5

காலம் தன்னை ஏமாற்றிவிடும் என்று எண்ணியவனல்ல அவன். காலம் கிடக்கட்டும்! தன் அன்புக்கு உரிய---தன்மீது அளவற்ற ஆசை கொண்டிருந்த அத்தை மகள் ரத்தினம் தன்னை இப்படி வஞ்சித்துவிடுவாள் என்று அவன் சொப்பனம் கூடக் கண்டதில்லை. காலம் அவளை மாற்றிவிடும் என்று அவன் நினைத்ததில்லை. யாராவது அவ்விதம் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்கமாட்டான்.

காலம் கைதேர்ந்த மருத்துவன் என்கிறார்கள். அதே காலம் பெரிய காயங்களையும் உண்டாக்கி விடுகிறது. என்பதையும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

பார்க்கப்போனால், காலத்தை மட்டும் பழித்துத் தான் என்ன பயன்? மனிதர்களின் செயல்களும் எண்ண்ங்களும் தானே ஒவ்வொருவரையும்---பலரையும்---பலவிதமாகப் படுத்தி வைக்கின்றன?

மனிதன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே விரும்புகிறான். தவறுதலின் சுமையை யார் தலையிலாவது --- அல்லது எதன் மீதாவது --- சுமத்தி விடத் தயாராக இருக்கிறான். அவனுக்குக் கை கொடுக்கின்றன. கடவுள், தலைவிதி, காலம் என்பவையெல்லாம்.

இவற்றின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தம் பொறுப்பை---தம் செயல்களின் விளைவை---மறந்துவிட முயல்கிறவர்களையும், பிறரைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்களையுமே அதிகம் காண முடிகிறது எங்கும்.

சுந்தரம் காலத்தின் மீது பழி சொன்னான். அவனுடைய அத்தை 'எல்லாம் தலைவிதி. இப்படி நடக்கணும்னு கடவுள் எழுதி வச்சிட்டானே. அது நடக்காமல் தீருமா ? இல்லைன்னா கழுதைக்கு இப்படிப் புத்தி கெட்டுத்தான் போகுமா ?' என்று புலம்பினாள்.

ரத்தினம் ?

அவள் எதுவும் சொல்லவில்லை. அவளால் தவிர்க்க முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் அவளால் செய்ய முடிந்தது அதுதான். அதன்படி----தன் உணர்ச்சிகள் இழுத்த இழுப்பிலே----சென்றுவிட்டாள் அவள். அவள் மனப்பண்பை ஆராயத் துணிகிறவர்கள் அவள் செயலுக்கு உணர்ச்சியின் பிசகு, பருவத்தின் பிசகு என்று ஏதாவது பெயரிடலாம்.

ஆனால் யாருமே காரண காரியத் தொடர்புகளை ஆராயத் தயாராக இல்லை. அதனால் காலத்தின் மீது பழியைப் போட்டார்கள்.

'காலம் போற போக்குடீ யம்மா, காலம் போற போக்கு !'-----காலம் கெட்டுப்போச்சு, வேறே யாரையும் குத்தம் சொல்லிப் பிரயோசனமில்லே' என்ற ரீதியிலே பேசினார்கள்.

என்ன நடந்தது?

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

சுந்தரம் தன் அத்தை மகளுடன்---தனது வாழ்க்கைத் துணைவியாக நிச்சயிக்கப்பட்ட ரத்தினத்துடன்----இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்று கனவு கண்டு வந்ததில் குறையில்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் துணை புரியவில்லை, .

நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எவ்வளவு உழைத்தும் பயனில்லை, அவன் வாழ்வில் வரட்சி---படுவரட்சி, அவன் வசந்தத்தின் வருகைக்  காகக் காத்திருந்தான். வசந்தப் பசுமையின் சாயை கூட அவன் வாழ்வு வெளியிலே படிய வழியில்லை.

ஒரு வருஷம்---ஒன்றரை வருஷம்---இரண்டு வருஷங்கள் கூட ஒடிப்போயின.

அவன் அத்தை அவசரப்படுத்தினாள். கடிதத்தின் மேல் கடிதம் எழுதினாள். கெஞ்சியும் மிஞ்சியும், சீறியும் சினந்தும் சிரித்தும் குறை கூறியும் எழுதினாள். எப்படி எழுதினால்தான் என்ன? வாழ்வின் கடும்.வெயில் அவனைக் கருக்கிக் கொண்டிருந்தது. அதனால் அவன் வேறு எதுவும் செய்வது சாத்தியமேயில்லை. அவனுக்கு ஆசையில்லாமலாபோயிற்று ? வழி தென்படவில்லேயே!

