல் உறுப்புகளிலேயே மிக நுண்மையான பகுதிகளில் கண் பகுதியும் ஒன்றாகும். இதில் அறுவை சிகிச்சை செய்ய இதன் நுட்பமான நுண் நரம்புகளைப் பற்றி முழுமையான அறிவும் திறமையும் இருந்தாலொழிய இப்பணியில் வெற்றி பெற இயலாது.

கண் நரம்பு நுட்பம் அறிந்த முதல் மருத்துவர்

மனிதனின் கண் நரம்புகளைப் பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதன் அனைத்து அம்சங்களைப் பற்றியும் இப்னு சீனா எழுதியுள்ளார், அவர் அன்று எழுதிய கருத்துக்கள் ஆராய்ச்சியைப் பொருத்தவரை இன்றும் சரியானதாகவே அமைந்திருப்பது உண்மையிலேயே வியப்பளிப்பதாயுள்ளது.

இன்றும் பொருந்துப் பார்வை இயக்கம் பற்றிய புத்தறிவு

கண் ஒளியியல் தன்மைகளைப் பற்றி அலி இப்னு ஹைத்தாம் மிகச் சரியாகக் கண்டறிந்தது போன்றே இப்னு சினாவும் பார்வை இயக்கம் பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் பொருந்துவனவாகவே உள்ளன. கண்

பார்வை இயக்கம் பற்றி முழுமையாகவும் சரியாகவும் ஆய்ந்து கூறிய முதல் அறிவியல் அறிஞரும் இவரேயாவார்.இதே போன்று இருதய அறைகள் பற்றிய ஆராய்ச்சியும் இன்றும் மாற்றமேதும் பெறாததாகவே உள்ளது.

கண்படல உறிஞ்சு அறுவை மருத்துவம்

மருத்துவத்துறை வளர்ச்சியோடு இணைந்து கண் அறுவை மருத்துவமும் வளர்ந்து வந்தது. இதில் புதிய நுணுக்கங்களைக் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றி கண்டவர் அம்மாத் இப்னு அலி அல் மவ்லீலீயே என்பதவராவார்

கண் படலத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு புதுவகை சிகிச்சை நுணுக்கத்தைக் கண்டுபிடித்து முதன் முதலாக அதைச் செயற்படுத்தி வெற்றி கண்டார். மையத்தில் வெற்றிடத்தைக் கொண்ட ஒரு ஊசி மூலம் அவர் கண்படலத்தை உறிஞ்சி எடுக்கும் முறையைக் கையாண்டு வெற்றி பெற்றார். இதே முறையை அடிப்படையாகக் கொண்டே 1846 இல் ஃபிரெஞ்சு நாட்டு மருத்துவ ஆய்வாளரான ப்ளாஞ்சே என்பவர் புத்தாய்வு மூலம் இம்முறையின் சிறப்பை உறுதிப்படுத்தி நிலை நாட்டினார்.

கண்நோய் பற்றிய முதல் மருத்துவக் களஞ்சியம்

மருத்துவ ஆய்வு முயற்சியாக கண் நோய் பற்றிய புதிய ஆய்வுகளும் சிகிச்சை முறைகளும் கண்டறியப்பட்டன இத்துறையில் மிகச் சிறந்த கண் நோய் மருந்துவராக விளங்கியவர் அலீ இப்னு ஈசா எனும் கண்நோய் மருத்துவ வல்லுநராவார் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இவர் கண்நோய்களைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் எழுதியுள்ள நூல் ‘கண நோய் மருத்துவக் களஞ்சியமாக இன்று கண் மருத்து வர்களால் போற்றப்பட்டு வருகிறது இதில் குறிக்கப்பட்டுள்ள கண்நோய் பற்றிய அடிப்படைக் கோட்பாடு பிற்கால மருத்துவ ஆய்வாளர்களால் விரிவுபடுத்தப்பட்டன

கண் அறுவை மருத்துவ வழிகாட்டி நூல்

கண்களில் ஏற்படும் பலகையான நோய்களைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் கூறுவதோடமையாது கண் நோய் மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் விரிவாக விளக்கி அந்த லூசியாவைச் சேர்ந்த முஹம்மது அல் காஃப்கி என்பார் ஒரு நூலை எழுதியுள்ளார்.

