அண்ணாவின் சொல்லாரம்/கலையும் வாழ்வும்

கலையும்
வாழ்வும்

கலைத் துறையினரின்
கனிந்த உதவி

நாட்டிற்கு ஏதாவது இன்னல்கள் வந்தாலும் மக்கள் துயர் பட்டாலும் கலைத்துறையில் உள்ளவர்கள் தட்டாமல் தயங்காமல் உதவி வந்திருக்கிறார்கள். அவர்கள் உதவுவது மட்டுமல்ல, பொது மக்களிடமிருந்தும் நிதி திரட்ட உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

கலைத்துறையினருக்குள்ள வள்ளல் தன்மையையும் இன்னலுற்றபோது உதவும் ஈகைத் தன்மையையும் பாராட்டும் அதே நேரத்தில் அந்தத் துறைக்கு வருவாயும் இருந்திட வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்.

“அரசாங்கம் எவ்வளவு கெடுதல் செய்தாலும் அவர்கள் நாணும்படி நாங்கள் நன்மை செய்து வந்திருக்கிறோம்" என்று திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் பழைய கதையின் கடைசி அத்தியாயத்தைப்பற்றி குறிப்பிட்டதாகத்தான் தோன்றுகிறதே தவிர புதிய கதையின் முதல் அத்தியாயத்தை அல்ல!

தொடர்ச்சியாகச் செய்துவரும் எந்தக் காரியத்தையும் திடீரென்று இடையில் புகுந்து எதுவும் செய்துவிட முடியாது. அது திரைப்படத் துறையினருக்கு தெரியும். ஆயிரம் அடி எடுத்த படத்தை இன்னொருவர் பொறுப் பேற்றுச் செய்வதென்றால் எத்தனை ஆயிரம் அடி நீக்கவேண்டிவரும்? வில்லன் கதா நாயகன் ஆவானா? கதா நாய்கன் வில்லன் ஆவானா? என்பதெல்லாம் நிலைமைக் கேற்பத்தான் மாறும். இதுபோல இடையிலே வந்திருக்கும் நாங்கள் எதையும் ஒரேயடியாக மாற்றிவிட முடியாது. ஆனால்; படிப்படியாக மிகுந்த அக்கறையுடன் பிரச்சனைகளை கவனிப்போம்.

நமது கலை
உன்னதமானது!

நமது தமிழகத் திரைப்படக் கலை பிறர் பாராட்டத்தகும் அளவு நேர்த்திபெற்றிருக்கிறது. நான் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் மூலம் வடநாடு சென்றிருந்தபோது வடநாட்டில் ஒரு தாலுகா தலைநகரில் ஒரு சினிமாப் படம் பார்க்கச் சென்றேன். படத்தின் துவக்கத்தில் ஏ.வி.எம். என்று காட்டப்பட்டவுடன் அவர்கள் கை தட்டினார்கள். கதை இன்னது என்று தெரியாதபோதே கூட நமது கலை உன்னதமாக இருக்கும் என்ற நினைப்பில் அவர்கள் கை தட்டினார்கள். அந்த நேரத்தில் நான் உள்ளபடியே பெருமைப்பட்டேன்.

முன்பெல்லாம் வடநாட்டைப் பார்த்து, அதன் திரைப்படக்கலை நுணுக்கங்களை நமது படத்தில் புகுத்தி வந்தோம். இப்போது அவர்கள் நமது கலையை — கதையைப் பார்த்து தமது படத்தில் புகுத்துகிறார்கள் என்றால் - இது நமது திரைப்படக் கலையின் நேர்த்தியைக் காட்டுவதாகும்.

வரி குறைய வேண்டும் என்று தமிழக அரசினைக் கேட்பதைவிட திரைப்பட விஞ்ஞானக் கருவிகளை இறக்குமதி செய்வதில் மத்திய அரசு தாராள, மனப்பான்மை காட்டவேண்டும் என்று திரைப்பட வர்த்தகச் சங்கம் கோரினால், வெளி நாடுகளுக்கு படம் அனுப்பி வளம் ஏற்படுத்திக்கொள்ள திரைப்படத் துறைக்கு வாய்ப்புக் கிடைக்கும். அப்படிப்பட்ட கோரிக்கைகளை எடுத்துவைத்து மத்திய அரசிடம் வாதாடுவதில் திரைப்படத் துறையினருக்கு நான் நண்பனாக இருப்பேன். எதிர்காலத்தில் திரைப்படத் துறையின் கஷ்டங்களைப் போக்குவதில் என்னைவிடச் சிறந்த நண்பன் இருக்கமுடியாது என்ற முறையில் நடந்துகொள்வேன்.

