அண்ணாவின் சொல்லாரம்/காந்தியும் காந்தியமும்

காந்தியும்
காந்தியமும்

காந்தியாரால்
லாபம் அடையாதவன் நான்

ராமலிங்க அடிகள் வாழ்க்கைக்கும் காந்தி அடிகள் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த நாட்டில் இல்லாத கருத்துக்காக நாம் எந்த நாட்டிலும் - எந்த மொழியிடத்திலும் கடன் வாங்காத அளவுக்கு இங்கே கருத்துக்குவியல் உண்டு.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மொழிக்கு இலக்கணம் வகுத்து, இல்லறம் எப்படி இருக்கவேண்டும், துறவறம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எல்லாம் நம்மிடத்திலே கருத்துக் குவியல் நிரம்ப உண்டு,

பாங்கிகளுக்கெல்லாம் தலைமை பாங்கியான ரிசர்வ் பாங்கியில் பணம் நிரம்பி இருப்பதைப்போல நம்மிடத்தில் கருத்துக் குவியல் நிரம்ப உண்டு. ரிசர்வ் பாங்கி முன்னால் நின்று கொண்டு ஆகா எவ்வளவு பணம் இருக்கிறது என்று வயிற்றை தடவினால் பசி நீங்காது. பாக்கெட்டில் இருக்கும் பணத்தின் அளவுக்குத்தான் பசி நீங்கும்.

நம்மிடம் ஏராளமான கருத்துக்கள் இருந்தும் நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம்? அதைத்தான் நாம் ஆராயவேண்டும் இதைச் செய்வதால்தான் என்னை அழுக்கானவனாக அருவருக்கத்தக்கவனாக சிலர் நினைக்கிறார்கள். விரலில் போட்டுக்கொள்கிற மோதிரம் காணாமல் போய்விட்டால், சேற்றிலே விழுந்து விட்டால் தேடி எடுக்கும்போது கையிலே சேறு ஒட்டிக்கொள்ளும். அதனால் சேறு என்று ஒதுக்கிவிட முடி யாது. யாராவது அவர்களைப் பார்த்துச் சேற்றிலே இருப்பவன் என்று சொன்னால் அவர்கள் எண்ணத்திலே இருக்கிற சேற்றுக்கு நாம் பரிதாபப்பட வேண்டும். அந்தச் சேற்றை நீக்குவது எப்படி என்பதில் நாமெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.

இராமலிங்க அடிகளைப்போல சிலர் தலையில் துணி போட்டுக் கொள்வதால் அவரைப்போல புறத்தோற்றத்தைப் பெற்றுக்கொள்வதாகக் கருதுகிறார்கள். புறத்தோற்றத்திலே காட்டுகிற அக்கறையை மனதில் — உள்ளத்தில் — செயலில் நாம் கொண்டுவருகிறோமோ என்றால் உபச்சாரத்திற்காக சரி என்று சொல்லச் சொன்னால் சொல்கிறேன். உண்மையில் அது இல்லை. போன வருஷம் கொடுத்த ரயில் டிக்கட் அளவிலும் — நிறத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு இந்த வருஷம் போக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதைப்போல நாம் காலத்தை வைத்து கருத்துக்களை கணக்கிட வேண்டும்.

நாம் இன்னமும் நம்மிடத்தில் தரப்பட்ட கருத்துக்களைப் புரிந்துகொள்ள ஒரு தலைமுறை போதுமா என்றால் போதாது கிறிஸ்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரே ஒரு நூல் பைபிள் இருக்கிறது. முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் மதத்திற்கு புனிதமான ஒரே ஒரு நூல் குரான் இருக்கிறது.

இந்த நாட்டில் ஜாதி வந்த காரணம் என்ன? பெருமையோடு சொல்கிறோம் - ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் வள்ளுவர் சொல்லிவிட்டார் என்று ஐரோப்பாவில் போய்ச் சொற்பொழிவாற்றுகிறார்கள். அப்படி அங்கே கூறிய பின் உங்கள் பெயர் என்ன என்றதும் கோதண்டபாணி செட்டியார் என்று சொன்னால் அது எப்படிப் பொருத்தமாகும் என்று கேட்கிறோம்.

நாம் கருத்துக்கள் அற்றுத் தவிக்கவில்லை. இருப்பதில் எதை பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறோம். நம்முடைய எண்ணங்கள் விரிவடைந்து இருக்கின்றன. ஆனால் நல்லதற்கா — கெட்டதற்கா என்று நான் சொல்லவில்லை. அளவு—வகை—வேகம் மூன்றும் அதிகமாக இருந்தும் எதை எதை எதற்காக பயன்படுத்த வேண்டுமென்று அறிந்துகொள்ளவில்லை.

ஆனால் நம்மிடத்தில் நிரம்பத் தரப்பட்டு இருக்கிறது, எண்ணி— எண்ணி, எழுதி எழுதி — எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. எதை ஏற்றுக்கொள்வது என்று புரியாமல் இன்று இருக்கிறோம்.

என்னைச் சந்தித்த சிலர் "உங்களையா அழைத்தார்கள், காந்தியாரைப்பற்றிப் பேச" என்று கேட்டார்கள்.

காந்தியாரால் லாபம் அடையாதவர்களில் நான் ஒருவன் காந்தியாருடைய கொள்கைக்கு விரோதி என்றுகூட சிலரால் கருதப்பட்டவன். அதனால் கிடைத்திருக்கக் கூடிய லாபங்களைக்கூட இழந்தவன் என்பதை நண்பர்கள் அறிவார்கள். என்னைவிட அவர் பெருமைபற்றிச்சொல்ல வேறு யாரும் இருக்க முடியாது. மகாலிங்கம் சொல்லுகிறார் என்றால் காந்தியாருடைய பெருமையால் அரசியலில் ஏற்றம் பெற்றவர்.