கண் அறுவை சிகிச்சையின்போது அவர் பயன்படுத்திய பல்வேறு கருவிகளையும் இதில் குறிப்பிட்டுள்ளதோடு அவைகளைப் படமாகவும் வரைந்தளித்துள்ளார். அன்று மட்டுமல்லாது இன்றும்கூட பயனுள்ள பல தகவல்களைத் தரவல்ல கண்நோய் மருத்துவ வழிகாட்டி நூலாகவிளங்கி வருகிறது.

மயக்க மருந்து கண்டுபிடிப்பில் முதலிடம் பெற்ற முஸ்லிம்கள்

மருத்துவத் துறையில் அதிலும் குறிப்பாக அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்தின் இன்றியமையாமையை முதன் முதல் நன்கு உணர்ந்து, அத்தகைய மருத்துவத்திற்கான மயக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்கள் முஸ்லிம்களே என்பதைஅன்றைய மருத்துவ வரலாற்றுச் செய்திகள் இன்றும் விரிவாக விளக்கிக் கூறிக் கொண்டுள்ளன

அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருக்கச் செய்ய சில வழிமுறைகள் முன்பே கண்டறியப்பட்டிருந்தன. சீன நாட்டில் தோன்றிய ‘அக்குப்பஞ்சர்’எனும் ஊசி குத்தல் மருத்துவம் பற்றி முன்பே கூறினோம்.இம்மருத்துவ முறையில் உடலின் குறிப்பிட்ட இடங்களில் ஊசிகளைக் குத்துவதன் மூலம் அப்பகுதி மரத்துப் போகுமாறு செய்யப்படுகிறது. எவ்வித மயக்க உணர்வும் இல்லாது நோயாளி நல்ல விழிப்போடு இருக்கும் போதே தேவையான அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. வலியேதும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு இம்முறை ஏற்றதாகக் கருதப்பட்டது.

ஆனால், மருத்துவத்துறையில் குறிப்பாக அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்து தருவதன் மூலம் நோயாளி நினைவிழக்கச் செய்யும் முறையை முதன்முதலில் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றியடைந்தவர்கள் முஸ்லிம் மருத்துவ ஆய்வாளர்கள் ஆவர். இதன்மூலம் மயக்கமுற்ற நோயாளி மன அமைதியுடன் அறுவை மருத்துவரோடு நன்கு ஒத்துழைக்க இயன்றது. நோயாளிக்கு வலியேதும் தெரியாமல் அறுவை மருத்துவம் செய்து கொள்ளவும் நன்கு முடிந்தது.

இத்துறையில் முத்திரைப் பணியாற்றி வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் அஸ்ஸஹ்ரவி ஆவார். ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த இவர் அறுவை மருத்துவ முறைகளை விளக்கும் மருத்துவத் தகவல் களஞ்சிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலுள் மனித உடலின் அமைப்பை மிகச் சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளார் புண்களை ஆற்றும் போதும், எதிரிகளால் பாய்ச்சப்பட்ட அம்புகளை அப்புறப்படுத்தும்போதும் சாதாரண அல்லது சிக்கலான எலும்பு முறிவை சரிப்படுத்தும்போதும் அப்பகுதிகளை மரத்துப் போகச் செய்யும் சிகிச்சை முறைகளையும் இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அத்துடன் புண் போன்ற லைகளைச் சிகிச்சை செய்யும் போது நச்சுத் தடைகளை உண்டாக்குவதற்கும் பேண வேண்டிய முறைகளைத் தெளிவாகக் கூறுகிறது. அறுவை சிகிச்சையின்போது திறக்கப்பட்ட பகுதிகளைத் திரும்ப மூடித் தைக்கப் பயன்படும் நூலிழைகளை மிருகங்களின் குடல்களிலிருந்தும்,பட்டு நூலிலிருந்தும், கம்பளி இழைகளிலிருந்தும் தயாரிக்கும் முறைகளையும், தையல் நூலிழைகளைக் கொண்டு தைக்கும் முறைகளையும் மிகச் சிறப்பாக எடுத்து விளக்குகிறது.

