அண்ணா சில நினைவுகள்/நடிகர்களை அழைத்து வருவது ஏன்!
ஈரோட்டிலிருந்து, என் பெற்றோரைப் பார்க்கத் திருத்துறைப்பூண்டி வந்திருந்தேன். மறுநாள் திருவாரூர் கருணாநிதி தியேட்டரில் அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகம்-அதாவது 18-8-1944 இரவு. தலைவர் பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன். பார்வையாளராக இருந்து நாடகம் பார்த்த பின், முடிவில் தான் அண்ணாவைச் சந்தித்தேன். நாடகத்தின் இறுதியில் எம். ஆர். ராதா, அண்ணாவுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தார். ஆனால், அண்ணா பேசும்போது, தான் மோதிரம், ரிஸ்ட் வாட்ச் போன்ற அணிகலன்களை அணிவதில்லை என்று கூறி, நன்றியுடன் அவருக்கே திரும்பவும் அணிவித்து விட்டார், அவர் தந்த மோதிரத்தை!
“எப்படியண்ணா இந்தப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டீர்கள்? ஏன்?” என்று கேட்டேன். சொன்னார் “ஏன்யா! இது நல்ல பழக்கந்தானே! ஒண்ணும் பயமே யில்லை பாரு. நான் நெனச்ச இடத்திலே படுப்பேன். படுத்தவுடன் தூங்கிடுவேன். இதையெல்லாம் போட்டுக்குனு படுத்தாத் தூக்கம் வராது; பயந்தான் வரும்; எவனாவது கழட்டிக்கினு போயிடுவானோண்ணு!”
ராதாவும் இதை ஏற்றுக் கொண்டார். அவர் விரைவாக நமது பக்கம் வந்துகொண்டிருந்த நேரம் அது. சிந்தனைச் சிற்பி சி. பி. சிற்றரசு எழுதி, இவருடன் நடித்த ‘போர் வாள்’ நாடகம், பார்ப்போரைப் புல்லரிக்க வைக்கும். ராதாவின் வசனம் உணர்ச்சிப் பிழம்பாக நம்மை மாற்றி விடும். அதனால்தான் திருச்சியில் அழகிரி அண்ணன் ராதாவுக்கு “நடிகவேள்” பட்டம் தந்தார். நடிகமணி டி. வி. நாராயணசாமிக்குப் பிறகு, எம். ஆர். ராதா நம் கழகத்தில் ஒன்றியவர். பின்னர், கலைவாணர்-இவர் முழுமையாக நம் இயக்கத்தவர் என்று கூற இயலாவிடினும், நாம் தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியதும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுந்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர், நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, தமது உடல் பொருள் ஆவி மூன்றை யுமே கழகத்திற்காக ஈந்தார். பிறகு, சிறிது காலமே எனினும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், கழகத்தின் நிதி திரட்ட அரும்பாடு பட்டுள்ளார். கடைசியில், இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரன். கட்சி வளர்ச்சியில் பெரும்பங்கு இவருக்கு உண்டு.
திரைப்படத்துறையில் உச்சியில் நின்ற காலத்தில், இவர் முதன்முதலில் அண்ணாவின் பிறந்த தேதியை ரகசியமாகக் கேட்டறிந்து, அண்ணாவின் 50-ஆவது பிறந்த நாள் அன்று, 50 சவரன் அளித்துச் சிறப்பித்தவர்.
ஒருநாள் மாயூரம் பொதுக் கூட்டத்துக்கு அண்ணாவும் ராஜேந்திரனும் இவரது பிளிமத் காரில் வந்தனர். கூட்டத்தில் அண்ணா இலட்சிய நடிகரைப் பாராட்டிப் பேசினார். கூட்டம் முடிந்து என் வீடு சேர்ந்ததும், வா ராஜேந்திரன், இண்ணக்கி கருணானந்தம் வீட்லெ சாப்பா டுண்ணு, நீ வரும்போதே யூகமாச் சொல்லிட்டே, சாப்பிட்டுத் துரங்கு. காலையிலே போகலாம்’ என்றார் அண்ணா. ஆனால் எஸ். எஸ். ஆர். என்னிடம் தனியே வந்து, கையைப் பிசைந்தார். “ஒண்னுமில்லிங்க! காலையிலே ஷட்டிங் இருக்கு. மாயவரத்திலெ தங்காமெப் போனாத்தான், நேரத்திலே மெட்ராஸ் சேர முடியும். அண்ணாகிட்டெ நான் எப்படிச் சொல்வேன். இதெ நீங்கதான் சொல்ல முடியும்!” என்றார் ராஜூ. சொன்னேன். சரி, பெட்ரோல் டாங்கை full பண்ணி கிட்டு வரச்சொல்லு அர்ஜுனனை. நான் அதுவரைக்கும் தாங்குகிறேன்” என்று என்னிடம் கூறிக்கொண்டே அண்ணா படுத்து விட்டார்கள். அம்மாதிரியே சிறித் உறங்கியபின் எழுந்துவிடவே உடனே சென்னை நேர்க்கிப் புறப்பட்டனர் இருவரும்.