இதைக் கூடச் செய்யாவிட்டால் வேறு என்ன பெருமை இருக்கிறது ? வள்ளலாருடைய எளிய தோற்றத்தில் எனக்குப் பற்று உண்டு. எளிய தமிழில் எதைஎதையோ சொல்ல நினைத்தார். யாருக்குச் சொல்ல நினைத்தார்? எளியவர்களுக்கு, ஏழைகளுக்குச் சொல்ல : நினைத்தார். அதனால் எளிய தமிழில் கூறினார்.

பூமியில் உள்ள தங்கம் அத்தனையும் நகை செய்ய முடியாது. தேவையான அளவு கொடுத்து நகை செய்யச் சொல்வதுபோல நம்மிடத்தில் ஏராளமான கருத்துக் குவியல் இருந்தாலும் தேவையானதைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

காந்தியாரின் பொருட் காட்சியை நான் பார்வையிட்ட போது காந்தி கிராமத்தைச் சார்ந்த இராமச்சந்திரன் என்னைப் பார்த்து “நீங்கள் காந்தீய வழியில் நடக்கவேண்டும்” என்று கூறினார்.

நான் நெடுங்காலத்திற்கு முன்பே காந்தியத்தின் நல்ல கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவன்.

காந்தீயம் எந்த இடத்திற்குச் சொந்தமாக இருந்ததோ, அந்த இடத்தை விட அது மற்றவர்களின் இடத்தில்தான் பெருமை பெற்றிருக்கிறது.

காந்தீயத்தோடு காங்கிரசைச் சேர்த்து எண்ணுவது பெரும்பாலோர் வாடிக்கை. வாடிக்கை என்றுதான் சொன்னேனே தவிர, அது உண்மை என்று சொல்லவில்லை.

ஏனென்றால் காந்தீயத்தோடு காங்கிரசைச் சேர்த்துப் பார்ப்பது பொருத்தமானது; எதிர்பார்க்கத் தக்கது. ஆனால் அந்த காங்கிரசிலிருந்து மாறுபட்ட எதிர்க்கட்சிகளும் காந்தியத்துக்கு மரியாதை காட்டுவதுதான் பெருமை உடையது.

காந்தீயம்
தத்துவமாகி விட்டது !

ஏனென்றால் காந்தியம் என்பது இப்போது தத்துவம் ஆகி விட்டது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள வேலூரில் காந்தியார் சிலையை நான் திறக்க வேண்டுமென்று அந்த நகராட்சியினர் தீர்மானம் போட்டனர். அப்போது அந்த நகராட்சி தி. மு. கழகத்திடம் இல்லை.

இராசாசி அவர்கள் அரசாட்சி செலுத்திய காலம் அது வேறொரு தீர்மானத்தைப் போட்டு சில காங்கிரஸ்காரர்கள் "அண்ணாதுரையா காந்தி சிலையைத் திறப்பது ? அப்படிச் செய்தால் அமளி நடக்கும்" என்று மிரட்டினர். ஆனால் வேலூர் நகராட்சி மீண்டும் தீர்மானம் போட்டது. உடனே ஒரு காங்கிரசுத் தலைவர் இராசாசியைப் பார்த்து "இதற்கு அனுமதித்தால் அமளியை ஏற்படுத்துவோம்" என்றார்.

ஆனால் இராசாசி “காந்தியாரைக்காங்கிரசார் பாராட்டுவதில் பெருமையில்லை. எதிர்க் கட்சியினர் பாராட்டுவதில்தான் பெருமை. அப்போதுதான் அவர் மகாத்மா” என்றார். ஆனால் அந்தக் காங்கிரஸ் தலைவர் அமளி நடத்தியே தீருவேன் என்றார். இராசாசி அவர்கள் தனக்கே உரிய பாணியில் "நீங்கள் வேலூருக்குப் போனால் தானே? என்றார்.

“என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டார் காங்கிரஸ் தலைவர்.

"உங்களை நான் வேலூருக்கு விடப்போவதில்லை. ஐ. ஜி-க் குப்போன் செய்து சென்னையிலேயே வைக்கப் போகிறேன்" என்றார்.

உடனே அந்தக் காங்கிரஸ் தலைவர் பதைபதைத்தபடி, “ஐயோ அது மட்டும் வேண்டாம்” எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பின்னர் வேலூருக்குச் சென்று நான் காந்தி சிலையைத் திறந்து வைத்தேன்.

இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் காந்தீயத்தை வெளி நாட்டவர்கள் பாராட்டுவதை வரவேற்கும் போது எதிர்க் கட்சியினர் பாராட்டுவதையும் வரவேற்க வேண்டும் என்பதற்காகத்தான்.

காந்தீயம் என்பது தத்துவமாகிவிட்டபோது அதை ஒரு கட்சியுடன் இணைக்காமலிருந்தால் இன்னும் அதற்கு. முழுமதிப்புக் கிடைக்கும்.

நானும், நான் சார்ந்திருக்கிற கட்சியும், அதன் ஆட்சியும் காந்தீய வழிப்படி மக்களுக்கு எது எது தேவையோ அவற்றை முடிந்த அளவு நிறைவேற்றுவோம்.

குடிப்பதை தீங்கென்று நீண்ட நெடுங்காலமாகவே நமது மக்கள் கருதி வந்திருக்கிறார்கள்.

குடித்துவிட்டுவந்து தங்களது மனைவி மக்களையே தாக்கியவர்கள் பற்றிய பல கதைகளை நான் அறிவேன். அத்தகையவர்களிடம் அடிபட்ட பெண்களின் கதறல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அது ஒலித்துக் கொண்டிருக்கும் வரை மதுக்கடை ஒன்று கூடத் திறக்கப்படுவதை நான் அனுமதியேன்.

மதுக் குடியில் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம். அந்தத் துன்ப துயரங்களை என் போன்றவர்கள் அறிவோம்.

