அண்ணா சில நினைவுகள்/வரைந்த ஒவியம் மறைந்ததே!

வரைந்த ஓவியம் மறைந்ததே!

1969 சனவரித்திங்கள் இரண்டாம் வாரம் ஒரு நாள் இரவு அண்ணா வீட்டிலிருந்தேன். அண்ணியார் அண்ணா வுக்கு ஒரு கிளாஸ் தம்ளரில் அரிசிக்கஞ்சி கொடுத்தார்கள். இரவு உணவு ஒருவாய் உட்செலுத்திய அண்ணா, முகத்தைச் சுளித்தவராய், என்ன ராணி இது! பாத்துத் தரக்கூடாதா? இந்தக் கஞ்சியிலே பார்! ஒரு சாதம் முழுசாக் கிடக்குது!” என்றார் பரிதாபக் குரலில். “ஒரு பருக்கை சோறு கூட இல்லாமெ (liquid) லிக்விடாகத்தான் சாப்பிடச் சொல்லியிருக்காரா டாக்டர்?” என்று கேட்டேன் அண்ணாவிடம் அப்பாவித்தனமாக. “அதில்லய்யா. சோறு தொண்டையிலே உறுத்துது, இறங்கமாட்டேங்குது!” என்று அண்ணா சொல்லிய பிறகே, அந்நோயின் கொடுரத்தன்மை எனக்குப் புரிந்தது! “அது மட்டும் இல்லே. இப்ப வயிற்றுக் கோளாறும் இருக்குது. அடிக்கடி lose motion போகுது” என்றார். “அப்படியானால் இந்த Capsule சாப்பிடலாம் அண்ணா!” என்று சொல்லி, என் சட்டைப் பையில் எப்போதும் வைத்திருக்கும் Chlorostep எடுத்துத் தந்தேன். “இதெல்லாம் இப்ப எடுபடுமா? விஷயமே வேறெ அய்யா!” என்றார்கள் அண்ணா. கலைஞரும், மற்றும் எதிரிலிருந்தவர்களும், அண்ணாவுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணிரைத் துடைத்துக் கொண்டோம்! அமைச்சர் கோவிந்தசாமி இல்லத்தில் அண்ணாவுக்காகக் குளிர்சாதன வசதி செய்து அங்கு குடியேறச் சொன்ன மருத்துவர்களின் வேண்டுகோளையும் தம்பிமார்களின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டுக் கடைசிவரை சொந்த வீட்டில் வாழும் கொள்கை யைக் காப்பாற்றினாரே நம் அண்ணா!

என் குடும்பத்தில் பொங்கல் விழா மட்டும் கொண்டாடு வோம். 1969-ஆம் ஆண்டு, நான் குடும்பத்தோடு சென்னை யில் இருந்தேன். பூரிப்பும் குதூகலமும் தரும் பொங்கல் விழா, அந்த ஆண்டு எங்களுக்கு அமையவில்லை! காரணம், அண்ணாவின் உடல் நலிவு மாத்திரமன்று; என் தங்கையின் கணவர் பழநிவேலு பொது மருத்துமனையிலிருந்ததால், மகிழ்வு மறைந்து போயிற்று!

அண்ணா வீட்டில் அன்று காலையில் இருந்தேன். “பொங்கல் விழாவைக் காஞ்சியில் கொண்டாட வேண்டுமென வீட்டார் பிடிவாதம் செய்கின்றனர். அதனால் போய்விட்டு உடனே திரும்பிவிடுகிறேன்” என்றார் அண்ணா. நாங்களெல்லாரும் வேண்டாம் என்று சொல்விப் பார்த்தோம்; பயனில்லை! “என்னைத் தடுக்காதிங்க! இப்ப கலைவாணர் சிலை திறந்ததும், அங்கிருந்தே நேரே கஞ்சீவரம் போயிட்டு வந்துடறேன்!” என்கிறார் அண்ணா கெஞ்சும் குரலில். அண்ணியாரும் இதை ஆமோதிக்கிறார்.

பொங்கிவரும் கண்ணிரைத் தங்கள் முன்தானையால் துடைத்தவாறு அங்கே நிற்கிறார்கள் சரோஜாபரிமளமும் விஜயா இளங்கோவனும். இந்த இரண்டு மருமகளும் எங்கள் பகுதியிலிருந்து இங்கு வந்தவர்களல்லவா! இவர்களைப் பெண் பார்க்கவும், 30-6-1963-ல் திருமண உறுதிப் பாடு செய்யவும், அண்ணா எத்தனை தடவை மாயூரம் வந்தார்! தான் தஞ்சாவூரின் மாப்பிள்ளை ஆனதோடு, தன் பிள்ளைகளுக்கும் தஞ்சைமாவட்டத்தில் பெண் தேர்ந்தெடுத்தாரே அண்ணா-எங்களுக்கு எவ்வளவு பெருமை!

பரிமளம் சரோஜா, இளங்கோவன் விஜயா திருமணம் காஞ்சியில் 1.9.1963 அன்று. தங்கவேலர் தோட்டத்தில் பெரிய பந்தல். முந்திய நாளிரவு மணமகள் இருவரையும் அழைத்து வரும் நேரத்தில் பெருமழை பெய்து மணப் பந்தலில் சேறு நிரம்பிவிட்டது. அண்ணா மிகவும் வருத்த முற்றார். இந்நிகழ்ச்சிகள் யாவும் என் மனத்திரையில் ஓடுகின்றன.

