அண்ணாவின் தலைமை உரைகள்/ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்
27. ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்
ஆடவரும், பெண்டிரும், வாலிபர்களும், வயோதிகர்களும் செங்கற்பட்டு மாவட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆக்கப்படுகிற இந்த விழாவில் பங்கு கொண்டிருப்பது—இந்த முடிவு எந்த அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. "ஒரு சர்க்கார் அலுவலகம் எங்கிருந்தால் என்ன? எங்கே மாற்றப்பட்டால் என்ன?" என்றில்லாமல் நாட்டு மக்கள் அக்கறை காட்டுவது நீண்டநாள் விருப்பம் நிறை வேறுகிறது என்பதற்கு அரிய எடுத்துக்காட்டு.
சொந்தக் கட்டிடத்தில் தலைமையகம் இன்று இல்லாமலிருந்தாலும் முறையே பொதுப்பணி அமைச்சரும், வருவாய்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சரும் கட்டிடம் எழும் என்னும் உறுதியை அளித்திருக்கிறார்கள். அலுவலக மாளிகை, எழில் மிக்க கட்டிடங்கள், அலுவலர் குடியிருப்புகளும் எழ இருக்கின்றன. காஞ்சி தலைநகர் ஆவதற்கு எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் அமைச்சர்கள் கருணாநிதியும், மதியழகனும் எடுத்துக் கூறினார்கள்.
இப்படிக் காஞ்சிபுரம் தலைநகர் ஆக்கப் படுவதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. முன்னுள் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களும் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னுலிருந்தவர்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்களை நிறைவேற்றுவது எனது கடமை. முன்பிருந்தவர்கள் தேவையில்லை என்று விட்டு விட்டாலும், அது நன்மை தரத்தக்கதாயிருந்தால், அப்படிபட்ட நல்லவை நடைபெற ஒட்டாமல் குந்தகம் செய்யமாட்டேன் என்பதனை எடுத்துக்காட்ட இந்த தலைநகர் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை அவர்கள் அறியவேண்டும். இந்த விழாவை ஒட்டிய சிறப்புமலர் ஒ ன் றி ல் பக்தவத்சலம் "செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் மாவட்டத்துக்கு வெளியிடத்தில் இருப்பது அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை” என்று எழுதியிருக்கிறார்.
மாவாட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆனாலும் வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டே விளங்கும் என்னுஞ் செய்தியை வழக்கறிஞர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு தலைநகரிலேயே எல்லா அதிகாரங்களும் குவியும் நிலை நீடிக்கக் கூடாது, அது ஏற்றதல்ல. சோழ மண்டலத்தின் தலைமை ஒரு காலத்தில் தொண்டை மண்டலம் இருந்தாலும் துறைமுகப் பட்டிணங்களாக மாமல்லபுரமும், சதுரங்கப் பட்டிணமும் விளங்கின. அது போலக் காஞ்சிபுரமும் தலைநகராக இருப்பினும், வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டு நீடிக்க வேண்டும். காஞ்சிபுரம் தலைநகர் ஆகவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. என்னிச்சையாக இந்தக் காரியத்தைச் செய்துவிட்டேன் என்று யாரும் குறைசொல்லாமல் இருக்க, இந்தப் பந்தோபஸ்தைத் தேடிக்கொள்கிறேன்.
