அண்ணா சில நினைவுகள்/நீயுமா? புரூட்டஸ்!


நீயுமா, புரூட்டஸ் ?

றுதிப் பெரும்பான்மை பெற்று உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்தவுடன், நான் மாயவரத்திலேயே ஒரு பட்டியல் தயாரித்தேன். அமைச்சரவையில் யார் யார் இடம்பெறக் கூடும் என்ற என் யூகம் சரியாகவே இருந்தது; ஒன்று தவிர! அமைச்சரவைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு “அது யாரண்ணா, முத்துசாமி?” என்று கேட்டேன். படத்தைக் காண்பித்தார்கள். பெரிய மீசையுடன், அது வரை நான் பார்த்தறியாத முகம். அவரைத் தவிர மற்றையோர் கழகத்திற்குப் புதியவரல்லர்; அறிமுகமானவர்களே.

இந்தச் சில நாள் இடைவெளிக்குள் எவ்வளவோ ஆரூடங்கள் சோதிடங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் உந்துதல்கள் கெஞ்சுதல்கள்! .-- தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து மந்திரிசபை பதவி ஏற்ற காலம் வரை, தினமும் குறிப்பிட்ட ஒருவரை அமைச்சராக்க வேண்டுமென்று கோரி நாளொன்றுக்கு 50, 60 தந்திகள் வந்த வண்ணம் இருந்தன, அண்ணா பெயருக்கு! அருகிலிருந்த எங்களுக்கு இவற்றை வாங்குவதும் பிரிப்பதும் படிப்பதும் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவே இருந்தது, இவ்வளவுக்கும், அந்தப் பெயர் கட்சியில் அறிமுகமான பெயரும் அல்ல, ‘அவர் மீனவக் கிறிஸ்துவர். பெயர் ஜி. ஆர், எட்மண்ட், அவரை மந்திரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ -- அண்ணா வேதனையோடு குறிப்பிட்டார் -- இந்த மாதிரி முறையிலே ஒருத்தர் மந்திரியாகி விடலாம்னா, நாமெல்லாம் எவ்வளவு ஏமாளிகள்னு” நெனக்கிறாங்க பாருங்கய்யா! என்று.

இதேமாதிரியான இன்னொருவித முறையை, ஏற்கனவே ஒரு நண்பர் கையாண்டார். அதாவது தென் சென்னைத் தொகுதியில் நாடாளுமன்றத்துக்கு அண்ண்ர் போட்டியிட வேண்டும் என்று கழகம் தீர்மானித்தது. அண்ணாவுக்கு வழிவிடும் பொருட்டு நாஞ்சில் மனோகரன் தென்சென்னையிலிருந்து மாறி, வட சென்னைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வளவுக்கும் பிறகு, நுங்கம்பாக்கம் அவென்யூ தெருவில், நாள்தோறும் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் வரிசையாக அணிவகுத்து நிற்பதும், விண்ணப்ப மனு ஒன்றை அண்ணாவிடம் அளிப்பதும் வழக்கமாகியிருந்தது. என்ன கோரிக்கை என்றால், ‘எங்கள் தொழிற்சங்கத் தலைவர் எஸ். இராகவானந்தம் அவர்களுக்குத் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி தரப்பட வேண்டும்’ என்பது!

இதனால் எங்கள் எல்லாருக்கும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது. “என்னய்யா, இப்படியெல்லாம் Irritate செய்கிறதா? தொழிற்சங்கத்தின் வேலையிதுவா? இது நமக்கெல்லாம் புரியாத் வேலையா? நம்மையெல்லாம் தற்குறி என்று நினைத்துக் கொள்வதா?” என்று அண்ணர் ஒருநாள் வேதனையை, வெளிப்படுத்தினார். 1960-களில் மிகவும் தாமதமாக தி. மு. கழகத்தில் நுழைந்த ஒரு தோழரின் கைங்கர்யம் இது. அவர் அத்துடனில்லாமல் கலைஞரிடம் நேரிலேயே கேட்டார்-“அண்ணா எங்கு வேண்டுமானாலும் நின்று ஜெயிக்கலாம். நான் தென் சென்னையில் மட்டுமே நிற்க முடியும். அதனால் எனக்கே தரப்பட வேண்டும்” என்று. கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று யூகிக்கலாமே

