அண்ணாவின் தலைமை உரைகள்/திறமைமிகு தமிழ்நாடு காவல் படை
28. திறமைமிகு தமிழ் நாடு
காவல் படை
இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி ஐ. ஜி.அவர்கள் வந்தழைத்த பொழுது, இங்கு வந்து சில மணி நேரம் இருந்து செல்ல, என் உடல் நிலை[1] அனுமதிக்குமா என்று அஞ்சினேன். ஆனால், இங்கு வந்து இந்த நேர்த்தி மிக்க விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளைக் கண்டதில், நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு வராமல் தவிர்ப்பதைக் காட்டிலும், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில மணி நேரங்கள் வந்திருந்து செல்வதால் உடல் நலம் பெறுவதாகவே நான் உணருகிறேன்.
விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோரையும் இவற்றில் பங்கேற்றோரையும் நான் பாராட்டுகிறேன். விளையாட்டுப் பந்தயங்களில் போலீஸ் படையினர் இத்தனை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக உள்ளது.
இந்நேரத்தில் நான் ஒரு கருத்தேற்றத்தைக் கூறலாமென்று நினைக்கிறேன். போலீஸ் படையினருக்கென்று ஏற்கனவே உள்ள விதிமுறைகளோடு மற்றோரு விதிமுறையைச் சேர்த்துக் கொள்ளுமாறு நான் ஐ. ஜி. அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் சேர்த்துப் போலீஸ் படையினரிடையே நாடகக் கலைப்போட்டி நடத்தி, அவர்களில் நடிப்பு - கலைத்தேர்ச்சி உள்ளவர்கள் எவெரெவர் என்று நாம் அறியலாம். போலீஸ் படையில் இந்தத் திறமை படைத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன.
எந்தச் சமுதாயத்திலிருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக்கண்ணாடிகளாக அப்படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பதில்லை. போலீஸ்படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதே போலப் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறிழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறை பாடுகளையே அவை காட்டுகின்றன.
தங்களால் உருவாக்கப்படாத பிரச்சனை களுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகிற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டி இருக்கிறது. சகல விதத்திலும் சகிப்புத்தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியுள்ளது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல், பற்றற்ற அமைதியுடன் நடந்து கொள்ளவேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். பெற்ற சிறந்த பயிற்சிக் கொப்பக் கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்து கொள்ளவேண்டியுள்ளது.
தமிழ் நாட்டுப் போலீஸ் படையினைக் குறித்து இம்மாநிலத்துக்கு வெளியே நான் சென்ற இடங் களில் வெகு உயர்வாகக் கூறக் கேட்டிருக்கிறேன். குறிப்பாகக் குற்றங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் தமிழ்நாட்டுப் போலீசாருக்குள்ள ஆற்றலை அவர்கள் மெச்சியுரைத்திடக் கேட்டிருக்கிறேன்.
அண்மைக் காலத்தில் சென்னை மாநகரில் தொடர்ச்சியாக முகமூடிக் கொள்ளைகள் நடந்த போது, இம்மாநிலத்துக்கு வெளியே பலர் என்னைக் கேட்டனர். இவற்றை எப்படிச் சமாளிப்பார்கள் உங்கள் போலீஸ் படையினர் என்று என்னிடம் தங்கள் ஐயப்பாட்டைத் தெரிவித்தார்கள். அத் தகைய நேரத்தில் அந்தக் கொள்ளைகளின் பின்னால் இருந்த மர்மத்தைக் கண்டுபிடித்ததோடு இந்தியா, முழுவதும் சுற்றி அ8லந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைமையகம் எது? கிளைகள் எங்கெங்கு இருக்கின்றன? என்பதை எல்லாம் தமிழ் நாட்டுப போலீசார் கண்டுபிடித்தனர். இது அவர்களது சாதனை மகுடத்திற்குக் கிடைத்த மற்றொரு முத்தாகும்.
சென்னை நகரில் தொடர் தீ விபத்துக்கள் நடைபெற்றபோது, கண் இமை மூடாது இராப் பகலாகத் தொண்டாற்றினர் நம் போலீஸ் படையினர். அவர்களும் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்பதால், ஏழை எளியோரது துயரத் துடிப்பை அவர்களும் அறிந்திருப்பவர்களே. அதனால்தான் அவர்களும் தீயணைப்புப் படையினரும் அத்தனைப் பாடுபட்டார்கள்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பொறுத்துக் குறைகளைக் கூறிப் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவோர் இருக்கக்கூடும். ஆயினும், எவரும் போலீஸ் படையினரைக் குறை சொல்வதில்லை. படையின் தலைவர்களையே குறை சொல்கின்றனர். இவ்வகையிலும் தீவிரமாகச் செயல்பட்டு முதல் நிலையைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
ஜன நாயகமானது பல்வேறு பிரச்சினைகளைக் கிளறிவிடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அவைகளில் ஒன்று, இந்தப் புதிய சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துரைக்கும் அறிவுரையே சிறந்தது. நீங்கள் கூறுவதே நல்வழி என்று மக்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும்.
அது ஒரு கலை. அந்தக் கலையில் போலீஸ் படையினர் தங்களைப் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். இது மிகக் கடினமானது. ஆனால், மிக அவசியமானது. அண்மைக் கால நிகழ்ச்சிகளில், இந்தக் கலையை நீங்கள் பயின்று விட்டீர்கள் என்னும் நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது. பெரிய மோதல்களைத் தவிர்த்திருக்கிறீர்கள். இந்த ஆற்றலை, இந்தப் போக்கை நீடித்துக் கடைப்பிடித்து வரும்படி உங்களை நான் வேண்டுகிறேன். கல்லூரி மாணவர்களானாலும் அல்லது வேறு பல துறைகளில் பணியாற்றியவர்களானாலும், அவர்களிடையேயும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?
தங்களில் ஓர் அங்கமாகவே போலீஸ் படையினர் இயங்குகிறார்கள் என்பதை மக்களும் உணர்ந்து, அவர்களை உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த நிலை இருந்தால்தான். போலீசார் திறம்படச் செயலாற்றவும் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவும் முடியும்.
வகைப்பாடு : ஆட்சி—காவல் துறை
(7-12-68 அன்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் காவல் துறை விளையாட்டுப் பந்தய விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)
- ↑ அண்ணாவைக் கொடிய புற்று நோய் கடுமையாகப் பற்றிய நிலை.