அவசரமாக ஒடிப்போய் என் பிள்ளைகளை அழைத்து வந்து, வாணி மகாலுக்கு எதிர்ப்புறமுள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுகொண்டேன். அங்குதான் கலைவாணர் சிலை திறப்புவிழா; கலைஞர் தலைமையில் சுருக்கமாக நடந்தது. எஸ். எஸ். வாசன், ஏவி. எம்., ஏ. எல். எஸ்., புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், நடிகர் திலீப்குமார் ஆகியோரும் இருந் தனர். இளைத்துக்களைத்து, உருமாறிக் குரல்மாறிப்போன அண்ணா, கலைவாணரின் சிலையைத் திறந்து வைத்துச் சிறியதொரு உரையாற்றினார். “எனக்கு முன் பேசிய திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் கலைவாணர் சிலை திறக்க இப்போதுதான் நல்ல நேரம் வந்தது என்றார்கள். அவர்கள் நல்ல நேரம் என்று குறிப்பிட்டது நாங்களெல்லாம் ஆட்சிக்குவந்த இந்த நேரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.” என்றார். அந்தப் பொங்கல் திருநாள் முதற் கொண்டுதான் நமது சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று அழைக்கப் பெறுவதற்கான அரசு ஆணையையும் அண்ணா பிறப்பித்திருந்தார்.

இதை நல்வாய்ப்பு என்பேனா.கெட்ட வாய்ப்பு என். பேனா-அண்ணாவின் உரை கேட்ட இந்தப் பெரும் பேறு, பிறகு என்றுமே வாய்க்காது போயிற்றே! தலையே நீ வணங்காய்; இந்தத் தலைமகன் அண்ணாவின் கடமைதனை நினைந்து! கண்காள் காண்மின்களோ, இந்தக் கண்ணியத் தலைவனின் வண்ணத் திருக்கோலம்! செவிகாள். கேண்மின்களோ: நம் சிந்தையில் கட்டுப் பாடெனும் அறவுரை ஒதிய முதல்வனின் கம்பீரக் குரல் மொழி! அந்தோ!

என் மகன் குலோத்துங்கன் சிறு வயதில் ஒரு கதை எழுதினான், அதைப் படித்துப் பார்த்த கலைஞர், “கதை எழுதும் குலோத்துங்கா முதலில் படிப்பைக்கவனி! பிறகு கதை எழுதலாம்” என்று சொல்லிவிட்டார். அடியோடு விட்டுவிட்டான் அவன்! பென்சிலால் ஒவியங்கள் வரைவான். Caricature எனப்படும் உரு வங்கள் அருமையாகத் தி ட்டு வா ன், யாரிடமும் பயிலாமலேயே! அவன், அண்ணா பட்ஜெட் கூட்டத்துக்குப் பையுடன் நடந்து செல்வது போன்ற ஒரு பெரிய படத்தைப் பென்சிலால் வரைந்து, என்னிடம் கொடுத்து, அதில் அண்ணாவின் கையெழுத்துப் பெற்றுத் தருமாறு வேண்டினான்.

பொங்கலுக்குப் பிறகு ஊரிலிருந்து அந்தப் படத்தை எடுத்து வந்து, அண்ணாவிடம் காண்பித்துக், கையெழுத் திடுமாறு வேண்டினேன். அப்போது, அண்ணாவின் நோய் முதிர்ச்சியுற்ற நிலையில், வேலூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் விரைவாக மேற் கொள்ளப்படும் தருணம். “சண்முகத்திடம் கொடுத்து, என் காரில் வைக்கச் சொல். பார்க்கிறேன்!“ என்றார் அண்ணா.

ஒட்டுநராயிருந்த சண்முகம் அதை என்னிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டார். “சரியண்ணே! நான் கையொப்பம். வாங்கித் தாரேன்!” என்று. அவ்வளவு தான். அது என்ன ஆயிற்றோ? கடைசி நேரத்தில் அண்ணா வேலூருக்குப் புறப்பட மறுத்துவிட்டார்கள்!

கலைஞரும் மற்ற அமைச்சர்களும் பரபரப்பாகக் கலந்து ஆலோசித்தனர். கலைஞர், அடையாறு மருத்துவ மனையில் மடமடவென ஒரே நாளில் அறை முதலிய வசதிகள் தயார் செய்ய முனைந்தார். அண்ணா ஒத்துக் கொண்டார்கள். விரைவாக வந்து காரில் ஏறினார்கள். நான் பின்னால் வந்த கலைஞரின் காரில் உட்கார்ந்து கொண்டேன்.

முன்னிரவு நேரத்தில் அடையாறு மருத்துவ மனைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதல்காரில் இருந்த அண்ணா மிடுக்குடன் இறங்கிச், சிங்க ஏறு போல் விறு விறுப்புடன் நடந்து, தமது அறைக்குள் நுழைந்தார்கள். நான்அத்தோடு பின் தொடர்வதை நிறுத்திக்கொண்டேன். விழிகள் நிறையும் வரை அந்த வேந்தனின் பின்னழகை விழுங்கினேன்.

அண்ணா எனும் அந்த ஒப்புவமை உரைக்க வொண்ணாப் பேருருவின் உயிர்ப்புத் துடிப்புள்ள உடலத்தை மீண்டும் எங்கே தாணமுடிந்தது?