அண்ணா அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம். கார் ஒடும் போது தூங்கமாட்டார்கள். அப்படித் தூக்கம் வந்தால் “சுந்தா! காரை ஓரமா நிறுத்திட்டு, நீயும் தூங்கு” என்று சொல்லிவிட்டுத் தானும் காரிலேயே படுத்துக்கொள்வார்கள். இந்த சுந்தா என்கிற சுந்தர்ராமன் அண்ணா விடம் தன் வாழ்நாள்வரை (25.7.1961)-காரோட்டிய தல்லவர். தோற்றம் மாத்திரம் முரடாகத் தெரியும்.
கடைசியாக இயக்கத்துக்கு வந்தவராயினும், திட்டமிட்டு, உறுதியாக ஆழமாக வேரூன்றி, வாழ்விலும் பொதுப் பணியிலும் தவறுகளின்றி, நிதானமாக முன்னேறி நிலைத்தவர் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன். கழகம் தேர்தலில் நிற்கத் தொடங்கிய பின்னர், இவரது இன்றியமையாமை நன்கு புலப்பட்டது. இவருடைய வளர்ச்சிக்கும் கழகம் உறுதுணையாக இருந்துள்ளது. அண்ணாவின் பரிந்துரையோடு அப்போது இவருடன் இணைந்தவர்தான் இராம. வீரப்பர். என்னைப் போன்றவர்களெல்லாம் குடும்பத்துடன் M.G.R. படம் தவிர வேறு. படம் பார்ப்பதில்லை, பிடிவாதமாய்!
இவரும் என்னிடத்திலே மிக்க அன்பு காட்டினார். நீரிழிவு நோயினால் அவதிப்பட்ட நேரத்தில் கையில் எப்போதும் பிளாஸ்கில் காப்பி வைத்துக் கொண்டு நான் அடிக்கடி சாப்பிடுவேன். இதைக் கவனித்தவர், “காப்பி உடலுக்குக் கெடுதல்தானே! இதற்குப் பதிலாக மோர் வைத்துக்கொண்டு எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க, நல்லது” என்று அறிவுறுத்தினார். நானும் ஏற்றுச் செய்ல் படுத்தி வருகிறேன் எம்.ஜி.ஆர் அவர்களின் அறிவுரையை.
இப்படி எம்.ஜி.ஆர். கட்சிக்குள் வந்த பிறகு, அண்ணாவிடம் கேட்டதுண்டு. “ஏன் அண்ணா? நடிகர்களை இந்த அளவு நம் மோடு சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா? நடிகர்கள்-அதிலும் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள்-நிறைய sentiments.க்கு இடங்கொடுத்து, மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாயிற்றே” என்றெல்லாம் நிறைய வினாக்களை எழுப்பி வந்தோம். இவற்றுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சமாதானங்கள் சொல்லிவந்தாலும்-இதைப் பற்றிச் சற்று விளக்கமாக 1953.செப்டம்பரில் அண்ணா நெல்லை மாவட்ட இரண்டாவது சமூக சீர்திருத்த மாநாட்டில் உரையாற்றும்போது ஒரு கருத்துத் தெரிவித்தார் :-
“சமுதாய சீர்திருத்தந்தான் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படை. சமுதாயம் மூடநம்பிக்கைகளிலிருந்து விடு பட்டுத் தெளிவு பெற்றால்தான் அரசியலில் விழிப்புடன் பங்கேற்க முடியும்.
ஆட்சிச் சகடத்தை ஒட்டுகின்ற மக்கள், தெளிவு பெற்ற திறமையாளர்களாக இருக்க வேண்டும். ஒர் அழகான வண்டியில், அரேபியக் குதிரையைப் பூட்டி, உள்ளே நான்கு நீக்ரோக்களை உட்காரவைத்து, வண்டி ஒட்டுவதற்கு ஒரு பிக்மியனை நியமித்தால், அவனால் அந்த அரேபியக் குதிரையை அடக்கி, வண்டியை ஒட்டி, ஒழுங்காகக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா?
மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்கத்தான், தி.மு.க. மாநாடு என்றாலே அது ஒரு கல்லூரி வகுப்பு போலே, அறிவியலையும் தத்துவத்தையும் விளக்குகின்ற பாங்கிலே அமைந்திருப்பதைக் காணலாம். சொற்பொழிவும், இசையும், கலையும், நாடகமும் இதற்காகத்தான் நிகழ்த்துகிறோம்.
நான் நடிகர்களை நிரம்பப் பயன்படுத்துவது ஏனென்றால், ஒரு காலத்தில் இந்த நாடகத் துறையினர்தான் நாட்டில் மூடக் கருத்துகளைப் பரப்பியவர்கள். இவர்கள் ஆடிக் காட்டிய ஆட்டமும், பாடிக் காட்டிய பாட்டும், பேசிய வசனமும், பூசிய வேஷமுந்தான் நாட்டை இந்தத் தாழ்நிலைக்கு வீழ்த்தின! எனவே, இவர்கள் ஊட்டிய நஞ்சை இவர்களே உறிஞ்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தில்தான், இவர்களை நான் இப்போது என்னுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன்; என்னுடன் அழைத்து வருகிறேன்!“
-அண்ணாவின் இந்தக் கருத்தைக் கலையுலகினர் இன்று சிந்திக்க வேண்டும் நன்றாக!