ஒருவருக்கொருவர்
உதவுதல் வேண்டும்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழகத்திலுள்ள இயற்கைக் காட்சிகளின் அழகை - உதகமண்டலத்தின் சிறப்பைக் குற்றாலத்தின் எழிலை - கொடைக்கானலின் சிறப்பை - மணிமாடக் கூடங்களை - தமிழகத்தின் சிறப்புமிக்க விழாக்களை - தமிழ்ப் பண்பாட்டை விளக்கி - சுற்றுப் பயண ஆர்வத்தை பிறநாட்டாரும் ஏற்கும்படி அமையும்படி இலவசமாகத் தயாரித்தளிக்க வேண்டுகிறேன். முடிந்தால் மத்திய அரசுடன் பேசி, படம் எடுத்த செலவைப் பெற்றுத்தரவும் முயலுகிறேன். -

அதேபோன்று குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றியும் தனியான திரைப்படம் எடுக்க வேண்டும். நமது படங்களில் அந்தக் கருத்து இடையிடையே வருகிறதே தவிர முழுக்க. முழுக்க அந்த நோக்குடன் படம் எடுக்கப்படவில்லை. அந்த முயற்சியிலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஈடுபடலாம்.

மற்றோர் படம் - கலப்படத்தைப் பற்றி எடுக்கலாம். ஒருவர் கலப்படம் மூலம் சம்பாதிக்கும் பணம் மேலும் பல கலப் படங்களைச் செய்யத்தான் பயன்படுகிறது. அவருக்கோ நாட்டுக்கோ நன்மை ஏற்படுத்தும்படி இல்லை என்று கூறும் கருத்துக்கு இசைந்த படம் ஒன்றை எடுக்கலாம்.

இவ்விதம் திரைப்படத் துறையினர் சர்க்காருக்கு உதவவும், சர்க்கார் அவர்களுக்கு உதவவும் இருவரும் சேர்ந்து நாட்டுக்கு உதவவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

கலையில்
அரசியல் பின்னிக் கிடக்கிறது!

திரைப் படத்தின் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்த முடியும். ஆனால், நினைக்கிறபடி புகுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த நிலையை மாற்றிட நாம் அனைவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காலமும் அதற்கேற்றபடி கனிந்து வருகிறது,

கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அரசியல் என்பதே ஒரு கலை தான் என்பது அறிஞர்கள் கண்ட முடிவு.

அரசியல் ஒரு கலையா ? அல்லது வெறும் கருத்துக் குவியலா?— என்று ஆராய்ந்த பேரறிஞர்கள் — அரசியல் என்பது கருத்துக் குவியல்களின் வழி மக்களைத் திருப்பிட அவர்களைத் திருத்தும் ஒருகலை—என்றே முடிவு கட்டியிருக்கிறார்கள்.

கலை என்பது மக்களைக் கட்டி யாள்வது—அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத்துவது.

கலை என்பது நிழல் உருவில் இருப்பது— அரசியல் நிஜ உருவத்தில் இருப்பது.

கலை என்பது உடனடித் தேவைகளுக்காக இயங்குவதுஅரசியல் என்பது நீண்ட காலத் தேவைகளுக்காக இயங்குவது.

ஆகவே, கலையும் அரசியலும் பின்னிப் பிணைந்தவை. இதை உணர்ந்த பிறகும், கலையில் அரசியல் வரலாமா-அரசியலில் கலை புகலாமா— என்று கேட்பது 18ம் நூற்றாண்டின் கருத்தாகத்தான் இருக்க முடியும்;

நாம் அறிந்த அரசியல் தலைவர்களின் கலை ஈடுபாடு கண்டு நாம் தெளிய வேண்டும். இரண்டாம் உலகப்போர் நடை பெற்ற வேளையிலும் கூட ஓய்வு கிடைக்கும் போது வின்ஸ்டன் சர்ச்சில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

உலகத்தில் மிகச் சிறந்த அரசியல் வாதியான ஆப்ரகாம்லிங்கன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டிதநேரு இங்கிலாந்து செல்கிறபோது அங்கு நடை பெறும் புகழ்மிக்க நாடகங்களைப் பார்ப்பது வழக்கம்.