ஆசைக் கனவுகளை வளர்த்து வந்தாள் ரத்தினம். இன்பம் பூத்துக் குலுங்கும் எதிர்காலச் சோலையே அவள் நினைவு. அத்தானுடன் வாழப்போகிற இன்ப வாழ்வின் பலரகத்தோற்றங்களே அவள் கண்ட கனவு. அவள் திட்டங்களிட்டாள். கற்பனைச் சோலையில் இன்பச் சிறகு பரப்பி ஆனந்தமாக நீந்தும் சிறு கிளி அவள். நிகழ்காலத்தின் கானல் அவளுக்குத் தெரியாது. இனி வரவிருக்கும் வசந்தத்தின் குளுமைதான் அவளுக்குப் புரிந்திருந்தது. பிடித்திருந்தது.

காலம் அவள் கனவுக்குத் துணைசெய்யாமல் வாய்தாப் போட்டுக் கொண்டிருந்தது. போகட்டும்---இன்னும் போகட்டும் இன்னம் கொஞ்சநாள் போகட்டுமே!’ என்று காலத்தை ஏலத்தில் விட்டு வந்ததை அவள் விரும்பவில்லை. சகித்துக்கொள்ள முடியவில்லை.

பதினெட்டு---பத்தொன்பது----இருபது வயசு ஏறி வந்தது. எனினும் அவள் தனியள். அவளுக்காக அத்தான் இருந்தான். ஆனாலும் அவளது இளமை வதங்கி வாடியது, கவனிப்பற்று. அவளுக்குக் கல்யாணம் உண்டு என்று நிச்சயம் செய்தாயிற்று. ஆயினும் வாழ்வில் மலர்ச்சி பிறக்கவில்லை. . தனிமையில் கிடந்து புழுங்கினாள். புகைந்தாள். குமுறினாள். குமைத்தாள். பெருமூச்செறிந்து கருகினாள், மெலிந்தாள், ஏங்கினாள்.

அவளுக்கு அத்தானின் போக்கு அலுப்பு கொடுத்தது. விரக்தி ஏற்படுத்தியது. அவன் மீது வெறுப்பு உண்டாககியது. கசப்பை வளர்த்தது.

அவள் பெண். இளம் பருவ மங்கை. உணர்ச்சிகளின் உயிர்ப்பு.

அவள் உண்ர்ச்சிகளை யாரும் கெளரவிக்கவில்லை. அவளுடைய அத்தான் அவள் வாழ்வில் இனிமை சேர்க்கும் தென்றலாய் விளங்கவில்லை. வரட்சி வீசும் அனல் காற்றாகவே திகழ்ந்தான். அவள் அன்னை தன் மகளும் நாலுபேரைப்போல் நன்றாக வாழவேணும் என்று ஆசைப்பட்டாள். குழந்தையும் குடும்பமுமாக அவள் சிறப்புறவேணும் என விரும்பினாள். தன் சொந்த மருமகனுக்கே---முறை மாப்பிள்ளைக்கே---அவளை உரியவளாக்க முயன்றாள். அவளால் இயன்றதைச் செய்தாள். ஆனால் 'அவன் அப்படி யிருக்கிறானே. யாருக்கோ வந்த விருந்து மாதிரி' என்று குறைபட்டுக் கொள்ளத்தான் முடிந்தது அவளால்.

பெருமூச்செறிந்து குமைந்து வதங்கிய பருவ மங்கையின் குறு குறு கண்கள் எங்கும் சுழன்றன, தேன் தேடித்திரியும் வண்டுகள் போல, அவளை ஜன்னலோரத்தில் காணமுடிந்தது. தெருவாசலில் நிற்பதைப் பார்க்க முடிந்தது மாடியில் நின்று எதிர்மாடி ஜன்னலில் கண் தூண்டில் வீசிக் காத்திருப்பதை உணர முடிந்தது பலரால்.

அவள் தாய் புத்திமதிகளும் போதனைகளும் சொல்வது அதிகரித்தது கட்டுப்பாடுகள் கூட அதிகமாயின. மகள் பருவமெய்திப் பல வருஷங்களாகி விட்டன ; இதற்குள் கல்யாணமாகி யிருந்தால் பேரன் பேத்திகள் கண்டிருக்கலாம். அவள் வாழ்க்கை இப்படி வீணாகுதே என்று தாய் பெருமூச் செறிவாள்.

