அண்ணா சில நினைவுகள்/சாவி இங்கே, பெட்டி அங்கே!

சாவி இங்கே; பெட்டி அங்கே!


1947 ஆகஸ்ட் 15 துக்கநாள் என்று பெரியாரும், மகிழ்ச்சி நாள் என்று அண்ணாவும் அறிவித்துக் கருத்து வேறுபாட்டினை வெளிப்படையாகக் காட்டியதன் விளைவாக அண்ணா 1948 மே 8, 9 நாட்களில் நடைபெற்ற துரத்துக்குடி மாநாட்டுக்குச் செல்லவில்லை. மேலும், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற பிரச்சினைக்குரிய உருவகக் கட்டுரைகளைத் “திராவிட நாடு” இதழில் தீட்டி வருகிறார். இதையே சாக்காகக் கொண்டு, ஏற்கனவே எரிச்சலடைந்துள்ள பெரியாரிடம், மேலும் கோள் மூட்டிச், சுத்தமாக அண்ணாவைப் பெரியாரிடமிருந்து பிரித்துவிடலாம் என்று சிலர் முயல்கிறார்கள். அண்ணாவோ “நான் விலகவில்லை; ஒதுங்கியிருக்கிறேன்” என்றுதான் சொல்கிறார். எனவே ஒதுங்கி நிற்காமல் மீண்டும் எப்போதும் போல் அண்ணா உள்ளேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் சிலர் விரும்பினோம்.

‘நாங்கள்’ என்ற பட்டியலில் பெரிய பிரமுகர்கள் யாருமில்லை. ‘நாங்கள்’ பெரியாரின் அன்புக்கும் நம்பிக்கைகும் உரியவர்கள். ‘நாங்கள்’ சொல்வதை அய்யா ஏற்பார். அதனால், ஈரோட்டில் ஒருஸ்பெஷல் மாநாடு கூட்டி, அதற்கு அண்ணாவைத் தலைமை தாங்கச் செய்யலாம்,என்ற எங்கள் யோசனையை, அய்யா ஒத்துக்கொண்டார்கள். அதன்படி 1948 அக்டோபர் 23,24 தேதிகளில், ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷனிலுள்ள அய்யாவுக்குச் சொந்தமான திடலில், பந்தல் போட்டு மாநாடு நடத்திடத் திட்டம். ஈரோடு சண்முகவேலாயுதம், தவமணி இராசன், நான் ஆகிய ‘நாங்கள்’ எங்கள் முயற்சியில் வெற்றி பெற்றோம்!

“மாநாட்டு நுழைவுச் சீட்டுடன் சேர்த்து உணவுக்கும் டிக்கட் தந்து விடுவோம். கடுமையான ரேஷன் அமுலில் இருப்பதால் வருகிறவர்களின் வசதிக்காக நாமே ஆள் வைத்துச் சமையல் செய்யலாம்”-என்றார் அய்யா. சரி என்றோம். “இப்போதுதான் துரத்துக்குடி மாநாடு நடந்துள்ளதால் ஈரோட்டுக்கு அதிகக் கூட்டம் வராது-” என்னும் அய்யாவின் கருத்தில் மட்டும் நாங்கள் மாறு பட்டோம். இதில் நாங்கள் சொன்னதைக் கேட்காததால், பின்னால் மிகவும் அவதிப்பட்டார் அய்யா அவர்கள்.

“அண்ணாதுரை இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கப் போகிறார் என்றால், இனிமேல் திராவிடர் கழகத் துக்கும் அவர்தான் தலைவரா?” என்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தற்செயலாக என்னைப் பார்த்த தி. பொ. வேதாசலம் அப்பாவித்தனமாகக் கேட்டார். “அதில்லிங்க. திராவிடர்கழகத்துக் குத் தலைவர் நீங்கதான் ! அண்ணா, இந்த மாநாட்டுக்கு மட்டுந்தான் தலைவர்-” என்றேன் நான். அவருக்குத் தன் பதவி பறிபோய்விடுமோ என்கிற பயம்.

