அண்ணாவின் தலைமை உரைகள்/கலையும் அரசியலும்



19. கலையும் அரசியலும்


இங்குப் பேசிய ஜெமினி வாசன் அவர்கள் இரண்டு கருத்துக்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவை சிந்தித்துப் பார்க்கத் தக்கவை. முதல் கருத்து, நமது நாட்டு ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு, அனைவரும் குறிப்பாகத் தலைவர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. இரண்டாவது கருத்து, திரைப்படத்தின் மூலம் நாட்டு மக்களிடம் நல்ல கருத்துக்களைப் பரப்ப இப்போது இருப்பதை விட, நல்ல முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.

திரைப்படத்தின் மூலம் இன்னும் எவ்வளவோ நல்ல கருத்துக்களைப் புகுத்த முடியும். ஆனால், நினைக்கிறபடிப் புகுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த நிலையை மாற்றிட நாம் அனைவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காலமும் அதற்கேற்றபடி கனிந்து வருகிறது. ஜனநாயகத்தைப் பொறுத்த வரை, இந்த நாட்டில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

ஏதோ ஜனநாயகத்திற்குப் பேராபத்து ஏற்பட்டு விட்டதாக, ஒரு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட பேராபத்து ஏதுமில்லை. இவ்வளவு பெரிய நாட்டில், மூன்று பொதுத் தேர்தல்களை மிக்க அமைதியுடனும், வெற்றியுடனும் நடத்தி இருக்கிறோம். இத்தனைக்கும் நமது நாட்டு மக்கள் பல்கலைக் கழகம் சென்று படித்தவர்கள் அல்ல! பிற நாடுகளில் தேர்தலின் போது ஏற்படும் இரத்தக் களரிகள் இல்லாமல், மூன்று தேர்தல்களை முடித்து இருக்கிறோம்!

அமைதி குலையாமல், சட்டம் சீர்கேடு அடையாமல், ஆட்சி மாற்றத்தையே செய்யும் அளவிற்கு மக்களின் மனத்தில் ஜனநாயகப் பண்பு படிந்து விட்டது. ஜனநாயகத்திற்கு, மக்களால் எந்த விதமான ஆபத்துமில்லை. வாசன் அவர்கள் குறிப்பிட்டது போலத் தலைவர்கள் அதைக் கட்டிக் காக்க வேண்டும். ஆகவே, இருக்கிற குறையே அங்கே (தலைவர்களிடம்) தான் இருக்கிறது. மக்களிடம் எந்தவிதமான குறையும் இல்லை,

அப்படி மக்களிடம் ஏதாவது குறையிருந்தால், திருத்தி விடலாம். ஆனால், தலைவர்கள் தாங்களாகத் திருந்தினாலொழிய, அவர்களைத் திருத்துவதற்கு வழியில்லை! அந்தத் தலைவர்களைத் திருத்துவதற்குத்தான், மக்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை முயற்சி எடுக்கிறார்கள், தேர்தலின் மூலம்! ஆனால், அந்தத் தலைவர்கள், ஒரு முறை மக்கள் தந்த பாடத்தின் மூலம் திருந்துவார்களா அல்லது இரண்டு முறை பாடம் புகட்டினால்தான் திருந்துவார்களா என்பது தெரியவில்லை.

மக்களிடம் பாடம் பெற்றும் திருந்தாத தலைவர்கள் யார் என்று நாம் கூறத் தேவையில்லை. ஜனநாயகத் திறனுள்ள தலைவர்கள். அவ்வளவுதான்! அந்தத் தலைவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்து நடக்கத் தொடங்கினால், ஜனநாயகம் இன்னும் ஒளியுடன் விளங்கும்! நண்பர் வாசன் அவர்கள் தென் சென்னைத் தேர்தலில் தமது ஓட்டைக் காங்கிரஸ் வேட்பாளருக்குப் போட்டதாகக் கூறினார். இதை வெளிப்படையாகக் கூறி விட்டு, வெற்றி பெற்ற மாறனையும் பாராட்டினார்.

இது, ஜனநாயத்தில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதே நேரத்தில், கனிவுக்கும் இடமுண்டு என்பதை நிலை நாட்டும் பேச்சாகும். நண்பர் வாசன் அவர்கள் இப்படிக் கூறியதன் மூலம், காங்கிரஸ் வேட்பாளர் சி.ஆர்.இராமசாமி ஆறுதல் அடைவார் என்று நம்புகிறேன். ஒரே சமயத்தில்

F-10

இராமசாமிக்கு ஆறுதலும், மாறனுக்குப் பாராட்டும் தெரிவித்த வாசன் அவர்களின் திறமை பாராட்டத் தக்கது.

மாறன் வெற்றி பெறுவார் எனத் தெரிந்தும் கூட, இராமசாமிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று அவர் துணிவாகக் கூறியதைக் கண்டு மகிழ்கிறேன். மாறனுக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று இப்போது கூறுகின்ற சிலரது கூற்றை ஆராயாமல், அப்படியே ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நாங்கள் அரசியல் அனுபவம் பெறாமலில்லை! அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்காமல், மாறன் முன்னேற வேண்டும் என்று உளப்பூர்வமாக வாழ்த்தியவர்களுக்கு என் நன்றி.

இங்கே சில நண்பர்கள் “கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா?” என்னும் வாதம் பற்றிக் கூறினார்கள். “அரசியல் என்பதே ஒரு கலைதான்” என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. “அரசியல் ஒரு கலையா? அல்லது வெறும் கருத்துக் குவியலா?” என்று ஆராய்ந்த பேரறிஞர்கள், “அரசியல் என்பது கருத்துக் குவியல்களின் வழி மக்களைத் திருப்பி, அவர்களைத் திருத்தும் ஒரு கலை,” என்றே முடிவு கட்டியிருக்கிறார்கள்.