தன் பருவமெல்லாம் பாழாகுதே என மகள் நெடுமூச்செறிவதும் அதிகமாயிற்று. வளரும் கொடி பற்றுக் கோல் நாடி மென்கரம் பரப்பி அசைந்து அசைந்து அகப்பட்டதைப் பிடித்துக்கொள்வதுபோல், அவளும்-- தனியாகத் துவண்டு வாடும் கன்னி---தன் உணர்ச்சியின் துண்டுதலின் படி நடக்கத் துணிந்தாள். -

ஆகவே, ஒரு நாள் அவளைக் காணமுடியாமல் போயிற்று. அதே தினத்தன்று அடுத்த வீட்டுப் பெரிய பிள்ளைவாள் மகனையும் காணோம் !

அவனுக்கு வயது முப்பதிருக்கும். கல்யாணமாகி மனைவி செத்து, மறு விவாகம் செய்து கொள்ளாமல் தறுதலையாகத் திரிந்தவன் அவன். அவன் பார்வை, கணவனுக்கும் கல்யாணத்துக்கும் காத்திருந்த பாவை மீது பாய்ந்தது. பசியால் புரண்ட அவள் பார்வை அவன் கண்களைக் கவ்வியது.

பார்வைப் பரிவர்த்தனை பிறந்தது. வளர்ந்தது. செழித்தது. சிரிப்பு விளைந்தது. பேச்சு மலர இடமளித்தது. உறவு பூத்தது. மறைவில் வளர்ந்தது. இப்படி எவ்வளவு காலமோ ! -

அது அவள் தாய்க்குக்கூடத் தெரியாது. திடீரென்று ஒருநாள் காலையில் மகளைக் காணோம்; வாசல் கதவு திறந்து கிடக்கிறது என்றதும் தான் 'திக்’ கென்றது. -

சில தினங்களாக அவள் மகளை அதிகம் கண்டித்து வந்தாள். காரணம், 'ஜாடைமாடையாக' உணர ஆரம்பித்திருந்தாள் மகளின் மாற்றத்தை. சதா அடுத்த வீட்டு மாடி ஜன்னலை நோக்கி அவள் தவம் கிடப்பதும், அங்கே 'அந்தத்தடியன் முழிச்சுக்கிட்டும் இளிச்சுக்கிட்டு நிற்பதும் நல்லதுக்கில்லே' என்று பட்டது அவளுக்கு. அவள் என்ன செய்யமுடியும்? மகளேக் கண்டிக்கலாம். புத்தி சொல்லலாம். அவ்வளவுதானே!

அவள்றியாமலே மகளுக்கும் பக்கத்து வீட்டுச் சாமிநாதனுக்கும் நட்பு மலர் பூத்து உறவுக் காய் தோன்றியிருந்தது. பருவம் கன்னியை ஆட்டிவைத்தது. உணர்ச்சி அவளைப் படுத்தி வந்தது.

தனக்கே உரிய---தன்னே அன்னவனுக்கு உரியவளாக்கி விடத் துணைபுரியும்---வைடூர்யக் கண் வண்டு இசை பாடி வரும் என்று காத்துக் காத்து வதங்குகிற மலர், காற்றோடு களிவெறிக் கானம்பாடி வந்து உறவு கொண்டாடத் தயங்காத எந்த வண்டையும் வரவேற்பது இயற்கைதானே ?

அது தான் நடந்தது அவள் வாழ்விலும்.

தாயின் கண்காணிப்பு வெறும் தொல்லையாகத் தோன்றியது. புதிதாக வந்த அன்பனிடம் சொன்னாள். “இத்ததைய தொல்லைகள் எதுவுமே இல்லாத இடத்துக்குப்போய் விடுவோமே' என்று ஆசை காட்டினான் அவன்.

'எங்கே போவது ?'

'எங்காவது ! உன்னையும் என்னையும் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்கிற ----நீ இன்னவள், நான் இன்னான் என இனம் பிரித்துக் காட்டும் பேத உணர்வின் சிறு அலைக்குக்கூட இடமில்லாத---மானிட சமுத்திரம் அவசர நாகரிகவேகத்திலே அலைமோதும் எந்தப் பட்டணத்துக்காவது தான்.'

"நம்மை நாமே இழந்து விடுவதற்காகவா?’ என்று கேட்டாள் அவள்.