அண்ணாவை இரட்டை மாட்டுச் சாரட்டு வண்டியில் வைத்து, ஈரோட்டு வீதிகளில் ஊர்வலம் நடத்தினோம். அய்யாவுக்கு உண்டான மகிழ்ச்சியின் எல்லையை நாங்கள் அன்று நேரடியாகக் கண்டோம். அவரும் வண்டியில் அமர்ந்து வரலாம். ஆனால் யார் சொல்வியும், கேட்காமல், மேல்துண்டை எடுத்துக் கருப்புச்சட்டைக்கு மேல் இடுப்பில் கட்டிக்கொண்டு, தேர்வடம் பிடிப்பது போல், ரதத்துக்கு முன்பாக நடந்தும் ஒடியும் வருகிறார் அய்யா; அவருக்கு ஈடுகொடுத்து நானும்! அண்ணாவுக்கு ஆச்சரியமான புன்னகை முகம் முழுதும்! சம்பந்தருக்குப் பல்லக்குத் தூக்கிய திருநாவுக்கரசர், அண்ணாவின் நினைவுக்கு வந்திருப்பார் போலும்!

அதன் பிறகு அய்யா அவ்வளவு நடந்து நான் பார்க்க வில்லை; அடுத்த 2, 3 ஆண்டுகளில் மேடையில் நின்று கொண்டே பேசுவதுகூட இயலாமல் போயிற்று! அய்யாவே முனைந்து, மும்முரமாய் முயன்று, எஸ். ஆர். சந்தானம் மூலமாக அண்ணாவுக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க.அவர்களுக்கும் ஈரோடு நகரமன்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த மாநாடு பல்வகையானும் சிறப்புப் பெற்ற தல்லவா? திரு. வி. க. திராவிடநாடு படம் திறந்தார். கலைவாணர், “திராவிடமாநாடே” என்று வில்லுப்பாட்டுப் பாடினார். குருசாமி, குஞ்சிதம், அழகிரிசாமி (இவருக்குக் கடைசி மாநாடு) ஆகியோர் பங்கேற்றனர். நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு இரவிலும், கலைஞர் மு. கருணாநிதி ஒரு இரவிலும், நாடகங்கள் நடத்தினர்.

அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல், அய்யா தலைவரை வழிமொழியும்போது, கூடியிருந்தோர் இன்ப வெள்ளத்தில் நீந்துமாறு, “எனக்கோ வயதாகிவிட்டது! அதனால், வயது வந்த மூத்த மகனிடம் பொறுப்புகளை ஒப்படைப்ப்துதானே முறை? அண்ணா அவர்களிடம்; உங்கள் அனைவருடைய முன்னிலையிலும், பெட்டிச்சாவியை ஒப்படைக்கிறேன்-” என்றார் பெரியார். அண்ணாவும் விட்டுக் கொடுப்பாரா என்ன? தலைவர் முன்னுரையில், “அய்யாபெட்டிச்சாவியை என்னிடம் தருவதாகக்கூறினார். தந்தையை மீறித் தறுதலையாகத் திரியும் பண்பு எனக் கில்லை. அதை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவேன். சாவிதான் என்னிடத்தில் இருக்குமே தவிரப் பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும்!” என்றார் அறிஞர் அண்ணா!

அக்டோபர் மாதம் அல்லவா? மாநாட்டுக்கு முதல்நாள் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் வெள்ள மாய்த் திரண்டிருந்தனர். அய்யாவின் தவறான கணக்கின் படி, குறைவான அளவிலேயே உணவு சமைக்கப் பட்டிருந்தது. அண்ணாவின் தலைமையுரைக்குப்பின் இடைவேளை விடப்பட்டதும், உணவு டிக்கட் வாங்கியிருந்ததால், எல்லாருமே அடுத்துள்ள நாயக்கர் சத்திரத்துக்குப் படை யெடுத்தனர். பெரியார் நுழைவாயிலில் நின்றுகொண்டார், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எண்ணி! அவரையும் தள்ளிக் கொண்டு, பசி கொண்ட மக்கள் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள்! தூத்துக்குடி கே. வி. கே. சாமி தடுக்கப்பார்க்கிறார்! குழித்தலை வையாபுரி சோழகருக்கு ஆளனுப்பி அய்யா லாரியில் அரிசி வரவழைத்துச் சாப்பாடு தயாரித்திருந்தார். ஒழுங்குபடுத்திச் சாப்பாடு பரிமாற முடியவில்லை. நேரமும் போதவில்லை!