தமிழகத்தில் அரசியல் உணர்வை ஊட்டிய சத்திய மூர்த்தி அவர்களுக்கு சங்கீத நடனம் ஆகியவற்றிலே பெரு விருப்பம் இருந்ததோடு—நாடகங்களில் அக்கறை கொண்டதோடு—சில நாடகங்களில் பங்கேற்று —வேடமும் தாங்கியிருக்கிறார்.

ஆகவே கலையும் அரசியலும் இணையக் கூடாது என்பது சரியல்ல—கலையிலும் அரசியலிலும் சரியானபடி இருக்க இயலாதவர்கள் தான் அப்படிக் கூறுவார்கள்.

ஆனந்த விகடனில், கல்கி எழுதியதாக நினைவு—ஒரு முறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தன் பையிலிருந்த பொரி விளங்காய் உருண்டை ஒன்றை எடுத்துச் சாப்பிட்டாராம்.

உடனே எதிரில் இருந்த ஒருவர் கல்கியைப் பார்த்து ‘நீங்கள் காங்கிரஸ்காரரா' என்று கேட்டாராம். “ஆம்” என்றார் கல்கி. அதற்கு அவர், பொரி விளங்காயை காங்கிரஸ் காரன் சாப்பிடலாமா” என்று கேட்டார்."ஏன் சாப்பிடக் கூடாதா”? என்று கல்கி வினவினார்.

அதற்கு, அவர், "பொரி விளங்காயைச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள இனிப்பில் நாட்டமிருக்கிறது என்பது தெரிகிறது. இனிப்பில் நாட்டம் செலுத்தினால் தேசபக்தி வருமா" என்று கேட்டார்.

இதிலிருந்து தெரிவது— அரசியல் அடிப்படைக் கருத்து விவாதங்களுக்குப் பதில் தனி மனிதனைப் பற்றிய விவாதங்கள் வளருகிறது என்பதுதான்.

கல்கி அவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி நடந்தது 30 வருடங்களுக்கு முன்! இப்போது கூட அரசியல் கருத்துக்களை விட்டு விட்டு, தனிப்பட்டவர்களை விமர்சிப்பது எதைக் காட்டுகிறது ? கல்கி ரயிலில் கண்ட மனிதர்கள் 30 வருடங்களுக்குப் பிறகும் வயதான நிலையில் உலவிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

நெகிழ்ச்சி தருவது கலை-அதை
நெறிப்படுத்துவது அரசியல்

கலை என்பது மக்களின் மனதில் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாகும். எந்த நாட்டிலுமில்லாத முறையில் தமிழகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி மாந்தர் நெஞ்சில் குறைவானது. அதிக முயற்சி இல்லாமல் தமிழக நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும். அதற்குக் காரணம் நெகிழ்ச்சி என்ற சொல்லில் சிறப்பு'ழ'கரம் இருக்கிறது.

தமிழிலிருந்து பல நாட்டவர்கள் எதை எதையோ எடுத்துக் கொண்டனர். பரத நாட்டியத்தைக் கூடக் கற்றுக் கொண்டனர். ஆனால் அந்த ‘ழ’வை மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சிறப்பு 'ழ'கரம் இருக்கிற காரணத்தால் தமிழகத்துக் கலை மிக விரைவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

மனம் நெகிழச் செய்வது கலை !

நெகிழ்ந்த மனம் நெகிழ்ந்து கொண்டே போனாலும் பயனில்லை. நெகிழாமல் இருந்தாலும் தவறு. ஆகவே மனம் நெகிழ வேண்டும் கலையால்! அப்படி நெகிழ்ந்ததை வழிப்படுத்துவது—பயன் பெறச் செய்வது—அரசியல்.

உள்ளத்தை நெகிழச் செய்யும் திறன் படைத்த கலைஞர்களிடமே—நெகிழ்ந்த உள்ளத்தை வழிப்படுத்தும் அரசியலும் இருந்தால் தவறு இல்லை. தவறு இல்லை என்பது மட்டு மல்ல —பொருத்தமிருக்கிறது; பொருளுமிருக்கிறது இந்தக் கருத்துக்களை உலகம் உணர்ந்து நடக்கும் காலம் கனிந்து வருகிறது,

மக்களிடம்
விருது பெற்றவர்கள்!