அது மட்டுமல்ல, மகப்பேறு மருத்துவம், குழந்தை நோய்கள் பற்றி தனிப்பிரிவு விளக்குகிறது. மகப்பேற்றின்போது மருத்துவச்சிகளும் தாதிகளும் நடந்து கொள்ளவேண்டிய முறைகளையும் செயற்பாடுகளையும் தெளிவாகக் கூறுகிறது.

இவர் இம் மருத்துவக் களஞ்சிய நூலில் அறுவை சிகிச்சைக்கென தான் பயன்படுத்திய சுமார் இருநூறு வகையான அறுவை சிகிச்சைக்கான கருவிகளையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறுவதோடு, அவற்றில் சில கருவிகளுடைய படங்களைக்கூட வரைபடமாக வரைந்து விளக்கியுள்ளார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் மகப்பேற்றிற்குப் பின்னர் சிசு பராமரிப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதாகும்

விரல் தட்டு நோயறி முறை

நோயின் தன்மையை அறிய நாடித் துடிப்பை அளவிடுதல், உடலைத் தொட்டு அறிதல் போன்ற பலமுறைகளைக் கையாண்டு நோயறிந்து மருத்துவம் செய்து வந்தனர். இப்னு சினா கண்டறிந்த நோய்றி முறைகளுள் ஒன்று. நோயாளியின் உடலைவிரலால் மெல்லத்தட்டுவதன் மூலம் அறிந்து கொள்ளும் முறையாகும். வியன்னாவின் புகழ்பெற்ற மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான லியோபோல்டு ஆவென் பிரக்கர்(1722-1809) விரலால் உடலைத் தட்டி நோய் அறியும் புதுமுறையைக் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த புதுமுறையும் இப்னு சினாவின் முறையும் ஒன்றாகவே அமைந்திருப்பது மற்றொரு வியப்பூட்டும் செய்திய பகும்

அன்று கண்டறிந்த நீரழிவு பகுப்பாய்வே இன்றும்

‘டையாபட்டிஸ்’ என்று கூறப்படும் நீரிழிவு நோய் இன்று உலகெங்கும் உள்ள ஒரு நோயாகும். இன்றுள்ளது போல் அதிக அளவில் அன்று இல்லாவிட்டாலும் குறைந்த அளவிலேனும் இந்நோய் இருந்தே வந்துள்ளது. இந்நோக்கான மருத்துவ முறைகளும் அன்றைக்கும் ஓரளவு இருந்தே வந்துள்ளது. நீரிழிவு நோயைப் பற்றி மாபெரும் மருத்துவ மேதையான இப்னு சினா மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இந்நோய் பற்றித் தான் கண்டறிந்த கண்டுபிடிப்புகளைப் பற்றி தன் மருத்துவ நூல்களில் பதிவு செய்துள்ளார். நீரிழிவு நோய் பற்றி இப்னு சினா செய்த பகுப்பாய்வும் அண்மைக்காலத்தில் உலகின் மிகச்சிறந்த நீரிழிவு நோய் வல்லுநரான தாமஸ் வில்லிஸ் என்பவர் செய்த நீரிழிவு நோய் பகுப்பாய்வும் வேறுபாடின்றி இருப்பது மருத்துவ உலக அதிசயமாகக் கருதப்படுகிறது,

மருத்துவ உலகின் மற்றொரு மாமேதையாகத் திகழ்ந்த அல் ராஸீ, இப்னு சினாவின் ‘அல் கானூன்’போன்று வெறும் மருத்துவக் கோட்பாடுகளை மட்டும் கூறாது. நடைமுறைக்கேற்ற மருத்துவ முறைகளை விவரித்துக் கூறும் வகையில் பல்வேறு குறிப்புகளைக் கொண்ட நூலாக கிதாபுல் ஹாபி’ (பல்துறை மருத்துவக் களஞ் சியம்) எழுதியுள்ளார். இஃது ஐந்து தொகுதிகளைக் கொண்டதாகும். இத்தொகுதிகளில் அடங்கியுள்ள தலைப்புகளைப் பார்க்கும்போது அன்று மருத்துவத்துறை எத்தகைய வளமான வளர்ச்சியை எட்டியிருந்தது என்பதை நன்கு அறிந்துணர முடியும்.

