அண்ணா சில நினைவுகள்/முன்னால் வந்தது என்னால்
9-9-1958 அன்று எனக்கு மன்னார்குடியில் திருமணம். முதல் நாள் இரவு 10 மணிக்கு மன்னார் குடிக்கு வரும் கடைசி ரயிலில் அண்ணா வந்து இறங்கி விட்டார். அவர் வருவது எங்களில் யாருக்கும் தெரியாது. வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு முன்கூட்டி வருவாரென எதிர்பார்க்காததால், ரயிலடிக்கு யாருமே செல்லவில்லை. அதே வண்டியில் வந்து சேர்ந்த சேலம் சித்தையன், ஈரோடு சண்முக வேலாயுதம், ஈ. வெ. கி. சம்பத், டி. கே. சீனிவாசன் ஆகியோர் கூட்டமாக நடந்தே வந்து 2 பர்லாங் தொலைவிலுள்ள மன்னை நாராயணசாமி மாமாவின் ஓந்திரியர் சத்திரத்துக்குப் போய்விட்டார்கள். அங்குதான் அவர் குடியிருக்கிறார்.
செய்தி கிடைத்து, சைக்கிளில் ஒடிப்போய்ப் பார்த்தேன். “காலையில் நாங்களே வந்து விடுகிறோம். நீ போ!” என்றார் அண்ணா. திருமணம் என் மாமனார் வீட்டில், என் நிபந்தனைப்படி புரோகிதரில்லாமல். ஆனால் தாலி உண்டு. காலையில் திருமண நிகழ்ச்சி முடிவுற்றபோதும் அண்ணா:இங்கே வந்து சேரவில்லை!
தாமதமாகவே வந்தார். பிறகு என்ன செய்ய முடியும். இதையே திருமணப் பாராட்டுக் கூட்டமாக மாற்றி நடத்திவிடலாம் என்றார் தவமணி இராசன். எதிர் வீட்டில் அமைக்குமாறு சொன்னேன். என் மாமனாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால், அவரிடம் மைக்செட் ஏற்பாடு செய்யச் சொல்லப் பயந்து கொண்டு, சும்மா இருந்துவிட்ட செய்தி, முந்தின இரவுதான் என் கவனத்துக்கு வந்தது. திருவாரூரிலிருக்கும் நண்பர் சி. டி. எம். உதவினார். மைக் ஓரிடம், ஆம்பிளிஃபயர் வேறிடம், ஒலிபெருக்கிக்குழாய் இன்னோரிடம்-என்று சேகரித்துக்கொண்டு, எப்படியோ நேரத்துக்கு வந்து சேர்ந்தார் சி. டி. மூர்த்தி.
என் மாமனார் வைதிகர் ஆனதால், அண்ணாவை விரும்பமாட்டார் என்று யாரோ தவறாகச் சொல்லி யிருந்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்கு மாறாக, அவரே மாலைசூட்டி எல்லாரையும் வரவேற்றது, அனைவர்க்கும் வியப்பினை அளித்தது!
குடந்தைப் பெரியவர் கே. கே. நீலமேகம் அவர்கள் தலைமையில் எல்லாரும் வாழ்த்தினார்கள். இறுதியாக அண்ணா. பேசும்போது-(அய்யோ, அந்தக் காலத்தில் டேப்ரிக்கார்டர் இல்லாமல் போயிற்றே?) என்னைப்பற்றிப் புகழ்ந்தே முதலில் அரைமணி நேரம் அருமையாக உரையாற்றினார். பகிரங்கமாக, ஒலிபெருக்கி முன்பு, என்னைப் பாராட்டி, அண்ணா சொற்பொழிவாற்றியது அந்த ஒருமுறைதான்! இப்போது நினைத்தாலும் நெஞ்சம் புகழ்ச்சியால் நெகிழ்கிறது. பெருமிதத்தால் விம்முகிறது. களிப்பால் பூரிக்கிறது. ஏற்கனவே, நான் சுயமரியாதைக் காரன் என்று தெரிந்தும், என் நல்ல பண்புகளைக் கேள்விப்பட்டுத் தமது பெண்ணைக் கொடுக்க முன்வந்த என். மாமனார், அண்ணா அவர்களின் நற்சான்று மொழிகள் கேட்டு, மேலும் உருகிப்போனார். மகிழ்ச்சியில் திளைத்தார்.
தலையில் குடுமி, காதில் கடுக்கண், நெற்றியில் திருநீறு, மேலே சட்டையணியாத உடல், சவரம் செய்து கொள்வதுகூட நாள் பார்த்துதான்; கோவில் டிரஸ்டி வேறு! தொழில் வட்டிக் கடை, ரங்கூனில் சிறிது காலம் வாழ்ந்தவர்; சங்கராச்சாரியரின் அன்பர்-தம்புசாமிப் பிள்ளை தன் பெண்ணைக் கருணானந்தத்துக்குத் தருவது சுந்தரமூர்த்திப் பிள்ளையோடு செய்யும் சம்பந்தமல்ல. சங்கராச்சாரியாரும், பெரியாரும் சம்பந்தம் செய்து கொள்வதுபோலத்தான்-என்று மன்னார்குடியில் பேச்சு! இப்படிப்பட்ட கோலத்தில் உள்ளவர், என்னை வரவேற்ற ஒரே நிமிடத்தில், அவரது உயர் குணங்களைப் புரிந்து கொண்டேன். அவரோடு நேற்றே நான் பேசியிருந்தால்இந்தத் திருமணமே வேறு விதமாக நடந்திருக்கும்” என்று அண்ணா, என் மாமனாருக்கும் குளிர்ச்சி உண்டாக்கினார்.
அவ்வளவுதான்! கல்யாணப் பந்தியில் அண்ணா அமர்ந்து சாப்பிட்டு முடிக்கும்வரை,என் மாமனார், தாமே அண்ணாவுக்கருகே நின்று விசிறிக் கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி! அதன் பிறகு மன்னார்குடிக்கு அண்ணா எப்போது வந்தாலும், தூரத்தில் நின்று அண்ணாவின் பேச்சைக் கேட்டு, ரசிப்பது, என் மாமனாருக்கு வாடிக்கையாகி விட்டது!