'இல்லை. நம்மில் நாமே நமக்காக வாழ்வதற்குத்தான். அத்தகையச் சூழ் நிலையின் நடுவிலே நமக்கெனத் தேர்ந்த தனி வீட்டில் எனக்குத் துணை நீ; உனக்குத் துணை நான் என்று வசிக்கும் பாக்கியம் எத்தகைய இன்ப வாழ்வாக இருக்கும் தெரியுமா?

அவன் சொல்லில் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் தன் அத்தானுடன் வாழக் கனவு கண்டிருந்த நிலை அத்தகையது தானே. அவனுக்கு அவள். அவ ளுக்கு அவன்-அவளுடைய அவன். அவனுடைய அவள். வேறு யாருக்கும் இடமில்லே. குழந்தை? ஓ! அதைப்பற்றி யோசிக்க எவ்வளவோ காலமிருக்கிறது...

இப்படி மனக்கோலமிட்டு வந்தவள் அவள். அவள் இட்டகோலம் அழிந்துவிடும் போலிருந்தது. அழியாது, அழியக்கூடாது என்று புதுப் புள்ளி குத்த வந்த துணைக்கரம்போல் குறுக்கிட்டான் சாமிநாதன்.

ஆகவே அந்த ஊரின் ஜனத்தொகையில் இரு நபர் குறைவு ஏற்பட்டது. -

ஒன்று அவன். மற்றது அவள்...சாமிநாதன்-ரத்தினம். - .

விஷயம் தெரிந்ததும் விதவிதமான விமர்சனங்கள் பிறக்காமலா போகும் !

'தெரியுமே! அந்தப் பெண் அலைந்த அலைச்சலில் இப்படி ஏதாவது ந்டக்கும்னு ந்ல்லாத்தெரியும்'... "துக்குத்தான் எதையுமே காலா காலத்திலே செய்து முடிச் சிடனும்கிறது'... அது எப்பவுமே ஒரு மாதிரித்தான், சின்ன வயசிலேயிருந்து தன் போக்காகவே வளர்த்தது. அகம்பாவம் புடிச்ச மூதி'. !

பேச்சுக்குக் குறைவில்லே!
கந்தரத்துக்கும் விஷயம் தெரியாமல் போகுமா ?

அவன் இதயத்திலே கடுமையான வடு ஏற்பட்டது. 'ரத்னம் இப்படியா செய்து விட்டாள்? ரத்னமா ? நம்பமுடியலேயே... வேதனைக்குளவி அவன் இதயத்தில் கொட்டிக் குடையத் தொடங்கியது. கடைசிச் சந்திப்பில் அவள் நடந்து கொண்டது, அவளது அன்பு அணைப்பு...அழுகை படிந்த முகம். கண்ணீர் முத்துக்களும் கண்களும்-எல்லாம் நெஞ்சைக் குத்தும் நினைவு ஈட்டிகளாயின.

சிறு வயதில் அவள் துடுக்குத்தனமாக முத்தமிட்டதும், பக்கத்தில் வந்து உட்கார்ந்ததனால் பெண்கள் கிண்டல் செய்யவும் அவள் சீற்றமாக பதில் சொன்னதும் அவன் நினைவில் குமிழிட்டன.

'ஆமாம். அவள் ஒரு மாதிரித்தான்' என்று கூறியது மனம்.

அவளே அவன் கேலி செய்து அழ வைத்தது நினைவில் எழுந்தது. அவற்றுக்கெல்லாம் வஞ்சகம் தீர்த்துக் கொண்டாளோ என்னவோ-இப்பொழுது இப்படி நடந்து என்னை அழவைத்து?.....

'அஞ்சும் மூணும் எட்டு.... அத்தை மகளை...சே, இதை நினைப்பானேன்? அத்தை மகள் லட்சணம் தான் ஊர் சிரிக்குதே-ஆமாம், ஊர் சிரிக்கத்தான் செய்யும். சின்னப்பயல்கள் கத்துவார்களே - காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டுபோனான் என்று-அதைச்சொல்லிச் சிரிப்பார்கள்-என்ன செய்ய முடியும் என்னால் எல்லாம் காலம் செய்து வைப்பது தானே....'

அவன் சுடுமூச்சு உயிர்த்தான். இதய வேதனையை ஆற்றிக்கொள்ள அழுவதும் பெருமூச்செறிவதும் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன ?

இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அது அவனுக்குத்தெரியாது.

முடிந்தே விட்டது !
"https://ta.wikisource.org/w/index.php?title=அத்தை_மகள்/5&oldid=1068639" இருந்து மீள்விக்கப்பட்டது