முதல் தொகுதி மருத்துவவியலின் பொதுக் கோட்பாடு பற்றி விவரிக்கிறது

‘மருந்து, அதன் பயன்பாட்டு, எல்லை; மனப்போப்கு உறுப்புகளின் அமைவு, இயக்கம், வயது, பாலினம் ஆகியவற்றின் நோக்கம் ; குருதி கோழை, பித்தம் ஆகிய நீர்மப்பொருள்களின் இயல்பு: உறுப்புகளின் நோய்கள்; தசைநார்கள்; சதைப் பற்று ; நரம்புகள்; குருதிக் குழாய்கள் ;நாளங்கள்: உறுப்பியக்கங்கள்; நோய்கள்; அவற்றிற்குரியகாரணங்கள் (Aetiology), நோய்க் குறிகள் : நாடி ; சிறுநீர் பல்வேறு வயதினர்க்குரிய பத்திய உணவுத் திட்டங்கள் ; தடுப்பு மருந்துகள்; தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் மாறுதல்கள்; அவற்றுக்கான சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றி இம் முதல் தொகுதி விளக்குகிறது.

இரண்டாவது தொகுதியில் இரு பகுதிகள் உள்ளன.முதல் பகுதி மருந்துகளின் தன்மைகளை ஆய்வு முறைகளாலும் சோதனைகளாலும் அறிவது எப்படி என விவரிக்கிறது, மருந்துப் பொருட்களைச் சோதனை செய்வது என்றால் அவை எப்படி இருக்க வேண்டும்; பிற மாறுதல்களால் அவை பாதிக்கப்படாமல் இருத்தல்; கடுமையற்ற சிறிய நோய்களுக்கு எதிர்மறை மருத்துவமுறையைப் பயன்படுத்தி பரிசோதித்தல், நோயின் தன்மைக்கும் கடுமைக்கும் தக்கவாறு இருக்கிறதா எனத் தீர்மானித்தல் போன்றவை பற்றி விளக்குகிறது. மருந்துப் பொருட்களின் செயல்படுமுறை; பல்வேறு மருந்துச் சரக்குகளைப் பாதுகாத்து வைக்கும் வழிகள் ஆகியவை பற்றிய பொது விதிகள் குறித்தும் விவாக விவரிக்கிறது .

மூன்றாவது தொகுதி நோய் உண்டாவதற்கான காரணங்கள்; நோயின் அறிகுறிகள்; நோயாளியின் வெளிப்படையான அறிகுறிகளை வைத்து நோயை முடிவு செய்தல்; இன்ன நோய் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிதல்; நோயின் கடுமையைத் தணிக்கும் மருத்துவ முறைகள் ஆகியவைகளைப் பற்றி மிகத் தெளிவாக விவரிக்கிறது. மேலும், தலை சம்பந்தப்பட்ட நோய்கள்;இயல்பு கடந்த மூளை இயக்கம்; தலைவலி; காக்கை வலிப்பு நோய்; முடக்கு வாதம்; கண், காது மூக்கு,தொண்டை ஆகியவற்றில் உண்டாகும் நோய்கள் ; சிறு நீர் தொடர்பான (Genitour.nary) உணவுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்கள்; தசை நார்கள், மூட்டுகள், கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் நோய்கள் போன்றவை பற்றியும் விரிவாக விவரிக்கிறது.

