அண்ணா சில நினைவுகள்/தொண்டனைப் பேணிய தலைவன்

தொண்டனைப் பேணிய தலைவன்!

மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மாயவரத்தில் மகத்தான சிறப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கலந்துகொண்டு பேருரையாற்றிட அண்ணா அவர்கள் வந்தபோது மச்சியும் (அண்ணாவின் தமக்கையார்) தில்லை வில்லாளனும் உடன் வந்திருந்தார்கள். மச்சியை எங்கள் வீட்டிலேயே என் துணைவியாருடன் இருக்கச் சொல்லிவிட்டு, நாங்கள் பொதுக் கூட்ட மேடைக்குச் சென்றோம்.

மாயவரத்தில் நான் அப்போது குடியிருந்த வீடு மிக மிகச் சிறியது. மின்வசதி கிடையாது. இந்த வீட்டுக்கு வருகை தராத தலைவர்களும் இயக்கத்தில் கிடையாது! அண்ணாவைப்போல யாராவது வரும்போது, இரவில் சாப்பிடுவதற்காக, வாடகை பெட்ரோமாக்ஸ் விளக்கு எடுத்துக் கொள்வேன். அன்றும் அப்படித்தான். கொல்லைப்புறத்தில் ஆள்வைத்து வரால் மீன் குழம்பும் வறுவலும் ஏராளமாகச் சமையல் ஆகிறது. என் துணைவியார் நாகரத்தினம் பிறவி முதல் இன்றுவரை கடுமையான சைவம். அண்ணாவுக்காக மூக்கைப்பிடித்துக் கொண்டு மேற்பார்வை அலுவலில் இருந்ததால், கூட்டம் கேட்க வரமுடியவில்லை - அவர்கள் நிலை பெரும்பாலும் அப்படித்தான்!

கூட்ட மேடையில் கிட்டப்பாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியில், பழனிச்சாமி உட்கார்ந்து விட்டார். தனக்கு மேடையில் இடமில்லாதது கண்ட கிட்டப்பா பின்னால் நின்றுகொண்டு, தன் இயல்பின்படி வசைமாரி பொழிந்து விட்டார். மேடையிலிருந்த அண்ணாவின் காதில் அரைகுறையாகச் சில சொற்கள் விழுந்திருக்கவேண்டும்!

மாயவரம் ஜங்ஷனில் ரயில்வே புரோக்கர் நடேச படையாட்சியின் இளைய மகன் கிட்டப்பா. ஒரளவு வசதியுள்ள நடுத்தரக் குடும்பம். 1951-ல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன், சிதம்பரம் நகராட்சியில் எழுத்தர் வேலை கிடைத்தது. போக மறுத்துவிட்டு, முழுநேரக் கட்சிப் பணியாற்றினார். தொண்டனுக்கொரு உதாரணமாகத் திகழ்ந்த கொள்கைவெறியர் கிட்டப்பா!

நிகழ்ச்சி முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்தோம். அண்ணா சாப்பிட அமர்ந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த கிட்டப்பாவின் குரல் உக்கிரமாக ஒலித்தது. பின்னே என்னங்க? தலைவர் வந்தா மட்டும் மேடையிலே உக்கார வர்றானுங்க! மத்த நாளிலே கழகப் பணிக்கோ, வசூலுக்கோ வர்றதில் லே! இவனுங்களுக்கு ஏன் நாற்காலி?”

“கிட்டப்பாவைச் சாப்பிடச் சொல்லிக் கூப்பிடு” என்றார் அண்ணா என்னிடம். வெளியில் போய் அழைத்ததும் மிகப் பணிவுடன் வந்து, “நான் அடுத்த பந்தியில் சாப்பிடுகிறேனுங்க!” என்று சொல்லி, வெளியே உட்கார்ந்துகொண்டார். முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது அப்போதும்!

சாப்பிட்டு முடித்தவுடன், அண்ணா வெளியில் போய் நின்றுகொண்டு, காரை எடுக்கச் சொன்னார். ஊருக்குப் புறப்பாடு என்று நினைத்த மச்சியும் தெருவுக்கு வரவே, “நீ இரு, இதோ வந்துடறேன்” எனச் சொல்லி, “வில்லாளன்! கருணானந்தம்! ரெண்டு பேரும் பின்னாலே ஏறுங்க!” எனவும் பணித்தார் அண்ணா.