தமிழ் நாட்டின் தலை சிறந்த கலைஞர் என்ற முறையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சங்கீத. நாடக சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறும் கலைஞர்கள் நீண்ட நாளைக்கு முன்பே பொதுமக்களின் நல்வாழ்த்துக்கள் என்ற விருதுகளைப் பெற்றவர்கள் தான். என்றாலும் நாமும் நமது பங்கைச் செலுத்தா விட்டால் எங்கே தவறாகக் கருதிவிடப் போகிறார்களோ என்று கருதித் தான் விருது வழங்குகிறோம்.

பெரும் புலமை பெற்ற இந்தக் கலைஞர்கள் பொது மக்களின் மத்தியில் நல்ல நிலை பெற்றிருப்பவர்கள். கலையால் இவர்கள் முன்னேற்றம் கண்டிருப்பதுடன் அவர்களை ஒத்தவர்களையும் நாட்டுக்குத் தந்திருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்களைப் பாராட்டுவதிலேயும் விருது வழங்குவதிலேயும் அரசாங்கமும் இந்த அமைப்பும் பெருமைப்படுகிறது.

ஏழ்மையிலும் வளர்கிறது
நமது கலை!

மற்ற நாடுகளின் கலைச் சிறப்புக்கும் நமது நாட்டின் கலை வளர்ச்சிக்கும் அடிப்படையான ஒரு வித்தியாசமிருக்கிறது. செல்வ வளத்தோடு மற்ற நாடுகளிலே கலையை வளர்க்கிறார்கள். ஆனால் நம்முடைய நாட்டிலோ ஏழ்மை இருக்கும் போதே கலையும் வளர்க்கப் படுகிறது. நம்முடைய நாட்டு மக்களும் வறுமை நிலையிலும் கலைச் சுவையை--நுகருகிறார்கள்--கலைஞர்களை வாழ்த்துகிறார்கள்--வளர்க்கிறார்கள் --கலையை வளம் பெறச் செய்கிறார்கள் என்றால், செல்வச் செழிப்பிலே இந்நாட்டு மக்கள் இருப்பார்களானால் கலையை வளர்க்கும் கலைஞர்களை எவ்வாறெல்லாம் போற்றுவார்கள் பாராட்டுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற பிரமை ஏற்படுகிறது.

சங்கீதம்-அதிலும் புராதனச் சங்கீதத்தை வளர்ப்பவர்கள் வாழ்நாளில் பல முறை சொல்லியிருப்பார்கள்; "எதற்காக நாம் இப்படி இருக்கிறோம்" என்று சலிப்படைந்து விட்டு, வீட்டிலேயுள்ள தமது மக்களைப் பார்த்து "எனக்கு இதிலே ஏதோ பிடித்த மேற்பட்டது! உனக்கு இந்த வேலை வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு சங்கீதக் கலையை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பார்கள்.

வீடு தேடி யாராவது ஆள் வந்தாலும் " ஆகா ! கச்சேரிக்காகத்தான் வருகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சிதான் ஆயிரம் பொற்காசுகளை விட அதிக மகிழ்ச்சி தரக் கூடியது. அந்த மகிழ்ச்சிதான் உயர்வானதும் கூட!

கலையின் ஒவ்வொரு துறையிலிருந்தும் பணியாற்றும் கலைஞர்கள் அந்தந்தத் துறைகளை நேர்த்தியாக வளர்ப்பது. மட்டுமல்ல, மற்ற நாட்டினரும் புகழத்தக்க விதத்தில் நற்பணி ஆற்றி வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நான் கம்போடியா நாட்டுக்குச் சென்றிருந்த போது, கம்போடியா நாட்டியம் பார்த்தேன். அந்த நாட்டியத்தைப் பற்றி முன்னமே எனக்கு நிரம்பச் சொல்லியிருந்தார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியைக் காண அமெரிக்கச் சீமான் வீட்டுப் பெண்கள் இருவர் வந்திருந்தனர்.

உடலோடு
உள்ளமும் ஆடும்

அந்த நாட்டு நாட்டியம் மிகவும் தாமதமாக நடப்பது. ஒரு பக்கமிருந்து கையை மறுபக்கம் கொண்டுவருவதற்குள் —ஒரு நிலையிலிருந்து காலை இன்னொரு பக்கம் கொண்டு வருவதற்குள் நான்கு முறை நாம் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வோம் — அந்த அளவுக்குத் தாமதமாக நடக்கும். ஆனால் அதிலே நிரம்ப பாவம் இருக்கும் என்பார்கள்.