பொதுவான நோய்கள் பற்றி நான்காம் தொகுதி விளக்குகிறது. காய்ச்சல் வகைகள்; அவற்றிற்கான சிகிச்சை முறைகள்; உடலில் ஏற்படும் பலவகை வீக்கங்கள் ;கட்டிகள், கொப்புளங்கள் ; தொழுநோய்; சிறு அறுவை சிகிச்சைகள் ; வெட்டுக்காயங்கள்; அவற்றுக்கான சிகிச்சை முறைகள்; சீழ்பிடிக்கும் புண்கள்; சுரப்பிகள் போன்றவை பற்றியும் பல்வேறு வகையான நச்சுப் பொருள்கள் பற்றியும் அழகுக் கலை பற்றியும் விவரிக்கிறது.

ஐந்தாவது தொகுதி மருத்துவத் துறையின் முக்கியப்பகுதியான மருந்தியல் பற்றிக் கூறுகிறது. இஃது மருந்துப்பட்டியல் குறிப்புகளை ஏராளமாகச் கொண்டுள்ளது. இதற்கு முன் இத்தகைய மருந்துப் பட்டியலைத் தக்க குறிப்புகளோடு அல் கிந்தீ (கி பி. 800-873) என்பவர் தந்துள்ளார். அவருக்குப் பின்னர் இப்னு சினா இத்தகைய மருந்துப் பட்டியல் ஒன்றைத் தொகுத்தளித்துள்ளார். இவ்வைந்தாம் தொகுதி சிறப்பு மருந்துகளின் தன்மைகள் தயா ரிக்கும் முறைகள்:கருநிலைப்படும்மருந்துகள்;மலக்குடல், சிறுநீர்த்ளை போன்றவற்றில் கரைய விடப்படும் குளிகைகள், பாகுகள்; மருந்துப் பொடிகள்; கஷாயங்கள்;மருந்துக் கலவைகள், அருமருந்துகள்; பல்வேறு நோய்களுக்கு மருந்து தரும் முறைகள்; எடைகள்; அளவைகள் பற்றிய விவரங்களைக் கொண்டதாகும்.

முதன் முதலில் இரத்தவோட்ட நுணுக்கம் அறிந்தவர்

இரத்தவோட்டம் பற்றிய பல்வேறு நுட்பச் செய்திகளை வில்லியம் ஹார்வி கண்டறிவதற்கு முன்பே இரத்தவோட்டம் பற்றிய நுணுக்கங்களை கண்டு பிடித்து உலகுக்கு உணர்த்தியவர் இப்னு அல் நாபிஸ் என்பவராவார். இவர் செர்வடெஸ் என்னும் ஸ்பானிய மருத்துவ விஞ்ஞானிக்கும் பல நூற்றாண்டுகட்கும் முன்பே சுவாசப்பை இரத்தவோட்ட த்தை (Palmonary circulation of blood) கண்டறிந்து கூறினார்.

இவர்களைப் போன்றே மருத்துவத் துறை வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய முஸ்லிம்கள் அலி இப்னு அல் அப்பாஸ், இப்னு சுலைமான், இப்னு ஹிபுத்தா, இப்னு அலி ஸஹ்ரவி, இப்னு அலி அல் ஆலா யுஹன்னபி மூசா அபுல் கைர் அபூ கோலத் போன்ற மருத்துவத் துறை பேரறிஞர்கள் ஆவர்.

உலகின் முதல் பொது மருத்துவமனை

மருத்துவம் வளர்ச்சி பெற மருத்துவமனைகளே நிலைக்களனாக அமைய முடியும் என அன்றைய அரபு நாட்டுக்கலீஃபாக்கள் கருதினார்கள். மருத்துவமனைகள் மூலம் மருத்துவக் கல்வியைப் பெருக்கவும் மருத்துவ ஆராய்ச்சி களை வளர்க்கவும் மக்களை உடல் நலத்துடன் வாழத்தூண்டவும் முடியும் என நம்பி தங்கள் மேற்பார்வையில் பொது மருத்துவ மனைகளை உருவாக்கினார்கள். இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் பாக்தாது நகரில் உருவாக்கப்பட்ட 'அதூதி' பொது மருத்துவ மனையே உலகின் பெரிய அளவில் உருவான பொது மருத்துவமனையாகும். இருபத்து நான்கு மருத்துவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்பொது மருத்துவ மனை பெரும் நூலகம் ஒன்றையும் மருத்துவம் பற்றி விரிவுரைகள் நிகழ்த்த சொற்பொழிவுக் கூடங்களையும் கொண்டு விளங்கியது.

