அண்ணாவின் தலைமை உரைகள்/மொழித் திணிப்பைக் கை விடுக



18. மொழித் திணிப்பைக்
கை விடுக


ஆங்கிலோ—இந்தியர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்த போதிலும், அன்றாட நாட்டு நடப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தித் திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது.

ஆங்கிலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மொழி என்றல்லாமல், உலக மொழியாயிருப்பதாலேயே, அதை நான் ஆதரிக்கிறேன்.

ஆங்கிலத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள் கூட, இப்போது அதனைப் புறக்கணித்து விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

நாட்டின் ஒற்றுமை ஒரு குறிப்பிட்ட மொழியையோ, “எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தாக வேண்டும்” என்னும் நிலையையோ பொறுத்ததல்ல. மாறாக, உணர்ச்சியைப் பொறுத்ததாகும்.

ஆங்கில மொழி எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானதாக இன்றில்லை. இரண்டாவது உலகப் போரின் போது, மாவீரர் சர்ச்சில், “ஆங்கிலம் பேசுகிற மக்களே ஒன்று படுங்கள்!” என்று அறைகூவல் விடுத்தார்.

அமெரிக்கா நாடு அப்போதுதான் போரில் இறங்கியது. அப்படி ஒன்று படுத்தும் ஆற்றல் ஆங்கிலத்துக்கு உண்டு.

உலகின் பல நாடுகளிலும், இன்று ஆங்கிலம் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வேறு பல நாடுகளில் இரண்டாவது மொழியாக அது கற்றுத் தரப்படுகிறது.

சோவியத்து இரஷ்யாவில் கூட, ஆங்கிலம் சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்படுகிறது.

நம்முடைய நாட்டிலே கூட, அந்நிய நாட்டினுடையவை என்பதற்காக எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் அல்லர், இங்குள்ள தலைவர்கள். அந்நியக் கடன்கள் அவர்களுக்குப் பிடிக்கும்; அந்நியத் தொழில் நுணுக்க அறிவு பிடிக்கும்; அந்நிய நடையுடை பாவனைகள் பிடிக்கும். மொழியைப் பற்றி வரும் பொழுது மட்டுந்தான் அவர்கள் மாறி விடுகிறார்கள்.

இங்கே பல்வேறு நாகரிகங்களின் சுவடுகள் பதிந்துள்ளதைக் காணலாம். ஆங்கில நாகரிகம் உட்படப் பல நாகரிகங்களும் சேர்ந்து, இன்றைய இந்திய நாகரிகத்தை உருவாக்கியுள்ளன.

ஒருமைப்பாடு என்பது உளப்பூர்வமாக உருவாக வேண்டும்; மொழியால் அல்ல.

இந்நாட்டை ஒன்றுபடுத்த, இந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக் கதையாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்தி எதிர்ப்பு இயக்கம் துவக்கப்பட்ட போது, தேசியத்தையும் ஏன், இந்தியா முழுவதையுமே எதிர்ப்பதற்குச் சமமாக அது கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தி பேசும் பகுதிகளுக்குக் கூடச் சென்று இந்தியைத் தாராளமாக எதிர்க்க முடியும்.

நாட்டிற்குள் பல்வேறு பகுதிகளுக்கிடையே தொடர்பு கொள்வதற்கு ஒரு மொழியும், வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதற்கு வேறொரு மொழியும் வேண்டும் என்று சொல்வது அரசியல் அதிகப் பிரசங்கித்தனமாகும்.

பிற மொழியினர் மீது இந்தி திணிக்கப்படுவதை உறுதியோடு எதிர்த்து வருகிறோம்; தொடர்ந்து எதிர்ப்போம். இந்தித் திணிப்பு கை விடப்படும் வரை எதிர்ப்போம்.

வகைப்பாடு : அரசியல்—மொழிக் கொள்கை
(25-10-67 அன்று சென்னையில் ஆங்கிலோ—இந்தியர் சங்கத்தின் 88 ஆவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)