கார் புறப்பட்டதும், “இப்படி எங்காவது ஆள் இல்லாத பக்கமாப் போலாம்!” என்று என்னிடம் சொன்னார். ரயில்வே சந்திப்பு சென்று, கடைசிப்பகுதியில் எங்கள் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஓர் ஒதுக்குப்புறத்தைக் காண்பித்தேன். வண்டியிலிருந்து யாரும் இறங்கவில்லை, டிரைவர் சுந்தா தவிர.

சரியாக ஒருமணி நேரம் அண்ணா என்னிடம் பேசினார்கள். திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கி மூன்று நான்கு ஆண்டுகளே ஆனபடியால், அதை எப்படி வளர்க்க வேண்டும்; அதற்கு எப்பேர்ப்பட்ட தியாக மனப்பான்மையுள்ள தொண்டர்கள் வேண்டும்; புதிதாக வருபவர்களை, ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வாறு அரவணைத்து, விட்டுக் கொடுத்து, இணைத்துச் செல்லவேண்டும் என்றெல்லாம் பொதுப்படையாக முதலில் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! நான் முழுநேரத் தொண்டனல்லவே - என்னிடம் ஏன் இவ்வளவும் சொல்லி வருகிறார்கள்-என்ற என் திகைப்பு நீங்குமாறு, பதில் உடனடியாகவே வந்துவிட்டது.

“நீ கிட்டப்பாவை உன் கைக்குள் வைச்சிக் காப்பாத்தணும். ஏண்ணா, இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயிருந்து, அதிலும் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒருவகுப்பிலிருந்து-நமக்குத் தொண்டர்கள் கிடைப்பது கடினம். முன்கோபியே தவிர கொள்கைப் பற்றுள்ள பையன். முதலில் நீ அவரைச் சரியாகப் புரிந்துகொள். அதன்பிறகு உன் ஆலோசனைகளை அடிக்கடி கேட்கிறமாதிரி உன்னிடம் தொடர்பு வச்சிக்கணும் அவரு. அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்க நீ-” என்று பலவாறு கூறிவிட்டு, கிட்டப்பாவை ஒரு ஷேப் (shape)புக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு தான். நான் ஒன்னத்தான் இனி கேட்பேன்!” என முடித்தார்கள் அண்ணா.

தனிப்பட்ட ஒரு தொண்டனை உருவாக்கிட, ஒர் மாபெரும் இயக்கத்தின் தலைவர் இவ்வளவு சிரத்தையும், அக்கறையும் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற வியப்பு எனக்கு இன்னுங்கூட நீங்கியபாடில்லை! அண்ணாவின் இந்த ஆணையை இனிது நிறைவேற்றிய தாகவே நான் நம்புகிறேன். 1953-ல் பெரிய குழுவினருடன் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு; கலைஞரோடு திருச்சி சிறையில் முதன்முறையாக நுழைந்த கிட்டப்பா, மாநில மட்டத்தில் தொடர்ந்து புகழ் பெற்றார். சாகும்வரை கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தவறாமல் சிறைபுகுந்தார். மாயூரம் வட்டத்தில் கழகத்தை ஓங்கி உயர வளர்த்தார். அவர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் பொதுக் குழு உறுப்பினராகவும் ஆவதற்கு நானே ஓட்டுச் சேகரித்து, உயர்த்தினேன், 1967-ல் தொடங்கி, நான்கு தேர்தல் களிலும் மாயூரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார். சட்ட மன்றத்திலே. எண்ணிக்கையில் அதிகமான வினாக்கள் எழுப்பி, “கேள்வி மன்னன் கிட்டப்பா” எனப் புகழ்க்கொடி பறக்கவிட்டார்.

“கருணானந்தம், கருணானந்தம்! இங்க வா! இங்க வா! நம்ம கிட்டப்பா மாயவரத்தில் வெற்றி! கழகத்துக்கு முதல் வெற்றி ரிசல்ட் தந்தது அவர் தான்” என்று அண்ணா அவர்கள் பூரிப்புப் பெருங்குரலில் என்னைக் கூவி அழைத்தார்கள்; 1967 தேர்தல் முடிவுகள் வெளியான. அன்று, நுங்கம்பாக்கம் இல்லத்து மாடியிலிருந்து கொண்டு, கீழே நின்ற என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்கள்! அப்போது நான் பெருமித நோக்கால் அண்ணாவைப் பார்த்துச் சொன்னேன் - “அண்ணக்கு ஒருநாள் மாயவரத்தில் கிட்டப்பாவைப் பார்த்துக்கொள் என்று சொன்னீங்களே, நெனவு இருக்குதாண்ணா !” என்று புன்னகையால் பதிலளித்தார். அண்ணல் பெருந்தகையார்!