Black Prince of Annamatai – அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருப்பு இளவரசன் என்று பெயர் பெற்ற கடலூர் இரெ. இளம்வழுதி-வழக்கறிஞர். அவர் சாக்கடைத் தண்ணீரில் பேனாவைத் தோய்த்து எழுதியது போல், எப்படியெல்லாம் கடிதங்கள் வரைந்தார் கழகத் தலைவர்களுக்கு! அவரை அமைச்சரவையில் சேர்க்க வில்லையாம். அதற்காக இழிமொழிகள் வசவுகள் சாபங்கள் தாபங்கள்!

இவரைவிட நீண்ட நாட்களாகக் கட்சியிலிருந்து வந்த இன்னும் இருவர், மேலும் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்களிருவருக்கும் தாமே நேரில் வந்து அண்ணாவிடம் கேட்க அச்சம். தத்தம் துணைவியார், மக்கள்-இவர்களை அனுப்பினார்கள். பட்டிக்காட்டுப் பெண்களைப் போல் அவர்கள் அழுது அரற்றிப் புலம்பி மாரடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம் செய்தனர். எல்லாரும் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறோம்; அண்ணாவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!

இதே போன்றுதான், தேர்தலில் நின்று தோற்றுப் போனவர் ஒருவர், “அய்யய்யோ! நான் ஜெயிக்கலியே! நான் என்ன செய்வேன்! என்னை மந்திரியாக்க மாட்டீங்களா? அய்யோ! நீங்க உள்ளே போயி உக்காரும்போது நான் வெளியிலேயே நிற்கிறதா?” என்று சுயநினைவு அற்றவராய்த் தள்ளாடி மயங்கி ஓவென்று கதறிக் கதறிப் பல நாட்கள் அழுதார்!

அண்ணாவிடம் கேட்டேன் தனியாயிருக்கும் போது “அண்ணா! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னிங்களே - இதையெல்லாம் தாங்கிக்கதான் வேணுமா? பாக்கிறபோதே எங்களுக்கெல்லாம் ஆத்திரமும் கோவமும் வருதே-அவுங்களை நாமே தண்டிக்கலா மாண்ணு! இப்படி நம்ம அருமைத் தோழர்களே செய்றாங்களே? பதவின்னாபத்தும் பறந்து போயிடுமா? தொலைவிலிருக்கிற வெற்றி பெற்ற தோழர்களோ, ஒட்டுப் போட்ட மக்களோ என்ன நெனப்பாங்க? ஒங்களாலே இதை, எப்படித் தாங்கிக்க முடியுது?” என்று. அவர் சொன்னார் -“ஷேக்ஸ் பியர் Play ஜூலியஸ் சீசர் படிச்சோமே! வெறும் பாடமாவா படிச்சோம்; படிப்பினைண்ணு நெனைச்சிதானே படிச்சோம்! ‘நீயுமா புரூட்டஸ்’ணு சீசர் கேட்டான்-நானும் கேட்க வேண்டியதுதானா? ‘நீயுமா நடராஜன்? நீயுமா சின்னராஜ்? நீயுமா தர்மலிங்கம்ணு: ஆனா, நான் கேட்கலை கேட்கமாட்டேன். ஏண்ணா; நான் சீசரில்லை! வெறும் அண்ணாத்துரை!” என்றார்ட் பொறுமையின் பிறப்பிடம், அமைதியின் இருப்பிடம், கண்ணியத்தின் உறைவிடம்-எண்ணற்ற சோகச் சிதறல்களை மென்று விழுங்கிவிட்டு!