இன்று என் மகனைப் பார்த்து மகனே கள்ளுக்கடைகளில் என்ன நடக்கும் தெரியுமா என்றால் தெரியாதென்று விழிக்கிறான்.

மதுவின் கொடுமையையே அறியாத ஒரு புதிய தலை முறையை நாம் வளர்த்திருக்கிறோம்! இதை நாம் மறப்பது கூடாது. இத்தகைய ஒரு அருமையான தலைமுறையை-புதிய சமுதாயத்தை இழக்கச்சொன்னால் அது ஒரு நாளும் நடவாது.

எனது நண்பர் ஒருவர்-மதுப்பழக்கமற்ற உண்மை நண்பர் என் மீதுகொண்ட அன்பினால் மதுக்குடியை அனுமதித்தால் தமிழக அரசு டில்லியிலிருப்பவர்களிடம் உதவிகேட்கும் சங்கடத்திலிருக்க வேண்டியிராது—அதன் வருவாய் கணிசமாக உயரும் என்று தெரிவித்து எனக்கு எழுதியிருந்தார்.

அவர்கள் என்ன தான் உள்ளபூர்வமாகச் சொன்னாலும் அவர்கள் மதுவின் தீமையை உணராதவர்கள். மதுக்குடியால் சீரழிந்த குடும்பங்களின் துயரத்தை அறியாதவர்கள்.

நெடுங்காலத்துக்கு முன்பே தமிழகத்தில் மதுக்குடி ஒழிப்பு இயக்கக் கூட்டங்களை நடத்தியது நீதிக்கட்சி. அந்தக் கட்சியைச் சார்ந்தவனாக நான் இருந்தேன் என்பதை எண்ணி இந்த ஒரு கணம் நான் மகிழ்கிறேன் — அப்போது அந்த இயக்கத்தின் பேச்சாளர்களாக இருந்தவர்கள் பின்னர் காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் சேர்ந்து சிறப்பை அடைந்தார்கள்.

மதுவிலக்கில்
காங்கிரசின் நிலை என்ன?

இங்கே என்னிடம் அதிக மது ஒதுக்கும்படிக் கேட்டு அயல் நாட்டார் பலர் வருகிறார்கள். இதர இந்திய மாநிலங்களில் மது தாராளமாகக் கிடைக்கும்போது இங்கு மட்டும் ஏன் இத்தனைக் கடுமை என்று கேட்கிறார்கள். அத்தகையவர்களுக்கு பதிலளிக்க உதவும் வகையில் காங்கிரசின் கொள்கை என்ன என்பதை விளக்கட்டும். காங்கிரசல்லாத ஆட்சிகள் மதுவிலக்கைக் கடைப்பிடிக்கும்போது காங்கிரஸ் ஆட்சிகள் நடைபெற்று வருகிற மாநிலங்களில் மெல்ல மெல்ல அக் கொள்கை கைவிடப்படுவதேன்?

இது எனது முணுமுணுப்பல்ல - இதயத்திலே கசிகிற ரத்தம் தோய்ந்த கேள்வி. மதுவிலக்குக் கொள்கையைத் தொடர்ந்து சிறப்புடன் கடைப் பிடித்து வரவே இதைக் கேட்கிறேன்.

காங்கிரஸ்காரர்களை நான் கேட்கிறேன், மதுவிலக்கில் உங்கள் கொள்கை என்ன? திட்டவட்டமாகச் சொல்லுங்கள். ஷேக்ஸ்பியரின் நாடகத்திலே வரும் ஹாம்லெட்டைப் போல, இருப்பதா ? இறப்பதா ? என்ற சஞ்சலபுத்தி வேண்டாம். தீர்மானியுங்கள்; அதை உடனே செய்யுங்கள்.

குடிமூலம் வருமானம் பெறுவதற்குப் பதில் அந்தப் பணம் போகும் சினிமா, நாடகம். சுற்றுலா போன்றவைகளிலிருந்து வசூலித்துக் கொள்கிறேன். மதுவிலக்கை ரத்து செய்வதால் புதிதாகப் பணம் எதுவும் வந்துவிடப்போவதில்லை. அதே வருவாய் தான் வேறு துறைகள் மூலம் கிடைக்கிறது.

மகிழ்ச்சி வரிமூலம் (தமாஷாவரி) மட்டும் 1967-68-ல் அரசாங்கம் எதிர் பார்க்கும் வருமானம் ஆறரைக் கோடி. ரூபாயாகும்.

மதுவிலக்கு, விசைத்தறி ஆகிய இரண்டிலும் இந்திய அரசு நாடு முழுவதும் ஒரேவிதமான கொள்கையை அமுலாக்க வேண்டும்.

சில அண்டை மாநிலங்களில் மதுவிலக்கைத் தளர்த்த நடக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தனது கடமையைச் செய்யவில்லை.

எல்லாக் கட்சிகளும் ஏற்று நடத்தவேண்டிய காந்தீயக் கோட்பாடுகளில் ஒன்றாக மதுவிலக்கை ஒப்புக் கொண்டிருக்கிறோம்! சென்னை அதை உள்ளத்தூய்மையுடன் சட்டபூர்வமாக்கி வருகிறது!

எனவே மற்ற மாநிலங்களும் மதுவிலக்கை அமுல் நடத்தச் செய்வது தான் மத்திய அரசின் கடமை. அண்டை மாநிலங்கள் தளர்த்தினால் இங்கிருப்பவர்களுக்குச் சபலம் ஏற்படுகிறது. அதனால் பிரச்சினைகளும் கிளம்புகின்றன.

இது நாணயமாக நடப்பவனுக்குத் தண்டனையும் அக்கிரமக்காரனுக்குப் பரிசும் கொடுப்பது போலிருக்கிறது.

மதுவிலக்கு ஒரு பெரிய சமுதாயநலத் திட்டம் என்பது என் கருத்து.