கலை என்பது மக்களைக் கட்டியாள்வது; அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத்துவது. கலை என்பது நிழல் உருவில் இருப்பது; அரசியல் நிஜ உருவத்தில் இருப்பது. கலை என்பது உடனடித் தேவைகளுக்காக இயங்குவது. அரசியல் என்பது நீண்ட காலத் தேவைகளுக்காக இயங்குவது. ஆகவே, கலையும், அரசியலும் பின்னிப் பிணைந்தவை. இதை உணர்ந்த பிறகும், “கலையில் அரசியல் வரலாமா? அரசியலில் கலை புகலாமா?” என்று கேட்பது, 18 வது நூற்றாண்டின் கருத்தாகத்தான் இருக்க முடியும்.

நாம் அறிந்த அரசியல் தலைவர்களின் கலை ஈடுபாடு கண்டு நாம் தெளிய வேண்டும். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற வேளையிலும் கூட, ஓய்வு கிடைக்கும் போது, வின்ஸ்டன் சர்ச்சில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார். மேலும், உலகத்தின் மிகச் சிறந்த அரசியல்வாதியான ஆப்ரகாம் லிங்கன் நாடகம், பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பண்டித நேரு இங்கிலாந்து செல்கிற போது, அங்கு நடக்கும் புகழ் மிக்க நாடகங்களைப் பார்ப்பது வழக்கம்!

தமிழகத்தில் அரசியல் உணர்வை ஊட்டிய சத்தியமூர்த்தி அவர்களுக்குச் சங்கீதம், நடனம் ஆகியவற்றில் பெருவிருப்பம் இருந்ததோடு, நாடகத்தில் அக்கறை கொண்டதோடு, சில நாடகங்களில் பங்கேற்று, வேடமும் தாங்கி இருக்கிறார். ஆகவே,. கலையும், அரசியலும் இணையக் கூடாது என்பது சரியல்ல. கலையிலும், அரசியலும் சரியானபடி இருக்க இயலாதவர்கள்தான் அப்படிக் கூறுவார்கள்.

ஆனந்த விகடனில் கல்கி எழுதியதாக நினைவு. ஒரு முறை, அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, தம் பையிலிருந்த பொரிவிளாங்காய் உருண்டை ஒன்றை எடுத்துச் சாப்பிட்டாராம். உடனே எதிரில் இருந்தவர், கல்கியைப் பார்த்து “நீங்கள் காங்கிரஸ்காரரா?” என்று கேட்டாராம், “ஆம்'” என்றார் கல்கி. அதற்கு அவர் “பொரிவிளாங்காயை காங்கிரஸ்காரன் சாப்பிடலாமா?” என்று கேட்டார். “ஏன், சாப்பிடக் கூடாதா?” என்று கல்கி வினவினார். அதற்கு அவர், “பொரிவிளங்காயை நீங்கள் விரும்பிச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள இனிப்பில் நாட்டம் இருக்கிறது என்பது தெரிகிறது. இனிப்பில் நாட்டம் செலுத்தினால், தேசபக்தி வருமா?” என்று கேட்டார்.

இதிலிருந்து தெரிவது அரசியலில் அடிப்படைக் கருத்து விவாதங்களுக்குப் பதில், மனிதனைப் பற்றிய விவாதங்கள் வளருவதைத்தான். கல்கி அவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி நடந்தது 30 வருடங்களுக்கு முன்! இப்போது கூட அடிப்படை அரசியல் கருத்துக்களை விவாதிப்பதை விட்டு விட்டுத் தனிப்பட்டவர்களை விமர்சிப்பது எதைக் காட்டுகிறது? கல்கி, இரயிலில் கண்ட மனிதர்கள் 30 வருடங்களுக்குப் பிறகும், வயதான நிலையில் உலவிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

கலை என்பது மக்களின் மனத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாகும். எந்த நாட்டிலுமில்லாத முறையில் தமிழகத்தில் நெகிழ்ச்சியை உருவாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி குறைவானது. அதிக முயற்சி இல்லாமல், தமிழக மாந்தர் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திட முடியும். அதற்குக் காரணம், நெகிழ்ச்சி என்னுஞ் சொல்லில் சிறப்பு ‘ழ’ கரம் இருக்கிறது.

தமிழிழிலிருந்து இருந்து பல நாட்டவர்கள் எதை, எதையோ எடுத்துக் கொண்டனர். பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டனர். ஆனால், அந்த ‘ழ’ வை மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சிறப்பு ‘ழ’ கரம் இருக்கிற காரணத்தால், தமிழகத்துக் கலை மிக விரைவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது.

மனம் நெகிழச் செய்வது கலை. நெகிழ்ந்த மனம் நெகிழ்ந்து கொண்டே போனாலும் பயனில்லை, நெகிழாமல் இருந்தாலும் தவறு! ஆகவே, மனம் நெகிழ வேண்டும் கலையால்! அப்படி நெகிழ்ந்ததை வழிப்படுத்துவது, பயன் பெறச் செய்வது அரசியல்! உள்ளத்தை நெகிழச் செய்யும் திறன் படைத்த கலைஞர்களிடமே, நெகிழ்ந்த உள்ளத்தை வழிப் படுத்தும் அரசியலும் இருந்தால், தவறு இல்லை தவறு இல்லை என்பது மட்டுமல்ல; பொருத்தமிருக்கிறது; பொருளுமிருக்கிறது! இந்தக் கருத்துக்களை உலகம் உணர்ந்து நடக்கும் காலம் கனிந்து வருகிறது.

வகைப்பாடு : ஜனநாயகம்—மக்களும் கலையும்.
(20-11-67 அன்று சென்னையில் திரை உலகப் பெருமக்கள் அளித்த பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)