அமெரிக்கப் பெண்மணிகள் நாட்டியப் பெண்மணிகளைப் போலவே விரல்களை அசைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் முடிய வில்லை. அவர்களுக்குப் பக்கத்திலே அமர்ந்திருந்த நான் சொன்னேன் "கம்போடியா நாட்டியத்தைக் கற்றுக் கொள்ள - விரல்களை அசைக்கவே இவ்வளவு கஷ்டப் படுகிறீர்கள் - எங்கள் தமிழ் நாட்டு பரதநாட்டியத்தை எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடியும்? கைகள் மட்டுமல்ல - கண்கள் மட்டுமல்ல - உடல் மட்டுமல்ல - உள்ள மெல்லாம் ஆடுமாறு ஆடுவார்கள்” என்றேன். அப்படிப்பட்ட நாட்டியத்தைக் காண விரும்புவதாக அமெரிக்கப் பெண்மணிகள் கூறினார்கள்.

இசை — நாட்டியம் மற்ற மற்ற துறைகளிலுள்ளவர்களில் பெரும்பாலோர்,வாழ்வின் பெரும்பகுதியை ஏழ்மையில் கழித்திருக்கிறார்கள்.

நாட்டுக்குக் கலைச் செல்வத்தைத் தருகிறவர்கள் விருது பெற்றிருப்பதால் தான் நான் பெருமைப்படைகிறேன். இத்தனை பண்டைக் கலைகளும் ஒரு சேர நவீன முறையில் அமைந்திருப்பதுதான் சினிமாத்துறை! நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளத்தில் நெகிழ்ச்சியை — மகிழ்ச்சியை உண்டாக்கும் தலை சிறந்த சாதனமாக விளங்குவது சினிமாத்துறை. அந்தத் துறையிலும் சிறந்த கலைஞர்கள் விருது பெற்றிருப்பது பாராட்டுக்குரியது-- வாழ்த்துக்குரியது !

பண்பை விளக்கப்
பயன்படும் கலை

தமிழர்கள் வாழ்விலும் தாழ்விலும் வெற்றியிலும் தோல்வியிலும் கலையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். பண்பு முழுவதும் கலை மூலம் உணர்த்தியவர்கள் தமிழர்கள்.

கலைத்துறையில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்து இருக்கிறது. இசைத்துறையிலும் — நாடகத்துறையிலும் இலக்கியத்துறையில் எந்தத் துறையானாலும் முன்னணியில் தமிழகம் இருந்திருக்கிறது. கலைவாணர் போன்றவர்களால் மேலும் வளர்ந்திருக்கிறது.

கலைவாணரின்
நினைவு...

கலைவாணர், நகைச்சுவையின் மூலம் கருத்துக்களை மக்களுக்கு இனிய முறையில்--எளிய முறையில் உணர்த்தினார். மேலும் பலர் அந்தத் துறையில் ஈடுபட்டுவருகிறார்கள். என்றாலும் அதைப் பார்க்கிறபோது கலைவாணருடைய நினைவு தான் நமக்கு வருகிறது.

நமது தமிழ் நாட்டில் கலைத்துறையில் இருப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மீதி பத்துப் பேரில் ஒருவர் இருவர் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் கலைவாணர். அதனால் தான் இறந்த பிறகும் புகழப்படுகிறார்.

நெல்மணிகள் முற்றியதும் கதிர் சாய்வதைப் போல — எங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுவது போல் — கலைவாணர் வாரி வாரி வழங்கினார். பணத்தை மட்டுமல்ல — நல்ல கருத்துக்களையும்.

பிறருடைய கலைவளர்ந்து இருப்பதைப் பார்த்துப் பாராட்டுகின்ற பண்பு அவருக்கு உண்டு.

பொதுப்பணியிலும் கலைவாணர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறார்.

எனக்குத் தெரிந்த வரையில் முதன் முதலாக சோவியத் நாட்டுக்குப் போய் வந்த கலைஞர் என்.எஸ்.கே.தான். அவருடைய கிந்தனார் காலட்சேபம் எல்லோருக்கும் பிடித்தமானது. அவருடைய நகைச்சுவை இப்போதும் ஏற்றுக் கொள்ளத் தக்க அளவுக்கு இருக்கிறது. கலைக் கல்லூரி அமைத்து ஆசானாக இருந்து பணியாற்ற வேண்டியவர் அவர்.