அதனால் மக்கள் எவ்வளவோ நன்மையடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது.

குடித்துவிட்டுத் தெருக்களில் குத்துச்சண்டை போடுவதையும் வீடுகளில் பெண்களை அடிப்பதையும் நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். மதுவிலக்குக் கொண்டு வந்ததால் அவை யெல்லாம் மறைந்தொழிந்து விட்டன. பெண்களெல்லாம் வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மதுவிலக்கு இருக்கிறது; ஆந்திராவில் கள்ளுக் கடைகளைத் திறக்கப் போவதாகப் படித்தேன். பம்பாயில் அரசாங்கமே பீர்க்கடை திறந்திருக்கிறது! இதையெல்லாம் படிக்கிற மக்கள் எ“ன்ன அண்ணாதுரை ; காந்தியின் நேர் வாரிசா? மற்றவர்களுக்கு இல்லாத காந்தி பக்தி இவனுக்கென்ன வந்தது? பாவிகள்ளுக் கடைகளைத் திறக்கமாட்டேன் என்கிறானே” என்று கூறுகிறார்கள்.

அந்த மக்கள் மீது எனக்குக் கோபம் வரவில்லை. முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தின் மீது தான் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

தமிழகத்தில் நாம் மதுவிலக்குக் கொள்கையை அமுல் படுத்துகிறோம். அதனால் 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

இருந்தாலும் மூன்று கோடி மக்களுக்கு அவர்களது இல்லங்களில் சந்தோஷம் நிலவட்டும், தர்மம் நிலைக்கட்டும்; அமைதி தழைக்கட்டும் என்பதற்காக மதுவிலக்குக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இதற்காக 30 கோடி ரூபாயை இழக்கிறோம்.

ஆனால் இப்படிக் கஷ்டப்படும் தமிழகத்திற்கும் பாராட்டு; பீர்க்கடை திறக்கும் பம்பாய்க்கும் பாராட்டு என்றால் என்ன பொருள்?

வேண்டாம்
'விழாக் காலத்துப்' பேச்சு

பிறகு — காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற பேச்சு —விழாக் காலத்துப் பேச்சாகத்தான் போய் விடும்!

மதுவிலக்கு உண்டு என்றால் இந்தியா முழுவதும் உண்டு. இல்லை கள்ளுக்கடையைத் திறக்கிறோம் என்றால் இந்தியா முழுவதும் திறந்து விடுங்கள். அப்படிச் செய்வதற்கு முன் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். ஏனென்றால் அந்தச் சட்டத்தில் மதுவிலக்கைப் பரப்ப வேண்டும் என்று ஆணைக் கொள்கை (Directive. Principle) இருக்கிறது.

அந்த அரசியல் சட்டத்தின் பேரில்தான் நாம் ஆணையிட்டு அதன்படி நடக்க உறுதி கூறியிருக்கிறோம்.

அதன்படி நடப்பதாயிருந்தால் மற்ற மாநிலங்களிலும் மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டுவரட்டும்.

இந்த மதுவிலக்குக் கொள்கையையும் கைத்தறிக் கொள்கையையும் கடைப்பிடிப்பதால் தமிழக அரசுக்கு ஏற்படும் கஷ்டத்தை, நஷ்டத்தை ஏற்க மத்திய அரசு முன் வரவேண்டும்.

மதுவிலக்குக் கொள்கையை இவ்வளவு கஷ்டத்திலும் கடைப்பிடிப்பதற்காக- காந்தீயக் கொள்கையைக் காப்பாற்று வதற்காகவாவது மத்திய அரசு பரிசாக ஒரு தொகையை அளிக்க முன்வரவேண்டும்.

மாசு துடைக்க வந்த
மாபெரும் மகான்

உலக உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாள், நாடெங்கும் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது, அவரவர் தத்தமக்கு விருப்பமான முறையில் காந்தியடிகளுக்குத் தமது. அன்பினைக் காணிக்கையாக்கி அளிக்கின்றனர்.

அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலைகளிட்டும்—அவர் புகழ் பற்றிய பாடல்களை இசைத்தும் — பஜனை நடாத்தியும், நூற்புத் தொண்டாற்றியும், சேரிகளைத் திருத்தும் பணிபுரிந்தும் இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.

அவர் ஓர் தூயவர். நமது மார்க்கத்தின் மாசு துடைத் திட வந்த மகான் — என்பாரும்; அவர் ஓர் விடுதலை வீரர், நமது நாட்டு அடிமைத் தளைகளை உடைத்தெறிந்த அஞ்சா நெஞ்சினர் என்பாரும்;

'அவர் ஓர் வேதாந்தி, பழைய தத்துவம்' பலவற்றுக்குப் புதிய விளக்கமளித்தவர் என்பாரும்;

அவர் ஓர் சமதர்மவாதி, ஏழைபங்காளர், ஏழைகள் புதுவாழ்வு பெற வழிவகுத்தவர் என்பாரும்;

அவர் கிராம ராஜ்யம் அமைத்திட முனைந்தவர் என் பாரும், இது போல, அவரிடம் அவரவர் கண்டவற்றினைக் கொண்டு அளவிட்டு வியந்து பாராட்டுவோர் பல்வேறு வகையினர் உளர். இவர்களில் எவருடைய பார்வையில் முழு காந்தி அடிகள் தெரிகிறார் என்பது, காலமெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்ளவேண்டிய ஒரு பிரச்சனையாகும். காரணம், ஒரு மனிதர் என்ற முறையிலே மட்டும் கவனிக்க வேண்டியவர் அல்லர்; அவர் காலத்தின் சின்னம், ஓர் எழுச்சியின் அடையாளம், ஒரு மறுமலர்ச்சியின் உருவகம்.

அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் திருப்தி அடைய விரும்பினால், அவருடைய அறப்போர் மாண்பினை மட்டும் வியந்து பாராட்டுவதுடன் இருந்து விடத் தோன்றும்.

ஆனால், அரசியல் துறையிலே மட்டும் அரும் பெரும் வெற்றி பெற்று, மற்றத் துறைகளிலே ஈடுபடாதிருந்தவர் அல்ல.

அவர் எல்லாத்துறைகளிலும் தமது முத்திரையைப் பொறித்துச் சென்றவர்; எல்லாத் துறையினரும், எமக்காகவே. காந்தி அடிகள் வாழ்ந்தார், எமக்காகவே பணிபுரிந்தார் என்று சொந்தம் கொள்ளத் தக்க முறையிலே அவருடைய வாழ்க்கையும், தொண்டும் அமைந்திருந்தன.

இன்று, அவருடைய பிறந்தநாள், எல்லாத் துறைகளிலே உள்ளவர்களாலும் கொண்டாடப்படுவதற்கான காரணம். இதுவே. அவர் ஒரு நாட்டின் காலம் ! ஒரே ஒரு துறைக்கு அல்ல ! எல்லாத்துறைகளுக்கும் ஒரு திருப்பத்தை, ஓரு புதிய பொலிவை, வலிவைக் கொடுத்தவர்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் ஏதோ ஒரு துறையிலே மட்டும் பெறப்படுகிற வெற்றியைப் பொறுத்தது அன்று. எல்லாத்துறைகளிலும் வெற்றி காணவேண்டும். அவைகளின் ஓட்டு மொத்தத்தைக் கொண்டே அந்நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்ற கணக்குப் பார்க்க வேண்டும்,

ஒரு நாட்டின் வரலாற்றிலே அவ்விதமான ஒரு கணக்கு அடிக்கடி கிடைக்காது; ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் என்றும் கூறிவிட முடியாது. அந்தக் கணக்கு இந்நாட்டுக்கு காந்தியடிகளின் வடிவத்திலே கிடைத்தது. எனவே தான் காந்தியடிகளின் பிறந்தநாள் ஒரு மாபெரும் தலைவரின் பிறந்த நாளாக மட்டுமின்றி, ஒரு நாட்டுக்குக் கிடைத்த நற்காலம், என்ற முறையிலே சிறப்புப் பெறுகிறது.

மகான்கள், மாவீரர்கள்- ஆகியோரின் பிறந்த நாட்களைக் கொண்டாடும் கவர்ச்சி மிகுந்த நாடு நம் நாடு. புகழ் பாடுவதில், பூஜைகள் நடத்துவதில். வல்லவர்கள் நாம்!

ஆனால் யாருக்காகத் திருநாள் நடத்துகிறோமோ, எவருடைய திருநாமத்தை பூஜிக்கிறோமோ, எவருடைய ஆற்றல் பற்றிப் புகழ்ந்து பேசுகிறோமோ அவர்கள் காட்டிய நெறியிலே நடக்கிறோமா என்றால், இல்லை என்ற பதிலையே ஏக்கத்துடன் பெற முடிகிறது.

இன்று ராட்டை சுழலுகிறது — நாளை? எத்தனை பேர்? —
இன்று சேரிகளிலே சென்று சேவை செய்கிறோம். நாளை?
இன்று வகுப்பு ஒற்றுமை பற்றிப் பேசுகிறோம், எழுச்சியுடன் - நாளை?
இன்று கிராமங்களிலேதான் நாட்டின் இதயம் இருக்கிறது, என்று உணர்ந்து பேசுகிறோம்— ஆனால் மறுநாள்? இன்று நடத்திடும் திருநாளின் மாண்பு, நாளையும் மறுநாளும்,பிறநாட்களிலும் நமது எண்ணத்திலும் செயலிலும் ஒளிவிட வேண்டும். அதற்கே இந்நாள்! அவர் புகழ் பாடி மகிழ்ந்திட மட்டுமல்ல- அவர் வழி நடந்திட, அவர் காண விரும்பியதைக் கண்டிட, அவர் தந்து சென்றதை உருக்குலைக்காதிருந்திட, அவர் ஊட்டிய உணர்ச்சிகளை உயிருள்ள வையாக்கிட!

மாலையின் மாண்பு, மணத்தில்! விளக்கின் பயன் ஒளியில் ! விழாக்களின் பலன் நமது செயலிலே இழைந்திடும் மாண்பிலே இருக்கிறது!

அவருடைய பிறந்த நாள் நாமெல்லாம் நற்கருத்தும் சீரிய செயலும் பெற்றிடுவதற்கான வாய்ப்பாக அமைதல் வேண்டும்.

அதற்கான முறையில் நாம் நடந்து கொள்கின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறேன் — நம்முன் உள்ள மிகப் பெரிய கேள்வி அது.

மகான்களையும், மாவீரர்களையும் கொண்டாடுவதிலே வல்லவர்கள் நாம் என்றேன்; அவர்கள் புரிந்த அற்புதங்களை, மகிமைகளை, காதைகளாய், கவிதைகளாய் ஆக்கி மகிழ்வதிலும் நாம் மிகவும் வல்லவர்கள்.

அவர் கடலை அடக்கினார்: காற்றை விரட்டினார்; கரு நாகத்தை மாலையாக அணிந்தார் : கந்த மூலமே அவருக்கு உணவு! தொட்டார், பட்டமரம் துளிர்த்தது! பார்த்தார்! மலடி தாயானாள்! குருடன் பார்வை பெற்றான்—இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போகிறவர்கள் நிரம்பிய நாடு, நம் நாடு!

இந்த மகிமைகளையும் அற்புதங்களையும் வியந்து பேசுவது, பிறகு எதற்குப் பயன்படுகிறது ? அவர் மகான், ஆகவே அப்படிச் செய்தார். நாம் சாமான்யர்கள், நம்மால் முடியுமா அவர் செய்ததைச் செய்ய? என்று பேசி, நமது செயலற்ற போக்குக்கு ஒரு சமாதானம் தேடிக் கொள்ளவே அது மெத்தவும் பயன்படுகிறது.