முன்பே கூறிஇருக்கிறேன் என்னிடமிருப்பதாகச் சொல்லப்படும் திறமைகளுக் கெல்லாம் காஞ்சிபுரம்தான் காரணம் என்று. குறைகள் ஏதாவது இருப்பின் இங்கே பிறந்தும் இப்படிப்பட்ட குறைகள் இருக்கிறதே என்று வருத்தப்பட வேண்டாம். காஞ்சிபுரம் தலைநகர் ஆவதால், மக்கள் பொறுப்பும் அதிகமாகிறது. இங்கே தொழில்வளம் பெருக, வாணிபம் கல்வி வசதி வளர அதிக வாய்ப்புகள் ஏற்படவேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னையில் இருந்ததால் காரியங்கள் தாமதமாக நடந்ததென்று மக்கள் கருதலாம். இனி அவர் காஞ்சிக்கே வந்திருப்பதால், வேண்டிய வளர்ச்சிகளை தேவைகளை, விரைவாகவும், விரிவாகவும் அறிந்து செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிற்றுார்களுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சியில் இன்று வறுமை தாண்டவமாடுகிறது. நோய்வாய்ப்பட்ட வன் முன்னால் உண்டவிருந்தை நினைப்பதுபோல, வறுமை வாய்ப்பட்டவர்கள் பழைய நினைப்பை நினைக்கத்தோன்றுகிறது. அப்படிபட்ட வறுமையை ஒட்டக் கைத்தறி நெசவாளர்களும் விவசாயிகளும் தங்கள் தங்கள் தொழில்களை நிலைநிறுத்திக்கொள்ள வளமான வாழ்வை அவர்களுக்குப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சித் தலைவரும் பிற அதிகாரிகளும் கடமை ஆற்றவேண்டும். மக்களுடன் பழகி குறைகளை அறிந்து அவற்றைத் தீர்க்கும் வகையில் சர்க்கார் அதிகாரிகள் பணியாற்றினால், மாநிலத்தில் ஆளுகின்ற சர்க்காருக்கும் சிறப்புவரும். கிராம மக்கள் வரும்போது, அவர்களே அன்புடன் வரவேற்றுக் காரியங்கள் செய்யக் கூடியதாக இருந்தால், வாக்களித்து இயலாததாக இருந்தால் இதமாக எடுத்துக் கூறி விளக்கி அனுப்பவேண்டும். தாமத நிலையைத் தவிர்த்திடும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டால் உண்மையான ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும்.
ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆகவேண்டும். அப்போது தான் ஜனநாயகம் வளரும். பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆப்ரகாம்லிங்கன், காந்தியடிகள், கென்னடி ஆகியோர் ஜனநாயகத்தைப் பற்றிக் கூறியதை மேற்கோள் காட்டி விடுவதால் மட்டும் ஜனநாயகம் வளர்ந்துவிடாது. ஒவ்வொரு சர்க்கார் துறை அதிகாரியும் ஜனநாயகத்தை வளர்க்கும் முறையில் பணியாற்ற வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்கும் துறையில் சர்க்கார் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றவேண்டும்.
சிங்காரச் சென்னையிலிருந்து, கடற்கரை காற்று வீசும் சென்னையிலிருந்து பதிவுபெறாத ஊழியர்களைக் கதகதப்பான இந்த இடத்திற்கு மாற்றியது பற்றிச் சிலர் கவலைப்படலாம். கடற்கரைகாற்று இங்கு இல்லை. ஒரு புறம் வேகவதியும் மறுபுறம் பாலாறும் இருக்கின்றன. அவற்றை நீரோட்டம் உள்ளதாக ஆக்கினால் சென்னையை விடக் குளிர்ந்த காற்றை இங்கே அனுபவிக்கலாம்.
வேகவதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு என்ன காரணத்தாலோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் அத்திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால்,கடல் காற்றை விட, நல்ல காற்றை உண்டு மகிழலாம். சென்னைக் கடற்கரைக் காற்றை, மன்னர்கள் உண்டதில்லை. வேகவதி, பாலாறு, ஆகியவற்றின் காற்றை மன்னர்கள் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்களை அப்படிப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். அரசு ஊழியர்களிடையே கவலையைப் போக்கத் தக்க வகையில், வசதியுள்ள வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டிருக்கிறேன்.
வகைப்பாடு : அரசியல்—ஆட்சி
(6-7-68 அன்று காஞ்சித் தலைநகர்
துவக்க விழாவில் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)