கேளிக்கை
வரி

கேளிக்கை வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட முதலாளிகள் கோருகிறார்கள். அவர்கள், வரிகளின் நிலைமை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாநில அரசுக்குரிய வரிகளில் முதலாவது நிலவரி; நிலவரி வளரக் கூடியது அல்ல—ஏனெனில் நிலம் வளரக் கூடியது அல்ல; எனவே அந்த வரி—வளராத வரி! அதனாலேயே அந்த வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் இருக்கின்றன.

இரண்டாவது விற்பனை வரி ; விற்பனை வரி வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டாலும் அந்த வரியின் பளு வாங்குபவரின் தோளின் மீது தான் விழும். ஆகவே அந்த வரியை அதிகப் படுத்துவது வாங்குவோரைக் கொடுமைப் படுத்துவதாகும்.

கேளிக்கை வரியும் படம் பார்ப்போரின் மீது சுமத்தப்படுவது ஆகும்.

மீதியிருக்கும் வருமான வரி போன்றவை மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது.

வரி அல்லாத வருமானங்களை எடுத்துக் கொண்டால் தொழில்கள் சில தனிப்பட்ட முதலாளிகளிடம் இருக்கிறது.

இந்த மாநிலத்திலுள்ள பெரிய தொழிற்சாலைகளில் ஒன்று— நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை. அதுவும் மத்திய அரசாங்கத்திடம்!

பெரம்பூர் கோச் பேக்டரி - திருச்சி பாய்லர் தொழிற்சாலை போன்றவையும் மத்திய அரசாங்கத்திடம் தான்!

மாநில அரசாங்கத்திடம் இருப்பதெல்லாம்-ஒன்று-பஸ் போக்கு வரத்துத் தொழிற்சாலை! சென்னை நகரத்தைப் பொறுத்தவரை அது நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தது கதர்த் தொழிற்சாலை - அது நமது நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பெருத்த நஷ்டத்தைத் தருகிறது. ஆகவே இத்தகைய நிலையில் - பற்றாக்குறை பட்ஜெட் இருக்கும் நிலையில் - திரைப்பட முதலாளிகள் - வரிக்குறைப்பை எதிர்பார்ப்பது சரியல்ல ! ஆனால், அதே சமயத்தில் வரி விதிப்பினாலேயே ஒரு நல்ல தொழில் அழிந்து போவதை நாங்கள் விரும்ப மாட்டோம்.

மாநில அரசின் நிதிநிலைமை சரியானதும் திரைப்பட முதலாளிகளின் கோரிக்கைகள் நிச்சயம் கவனிக்கப்படும். திரைப்படத் தணிக்கையில் உள்ள தொல்லைகள் பற்றியும் தயாரிப்பாளர்கள் வருத்தப்படுவது எனக்குப் புரிகிறது. தணிக்கையினால் ஏற்படுகிற கஷ்டம், எதை வெட்ட வேண்டுமோ அதை விட்டு விடுகிறார்கள். எதை விட்டுவிட வேண்டுமோ அதை வெட்டி விடுகிறார்கள்.

பாலுணர்ச்சி மிகுந்தது என்று 15 வருடத்திற்கு முன்பு கருதப்பட்டவை இன்று சர்வ சாதாரணமான காட்சியாகி விட்டது. இன்று அப்படிப்பட்ட காட்சி ஐந்து வருடத்தில் சாதாரணமாகிவிடும். ஆகவே ஆபாசம் என்பது பார்ப்பவரின் மனதுக்கு கண்ணுக்கு காலத்துக்கு ஏற்றவாறு இருக்கிறது.

ஒரு அழகான பெண்ணைத் திரையில் காட்டுவதால் என்ன தவறு என்று ஒருவர் கேட்டார். தவறு எதுவுமில்லை - அது அழகான பெண்ணாக இருந்தால். அழகான பெண் என்று, பார்ப்பதற்குத் தேவையில்லாத பகுதிகளை - அளவுக்கு மீறிய மேக்-அப்புடன் காட்டுவது தான் எரிச்சலூட்டுகிறது.

ஆகவே மக்களின் சுவையை அறிந்தவர்கள் - சுவை மாறும் தன்மையை அறிந்தவர்கள் தணிக்கைக் குழுவில் இடம் பெற வேண்டும். அத்தகைய முறையால் திரை உலகம் சீர்திருத்த நிலையை அடைய வேண்டும்.