அந்த முறையிலே காந்தி அடிகளின் பிறந்த நாளை நடத்துபவர்களாக நாம் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக் கூறுகிறேன்.

பாராட்டுப் போதாது
பணிசெய்ய வேண்டும்.

அவரை அவதார புருஷர்களிலே ஒருவர், பூஜைக்கு உரியவர், அவர் பிறந்த நாளன்று அவர்பற்றிய மகிமையை, அற்புதத்தைப் பேசுவது போதும்; என்று இருந்திடாமல்; அவர் காணவிரும்பிய சமுதாயம், அவர் எடுத்துக் காட்டிய இலட்சியம்,அவர் விளக்கிச் சென்ற தூய்மை ஆகியவற்றினை நினைவிலே கொண்டு, அதற்கான முறையிலே. பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகாயத் தாமரையைப் பறித்துக் கொடுத்திடும் அற்புதம் அவர் காட்டினாரில்லை ; ஆனால் ஊமைகளாய் இருந்து வந்த மக்களைப்பேச வைத்தார் ; உரிமைமுழக்க மிடச் செய்தார் ; படைபல வந்திடினும் தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்றுரைத்தார்.

‘அஞ்சி அஞ்சிச் சாவார்! அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே, என்று துக்கம் தோய்ந்த குரலிலே பாடினாரே பாரதியார், அந்த அச்சத்தைத் துடைத்தார்; ஆயுதம் தாங்கியவர் எதிரில்; சாகப் பயப்படாதாரின் ஓர் அணிவகுப்பை நிறுத்திக் காட்டினார். சிட்டுக் குருவிகளுக்கு வல்லூறை எதிர்த்திடும் ஆற்றல் ஏற்படச் செய்தார். நம்மால் என்ன ஆகும் என்ற ஏக்கத்தை விரட்டினார். நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் என்ற உறுதி எழச் செய்தார்!

போர் முகாம் அமைத்து அல்ல, எளிய குடில் அமைத்து; வெட்டச்சொல்லி அல்ல, வெட்டுண்டவர் போக ஏனையோர் அறப்போர்ப் பாதை நடந்திடுக என்றுரைத்து; ஆத்திரம் ஊட்டி அல்ல; அன்பினை ஊட்டி;

மகான்களிடம் அமைந்திருப்பதாகக் கூறப்படும் அற்புதங்களைக் கண்டவர் அல்ல, இன்று கதை கூறுவோர்? காந்தி அடிகள் நடத்தின அற்புதத்தை நாம் நமது கண்களால் கண்டோம்.

அந்த - அரை ஆடை மனிதர் கோடானுகோடி மக்களுக்கு மானமுள்ள வாழ்வு பெற்றுத் தந்ததைவிட "அற்புதம்” வேறு என்ன இருக்க முடியும் !

"இவரா இந்தியாவின் தலைவர்?" என்று எள்ளிநகையாடியவர்கள் அந்த அற்புதம் நடைபெற்ற பிறகு "இவரன்றோ தலைவர்!" என்று புகழ்ந்தனர்! இந்நாட்டுக்கு மட்டுமல்ல அடிமைத்தளை உடைத்திட விரும்பும் எந்நாட்டுக்கும் அவர் காட்டிய அறப்போர் முறை பொருத்தமானது என்று இன்று ஆய்வாளர் பலர் கூறுகின்றனர். ;

“இந்தியா என்றோர் நாடுண்டு; அங்கு ஏலம், கிராம்பு பெறுவதுண்டு; பொன்னும் பொருளும் மிக உண்டு ; போக்கறியாதார் நிரம்ப உண்டு !" என்ற அளவில், பதினாறாம் நூற்றாண்டிலே உலகம் அறிந்திருந்தது.

பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே சிக்கி விட்டது. அப்போது, அப்போது, "இந்தியா என்றோர் நாடுண்டு. அது ஆங்கிலேயர்க்கு நல்ல வேட்டைக்காடு!" என்று உலகம் இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டது.

விடிவெள்ளி தோன்றுவது போல திலகர் காலத்திலே விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும் காந்தி அடிகள் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே “ இந்தியா என்றோர் நாடுண்டு; அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு !" என்று உலகம் அறிந்து கொள்ள முடிந்தது.

காந்தி அடிகளின் புகழொளிமூலமே உலகம் இந்தியாவைக் கண்டு வந்தது.

அவருடைய உருவமோ, உடலமைப்போ, பேச்சோ, நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடிய விதமாக இல்லை. ஆனால் அவரால் இராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களிடத்தில் உண்டாக்க முடிந்தது.

தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியடிகளால் தான் உண்டாக்க முடிந்தது. அதற்கு முன்பெல்லாம் விடுதலை கோரி மனுச் செய்யும் மேதாவிகளிடமே நாடு இருந்தது.

மண்குடிசை
மன்னர்

அவருடைய பொதுப்பணியிலே ஒருகடுமையான சொல் ஒரு நேர்மையற்ற செயல், ஒரு சுயநலத்திட்டம் இருந்ததில்லை. அவருடைய சேவையினால் ஏற்பட்ட செல்வாக்கு இந்தியாவின் ஒளியையும், ஆசியாவின் புகழையும், நிறத்திமிர் கொண்டு இறுமாந்திருந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் கிலி உண்டாக்கக்கூடிய அளவுக்குப் பரப்பிற்று. அவருடைய மொழியைக்கேட்க வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் ஓடோடி வந்தனர். அவரது மண் குடிசையிலே தங்கினால் அது மதிப்பளிக்க கூடியதென்று மன்னர்கள் எண்ணினர்.

