4

ஒரு வாரம் அத்தை வீட்டில் தங்கியிருந்தான் சுந்தரம். அந்த ஏழுநாட்களும் எவ்வளவு மனோகரமானவை! அவற்றையும் அவன் என்றுமே மறக்கமுடியாது. அவளுக்கும் பொன்னான தினங்கள்தான் அவை.

பார்வைகள் எத்தனை! கள்ளச் சிரிப்புகள் எத்தனை எத்தனை! அலுவல்களிடையே அமைதியாகத் தனிமையில் கண்டு பேசி மகிழ அவள் சிருஷ்டித்துக்கொண்ட சந்திப்புகள்தான் எத்தனை! பேச முடியாதபோதும் அவள் உருவம் சதா அவன் கண்களில் பட்டுக்கொண் டிருக்கும். வந்த தினத்தன்று பார்வையில் படாமல் பதுங்கிய பாவையும் இவள்தானா என்ற ஐயம் அவனுக்கு இயல்பாகப் பிறந்தது.

ரத்தினத்தின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. துள்ளித் திரிந்தாள். மகிழ்வின் மிகையால் உல்லாசப் பாட்டிழுத்தாள். காரணமில்லாமல் சிரித்தாள். தானிருப்பதை அவனுக்கு உணர்த்திக்கொண்டேயிருந்தாள். எதிர் வந்து காட்சி தர இயலாமல் போகும்போதெல்லாம் அவள் காலணிகள் கவிதை பேசும். கைவளைகள் நீரூற்றுச் சலசலச் சிரிப்பு உள்ளத்தில் குளுமை பாய்ச்ச முயலும்.

அவள் அவன் அருகே வருவாள். அவன் கை நீட்டித் தொட முயலும்போது துள்ளி விலகிவிடுவாள், சின்னஞ்சிறு சிட்டுப் போல. அவன் தனியாக இருக்கும்போது நின்று பேச வருவாள். 'ரத்னம்' முன்பு செய்ததுபோல் இப்போ ஏன் துணியவில்லை?' என்று அவன் கேட்கவும் வெட்கத்தைச் சுமந்து வேகமாக வெளியேறுவாள். அவளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்களை பற்றி மற்றவர்கள் சந்தேகம் கொள்வதுமில்லை. 'சின்னஞ்சிறுசிலே யிருந்து ஒண்ணா வளர்ந்ததுக அத்தை புள்ளே, அம்மான் புள்ளைக. கம்மா சிரிச்சு பேசி விளையாடுவது சகஜம்தானே என்ற தாராள மனோபாவம் அவர்கள் பண்பில் அசையாத நம்பிக்கை. பிறர் நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கவில்லை அவர்களிருவரும்.

சுந்தரம் ஊருக்குப் புறப்பட்டபோது, அத்தை சொன்னாள்; 'என்னயிருந்தாலும் இன்னும் ஒரு வருஷம் போகணும்னு மெத்தனமா யிருந்திராதே. எவ்வளவு சீக்கிரமாக் கல்யாண முகூர்த்தத்திற்கு  ஏற்பாடு பண்ண முடியுமோ, அதற்கு வழியைப் பாரு............'

அவனும் சரி என்று தலையாட்டி வைத்தான். அவன் கிளம்பும் முன் ரத்தினம் அவனைத் தனியாகச் சந்தித்தாள்.

'அத்தான் !'

அவள் குரல் தழதழத்தது, அவள் தொண்டையில் துயரம் திரண்டு உருண்டது போலிருந்தது. அவளால் பேச முடியவில்லை.

அவன் அவள் அருகில் வந்தான். அவள் கொஞ்சம் முன் நகர்ந்தாள். அவன் அவள் கைகளைப் பற்றினான். அவள் அவனையே பார்த்து நின்றாள். தன் கண்ணில் கண்ணிட்டு அசையாது நின்ற ரத்தினத்தையே கவனித்திருந்த அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் உணர்ச்சியோடு அவனைப்பற்றி முத்தமிட்டாள். சுவைக்கக்காத்திருந்த பழச்சுளை உதடுகளின் ருசியைப் பருகினான் அவனும், அழுத்தமாக முத்தம் பதித்து.

உணர்ச்சிச் சுழிப்பு தன்னை மறந்த லயங்தன்னில் ஆழ்த்திவிடுவதற்கு முன்பாக அவள் விழிப்புற்று, விலகிக்கொண்டாள். வாசல் அருகே போய் கின்று அவனையே கவனித்தாள். ஒளி மிகுந்த கண்களில் பனி படர்ந்தது. பொங்கிவரும் அழுகையை அடக்க முயன்றுகொண்டிருந்தாள் அவள். தோல்விதான் அவளுக்கு.

'ரத்னம் '

அவன் உணர்ச்சி நிறைவோடு அழைத்து முன்வந்தான்.

'அத்தான் !' என்றாள். அதற்குமேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை. மறைந்துவிட்டாள். அந் நிகழ்ச்சி அவன் இதயத்தைத் தொட்டது. இந்த நிலையை ரொம்ப நாள் நீடிக்க விடக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு துரிதமாக வாழ்வின் புது மலர்ச்சிக்கு தளம் அமைத்தாக வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டு கிளம்பினான் அவன்.

வண்டியிலேறும் வரை----வண்டி நகரும் வரையிலும்---ஜன்னலின் பின் நின்று வழியனுப்பிய நீர் நிறைந்த நீள் இமைக் கருவிழிகளையும், விடியற்காலச் சந்திரன் போல் வெளிறியிருந்த முகத்தையும் அவன் மறக்கமுடியாது. என்றுமே மறக்க இயலாது.

அந்த உலவும் கவிதை தனக்கு உரியவள்; அவள் என்றும் தன் வாழ்விலே இனிமை கூட்டக் காத்திருப்பவள்; அவளைத் தனித்திருக்க்க விட்டு அவள் வாழ்வையும் தன் வாழ்வையும் உயிரற்றதாய் வறளடிக்கக்கூடாது; காலத் தென்றலின் கிளுகிளுப்போடு இன்ப மலர்ச்சியும் மணமும் பெற்றுத் திகழச் சிலிர்த்து நிற்கும் அரும்பு விரைவிலேயே முழு மலர்ச்சியும் ஏற்று மிளிரத் தன்னால் ஆனதைத் துரிதமாகச் செய்ய வேண்டும்.

பல பல எண்ணினான் அவன்.

என்ன எண்ணி என்ன செய்ய? எண்ணமெல்லாம் பூரணமாக உருப்பெற்றுவிட வசதிகள் இருக்கின்றனவா இந்த வாழ்க்கையிலே ?

இந்தப் பொது நியதி நிறைந்துள்ள உலகில் உழலும் மனிதர்களில் ஒரு மனிதன்தானே சுந்தரமும். அவன் எண்ணியது நிறைவேறாமல் போனதில் வியப்பில்லை அவனுக்கு. ஆற்றமுடியாத இதயவேதனைதான் ஏற்பட்டது காலப்போக்கிலே. .

"https://ta.wikisource.org/w/index.php?title=அத்தை_மகள்/4&oldid=1068649" இருந்து மீள்விக்கப்பட்டது