அண்ணா வெளியில வந்ததும், சம்பத்தும் நானும் சட்டென்று ஒரு காரில் ஏற்றிக்கொண்டு விரைவாகப் புது ரயிலடிக்குப் போனோம். “எங்கே?” என்றார் அண்ணா. “இங்கே நமக்குச் சாப்பாடு கிடைக்காது சம்பத் வீட்டிலே எப்படி நிலைமையோ தெரியாது! பேசாமல் வாருங்கள்” என்று ரஹ்மானியா ஒட்டவில் போய் இறக்கினோம் அண்ணாவை; பிரியாணி சாப்பிட புது ஜங்ஷன். நான் R. M.S. அலுவல் பார்க்கும் area, மேலும், ர கிமானியா ஒட்டலிலும், பக்கத்து உடுப்பி ஒட்டலிலும் எனக்குப் பற்று, வரவு உண்டு அப்போது! ஏறத்தாழ நான் உள்ளுர் வாசி போலத்தானே!

மாநாட்டுத் தலைவருக்கு, ஒட்டலில் பிரியாணி உபச்சாரம்! அடுத்திருந்த அய்யர் ஒட்டலில் சொல்லி, நிறையத் தயிர்சாதம் பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு, திரும்பிப் போகிறவழியில் கலைஞரின் நாடகக்குழுவினர் தங்கியிருந்த விட்டில் இறங்கி, அவர்கள் பசியால் தவிக்காமலிருக்கத் தயிர்சாதம் வழங்கினேன். அரங்கண்ணல், கருணை ஜமால், தஞ்சை ராஜகோபால் எல்லாரும் நாடகக்குழுவில் அப்போது நடிகர்களாக வந்திருந்தனர்.

பழைய ரயில்வே ஸ்டேஷனில், அய்யா பங்களா, மூலையில் இருக்கிறது. அங்கு போனோம். ஓர் அறையில் சென்னை என். வி. நடராசன் அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறார். அண்ணா திடுக்கிட்டுப் போய், “என்ன நடராஜன்?” என்று விசாரித்தார். “அய்யா இந்த மாநாட்டிலே என்னை ரொம்ப அலட்சியப்படுத்திவிட்டார். எனக்கு முக்கியமான function தரக்கூடாதா?” என்றார். நான் குறுகி கட்டு, “ஏங்க-நீங்க விஷயம் தெரிஞ்சவுங்களே இப்படி அழலாமா? அண்ணாவே தலைமை தாங்கும்போது நமக்கு வேறெ என்ன வேணும்? வாங்க! அய்யா நம்மை யெல்லாம் எப்பவுமே அலட்சியம் செய்யமாட்டார்! உண்மைத் தொண்டுக்குத் தனி மதிப்பு என்றைக்கும் உண்டு!” என்று சமாதானம் செய்தேன்.

பிறகு அண்ணாவிடம் சாப்பாடு போடுவதில் ஏற்பட்ட குழறுபடியான நிலவரத்தை எடுத்து விளக்கி, “நாம இப்ப உடனே மாநாட்டை ஆரம்பிச்சி நடந்தணும்! இல்லேன்னா, சோத்துப்பிரச்சனை முடிவே ஆகாது!-” என்றேன். அதே போல, அண்ணா பந்தலுக்குள் நுழைந்து, மேடையில் ஏறி, “தோழர்களே” என்று குரல் கொடுத்ததும், சாப்பாட்டுக் காகக் கியூவில் நின்றவர்களெல்லாம் கலைந்து ஒட்டமாக ஒடி வந்தார்கள் உள்ளே!

பெட்டிச் சாவியைப் பெற்றுக்கொண்ட பிறகு கூட ஒட்டலுக்குச் சாப்பிடப் போன மாநாட்டுத் தலைவர் அண்ணாவை, அடிக்கடி இதுபற்றிக் கேலி செய்தோம்!