‘சுயராஜ்யம்’ பெற்றளித்து விட்டால் போதும் என்று அவர் கருதவுமில்லை — கூறவுமில்லை. நாடும் மக்களும் எப்படி இருந்திடவேண்டும் என்பதனை அவர் கூறாமலுமில்லை. ‘சுயராஜ்யம்’ — ஓர் இலட்சியத்துக்கு வாய்ப்பு என்றே அவர் கருதினார்; ‘ஒரு நாட்டுக் காதையிலே பொன் ஏடு அது ; ஆனால்-கடைசி ஏடு அல்ல !" என்பதை வலியுறுத்தினார்,

நாடும் மக்களும் எந்த நிலை பெறவேண்டுமோ அதற்கு அடிமைத்தனம் தடையாக இருக்கிறது. ஆகவே அதை எந்த விலை கொடுத்தேனும் அகற்றியாக வேண்டும் என்றே அவர் கூறினார்.

அடிமைத் தளையை
அண்ணல் ஒழித்தார்

அடிமைத்தளை அகற்றப்பட்டது, ஆனால் அவர் எந்த நிலையிலே நாடும் மக்களும் இருந்திட வேண்டும் என்று கருதினாரோ, அந்த நிலையை ஏற்படுத்திவிட்டோமா? இல்லை என்பதைச் சொல்லக் கூச்சப்படத் தேவை இல்லை. ஏற்படுத்தியாகவேண்டும் என்ற உறுதியைப் பெற்றிட இந்நாள் உணர்ச்சி அளித்திட வேண்டும்.

அச்சம் அகற்றினார் - ஆங்கில அரசிடம் கொண்டிருந்த அச்சத்தை ! ஆனால், அச்சம் பிற துறைகளிலே இருந்து அகன்றதா? இல்லையே! சமுதாயத்தில் மேலோர்-கீழோர், செல்வர்-வறியர், எளியோர்-வலியோர் என இருக்குமட்டும், அச்சம் எங்ஙனம் அகலும்?

பசி அச்சுறுத்துகிறது! பற்றாக் குறை பயமூட்டுகிறது! குரோத உணர்ச்சி விரட்டுகிறது ! அச்சம் அகலவில்லை. அச்சம் அகலவேண்டும்; அறநெறி தழைக்க வேண்டும் ; அண்ணலின் பிறந்த நாள் விழா நடாத்திடும் போது, இதற்கான உறுதி பெற்றிட வேண்டும்.

ஒரு புறம் செல்வர்; அதனைச் சூழ வறுமை!

ஒரு புறம் பளபளப்பான பட்டினங்கள், கோடியிலே வறுமை நெளியும் சேரிப்புறங்கள். ஒருபுறம் தொழிற் கூடங்கள்; மற்றொரு புறம் வேலையில்லாதார் கூட்டம்.

ஒருபுறம் அறநெறி நிலையங்கள், பிறிதோர் புறம் சுரண்டல் காரர்கள், சூது மதியினர், பதுக்கல்காரர், சந்தையினர். கள்ளச் சந்தையினர்.

கொலையும் களவும் சூதும் குடியும், நிரம்பிய இடம், நாடு அல்ல ; காடு — காடு கூட அல்ல; அங்கு மது விற்பதற்காக ஒர் ஏற்பாடும் இல்லை. கொடுமையை மறைத்திட பட்டாடை இல்லை. பாதகத்தைச் செய்தும் தப்பித்துக் கொள்ள பணம் எனும் ஆயுதம் இல்லை ;

காந்தி அடிகள் இந்தியாவை, மாண்புமிகு நாடு ஆக்கிட விரும்பினார் —சூதற்ற, சுரண்டலற்ற, வகுப்புப் பேதமற்ற, நாடாக ஆக்க விரும்பினார். அவர் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் காணும் நாடு எத்தகைய நிலையில் இருக்கிறது.

வகுப்புக் கலவரம்

தீண்டாமைக் கொடுமை

வலியோர் சிலர் எளியோர் தமை வதைபுரியும் கொடுமை.

கலாம் நெளியும் நகரங்கள்

கவலை ததும்பும் கிராமங்கள்

அரசியற் சூதுகள்

சமுதாயச் சதிகள்- ஆகிய எல்லாம் நெளிகின்றன; அடக்குவார் எவர் உளர் என்று கொக்கரித்தபடி.

ஜனநாயகம் நடக்கிறது — மொழி ஆதிக்கச் சண்டை கூட ஓயவில்லை.

காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்! கள்ளுக்கடை ஒழிப்பிலே கூட வெற்றிகாணாமல், கடைகளைத் திறந்து வைக்கவும் துணிந்த நிலையில்! காந்தி அடிகள் மகான், அற்புதம் நடத்தினார், மறைந்தார் என்ற முறையிலே எண்ணிக் கொள்கிற வரையில், இந்த நிலை மாறாது.

காந்தி அடிகள் மறையவில்லை. நம்முன் இருக்கிறார். நம்முடன் கலந்து விட்டார் என்று எண்ணுதல் வேண்டும் அவருடைய எண்ணங்கள் மடிந்திடவில்லை ; அவைகளை நம்முடைய இலட்சியமாகக் கொண்டுள்ளோம் என்ற உறுதி பிறந்திட வேண்டும்.

மாண்பு பிறந்திடப்
பணிபுரிவோம்

மறைந்த காந்தி அடிகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதன் பொருள் இதுவாகவே இருக்க வேண்டும். அவர் இறவாப் புகழ் பெற்றார் என்பதனை எடுத்துரைக்கும் நாள்மட்டுமல்ல இது. அவருடைய எண்ணங்களை ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் ; எனவே அவர் காண விரும்பிய மாண்பு பிறந்திடப் பணிபுரிவோம் என்ற உறுதிபெற !

