காட்சி 17.

இடம் : வீதி.

காலம் : மாலை

பாத்திரங்கள் : ஜம்பு, பாலசுந்தரம்.

[ஜம்பு கையில் கலியாணப் பத்திரிகையோடு வருகிறான்; எதிரே வேகமாக பாலு வருகிறான்.]

ஜம்பு : ஹலோ மிஸ்டர் பாலு குட் ஈவினிங் குட் ஈவினிங் ஊம்......எங்கே இந்நேரத்திலே இந்தப் பக்கம். இவ்வளவு அவசரமா......

பாலு : அவசரம் ஒன்றுமில்லை; ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும், அதற்காகத்தான் .... இப்படி......

ஜம்பு : சரி, இப்பொழுது உன்னைச் சந்தித்ததும் ஒரு வகைக்கு நன்மைதான். இல்லை என்றாலும் நானே உன் வீட்டுக்கு வரவேண்டு மென்றுதான் இருந்தேன்.

பாலு : அப்படி என்ன முக்யமான காரியம்?

ஜம்பு : நம்ம திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை இருக்கிறாரல்லவா? அவருக்கு நாளைக்குக் கல்யாணம். அதற்கு இன்விட்டேஷன் கொடுக்கத்தான் வர வேண்டுமென்று இருந்தேன்.

பாலு : அவர் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லையே!

ஜம்பு : நான் இருக்கும்போது அவர் பரிச்சயமில்லா விட்டால் என்ன? எல்லாம் நம்ம தர்பார்தான் (ஒரு பத்திரிகையை எடுத்து அட்ரஸ் எழுதிக்கொடுக்கிறான்) இந்தா அவசியம் வந்துவிடவேண்டும். நம்ம  பிரண்ஸுகளுக்காகவே டின்னரெல்லாம் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருக்கிறேன்.

பாலு : (பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டு ஆச்சரியத்தோடு) என்ன! பெண் யார்? லீலாவா?

ஜம்பு : ஆமாம்! நடராஜன் சிஸ்டர் நம்முடன் படித்துக் கொண்டிருக்க வில்லையா? அடடே! நான்கூட மறந்து விட்டேனே, உனக்கும் அவளுக்கும் கூட முன்னே கொஞ்சநாள்...ரொம்ப......

பாலு : ஊஹூம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அதெல்லாம் அந்தக்காலம். இப்போது அதைப்பற்றிப் பேசி என்ன பயன்?

ஜம்பு : ஆமாம்; இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்ப முடிகிறது? எல்லாம் பணத்தில்தான் இருக்கிறது. எவ்வளவு அன்யோன்யம், எவ்வளவு தூரம் நீ நம்பியிருப்பாய்? என்ன இருந்தாலும், லீலா உன்னை இப்படி மோசம் செய்திருக்கவே கூடாது. என்ன செய்வது, பணம் பாதாளம் மட்டும் பாயுமல்லவா?

பாலு : இதெல்லாம் உலகத்தில் சகஜம். சரி, நேரமாய் விட்டது. நான் வரட்டுமா?

(பதிலை எதிர்பார்க்காமலே போய் விடுகிறான்.)

ஜம்பு : (பரிகாசத்துடன் சிரித்து) மடையன்! சகஜமாம் சகஜம், "சீச்சி! இந்தப் பழம் புளிக்கும்” என்ற கதைப்போல் இருக்கிறது; காதலாம் கத்தரிக்காயாம். இதெல்லாம் இந்த ஜம்புவிடமா பலிக்கும்? நாளை அவள் திவான்பகதூர் மனைவி; அடுத்தநாள் என் காதலி. இதுதான் பிரமாதம்?

(போகிறான்..)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/17&oldid=1073504" இலிருந்து மீள்விக்கப்பட்டது