தொடர்ந்து பொது மருத்துவமனைகளின் தோற்றம்

மருத்துவத் துறை வளர்ச்சியில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்களோ அதே அளவுக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவமனைகளை நிறுவுவதிலும் பேரார்வம் காட்டினர்.

கலீஃபா அல் முத்தவக்கில் ஆட்சிபுரிந்த போது மக்களின் உடற்பிணி அகற்றும் மருத்துவமனைகளை நிறுவுவதில் பெரு முயற்சி மேற்கொண்டார். இரண்டாவது பொது மருத்துவமனையை கெய்ரோவில் உருவாக்கினார்.பின்னர், ஐயூபி கலீஃபாக்கள் ஆட்சி நடந்தபோது எகிப்து நாட்டின் பல பகுதிகளிலும் பொது மருத்துவமனைகள் நிறுவி மக்களின் உடல் பிணி போக்க வகை செய்தனர்.

இதுவரை பொது மருத்துவமனைகளில் இலவச மருத்துவமும் மருந்தும் பெற இயன்றது. ஆனால் 872இல் கெய்ரோவின் ஆளுநராக இருந்த இப்னு தூலூன் என்பவர் பெரும் பணச் செலவில் கெய்ரோவில் ஒரு மருத்துவமனையைக் கட்டுவித்தார். இம்மருத்துவமனையில் மருத்துவமும் மருந்தும் மட்டும் இலவசம் அல்ல. நோயாளிக்குத் தேவையான உணவும் அவர்கள் தங்கி மருத்துவம் பெறவேண்டிய அவசிய நிலை ஏற்படின் தங்கும் இடமும் இலவசமாக அளிக்கப்பட்டது. அத்துடன் இம் மருத்துவமனையில் ஒவ்வொரு நோய்ப் பிரிவுக்கும் தனித்தனிப் பகுதிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

மனநோய் மருத்துவமனைகள்

உடல் நோய்க்கு மட்டுமல்லாது உளநோய்க்கும் மருத்துவம் செய்ய வழி காணப்பட்டது. பைத்திய வைத்தியத்திற்கென தனி மனநோய் மருத்துவமனைகள் இஸ்லாமிய நாடெங்கும் உருவாக்கப்பட்டன. மனநோயாளிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் கவனிக்கப்பட்டார்கள்.

அக்காலத்தில் மனநோய் மருத்துவமனைகள் உட்பட, நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளின் வேதனைகளைக் குறைக்கவும் அவர்கட்கு நம்பிக்கையூட்டவும் அவர்களின் மன நிலைகளைச் செழுமையாக வைத்திருக்கவும் இசைவாணர்கள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணியாற்றினர் என்ற குறிப்பு நோயாளிகள் எந்த அளவுக்கு மனிதத் தன்மையோடும் நேயத்தோடும் நடத்தப்பட்டனர் என்பதைத் தெளிவாக்குகிறது.

பெண் நோயாளிக்கென தனி மருத்துவப் பகுதி

அக்கால மருத்துவமனைகளில் மற்றொரு தனிச்சிறப்பு உண்டு. அதுதான் பெண் நோயாளிக்கென தனிப் பகுதி இருந்ததாகும். அங்கே பெண் மருத்துவர்களே பெண் நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்தனர். மருத்துவமனைகள் மிகப் பெரிய கட்டிடங்களில் இயங்கின. சுல்தான் சலாஹுத்தீன் தனது அரண் மனைகளில் ஒன்றை மருத்துவமனை அமைக்க வழங்கினார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றில் காணும் செய்தியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/8&oldid=1637066" இலிருந்து மீள்விக்கப்பட்டது