அவருடைய நாட்களில் அவர் குரல் கேட்டு அன்னிய அரசு வெருண்டோடிற்று ; ஆனால் ஓட்டப்பட வேண்டியவை பல இருக்கின்றன.

பொய்மையும், கயமையும், கல்லாமையும் இல்லாமையும் சாதிப்பித்தமும் வகுப்பு மாச்சரியமும்

வெருண்டோட வேண்டும். அதற்குத் தேவைப்படும்,

தூய்மையும் வாய்மையும் அஞ்சாமையும் பணியாற்றும் தன்மையும்,

நம் ஒவ்வொருவருக்கும் இன்று பிறந்திட வேண்டும். அதற்கே இன்று காந்தி அடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். “பரம ஏழைகளும் இது தங்கள் நாடு என்று எண்ண வேண்டும். அதன் அமைப்பில் தங்களுக்கு முக்கியத்துவமும் அதிகாரமும் இருக்கிறது என்று அவர்கள் நினைக்க வேண்டும். மக்களில் உயர்ந்த சாதி என்பதே இருக்கக்கூடாது. எல்லாச் சமூகத்தினரும் அன்னியோன்யமாய் வாழவேண்டும். அத்தகைய இந்தியா உருவாகவே நான் பாடுபடுவேன் ”

இதுவே உலக உத்தமர் காந்தி அடிகளின் இலட்சியம் என்று பண்டித ஜவஹர்லால் நேரு கூறியதை நினைவு படுத்துகிறேன்.

கதர்த்தத்துவம்
நிரந்தரமானதல்ல.

தமிழகத்து வியன்பொருள்களைப் போலவே உலகின் வேறு பல நாடுகளிலும் செய்திறனால் உருவான பொருள்களுக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகின்றது,

இங்கிலாந்து நாட்டில் கம்பளங்கள் இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இவற்றில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் சிறுபான்மையோர். நூற்றுக்கு ஒருவர் ஆயிரத்துக்கு ஓரிருவர் என்றே இருப்பர். விஞ்ஞானத் தொழில் வளர்ச்சி அடைந்திருப்பதால் அங்கு நிரம்பவேலை வாய்ப்புகள் உள்ளன. அந்த நிலை இங்கு இல்லை, அந்த நிலை இன்னும் நமக்குக் கிட்டவில்லை என்றுதான் சொல்வேன், தேவையில்லை என்று நான் சொல்லவில்லை, மகாத்மா காந்தியும் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள்.

உள்ளம் நெகிழ்ச்சி அடையும் உத்தம குணம் படைத்த காந்தியடிகள் நாட்டைச் சுற்றிப் பார்த்து வேலை வாய்ப்புக் குறைவினால் மக்கள் பட்ட அவதியைக்கண்டு அவர்நிலை உயர கதர் இயக்கம் தோற்றுவித்தார். விஞ்ஞானத் தொழில்களில் முன்னேற்றம் ஏற்படும்போது கைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோரது எண்ணிக்கை குறையும். பொருளாதார நீதி கிடைக்குமென்றால் காந்தியார் ஒப்பியிருப்பார். கதர் இயக்கத்தை அவர் துவக்க அடிப்படைக் காரணமே மனிதாபிமான உணர்வேயாகும்.

கையினால் செய்யப்பட்ட பொருள்கள் வாய்ப்பும் வசதியுமுள்ளவர்களால் வாங்கப்படுபவை. தேவைப் பொருள்களல்ல.

எனவே விற்பனையாளர் நல்ல கனிவோடு நட்புணர்வோடு பழகி அவற்றை விற்கவேண்டும். விற்பனைத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நானும் அமைச்சர்கள் கருணாநிதியும், முத்துசாமியும் இவ்விழாவில் கலந்துகொண்டது பொருத்தமா என்று சிலர் எண்ணக்கூடும். நாங்கள் கலந்துகொண்டது புதுமைதான், இந்த இயக்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் இருப்பார்கள், ஈடுபாடு இல்லாத நாங்கள் வருவதைப் புதிதாகச் சிலரைச் சேர்த்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாகக் கருதவேண்டும், புதிய அரசு ஏற்பட்டதும் நாங்கள் கதர்த்துறையை மூடிவிடப் போகிறோம் என்ற ஒரு அச்சம் இருந்தது. திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து பலர் என்னை வந்து பார்த்தார்கள். ஏற்கனவே உள்ளவற்றுக்குக் காரணமற்ற குந்தகம் உண்டாக்கும் பொறுப்பற்ற அரசல்ல என்று அவர்களிடம் சொன்னேன்.

கதர்த் தத்துவம் நிரந்தரமான தத்துவமாகி விட்டது. இடைக்கால நிவாரணமாகவே அதைத் கருதவேண்டும். இது ஒரு மனிதாபிமான முயற்சியே.

எனவே இதை இந்த அரசு போற்றிக் காத்திடும். கதர், விஷயத்தில் நாங்கள் மாறிவிட்டோமா இல்லையா? என்று ஆராயுமுன் கதர் எத்தனை மாற்றங்களைப் பெற்றுள்ளதென்று யாருங்கள்.

கையால் நூற்று கையால் நெய்வதே கதர் என்றிருந்தது என்பள்ளிப் பருவத்தில் காலணா நாணயத்தில் துளை போட்டு குச்சியைச் செருகி அதைத் தக்கிளியாக்கி நூல் நூற்போம். ராட்டை வந்தது, சர்க்கா வந்தது, அதற்குப் பிறகு டெக்ஸ்டூலில் தயாரான கருவியாக இருந்தாலே நல்லதென்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருவிகள் பெரியதாக இருந்தாலே அவற்றில் தயாராகும் பொருள்களின் விலை குறைகிறது என்பதால் அவை விரும்பப் படுகின்றன. எனவே மாறியிருப்பது நாங்கள் மட்டுமல்ல. கதர்த் தொழிலும் மாறிவந்துள்ளது.